தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்

This entry is part 9 of 14 in the series 26 மார்ச் 2017

வனஜாவுக்கு இருதயத்தின் இடது பக்கத்தில்  மைட்ரல் வால்வு சுருக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதனால் இருதயத்தின் இடது கீழறையிலிருந்து  இடது மேலறைக்குள் இரத்தம் முழுதுமாகப் புக முடியாமல் பின்னோக்கி தேங்கி நிற்பதால் நுரையீரலிலும் அது தேக்கமுற்று, மூச்சுத் திணறலையும், கால்கள் வீக்கத்தையும் உண்டுபண்ணுகிறது. இவை மைட்ரல் வால்வு சுருக்கத்தின்  பின்விளைவு. வனஜாவுக்கு இப்போது இதுவே உள்ளது. இனியும் இதை. நீடிக்கவிட்டால் இருதயத்தின் இரு கீழறைகளும் வீக்கமுற்று இருதய செயலிழப்பு உண்டாகி  மரணம் நேரிடலாம்.

வனஜாவுக்கு உடனடியாக இருதயத்தில் அறுவை மருத்துவம் செய்தாக வேண்டும். அதற்கு முதல் கட்டமாக அவள் வார்டில் சேர்ந்தாகவேண்டும். நான் அதையே செய்தென். அவளுடன் வந்திருந்த பெற்றோரை அறைக்குள் அழைத்து அவர்களிடம் அது பற்றி விளக்கினேன். அவர்களும் புரிந்துகொண்டதுபோன்று சம்மதம் தெரிவித்தனர்.

என் முதல் நோயாளியான வனஜாவை நான் வார்டில் சேர்த்துவிட்டேன். அவளுக்குத் தேவையான இரத்தம், சிறுநீர், எக்ஸ் – ரே பரிசோதனைகளுக்குத் தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்தேன். அவற்றை குறிப்பேடுகளுடன் இணைத்தேன். அவள் வார்டு நோக்கி சென்றுவிட்டாள். அவளை இருதய அறுவை மருத்துவ வார்டுக்கு மாற்றும்வரையில் எங்களுடைய மருத்துவ வார்டில்தான் இருப்பாள்.

அதன்பின்பு அடுத்த நோயாளியைக் கவனிக்கத் தொடங்கினேன்.அதுபோன்று காலை பத்தரை வரை தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக நோயாளிகளைப் பார்த்து மருத்து சீட்டுகள் எழுதித் தந்தேன்.தேவைப்படும்போது இன்னும் ஒரு சிலரை வார்டில் சேர்த்தேன். அரை மணி நேரம்

காப்பி அருந்த வெளியேறினேன். பின்பு மீண்டும் அறைக்குத் திரும்பினேன்
          மதிய உணவுக்குச் செல்லுமுன் சுமார் ஐம்பது பேர்களைப் பார்த்துவிட்டேன். மாலையில் வெளி நோயாளிப் பிரிவு கிடையாது. பிற்பகல் இரண்டு மணிக்கு வார்டுக்குச் செல்லவேண்டும். காலையில் சேர்த்த வனஜாவையும் இதர நோயாளிகளையும் மீண்டும் ஒரு முறை பார்த்து அங்கு தாதியர் எழுதியுள்ள குறிப்புகளையும் கண்ணோட்டமிடவேண்டும். அவர்கள் உடல் வெப்பம், இரத்த அழுத்தம் போன்றவற்றை ஆறு மணிக்கு ஒரு தரம் பதிவு செய்வார்கள்.
          காலையில் இரத்தம் அனுப்பினால்  மாலையில் பரிசோதனைகளின் முடிவுகள் வந்துவிடும். அவற்றையும் பார்த்து அதில் முக்கியமானவற்றை குறித்துக்கொள்ளவேண்டும்.
          மாலை நான்கு மணிக்கு டாக்டர் புளிமூட் வார்டுக்கு வருவார். அப்போது அவரிடம் வனஜாவைப் பற்றிய நோய்க் குறிப்புகளையும், இரத்தப் பரிசோதனையின் முடிவுகளையும் கூறவேண்டும்.இதை நோயாளி அறிமுகம் ( Case Presentation )  என்போம். அவரும் அப்போது நோயாளியைப் பரிசோதனை செய்து பார்ப்பார். என்னுடைய கண்டுபிடிப்புகள் சரியா என்பார். நான் கேட்கத் தவறியதையும் பரிசோதிக்கத் தவறியதையும் சுட்டிக் காட்டுவார். அதுபோன்று அன்று காலையில் வார்டில் நான் அனுமதித்துள்ள ஒவ்வொரு நோயாளிகளாக நாங்கள் பார்ப்போம். மேற்கொண்டு என்ன செய்வது என்பதையும் அவர் அப்போது கூறுவார்.
          இது போன்றே பயிற்சி மருத்துவத்தில் நாங்கள் ஒவ்வொரு நோயாளியைக்  கண்டும், கேட்டும், தொட்டும் பார்த்து கற்றுக்கொள்வோம். வனஜா என்ற ஒரு நோயாளியை வார்டில் வைத்து எப்படி பராமரிப்பது என்பதை விவரித்தேன். இதுபோன்று இன்னும் பத்து அல்லது பதினைந்து நோயாளிகளை வார்டில் ஒரே நேரத்தில் பராமரிப்பது மிகவும் சிரமாக இருக்கும். அவர்களுடைய இரத்தப் பரிசோதனை முடிவுகளை பரிசோதனைக்கூடம் சென்று வாங்கி அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
          வார்டுக்கு வெளியில் உறவினர்கள் காத்திருப்பார்கள். நான் வெளியில் வந்ததும் என்னிடம் விசாரிப்பார்கள்.நான் தக்க வகையில் விளக்கம் சொல்வேன். சிலர் என்னிடம் பேசிக்கொண்டே பின்தொடர்வார்கள்.
          வாரம் ஒருநாள் காலையில் சிறப்பு சுற்றல் ( grand rounds ) நடைபெறும்.காலை ஒன்பது மணிக்கு மருத்துவப் பிரிவு ஒன்றில் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்களும்  ஆண்கள் மருத்துவ வார்டில் ஒன்று கூடுவோம். டாக்டர் புளிமூட், உதவி மருத்துவர்களுடன் வருவார்.அப்போது வார்டு தாதியர்களும் சேர்ந்துகொள்வார்கள். ஒவ்வொரு படுக்கையாக நோயாளிகளைக் காண்போம். அப்போது அந்த நோயாளிக்கு சிகிச்சை தரும் பயிற்சி மருத்துவர் நோயாளியைப் பற்றிய முழு விவரத்தையும் சொல்லி அவருக்கான சிகிச்சை முறையையும் விளக்க வேண்டும். அப்போது டாக்டர் புளிமூட் அல்லது அவருடைய உதவி மருத்துவர்கள் கேள்விகள் கேட்பார்கள். அவற்றுக்கு சரியான பதில்கள் கூறவேண்டும்.சில வேளைகளில் தாதியர் மத்தியில் தடுமாறுவது அவமானமாகவும் இருக்கும். அதனால் இத்தகைய சிறப்பு சுற்றலின்போது மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தயார் செய்து செல்வோம். தாதியர் முன்பே அவமானம் எனில் நோயாளிகளும் அதைப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.அது இன்னும் தலைகுனிவை உண்டுபண்ணும்!
          இப்படி ஒவ்வொரு நோயாளியாகப் பார்த்து முடிக்க மதிய உணவு உண்ணும் நேரமாகிவிடும். அனைவரும் அப்படியே ஒய்.டபுள்யூ.சி. ஏ.கேண்டீன் சென்று உணவு அருந்துவோம். அதன்பின்பு சிறு ஓய்வுக்குப்பின்பு மீண்டும் பிற்பகல் இரண்டு மணிக்கு பெண்கள் மருத்துவ வார்டில் சந்திப்போம். அங்கும் அதே மாதிரிதான் பெண் நோயாளிகளைப் பற்றி ஆராய்வோம்.மாலை ஐந்து மணிவரை அது நீடிக்கும். அதற்குள் அனைத்து பெண் நோயாளிகளையும் பார்த்துவிடுவோம்.
          ஐந்து மணிக்கு நாங்கள் கலைந்து சென்றாலும், எங்களுடைய பார்வையில் உள்ள நோயாளிகளை மறுநாள் காலைவரை கண்காணிக்கும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. உதாரணமாக வனஜா வார்டில் இருக்கும்வரை அவளுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் நான்தான் பொறுப்பு. இடையில் நடு இரவில் அல்லது விடியலில் அவளுக்கு ஏதாவது அவசர சிகிச்சை தேவைப்பட்டால் நான்தான் வார்டுக்குச் சென்று அவளைப் பார்க்கவேண்டும். அவ்வேளையில் எனக்கு எப்படி சமாளிப்பது என்று தெரியாவிட்டால் சீனியர் மருத்துவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவேண்டும். தேவையெனில் அவரும் உடன் வார்டுக்கு வந்துவிடுவார்.
         வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தக்குழாய் வழியாக ஊசி மருந்து ஏற்றுவது, பரிசோதனைக்கு இரத்தம் எடுப்பது போன்றவற்றையும் நாங்கள்தான் செய்வோம்.
          வாரம் ஒரு நாள் மனை மருத்துவக் கூட்டம் ( clinical meeting ) மருத்துவம் ஒன்றின் அலுவலக அறையில் உள்ள கூடத்தில் நடைபெறும்.அப்போது ஒரு பயிற்சி மருத்துவர் வார்டில் உள்ள ஒரு நோயாளியைப் பற்றியும் அவருக்குள்ள நோய் பற்றியும் பேசுவார். அந்த நோய்க்கான நவீன சிகிச்சை முறைகள் பற்றியும் ஆராய்ந்துவந்து அதையும் கூறுவார். இதற்கு மருத்துவமனையின் நூலகத்தில் கிடைக்கும் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகை ( British Medical  Journal ) உதவும்.   சில வேளைகளில் அந்த சஞ்சிகையைக் கொண்டு வந்து அதில் வெளிவந்துள்ள ஒரு படைப்பைப் படித்து அது குறித்து விவாதிப்போம். அதில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரும். பல புதிய கருத்துகள் அதில்தான் முதன்முதலாக வெளியாகும். பிரிட்டிஷ் மருத்துவச் சஞ்சிகை  உலகப் புகழ்பெற்றது.
          பயிற்சி மருத்துவத்தின்போது வார்டுகளில்தான் இரவு பகலாக நிறைய நேரம் செலவழிப்போம். அங்கு எழுத்து வேலைகள் அதிகம் இருக்கும். நோயாளிகளைப் பற்றிய நோய்க்கு குறிப்புகள், பரிசோதனைகளின் குறிப்புகள், நோயாளியின் அன்றாட முன்னேற்றம் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை நோயாளியின் குறிப்பேட்டில் எழுதவேண்டும். நோயாளி வார்டைவிட்டு வீடு திரும்பும்போது அவருக்கு விடுவித்தல் சுருக்கம் ( Discharge Summary ) எழுதித் தரவேண்டும். அதில் அவர் அனுமதி ஆனதிலிருந்து வெளியேறும்வரை தரப்பட்ட சிகிச்சைக் குறிப்புகள் இருக்கும். பின்னாளில் நோயாளியின் தொடர் சிகிச்சைக்கு அது தேவைப்படும்.
         அதிகமான வேலைகள் வார்டுகளில் இருப்பதால் அங்கு பணிபுரியும் செவிலியர்களுடன் சேர்ந்து பணிபுரிய நேரிடும். அவர்களில் முழுநேர செவிலியர்களும் ( Staff Nurses ), பயிற்சிபெறும் செவிலியர் மாணவிகளும் அடங்குவார்கள். முழுநேர வார்டு செவிலியர் வெள்ளை சேலை உடுத்தியிருப்பார்கள். கூந்தலை கொண்டையாக முடித்து அதில் செவிலியர் தொப்பி அணிந்திருப்பார்கள். பயிற்சி மாணவிகள் நீல நிறத்தில் சேலை அணிந்திருப்பார்கள். அவர்களும் கொண்டையில் வெள்ளை நிறத்தில் தோப்பி அணிந்திருப்பார்கள். நாங்கள் பயிற்சி மருத்துவர்கள் என்பதால் எங்களுடன் நெருங்கிப் பழகுவார்கள். செவிலியர்களில் பெரும்பாலானோர் கேரளத்து பைங்கிளிகள்தான். நல்ல நிறத்தில் இவர்கள் அழகாக இருப்பார்கள். எங்கள் வகுப்பு மாணவிகளுக்கு இணையாக அவர்களின் அழகு இருக்கும்.
          எங்களின் ஆண்கள் பயிற்சி மருத்துவர் விடுதியின் அருகில்தான் செவிலியர் விடுதி உள்ளது. அங்கிருந்து விடியலிலும் மாலையிலும் செவிலியர் கூட்டம் கூட்டமாக சீருடையில் நடந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்! சொர்க்கத்தில் நடமாடும் தேவதைகளை நினைவூட்டும்! காலைப் பனியில் பூத்து  நறுமணம் வீசும் புதுமலர்கள் போன்றும் எண்ணத்தோன்றும்.
            அவர்களை வழியில் சந்திக்க நேர்ந்தால் புன்னையுடன் கடந்து செல்வார்கள். சிலர் நின்றும் நலம் விசாரிப்பார்கள். வகுப்பில் இருபத்தைந்து மாணவிகளுடன்தான் பழக நேர்ந்தது. ஆனால் இங்கோ முந்நூறுக்கும்  மேற்பட்ட பெண்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டியது! ஆறு வருடம் ஒன்றாக பயின்ற வகுப்புப் பெண்கள் பிரிந்து சென்றுவிட்டனர். அவர்களில் யாரையும் நான் காதலிக்கவில்லை. இப்போதோ இத்தனைப்  பெண்களிடம் பழகும் வாய்ப்பு கிட்டியுள்ளது. பயிற்சி மருத்துவன் என்பது தாதியருக்கு கவர்ச்சி உண்டாக்கவல்லது. எங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கவே விரும்புவார்கள். சீனியர் மாணவர்கள் சிலர் பயிற்சி மருத்துவம் முடிந்தபோது தாதியரையே வாழ்க்கைத் துணையாகவும் ஏற்றுள்ளனர். சிலர் பயிற்சியின்போதே தாதியரைக் காதலித்து பின்பு கைவிட்டவர்களும் உள்ளனர். திருமண வயதை நாங்கள் அடைந்துவிட்டோம். பணிபுரியும் தாதியரும் அப்படிதான். ஆதலால் பல திருமணங்கள் வார்டுகளில் நிச்சயிக்கப்பட்டுள்ளன! இந்த ஒரு வருடத்தை நான் இத்தகைய சூழலில் எப்படி கடப்பேன் என்பது இனிதான் தெரியும்.!

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவிளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *