தொடுவானம் 183. இடி மேல் இடி

This entry is part 2 of 13 in the series 20 ஆகஸ்ட் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

183. இடி மேல் இடி

Rubber சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தில் என்னுடைய எம்.பி.பி.எஸ். சான்றிதழ் செல்லாது என்றனர். நான் இந்தியாவிலேயே சிறந்த வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிரசித்திப் பெற்ற மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ( University of Madras ) பட்டம் பெற்றவன்.இரண்டுமே உலகப் புகழ்மிக்கவை. ஆனால் அதைக்கூட சிங்கப்பூரில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டனர். இதன் உண்மையான உள்நோக்கம் தெரியவில்லை. இந்தியாவில் பணம் தந்து பட்டம் வாங்கலாம் என்ற தவறான எண்ணம் அப்போது அங்கே நிலவியது. அப்படி யாரவது ஒருவர் போலியான பட்டம் வைத்திருந்து பிடிபட்டிருக்கலாம். அதனால் அனைத்து இந்தியப் படிப்பும் இங்கே தரக்குறைவாக மதிப்பிட வழிவகுக்கப்பட்டுவிட்டது. இனி நான் என்ன செய்வேன். கொஞ்சம் தடுமாற்றமாகவே இருந்தது.
திரும்ப கோவிந்த் வீடு செல்லும்வரை பேருந்தில் அதே எண்ணமாகவே இருந்தது. இனி நான் சிங்கப்பூரில் ஒரு மருத்துவனாக பணிபுரிய இயலாது. அதற்கு மாறாக கோயம்புத்தூரில் வேலை உள்ளது.ஒரு மாத விடுப்பில்தான் வந்துள்ளேன்..ஊர் திரும்பும் நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னும் கப்பலுக்கு பிரயாணச் சீட்டு எடுக்கவில்லை.கப்பல் பிரயாணம் ஒரு வாரமாகும்..காலதாமதம் அனால் விடுப்பை ஒத்தி வைக்கலாம். பெண் வீட்டில் இதற்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
மாலை கோவிந்தும் பன்னீரும் வந்தனர். குளித்துவிட்டு சீன உணவகம் சென்றோம். நான் சொன்னது கேட்டு இருவரும் சோகமடைந்தனர். நான் சிங்கப்பூரிலேயே இருந்தால் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும். என்னுடைய எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்.
” என்ன செய்வதாக முடிவு செய்கிறாய்? ” பன்னீர் கேட்டான்.
” பேசாமல் கோயம்புத்தூர் சென்று வேலையில் சேர்த்து கொள்ளலாம்.. ” விரக்தியுடன்தான் சொன்னேன்.
” ஒன்று செய்யலாமா? பேசாமல் கோலாலம்பூர் சென்று மலேசிய சுகாதார அமைச்சில் வேலை கேட்டு பார்ப்போமே? மெட்ராஸ் யூனிவர்சிட்டி பட்டம்தான் அங்கு செல்லுமே?” அவன்தான் அப்படி கூறினான்.
” அருமையான யோசனை பன்னீர். ” கோவிந்த் குறுக்கிட்டான்.
” அதுவும் செய்து பார்க்கலாம். நான் மலேசியாவில்தான் பதிவுத் திருமணமும் செய்துள்ளேன். அதுவும் ஒருவகையில் உதவலாம். ” என்றேன்.
” சரி. இனியும் காலதாமதம் செய்யவேண்டாம். அங்கு சென்று டத்தோ குமரனைப் பார்ப்போம். அவர்தான் மலேசிய சுகாதார அமைச்சருக்கு பார்லிமென்ட்டரி செக்ரட்டரி. அவர் உதவலாம். ” நம்பிக்கையூட்டினான் பன்னீர்.
” எப்போது செல்லலாம்? நாட்கள் ஓடிவிட்டன. என் லீவு முடிந்துவிடும் போலிருக்கிறது.” நான் நிலைமையைக் கூறினேன்.
” நாளையே செல்வோம். உடன் அவரைப் பார்த்துவிட்டு திரும்பிவிடுவோம். அதன்பின்பு என்ன செய்யலாம் என்று யோசிப்போம். என்ன சொல்கிறாய்? ” பன்னீர் கேட்டான்.
” நீ போய் வருவதுதான் நல்லது. ஒருவேளை அங்கு வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்பது என்னுடைய கருத்து. ” கோவிந்த் ஊக்கம் தந்தான்.
” சரி.அப்படியே செய்வோம். ” நான் என்னுடைய முடிவைச் சொன்னேன்.
அவர்கள் இருவரும் என்னுடைய நிலை கண்டு பரிதவித்து நிறைய பேசினர். நான் மெளனம் காத்தேன்.
அன்று வழக்கத்துக்கு மாறாக இன்னொரு அங்கர் பீர் பருகினேன். அப்போது கவலைக்கு அதுவே மருந்தானது.
அன்று சீக்கிரம் படுத்து தூங்கினோம். காலையிலேயே கோலாலம்பூர் புறப்படவேண்டும்
குயீன்ஸ் ஸ்ட்ரீட் துரித பேருந்து நிலையத்திலிருந்து ஜோகூர் பாருவிற்கு புறப்பட்டோம்.. அங்கிருந்து கோலாலம்பூர் செல்லும் பேருந்தில் ஏறினோம். அது சென்றடைய ஐந்து மணி நேரமாகும். ஆயர் ஈத்தம், யாங் பெங், பாகோ, மலாக்கா, சிரம்பான் வழியாக கோலாலம்பூர் சென்றடையும். வழி நெடுக வீதியின் இரு மருங்கிலும் உயரமான ரப்பர் மரங்கள் பசுமையாக காட்சி தந்தன. இடையிடையே சிறு சிறு பட்டணங்கள் காணப்பட்டன. அப்போது வடக்கு தெற்கு நெடுஞ்சாலை இல்லை.
கோலாலம்பூரில் புது ராயா துரித பேருந்து நிலையத்தில் இறங்கினோம். நேராக ஜாலான் செந்தரசாரியில் உள்ள சுகாதார அமைச்சுக்குச் சென்றோம். அங்கு டத்தோ குமரனைக் காணவேண்டும் என்று அவருடைய அலுவலகத்தில் சொன்னோம். சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். பின்பு அவருடைய அறைக்குள் விட்டனர்.. அவர் நடுத்தர வயதுடையவர். பன்னீரை அவர் அடையாளம் கண்டுகொண்டார். முன்பு அவர் சிங்கப்பூரில் இருந்துள்ளார். அப்போது ஹெண்டர்சன் ரோட்டுக்கு அவர் வருவாராம். இருவரும் நலன் விசாரித்துக்கொண்டனர்.
நாங்கள் வேலை பற்றி கேட்டோம். சான்றிதழ்களைக் காட்டினோம். அவர் அவற்றைப் பார்த்தார். எம்.பி.பி.எஸ். பட்டம் செல்லும் என்றார். அது உற்சாகத்தைத் தந்தது. அதன்பின்பு ஆனால் என்று இழுத்தார். எங்களுக்கு அது கேட்டு தடுமாற்றம்.
” உங்கள் பட்டம் இங்கு செல்லும். அதோடு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரிதான் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் முதன்மையான இடத்தில் உள்ளது. ஆனால்… நீங்கள் மலேசியராக இல்லையே. அப்படி இருந்தால் உடன் இன்றே நீங்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். காரணம் மலேசியாவில் இப்போது டாக்டர்களின் பற்றாக்குறை உள்ளது. நீங்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவராக இருப்பதால் கொஞ்சம் சிக்கல் உள்ளது. ” என்று சொன்னவர் எங்களைப் பார்த்தார்.
” நான் இங்குள்ள பெண்ணை பதிவுத் திருமணம் செய்துள்ளேன். அதை வைத்து நீங்கள் பரிந்துரை செய்ய முடியுமா? ” நான் தயங்கியபடி கேட்டேன்.
” அதற்கு வாய்ப்பில்லை. நீங்கள் இந்த நாட்டுப் பெண்ணை மணந்துகொண்டிருந்தாலும், நீங்கள் முதலில் இந்த நாட்டின் நிரந்தரக் குடிமகன் ஆகவேண்டியுள்ளது. ” அது கேட்டு எனக்கு நம்பிக்கை குறைந்தது.
” அதை எப்படிப் பெறுவது? ” நான் அவரிடம் கேட்டேன்.
” அதற்கு நீங்கள் சிங்கப்பூர் திரும்பாமல் மலேசியாவிலேயே ஐந்து முதல் ஏழு வருடங்கள் குடியிருக்கவேண்டும். வேறு வெளி நாடுகளுக்கும் செல்லக்கூடாது. ” அது கேட்டு நான் மேலும் திடுக்கிடடேன்.
” இது தற்போது இயலாத காரியமன்றோ? ‘ பன்னீரைப் பார்த்து கேட்டேன்.
” இதற்கு நீங்கள் உங்களுடைய சலுகையை வைத்து ஏதாவது விதிவிலக்கு செய்துதர இயலுமா? அதனால்தான் உங்களைத் தேடி வந்துள்ளோம். ” பன்னீர் அவரை நோக்கிக் கேட்டான்.
” நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இதில் என்னால் உங்களுக்கு உதவ முடியாது. சுகாதார அமைச்சர் சீனர். நீங்கள் விரும்பினால் அவரைப் போய்ப் பார்க்கலாம். எங்களுக்கு டாக்டர்கள் தேவைதான். இவருடைய மருத்துவப் பட்டமும் இங்கு செல்லும். இந்த நிலையில் .குடியுரிமை ஒன்றுதான் தடையாக உள்ளது. எதற்கும் நீங்கள் அமைச்சரையும் பாருங்கள். அதற்கு நான் இப்போதே ஏற்பாடு செய்கிறேன். என்னால் இவ்வளவுதான் உதவமுடியும். ” என்றவாறு தொலைபேசியை கையிலெடுத்தார்.
சுகாதார அமைச்சரைப் பார்க்க முடியவில்லை. அதற்கு மாறாக மலேசிய மருத்துவக் கழகத்தின் செயலரைப் பார்க்கச் சொன்னார்கள். அவர் எங்களிடம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
” உங்கள் எம்.பி. பி.எஸ். இங்கு செல்லும். அனால் உங்கள் துரதிர்ஷ்டம். உங்கள் பிரதமர் திரு. லீ குவான் இயூ இப்போதுதான் மலேசியாவிலிருந்து வெளியேறிவிட்டார். அதனால் பாருங்கள் நீங்கள் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டுவிட்டீர்கள். சிங்கப்பூர் மருத்துவர்களை இங்கே பணியில் அமர்த்தவேண்டாம் என்று இங்கு எழுதாத சட்டம் போடப்பட்டுவிட்டது. ஆகவே என்னால் உங்களுக்கு உதவ இயலாது. என்னை மன்னித்துவிடுங்கள். ” என்றார்.
நாங்கள் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினோம்.
கோலாலம்பூர் ஒய்.எம்.சி.ஏ வில் அறை எடுத்து தங்கி ஓய்வெடுத்தோம். அங்கு அருகில் இருந்த நண்பர் ஒருவரை இரவில் காணச் சென்றோம். அவருடன் இரவு உணவுக்குச் சென்றோம். அவரும் என் நிலை கண்டு பரிதாபப்பட்டார். மூவரும் அங்கர் பீர் பருகினோம். நான் கவலையில் சற்று அதிகமாகவே பருகினேன். இரவு அறைக்கு வந்து படுத்ததுதான் தெரியும். விடிந்துதான் விழித்தேன்.
காலை பத்து மணியளவில் சிங்கப்பூர் புறப்பட்டோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationகம்பனின்[ல்] மயில்கள் -2சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *