தொடுவானம் 187. கடல் பிரயாணம்

This entry is part 9 of 10 in the series 17 செப்டம்பர் 2017

சிங்கப்பூர் துறைமுகம் காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது. பிரம்மாண்டமாக ” ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ” காட்சியளித்தது. சாமான்களை சுமை தூங்குபவர்கள் கவனமாக படிகளில் ஏறி கப்பலுக்குள் கொண்டுசென்றனர். அவர்களை பிரயாணிகள் பின்தொடர்ந்தனர். பிரயாணிகள் எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். விமானத்தில் அப்படி முடியாது. எடை கட்டுப்பாடு இருந்தது.நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பெட்டிதான் கொண்டு சென்றோம்.

          எங்களை வழியனுப்ப கோவிந்,  பன்னீர்,  ஜெயப்பிரகாசம்,  சார்லஸ் ஆகியோர்   வந்திருந்தனர்.எல்லாரிடமும் கைகுலுக்கிவிட்டு எங்களுடைய பெட்டிகளைத் தூக்கிக் செல்லும் சுமை தூக்குபவரைப் பின்தொடர்ந்து படிகளில் ஏறிச்சென்று கப்பலினுள் நுழைந்தோம். அக்காள் பரிதாபமாகக் கண்கள் கலங்கினார். ஒரே மகளை என்னுடன் அனுப்பி வைக்கிறார்.
          எங்களுக்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவளுக்கு பெண்கள் தங்கும் பகுதி. நான் ஆண்கள் பகுதியில் தங்கினேன். கொண்டுவந்த பெட்டியை அந்த அறையிலேயே வைத்துக்கொள்ளலாம். கப்பலினுள் குளிர் வசதி இருந்தாலும் வெப்பம் அதிகமாகவே இருந்தது.கப்பலின் மேல் தளத்துக்குச் சென்று கீழே பார்த்தோம். வழியனுப்ப வந்தவர்கள் எங்களைக் கண்டு கையசைத்துவிட்டு விடைபெற்றனர்.
          கப்பலை நாங்கள் சுற்றிப் பார்த்தோம். மிகவும் பெரிதாக இருந்தது. சகலவிதமான வசதிகளும் இருந்தன. உணவகம் பெரிதாக சிறப்பாக இருந்தது. உணவு உண்ண மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மதிய உணவு தயாராக இருந்தது. நாங்கள் அங்குதான் உணவு உண்டோம். மது அருந்தும் பார் இருந்தது. நான் அங்கு சென்று பார்த்தேன். பீர் டின்கள்,  உயர்வகை மதுவகைகள் வைத்திருந்தனர். விலையும் குறைவாகவே இருந்தது.
           அன்று மாலையில்தான் கப்பல் புறப்பட்டது. காலையில் கிள்ளான் துறைமுகம் சென்றடையும். இரவில் கடல் பயணம் அருமையாக இருந்தது. கருங்கடலும் இருண்ட வானில்  மின்னும் நட்சத்திரங்களும் பார்க்க பரவசமாகத் தோன்றின.மேல் தளத்தில் விளக்கொளி மங்கலாகத்தான் இருந்தது. கப்பலின் வேகத்தில் அங்கு கடல் காற்று சிலுசிலுவென்று மந்தகாசமாக வீசியது. கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வு தந்தது. மனதுக்கு  மிகவும் ரம்மியமாக இருந்தது. இரவு உணவுக்குப்பின்பு நாங்கள் இருவரும் அங்கே  சென்று இருக்கைகளில் அமர்ந்துகொள்வோம். உறக்கம் வரும்போது அறைக்குச் செல்வோம்.
          மறுநாள் கிள்ளான் துறைமுகத்தில் நின்றது. அங்கும் ஏராளமானவர்கள் காத்திருந்தனர். அவர்களை ஏற்றிக்கொண்டு மாலையில் புறப்பட்டது.
          காலையில் பினாங்கு வந்துவிட்டோம்.  அங்கிருந்து மாலையில்தான் புறப்படும். நாங்கள் கப்பலிலிருந்து இறங்கி பினாங்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டோம். நான் பினாங்கை சரிவர பார்த்ததில்லை. காலை சிற்றுண்டிக்குப்பின்பு நாங்கள் வெளியேறினோம். வாடகை ஊர்தி மூலம் பினாங்கு நகரம் சென்றோம். எங்களுக்கு வேண்டிய சிலவற்றை வாங்கினோம். கடைத்தெருவில்  காலை முழுதும் இருந்துவிட்டு மதிய உணவையும் முடித்துக்கொண்டு துறைமுகம் திரும்பினோம். மாலையில் கப்பல் புறப்பட்டது.
          இனிமேல் நாகப்பட்டிணம் சேரும்வரை ஐந்து நாட்கள் வெறும் கடலையும் வானத்தையும் காணவேண்டும். இடையில் தொலைவில் அந்தமான் தீவுகள் காணலாம். வேறு எதையும் வங்காள விரிகுடாவில் காண இயலாது. எப்போதாவது தொலைவில் வந்துகொண்டிருக்கும்   கப்பலைக்  காணலாம்..
          பகலில் கப்பல் செல்லும் வேகத்தில் அது சென்ற பாதை வெள்ளை நிற நுரையாக நீண்ட வீதி போன்று பின் தொடரும். நீல  நிறக் கடல் நீரில் வெள்ளை நிறத்தில் மீன்கள் பறந்து செல்வதையும்  காணலாம்.
          மதுபானம் கிடைக்கும் பார் பக்கம் சென்றால் அங்கு பணம் வைத்து விளையாடும் ஒரு பகுதி .உள்ளது. அந்த விளையாட்டுக்குப் பெயர்  ” ஹௌசி ஹௌசி  ” . அதில் ஒரு சிங்கப்பூர் டாலர்  கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும்.. அந்த சீட்டில் இருபது எண்கள்அச்சிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு சீட்டிலும் வேறு வேறு எண்கள் இருக்கும்.  விளையாட்டில் எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். சுமார் ஐம்பது பேர்கள் சேர்ந்ததும் விளையாட்டு ஆரம்பமாகும். அமர்ந்தபின்பு அவர்  பணத்தை எண்ணுவார். ஐம்பது வெள்ளி என்று அறிவிப்பார். எண்ணிவிட்டு, அதில் பாதியை கம்பெனிக்கு  எடுத்துக்கொள்வார். மீதப்பணம் வெற்றிபெற்றவருக்கு தரப்படும். அவர் அதிர்ஷ்ட எண்களை ஒவ்வொன்றாக எடுப்பார். நாம் நம்முடைய தாளில் அந்த எண்  இருந்தால் அதை அடித்துவிடலாம். அதுமாதிரி யாருக்கு முதல் இருபது  எண்கள் கிடைக்கிறதோ அவர் கையைத் தூக்கி அறிவித்து பரிசுப்பணத்தை உடன் பெற்றுக்கொள்ளலாம். இதில் நான் ஓரிரு முறை வென்றுள்ளேன். கிடைத்த பணத்தில் அந்த ” பாரில் ” அங்கர் பீர் டின் வாங்கிப் பருகலாம். அங்கு விளையாடியவர்களில் பலர் பீர் அருந்திக்கொண்டுதான் இருந்தனர். அது நடுக்கடலில் பிரயாணம் செய்யும்போது நல்ல பொழுதுபோக்காக அமைந்தது.
          சில இரவுகளில் மேல்தளத்தில் பெரிய வெண் திரை கட்டப்பட்டு தமிழ்த் திரைப்படங்கள் காட்டப்பட்டன. நிலவொளியில் திறந்தவானில் குளிர் காற்றில் அமர்ந்து படம் பார்த்து இரசித்தோம்.
          விமானப் பயணத்தைவிட  கப்பல் பிரயாணம் என்னைப்போன்ற கலை ஆர்வம் கொண்டவனுக்கு இன்பமான அனுபவமாகவே இருந்தது. வானில் பிரயாணம்  செய்யும்போது மூன்றரை மணி நேரம் இருக்கையிலேயே அமர்த்துக்கொண்டிருக்க வேண்டும். எழுந்து விருப்பம்போல் நடந்துகொண்டிருக்க முடியாது. அருகில் வேறொருவர் அமர்ந்திருப்பார். அவரிடம் சரளமாகப் பேசமுடியாது. நேரத்தைப்போக்க ஏதாவது சிந்தனையில் அல்லது நூலில் செலவழிக்கவேண்டும். அல்லது கண்களை மூடி தூங்கலாம். கழிவறை செல்லும்போதுதான் எழுந்து நடக்கலாம். அந்த மூன்றரை மணி பிரயாண நேரம் எப்போது முடியும் என்று அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். அதோடு காற்று கொந்தளிப்பு ( turbulance ) என்று விமானி சொல்லியதும் விமானம் குலுங்கும்போதும், மேலும் கீழும் இறங்கும்போதும் உயிரைப் பிடித்துக்கொண்டு இருக்கை வாரில் அடைப்பட்டு ஆடாமல் அசையாமல் கடவுளை வேண்டிக்கொள்ளவும்  நேரிடும்.
          அனால் கடல் பயணம் ஒரு வாரமானாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு இனிமையாகவே கழிந்தது. பரந்த கடல்வெளியில் கடலில் மிதந்து வேகமாக செல்லும் உணர்வே தனிதான். இது பிரயாணம் என்பதைவிட மனதுக்கு ரம்மியமான ஒரு சுற்றுலா போலவே தெரிந்தது. அதிலும் புது மனைவியுடன் உல்லாசமாகச் செல்வது இனிமையான தேன் நிலவுதான்! பலதரப்பட்ட பிரயாணிகளை அங்கே  காணலாம். அவர்களுடன் நிறையவே பழகலாம். புது நட்புகள் உண்டாகலாம்.
          சில மேல்நாட்டவர்கள்கூட பிரயாணம் செய்தனர். அவர்களில் சிலர் மேல்தளத்து இருக்கைகளில் அமர்ந்துகொண்டு படித்துக்கொண்டிருப்பார்கள்.சிலர் எழுதிக்கொண்டும் இருந்தனர். கடல் பிரயாணத்தின்போது  எழுத்தாளர்கள் அமைதியான சூழலில் எழுதலாம்.
          அந்த ஏழு நாட்களும் எங்களுக்கு உல்லாசமாகவே அமைந்தது. கப்பல் ஓடிய வேகத்தில் நாட்கள் போனதே தெரியவில்லை! ஆறாம் நாள் விடியலில் தொலைவில் வெள்ளை நிறத்தில் சில உயரமான கோபுரங்கள் தெரிந்தன. அவற்றின்மேல் பச்சை நிறக் கொடிகள் பறப்பது தெரிந்தது. மேல் தளத்தில் சென்று பார்த்தபோது அங்கு பல இஸ்லாமியர்கள் அந்த திசையை நோக்கி தொழுதுகொண்டிருந்தனர். அதுதான் நாகூர் தர்கா என்றனர். அவர்களுக்கு அது புனிதமானது என்பதை அறிவேன். இன்னும் சில மணி நேரத்தில் நாகப்பட்டிணம் துறைமுகம் அடைந்துவிடுவோம்.
          நான் என்னுடைய அறைக்குச் சென்று சாமான்களை பெட்டியில் அடுக்கினேன். நாகப்பட்டிணத்தில் நாங்கள் இறங்கவேண்டும். அங்கு அண்ணன் வாடகை ஊர்தியுடன் காத்திருப்பார். உடன் தரங்கம்பாடி சென்றுவிடலாம். தரங்கம்பாடிக்குச் செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆகும்.
          நாகப்பட்டிணம்   வந்தடைந்த கப்பல் நடுக்கடலிலேயே நின்றது.அங்கு முறையான துறைமுகம் இல்லை. சிறிய மீன்பிடி படகுகள் ஒதுங்கும்  இடம்தான் இருந்தது. அந்தப் படகுகள் பல எங்களுடைய கப்பல் நோக்கி வந்து கொண்டிருந்தன.அவற்றில்தான் நாங்கள் இறங்கி கரைக்குச் செல்லவேண்டும். அதை நினைத்தாலே பயமாக இருந்தது. ஆழ் கடலின் நடுவே இரும்பு ஏணிப் படியில் இறங்கி படுகுக்குள் செல்லவேண்டும். சாமான்கள் தூங்குபவர்கள் தலையில் பெட்டியை வைத்துக்கொண்டு லாவகமாக இறங்கினர். அவர்களைப் பின்தொடர்ந்து பிரயாணிகள் இறங்கவேண்டும். ஒவ்வொரு பிரியாணியின் பெட்டியை ஒருவர் அந்த படகில் வைத்தபின்பு அதற்குச் சொந்தமான பிரயாணி ஏணிப்படியில் இறங்குவதற்கு அவர் கைத்தாங்கலாக உதவுவார். அந்தப் படியில் இறங்கும்போது கீழே கடலைப் பார்க்க நடுக்கம் உண்டாகும். தவறி விழுந்தால் அவ்வளவுதான்! எனக்கே அப்படி இருந்தபோது என் மனைவிக்கு எப்படி இருந்திருக்கும்? இறங்கத் தயங்கியவர்களை தூங்கி இறக்கினர். கடைசிப் படியிலிருந்து படகில் நுழையும்போது இன்னும் பயமாக இருக்கும். படகு அலையில் ஆடிக்கொண்டிருக்கும். அதையும் சமாளித்து பத்திரமாக இறங்கவேண்டும்.
          எப்படியோ சிரமப்பட்டு படகில் இறங்கி கரை வந்து சேர்ந்தோம். அங்கு அண்ணனைக் காணவில்லை. அவருடைய நண்பர் ஒருவர் நாகப்பட்டிணத்திலிருந்து வந்திருந்தார்.எங்களை ஒரு வாடகை ஊர்தியில் ஏற்றிக்கொண்டு வாடகை விடுதிக்குக் கொண்டு சென்றார். அண்ணன் அங்கு வருவார் என்று சொல்லிவிட்டு அவர் விடைபெற்றார்.
          அது ஒரு சாதாரண விடுதிதான். நாங்கள் சிங்கப்பூரிலிருந்து வந்துளோம் என்பதைத் தெரிந்துகொண்ட விடுதியின் ஊழியர்கள் எங்களை நன்றாகக் கவனித்தனர். நாங்கள் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு உணவகம் சென்றோம். அதன்பின்பு நான் படுத்து உறங்கிவிட்டேன். சுமார் நான்கு மணிபோல் அண்ணன் வந்துவிட்டார். அண்ணன் என் மனைவியை புன்னகையுடன் பார்த்தார். அவளும் அவரைப் பார்த்து மகிழ்ந்தாள்.
          அண்ணன் பொறையாரிலிருந்து  வாடகை ஊர்தி கொண்டுவந்திருந்தார். நாங்கள் சாமான்களை அதில் ஏற்றிக்கொண்டு தரங்கம்பாடி புறப்பட்டோம்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஎட்டு நாள் வாரத்தில் !முரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது.
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *