தொடுவானம்     23. அப்பாவுடன் வாழ போலீஸ் பாதுகாப்பு.

This entry is part 17 of 19 in the series 6 ஜூலை 2014

 

                                                                                                                  டாக்டர் ஜி. ஜான்சன்
          23.  அப்பாவுடன் வாழ போலீஸ் பாதுகாப்பு.
          அருமைநாதனுக்கு தினச் சம்பளம் இரண்டு வெள்ளிதான்! அது எங்களின் சாப்பாட்டுக்கே சரியாக இருந்தது!
          கடும் வெயிலில் வியர்வை சிந்தி சம்பாதித்த இரண்டு வெள்ளியையும் எனக்கு தியாகம் செய்த அவனுடைய நல்ல உள்ளம் கண்டு வியந்தேன். அப்போதெல்லாம் நட்பு அவ்வளவு தியாக சிந்தை கொண்டதாய் இருந்தது.அந்த கைமாறு எதிர்ப்பார்க்காத  உதவியை நான் என்றும் மறந்ததில்லை.
          மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.அவனுக்கு விடுமுறை.
          விடிந்ததும் விழித்துவிட்டோம். அருமைநாதன் சமையல் செய்யும் பெரிய தகரக் கொட்டகைக்குச் சென்றான். அங்கு சமைத்துக்கொண்டிருந்த மலையாள காக்காவுக்கு சமையலில் உதவினான். தேங்காய்கள் உடைத்து திருகித் தந்தான். காய் கறிகளை வெட்டித் தந்தான்.வேங்காயம் பூண்டு தோல் உரித்துத் தந்தான். அடுப்பு  எரிய பெரிய விறகுக் கட்டைகளைக்  கொண்டு வந்தான். அதற்குக்  கூலியாக அந்த காக்கா அவனுக்கு ஐம்பது காசுகள் தந்தார்!
          அந்த ஐம்பது காசுகளுடன் நாங்கள் ப்பேரர்  பார்க் நோக்கி நடந்தோம். போகும் வழியில் ஒரு ஒட்டுக் கடையில் ” தமிழ் முரசு ” வாங்கினேன். நடந்துகொண்டே ” உங்கள் எழுத்து ” பகுதியைப் புரட்டினேன். ”  இன்றைய உலகில் போர் ஓர் அவமானச் சின்னம் ”  என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது! நாங்கள்  இருவரும் துள்ளிக் குதித்து மகிழ்ந்தோம்!
          அந்த இக்கட்டான வேளையில் பரிசுத் தொகையான ஐந்து வெள்ளி எவ்வளவு உதவியானது என்பதை எண்ணி மகிழ்ந்தோம்.நேராக தமிழ் முரசு அலுவலகம் சென்று அதைப் பெற்றுக்கொள்வது என்றும் முடிவு செய்தோம்.
          முன்பெல்லாம் நான் மலையில் குடியிருந்தபோது அதிகாலையில் என்னுடன் அவனும் ஓடுவதற்கு வருவான். நாங்கள் மலையிலிருந்து ஷெண்டன் வே, பாசீர் பாஞ்சாங், பூமலை போன்ற இடங்களுக்கு ஓடி வருவோம்.
          அந்த பழைய நினைவுடன் ப்பேரர் பார்க் மைதானத்தில் இரண்டு சுற்றுகள் ஓடினோம். அங்கேயே குளியல் அறையில் குளித்துவிட்டு கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு நீர்த்தேக்கம் நோக்கி நடந்தோம்.
          அங்கு காட்டுக்குள் வெகு தூரம் சென்றபின் மரங்களின்  நிழல் நிறைந்த நீர்த்தேக்கக் கரை மணலில் உல்லாசமாகப் படுத்து பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் வகுத்துள்ள திட்டம் நிறைவேறினால் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கும் என்று கற்பனை செய்தோம். அவன் தன்னுடைய பெற்றோர் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவர்களை வெறுத்தே வாழ்ந்து வருகிறான். இனி அவன்  அவர்களைத் தேடிச் செல்லப் போவதில்லை என்றான். அவன் தன்னுடைய அப்பாவிடமிருந்து கடைசிவரை தப்பிக்க வேண்டும் என்றான், அவனை அவர் தமிழ் நாட்டுக்கு திரும்ப அனுப்பிவிட காத்துள்ளார் என்றான். அங்கு சென்றால்  வயல் வெளியில் வேலை செய்து பிழைக்க வேண்டி வரும்  அது எப்படி முடியும் என்று கேட்டான். அவன் சொன்னது எனக்கு நியாயமாகப் பட்டது. அப்போதெல்லாம் அப்படிதான் சிலர் அத்தகைய கடுமையான முடிவெடுத்து தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கெடுத்தனர். இங்கு சரியாக இல்லாவிட்டால் அங்கு அனுப்பிவிட்டு அவர்களின் கடப்பிதழ்களை புதுப்பிக்க விடாமல் தடுத்தனர்.அது ஒரு விதமான நாடு கடத்தும் செயலாகும்.
          அருமைநாதன் சொன்னது கேட்டு எனக்கும் பகீர் என்றது. ஒருவேளை என்னையும் அப்பா அதே முறையில் தமிழ் நாட்டுக்கு அனுப்பினால் நான் என்ன செய்வேன்? என் எதிர்காலமே கெடுமே? படிப்பு கெடும். அதோடு என் காதலுக்கும் முற்றுப் புள்ளிதான்! அதன்பின்பே நான் எப்போது எப்படி சிங்கப்பூர் திரும்புவேன்?
          ஆனால் அங்கு நான் அருமைநாதன் போல் அனாதையாக மாட்டேன். அங்கு என் அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், அண்ணி, தங்கைகள மற்றும் உற்றார் உறவினர் ஏராளம் பேர்கள் உள்ளனர்.வசதியாகவும் உள்ளனர்.அது ஒன்றுதான் எனக்கு ஆறுதல். ஆனால் அவன் சொன்னதைப்போல் சிங்கப்பூர் வாழ்கையை விட்டு விட்டு அப்பா சொல்கிறார் என்று சம்மதித்தால் என் திட்டமெல்லாம் தவிடுபொடியாகிவிடும் என்பது மட்டும் உண்மை. நான்  இங்கேயே படித்து இங்கேயே மருத்துவக் கல்லூரியில் புகவேண்டும். ஆனால் அப்பா நடந்துகொள்வதைப் பார்த்தால்  அந்த எண்ணம் நிறைவேறாதுதான். இப்போது நானும் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். அவர் நிச்சயம் இந்நேரம் என்னை சிங்கப்பூர் முழுதும் தேடி அலசியிருப்பார். கடற்கரையிலும் என்  பிணம் கிடக்கிறதா என்றும் தேடியிருப்பார்கள். போலீசிலும் இந்நேரம் தெரிவித்திருப்பார். ஆகவே நான் இனிமேல் தலைமறைவாக இருப்பதே நல்லது. அவர் என்னைத் தேடுவதைக் கைவிட்டு விட்டால் நல்லது. அதன்  பின் அவரும் என்னை மறந்து விடுவார்.. நானும் என் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒரேயொரு சிக்கல்தான் இதில் இருந்தது. அவர் நிச்சயம் என்னுடைய பள்ளிக்கு வருவார். போலீசும் அங்கு வரலாம் நான் பள்ளி சென்றால் அங்கு நிச்சயம் அவர்களிடமிருந்து தப்ப முடியாதே! அருமைநாதனும்  நானும் அதை எப்படிச்  சமாளிப்பது என்பதைப் பற்றி பலவாறு எண்ணி குழம்பினோம்.
          இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தோம். பள்ளி முதல்வருக்கு என் நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதுவது. முன்பே அவருக்கு அப்பாவைப் பற்றி தெரியும். அதனால் அப்பா தேடி ஓயும் வரை பள்ளிக்கு நான் வர முடியாத நிலையைக் கூறி, அதற்கு  அவரின் அனுமதி கேட்பது. முதலில் இரண்டு வாரம்  வரை பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது. அந்தக் கடிதத்தை அருமைநாதன் கொண்டு சென்று அவரிடம் நேரில் தருவது. நான் சென்றால் நிச்சயம் மாட்டிக் கொள்வேன் என்பதால் அந்த ஏற்பாடு.
          நாங்கள் திரும்பி நடந்து  இருப்பிடம் சேர்ந்தபோது இருட்டிவிட்டது. குளித்துவிட்டு இரவு உணவை முடித்தபின் அந்த முதலாளி வீடு நோக்கி நடந்தோம்.
          அவரின் வீடு, அருகிலேயே,  சுற்றிலும் மரம் செடி கொடிகள் படர்ந்திருந்த பசுமையான பூங்காவின் நடுவில் கட்டப்பட்டிருந்தது. அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. வீட்டின் வாசலில் விளையுயர்ந்த கார் நின்றது.
           அவருக்கு நடுத்தர வயது.. எங்களை அன்போடு வரவேற்று ஹாலில் அமரச் சொன்னார். அவருடைய மனைவி நல்ல சிவப்பான நிறத்தில் அன்பான பார்வையுடன் காணப்பட்டார். எங்களுக்கு தேநீர் பரிமாறினார்.
          அருமைநாதன் என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். என் பள்ளியின் பெயர்  கேட்டதும் அவர்  ஆர்வத்துடன் பேசினார். நான்  என் னுடைய பரிதாப நிலையை அவரிடம் கூறினேன். அவர் மிகவம் வருந்தினார். தன்னாலான உதவிகளைச்  செய்து என்னுடைய படிப்பு கெடாமல் பார்த்துக் கொள்வதாகவும்  கூறினார். முன்பின் தெரியாத ஒருவர் இப்படி உதவ முன்வந்தது எனக்கு  மன நிறைவைத் தந்தது. அவர் கல்வியின் முக்கியத்துவம் தெரிந்தவர் என்று எண்ணிக்கொண்டேன்.
          அவருடைய இரண்டு மகள்களையும் அழைத்து என்னை அறிமுகம் செய்ததோடு இனிமேல் நான்தான்  டியூசன் எடுக்கப்போவதாகவும் கூறினார்..அந்த இரு பெண்களும் அம்மாவைப்போல் அதே நிறத்துடன் அழகாக இருந்தனர். மூத்தவள் மூன்றாம் பாரமும், இளையவள் இரண்டாம் பாரமும் பயின்றனர். அவருக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்.
          இருப்பிடம் சென்றதும் பள்ளி முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அருமைநாதன் காலையில் வேலைக்குப் போகும் லாரியிலிருந்து பாதி வழியில் இறங்கி பேருந்து பிடித்து பள்ளிக்கு சென்று அதை ஒப்படைத்து விடுவான்.
          அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினேன். கனவுகள் பல வந்தன. அவற்றில் அப்பா என்னை தேடுவதுபோல் தெரிந்தது. இனிமேல் அவர் தேடி என்ன பயன். உடன் இருந்தபோது துன்புறுத்திவிட்டு பிரிந்து சென்றபின் தேடுவது என்ன பொருள்? தந்தைக்கு மகனாகப் பிறந்து விட்டால் இப்படித்தான் துன்பப்பட வேண்டுமா?
          ” தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
            முந்தி இருப்பச் செயல்  ” என்று  வள்ளுவப் பெருந்தகை கூடச்  சொல்லியுள்ளார். கல்வி கற்றால்தானே  அது சாத்தியமாகும். இவர் என்னவென்றால் அதைத்  தடை போடும் வகையில்  அடிக்கிறாரே! இது எந்த விதத்தில் நியாயமாகும்?
          அருமைநாதன் காலையிலேயே வேலைக்குப் புறப்பட்டு விடுவான். கேம்ப் காலியாகி வெறிச்சோடி கிடக்கும். அந்த அமைதியான சூழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கொட்டகையின் வெளியில் மரத்து நிழலில் உட்கார்ந்து சிறுகதைகள் எழுதினேன்.அப்போதெல்லாம் கற்பனைக் கதைகள்தான் எழுதினேன். அவை பெரும்பாலும் காதல் கதைகள்.
           கதையை எழுதி தபாலில் சேர்த்துவிட்டு  காத்திருப்போம் . அது எப்போது வெளிவரும் என்பது   தெரியாது.சில மாதங்கள் கூட ஆகலாம். அது வரை  பொறுமை காத்து அடுத்த கதையை எழுதி விடுவோம். ஞாயிறு ஆசிரியருடன் தொடர்பு கொள்ள முடியாது. கை தொலைபேசி இல்லாத காலம் அது. ஆசிரியருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற கேள்விக்கே இடமில்லை. தரம் ஒன்றே  கருதப்பட்டு பிரசுரம் செய்யப்பட்டது. அப்படி வெளிவரும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டுபண்ணும் கதை வெளிவந்த ஒரு வாரத்தில் சன்மானமாக ஐந்து வெள்ளியும் வந்து விடும்!
           மதியம் அங்கிருந்த காக்கா கடையில் சாப்பிடுவேன், இரவில் அவன் திரும்பியதும் அவனுடன் சேர்ந்து மற்றவர்களுடன் அங்கேயே உணவு உண்பேன். நான்  கடையில் சாப்பிட்டே பழக்கப்பட்டிருந்ததால் அது எனக்கு பிரச்னை இல்லை. அந்தச் சுற்றுச் சூழல் எனக்கு பிடித்தது. ஆனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லயே என்று கவலை  கொண்டேன்.
          இரவு நேரங்களில் நாங்கள் சாப்பிட்டப்பின் காட்டுப் பாதையில் பேசிக்கொண்டே நடந்து அருகில் உள்ள சிறு கடைத்  தெருவுக்குச் செல்வோம். நள்ளிரவுக்குள் திரும்பி வந்து வந்து விடுவோம். இதுபோன்று ஒரு வாரம் கழிந்து விட்டது. அப்பா தேடுவதை தொடர்கிறாரா  அல்லது காணாமல்  போய்விட்டேன் என்று தேடுவதை நிறுத்திவிட்டாரா என்பது தெரியவில்லை. எதற்கும் கவனமாக் இன்னும் தலை மறைவாக இருப்பதே நல்லது.
          அன்றிரவு நாங்கள் வழக்கம்போல் நடந்து விட்டு இருப்பிடம் திரும்பியபோது இரவு மணி பதினொன்று. நுழை வாயிலைக் கடந்து கூடாரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். அங்கு மரத்தடி இருட்டில் பாஞ்சாங் கணேசன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டோம். மேற்கொண்டு நடக்காமல் அப்படியெ நின்று விட்டோம்.
         எங்களை நோக்கி இருட்டிலிருந்து வெளிவந்தவன், ” உன்னைப் பிடிக்க சி. ஐ. டி. போலீஸ் வந்திருக்காங்க. ”  என்று கூறினான். அதைச் செவியுற்ற அருமைநாதன் ஒரே பாய்ச்சலில் அருகில் இருந்த முள் வேலி மீது தாவி  ஓட்டமாக ஓடி இருளில் மறைந்து விட்டான்.
          பாஞ்சாங் கணேசன் என் அருகே நின்று கொண்டான். அருமைநாதனை  ஓடிப் பிடுக்கும் முயற்சியில் அவன் ஈடு படவில்லை. என்னைப் பிடிக்கத்தான் அவன் வந்துள்ளான். நான் வசமாக மாட்டிக்கொண்டேன். இனி தப்பிக்க வழியில்லை. தடுமாறியபடி அவனைப் பார்த்தேன்.
        ” உன் அப்பா போலீசில் ரிப்போர்ட் பண்ணி உன்னைத்  தேடி சி. ஐ. டி. கள் வந்துள்ளார்கள். ” என்றான்.
          ” இந்த இடத்தை எப்படி கண்டு பிடித்தீர்கள்?”  கேட்டேன்.
          ” உன்னை அன்று அருமைநாதன் பள்ளியில் வந்து சந்தித்தானே.அதை நான்  பார்த்தேன். அவன் மீது சந்தேகம் வந்தது. நான்தான் இதை உன் அப்பாவிடம்  சொன்னேன். அவர் போலீசில் சொல்லி அருமைநாதனைத் தேடினோம்.”  பெருமிதத்தோடு சொன்னான். அவன் பள்ளிக்கு எதிரே உள்ள நகரசபை வீட்டில் குடியிருப்பவன்.
          அப்போது அப்பாவும் மோசஸ் வில்லியம்  சித்தப்பாவும் வந்தனர். உடன் இரண்டு  சீனர்கள் வந்தனர்.
          அப்பா ஏதும் பேசவில்லை.
          ” வா தம்பி வீட்டுக்கு போவோம்., ” என்றார் சித்தப்பா.
           நான்  ஒன்றும்  சொல்லாமல் கூடாரத்தினுள் சென்றேன். அந்த இரு சீனர்களும் பின்தொடர்ந்தனர். அவர்களிடம் கைத்துப்பாக்கி இருக்கும் என்பது எனக்குத்  தெரியும். ஓடினால் சுடுவார்கள். என்னுடைய சாமான்களை எடுத்து பையில் போட்டுக்கொண்டு வெளியில் வந்தேன். அப்பா வாடகைக் காரில் வந்திருந்தார். சீனர்கள்  இருவரும் போலீஸ் ஜீப்பில் வந்திருந்தனர்.
          நேராக காவல் நிலையம் சென்றனர். அங்கு அப்பா தந்துள்ள புகாருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்பதை காவலர்கள் பேசிக்கொண்டனர்.
          எனக்கு வீடு செல்ல பயமாக உள்ளது என்றேன். இனிமேல் அப்பா அடிக்க மாட்டார் என்றார் சித்தப்பா. நான் அதை நம்புவதற்கு தயாராக இல்லை என்றேன். உன்மேல் பாசம் இல்லாமல்தானா  உன்னைத் தேடி அலைந்தார் என்று என்னிடம் கேட்டார் சித்தப்பா. அதுதான் எனக்கும் புரியவில்லை  என்றேன்.
         ” எனக்கு நீங்கள் போலீஸ் பாதுகாப்பு தாருங்கள் . ” காவலர்களைப் பார்த்துக் கூறினேன்.
          ” இவர் உன் அப்பா. இவருடன் இருப்பதற்கு நாங்கள் எப்படி பாதுகாப்பு தர முடியும். நாங்கள் வந்து உங்கள் வீட்டில் இருக்க முடியுமா? ”  பதில் கேள்வி கேட்டனர்.
          ”  எனக்கு அங்கு போக பயமாக  இருக்குது. என் உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள். ” அவர்களிடம் மன்றாடினேன்!
         ” உங்கள் மகன் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா? அவன் எப்படி பயப்படுகிறான் பாருங்கள். இனிமேல் அடிக்க மாட்டேன் என்று இதில் எழுதிக் கொடுத்துவிட்டு  இவனைக் கூட்டிக்கொண்டு போங்கள்  .” போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாவிடம் ஒரு தாளை  நீட்டினார்.
        திக்குமுக்காடிய நிலையில்   இருந்த அவர் அதில் எதோ எழுதிக்  கொடுத்தார். அந்த வேளையில் அவரைப் பார்க்க எனக்கு பாவமாகத்தான் இருந்தது!
          சரி நடப்பது  நடக்கட்டும் என்ற முடிவுடன் அவர்களுடன் வீடு திரும்பினேன்.
         வீட்டில் ஒரு வாரம்  நிம்மதியாக இருந்தேன்.பின்பு மீண்டும் பழைய கதைதான். அதனால் என் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. நன்றாகப் படிக்கக் கூடிய நான் அப்பாவின் துன்புறுத்தலால் படிக்க முடியாமல் தவித்தேன்.
          எந்த நேரத்திலும் என்னுடைய உயிருக்கு ஆபத்து உண்டாகலாம் என்ற பயம் என்னை ஆட்கொண்டது. எந்த தகப்பனும் இப்படி இருக்க முடியாது. நிச்சயமாக இவருக்கு ஏதோ மனநோய் இருக்க வேண்டும்.
          இவர் இளம் வயதிலேயே குடும்பத்தினருடன் வாழாமல் பிரிந்து தனியாகவே வாழ்ந்துள்ளார். இது போன்று வாழ்ந்தவர்களுக்கு மனைவி,  பிள்ளைகள்  மீது பாசம் இருக்காது. இவர் என்னை தன்னுடைய மகனாகப் பார்ப்பதாகத் தெரியவில்லை. நானும் இவரிடம் ஆசையாக எதையும் வாங்கித்  தரவும் சொன்னதில்லை.
          எங்கள்  இருவரிடையே உள்ள உறவு என்னவென்றே தெரியவில்லை. அப்பா என்ற அன்பு காட்டாமல் எப்போதும் என்னை திட்டுவதும் அடிப்பதுமாக இருக்கும் இவரை நினைத்தாலே பயமும் வெறுப்புமே மேலோங்குகிறது.
          நானும் ஓரளவு வளர்ந்து விட்டேன். இவரின் மகன் என்ற ஒரே காரணத்தினால் இவரிடம் இப்படி அடிபட்டு சகணுமா?
          இல்லை! முடியவே முடியாது! இது என் தனி மனித சுதந்திரப் பிரச்னை! நான் வாழ்ந்தே ஆக வேண்டும். இவரின் கோரப் பிடியிலிருந்து எப்படியாவது விடுதலை பெற்றேயாக வேண்டும். அதற்கு சிங்கப்பூர் சட்டத்தில் ஒரு வழி உள்ளது. அதுவே எனக்கு ஒரே வழி!
         இத்தகைய சோக எண்ணங்கள் நெஞ்சில் அலைமோத அந்த முடிவுக்கு வந்தேன்.
          ஒரு நாள் பள்ளி முடிந்து திரும்பும்போது நேராக ஆவ்லக் ரோட்டிலிருந்த சமூக நலத் துறை அலுவலகம் சென்றேன். நான் ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவன் என்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.அங்கிருந்த அதிகாரிகள் நான் கூறியவற்றை மிகவும் கவனமாகக் கேட்டு குறித்துக் கொண்டனர்.
          எனக்கு வீட்டில் இருப்பதில் பாதுகாப்பு  இல்லை என்பதை எடுத்துச் சொல்லி அவர்களின் கண்காணிப்பில் உள்ள ” பாய்ஸ் டவுன் ” இல் என்னை சேர்த்துக்கொள்ளக் கோரினேன். அங்கு இளம் வயது குற்றவாளிகள் அரசாங்க கண்காணிப்பில் இருப்பார்கள். ஒரு வகையில் அதை நன்னடத்தைப் பள்ளி என்றும் கூறலாம். இளம் குற்றவாளிகளை சிறைச்சாலையில் இடுவதற்கு பதிலாக அங்கே அனுப்புவார்கள். ஒரு வகையில் அது இளம் வயதினருக்கான சிறை என்றுகூட சொல்லலாம்.. நான் குற்றம் ஏதும் செய்யாமலேயே அங்கு செல்ல விரும்பியது அவர்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது!
          அப்படி என்னை அங்கு சேர்க்க முடியாதென்றால், எனக்கு சீனியர் கேம்ப்ரிட்ஜ் தேர்வு முடியும் வரையில் தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்றும் மன்றாடினேன்.
         என்னுடைய கதையைக் கேட்ட உயர் அதிகாரி, உடன் அப்பவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்  ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவரை வந்து பார்க்கச் சொல்லியிருந்தார். அன்று என்னையும் வரச் சொன்னார்.
          கடிதம் தபாலில் வந்தது பற்றி அப்பா என்னிடம் ஒன்றும் கேட்கவில்லை.
          அந்த நாளும்  வந்தது. எனக்கு முன்பே அப்பா அங்கு சென்று  விட்டார். நான்  பள்ளி  முடிந்து அங்கு சென்றேன். அப்போது அப்பாவிடம் அந்த அதிகாரி பேசிக்கொண்டிருந்தார்.  பேசி முடித்த பின்பு என்னை  உள்ளே வரச் சொன்னார்.. நான்  உள்ளே சென்று அப்பாவின் அருகில் அமர்ந்தேன்.
          ” உன் அப்பாவிடம் நான்  எல்லாவற்றையும் சொல்லியுள்ளேன். இனிமேல் நீ உன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தலாம். நீ அந்தப் பெண்ணோடு சுற்றுவதை  கொஞ்சம் நிறுத்தி வை . : என்று அந்த அதிகாரி என்னிடம் கூறினார்.
           ” மேற்கொண்டு என்னை அடித்தால் ? ”  தயங்கியபடி அவரை நோக்கினேன்.
           டைப் செய்யப்பட்டிருந்த ஒரு கடிதத்தை என்னிடம் தந்து, ” இதைப் படித்துப் பார் .” என்றார்.
          ” என் மகனின் பாதுகாப்பிற்கு இனி நானே பொறுப்பு. அவன் மேல் எதாவது காயம் ஏற்பட்டால், அதற்கு என் மீது  போலீஸ் நடவடிக்கை எடுக்க நான்  சம்மதம் தெரிவிக்கிறேன்.”  அதன் கீழ் அப்பாவின் கையொப்பம் இடப்பட்டிருந்தது.
          நாங்கள் ஒன்றாகத்தான் வீடு திரும்பினோம். ஒன்றும் பெசிக்கொள்ளவில்லை.
          அந்த எச்சரிக்கை அவருக்கு கொஞ்சம் அச்சத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.
          அதன் பின்பு சில நாட்கள் நல்ல விதமாக இருக்கலானார்.
          இருப்பினும் வருவோர் போவோரிடமெல்லாம், ” என் மகன் என் மீதே புகார் செய்து என்னை போலீசில் மாட்டி வைத்து விடுவான் போலிருக்கு. ” என்று விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தார்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationcode பொம்மனின் குமுறல்சோஷலிஸ தமிழகம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *