தொடுவானம் 231.மதுரை மறை மாவடடம்.

This entry is part 2 of 9 in the series 22 ஜூலை 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

மதுரை மறை மாவடடத்தின் கூ,ட்ட அறிக்கை வந்தது. மதுரை மறை மாவடடத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை, திண்டுக்கல், போடிநாயக்கனூர், , கொடை ரோடு, கொடைக்கானல், ஆனைமலையான்பட்டி ஆகிய சபைகள்.அடங்கும்.
ஒவ்வொரு சபையிலுமிருந்து மூவர் இதில் பங்கு பெறுவார்கள். இதில் பங்கு பெறும்போது மதுரை மறை மாவட்டத்தின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கலாம். அவர்களிடம் பழகிய பின்பு அடுத்த முறை நான் மறை மாவட்டத் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம். என்னுடைய குறிக்கோள் மதுரை மறைவாட்டத்தின் செயலாளர் ஆவது.
குறிப்பிட்ட அந்த நாளில் நாங்கள் மூவரும் பேருந்து மூலம் மதுரை சென்றோம். அங்கிருந்து வாடகை ஊர்தி எடுத்து அரசரடி சென்றோம். அங்கு திருச்சபையின் இளைஞர் இயக்கத்தின் தலைமையகம் உள்ளது. அந்த கட்டிடத்தின் பல அறைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. கீழே பெரிய திறந்த அரங்கம் உள்ளது. அதில்தான் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் முப்பது பேர்கள் வந்திருந்தனர். ஜி.ஆர்.சாமுவேல் அந்த வளாகத்தில் குடியிருந்தார். அவரை முன்பு திருச்சியில் நடந்த சினோடு தொடர்புக் கூட்டத்தில் பார்த்து பேசியுள்ளேன்.அவரிடம் சிறிது நேரம் பேசினேன். அவரைத் தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. இனிமேல்தான் அவர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
காரைக்குடியின் சபைகுரு லாரன்ஸ் அடிகளாரின் ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. ஒரு ஞானப்பாட்டு பாடினோம். உறுப்பினர்களின் பெயர்கள் குருசேகர வாரியாக வாசிக்கப்பட்ட்து. வந்திருந்தவர்கள் கையை உயர்த்தினர்.புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்துகொண்டனர்.
மறை மாவடடத்தின் முக்கியமான நிகழ்வுகள் பற்றி பேசினோம். ஒவ்வொரு ஆலயத்தைச் சேர்ந்த ஒருவர் பேச அழைக்கப்படடார். ராஜமாணிக்கம் என்பவர் போடியிலிருந்து வந்திருந்தார். அவர் உயரமாக வாட்டச்சாட்டமாக காணப்பட்டார். காரைக்குடியிலிருந்து கிங்ஸ்டன் வந்திருந்தார். அவர் குள்ளமாக இருந்தார். கொடைக்கானலிலிருந்து தேவராஜன் வந்திருந்தார்.நான் என்னுடைய வாய்ப்பு வந்ததும் நான் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் மருத்துவர் என்றும் திருப்பத்தூர் ஆரோக்கியநாதர் ஆலயத்தின் பொருளர் என்றும் அறிமுகம் செய்துகொண்டேன். புதிய ஆலயம் கட்டி முடித்து திறப்பு விழா காணப்போவதால் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைப்பதாகக் கூறினேன்.
சில செயல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக அடுத்தமுறை கொடைக்கானலில் கூடலாம் என்று முடிவு செய்தோம்.
கொடைக்கானலிலிருந்து வந்திருந்த தேவராஜன் என்னைக் கண்டு நலம் விசாரித்தார். கொடைக்கானலுக்கு வரச் சொன்னார். அங்கு குளுகுளுவென்ற அருமையான பருவநிலை என்றார். நான் அங்கு சென்றதில்லை. வாய்ப்பு வரும்போது மனைவியுடன் அங்கு சென்று வரலாம். அவர் அங்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாகக் கூறினார்.
சுவையான மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அத்துடன் கூட்டம் .முடிவுக்கு வந்தது. வந்திருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அதன்பின்பு மதுரை பேருந்து நிலையம் சென்றோம்.
மதுரை மறைமாவட்ட கூட்டத்திற்குச் சென்று வந்ததை நண்பர்கள் பால்ராஜ் கிறிஸ்டோபர் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது நல்லது என்றார் பால்ராஜ். அடுத்த தேர்தலில் மறை மாவட்டத்தின் செயலராக வர முயற்சி செய்யலாம் என்றார்.அது எனக்கு நல்லதாகத் தெரிந்தது. முதலில் மதுரை மறைமாவட்டத்தில் பிரபலமாகிவிட்டு பின்பு முழு திருச்சபையில் பிரபலமாக வேண்டும். அது இன்னும் சிறப்பானது.
ஒரு நாள் திடீரென்று டாகடர் பார்த் மனைவியுடன் சுவீடனிலிருந்து திருப்பத்தூர் வந்தார். அவர்கள் விழியிழந்தோர் பள்ளியின் நிர்வாகி சோஞ்சா பெர்சன் அம்மையாரின் பங்களாவில் தங்கினார்கள். காரில் வெளியே செல்வதும் வருவதுமாக இருந்தனர். அப்போதெல்லாம் கிராமங்களில் மருத்துவ சேவைக்குச் செல்லும் தாதியர் மேரி ரத்தினத்தை உடன் அழைத்துச் சென்றனர். அவர் வந்துள்ளதின் நோக்கம் மர்மமாகவே இருந்தது. சில நாட்களில் மருத்துவமனை வருவார். என்னைச் சந்தித்து என்னுடன் வார்டுக்கும் வருவார்.ஆனால் நோயாளிகளை அவர் பார்ப்பதில்லை.
இரண்டு வாரங்கள் அவ்வாறு சென்றன. ஒரு நாள் கூகல்பர்க் நினைவு மண்டபத்தில் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அழைக்கப்பட்டோம். தலைமை மருத்துவ அதிகாரியும் டாகடர் பார்த், திருமதி பார்த், சிஸ்டர் சோஞ்சா பெர்சன், ஆகியோர் மேடையில் வந்து அமர்ந்தனர். ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. தலைமை மருத்துவர் டாக்டர் பார்த் தம்பதியரை வரவேற்றுப் பேசினார். அவர்களுக்கு பெரிய நீளமான ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் அந்த மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களின் முகங்கள் அந்த ரோஜாவைப் போலவே மலர்ந்தன!
பின்பு டாக்டர் அவர்கள் இருவரும் திருப்பத்தூர் வந்துள்ளதின் நோக்கத்தை விவரித்தார்.அது கேட்டு நான் வியந்தேன். மேல் நாட்டவரின் மனிதாபிமானச் சேவை அளப்பரியது. நம் நாட்டு மக்களை நம்மால் சரிவர கவனிக்க முடியவில்லை. அனால் மேல்நாட்டு மிஷனரிகளோ எவ்வளவு கருணைகொண்டு தொண்டு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்! ஏழை எளியோர் மீது அவர்கள் காட்டும் அன்பே அலாதியானது!
டாக்டர் பார்த் இங்கு வேலை செய்தபோது திருப்பத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று வந்துள்ளார். அங்கு ஏழ்மையில் வாழும் கிராம மக்களைப் பார்த்துள்ளார்.கிராமங்களையும், அங்குள்ள குடிசை வீடுகளையும், எளிய மக்களையும் அவர் படம் பிடித்து சேகரித்தார். அவர் சுவீடன் சென்றபின்பு அந்தப் படங்களையெல்லாம் சுவீடிஷ் அரிமா சங்கத்தில் ( Swedish Lions Club ) காட்டி கிராம நலனுக்காக உதவ வேண்டும் என்றுள்ளார்.அதை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு அங்கீகாரம் தந்துள்ளனர்.அத்துடன் அதற்கான செலவுகளையும் ஏற்று அவரிடம் நிதியுதவியும் செய்துள்ளனர். அதை அவர் பெற்றுக்கொண்டு திருப்பத்தூர் திரும்பியுள்ளார். திருப்பத்தூர் கிராம நல முன்னேற்ற திட்டம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அரசாங்கத்தில் பதிவும் செய்துள்ளார்.அந்த திட்டத்தின் துவக்க விழாவுக்குத்தான் நாங்கள் அன்று கூடியுள்ளோம். ட்ரூப்பா ( TRUPA ) என்ற பெயருடன் துவங்கப்பட்ட அந்தத் திட்டத்துக்கு மேரி இரத்தினம் பொறுப்பாளர் என்றும் அவர் அறிவித்தார். மருத்துவமனையின் ஓர் அங்கமாக அது இருப்பதால் தலைமை மருத்துவ அதிகாரியும் அதில் முக்கிய பங்கு வகிப்பார் என்றார். அந்தத் திடடத்தின் கீழ் முதலில் பத்து கிராமங்கள் தத்தெடுக்கப்படும் என்றார். அந்த கிராமத்து மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் அந்த இயக்கம் பாடுபடும் என்றார். அவர்களின் சுகாதார மருத்துவ கண்காணிப்பை மருத்துவமனை செய்யும் என்றார். நாங்கள் அனைவரும் அது கேட்டு கரகோஷம் செய்து நன்றியையம் மகிழ்ச்சியையும் தெரிவித்தோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationவீடு எரிகிறதுபுதுக்கோட்டை பேராசிரியரின் நூலுக்கு ’சிறந்த நூலுக்கான விருது’
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *