தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.

This entry is part 12 of 24 in the series 8 பெப்ருவரி 2015

குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம்.  பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்தோம்.

புகைவண்டி நிலையத்தில் நிறைய பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டங் கூட்டமாக பிளாட்பாரத்தில் காணப்பட்டனர். புகைவண்டி வந்ததும் அதில் பிரயாணம் செய்யும் பயணிகளைப் பார்ப்பது அவர்களுக்கு பொழுதுபோக்கு.

வண்டி வந்ததும் முண்டியடித்துக்கொண்டுதான் ஏறினேன். நல்லவேளையாக உட்கார இடம் கிடைத்தது.

நள்ளிரவு வரை தூக்கம் வரவில்லை. நாவலைக் கையில் எடுத்து வைத்திருந்தேன். அனால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. கிராமத்தில் இருந்தபோது கோகிலம் என்னிடம் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது.  அவள் மீது இரக்கம் மேலிட்டது. இந்நேரம் அவளும் தூக்கமின்றி படுக்கையில் புரண்டு கொண்டிருப்பாள். அவளுக்கு நான் பிரயாணப்பட்டது பெருத்த ஏமாற்றத்தையே உண்டு பண்ணியிருக்கும். அவள் ஒவ்வொரு நாளும் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்தும்கூட நான்தான் எப்படியோ விலகி விலகி சென்றேன்.நான் மனது வைத்திருந்தால் அவளுடைய ஆசைக்கு இணங்கி இருக்கலாம்.கிராமத்தில் அதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. தெரு விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவில் ஆள் நடமாட்டமே தெரியாத வகையில் இருட்டு நிலவும். ஆனால் அப்படி செய்துவிட்டு அவளை மேலும் தவிக்க விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அனால் கூடுமானவரை அவளின் மனம் நோகாத வண்ணம் அன்புடன் பேசி சமாளித்து விட்டேன். இனியும் அவள் காத்துக்கொண்டுதான் இருப்பாள். அவள் மிகுந்த வைராக்கியம் கொண்டவள் என்பது எனக்குத் தெரிந்தது. இனி என் நினைவில் அவள் அடுத்த விடுமுறை வரை நிச்சயம் காத்திருப்பாள்.

அவள் முழுக்க முழுக்க கிராமத்திலேயே வளர்ந்தவள். ஒரு வேளை மண  நாளன்று கல்லூரி மாணவனாக என்னைக் கண்டதில் அது ஒருவிதமான கவர்ச்சியை உண்டு பண்ணியிருக்கலாம்.அதிலிருந்து விடுபட முடியாமல் இன்னும் தவிக்கிறாள் கோகிலம்.உடன் கணவன் இருந்தும் அவள் மனதை அவனால் கொள்ளை கொள்ள முடியவில்லை.கல்லூரி மாணவனான என்மீது இத்தகைய நோக்கம் உண்டானதே அவளுடைய தவிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

நாளையிலிருந்து வெரொனிக்காவைப் பார்க்கலாம்.அவள் எந்த மனநிலையில் இருப்பாள் என்பது தெரியவில்லை. இத்தனை நாட்களில் கடிதத் தொடர்புகூட இல்லைதான்.அவளைப் பார்த்தபின்பு வேண்டுமானால் கோகிலம் பற்றிய எண்ணம் குறையலாம்.ஆனால் கோகிலம் பற்றி வெரோனிக்காவிடம் ஒன்றும் சொல்லக்கூடாது.அது தேவையற்றது.வீண் பிரச்னையை உண்டுபண்ணலாம்.இது போன்ற பிரச்னையில் ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணின் மீது அவ்வளவு சுலபத்தில் இரக்கம் வந்துவிடாது. அது அவ்வளவு சுலபம் அல்ல.பெண்ணுக்கு எப்போதுமே தன்னைப்பற்றிய எண்ணமே மேலோங்கும்.அதனால்தான் பெண்ணுக்கு இயற்கையிலேயே பொறாமைக் குணம் அதிகம் என்பார்கள்.

ஆனால் அதே வேளையில் மனித மனமும் எவ்வளவு பலவீனமானது என்பதையும் எண்ணிப்பார்த்தேன்.

          உயிருக்கு உயிராக காதலித்த லதாவைப் பிரிந்து ஒரு சில மாதங்களே ஆனாலும், வெரோனிக்காவின் நட்பு கிடைத்ததும், அவளை ஓரளவு மறந்து இருந்தது வேடிக்கைதான்.
           அதுபோன்றே கிராமத்தில் கோகிலம் மணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய புதுமையான அனுபவம் கிடைத்தபோது வெரோனிக்காவின் நினைவு குறைந்ததும் அதைவிட வேடிக்கைதானே!
           ஒரு பெண்ணை மறக்கச் செய்ய இன்னொரு பெண்ணால் முடியுமா? இந்தப் பெண்களிடம் அப்படி  என்னதான் மாயை உள்ளதோ? அல்லது என்னிடம்தான் ஏதாவது பலவீனம் உள்ளதா?
           ஆண் – பெண் உறவில்தான் எத்துணை அதிசயங்கள் உள்ளன! இதற்கு யாராலும் சரியான விளக்கம் தர இயலாது என்பதே உண்மை. இது போன்ற எண்ணங்களுடன் இரயில் ஓடும் இதமான தாலாட்டில் கண்ணயர்ந்தேன்.
          சரியாக காலை ஆறு மணிக்கு தாம்பரம் புகைவண்டி நிலையம் வந்து நின்றது, நான் அவசர அவசரமாக விடுதிக்கு நடந்து சென்றேன்.
          பத்து மணிக்கெல்லாம் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். உணவகத்துக்குச் சென்றபோது நண்பர்களைப் பார்த்து நலம் விசாரித்தேன். அனைவரும் ஆர்வத்துடந்தான் திரும்பியிருந்தனர்.
           இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் பங்குகொண்டது ” தி இலஸ்ட்ரேட்டட் வீக்லி ஆப் இந்தியா ”  வார இதழில் வெளிவந்திருந்தது.அதில் என்னுடைய படமும் இருந்தது! ஆங்கில இதழான அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங்.
         வகுப்புகள் துவங்கிவிட்டன.இனி படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.பாடங்கள் அனைத்துமே எனக்குப் பிடித்திருந்ததால் எளிமையாகவே இருந்தன. தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெறலாம்.
           புகுமுக வகுப்பில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.கல்லூரியின் அரையாண்டு மலர் தயார் .செய்தனர்.நான் புறநானூற்றுப் பாடல் ஒன்றை வைத்து ஓர் இலக்கிய சிறுகதை எழுதினேன். அதன் தலைப்பு, ” முல்லையும் பூத்தியோ. ” அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரசுரம் ஆனது.அதைப் படித்த பல எம்.ஏ. மாணவர்கள்கூட அதை நான்தான் எழுதினேன் என்பதை நம்பவில்லை.அது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டனர். அதன் தரம் மிகவும் சிறப்பாக உள்ளது என்றனர். அதுவே என் எழுத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்று நான் பெருமிதம் கொண்டேன்.
          நாட்கள் இனிமையாகக் கழிந்தன.பகலில் ஆர்வத்துடன் பாடங்களில் கவனம் செலுத்தினேன். மாலையில் குளித்தபின் புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு நண்பர்களைக் காணச் செல்வேன். ஒரு பூ மரத்தடியில் நாங்கள் புல் தரையில் அமர்ந்து பேசுவோம். நாங்கள் இந்தி  எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் நிறைய அரசியல் பேசுவோம். அப்போதெல்லாம் கல்லூரி மாணவர்கள் திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். . மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வும், சமுதாயப் புரட்சியும் நிலவியது.திராவிட இயக்கம் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றி வந்தது.
          ஒருசில மாலைகளில் தனியாக சென்னை மெரினா கடற்கரை சென்று வருவேன். அது எனக்குப் பிடித்திருந்தது.  அங்கு ஏராளமான மக்கள் வந்திருந்தபோதிலும், ஏதாவது ஒரு படகின் அருகில் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டு மகிழ்வேன். அப்போதெல்லாம் லதாவின் நினைவு நிச்சயம் வரும். அந்த கடலுக்கு அப்பால் அவள் இருப்பது தெரியும். அவளுக்கும் என்ன நினைவு வருமா எனவும் எண்ணிக்கொள்வேன்.
          மின்சார இரயிலில் தாம்பரம் திரும்பும்போது வெரோனிக்காவை எண்ணிக்கொள்வேன்.
           வழக்கம்போல் மாலையில் வகுப்புகள் முடிந்ததும்  இரயில்வே மேம்பாலம் தாண்டி அவள் வசிக்கும் வீடு வரை சென்று வருவேன். அவளுடன் நடந்து செல்வது பெருமையாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.
          அழகான பெண்ணுடன் பொது இடங்களில் சென்றால் அதில் ஒருவிதமான பெருமைதான் உண்டாகிறது.அவளுடைய அழகை பிறர் இரசிப்பதும் தெரிகிறது.அவர்கள் படும் பொறாமை நமக்கு பெருமையை உண்டுபண்ணுகிறது.
          ஞாயிற்றுக்கிழமைகளில் வெரோனிக்காவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஓய்வுநாள் பள்ளிக்குச் செல்வதும் தொடர்ந்தது. வண்ண மயில் போல் அவள் அதில் ஒய்யாரமாக உரிமையோடு அமர்ந்துகொண்டு எதாவது பேசுவாள்.அவளுடைய அழகைப்போலவே குரலும் இனிமையானதுதான்! அவள் ஆங்கிலத்தில் நன்றாக பேசுபவள். ஆனால் என்னிடம் பேசுவது அழகுத் தமிழ்! அது கொஞ்சும் தமிழ்! தமிழில் பேசி அன்பு செலுத்துவதும் காதலிப்பதும் தனி அனுபவமே! அதிலும் சேலை அணிந்து, நீண்ட கூந்தலில் மணக்கும் மல்லிகைச் சரம் தொங்கவிட்டு வரும் தமிழ்ப் பெண்ணின் அழகே தனிதான்! விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தைவிட அந்த மல்லிகையின் கமகமக்கும் மணம் காதல் மயக்கத்தைத் தரும்!
          ஓய்வு நாள் பள்ளி சிறுவர் சிறுமிகளுக்கு நான் வேதாகமக் கதைகள் கூறி வந்தேன். நான் தினமும் வேதாகமத்தில் ஒரு அதிகாரம் படித்து வந்ததால் அதிலிருந்து ஏராளமான கதைகள் சொல்ல முடிந்தது.
          நான் அன்றாடம் வேதாகமத்தைப் படித்த போதிலும் இன்னும் ஆலய வழிபாட்டுக்குச் செல்லாமல்தான் இருந்தேன். கல்லூரியிலேயே ” அண்டர்சன் ஹாலில் ” ஞாயிறு காலையில் ஆலய வழிபாடு நடைபெறும்.அங்கும் நான் செல்வதில்லை.தாம்பரத்தில் சி.எஸ்.ஐ.ஆலயமும், தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை ஆலயமும் இருந்தன.அங்கும் நான் செல்வதில்லை. ஆலயம் செல்வதில் அவ்வளவு நாட்டம் ஏற்படவில்லை.அப்படி எப்போதாவது போனாலும் அங்கு என்ன நடக்கிறது என்பதை வேடிக்கைதான் பார்த்து விட்டு திரும்புவேன்.
          என்னுடைய ஆர்வமெல்லாம் தமிழ் மீதும், திராவிடர் இயக்கத்தின் மீதும்தான் இருந்தது. நான் வளர்ந்துவிட்ட விதம் அப்படி! தந்தை பெரியார் ஒரு இந்துவாகப் பிறந்து வளர்ந்து வரனாசிக்கு யாத்திரை கூட போனவர். அதுவே இந்துக்களுக்கு மிகவும் புனித ஸ்தலம். அனால் யாத்திரை சென்ற பெரியாருக்கு அங்குத்தான் கடவுள் இல்லை என்ற ஞானோதயம் உண்டானது!
திருமூலர் சொன்ன ” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்ற  தாரக மந்திரத்தை கூறிவந்தார் அறிஞர் அண்ணா. கலைஞர்கூட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தான். இந்த மூவரையும் நான் இளம் வயதிலேயே வாழ்கையின் வழிகாட்டிகளாகக் கொண்டவன். . அதனால்தான் என்னவோ ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன்.
          சில மாலைகளில் அத்தை வீடு செல்வேன். என்னை அன்புடன் உபசரிப்பார்கள்.அத்தை மகளுக்கு என் மீது அலாதியான பிரியம். அவள் குறைவான நிறத்துடன் ஒல்லியாக இருந்தாள். என்னுடன் நெருங்கியே பழகினாள். ஒருவேளை அத்தானை ( என்னை ) மணந்து கொள்ளலாம் என்று அத்தை சொல்லி வைத்திருப்பார் போலிருந்தது. அத்தை மகள் என்ற உரிமையில் நானும் அவளிடம் நெருங்கிதான் பேசினேன். வெரோனிக்காவைப் பற்றி தெரிந்தபின்பு அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை மேலும் நெருக்கமானாள்!
          உறவு விட்டுப் போகக்கூடாது என்பதற்காக பெற்றோர் இவ்வாறு சிறு பிள்ளைகளின் மனதில் ( அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகள் ) ஆசையை வளர்த்து விடுகிறார்கள்.அப்படிச் சொல்லி வைத்தால் ஒருவேளை அந்த பெண் பிள்ளை தவறான வழியில் செல்லமாட்டார்கள் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.ஆனால் பாவம் அந்த பெண் பிள்ளைகள். அவர்களின் ஆசை நிறைவேறாமல் போனால் நிலைமை பரிதாபம்தான்.
           அதை போன்று கிராமத்தில் எனக்கு மாமன் மகள் உள்ளாள். பெயர் உமாராணி.சிதம்பரத்தில் உயர்நிலைப் பள்ளியில் பயில்கிறாள். அவள் குறைவான நிறமாக இருந்தாலும் அழகாகவே இருந்தாள் அங்கு விடுதியில் தங்கியிருந்தாள். அவளுடைய மனதிலும் அத்தை மகனான என்னை மணந்து கொள்ளலாம் என்று அம்மா ஆசையை வளர்த்து வைத்திருந்தார்.
          எது எப்படியோ. நான் மருத்தவம் பயின்று வெளியேற இன்னும் ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆகும்.அதன்பின்புதானே திருமணம் பற்றியெல்லாம் யோசிக்க முடியும்? அதுவரை யார் காத்திருப்பார்கள் என்பதை திட்டவட்டமாகக் கூற இயலாது.
          சிங்கப்பூரில் லதா அதுவரை காத்திருப்பாளா? மருத்துவக்  கல்லூரியில் சேர்ந்தபின் வெரோனிக்காவை மறந்து போக நேரிடுமா? அத்தை மகளும் மாமன் மகளும் அதுவரை திருமணம் ஆகாமல் இருப்பார்களா? மருத்துவக் கல்லூரியில் வேறு பெண்களின் தொடர்பு உண்டாகுமா? அல்லது வேறு எங்காவது ஒருத்தி எனக்காக வளர்ந்து வருகிறாளா?

            ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவாய்ப்புமூன்றாம் பரிமாணம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *