தொடுவானம் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.

This entry is part 3 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.

மாயவரம் ( மயிலாடுதுறை ) வந்தடைந்தபோது நன்றாக விடிந்துவிட்டது.பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு குதிரை வண்டி மூலம் பேருந்து நிலையம் சென்றேன்.கடைத்தெருவில் பசியாறிவிட்டு பொறையார் பேருந்தில் அமர்ந்து கொண்டேன்.மன்னம்பந்தல், ஆக்கூர் வழியாக தரங்கம்பாடி சென்றடைய ஒரு மணி நேரமானது.
t1 வழிநெடுக வயல்வெளிகளும் சிறுசிறு கிராமங்களும் காலைப் பனியில் கண்களுக்குக் குளிர்ச்சியான இன்பத்தை தந்தன.
பேருந்து நின்ற இடத்தில் தேநீர்க்கடை இருந்தது. அதன் பின்புறம் கடலை நோக்கிச் செல்லும் நதி ஓடியது. நதியின் மேல் பாலமும் , அதைத் தாண்டியதும் உயரமான கோட்டைக் கதவுகள் திறந்திருந்தன. இருபுறமும் அகலமான கோட்டைச் சுவர் தென்பட்டது.
சாலையின் இருபுறமும் வரிசையாக கல் வீடுகள் காணப்பட்டன. அவற்றில் சில மாடி வீடுகளும் இருந்தன. சற்று தொலைவில் புதிய எருசலேம் தேவாலயம் கம்பீரமாக நின்றது. அதுதான் இந்தியாவின் முதல் சீர்திருத்தச் சபையின் தேவாலயம். அதைக் கட்டியவர் பார்த்தலோமேயஸ் சீகன்பால்க் என்ற ஜெர்மானிய இறைத்தொண்டர். அவர்தான் இந்தியாவுக்கு சீர்திருத்தச் சபையைக் கொண்டுவந்தவர். அவருடைய இறைப்பணியை தரங்கம்பாடியில்தான் துவங்கினார்.அவரை அங்கு அனுப்பியவர் டென்மார்க் அரசர் நான்காம் பிரடெரிக். அப்போது தரங்கம்பாடி டென்மார்க் அரசிடம் இருந்தது. இறைப்பணிக்காக தரங்கம்பாடி வந்த சீகன்பால்க் தமிழையும் கற்று தமிழை முதன்முதலாக அச்சிலும் ஏற்றி பெருமை சேர்த்தது தரங்கம்பாடியில்தான்.
t3 ஆலயதைதை தாண்டி கொஞ்ச தூரம் முன்னேறியதும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இருந்தது. அதன் எதிரே டேன்ஸ்பர்க் கோட்டை கம்பீரமாகக் காட்சியளித்தது. அதன் எதிரே கடல் அலைகளில் ஆர்ப்பரிப்புதான்! அதுதான் டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடியையும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களையும் ஆண்டபோது கட்டிய கோட்டை. அங்கு அப்போது அவர்கள் ஒரு துறைமுகமும் கட்டியிருந்தனர.அது இப்போது இல்லை. கடலுக்குள் மூழ்கிவிட்டது. அந்தப் பகுதி கடலில் கிடந்த உடைந்த பாறைகள்தான் அதை நினைவூட்டின. அதன் அருகில் மாசிலாமணி ஆலயம் கரையிலேயே உள்ளது. அதைக்கூட அலைகள் தாக்கியவண்ணமிருந்தன
அலைகள் பெரும் இரைச்சலுடன் வந்து அந்தப் பாறைகளின்மீது மோதி சிதறி மறைந்தன. அதன் சாரலில் நான் நனைந்து மகிழ்ந்தேன்.அதன் இரைச்சல் நம் பண்டைய தமிழ்ப் புலவர்களின் செவிகளில் கீதமாக ஒலித்திருக்கவேண்டும். அதனால்தான் தரங்கம்பாடி என்ற பெயர் சூட்டியுள்ளனர். தரங்கம்பாடி என்பதக்குப் பொருள் ” பாடும் அலைகள்! ” எவ்வளவு அர்த்தமுள்ள பொறுத்தமான பெயர்!
கரையில் ஒரு நினைவுக்கல் நடப்பட்டிருந்தது. அதில் ” இங்குதான் இந்தியாவின் முதல் சீர்திருத்தச் சபையின் இறைத்தொண்டர் பார்த்தலேமேயூஸ் சீகன்பால்க் 1706 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9 ஆம் நாள் தரை இறங்கினார் ” என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டு நான் பெருமிதம் கொண்டேன். காரணம் அவர் உருவாக்கிய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவன்தான் நான்!
t2 சீர்திருத்தச் சபைக்குமுன் இந்தியாவில் இயேசுவின் பனிரெண்டு சீடர்களில் ஒருவரான பரிசுத்த தோமா என்பவரின் வருகையால் இந்தியாவில் முதன்முதலாக கிஸ்துவம் உதயமானது. அவர் முதலில் கேரள நாடு வந்து அங்கு பல சபைகளை உருவாக்கினார். அவை மார்த்தோமா சபை என்று இப்போது அழைக்கப்படுகிறது.பின்பு தமிழகம் வந்துள்ளார். இயேசு பெருமானுடன் இருந்த ஒரு சீடர் இந்தியாவில், அதிலும் தமிழகம் வந்தது சிறப்புக்குரியது. அவர்தான் இந்தியாவின் முதல் கிறிஸ்த்துவ நற்ச்செய்தித் தொண்டர். ஆனால் அவர் அங்கு குத்திக் கொலைசெய்யப்பட்டார் என்பது அதிர்ச்சிக்குரியது. அவரின் நினைவாகவே சென்னை நகரின் மையப்பகுதியில் செயின்ட் தாமஸ் மலை என்ற பகுதி உள்ளது. அந்த மலையில் அவரின் பெயரில் ஆலயமும் உள்ளது.
தொமாவைத் தொடர்ந்து 1498இல் வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியர் கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு வந்தார். அவர்தான் கத்தோலிக்க சபை உருவாக காரணமாக இருந்தார்.
பின்பு பிரான்சிஸ் சேவியர் 1541 ஆம் ஆண்டில் இந்திய வந்ததும் கத்தோலிக்க சபை பரவலாக பெருக ஆரம்பித்தது. அதன்பின் அவர் மலாயாவில் மலாக்கா சென்று அங்கும் சபைகளை உருவாக்கினார். அவர் சீனா செல்லும் கடல் பிரயாணத்தின்போது காலமானார்.
t4 கத்தோலிக்க திருச்சபையில் ஆன்மீக மறுமலர்ச்சியை உருவாக்க 1517ஆம் ஆண்டில் சீர்திருத்தப் புரட்சியைச் செய்தவர் மார்ட்டின் லூத்தர். அதன் விளைவாக கத்தோலிக்க சபை உடைந்து சீர்திருத்தச் சபை உருவாயின. இதைத்தான் ” புரோட் டெஸ்டன்ட் ” சபை என்கிறோம். இதனால் ஐரோப்பிய நாடுகள் இரண்டாகப் பிளவுபட்டன. மார்ட்டின் லூத்தர் உருவாகியதுதான் லூத்தரன் சபை.
திரும்பி நடந்து உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன். அதில்தான் அண்ணன் தலைமை ஆசிரியர். பள்ளி வளாகம் பெரிது. அங்கு மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியும் இருந்தது. அதன் அருகில் புளுச்சாவ் ஆரம்பப் பள்ளி இருந்தது. அதில் அண்ணி பணியாற்றினார். ஹீன்றிச் புளுச்சாவ் என்பவர் சீகன்பால்குடன் வந்த இன்னொரு இறைப்பணியாளர். அவர்கள் இருவரும் தொடங்கிய துவக்கப்பள்ளி அது.
என்னைக் கண்டதும் அண்ணி புன்னகையுடன் வெளியே வந்தார். என்னைக் கூட்டிக்கொண்டு வீடு சென்றார். அது உயர்நிலைப்பள்ளியின் எதிரிலேயே இருந்தது. அதுதான் தலைமை ஆசிரியரின் இல்லம்.கல் வீடுதான். பின்புறம் பெரிய தோட்டம். தென்னை மரங்களும், வாழை மரங்களும் நிறைய இருந்தன. நடுவில் ஆழமான கிணறு இருந்தது. தோட்டத்தைக் சுற்றிலும் கல் சுவர் இருந்தது. வசதியான வீடு அது. நான் பசியாறிவிட்டேன் என்று அண்ணியிடம் கூறினேன். அவர் மதியம் வருவதாகக் கூறிவிட்டு மீண்டும் பள்ளி சென்றுவிட்டார். மதிய உணவுக்கு இருவரும் வருவதாகக் கூறினார். நான் வந்துள்ளது அண்ணிக்கு அதிக மகிழ்ச்சி.முன்பு முடியனூரில் ( கற்பாறைக் கிராமம் ) நடந்த அசம்பாவிதத்தை அவர் மறந்திருக்க மாட்டார். இங்கு அத்தகைய தொல்லைகள் இல்லை.
எனக்கு தரங்கம்பாடி மிகவும் பிடித்துவிட்டது. சரித்திரப் புகழ்வாய்ந்த கடற்கரைஊரான இது ஒரு சுற்றுலாத் தளமாக அப்போது மாறிவந்தது. இங்கு கடலில் குளிக்கலாம். அனால் திடீரென்று ஆழமாகிவிடுமாம். கரை ஓரத்திலேயே குளிக்கணுமாம். நான் மதிய வெயிலில் கடலில் குளிக்கலாம் என்றிருந்தேன்.
அண்ணி சென்றதும் தோட்டத்து கிணற்றில் ஊற்று நீரில் குளித்து முடித்தேன். அது உப்பு நீர். அதைக் குடிக்க முடியாது.உடைகள் மாற்றிக்கொண்டு ஊரைச் சுற்றிப் பார்த்தேன். வீதிகளில் அதிகமாக மணல் படிந்திருந்தது. ஊரின் கடைசியில் மீனவர்களில் தெரு இருந்தது. அங்குதான் குடிசைகள காணப்பட்டன. அங்கு வலைகளைக் காயவைத்திருந்தனர். கருவாடும் காயவைத்திருந்தனர். அதன் வாடையும் அதிகமாகவே வீசியது.
ஊரின் ஒரு கோடியில் இஸ்லாமியர்களின் வீடுகள் அதிகம் இருந்தன. அது இஸ்லாமியர் தெரு. அங்கு ஒரு மசூதுகூட இருந்தது.
லுத்தரன் சபை உருவான ஊர் தரங்கம்பாடி என்பதால் இங்கு நிறைய கிறிஸ்துவர்கள் உள்ளனர். ஞாயிறுகளில் ஆலயம் நிறைந்து காணப்படுமாம். ஆராதனையில் பள்ளிகளின் மாணவ மாணவியரும் பங்குகொள்வார்களாம்.
கோட்டை நுழைவாயிலும் கதவுகளும் அப்படியே நின்றாலும் ஊரைச் சுற்றிலும் டென்மார்க் நாட்டினர் கட்டியிருந்த கோட்டைச் சுவர் பல இடங்களில் உடைந்து கிடந்தன. அவற்றிலிருந்து கற்கள் எடுக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் சுவர் தரைமட்டமாகியிருந்தது.
கோட்டைக்கு வெளியில் கத்தோலிக்க தேவாலயமும், உயர்நிலைப்பள்ளியும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் உள்ளன. கோட்டைக்குள் அவர்களுடைய மடமும்,ஒரு மருந்தகமும் உள்ளன.
இந்துக்கள் வழிபட மாசிலாமணிநாதர் ஆலயம் கடற்கரையில் உள்ளது. அது 14 ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. கடல் நீர் உள்ளே புகுந்து ஒரு பகுதி உடைந்த நிலையில் அப்போது இருந்தது.
அமைதியான சூழலில் அமைத்துள்ள அழகான தரங்கம்பாடியில் இந்த விடுமுறையைக் கழிக்க வந்துள்ளது மிகவும் பிடித்திருந்தது.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஇசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்மிதிலாவிலாஸ்-28
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Mahakavi says:

    >>தரங்கம்பாடி என்பதக்குப் பொருள் ” பாடும் அலைகள்! ” எவ்வளவு அர்த்தமுள்ள பொறுத்தமான பெயர்!<< It is nice to think about it in that way. The sea waves "sing" if you can hear. However, tarangambADi is just the name of the particular village by the seashore. It is a special name. தரங்கம் என்றால் அலை என்று பொருள் கடல் என்றும் பொருள். பாடி என்றால் "சேரி" "ஊர்" என்று பொருள். It is like காவிரிப்பூம்பட்டினம் "காவிரி கடலில் கலக்கும் ஊர்" என்பது போல். I grew up around Mayavaram and PoRaiyAr areas.

  2. Avatar
    ஷாலி says:

    // பண்டைய தமிழ்ப் புலவர்களின் செவிகளில் கீதமாக ஒலித்திருக்கவேண்டும். அதனால்தான் தரங்கம்பாடி என்ற பெயர் சூட்டியுள்ளனர். தரங்கம்பாடி என்பதக்குப் பொருள் ” பாடும் அலைகள்! ” எவ்வளவு அர்த்தமுள்ள பொறுத்தமான பெயர்!//

    பண்டைய தமிழ்ப்புலவர்கள் தரங்கம்பாடி என்ற பெயரை வைக்கவில்லை.
    குல சேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். இவன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி. 1306ல் இவ்வூரைத் தோற்றுவித்துக் கோயிலையும் கட்டினான். வேதத்தின் ஆறு அங்கங்களுக்கும் மூலம் இறைவனே யாதலின் இவ்வூருக்கு (ஷட் – அங்கன் பாடி) “சடங்கன்பாடி” என்று பெயர் வைத்தான். சுவாமிக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று திருநாமஞ் சூட்டினான். கடற்கரையை யொட்டிய நகர மாதலாலும், தோற்றுவித்தவன் குலசேகரபாண்டியன் என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் வழங்கலாயிற்று.

    சிவனுக்கு சடங்கன் என்ற பெயரும் உண்டு.மற்றும் சடங்கன் என்பது கோயில் குருக்களிள் ஒரு பிரிவினர் என்றும் கூறப்படுகிறது.

    ஆங்கிலேயர்களால் ஷடங்கன் பாடி – சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே, தரங்கம்பாடி என்று பெயர் மாறி TRANQUEBAR என்றானது. (தரங்கம் – அலை. அலைகள் சூழ்ந்த நகரம் – தரங்கம்பாடி).

  3. Avatar
    ஷாலி says:

    தரங்கம்பாடி அனைவரும் அறிந்த பெயர்.ஆனால் இவ்வூருக்கு மற்றொரு பெயரும் உண்டு.அளப்பூர்.

    அளம் என்பது உப்பளத்தைக் குறிக்கும். இக்கோயிலுக்குப் பல உப்பளங்கள் சொந்தமாக இருந்தன. அதனால் வந்த பெயர் அளப்பூர் ஆகும்.
    இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.

    எச்சில் இளமர் ஏம நல்லூர்
    இலம் பையங் கோட்டூர்
    இறையாள்சேரி
    அச்சிறுபாக்க மளப்பூர் அம்பர்…(6-70-4 அப்பர் தேவாரபதிகம்)

    உறையூரும் ஓத்துரூம் உயிற்தூறும்
    அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி…( 6-71-4. அப்பர் தேவாரபதிகம்)

    அண்ணாமலை அமர்ந்தார்
    ஆரூருள்ளார் அளப்பூரார்…..(6-51-3 அப்பர் தேவாரபதிகம்)

    ஆரூர் அத்தா ஐயாற்றமுதே
    அளப்பூர் அம்மானே…..(7-47-4 சுந்தரர் தேவாரபதிகம்)

    http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_alappur.htm

    தரங்கம்பாடி கடற்கரை உலகிலேயே மிகவும் ஆரோக்கியமானது என்று சொல்கிறார்கள்.இங்கே ஓசோன் அளவு அதிகம்.சுவாசக்கோளாறுகளை அறவே நீக்க வல்லது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply to ஷாலி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *