நகங்கள் ( 2013 ) – மலையாள திரைப்படம்

This entry is part 2 of 20 in the series 26 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன்.
0

Nakhangalஇந்தப் படம் திரிஷ்யத்திற்கு பெரியப்பா! பாபநாசத்துக்கு அப்பா!
பிரேம் நாத் என்பவர் எழுதியிருக்கும் படு அசத்தலான திரில்லர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இதை ஏன் தமிழில் எடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் கோடி ரூபாய்க்கான கேள்வி.
கிரி, டெம்போ வேன் ஓட்டும் டெலிவரி பாய். ஜாக்சன், தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்யும் கணக்கன். ஷெரின் ஒரு சிறிய மருத்துவமனையில் செவிலி. களம் ஊட்டி. அதனால் மலையாளத்தோடு தமிழும் கலந்து ஒலிக்கிறது.
ஷெரினிற்கு ஒரு காதலன் உண்டு. வினோத். ஆனால் அவள் அவனைப் பிரிந்து கிரி, ஜாக்சனோடு ஒரு வீட்டில் தங்கியிருக்கிறாள். வீட்டை பிடித்து கொடுத்த ஜெகன், அவர்களது வாடகைச் சுமையைக் குறைக்க ஒரு நபரை அழைத்து வருகிறான்.
மூன்று மாதம் ஒரு நாவல் எழுத வேண்டி ஒரு வீட்டைத் தேடும் பிரபல எழுத்தாளர் மஞ்ஞில் இந்த மூவரோடு சேர்கிறார். ஒரு தோள் பையும் ஒரு பெரிய பெட்டியும் அவரோடு வருகின்றன.
மிதமிஞ்சி குடித்து விட்டு, பெத்தடின் என்கிற போதை ஊசியையும் போட்டுக் கொண்டு, அதனால் வாயில் ரத்தம் வழிய இறந்து போகிறார் மஞ்ஞி! அவரைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாது மூவருக்கும். கிரி அவரது உடைமைகளை சோதனை இடுகிறான். ஷெரின் ஜாக்சனின் மடிக்கணினியில் மஞ்ஞி என்று கூகுள் செய்து தேடுகிறாள். பிரபல எழுத்தாளர் மஞ்ஞி எனக் காட்டப்படும் புகைப்படத்திற்கும், இறந்து போன அந்நியனுக்கும் சம்பந்தமே இல்லை. இவன் வேறு யாரோ!
கிரியின் தேடலில் ஒரு கைத்துப்பாக்கியும், அவரது பெட்டி நிறைய பணமும் கிடைக்கிறது. விவரம் மூவரையும் பேராசைக்குள்ளாக்குகிறது. இறந்தவனை கருவேலங்காட்டில் புதைக்கீறார்கள். கூடவே அவனது அலைபேசியையும்.
தொலைக்காட்சியில் இறந்தவன் புகைப்படத்தோடு, அவன் வங்கிக் கொள்ளையன் என்கிற செய்தியும் வருகிறது. வங்கிப் பணம். மெருகு கலையாத புது நோட்டுகள். இந்நேரம் அதன் எண்கள் பரசியமாக்கப்பட்டிருக்கும். ஒரு மூன்று மாதம் அதை செலவு செய்யாமல் காத்திருப்பதே உசிதம் என்கிறான் ஜாக்சன். வேறு வழியின்றி ஒப்புக் கொள்கின்றனர் மற்ற இருவரும்.
புரோக்கர் ஜெகன் தேடி வருகிறான். இறந்தவன் பணத்தில் பங்கு கேட்கிறான். போலீசுக்கு போவதாக மிரட்டுகிறான். அரைமனதோடு நான்கு பங்கு போட சம்மதிக்கின்றனர் மூவரும். ஆள் நடமாற்றம் இல்லாத மாதா கோயிலில் காத்திருப்பதாக சொல்லி வெளியேறுகிறான் ஜெகன். அவனுடைய பங்கு பணத்தோடு மாதாகோயிலுக்குப் போகிறான் ஜாக்சன். தனியாக வரும் ஜெகனை, குழாய் முடுக்கும் ரின்ச்சால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு, பணத்தோடு வீடு திரும்புகிறான் ஜாக்சன்.
நடுவில் பணம் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தேடுகிறார்கள் ஷெரினும் கிரியும். ஜாக்சன் அறையில் அது காணவில்லை! இன்னும் கொஞ்சம் அலசியதில் மொட்டை மாடி சின்டெக்ஸ் தொட்டியில் பிளாஸ்ட்டிக் உறை போட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது பெட்டி பணம்.
ஜெகனைக் காணவில்லை. பணத்தை திருப்பி எடுத்து வந்து விட்டேன் என்கிறான் ஜாக்சன். ஆனால் அவன் பணமே எடுத்துப் போகவில்லை என்று சந்தேகப்படுகிறார்கள் ஷெரினும் கிரியும்.
கிரி, கட்டுக்கட்டாக பழைய பேப்பர்களை வாங்கி வருகிறான். ஜாக்சன் இல்லாத போது பெட்டியின் பணத்தை எடுத்து மறைத்து வைத்து விட்டு அதில் பேப்பர்களை போட்டு திரும்பவும் தொட்டியிலேயே போட்டு விடுகிறான்.
இறந்துபோனவனின் கூட்டாளிகள் இருவர், அவனைத் தேடி ஊட்டி வருகிறார்கள். அவர்களின் தேடல் ஷெரின் மற்றும் கூட்டாளிகளைக் காட்டுகிறது. ஷெரினும் கிரியும் மாட்டிக் கொள்கிறார்கள். ஜாக்சன் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். தேடி வரும் ஆசாமிகளில் ஒருவன் மேலே தேடப்போகிறான். மொட்டை மாடியில் அவனை ரின்ச்சால் போட்டுத் தள்ளி விடுகிறான் ஜாக்சன். தொடர்ந்து வரும் இன்னொருவனும் அதே பாணியில் க்ளோஸ். இரண்டு சடலங்களையும் அவர்கள் காரிலேயே வைத்து மலையிலிருந்து உருட்டி விடுகிறார்கள். அதன் டிக்கியில் இருக்கிறது ஜெகனின் பிணம்!
போலீஸ் நெருக்குகிறது. சப் இன்ஸ்பெக்டர் என அறிமுகமாகும் ஒருவன் உண்மையிலேயே ஷெரினின் பழைய காதலன் வினோத் என்று அறிகின்றனர் கிரியும் ஜாக்சனும். தொடரும் சண்டையில் கிரி சுடப்படுகிறான். ஜாக்சனை ஷெரினே ஈட்டியால் குத்தி கொல்கிறாள். பணப்பெட்டியுடன் வினோத், ஷெரின் எஸ்கேப்.
வெகுதூரம் போன பின்பு காரை நிறுத்தி பணப்பெட்டியைத் திறக்கிறான் வினோத். அதில் பணமில்லை! கட்டுக் கட்டாக பழைய பேப்பர்.
கிரி பணத்தை எங்கே ஒளித்து வைத்தான்? குளிருக்காக மூட்டப்படும் விறகடுப்பின் புகை போக்கியின் கீழே இறந்து கிடக்கிறான் கிரி! புகைபோக்கியின் வலைத் தடுப்புக்கு மேலே கட்டுக்கட்டாக குவிந்திருக்கீறது பணம்.
அநாவசிய காட்சிகள், பாடல்கள் இல்லாமல் நச் என்று இருக்கிறது இந்தப் படம். யாருமே தெரிந்த முகங்கள் இல்லை. ஆனாலும் அவர்களது இயல்பான நடிப்பு கட்டிப் போடுகிறது. ஷெரினாக நடித்திருக்கும் மேகாவிற்கு முதல் மார்க். கிரியாக ராக்கெண்டு, ஜாக்சனாக மதன் மோகன்.
எம்.ஜி.ஶ்ரீகுமாரின் இசையும், பிஜாய்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். பிரேம்நாத்தின் கதை எல்லா மொழிகளிலும் வெல்லக் கூடிய வல்லமை கொண்டது. தமிழ் திரை கை நீட்டுமா?
0

Series Navigationஜெர்மனி கிறிஸ்துவர்கள் மீது விதிக்கப்படும் கட்டாய சர்ச் வரி காரணமாக ஏராளமான கிறிஸ்துவர்கள் சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகின்றனர்வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *