நகைகள் அணிவதற்கல்ல.

This entry is part 16 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 

நாளைக் காலை பத்து மணிக்கு நானும் மனைவி சாய்ராவுன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் பயணமாக வேண்டும். 20 கிலோ எடையில் நான்கு பெட்டிகள் எங்கள் உடமைகளைப் பொத்திக்கொண்டு கூடத்திற்கு வந்துவிட்டன. கையில் இழுத்துச் செல்ல இரண்டு சிறிய பெட்டிகளும் அவைகளுக்குத் துணையாக வந்து உட்கார்ந்து கொண்டன. என்னுடைய கணினிப் பையும் சாய்ராவின் கைப்பையும் அந்த மேசையில் தயாராக இருக்கின்றன. எல்லாப் பெட்டிகளும் எப்போது எங்களை இழுத்திச் செல்லப் போயிறாய் என்று கேட்பதுபோல் இருக்கிறது. இப்போது இரவு மணி 11. கைப்பையை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும். கடவுச் சீட்டுகளும் பயணச் சீட்டுகளும் சாய்ராவின் பையில். நான் எங்காவது மறதியாய் வைத்து விடுவேனாம். முன்பெல்லாம் இப்படிக் குற்றம் சுமத்தினால் கோபம் கோபமாய் வரும். இப்போது பொறுப்பை யாராவது எடுத்துக் கொண்டால் சரி என்று மனமுதிர்ச்சி வந்துவிட்டது. கடவுச் சீட்டுகள் பயணச்சீட்டுகள் சரியாக இருக்கின்றன. சாய்ரா பையின் அந்த நடுப் பகுதியில் மீண்டும் அந்த மஞ்சள் நில அலுமினிய டப்பா. நெஞ்சுக்குழிக்குள் சூட்டை இறக்கியது. திறந்து பார்த்தேன். சாய்ராவின் மொத்த நகைகளும் அதற்குள் தூங்கிக் கொண்டிருந்தன. மாங்காய் மாலை ரெட்டைவடம் சங்கிலி மோதிரங்கள் வளையல்கள். சூடு இறங்கி இறங்கி அடிவயிற்றுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு தடவையும் விமானப் பயணம் போகும் போதெல்லாம் நகைகளை கொண்டுவராதே என்று ஒரு யுத்தமே நடக்கும். கடைசியில் தோற்றுப்போவது நான்தான். இரண்டு மாதத்திற்கு முன் மலேசியாவிற்கு பேருந்தில் சென்றோம். பேருந்தில் வந்த எல்லாரும் விடுவிடுவென்று நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். மலேசியாவின் சுங்க அதிகாரி சாய்ராவின் பையை திறந்து காட்டச் சொன்னார். ‘ஒ1 நகைகளா? ஏதாவது திருமணத்திற்குச் செல்கிறீர்களா?’ என்று அவரே சொல்லிக் கொடுத்தார். சாய்ரா ‘ஆம்’ என்றார். நான் ஒதுங்கி நின்றுகொண்டு என்னைக் கடந்து செல்பவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். எக்குத் தப்பாய் ஏதோ எடுத்துவந்து மாட்டிக்கொண்டது போல் எல்லாரும் சந்தேகமாகப் பார்க்கிறார்கள். ஓட்டுநர் ஒருமாதிரி பார்த்துவிட்டுப் போகிறார். ‘பேருந்து எடுப்பதற்குள் வந்து சேர்’ என்றது அந்தப் பார்வை.. பையை வாங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

‘இதெல்லாம் நமக்குத் தேவையா? எல்லாரும் திருடனைப் பாக்கிறது மாதிரி பாத்துட்டுப் போறாங்கெ.’

‘போகட்டுமே. நாம என்ன தப்பா செஞ்சோம். நம்ம தேவைக்கு நாம கொண்டுபோறோம். அவர்கள் வேலை அதைப் பரிசோதிக்கிறார்கள்’

‘எல்லா நகைகளையும் நீ போட்டு நா பாத்ததே இல்ல. இதக் கொண்டுவரணும்னு ஏன் பிடிவாதம் பிடிக்கிறே?’

‘நா பதில் சொல்லிக்கிறேன் நீங்க பேசாம இருங்க.’

இதற்கு மேலும் நான் பேசினால் சுமுகம் சிதைந்து போகலாம். உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு. சே. இதோடு விட்டுவிடுவோம். விட்டுவிட்டேன். இதாவது பரவாயில்லை. சென்ற ஆண்டு திருச்சி விமான நிலையத்திலும் இதே கதைதான். ஊடுகதிர்ச் சோதனையில் சாய்ராவின் பை நகரும்போதே குறித்துவிட்டார்கள். உடுப்பு மட்டுமே வெள்ளையாக இரண்டு அதிகாரிகள் திறந்து காட்டச் சொன்னார்கள். நான் ஒதுங்கிக் கொண்டேன். சாய்ராதான் பதில் சொன்னார். கரப்பான் பூச்சியைப் பார்த்துவிட்டால் அடுப்படிக்குள்ளேயே நுழையாத சாய்ராவுக்கு இந்த விஷயத்தில் மட்டும் எப்படி இவ்வளவு தைரியம்.?

‘ஒரு கல்யாணத்துக்குப் போறோம். சம்பந்திபுறமெல்லாம் வாராங்க. அதான் சார்’

‘எத்தனை பவுன்னு தெரியுமா?’

‘தெரியாது சார். எல்லாம் என் நகைங்கதான். அந்தப் பெரிய செயின் 30 வருஷத்துக்கு முன்னால எங்க அம்மா எனக்குத் தந்தது ‘

‘சரிங்கம்மா. ஏன் எடுத்து வந்தீங்க? சட்டம் தெரியுமா?’

‘தெரியாது சார்’

இந்த மாதிரி சமயங்களில் என் சொந்த அனுபவம். சுங்க அதிகாரிகளுக்குக் கூலி வேலை செய்வதுபோல் உங்களைப் பாவித்துக் கொள்ளுங்கள். உங்கள் கல்வி பதவி பற்றிப் பேசிவிடாதீர்கள். சட்டம் இறுகிக் கொண்டே போகும். இல்லாவிட்டால் நேரடியாக எவ்வளவு வேண்டும் என்று கேட்டு விடலாம். அதற்கான நாசூக்கு எல்லாருக்கும் வராது. ஏடாகூடமாக நாமெல்லாம் மாட்டிக் கொள்வோம்.. இதில் எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. நான் பேசவே இல்லை. மூன்றாவது அதிகாரி வந்தார்.

‘சிங்கப்பூர் பாஸ்போர்ட். சரி. எத்தனை வருடமாக சிங்கப்பூர்ல இருக்கீஙக?’

’30 வருஷமா’

‘இதுக்கு முன்னே எப்போ வந்தீங்க?’

‘2012ல’

அந்த இரண்டு அதிகாரிகளையும் அந்தப் புதிய அதிகாரி தனியே அழைத்துச் சென்றார்.

‘ஏய்யா அறிவிருக்கா? ரெண்டு பேரும் 50, 60ஐ த்தாண்டிட்டாங்க. சிங்கப்பூர்லயே இருக்காங்க. கடந்த ரெண்டு வருஷமா வரவேயில்ல. அவங்களப் போயி கேள்வி மேல கேள்வி கேக்கிறியேயா? ஏக்கனவே நம்ம ஏர்போர்ட்டப் பத்தி கடிதத்தில ஈமெயில்ல கிழிகிழின்னு கிழிக்கிறாங்கெ. போகச் சொல்லுயா’

அந்த இரண்டு அதிகாரிகளும் அசடு வழிய வந்து ‘சரி சரி போங்க. இனிமே எடுத்து வராதீங்க’ என்று முகத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள். இத்தனைக்குப் பிறகும் அமெரிக்காவுக்கு நகைகளைக் கொண்டு வந்தால் எனக்கு ஆத்திரம் வருமா? வராதா?

‘சாய்ரா’ இறைந்தேன்.

‘எல்லாரும் தூங்குறாங்க. மெதுவாக் கூப்பிட்டா என்ன?’

‘அது சரி. இது என்ன?’

‘நகைகள்’

‘நூறு தடவ சொன்னேன். சரிசரின்னு சொல்லிட்டு இப்புடி எடுத்து வச்சிருந்தா என்ன அர்த்தம்?’

‘எனக்குத் தேவைன்னு அர்த்தம். வேணாம்னா நா வரல. நீங்க போறதும் போகாததும் உங்க இஷ்டம்.’

‘ஏன் இப்புடி விதண்டாவாதம் பண்றேம்மா? நீதானே அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு. இதுல ஏதாவது அர்த்தம் இருக்கா. இங்கேயே கூட எந்தக் கல்யாணத்துக்கும் ரெண்டு வளையலப் போட்டுக்கிட்டு ஒரு முக்காட்ல தலையையும் கழுத்தையும் மூடிக்கிட்டுத்தான் வருவே. அணியாத நகைகளை ஏன் இப்புடி ஒவ்வொரு தடவையும் அள்ளிக்கிட்டு வந்து என் பொறுமையச் சோதிக்கிறேம்மா?

‘கொண்டு வர்ரேன். நா பதில் சொல்லிக்கிறேன். இழந்தால் ஒங்களவிட எனக்குத்தான் வலி அதிகம். ஏன் அலட்டிக்கிறீங்க?

இப்படி எல்லாம் பேசினால் ஒரு காலத்தில் கையில் கிடைப்பதை உடைத்து நொறுக்கிவிடுவேன். இப்போது முதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. ‘ஆம். எதற்கு நாம் அலட்டிக்கொள்ள வேண்டும் நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லையே. இழப்பதற்கே தயார் என்கிறபோது பேச என்ன இருக்கிறது.?’

விடிந்தது. பறந்தோம். ஏழு மணிநேரம் பறந்தபின் கொரியாவில் 3 மணிநேரம் தங்கினோம். ஹூஸ்டன் விமானத்தைப் பிடிக்க வேண்டும் எல்லாம் சுமுகமாகவே நடந்துகொண்டிருக்கிறது. இதோ ஹூஸ்டன் விமானம் ஏறும் நேரம் வந்துவிட்டது. உடமைகளை ஊடுகதிருக்குள் அனுப்பிவிட்டு அந்தச் சிவப்பு விளக்குப் பகுதிக்குள் நுழையவேண்டும். சரியான கெடுபிடி. உலோகத்தில் ஒரு பட்டன் இருந்தாலும் சங்கூதிவிடும். இடுப்புவார், காலணி, காலுறை, கைத்தோலைபேசி, கணினி, காசுப்பை சாவிகள் கால்சட்டைப் பையில் கிடக்கும் ஒரு 20 செண்ட் நாணயம் கடிகாரம் எல்லாவற்றையும் ஒரு கூடையில் வைத்து ஊடுகதிருக்குள் அனுப்ப வேண்டும். சாய்ரா பை இதோ நகர்கிறது. கதை மீண்டும் தொடர்கிறது.

‘திறந்து காட்டுங்கள்’

அமெரிக்கர்களுக்கு ஆங்கிலம் 26 எழுத்தல்ல 24தான். ஆரும் டியும் உச்சரிக்க உதடுகளும் நாக்கும் ஒத்துழைக்காது. அவர்கள் எதைப் பேசினாலுமே நாக்கோ உதடோ அசையாது. எங்கிருந்தோ சப்தம் வருவதுபோல் இருக்கும். உதட்டசைவில் புரிந்துகொள்வதெல்லாம் தமிழோடு சரி. இந்த அதிகாரி என்ன கேட்கப் போகிறார். சாய்ரா எப்படி புரிந்துகொள்ளப் போகிறார். நான் வேப்பெண்ணையைக் குடித்ததுபோல் முழிக்கிறேன். சாய்ரா உலோகச் சோதனையை முடித்துக் கொண்டு தைரியமாக வருகிறார். கழட்டிப்போட்ட இடுப்புவாரை அணிவதுபோல் நான் ஒதுங்கிக் கொண்டேன். டப்பா திறக்கப்பட்டது. ஒரு துருப்பிடித்த சைக்கிள் செயினைத் தொடுவதுபோல் அந்த அதிகாரி அந்த நகைகளை கொத்தாகத் தூக்கினார்.

இவைகள் தங்கமா?

‘ஆமாம்’

‘எல்லாத்தயும் எடுத்துக்கிட்டு நகருங்க என்பதுபோல் கையை அலட்சியமாக வீசினார் அதிகாரி. இந்த நகைகளை அப்படியே தொழிலில் முதலீடு செய்தால் ஏதாவது சம்பாதித்துக் கொடுக்கும் முட்டாள் ஜனங்கள். நகையை வைத்துக்கொண்டு அலைகிறார்கள்’ என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அவ்வளவு கேவலமாக இருந்தது அவர் ‘நகருங்கள்’ என்று சொன்னது . நான் எதுவுமே சொல்லவில்லை. நகர்த்துவிட்டேன். இதெல்லாம் எனக்கு அவமானமாகத்தான் இருக்கிறது. 15 மணி நேரம் பறந்தோம். ஹூஸ்டன் இறங்கிவிட்டோம். மகள் சாலிஹா உள்ளேயே வந்து எங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். எல்லார் கண்களிலும் ஆனந்தம் கண்ணீராக. யார் முகமும் தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அரவணைத்துக் கொண்டோம். வீடு வந்து சேர்ந்தோம். முதல் காரியமாக தன் கைப்பையை சௌகரியமான ஒரு இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டார் சாய்ரா. ஹூஸ்டன் நகரில் சைப்ரசில் இருக்கும் ஒரு கம்யூனிட்டியில்தான் சாலிஹாவின் வீடு. ஒவ்வொரு பகுதியையும் கம்யூனிடி என்றுதான் அழைக்கிறார்கள். 15 ஆண்டுகளாக அதே வீடுதான். அமெரிக்க வாழ்க்கையைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். சுவற்றில் மோதிக்கொள்ள வேண்டும் போல் இருந்தால் தாராளமாக மோதிக் கொள்ளலாம் அத்தனையும் பலகைகள். டொக்டொக்கென்று சப்தம்தான் வரும். வலிக்காது.. வீட்டுக்கு முன் குரோட்டன்ஸ் அழகான மரங்கள் செடிகள் புல்தரைகள் எல்லாவற்றையும் நீங்கள்தான் பராமரிக்க வேண்டும். அவைகள் வாடினால் கம்யூனிட்டி உங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிடும். சம்மனைத்தான் அங்கே டிக்கெட் என்கிறார்கள். தெருவில் எப்போதாவது ஒரு அமெரிக்கப் பெண் தன் நாயுடன் ஓடுவார். உங்களைக் கடக்கும்போது ஏதோ பிறந்ததிலிருந்து பழகியதுபோல் ‘ஹாய் ஹௌ ஆர் யூ.’ என்பார்கள். நாம் ‘ஹாய். ஃபைன்’ என்று சொல்லவேண்டும். காரில் செல்பவர்கள் கூட ‘ஹாய்’ சொல்லாமல் உங்களைக் கடக்கமாட்டார்கள். எல்லார் வீட்டிலும் அபாயச்சங்கும் ஒரு நாயும் இருக்கும். அபாயச் சங்கு அலறினால் கருஊதா உடையில் அமெரிக்கா காவல்துறை அடுத்த நிமிடமே வந்துவிடும். அவர்களைப் பார்த்தாலே போதும். குடல் வாய்க்குள் வந்துவிடும். சாதாரண குடிமகனே துப்பாக்கிகள் வைத்துக்கொள்ளலாம். அவர்கள் எப்படி இருப்பார்கள் ஊகித்துக் கொள்ளுங்கள். வெளியே பனிக்கட்டி வெப்பத்திலும் குறைவான வெப்பம் -2 டிகிரி. வீடு ஒரு குளிர்ப்பதனப் பெட்டிபோல்தான் உள்ளே 24 டிகிரி வைத்துக் கொள்ளலாம் கண்ணாடி கதவுகள் பார்க்கலாம் சாளரங்களெல்லாம் திறக்கக் கூடியதல்ல. கதவு மட்டுமே திறக்கலாம் உடனே சாத்திவிடவேண்டும். உள்ளேயும் வெளியேயும் வெப்பநிலையில் பெரிய வித்தியாசமல்லவா? காலைக் குளியல் அமெரிக்காவில் ஒரு சுகமான அனுபவம். இங்குபோல் 15 லிட்டர் ஹீட்டரெல்லாம் அங்கே கிடையாது. அது ஒரு பெரிய டேங்க் எவ்வளவு நேரம் குளித்தாலும் கொதிக்கக் கொதிக்க தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். வெப்ப நிலை வீட்டுக்குள் அதிகமாக வைத்தால் உடம்பில் ஒரு நமைச்சல் ஏற்படும். அந்த நமைச்சலுக்கு அந்தக் கொதிநீர் அடடா! அனுபவித்தால்தான் புரியும். ஒவ்வொரு கம்யூடிட்டிக்கும் ஓர் ஏரி உண்டு. நம்ம கே கே மருத்துவமனைக்குப் பக்கத்தில் இருக்கும் தாமரைக் குளத்தைப்போல் பத்து மடங்கு பெரியது. அதன் நடுவில் ஒரு நீரூற்று நீரை 30 அடி உயரத்துக்கு பீய்ச்சி அடித்து அதுவே வாங்கிக்கொள்ளும். கருப்பும் வெள்ளையுமாய் 40,50 வாத்துக்கள் கரையில் நிற்கும். நெருங்கினால் நீரைக் கிழித்துக் கொண்டு அடுத்த கரைக்குப் பயணித்துவிடும். முங்கினால் வாத்துமுட்டைகள் நூற்றுக் கணக்கில் எடுக்கலாம். தண்ணீரைத் தொட்டாலே மரக்கட்டையாகிவிடும் விரல்கள். முங்குவதா? ஓர் ஊஞ்சல் உண்டு சாவகாசமாக ஆடலாம். உட்காருவதற்கு நீளமான இருக்கைகள் உண்டு. நாள் முழுக்க அமர்ந்திருந்து அந்த இயற்கை வனப்பை ரசிக்கலாம். ஒரே ஒரு பிரச்சினை குளிர். நான் அந்த ஊஞ்சலில் ஆடாமல் வந்ததே கிடையாது. இப்போது கூட நான் ஆடியதை அப்படியே முகப்புத்தகத்தில் சாய்ரா பதிவு செய்திருந்தார். ஜாக்கெட் இல்லாமல் வெளியே தலைகாட்ட முடியாது. ஜாக்கெட் என்றால் கம்பளிக்கோட்டு என்று அர்த்தம். தொப்பி கையுரை இருந்தால் இன்னும் வசதி. எல்லார் வீட்டிலும் இரண்டு கார்கள் கண்டிப்பாய் உண்டு. ஒரு கார் 20000 டாலர்தான். உங்களிடம் 20000 டாலர்கள் இருந்தால் ஒரு ஏக்கர் நிலத்தையே உங்களால் வாங்கமுடியும். வாங்குங்கள் சில மாடுகளை வைத்துககொணடு ஒரு பண்ணையாராகக் கூட வாழலாம். வீடுகளுக்குப் பின்புறம் மரப்பலகை வேலிகள். அதன் ஓரமாகத்தான் நடக்கவேண்டும். நீங்கள் வெகுதூரத்தில் வரும்போதே நாய்கள் குரைக்கும். பொருட்படுத்தாதீர்கள். ஆரஞ்சு மரங்கள் இலைகளைவிட பழங்களை அதிகமாகச் சுமந்துகொண்டு வெளியே வளைந்து தொங்கும். ஒரு பழத்தைப் பறித்து உரிக்காமலேயே தின்றுவிடவேண்டும்போல் இருக்கும். மகளிடம் சொன்னேன். அவர் என் தோழிதான் என்று சொல்லி அவர் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். மரத்தின் அருகில் கூட்டிச் சென்று ‘எத்தனை வேண்டுமானாலும் பறித்து இங்கேயே சாப்பிடுங்கள்’ என்றார். சாலைகளில் ஆட்களைப் பார்ப்பதே அரிது. குப்பைகளை எங்கே பார்ப்பது. குப்பையே கிடையாது. ஒவ்வொரு வீட்டின் பின்பகுதியிலும் குறைந்தது 2 பைன் மரங்கள் இருக்கும் காய்ந்துபோன் ஊசிஇலைகள் எங்கு பார்த்தாலும் உதிர்ந்து கிடக்கும் கூட்டி அள்ளினால் இரண்டு அண்டாச்சட்டி நெல் அவித்துவிடலாம். வீட்டுக்குப்பைகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் குப்பை லாரி வரும். எவ்வளவு குப்பைகள் சேர்ந்தாலும் அள்ளிப்போட்டுக்கொண்டு பறந்துவிடுவார்கள். இரண்டு பேருமே வேலை பார்த்தால்தான் கட்டுப்படியாகும் சுஜாதா சொல்வார் கடன்அட்டைகள் நான்கு தலைமுறையைத் தாண்டினாலும் தீர்க்க முடியாத கடன்காரர்களாக நம்மை ஆக்கிவிடுமென்று. உண்மைதான். டாலர்களைப் பார்க்கவே முடியாது எல்லாம் கடன் அட்டைகள் இல்லையேல் காசோலைகள். காலை 6 மணிக்குப் புறப்பட்டால் மாலை 6மணிக்குத்தான் வீட்டுக்கு வருவார்கள். இடையே பள்ளிக்கூடம் பிள்ளைகள் ஏதோ ஒரு ஏற்பாட்டில் எப்படி எப்படியோ நடக்கும். அமெரிக்க வாழ்க்கை ஓர் ஆனந்தமான வாழ்க்கை. வேறு கடமைகள் இல்லாவிட்டால் அங்கேயே இருந்துவிடலாம்.

மகள் வீட்டுக்கு எதிரேதான் கோமளா வீடு. கோமளா எங்களுக்கு மிக நெருக்கமாகிவிட்டார். அவர் வேலைக்குப் போவதில்லை. துணைப்பாடம் எடுக்கிறார். மாலையில்தான் வேலை. மகளும் மருமகனும் வேலைக்குச் சென்றதும் சாய்ரா சமையலில் இறங்கிவிடுவார். நான் கூடமாட உதவி செய்வேன். பெரும்பாலும் கோமளா எங்களோடுதான் இருப்பார். பகல் பொழுது முழுவதும் நாங்கள் 3 பேரும்தான். காலையில் எப்போதும் நானும் சாய்ராவும் நடக்கப் போய்விடுவோம். வீட்டிலிருந்து புறப்பட்டு அந்த ஏரியை 3 சுற்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவோம். இப்படிப் போனால் இப்படி வந்துவிடலாம் என்ற எந்த கணிப்பிற்கும் அந்தச் சாலைகள் கட்டுப்படாது. பல சாலைகள் அழகாக ஓடி அப்படியே நின்றுவிடும். தொடர்ச்சி இருக்காது. நாங்கள் புதிய பாதைகளிலெல்லாம் போகமாட்டோம். எப்போதும் போகும் ஒரே பாதைதான். சில சமயம் கோமளாவும் எங்களோடு நடக்கவருவார்.

அன்று அப்படித்தான் மூன்றுபேரும் நடந்து ஏரிக்கு வந்துவிட்டோம். நான் ஊஞ்சலில் ஆடினேன். கோமளாவும் சாய்ராவும் அந்த நீண்ட இருக்கையில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு தலை சுற்றுவதுபோல் இருக்கிறது. ஆடுவதை நிறுத்திய பிறகும் ஆடுவதுபோலவே இருக்கிறது. அந்தக் குளிரிலும் வியர்க்கிறது. ‘சாய்ரா’ என்றேன். நெஞ்சுக்குள் மின்விசிறி ஓடுவதுபோல் இருக்கிறது. கோமளா என் வியர்வையைப் பார்த்ததும் பயந்துவிட்டார். ‘அப்படியே பார்த்துக் கொள்ளுங்கள் சாய்ரா. நான்போய் காரை எடுத்து வருகிறேன்.’ என்று சொல்லிக்கொண்டே ஓடுகிறார். கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டார். மகளுக்கும் மருமகனுக்கும் செய்தி பறந்தது. நாங்கள் மருத்துவமனை சேர்ந்தபோது அவர்கள் ஏற்கனவே வந்து காத்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு நினைவுகள் பறந்துகொண்டும் தொலைந்துகொண்டும் இருந்தன. ஏதோ ஒரு படுக்கையில் படுக்கவைத்தவரை தெரிந்தது.பிறகு ஒரே நிசப்தம். இந்த உலகிலிருந்து நான் துண்டிக்கப்பட்டுவிட்டேன்.

மீண்டும் நான் கண் விழித்தபோது மூன்று நாட்கள் ஓடியிருந்தன. அருகில் சாய்ரா. முகம் சுரந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தது.

‘என்னம்மா? என்ன ஆச்சு?

‘பெரிய கண்டம் தாண்டியாச்சு. ஹார்ட்ல ஏதோ அடப்பாம். கையில் ஊசி போட்டு சரி பண்ணிட்டாங்க.’

‘பில் வந்துருச்சா? பெரிய காசு வந்திருக்குமே? ஏற்கனவே மகள் கிரடிட் கார்டிலே பத்தாயிரம் டாலர் கட்டணும் இது எவ்வளவு? ஒவ்வொரு தடவையும் தொழும்போது நா அல்லாக்கிட்ட துஆ கேப்பேன். யாருக்கும் பாரமா என்னை ஆக்கிடாதேன்னு. அதுக்காகவேதான் நான் ஊருகளுக்குப் போறதுன்னா பயப்படுவேன். என்ன ஆச்சு சாயிரா.கிரடிட் கார்டும் முடியாது இன்சூரன்ஸும் முடியாதே ரொக்கமாக் கொடுத்தாத்தான் உண்டு. எவ்வளவும்மா வந்துச்சு? சொல்லு சொல்லு.’ பறந்தேன்.

‘கொஞ்சம் அமைதியா இருங்க. நாம யாருக்கும் பாரமில்ல. எல்லாக்காசும் கொடுந்தாச்சு.. இதோ கோமளா வர்றாங்க. அவங்க சொல்வாங்க’

‘கோமளா. என்னம்மா ஆச்சு. சாய்ரா ஒன்னுமே சொல்லமாட்டேங்கிறாங்க. நீங்களாவது சொல்லுங்க கோமளா.’

‘18000 டாலர் அங்கிள். ஆனா. எல்லாக்காசையும் குடுத்தாச்சு. எனக்குத் தெரிஞ்ச நகை வியாபாரிக்கிட்ட சாய்ரா நகையெல்லாம் வித்துட்டாங்க. முப்பதாயிரம் வந்துச்சு. 18000 போக 12000 ஐ மகள்ட்டேயே குடுத்துட்டாங்க. சாய்ரா’

. ‘நாம எப்போதுமே யாருக்கும் பாரமா ஆயிடமாட்டோங்க’ என்றார் சாய்ரா. நான் சாய்ராவை ஏறிட்டுப் பார்த்தேன். சாய்ராவும் என்னைப் பார்த்தார்.சில விநாடிகள் அப்படியே ஸ்தம்பித்துவிட்டேன். என் பார்வையில் ‘இதற்காகத்தான் நகைகளை அள்ளிக்கோண்டே என்னோடு வந்தாயா சாய்ரா’ என்ற கேள்வி இருந்தது. ‘ஆம் அதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பேன்’ என்ற பதில் சாய்ராவின் பார்வையில் இருந்தது. கோமளா அழுதார் ஒரு நீண்ட மௌனம். சாய்ராதான் அந்த மௌனத்தை உடைத்தார். என்னை மீண்டும் பார்த்தார். சொன்னார். ’இனிமே நகைக்காக நமக்குள்ள சண்டையே வராதுங்க’

யூசுப் ராவுத்தர் ரஜித்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

Series Navigationவிடாது சிகப்புவேறு ஆகமம்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    Nagore Ganpa says:

    Inia Y.R.Rajith, Arumaiyana pathivu.Kannineeril nanainthen.
    Karpanaiyo,unmai nigalvo.Manaivigal enrum manaivigalae.
    When I had heart ailment recently, I was worried and daughter came from Singai to take care financially, wife assured me that she will manage with her jewels.Great souls.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *