நடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…

This entry is part 6 of 34 in the series 17 ஜூலை 2011

டிசம்பர் 2007இல் [பெங்களூரில்] மறைந்த நடனக் கலைஞர் சாந்தா ராவின் நினைவாக அண்மையில் சென்னை நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் அவர் மீது ஆழ்ந்த அபிமானம் கொண்ட புகைப்படக்காரரும், நடன விமர்சகருமான அசோக் சாட்டர்ஜியின் உரையும், சாந்தா ராவ் குறித்த சில ஆவணங்களின் திரையிடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மங்களூரில் பிறந்து மகராஷ்டிரத்தில் வளர்ந்து தென் இந்திய நடனத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இளம் வயதிலேயே கேரளத்துக்கு வந்து அதன் கலைச்சூழலில் ஒன்றி அங்கு மோகினியாட்டத்தையும், கதகளியையும் கற்று பிறகு தமிழ்நாட்டில் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியம் பயின்று இறக்கும்வரை [கிட்டத்தட்ட 70 ஆண்டுகள்] நடனத்தின் எண்ணற்ற நுட்பமான இழைகளுக்குள் வாழ்ந்து மறைந்த சாந்தா ராவின் வாழ்க்கைச் சலனங்கள் கலைச் செறிவும், வினோதமும் கொண்டு மனதை முற்றிலும் வசப்படுத்தக்கூடியதாக இருந்தன. பாலசரஸ்வதி, ருக்மிணி தேவி, மிருணாளினி சாராபாய், சந்திரலேகா, ராம்கோபால் ஆகிய சக நடனப் படைப்பாளிகள் இயங்கிய தளத்திலேயே அவரும் இயங்கினாலும் நடனம் குறித்த மிகவும் தனித்துவமான பார்வையும், நடனத்தை ஒரு பிரத்யேகமான வாழ்வுமுறை யாகவும், இருப்புக்கான தேடலாகவும் கண்ட சாந்தா ராவின் அர்ப்பணிப்பு மிகுந்த கலைவாழ்க்கை ஒரு வசீகரமான பின்புலத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. கலையின் கோரிக்கை களுக்கு மட்டுமே செவி மடுப்பவராக ஒரு தனிமை வாழ்க்கை வாழ்ந்த அவருடைய வாழ்க்கைச் சலனங்கள் பலவிதமாக விரிவு கொண்டன.

செவ்வியல் நடனத்தின் மறுமலர்ச்சி ஏற்பட்ட 1930களின் காலகட்டங்களில் கேரள கலாமண்டபத்தில் ஆண்களுக்குரிய கதகளி நடனத்தை சாந்தா ராவ் தான் பயிலத் தேர்வு செய்ததே ஒரு புதுமையான விஷயம். கதகளி மாஸ்டரான ராவுண்ணி மேனன் ஆண்களுக்குரிய கடுமையான பயிற்சிமுறையுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கதகளி வடிவத்தை சாந்தா ராவின் உறுதியான ஈடுபாட்டின் காரணமாகவே கற்றுத்தர முன்வந்தார். அந்தப் பயிற்சியே சாந்தாராவின் நடன அசைவுகளில் ஒருவிதமான ஆண் தன்மைக்கான தோற்றத்தை வழங்கியிருக்க வேண்டும். 1940இல் திருச்சூரில் கலைத்தேர்ச்சி கொண்ட நம்பூதிரிகள் மற்றும் கதகளி விற்பன்னர்களுக்கு நடுவே இவர் முதன்முதலாகத் தன்னுடைய கதகளி அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். அந்த சமயத்தில் இலங்கைக்கும் சென்று கதகளியுடன் தொடர்புடைய காண்டியன் நடனவகைகளை குருணேயாவிடம் கற்றுத் தேர்கிறார். அதன்பிறகுதான் அவர் தமிழ்நாட்டுக்கு வந்து பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பரத நாட்டியம் கற்றுக்கொண்டது. அப்போது பிரபலமாக இருந்த பாலசரஸ்வதி, ருக்மிணி தேவி, மிருணாளினி சாராபாய், ஆகியோரும் பந்தநல்லூர் பாணியில் நடனம் கற்றவர்களே. 1942ல் சென்னை மியூசிக் அகாடமியில் இவருடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம் நடக்கிறது. சாந்தா ராவின் நடனபாணி மற்றெல்லோரையும்விட மிகவும் வித்தியாசமானது. மிகவும் அழுத்தமானதாக, பலமான அதிர்வுகள் கொண்டதாக அவர் பாணி இருந்தது. அதுபோன்ற வன்மையும் அதிர்வும் கொண்ட பாணிக்கு பழக்கப்படாதவர்களுக்கு அது ஒருவிதமாக அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

மற்ற நடனக்காரர்களுடையதைப் போல அது இல்லை. மிகவும் இறுக்கமாகவும், திடீர் அசைவுகளுடனும்[JERKS] கதகளியின் உத்வேகம் கொண்டதுபோல் இருந்தது. ஆனால், ஹிப்னாடிசம் செய்ததுபோல் யாராலும் அதிலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை! அழகியல்தன்மை கொண்ட தன்னுடைய உடைகளுடனும், அணிகலன்களுடனும் அவர் அரங்கத்தில் தோன்றியபோது எல்லோரும் முழுவதுமாக அவர் வசப்பட்டிருந்தார்கள். எளிதில் விளக்கமுடியாது ஒருவிதமாக மரபுக்குள் சிக்காத சங்கடத்தையும், புதுமையின் பரவசத்தையும் அது அளிப்பதாக இருந்தது. அதேபோல், மோகினியாட்டம் பற்றியும், பரத நாட்டியம் பற்றியும் அவருடைய பார்வையும், வெளிப்பாடும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு முற்றிலும் தனித்தன்மை கொண்டிருந்தன.

சாந்தா ராவின் புகழ் மெல்ல பரவ ஆரம்பித்தது. 1964ல் உலக வயலின் மேதை யஹீதி மெனூகின் அவருடைய ஃபெஸ்டிவல் ஆஃப் வின்ட்ஸ்டர் [FESTIVAL OF WINDSOR] கலைவிழாவில் சாந்தா ராவை நடனமாட அழைத்தார். அந்த நடனம் எல்லோரையும் அதிக பிரமிப்பில் ஆழ்த்தியது. யஹூதி மெனூகினே மிகுந்த ஈடுபாட்டுடன் சாந்தா ராவின் நடனக்கலையின் நுட்பங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தார். அதன்பிறகு அவர் இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய பல நாடுகளுக்கும் பயணம் செய்து நடன நிகழ்ச்சிகள் நிகழ்த்தினார். லண்டனில் ‘ஆம்ரபாலி’ [புத்தரின் சிஷ்யை]யாக வந்து அவர் நடனமாடிய விதம் பிரிட்டிஷ் பார்வையாளர்களை ‘மெஸ்மரைஸ்’[MESMERIZE] செய்தது. ஆம்ரபாலியின் நடன பிம்பத்துடன் சாந்தா ராவ் கொண்ட மன ஒற்றுமையே அப்படியொரு சிறப்பான வெளிப்பாட்டுக்கான காரணமாக அமைந்தது. பரத நாட்டியத்தில் புராணம் சார்ந்த கடவுளர் கதைகளை அவர் நிகழ்த்தியபோதும் மதம், கடவுள்தன்மை கடந்த மனிதப்பேருவகை என்ற நிலையையே அவர் வெளிப்படுத்தினார். அமெரிக்காவிலும், லண்டனிலும் அவர் நிகழ்த்திய நடனங்கள் தான் வீடியோ படமாக்கப்பட்டு தற்போது ஆவண வடிவில் உள்ளன. அந்த வீடியோக்களின் சில பகுதிகளை அசோக் சாட்டர்ஜி அன்று போட்டுக்காட்டியபோது சாந்தா ராவின் வசீகரம், ஈர்க்கும் குணம் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.

உலகம் முழுவதும் அவர் புகழ் பரவி அவருக்கு சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவை கிடைத்தன. இரும்பு மற்றும் பட்டின் கலவை, குமிழியிடும் நீர் மற்றும் சம்மட்டியின் ஓசை, கணிதத்தின் கச்சிதம் மற்றும் நாடகத்தின் ஆச்சரியம், உணர்ச்சியின் தீவிரம் மற்றும் அரூபத்தன்மை ஆகிய குணங்களை அவருடைய கலை கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கருதினர். குறிப்பாக, அவருடைய மோகினியாட்டம் மிகவும் தனித்துவத்துடன் ஒருவித ‘பொஸஸிவ்’[POSSESSIVE] தன்மை கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது. அவர் தன்னுடைய வீட்டை ஒவ்வொரு செயல்பாட்டுகுமான தனித்தனி அறைகளாக ஒரு கலைக்கூடம் போலவே வைத்திருந்தார். ஓவியங்கள், எழுத்துப் பிரதிகள், நடனப்பயிற்சி அரங்கம், பார்வையாளர்களுக்கான ஆடிட்டோரியம் என்று தன்னுடைய வீட்டைச் சுற்றி தனது விருப்பத்திற்கேற்றவாறு ஒரு சூழலை உருவாக்கிக்கொண்டார். சிறு வயதில் கேரளத்தில் அவர் பயின்றபோது பெற்ற அறிவுத்தேடல் மற்றும் கலைநாட்டத்தின் தொடர்ச்சியாகவே அவருடைய முழுவாழ்க்கையும் தனிமையிலும் சிந்தனையிலும் கழிந்தது.

ஆழ்ந்த வாசிப்பு, பயிற்சி, படைப்பு, ஆவணப்படுத்துதல் ஆகியவையே அவருடைய அன்றாட அலுவல்களாக இருந்தன. தொழில்ரீதியாக தன்னுடைய நடன நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திக்கொள்வது பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்ட தில்லை. பல்வேறு நடன வடிவங்களை ஒப்பிட்டு தான் கற்ற விஷயங்களை முறையான ஆவணங்களாக்கி எவ்வித வெளி உதவியும் இன்றி அவைகளை ஒரு தேசியச் சொத்தாக்கினார். எந்த சந்தர்ப்பத்திலும் கலை நீர்த்துவிடாமல் தரத்தைப் பேணுபவராக அவர் இருந்தார். அதனால் நடன வட்டாரத்தில் பிரபலமான சபாக்கள் மற்றும் கருத்தரங்கு களிலிருந்து அவர் ஒதுங்கியிருக்க நேர்ந்தாலும் அதற்காக அவர் கவலைப் படவில்லை. நாள் முழுவதும் நடனப்பயிற்சிக்கெனவே நேரம் செலவழித்த அவருக்கு அரங்க நிகழ்வுகள் அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் விஷயங்களாகவே இருந்தன. வீடியோ படம் எடுக்கப்படுவதையும் அவர் தவிர்த்தார். அவருடைய சுயசரிதை விளக்கமாக ICCR வெளியிட்ட DANCES OF THE GOLDEN HALL தவிர வேறு வீடியோ ஆவணங்கள் இல்லை. [தனிப்பட்ட USA, UK வீடியோ படங்கள் உண்டு].

ஆனால், 2006ம் ஆண்டு தன்னுடைய பாட்டு மற்றும் நட்டுவாங்கத் துணையான ரத்னாவுக்கான பாராட்டுவிழாவில் தன்னுடைய புகழ்பெற்ற பாமா நிருத்யம்[BHAMA NRITHYAM] நடனத்தை நிகழ்த்திக்காட்டினார். இந்த வடிவம் கேரளத்தில் வெங்கட சலபதி சாஸ்திரியிடம் கற்ற பாம சூத்திர சடங்குகளிலிருந்து அவர் உருவாக்கிய நடன வடிவம். செவ்வியல் நடன மரபுக்கு பாமா நிருத்யம் ஒரு சிறப்பான பங்களிப்பு என்பதே நடன விமர்சகர்களின் கணிப்பு. அவருடைய நடன நிகழ்வுகளில் வெளிப்படும் வலிமையான ஒரு அந்தரங்கப் பரிமாற்றத்துக்கு இணையாக அவரைச் சுற்றி தனிமை என்னும் ஒரு வினோத வலை உள்ளது. உடனடி புகழையும் பலனையும் நாடிநிற்கும் ஒரு கூட்டத்துக்கு இது ஒரு சவாலாகவும், கலை பற்றிய மறுபரிசீலனையத் தூண்டும் விஷயமாகவும் உள்ளது. நடனத்தை ஒரு யோகமாக அனுஷ்டித்து வாழ்நாள் முழுவதும் அந்த இலக்கையே நாடிக்கொண்டிருந்த ஒருவரின் கலைவாழ்க்கையை எப்படி மதிப்பிடுவது? ஒற்றை இலக்குடன் முழுமையாக உறைதல் என்று பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் இதைத்தான் கூறினார். பெங்களூரில் சாந்தா ராவுடன் அவர் மேற்கொண்ட பரிமாற்றத்திலிருந்து இது வெளிப்பட்டிருக் கலாம். ரத்னாவுக்காக நடந்த பாமா நிருத்யம் நிகழ்ச்சியின்போது அந்த நடன நிகழ்வை அசைவில்லாமல் பார்த்து மனம் நெக்குருகிப்போன நடனமேதை ராம்கோபால் சாந்தா ராவின் கைகளைப் பற்றிக்கொண்டு கூறியது –” நீ இன்னும் சாந்தா தான்”. சாந்தா ராவின் முழுமையான உறைதலை நிதர்சனமாக உள்வாங்கிய ஒரு சகபயணியின் ஆத்மார்த்தமான மதிப்பீடு இது.

”எத்தகைய உத்தியாக இருந்தாலும் சாந்தா ராவுக்கு நடனம் என்பது வெறும் கலாச்சார கவனத்துக்கான அழகிய பயணம் அல்ல. மாறாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு புதிய படைப்புணர்வாக கலையின் நிரந்தரத்தை நோக்கி மனதை விழிப்படையச் செய்யும் ஒரு தேடல். ஒரு கவிதையாக, ஒரு பிரார்த்தனையாக, இசையாலும் ராகங்களாலும் நிரப்பும் ஒரு வடிவம். அவருடைய கலை எல்லாக் காலங்களுக்கும் உரியது”.
_ ART AND LIFE, 1999.

சாந்தா ராவ் கலைக்கூடமாக போஷித்த அவருடைய இல்லம் பராமரிக்க யாருமின்றி, பயன்படுத்தப்படாமல் உள்ளது.

0

_வெளி ரங்கராஜன்

Series Navigationவிட்டு விடுதலைஅவனேதான்
author

’வெளி’ ரங்கராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *