நரிக்குறவர்களின் நாட்டுப்புறப்பாடல்கள்

author
3
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 18 in the series 26 ஜனவரி 2014

முனைவர்.ச.கலைவாணி

                                              உதவிப்பேராசிரியர்

மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்

மீனாட்சி பெண்கள் கல்லூரி

பூவந்தி.

நாட்டுப்புற இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்கள் எனப்படுகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் மக்களால் மக்களுக்காக பாடப்படுபவை. ஏட்டில் எழுதப்படாதவை. மக்களின் உணர்வுகளையும், பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்துபவை. இவற்றுள் பழமொழிகள், விடுகதைகள், கதைகள்,கதைப்பாடல்கள், விடுகதைகள், பாடல்கள் ஆகியவை அடங்கும். அந்த வகையில் தமிழ்நாட்டுப் பழங்குடிகளாகக் கருதப்படுபவர்கள் நரிக்குறவர்கள். அவர்களின் நாட்டுப்புறப்பாடல்களை (தாலாட்டு, ஒப்பாரி, தொழிற்பாடல்) ஆராய்வது கட்டுரையின் நோக்கமாகும்.

தாலாட்டு :

குழந்தைக்குத் தாயோ அல்லது குழந்தையைச் சார்ந்தவர்களோ தாலாட்டுப் பாடுவது தாலாட்டு. நரிக்குறவ இனத்திலும் தாய் தன் குழந்தையைத் தூங்க வைக்கப் பின்வரும் பாடலைப் பாடுகிறாள்.

“ஏங் கத்தரிக்கா…..

ஆரிராரோ….ஆராரோ

ஏந் தக்காளிப்பழமே …

ஆராரீரோ…. ஆரீராரோ….”

இன்னும் இப்பாடல் நீண்டு கொண்டே செல்லும். இது போன்று ஒவ்வொரு காய்கறிகளின் பெயர்களாகக் கூறிப் பாடுகிறார்கள். அப்போதும் குழந்தை தூங்கவில்லை எனில் பழங்களின் பெயர்களையும் பூக்களின் சொல்லிப் பாடலைத் தொடர்ச்சியாகப் பாடுகின்றனர்.

இவ்வினத்துக் குழந்தைகளுக்கு இவர்கள் பாடும் தொழிற்பாடலே பெரும்பாலும் தாலாட்டாக அமைகின்றது. இவ்வினத்தவர் தாம் தொழிற்குச் செல்லும்போது குழந்தையையும் தூரி கட்டித் தம்முடன் தூக்கிச் செல்கின்றனர். எனவே இக்குழந்தைக்கு தொழிலிற்காக இவர்கள் கூவி விற்கும் சொற்கள் தாலாட்டாக அமைகின்றன. இவை தவிர குழந்தையைக் கூடாரத்தில் விட்டுச் செல்லும் போது குழந்தையைத் தூங்கவைக்க அக்குழந்தையின் சகோதரியோ அல்லது தாயின் சகோதரியோ (சித்தியோ) குழந்தையைச் சார்ந்தவர்களோ பாடல் பாடுவது உண்டு.

“ஆராரிரோ ……ஆரீராரோ…..

சீனா கல்கண்டை சித்தறும்பு கடிச்சுச்சோ

சினுங்குறது ஏனடியோ….

சிலுக்குச் சட்ட வாங்க செட்டியர் வீடு போவனும்

கறியும் சோறும் காலத்தோட வாங்கனும்

கண்ணுமுழிக்காம கத்தி சத்தம் போடாம

தூங்கிட டீ ஏங் கண்ணே…..

பாசி விக்கப் போன ஆயா பத்திரமா வந்திடுவா

பதறாம தூங்கிட டீ ஏங் கண்ணே…..

ரே……ரே…… ரே ரே ரே…..”

இப்பாடலின் வழி நரிக்குறவரிடையே காணப்படும் பிச்சை ஏற்கும் பழக்கம் சுட்டிக்காட்டப்படுகிறது.

இப்பாடலில் ‘ஆயா’ என்ற சொல் ‘அம்மா’ என்பதைக் குறிக்கிறது. பிற இனத்தவரிடம் காணப்படும் தாலாட்டுப்பாடல் வீரத்தினை ஊட்டுவதாகவும் தாய் வீட்டுப் பெருமையினைக் கூறுவதாகவும் புகுந்த வீட்டில் அத்தாயின் நிலையினைக் குறிப்பிடுவதாகவும் அமையும். ஆனால் இவ்வினத்தவரின் தாலாட்டுப் பாடல்கள் இவர்தம் இனத்துப் பழக்க வழக்கமான பிச்சை எடுத்து உணவு பெறுதல், பிற பொருட்கள் பெறுதல் போன்றவற்றை மையமிட்டதாக அமைகின்றன. இத்தகைய செயலில் தம் குழந்தைகளையும் ஈடுபடுத்த பிறப்பிலேயே முற்படுவது போன்று இப்பாடல்கள் அமைகின்றன.

ஓப்பாரி :

ஒருவர் இறந்தால் அந்த சோகம் பாடலாக வெளிப்படுவது ஒப்பாரி. இவ்வொப்பாரிப்பாடல் இறந்த நாள் மட்டுமல்லாமல் வேறு நேரங்களிலும் இறந்தவரை நினைத்துப் பாடப்படுவதும் உண்டு. இறந்து போனவரை நினைத்துப் பாடப்படுவதும் உண்டு. இறந்தவர்க்கு மட்டுமல்லாது பிறரது கொடுமை தாங்காமலும் தன்னைச் சார்ந்தவரை நினைத்துப் பாடுவதும் உண்டு. இதே நிலை நரிக்குறவரிடமும் காணப்படுகிறது.

“கவட்டை வளைச்சா ஒங்கை வலிக்குமின்னு

கடுக்காய் எண்ணெய் காய்ச்சி வச்சிருக்க

காட்டுக்குப் போன நீ காட்டுக்கே போனீயே

காத்திரு குட்டி கடா கொண்டுவர்றேன்னு சொன்னியே

காத்திருக்கேன் காணலையே கொறவா ஒன்னா

அண்ண நீ இருக்கையிலே அடைய நெனச்சான்

ஓந்தம்பி இப்ப அநாதயா நிக்கிற ஏங்கிட்ட

அடாவடியா நடக்குறானே…..க்கஹாலோ…..”

இப்பாடல் கணவன் இறந்த சில நாட்கள் கழித்து தனக்கு விருப்பமில்லாமல் தன்னை அடைய நினைக்கும் கொழுந்தனின் கொடுமையைத் தாங்காமல் குறத்தி ஒருத்தி பாடும் பாடல் போன்று அமைகிறது. ‘க்கஹாலோ’ என்ற சொல் ‘மச்சான்’ என்ற பொருளில் அமகின்றது. அண்ணன் மனைவி மீது ஆசை வெத்தல், பிறர் மனைவியர் மற்றும் கணவர் மீது ஆசை வைத்து அடைய நினைத்தல் போன்ற செயல்பாடு இவிவினத்து ஆண்,பெண் ஆகிய வேறுபாடின்றி பெரிதளவில் காணப்படுவதைச் சுட்டுவதாக இவ்வொப்பாரிப்பாடல் அமைகிறது.

தந்தை இறந்தவுடன் தன் நிலையை நினைத்து தந்தையின் இறப்பு நாளில் நரிக்குறவ இளம்பெண் பாடும் பாடல்,

“காட்டு மொசல வேட்டையாட

பண்டியில போனிலே என் அப்பா ….

வெசப்பாம்பு தீண்டியதோ?

வீடுவந்து சேரலையே என் அப்பா…

வெள்;ளி செல வச்ச வீட்டுல என்ன

வாழவைக்க நெனச்சியே என் அப்பா…

எந்த வெட்டிப்பயலோட போகப்

போறளோ என் அம்மா….

நீ பெத்த புள்ளெக நாங்க எந்த

வீதியிலே நிக்கப்போறோமோ என் அப்பா”

இப்பாடலில் ‘பண்டி’ என்ற சொல் ‘வண்டி’ என்பதைக் குறிக்கும.; இவ்வினத்தவர்களின் ஓர் ஒப்பாரிப்பாடலில் நரிக்குறவ இளம்பெண் தன் தந்தை இறந்த துக்கத்தில் புலம்பி அழுகிறாள். அதில் தன் தந்தை இறந்த துக்கத்தைவிட தன் தாய் வேறு ஒருவனை திருமணம் செய்து தன்னை அநாதையாக்கி விடுவாள் என்ற துக்கம் மேலோங்கி இருக்கிறது என்பதன் வாயிலாக இவர்களிடையே பெண்கள் கணவன் இறந்த பிறகு வேறு ஆடவனை மணந்துகொள்ளும் வழக்கம் பெரும்பான்மையும் நிலவுவதை அறியமுடிகிறது.

தொழிற்பாடல் :

இவ்வினத்தவர் தொழிலிற்குச் செல்லும்போதும், வேட்டைக்குச் செல்லும்போதும் பாடல் பாடுகின்றனர். இவர்கள் தமது பரம்பரைத் தொழிலான பாசி, ஊசி, மருந்து போன்றவை விற்கும்போதும் நாடோடிப் பாடல்கள் சிலவற்றைப் பாடுகின்றனர்.

“காட்டு மொசலும் கானங்கோழியும்

கண்ணி வைச்சுப் புடுச்சுடுவோம்

காசுக்கு ரெண்டுன்னு வித்திடுவோம் சாமியோ…

கை நெறைய காசு வர

வாங்கிடுங்க ஆயாலோ….”

தாங்கள் பறவை விற்கும்போது மேற்கண்டவாறு பாடல்கள் பல பாடி அப்பறவைகளைத் தெருக்களில் விற்றுச் செல்வதை அவர்களை கள ஆய்வு செய்ததன் மூலம் அறியமுடிந்தது.

“சீல தைக்கும் சீனா ஊசி

ஸ்ரீரங்கத்து கருப்புப் பாசி

காது கத்தும் கம்பி ஊசி

கொண்டுவந்தோம் வாங்கலையோ டியாலோ….”

“பச்சப்பாசி பவளப்பாசி சாமி

பச்சப்புள்ளைக்கு கோர்த்துப்போட்டா

நல்லா இருக்கும் ஆயி….”

என்று பாசி விற்கும் போதும்,

“மயிலுக்கீரை மாம்பிஞ்சு

சுண்ணாம்புக் கீரை சுக்கு

சேர்த்த சூரணம் சூட்டை

வேட்டையைத் தணிக்கும் ஆயாலோ….”

மூட்டுவலி கைகால் வலிக்கு

காட்டு மூலிகை கலந்த லேகியம் இது

கண்ணுமுழி அளவு காலையில சாப்பிட்டால்

கால்வலி பறந்திடும்

வாங்கி முழுங்குங்க சாமியோ….”

என்று மருந்து விற்கும்போதும் பாடல்பாடி விற்கின்றனர்.

“ஊருஊறா சென்றிடுவோம் சாமி

ஓன்னாவந்து சேர்ந்திடுவோம் சாமி

பொய் பொரட்டு பேசமாட்டோம் சாமி

போலீசுக் கச்சேரி போக மாட்டோம் சாமி”

என்ற பாடல் இவ்வினத்துப் பழக்கவழக்கத்தினைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

             நரிக்குறவரிடையே காணப்படும் தொழிற்பாடல் பெரும்பாலும் நரிக்குறவ குழந்தைக்குத் தாலாட்டுப் பாடலாக அமைகின்றது. இவை தவிர அக்குழந்தையைக் கூடாரத்தில் விட்டுச் செல்லும் போது மட்டும் குழந்தையைச் சார்ந்த பிறர் பாடுவதாக அமைகின்றது.

             தன்னைச் சார்ந்த ஒருவரது இறப்பின் பாதிப்பால் ஒப்பாரிப் பாடல்கள் வெளிப்படுகின்றன. தமது நிலைக்காகத் தாமே வருந்திப் பாடுவதாகப் பெரும்பான்மையும் இப்பாடல்கள் அமைகின்றன.

             இவ்வினத்தவர் விற்பனைப் பொருட்களைக் கூவி விற்கும் நடையே பாடல் போன்று அமைகின்றது. சில சமயம் தொழில் தொடர்பான பாடல்களைப் பாடியும் விற்பனை செய்கின்றனர்.

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44ஸ்ரீதரன் கதைகள்
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    ameethaammaal says:

    மிகச்சிறப்பான பதிவு நரிக்குறவர்களுக்கு தமிழ் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இலக்கியத் தமிழில் அவர்கள் தாலாட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. இவைகளில்தான் இன்றைய கவிஞர்கள் பலர் சில சொற்களை மட்டும் மாற்றி விளையாடுகிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது. இதன் மூலநூலைச் சொன்னால் பேருதவியாக இருக்கும் சொல்வீர்களா கலைவாணி

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    முனைவர்.ச.கலைவாணி பின்னூட்டமிட்ட அமீதாம்பாள் போலவே சிந்தனையுடையோராக இருந்த்தல் வேண்டும். குறவர்கள் பழங்குடியினர். இக்கட்டுரையில் அவர்கள் நாட்டுப்புறப்பாடல்கள் இன்று அவர்களிடையே புழங்குபவை மட்டுமாக எழுதப்பட்டிருக்கின்றன. அவர்களிடம் பலபல முதிய பாடல்கள் இருக்கும். களப்பணி மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்தது போலச் செய்யும் போது இவ்வளவுதான் வரும்போல. இங்கு போடப்பட்டிருக்கும் பாடல்கள் அம்மக்களைப்பற்றி ஒரு குறைமதிப்பீடு செய்யும்படிதான் வருகின்றன. இன்னும் முயன்று பாசிட்டிவ் பாடலகளையும் தேடியிருக்கலாம். என்ன செய்ய? விலகி நின்று பார்க்கபபடவேண்டியவர்களாகத்தான் அவர்களைத் தமிழ்ச்சமூஹம் பார்க்கிறது. முனைவர்.ச.கலைவாணி அப்படிப்பட்ட பார்வையைத்தான் வீசுகிறார். More humanity, more integration! ஒரு ஆய்வாளருக்குக் கண்டிப்பாக அந்த இன்டெக்ரேஷன் வேண்டும். வெள்ளைக்காரர்கள் செய்கிறார்கள். நாம் நம்மக்களிடையே கூட நெருங்குவதில்லை. கேம்பிரிஜ் பலகலைக்கழக மாணவி பனையேறி நாடார் குடும்பத்துடன் உடன்குடியில் மூன்றாண்டுகள் வாழ்ந்து தீசிஸ் சமர்ப்பித்தார். கொலம்பியா பலகலைக்கழக சமூகவியல் மாணவர் (தமிழர்தான்) குற்றம்புரிவோர் வாழுமிடத்தில் அமெரிக்காவில் (சேரி) நெருங்கி வாழ்ந்து தன் தீசிசைச்சமர்பித்தார். கூவம் நதிக்கரையில் குடிசைமக்களிடையே வாழும் ஆய்வாளர்களை பார்த்திருக்கிறேன். அம்மக்களில் ஒருவராக வாழ்ந்து நெருங்க நெருங்க நாம் கட்டிவைத்த பிம்பங்கள் உடையும்; வெளிச்சம் தெரியும். நாமே உயர்ந்தவகளல்ல; விதி சதி செய்துவிட்டது ஏன் எப்படி என்பதே ஆய்வு. ஏன் வெளிநாட்டுக்கு நான் ஓடவேண்டும் எடுத்துக்காட்டுகளுக்காக. நம்மூர் வெள்ளைக்காரர் (பெயர் மறந்துவிட்டது) பாம்புப்பண்ணை நடத்துபவர். இருளர்களிடையே அவரைவிட நெருங்கிவாழ்ந்தவர் இருக்க முடியாது. இருளர் பெண்ணையே மணம் முடித்தவர். அவரின் பாம்புகள் பற்றிய ஆராய்ச்சிகள் உலகப்புகழ்வாயந்தவை.

    இருளர்களும் குறவர்களும் வேறெவருமல்ல; தமிழர்கள்தான். ஆனால், அட அவர்கள் தமிழர்களா? அவர்களுக்குத்தமிழ் தெரியுமா ? Can there be more arrogance ?

  3. Avatar
    IIM Ganapathi Raman says:

    //வெள்ளைக்காரர் (பெயர் மறந்துவிட்டது) பாம்புப்பண்ணை நடத்துபவர்.//

    Romulus Whitaker

Leave a Reply to ameethaammaal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *