நானும் ஷோபா சக்தியும்

This entry is part 29 of 44 in the series 15 ஏப்ரல் 2012

புலம் பெயர்ந்த எழுத்தாளர்களோடு எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களோடு, எனக்கு பரிச்சயம் உண்டு. எம் ஜி ஆர் ஆதரவால், அவரது நகரிலேயே, அவர்கள் பெருமளவில் குடியிருந்தார்கள். எண்பதுகளில் எனது வங்கி கே கே நகர் கிளையில், அவர்கள் கணக்கு வைத்திருந்தார்கள். தலையில் விக் வைத்துக் கொண்டு தமிழ்மகன் என்கிற பெயரை சி டி மகான் என்று மாற்றிக் கொண்ட ஒருவர் எனக்கு, மாசக்கடைசியில் பணப்பற்றாக்குறை காரணமாக யஷிகா கேமராவை இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்றார். அது இன்னமும் என்னிடமிருக்கிறது. பிலிம்தான் கிடைக்கவில்லை.
அளவை பாஸ்கரன் ஒரு சிற்றிதழ் நடத்தினார். அதில் ஒரு ஆங்கிலச் சொல் கூட வரக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். இலங்கை பின்னணியில் எழுதப்பட்ட எனது ‘ துவக்கு ‘ கதையை அவரிடம் கொடுத்தேன். ‘ துவக்கு ‘ இலங்கை தமிழ். துப்பாக்கி என்று பொருள். கதை வருவதற்குள் இதழ் நின்று விட்டது. கதை அப்புறம் பயணத்தில் வந்தது. பாஸ்கரன் இப்போது பிரான்சில் இருக்கிறார். இதழ் பளபளப்பாக, எப்போதாவது வருவதாக, கவி ஓவியா இளையபாரதி சொல்லியிருக்கிறார். பாஸ்கரன் நடத்திய கூட்டங்களுக்குப் போனதால், கொஞ்சம் ஈழ இலக்கியம் பிடிபட்டது.
பால்நிலவன் சொன்னார்: “ ஷோபா சக்தி படியுங்கள். நன்றாக எழுதுகிறார். “
தினமணி இலக்கிய சங்கமத்தில், வாரந்தோறும் நாட்டில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளைப் பற்றிச், செய்தி வெளியிடுவார்கள். நல்ல சேவை. கூட்டங்களுக்கு அயற்சி பாராமல் ஓடிக்கொண்டிருந்த காலம் அது. ஷோபா சக்தி நூல் வெளியீடு. தேவநேயர் பாவாணர் அரங்கம் என்று படித்த உடனே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஷோபா ஷக்தி கறுப்பு பேண்ட் கறுப்பு சட்டை போட்டிருந்தார். நீளமாக முடி வளர்த்திருந்தார். ஒல்லியாக இருந்தார். நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன், யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். கலை மணிமுடி அவரை எனக்கு அடையாளம் காண்பித்தார். அவர் கண்ணில் படுவது போல், அருகில் நின்று கொண்டேன். திரும்பினார்.
“ இரவிச்சந்திரன்.. சிறகு சிற்றிதழ்.. பேச முடியுமா? “ அதற்குள் அவரை மேடைக்கு அழைத்து விட்டார்கள். “ வந்து பேசறன் “ என்று போய் விட்டார். மேடையில் நல்ல கூட்டம். எல்லோரும் அவரது படைப்பைப் பற்றிப் பேசினார்கள். சுவாரஸ்யம் கூடியது எனக்கு. ஷோபா அதிகம் பேசவில்லை. ‘ என் உணர்வுகளை எழுதுகிறேன். அதை எம்மண்ணில் வெளியிடமுடியாத அவலம் என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது ‘
நிகழ்வு முடிந்தவுடன் அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அளவை பாஸ்கரனும் இருந்தார். நான் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து அருகில் வந்தார்.
‘ பேச வேண்டும்.. எங்கு தங்கியிருக்கிறீர்கள்? அங்கேயே வருகிறேன்.’ சொன்னார். ஆச்சர்யம். மந்தைவெளியில், நான் அணுகக்கூடிய தூரத்தில் இருந்தார். கூட்டத்தை விலக்கி, அரங்கின் வாயிலில் அவரது புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தவரிடம் போனார். ஒரு புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தில் “ இனிய நண்பர் சிறகு இரவிச்சந்திரனுக்கு “ என்று எழுதிக் கொடுத்தார். அது அவரது “ கொரில்லா “
“ அந்த அறை ஒன்றன்மீது ஒன்றாக இருபத்தி இரண்டு சவப்பெட்டிகளை அடுக்கி வைக்கும் அளவிற்கு இருந்தது “ படித்தவுடன் அதிர்ந்து விட்டேன். எதையும் மரணத்தோடு ஒப்பிடும் அளவிற்கு ஈழ மக்கள் காயப்பட்டு போயிருக்கிறார்கள் என்று உறைக்க ஆரம்பித்தது.
கதையில் ஆங்காங்கே மெல்லிய நையாண்டி விரவிக் கிடந்தது.
ஈழத்தில், பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரியவர் அருகில் இருக்கும் இளைஞனைப் பார்த்துக் கேட்கிறார்.
“ நீ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவனா?”
“ இல்லை “
“ இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவனா? “
“ இல்லை “
“ அரசுப் பதவியில் ஏதாவது இருக்கிறாயா? “
“ இல்லை “
“ வெளிநாட்டுக்காரனா? “
“ இல்லை “
“ அப்புறம் ஏண்டா என் காலை மிதித்துக் கொண்டிருக்கிறாய்? நாய் பெற்ற மகனே! காலை எடுடா! “
அதேபோல் சொற்ப நபர்கள் இருக்கும் பேருந்தில் ஏறும் சிலர், அங்கேயே அரசுக்கு எதிரான வீதி நாடகத்தை நடத்துவது போன்ற காட்சிகள் மனதைத் தைய்த்தது.
ஷோபாவின் வீட்டை அடைந்தபோது, அது வீடு இல்லை, வீட்டின் ஒரு அறை, குளிர்சாதன வசதியோடு அப்போதே ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய், கதவைத் திறந்தவர் வேறொருவர். பெயர் சொன்னவுடன் அனுமதிக்கப்பட்டேன். பகலென்றாலும் உள்ளே சொற்ப வெளிச்சம். திரைசீலைகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. கண்கள் இருட்டைப் பழகிக்கொண்ட பின்னர்தான் ஷோபா தெரிந்தார். அதே கறுப்பு சட்டை. ஷார்ட்ஸில் இருந்தார். நிறைய பேசினோம்.
ஷோபா பிரான்சில், ஒரு சிற்றுண்டி சாலையில் பணிபுரிவதாகச் சொன்னார். சமையல் வேலை. வேலை செய்யும் இடம் போக்குவரத்து மிகுந்த இடம். ஆனாலும் இவர் பணி புரிவது தரை தளத்திற்கும் கீழே. அங்கேயும் சுதந்திரமில்லை. தினமும் எழுதுவதாகச் சொன்னார்.
“ ஒரு மாதம் விடுப்பு.. இனி அடுத்த வருடம் தான். வந்தால் தகவல் சொல்றன். “ சென்னையிலும் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். அதனால் இருட்டியவுடன் தான் வெளியே செல்வது எல்லாம். பகலெல்லாம் அறையிலேயே முடக்கம்.
“ இருநூறு ருபா அதிகம்தான்.. ஆனா ஏசி இருக்கே! “
“ இருக்கு.. ஆனா இயங்காது “
எப்படியெல்லாம் தமிழர்களே தமிழர்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதற்கு, அந்த வீட்டு உரிமையாளர் ஒரு சாட்சி. விடைபெறும்போது இன்னொமொரு புத்தகத்தைக் கையில் கொடுத்தார். மூன்று புத்தகங்கள் எழுதி இருந்தார் அப்போது. மூன்றாவது புத்தகத்தை எப்படி என்னிடம் எப்படிச் சேர்ப்பது என்று வெகுவாக ஆதங்கப்பட்டார்.
மீண்டுமொரு முறை, தற்செயலாக அவரை கன்னிமரா நூலகக் கூட்டத்தில் சந்தித்தேன். வாசற்படியின் அருகே நின்று கொண்டு, கவனித்துக் கொண்டிருந்தார். பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் பேச நேரமில்லை. கூட்ட முடிவில் அவர் காணக் கிடைக்கவில்லை. பழைய முகவரியிலும் அவர் தங்குவதில்லை என்று தெரிந்து கொண்டேன்.
முக நூல் வழியாக சமீபத்தில் இணைந்திருக்கிறார் என்னோடு. மின்னஞ்சல் அனுப்பிருக்கிறேன். பதில் வந்தால் சந்திப்பு தொடரலாம்.
ஷோபா சக்தியோடு பேசியதில், அவரிடம் ஏதும் பாசாங்கு இல்லை என்று புரிந்து கொண்டேன். அதோடு புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர், தங்கள் சொந்த அடையாளஙகளை மறைத்தே இங்கு வாழ்கிறார்கள் என்பதும் புரிந்தது. தமிழ் மகன் மகான் ஆன கதை இப்படித்தான். ஷோபா சொன்ன இன்னொரு தகவலும் என் எண்ணத்தை உறுதிப்படுத்தியது.
“ அளவை பாஸ்கரன் பேசிட்டிருந்தாரே? “
“ அவனா? அளவைன்னன்.. அளவெட்டிதானன்னு கேட்டன்.. ஓடிட்டன்..” சிரித்தார்.
ஷோபா சக்தியின் சமீபப் படைப்புகள் இந்தக் கட்டுரை வாயிலாக அவரிடம் இருந்து எனக்குக் கிடைத்தால், என் இலக்கிய அறிவு இன்னமும் விரியும் என்று எண்ணு கிறேன். திண்ணையால் முடியாதது உண்டோ?
#

Series Navigationபண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *