நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7

This entry is part 17 of 19 in the series 24 மே 2015

நீண்ட மண் பாதையைக் கடந்து அந்த இருண்ட பிரதேசத்தில் நிமிர்ந்து நின்றிருந்த அந்த வெள்ளை நிறக் கட்டிடத்தின் கேட் முன் நின்றது கார். காவலாளியைக்காணவில்லை. டேவிட்டே இறங்கி கேட்டைத் திறந்தான். இத்தனை தனிமையான இடத்தில் ஒரு காவலாளியையும் வைத்துக்கொள்ளவில்லை என்றால், இங்கு ஏதும்தப்பு நடப்பதாக தோன்றிய எண்ணத்தை அழிச்சாட்டியம் செய்து அழித்தாள் யாழினி.

மீண்டும் காரில் ஏறிக் காரை உள் நிறுத்தி, பின் இறங்கி வந்து கேட்டை பூட்டிவிட்டு வந்து காரில் ஏறினான்.

ஒரு வாட்ச் மேன் வச்சிருக்கலாமே.

சிரித்தான், அந்த சிரிப்பு இருளைக் கிழித்ததால் பயத்தை அச்சாரமாக்கியது.

ஏன் பயமா இருக்கா தேவகி ?

அச்சோ என் பேரே எனக்கு மறந்திடும் போலிருக்கு டேவிட், ப்ளீஸ் யாழினின்னு கூப்பிடுங்களேன் என்றாள்.

பேர்ல என்னம்மா இருக்கு வா உள்ள என்றான் காரை விட்டு இறங்கியபடி. அது பழையகால கட்டிடம். அதில் பழமையும் நவீனத்துவமும் போட்டிப்போட்டுக்கொண்டுமிளிர்ந்தது.

ஒரு அறையின் வாசலில் நின்று கதவை பொட் பொட்டென்று இரு தட்டுகள் தட்ட, காலிங் பெல் கூடவா இல்லை என்று சிந்தித்தாள் யாழினி

கதவு திறந்து அவனை மட்டும் உள்வாங்கிக் கொண்டு மீண்டும் மூடிக்கொண்டது.

அட என்றாகிப் போனது யாழினிக்கு

அதே சமயம் அறையில் தனித்து பயத்தோடு காத்திருந்த டேவிட்டின் மனைவி பிரின்சி அவனை இறுக்கி அணைத்துக்கொண்டிருந்தாள். அவள் முதுகு அழுகையால் குலுங்கியது.

ஏன்டா இவ்ளோ நேரமா? சீக்கிரம் வரேன்னு சொன்ன,

இல்லடா வழியில ஒரு சின்ன அசம்பாவிதம் அதனால தாமதமாயிடுச்சு, என்றான்

எனக்கு வெளிய வரவே பயமாயிடுச்சு தெரியுமா? என்று மீண்டும் அவன் மார்பிற்குள் புகுந்துக்கொண்டாள்.

எப்போ போவோம் டேவிட் இந்த இடத்தை விட்டு நம்ம ஊருக்கே போய்டலாமே இது என்னவோ பேய் பங்களா போலவே இருக்கு, நீயும் அடிக்கடி காணாம போயிடறஎன்றாள்.

வெளியில் தனித்து விடப்பட்ட யாழினி அந்த வராந்தாவில் மெல்ல நடந்தாள். வரிசையாக கட்டப்பட்டிருந்த ஒரு அறையின் முன்னிருந்து சிறு முனகலும், இருமல்சப்தமும் கேட்டது. கூடவே தண்ணி என்ற தீனமான குரல். மெல்ல அந்த கதவை தட்டப் போக, அது உள் புறமாய்த் திறந்துக்கொண்டது. அந்த கட்டிலில் உடல் ஒடுங்கிப்படுத்துக்கிடந்தது ஒரு வயோதிக குழந்தை, சுருண்டு படுத்திருந்ததில் பயத்தோற்றத்தைக் காண்பித்தது. இரவு விளக்கின் ஒளியில் ட்யுப் லைட்டை ஏற்றினாள். ட்யுப்லைட் இருமுறை மின்னி டக்கென்று வெள்ளை ஒளி பாய்ச்சியது.

சுற்றிலும் பார்க்க அது ஒரு ஹால் போல் இருந்தது. ஒரு ஓரமாய் சிறிது திறந்திருந்த கதவு வழியே உள் நுழைந்தாள். பேய் செத்துப்போச்சி குறும்படத்தில் வரும்கொரியர் காரன் பேய் போல் ஏதேனும் குதித்து நிற்குமோ என்று ஒரு காட்சி ஓட, சட்டென்று தலையை உதறிச் சமநிலைப் படுத்திக்கொண்டாள்.

ஹாலின் விளக்கொளி கிச்சனிலும் விழுந்தது. மினரல் வாட்டர் கேனில் இருந்து கொஞ்சம் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சுட வைத்தாள். வெது வெதுப்பானதும்நீரை டம்பளரில் ஊற்றி கட்டிலருகில் வந்த போது, யாரு கீதாவா என்றாள் கிழவி தீனமாய் வீட்டுக்குப் போகல, மெல்ல அவளை எழுப்பிக் கட்டிலில் அமர்ந்து அவளை தன்மீது சாய்த்துக்கொண்டாள்.

தண்ணீரை மிடறு மிடறாய் ஊட்ட, குடித்த கிழவி, கீதா இல்லையா நீ! கீதா இப்படி எல்லாம் பண்ண மாட்டா என்றவள். ஒண்ணுக் போவனும் என்றாள்.

எப்படி போவீங்க, டாய்லெட் கூட்டிட்டு போகனுமா?

படுக்கையில போயிருவேன், காலைல கீதா வந்து வேற துணி மாத்துவா

குளிரும், நான் கூட்டிட்டு போறேன் டாய்லெட்க்கு அங்க போயிருங்க

யார் கழுவுவா

நான் கழுவுறேன் மா

நீ எதுக்கு கழுவனும்

உங்க கூட நான் தான் இருக்கேன் அதனால என்றவள் டாய்லெட்டுக்கு தூக்கிக்கொண்டு போனாள்.

கிழவி கனமே இல்லாமல் ஒரு எட்டு வயதுச் சிறுமியின் உடல்வாகும் எடையும் கொண்டிருந்தாள். சுருக்க சுருக்கங்களை வரி ஓடிய தேகம், எங்கே அழுத்தம்கொடுத்தால் அழிந்து விடுமோ என்று பயரேகை உண்டாயிற்று யாழினியின் உள்ளத்தில்.

கிழவியை டாய்லெட்டில் இருந்து தூக்கி வரும் போது டேவிட் அறையினிலுள் வந்தான், அவள் பின்னே பிரின்சியும் வந்தவள் யார் டேவிட் இது நர்சா என்றாள்.

டேவிட் அவளுக்குப் பதில் சொல்லாமல் உனக்கெதுக்கு தேவகி இந்த வேலை என்றவன் கீதா கீதா என்று குரல் கொடுக்க, குண்டாய் ஒருத்தி கலைந்த தலையோடுஎழுந்து ஓடிவந்தாள் உள்ளிருந்த மற்றொரு அறையில் இருந்து, வந்தவள் முன் தன் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்ற எண்ணமோ என்னவோ அவன் கண்கள்கோபத்தில் செம்பழமாய் சிவந்த போதிலும் வார்த்தைகள் தேன் தடவியே வந்து விழுந்தன.

பாட்டிக் கூட இருக்காம எங்க போய்ட்டீங்க கீதா!

இப்பதான் செத்த கண் அசந்தேனுங்க என்றாள் கைககளில் அபிநயித்து. கீதாவை முதல் பார்வையிலே பிடிக்கவில்லை யாழினிக்கு, டேவிட்டின் பின்நின்றிருந்தவளோஇரட்டை நாடி தேகத்தோடு ஒல்லியாய் சற்று வளத்தியாய் இருந்தாலும் முகத்தில் மழலைத்தனம் குடிக்கொண்டிருந்தது. அதிகமாய் கணித்தாலும் 18ற்கு மேல்கணக்கிடமுடியவில்லை.

வாட்ச்மேன் இருக்கானா பாரு உள்ளார என்றாள் கிழவி. வயோதிகத்திலும் அவளின் செவித்திறன் கூர்மையை கொண்டு அவள் கணிப்பதை எண்ணி வியந்தாள் யாழினி.

என்ன என்றான் டேவிட்

வாட்ச்ல என்ன டைம்ன்னு கேக்குறாங்க என்ற யாழினி, தெளிவாய் கேட்ட போதும் மாற்றியே பதில் சொன்னாள். கைகளில் லேசாய் நடுக்கத்தோடு இருந்த கீதாவின்முகம் உள்ளறையில் வாட்ச்மேனின் விஜயத்தை கட்டியம் கூட, பகிரங்கமாய் அசிங்கப்படுத்த வேண்டாம் என்று தோன்றியது யாழினிக்கு.

யார் இவங்க என்று சந்தேகக் குறியை மனதில் தேக்கி மீண்டும் வினாவினாள் பிரின்சி. அந்த சந்தேகக் கூறி அவளின் முகத்திலும் பிரதிபலித்தது. காலைல பேசலாம்பிரின்சி என்ற டேவிட், உங்களுக்கு பக்கத்து அறையில் படுக்கை இருக்கிறது தேவகி என்றான்.

நான் இங்கேயே பாட்டியோடு படுத்துவிடுகிறேன் சார். ஒரு விரிப்புபோ பாயோ இருந்தால் போதும் என்றாள் யாழினி.

டேவிட் சொல்வதற்கு முன்னால் தரையிலயே படுத்துருவீங்களா அக்கா என்றாள் பிரின்சி.

அவளின் குழந்தைத்தனமான கேள்வியும், அவள் வசதியான குடும்ப தோரணையும் பதில் ஏதும் சொல்லவிடாமல் ஒரு புன்முறுவலை பதிலாக்கியது யாழினியின் மதிமுகம். அதில் எழுந்த வசீகர அழகை கவனித்த பிரின்சி, யாழினியையும் டேவிட்டையும் மாறி மாறி பார்க்க! பின் தரை விரிப்போடு வந்து அவளிடம் கொடுத்தாள்.

அந்த பார்வையில் கலந்திருந்த பயம் கலந்த சந்தேகத்தை கண்ட யாழினி, பெண்களுக்கு தன் கணவர்களை அடைகாப்பதில் எத்தனை பிரியம் என்று எண்ணினாள்.தான் மட்டும் ஏன் உரிமையும் உறவும் இருந்தும் இப்படி தாரை வார்த்து எவளுக்கோ எடுத்துவிட்டேன் என்று தோன்றியது. ராகவின் மீதிருந்த அத்தனை வெறுப்பையும்மீறி அவனின் குழந்தையை தான் சுமந்திருக்கிறோம் என்ற எண்ணமே அவன் அருகாமைக்காக ஏங்கியது. காலையில் ஒரு கடிதம் எழுதிப் போட்டால் என்ன என்று ஒருமனது சொல்ல! இப்பொழுதோ அவன் வேறொருத்தியின் கணவன் என்று மற்றொரு மனம் தடைவிதித்தது.

அப்படி என்றால் நான் யார், இந்த சமுதாயத்தில் தனக்கான இடம் எது? அடையாளம் எது? என்று கேள்விகள் மனதைக் குழப்பியது.

பிரின்சியின் கலவர முகம் வேறு யாழினிக்கு கவலையை ஏற்படுத்தியது. அவள் கவலையை போக்கும் விதமாக, நான் இங்கேயே பாட்டியோடு படுத்துக்கொள்கிறேன்அண்ணா நீங்க உங்க அறைக்கு போங்க நீங்களும் களைப்பாக இருப்பீர்களே என்றாள்.

அண்ணா! என்ற அந்த வார்த்தை வந்த வேகத்தைக் கண்ட டேவிட் இந்த பெண் எத்தனை துரிதமாய் மற்றொரு பெண்ணின் பயத்தை போக்க உறவைமுன்னிலைப்படுத்துகிறாள் என்று மெச்சிக்கொண்டே நகர்ந்தான் அவன் அறையை நோக்கி.

டேவிட் பிரின்சி தலை மறைந்ததும், கீதா நீங்களும் உங்க அவரும் அவுட் அவுஸ் போயிடுங்க, பாட்டியை நான் பாத்துக்கறேன் என்றாள் யாழினி.

கண்டுபிடிச்சுட்டியா புத்திசாலி என்றாள் கிழவி.

பஞ்சடைந்த கண்கள் பார்வையை இழந்திருக்க, செவியே அவளுக்கு கண்களாகவும் இருந்தது. பஞ்சுமிட்டாயாக வெளுத்திருந்த கேசம். சிவந்த தேகத்தில் எழுதியசுருக்க வரிகள். வயதில் அவள் அழகு தேவதையாய் இருந்திருப்பாள் என்பதை அறிவித்தது.

கீதா தலையை கவிழ்ந்திருக்க, உள்ளிருந்து வந்த வாட்ச்மேனின் அரைகுறை நிலை எரிச்சலை மூட்டியது. ச்சே மனிதர்களா விலங்குகளா, இந்த முதியவள் என்ன விதமான சங்கடத்தை அனுபவித்திருப்பாள்.

கிழவி அதற்கு எதிர்விரோதமாக ஹக் ஹக் ஹக் கென்று ஒலி எழுப்பி அதிரவைத்தாள். ஓ சிரிக்கிறாள் என்று நிதானிக்கும் முன், டெய்லி நல்ல கதைவசனம்கேட்டேன், இனி அது இல்லை என்றாள்.

இதென்ன வயோதிக மாதரசிகளை போல் இல்லாமல் இத்தனை நக்கலும் நையாண்டியும் இந்த முதியவளிடம் என்று எண்ணிக்கொண்டாள்.

உன் பேர் என்ன என்றாள் முதியவள்

யாழினி

நல்ல பேர், தேவகின்னு கூப்பிடறானே டேவிட்

அவர் தங்கையின் நினைவாக என்றாள் யாழினி

ம் அவளும் நல்ல அழகு என்ற கிழவி எங்கிருக்கிறாளோ என்றாள்

கொஞ்ச நேரம் மௌனம் கிழவி என்ன செய்கிறாள் என எட்டிப்பார்க்க கிழவியின் நாசியில் இருந்து எழுந்த சீரான மூச்சுக் காற்று கிழவி உறங்குகிறாள் என்றது.

[தொடரும்]

Series Navigationசும்மா ஊதுங்க பாஸ் – 3விளம்பரமும் வில்லங்கமும்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *