நினைவு மண்டபம்

This entry is part 6 of 24 in the series 9 ஜூன் 2013

டாக்டர் ஜி.ஜான்சன்
நான் மருத்துவராகப் பணிபுரிந்த முதல் இடம் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை.

அது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது.

இது நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை மிக்கது. ஸ்வீடன் தேசத்து மருத்துவ இறைத்தூதர்களால் தொடங்கப்பட்டது.

 

தொடக்க காலங்களில் முழுக்க முழுக்க ஸ்வீடிஷ் மருத்துவர்களாலும், செவியர்களாலும் நடத்தப்பட்டு பேரும் புகழுடனும் விளங்கியது. இதை ஆரம்பித்தவர் டாக்டர் கூகல்பெர்க் எனும் கண் மருத்துவர். இதனால் இது கண் ஆஸ்பத்திரி என்றே பல காலமாக அழைக்கப்பட்டது.

வெளிநோயாளிப் பிரிவும், 300 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிப் பிரிவும் , மருத்துவம் அறுவை சிகிச்சை , பிரசவம், குழந்தை வைத்தியம், கண் , காது – மூக்கு -தொண்டை, தொழுநோய் சிகிச்சை என பொது மருத்துவமனையாக , இயங்கியது.

அதோடு செவிலியர் பயிற்சிப் பள்ளி ( School of Nursing ) , மருத்துவ ஆய்வகப் பயிற்சி ( Medical Laboratory Technicians Course ) , விழியிழந்தோர் பள்ளி ( School for the Blind )போன்றவையும் மருத்துவமனையுடன் இணைந்திருந்தது.

இலவச மருத்துவ முகாம், இலவச கண் சிகிச்சை முகாம் , தொழுநோய் ஒழிப்புத் திட்டம் என சுற்று வட்டார கிராம மக்களுக்கு பெருஞ் சேவை புரிந்து வந்தது.

இத்தகைய புகழ் மிக்க மருத்துவமனையில் நான் முதன் முதலாக பணியில் அமர்ந்தது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது .

நான் மருத்துவப் பிரிவில் டாக்டர் பார்த் எனும் ஸ்வீடிஷ் மருத்துவரின் கீழ் பணி புரிந்தேன் . அவரிடம் ஒரு வினோத பழக்கம் இருந்தது. வார்டில் நம்பிக்கை இழந்துபோன நோயாளிகளை சிரத்தை எடுத்து போராடி காப்பாற்ற மாட்டார். ” Truely he will die .” ( உண்மையாக இவன் இறந்துவிடுவான் ) என்று கூறிவிட்டு அந்த நோயாளியை என்னிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். அது ஒரு வகையில் எனக்கு பயனுள்ளதாகவே அமைந்தது . நான் மருத்துவ நூல்களைப் புரட்டிப் பார்த்து புதுப் புது சிகிச்சை முறைகளைச் செய்து பார்த்து நல்ல அனுபவமும் பெறலானேன்.அவர்களில் பலர் காப்பாற்றப்பட்டும் உள்ளனர்.

 

வெளிநோயாளிப் பிரிவில் எனக்கு தரப்பட்ட அறையின் எண் 12. அங்குதான் காலையிலும் மாலையிலும் நோயாளிகளைப் பார்ப்பேன்.

அந்த அறை இரத்தப் பரிசோதனைக் கூடத்தை ஒட்டி இருந்தது.

என் இருக்கைக்குப் பின்புறம் ஒரு ஜன்னல் இருந்தது. அதன் வெளியே ஒரு சதுரமான இடம் காணப்பட்டது.அதைச் சுற்றிலும் கருங்கற்கள் தூண்கள் நடப்பட்டு முள் கம்பியால் மூடப்பட்டிருந்தது. நடுவில் இரண்டு கருங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.அவற்றில் குங்குமப் போட்டு இடப்பட்டிருந்தது.காய்ந்து உலர்ந்த மலர்கள் சிதறிக் கிடந்தன. பழைய பத்திகள் சில புதைக்கப் பட்டிருந்தன.

அது என்னவாக இருக்கும் என்று பணியாளர் ( attender ) மாணிக்கத்திடம் கேட்டேன். அவர் வயதில் மூத்தவர். மருத்துவமனையில் பல வருடங்கள் வேலை செய்பவர்.

” இதுதான் மருது பாண்டிய்ர்களைப் புதைத்த இடம் டாக்டர். ” என்று அவர் கூறியதைக் கேட்டு வியந்து போனேன்!

 

மருத்துவமனை இருந்த பகுதி முன்பு சிங்காரத் தோப்பு என்று அழைக்கப்பட்டது. அது அடர்ந்த காடு.ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களைத் தூக்கில் இட்ட பிறகு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தலைகளைத் துண்டித்து காளையார்கோவில் கோவில் முன் கம்பத்தில் சொருகி வைக்கப் பட்டனவாம். உடல்கள் சிங்காரத்தோப்பில் புதைக்கப் பட்டதாம்.

மருத்துவ மனைக்கு இடம் தேடி டாக்டர் கூகல்பெர்க் அப்போதைய சிவகங்கை மன்னரிடம் சென்றபோது இந்த சிங்காரத் தோப்பை தானமாகத் தந்துவிட்டாராம். அப்போது ஒரு நிபந்த்தனை விதிக்கப் பட்டதாம்.

கிறிஸ்த்துவ ஸ்தாபனத்துக்கு இந்த இடம் தரப்பட்டாலும், மருது சகோதரர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தைப் பராமரித்து, அங்கே மரியாதை செலுத்த வரும் இந்துக்களுக்கு வழி விட வேண்டும் என்பது மன்னரின் ஆணை. அதுபோன்று அந்த இடத்தில கோவில் கட்டி அவர்களை வழி படக் கூடாது என்ற டாக்டரின்

வேண்டுகோளையும் மன்னர் ஏற்றுக்கொண்டாராம்.

அதன் பிறகு மருத்துவமனை கட்டப்பட்டு, சுற்றிலும் சுவர்கள் எழுப்பப் பட்டது. மருது பாண்டியர் சகோதரர்களைப் புதைத்த இடமும் வளாகத்தினுள் அமைந்த்து விட்டது.

 

இதெல்லாம் வாய்மொழியாக அங்குள்ள ஒரு சிலர் மூலமாகவே தெரிய வந்தது.

மருது பாண்டியர்கள் பற்றி ஓரளவுதான் எனக்கு அப்போது தெரியும். அவர்கள் சுதந்திர வீரர்கள் என்பதையும், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப் பட்டனர் என்பதும் தெரியும்.அதோடு ” சிவகங்கைச் சீமை ” திரைப்படமும் பார்த்துள்ளேன்.

இத்தகைய வீர சகோதரர்கள் புதைக்கப் பட்டுள்ள இடத்தின் அருகிலேயே நான் அமர்ந்துள்ளேன் என்பது எனக்கு பெருமை தந்தது.

இவர்களைப் பற்றி ஆதாரப் பூர்வமான சரித்திர உண்மைகளை அறிந்துகொள்ள விரும்பினேன். மதுரை செல்லும்போது மருது சகோதரர்கள் பற்றிய நூல்களை நான் தேடினேன். ஆனால் அப்போது ஏதும் கிடைக்கவில்லை

ஒரு முறை குன்னக்குடி முருகன் கோவில் மேல் ஏறியபோது அங்கு சன்னிதானத்தில் மருது பாண்டியர் சிலைகள் சிறு வடிவில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

 

பின்பு அது பற்றி நான் நான் அக்கறைக் கொள்ளவில்லை. என் அறையில் அமர்ந்து நான் பணியில் ஈடுபட்டேன். ஒவ்வொரு பொங்கல் தினத்திலும் ஒரு சிலர் கூட்டமாக வந்து அந்த இரு கற்களுக்கும் பொட்டிட்டு , மாலைகள் அணிவித்து, ஊது பத்திகளும், மேழுகுவர்த்திகளும் கொளுத்தி பூஜை செய்துவிட்டு, அங்கேயே பொங்கல் பொங்கி அனைவருக்கும் வழங்குவர் .அதில் முன்னோடியாக செயல் பட்டவர் திரு தங்கசாமி சேர்வை

என்பவர்.

அதுபோன்று பத்து ஆண்டுகளும் உருண்டோடின. டாக்டர் பார்த் ஓய்வு பெற்று ஸ்வீடன் திரும்பிவிட்டார்.

நான் தலைமை மருத்துவராக பதவி உயர்வு பெற்றேன் . அதன் மூலமாக மருத்துவ வளாகத்தின் பொறுப்பும் என்னிடம் இருந்தது. வளாகத்தினுள் ஊழியர்களின் குடியிருப்புகள் சுமார் இருநூறு இருந்தன . சுமார் முந்நூறு ஊழியர்கள் பணி புரிந்தனர்.

கிறிஸ்துவ வளாகமாகஅமைந்திருந்ததால்,,சிறுபான்மையோர் ஸ்தாபனமாக வரையறுக்கப் பட்டு அரசு தலையீடு அதிகம் இல்லாமல் இயங்கி வந்தது. காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் என்னுடைய அனுமதியின் பேரில்தான் வளாகத்தினுள் அதிகாரப்பூர்வமாக நுழைய முடியும்.

 

ஒரு நாள் தங்கசாமி சேர்வை சுமார் பத்து பேர்களுடன் என்னைக் காண வந்தார். நல்ல உடல் கட்டும், நரைத்த முறுக்கு மீசையுடனும் காணப்பட்ட அவருக்கு அப்போது ஐம்பது வயது .அவர் கையில் ஒரு கட்டு தாள்கள் இருந்தன . அவற்றை என்னிடம் தந்தார். அவற்றைப் பிரித்துப் பார்த்தேன். அதில் மருது பாண்டியரின் வம்ச வரலாறு எழுதப் பட்டிருந்தது.. அதில் அவர் பெயரும் கடைசியாகக் குறிப்பிடப் பட்டிருந்தது கண்டு வியந்தேன்.

” டாக்டர். நாங்கள் எல்லாம் மருது பாண்டியரின் வம்ச வழி வந்தவர்கள். அவர்களின் சமாதி உங்கள் வளாகத்தில் உள்ளது. அது அனாதையாக கேட்பாரற்று கிடக்கிறது. அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பவேண்டும் என்பது எங்கள் முக்குலத்தோரின் முடிவாகும். இது குறித்து அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம். முதல்வர் கலைஞரும் இதில் ஆர்வமாக உள்ளார். கூடிய விரைவில் அரசு சார்பாக மாவட்ட ஆணையர் உங்களை வந்து பார்ப்பார். . ” வந்ததற்கான காரணத்தைக் கச்சிதமாகக் கூறி முடித்தார்.

 

அவர் சொன்னதை கவனமாகக் கேட்டபின் , மருத்துவமனையின் நிர்வாகம் தற்போது என்னிடம் இருந்தாலும், இது நிலம் பொருத்த விஷயமாக இருப்பதால் நான் மேலிடத்தில் இது பற்றி கூறி ஒரு வாரத்தில் பதில் கூறுவதாகச் சொல்லி அனுப்பினேன்.

எங்கள் மருத்துவமனை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையால் நடத்தப் பட்டு வந்தது. அதன் தலைமையகம் திருச்சியில் இருந்தது. தமிழ் நாடு முழுதும் தேவாலயங்களும், பள்ளிகளும், இதர நிறுவனங்களையும் கொண்டது. இதை ஆலோசனைச் சங்கம் நிர்வாகம் செய்தது..அதற்கு பேராயர்தான் தலைவர்.

நான் திருச்சி சென்று ஆலோசனை சங்கத்தில் இது பற்றி நேரில் விவரித்தேன்.அவர்கள் சம்மதிப்பதில் தவறு இல்லை என்றனர். ஆனால் ஒரேயொரு நிபந்தனை இட்டனர். மருது பாண்டியர்களுக்கு நினைவுச் சின்னம் கட்ட மட்டுமே வளாகத்தினுள் அனுமதி தரலாம். ஆனால் அதைக் கோயிலாகக் கட்டி அவர்களை தெய்வமாக மாற்றி வழிபடக் கூடாது என்றனர்.அதன் அமைப்பின் வரைபடம் வேண்டும் என்றனர்.அதனால் மருத்துவமனையின் கட்டிடங்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்றனர்.நான் அதற்கு ஒப்புதல் தந்துவிட்டு திரும்பினேன்.

 

சில நாட்களில் சவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு எஸ்.எஸ். தென்னரசு என்னைக் காண வந்தார் அவர் எனக்கு நல்ல நண்பர். கலைஞர் இந்த நினைவுச் சின்னம் எழுப்புவதில் ஆர்வம் காட்டுவதாகவும், இதை சுமுகமாக முடித்துத் தரவேண்டும் என்று கூறினார். இடத்தைத் தர மறுத்தால் வீணான இனக் கலவரம் எழலாம் என்றும் எச்சரித்தார்.

” அது என்ன இனக் கலவரம்? ? ” என்று வேண்டுமென்றே அவரிடம் கேட்டேன்.

” ஆமாம். சிறுபான்மையினராக உள்ள உங்களுக்கும் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தொருக்கும் இதுவே மதக் கலவரமாகவும் மாறலாம் அல்லவா ? ”

நண்பர் தென்னரசு நகைச்சுவையாகவே கூறலானார்.

நான் எனது மேலிடம் இட்டுள்ள நிபந்தனை பற்றி அவரிடம் கூறினேன்.

” இது பற்றி கவலை வேண்டாம் டாக்டர். மருது பாண்டியர்கள் வீரத் தமிழர்கள் . நாடு சுதந்திரத்திற்காக உயர் துறந்த தியாகச் செம்மல்கள்.அவர்கள் மனிதர்கள்தான். அவர்கள் கடவுள்கள் அல்ல. அவர்களுக்கு கோவில் கட்டுவதை கலைஞரும் விரும்ப மாட்டார். நிச்சயமாக இது ஒரு நினைவு மண்டபம்தான்.” உறுதியளித்தார்.

 

மருது பாண்டியகளின்மீது கலைஞர் உட்பட பலரும் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றது கண்டு அவர்களைப்பற்றிய நூல்கள் படிக்க விரும்பினேன். இறுதியில் ஒரு பழைய நூல் மதுரையில் கிடைத்தது.

சிவகங்கைச் சீமையை 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்டவர்கள் மருது பாண்டியர்கள். இவர்கள் பிறந்தது அருப்புக்கோட்டை அருகில் நரிக்குடி என்னும் ஊர். இவர்களின் தந்தை உடையார் சேர்வை இராமநாதபுரம் அரசின் படைத் தலைவராகப் பணியாற்றியவர். இளம் வயதிலேயே மருது சகோதரர்கள் போர்ப் பயிற்சி பெற்று பெரும் வீரர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் இருவருமே வளரி எனும் மர ஆயுதம் வீசுவதில் வல்லவர்கள். இவர்களின் வீரதீரச் செயல்களைக் கண்ட இராமநாதபுரம் அரசர்,இவர்களுக்கு ” பாண்டியர் ” எனும் பட்டம் சூட்டினார்.

 

மருது சகோதரரின் வீரத்தைக் கேள்விப்பட்ட சிவகங்கை மன்னர் முத்துவடுகநாததேவர் ,இராமநாதபுரம் மன்னரிடம் மருது சகோதர்களை சிவகங்கை இராணுவத்தில் பணியாற்ற அனுப்புமாறு வேண்டினார்.

மருது சகோதரர்கள் சிவகங்கைச் சீமை இராணுவத்தில் தளபதிகளாக சிறந்து விளங்கினர்.

1772ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவம், லெப்டினென்ட் கலோனல் போன் ஜூர் ( Lt .Col . Bon Jour ) என்பவரின் தலைமையில் காளையார்கோவில் மாவட்டத்தைத் தாக்கியது. அந்த போரில் முத்துவடுகநாதர் வீர மரணமுற்றார் .மருது சகோதரர்கள் ராணி வேலு நாச்சியாருடன் திண்டுக்கல்லுக்கு தப்பி சென்றனர்.அப்போது திண்டுக்கல்லை அரசாண்ட மைசூர் சுல்தான் ஹைதர் அலி அவர்களுக்கு அடைக்கலம் தந்தார்.

இதற்கிடையே சிவகங்கைச் சீமையிலிருந்து 8 வருடங்களாக வரி வாங்க முடியாத ஆற்காட்டு நவாப் வேலு நாச்சியாருடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு , வரிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரையே மீண்டும் சிவகங்கை அரசியாக ஏற்றுக்கொண்டார் .

ஆனால் மருது சகோதரர்கள் 12,000 ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் ஆற்காட்டு நவாபின் எல்லைக்குள் புகுந்து பல ஊர்களைக் கைப்பற்றினர். நவாபுக்கு உதவ வந்த ஆங்கிலேயர் படைகளை கொல்லங்குடியில் 24.4.1789 நாளன்று மருது சகோதரர் படைகள் தோற்கடித்தன..

ராணி வேலு நாச்சியார் மருது சகோதரர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன் மூலமாக பெரிய மருது சிவகங்கைச் சீமையை ஆண்டார்.சின்ன மருது திவானாகப் பணியாற்றினார். இவர்கள் இருவரும் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்ததுபோல் சிறந்த நிர்வாகத் திறமையும் கொண்டு சிவகங்கைச் சீமையை 1783 லிருந்து 1801 வரை ஆண்டனர். அப்போது வேளாண்மைச் சிறக்க ஊருணிகளும், ஏரிகளும், குளங்களும் அமைத்து தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கினர். காளையார்கோவில் , சிவகங்கை போன்ற பிரசித்திப் பெற்ற கோவில்களையும் கட்டினர்.

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த வீரபாண்டிய கட்டபொம்மனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.

1799ஆம் ஆண்டில் அக்டோபர் 17ஆம் நாளன்று கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததால் சிவகங்கைச் சீமை மீது போர் தொடுத்தார் அக்னியு. மேஜர் கிரே தலைமையில் படைகள் புகுந்தன.மருது பாண்டியர் காட்டுக்குள் புகலிடம் தேட வேண்டிய நிலை உருவானது.

1801ஆம் ஆண்டில் அக்டோபர் 19ஆம் நாளில் சின்ன மருதுவை சோழபுரம் காட்டில் காட்டிக்கொடுத்தான் கருத்தான் என்ற கயவன்.

அக்டோபர் 24ஆம் நாளில் ஒக்கூர் காட்டில் பெரிய மருதுவையும் காட்டிக்கொடுத்தான் அதே கயவன். அவன் வேறு யாருமல்ல – மருது சகோதரர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவன்தான் அந்த துரோகி கருத்தான் !

அதன் முடிவு?

அக்டோபர் 24ஆம் நாளன்று பெரிய மருது , சின்ன மருது இருவரும் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலப்பட்டனர்!

அவர்களின் விருப்பத்திற்கிணங்க வெட்டப்பட்ட இருவர் தலைகளும் காளையார் கோயிலிலும் உடல்கள் சிங்காரத் தோப்பு என்ற காட்டிலும் புதைக்கப்பட்டன. அந்த சிங்காரத்

தோப்பில்தான் எங்கள் வளாகம் அமைந்துள்ளது.

மருது பாண்டியர்களின் சரித்திரம் படித்தபின்பு அவர்களின் இனப்பற்றும், தேசப்பற்றும் கண்டு வியந்தேன். அவர்களின் உடல்கள் புதையுண்டிருக்கும் இந்த இடம் வீரமும் புனிதமும் மிக்கது என்று நம்பினேன். நிச்சயமாக இந்த இடத்தில அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பவேண்டும் என்பதில் நானும் ஆர்வம் கொண்டேன்.

 

பின்பு ஒருநாள் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களும் மாவட்ட ஆட்சியர் திரு கோபாலனும் வருகை புரிந்தனர். அவர்கள் சமாதி இருந்த இடத்தை பார்வை இட்டனர். அவர்களுடன் தங்கசாமி சேர்வையும் வேறு பலரும் உடன் வந்தனர். அப்போது ஒரு புது பிரச்னை எழுந்தது .

நினைவு மண்டபம் கட்டினாலும் அதை மருத்துவமனையின் நுழைவாயிலில் இருந்து பார்க்க முடியாத வகையில் எங்களுடைய இரத்தப் பரிசோதனைக் கூடம் மறைத்தது.

அமைச்சர் திரு துரைமுருகன் அவர்கள் அதை இடித்துவிடவேண்டும் என்றார்.அதை நான் மேலிடத்தில் தெரிவிப்பதாகக் கூறினேன்.அந்த கட்டிடம் இங்கு முன்பு பணிபுரிந்த டாக்டர் சென்டல் எனும் ஸ்வீடிஷ் மருத்துவரின் நினைவாகக் கட்டப்பட்டிருந்தது.இதுகூட சுமார் நூறு ஆண்டுகள் பழமைமிக்கது! அங்குதான் இரத்தப் பரிசோதனையும், பரிசோதனைகள் பயிற்சிப் பள்ளியும் அமைந்திருந்தது .

 

இது பற்றி நான் மேலிடத்தில் தெரிவித்தேன்.

இரத்தப் பரிசோதனைக் கூடத்தை இடித்தால் மருத்துவமனையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதன் முகப்பின் வடிவம் கெடும். அதோடு கட்டாயமாக புதிதாக பரிசோதனைக் கூடக் கட்டிடம் தேவைப் படும். அதற்கு நிறைய செலவாகும்.

அப்போது மருத்துவமனையின் நிதி நிலையும் சரியில்லை. ஸ்வீடனில் இருந்தும் ஜேர்மனியிலிருந்தும் பணம் வருவது குறைந்து போனது.

ஆகேவே புதிய பரிசோதனைக்கூடம் கட்ட அரசு உதவ வேண்டும் என்ற நிபந்தனையையும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். அவரும் அதை அரசுக்குத் தெரிவித்து ஒப்புதல் வாங்குவதாகக் கூறினார்.

ஏறக்குறைய மருது பாண்டிய சகோதரர்களுக்கு ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனையின் வளாகத்தினுள் நினைவு மண்டபம் அமைப்பது உறுதியாகிவிட்டது. இதில் என்னுடைய பங்கும் நிறைய இருந்தது என்பதில் நான் மன நிறைவு கொண்டேன்.

 

அதன் பின்பு நான் வேலையை இராஜினாமா செய்துவிட்டு மலேசியா வந்துவிட்டேன்.

சில ஆண்டுகள் கழித்து நான் விடுமுறையில் திருப்பத்தூர் சென்றேன்.

அங்கு இரத்தப் பரிசோதனைக்கூடக் கட்டிடம் காணப்படவில்லை. அதற்கு நஷ்ட ஈடாக தமிழக அரசு 7,74,000 ரூபாய் தந்துள்ளது.

மருது பாண்டிய சகோதரர்களின் நினைவு மண்டபம் அழகுடன் கட்டப்பட்டிருந்தது. அதில் கண்ணாடிக் கூடத்தினுள் பெரிய மருதுவும் சின்ன மருதுவும் இடைகளில் வாட்களுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தனர்!

( முடிந்தது )

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !மருத்துவக் கட்டுரை நிமோனியா
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

17 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    //மருது சகோதரர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தைப் பராமரித்து, அங்கே மரியாதை செலுத்த வரும் இந்துக்களுக்கு வழி விட வேண்டும் என்பது மன்னரின் ஆணை. அதுபோன்று அந்த இடத்தில கோவில் கட்டி அவர்களை வழி படக் கூடாது என்ற டாக்டரின்//

    ஏன் மருது சஹோதரர்களுக்கு இந்துக்கள் மட்டும் மரியாதை செலுத்துகிறார்கள்? பலவிடங்களில் கட்டுரையில் தியாகச்செம்மல்கள், நாட்டுக்காக உழைத்தவர்கள்; தேசப்பற்று மிக்கவர்கள் என்று எழுதப்பட்டிருக்கும்போது இந்துக்கள் மட்டும் என்பதில் ஒரு நுண்ணரசியல் இருக்கின்றது.

    இப்படியாகத்தான் இன்று பல தேசிய தலைவர்களும் விடுதலைப்போராட்ட வீரர்களும் ஜாதித்தலைவர்களாக, மதத்தலைவர்களாகப் பார்க்கப்பட்டு குருபூஜைகள் நடாத்தப்படுகின்றன.

    சமாதி இருக்கும் இடத்தில்தான் நினைவுமண்டபம் கட்டவேண்டுமா? அதற்கருகில் அந்த இரத்தப்பரிசோதனைக்கூடத்தை இடிக்காமல் கட்டியிருக்கலாமே? சமாதியை அப்படியே வைத்து புதுப்பித்துவிட்டு அதற்கப்பால் நினைவு மண்டபம் எழுப்பபடலாமே? சென்னையிலுள்ள நினைவுமண்டபங்களெல்லாம் அன்னார்களின் சமாதிகளிலா கட்டப்பட்டிருக்கின்றன?

    நினைவு மண்டபம் ஒரு என் பி ஏ. (Non performing asset). அதே வேளையில் மருத்துமனையும் அதன்சார்ந்த கூடங்களும், மருத்துவர் ஜாண்சனின் சொற்களிலே,..”இலவச மருத்துவ முகாம், இலவச கண் சிகிச்சை முகாம் , தொழுநோய் ஒழிப்புத் திட்டம் என சுற்று வட்டார கிராம மக்களுக்கு பெருஞ் சேவை புரிந்து வந்தது.// Performing Assets.

    Please note there was a school for the Blind too.

    நினைவு மண்டபத்தால் தங்கசாமி சேர்வையும் அவர்கள் வாரிசுக்கும் மட்டும் ஒரு விகேரியஸ் மகிழ்ச்சி. விகேரியஸ் ஏன்? அஃதொன்றும் அவர்களில் வாழ்க்கையை வசதிப்படுத்தாது.

    இன்றைய தமிழகம் ஒரே நினைவு மண்டபங்களால் வழிகின்றது. ஒவ்வொருவரையும் திருப்திபடுத்தி: ஜாதிவாரியாக, மொழிவாரியாக, மதவாரியாக. சென்னைச்சாலைகளில் ஜாதித்தலைவர்கள் சிலைகளாக நிற்கிறார்கள்.

    மருத்துவர் ஜாண்சன எழுதிய இதைப்படியுங்கள்:

    //அங்கு இரத்தப் பரிசோதனைக்கூடக் கட்டிடம் காணப்படவில்லை. அதற்கு நஷ்ட ஈடாக தமிழக அரசு 7,74,000 ரூபாய் தந்துள்ளது.//

    ஆக, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இலவச சோதனைகள், சிகிச்சையளித்துக்கொண்டிருந்த ஒரு கூடம் அழிக்கப்பட்டுவிட்டது.

    எவருக்கும் மரியாதை எவ்வழியிலும் செய்யுங்கள்; கூடாதென்று சொல்லவில்லை. ஆனால் அது பெருவாரியான ஏழை மக்களின் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கும்படி செய்யாதீர்கள். மருத்துவர் ஜாண்சனின் கட்டுரை அப்படிப்பட்ட இடைஞ்சலை நமக்குக் காட்டுகிறது.

    இதை ஒரு தனிமனிதன் கேட்டால், அவன் முக்குலத்தோரின் எதிரி என்பார்கள். மக்களே மக்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அவர்கள் சார்ப்பாக இன்று எவரும் செய்ய முடியாதபடி ஜாதி என்னும் பேயரசியல் தமிழகத்தை அழித்துக்கொண்டு வருகிறது. அஃதில் ஒன்றுதால் நினைவுமண்டபக்கலாச்சாரம்.

    மற்றெந்த மாநிலத்திலும் இவ்வளவு தீவிரமாக இக்கலாச்சாரமில்லை.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    திரு I I M கணபதி ராமன் அவர்களுக்கு வணக்கம்.

    நினைவு மண்டபம் படித்து நல்ல கருத்துகள் கூறியுள்ளதற்கு நன்றி.

    நான் அன்று நடந்தவற்றை அப்படியே பதிவு செய்துள்ளேன்.கூட்டியோ குறைத்தோ ஏதும் எழுதவில்லை.

    திரு தங்கசாமி சேர்வை , அந்த இடத்தில்தான் நினைவு மண்டபம் எழுப்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது நான் முழு மனதுடன்தான் சம்மதித்தேன். கிறிஸ்துவர்கள் உடலை புதைத்த இடத்தில்தான் கல்லறை கட்டி சிறப்பு செய்வர். நான் அதுபோன்றுதான் இதையும் எண்ணினேன்.

    ஏன் மருது சகோதர்களை இந்துக்கள் மட்டும் மரியாதை செலுத்துகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி, இதில் ஒரு நுண்ணரசியல் உள்ளது என்றும் கூறியுள்ளீர்கள். அது அன்றைய சிவகங்கை மன்னர் கூறியது. ஒரு வேளை மருது சகோதரர்களுக்கு அந்த இடத்தில் கோவில் கட்டி இந்து மக்கள் வழி படலாம் என்று அவர் எண்ணியிருக்கலாம்.இறந்தவர்களை தெய்வமாக வழிபடுவது அன்றும் இன்றும் நம் மக்களிடையே இருந்து வருகிறது. இது இந்து மக்களிடையே இன்னும் அதிகமாக உள்ளது. இதை மனதில் கொண்டுதான் டாக்டர் கூகல்பர்க் அவர்களும் அந்த இடத்தில் கோவில் வேண்டாம் என்றும் கூறியிருக்கலாம்.

    மருது சகோதரர்களை ஏன் முக்குலத்தோர் மட்டும் உரிமை கொண்டாடவேண்டும் என்பது நல்ல கேள்வி. அவர்கள் நாட்டு விடுதலைக்காக ஊயிர் நீத்த தியாகச் செம்மல்கள். இதனால் அவர்கள் அனைவராலும் போற்றப்பட வேண்டிய வீரத் தமிழர்கள்!

    கவி பாரதியை நாம் அனைவரும் போற்றவில்லையா? தமிழ்த் தாத்தா உ..வே .சா வை நாம் போற்றவில்லையா? அவர்களை ஒரு பிரிவினர் மட்டுமா உரிமை கொண்டாடுகின்றனர்?

    நீங்கள் எழுப்பியுள்ள சாதீயப் பேய் அரசியல் இன்று தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையே.

    இதில் என்ன வேடிக்கை என்றால் அன்று ( சாதிகள் வந்தபோது ) மக்கள் அறியாமையிலும், பேதமையிலும், கல்லாமையிலும், இல்லாமையிலும் மூழ்கி இருந்ததால் தீண்டாமையில் எளிதில் தள்ளப்பட்டனர். சாதிகள் உள்ளது என்ற போதனையை அந்த அப்பாவி மக்கள் நம்பி ஏமாந்து போனார்கள்.

    ஆனால்…இன்று கல்வி கற்கிறோம். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுகிறோம். நாம் ஆறறிவு படைத்த கற்றவர் என்கிறோம். நல்லது கேட்டது தெரிந்தவர் என்கிறோம்.

    இவை எல்லாம் இருந்தும் என்ன பயன்? படித்து பட்டம் பெற்றவனும் சாதியை நம்பினால் அவன் படித்த முட்டாள்தானே!

    சாதியை ஒழிக்க நம் கல்விக்கூடங்களும், பல்கலைக்கழகங்களும் எந்த வகையில் உதவியுள்ளன அல்லது முயன்றுள்ளன என்பது தெரிந்தவர் யாராவது இருந்தால் கூறலாம்

    டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///சாதியை ஒழிக்க நம் கல்விக் கூடங்களும், பல்கலைக் கழகங்களும் எந்த வகையில் உதவி யுள்ளன அல்லது முயன்றுள்ளன என்பது தெரிந்தவர் யாராவது இருந்தால் கூறலாம்.////
    டாக்டர் ஜி.ஜான்சன்.
    அன்புமிக்க நண்பர் டாக்டர் ஜான்சன்,

    உங்கள் “நினைவு மண்டபம்” மருத்துவ வரலாற்றுக் கட்டுரை தூக்கில் இடப்பட்ட வீரத் தமிழர் இருவர் வரலாற்றை அழகாக விளக்கிக் காட்டுகிறது. திண்ணையில் நான் இப்போது எழுதி வரும் “வேதாளத்தின் மாணாக்கன்” [Devil’s Disciple][Bernard Shaw’s Drama] நாடகத்தில் மருது பாண்டவர் மாண்ட காலத்தில் [1772] நடந்த, பிரிட்டன் வட அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தின் போது செய்த ஓர் அமெரிக்கத் தியாகின் தூக்குத் தண்டனையை மேடையில் காட்டுகிறது.

    மருத்துவக் கதையில் நிஜ வரலாற்றைக் கூறி வியக்க வைத்தது, கதைக்கு ஓர் ஆணிவேராக இருந்துள்ளது. பாராட்டுகள்.
    ஜாதியைப் பற்றி என்னுடைய கருத்து. இப்போது ஜாதீய ரீதியில் ஒதுக்கீடுகள் வந்து விட்டன !!! ஜாதி, மதங்களை இந்தியாவிலிருந்து ஒழிக்க முடியாது. அவை இந்தியக் கலாச்சாரத்தின் ஆணிவேர்கள். நாமெல்லாம் இங்குள்ள எல்லா ஜாதிகளை ஏற்றுக் கொண்டு ஜாதிச் சகிப்பு, மதச் சகிப்பு, இனச் சகிப்பு, மொழிச் சகிப்பு, மாநிலச் சகிப்புடன் எப்படி வாழ்வது என்று முதலில் கற்றுக் கொள்வது தவிர வேறு வழியில்லை.
    நட்புடன்,
    சி. ஜெயபாரதன்.

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    ///சாதியை ஒழிக்க நம் கல்விக் கூடங்களும், பல்கலைக் கழகங்களும் எந்த வகையில் உதவி யுள்ளன அல்லது முயன்றுள்ளன என்பது தெரிந்தவர் யாராவது இருந்தால் கூறலாம்.//// டாக்டர் ஜி.ஜான்சன்.

    உதவியில்லாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமலிருக்க வேண்டுமென்பார்கள். நம் கல்விக்கூடங்கள் ஜாதியை ஒழிக்க உதவி செய்யவில்லை என்பது மட்டுமன்றி, அவை வளர்க்கப் பாடுபடுகின்றன என்பதுதான் உண்மை.

    திண்ணையில் ஏற்கனவே நான் எழுதியது: மதுரைக்கருக்கில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களும் மேற்சாதி மாணவர்களும் தலித்து மாணவர்களைத் தீண்டாமைக்கும் வன்முறைக்கும் உள்ளாக்கியதை தி ஹிந்து வெளியிட்ட பின், மாவட்ட ஆட்சியாளர் விசாரணைக்து உறுதிப்படுத்தியபின் பள்ளித் தலைமையாசிரியர் முதல் அனைத்து ஆசிரியர்களை அப்பள்ளியிலிருந்து மாற்றினார். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் தலித்து மாணவர்களை கேவலமாக நடாத்துவது வெளியில் தெரியாது. அவ்வளவுதான். போனவாரம் மதுரையில் பரபரப்பான செய்தி என்ன தெரியுமா? உசிலம்பட்டிக்கருகில் உள்ள கிராமத்தில் ஒரு 11 வயது தலித்து சிறுவனை செருப்பணிந்து ஊருக்குள் நடக்கக்கூடாதென்று சொல்லி அவனை அவனணிந்திருந்த செருப்பைத் தலையில் வைத்து நடக்க வைத்தார்கள்.

    மதுரைக் காமராசர் பலகலைக்கழகம் ஆண்டு தோறும் முத்துராமலிங்கனாரின் சேவைகளைப்பற்றி செமினார் நடாத்துகிறது. மற்ற ஜாதியினரும் “எம் தலைவரின் சேவைகளைப்பற்றி செமினார் நடாத்துக!” என்றால் என்ன செய்வார்கள்?“. அரசால் ஒன்றும் செய்ய முடியாது வலிமைமிக்க ஜாதியிடன் மோதமுடியுமா?

    ஜெயபாரதன் சொல்வதில் ஒரு அறியாமை (as far as I understand) இருக்கிறது. ஜாதிகளுக்கிடையே இன்று மட்டுமன்றி, ஆதிகாலத்திலிருந்து சகிப்புத்தன்மைதானிருக்கிறது. ஜெயபாரதன் சொல்வதைப் படித்தால் சாதிகளுக்கிடையே சண்டை எப்போதும் நடைபெற்று வருவதாகவும் அதைத்தான் மருத்துவர் குறிப்பிடுவதாகவும் தோன்றுகிறது.
    தவறு. மேல், இடை சாதியினர் ஒருவருக்கொருவர் அனுசரித்தும் ஒருவருக்கொருவர் உதவியும்தான் வாழ்ந்தனர். வாழ்கின்றனர்.

    பிறகு என்னதான் பிரச்சினை? நீயா நானாவில் ஒரு பேராசிரியர் சொன்னதைப்போல, மேல், இடை சாதியினர் vs தலித்துகள் மட்டுமே. This is only contest today in TN. Please note. The reason is not far to seek.

    மேலிடை சாதியினர் தலித்துகளை ஆதிகாலமாக ஒடுக்கி வைத்திருந்தனர் என்பது வரலாற்றுண்மை. அவர்களும் தம் கீழ்நிலையை ஏற்று (It is called internalization) தமக்கென்று தனிச்சேரிகளை உருவாக்கிக் கொண்டு ஊருக்கு வெளியேதான் வாழ்ந்தனர். அவர்களின் கீழ்நிலையை நமது சங்க இலக்கியம் பறைச்சாற்றியது இழிசினர்கள் என்று இழித்துரைத்து. ஹிந்துமதமோ வடமொழிச்சொல்லான ‘சண்டாளர்கள்” என்ற பத்த்தை தமிழருக்கு நல்க ஆழ்வார்களும் நாயன்மார்களும் கோடிட்டு காட்டிச்சென்றனர். தொண்ட்ரைப்பொடியாழ்வார், ‘சண்டாள சண்டாளர்களேயாயினும்…” என்றுதான் எழுதுகிறார். ஆன்றோர்களும் சான்றோர்களும் அது சரியன்று என்று சொல்லிமட்டும் வாழ்ந்தனர். மற்றபடி அனைவரும் தீண்டாமை a necessary evil என்று வாழ்ந்தனர். ஆக, மேலிடை சாதியினர் மொத்தமாகவும் ஊரினுள்ளும் தலித்துகள் வெளியே தனியாகவும் வாழ்ந்தனர்.

    தற்போதும் அஃது அப்படியே இருந்திருந்தால் ஒரு பிரச்சினையும் எழாமலிருக்கும். எழக்காரணம் ஜனநாயகமும் இட ஒதுக்கீடும். இவை தலித்துகளை தம் ஒதுக்கப்பட்ட, ஒதுங்கிய நிலையிலிருந்து விலகி அனைவருக்கும் சமநிலையை நோக்கி நகர்த்த நகர்த்த, அமைதியான மேலிடை சமூகம களேபரம் அடைந்தபடியால், ஒன்று சேர்ந்து தலித்துகளை அடக்க வருகிறது. சட்டம் நமக்கு உதவும் ஜனநாயகத்தில் என்ற நினைப்பினால் தலித்துகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கும்போது வன்முறையாகி சாதிக்கலவரம் வெடிக்கின்றது.
    இதை கல்விக்கூடங்கள் தடுக்க முடியாது.

    Over to Messers Jeyabharathan and Dr Johnson!

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ////ஜெயபாரதன் சொல்வதில் ஒரு அறியாமை (as far as I understand) இருக்கிறது. ஜாதிகளுக்கிடையே இன்று மட்டுமன்றி, ஆதி காலத்திலிருந்து சகிப்புத்தன்மை தானிருக்கிறது. ஜெயபாரதன் சொல்வதைப் படித்தால் சாதிகளுக் கிடையே சண்டை எப்போதும் நடைபெற்று வருவ தாகவும் அதைத்தான் மருத்துவர் குறிப்பிடுவ தாகவும் தோன்றுகிறது.
    தவறு. மேல், இடை சாதியினர் ஒருவருக் கொருவர் அனுசரித்தும் ஒருவருக்கொருவர் உதவியும்தான் வாழ்ந்தனர். வாழ்கின்றனர். ////

    இக்கூற்றுக்கு எல்லாம் அறிந்த கணபதி ராமன், அரசியல், சமூக உதாரணங்கள், கடந்த 50 ஆண்டுகளாய் நிகழ்ந்தவை, 5 அல்லது 10 ஆதாரங்கள் காட்ட வேண்டும்.
    கலப்புத் திருமணங்கள் ஜாதிகளை ஒழிக்கா ! இரு ஜாதிகள் கலந்து பிள்ளைகள் உருவில் மூன்றாம் ஜாதியை உண்டாக்கும்.
    கலப்புத் திருமணமும் என் பார்வைப்படி ஒரு வகை ஜாதிச் சகிப்பே !!!
    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      /ஜெயபாரதன் சொல்வதில் ஒரு அறியாமை (as far as I understand) இருக்கிறது.//

      //எல்லாம் அறிந்த கணபதி ராமன், //

      முதல் சொற்றொடர் என்னது; இரண்டாவது ஜெயபாரதனது.

      இரண்டுக்கும் நகைமுரண் இருக்கிறதே ஜெயபாரதன் சார். // (as far as I understand)// பாருங்கோ.

  6. Avatar
    poovannan says:

    சாதியை பற்றி நாம் அனைவரும் அவரவருக்கு விருப்பமான /விரும்பும் முறையில் புரிந்து கொள்கிறோம்

    சோழனும் பல்லவனும் எங்கள் சாதி என்று பள்ளி,பள்ளர்,கள்ளர்,சானார் ,செங்குந்தர்,சோழிய வேளாளர்,கொங்கு வெள்ளாளர் என அனைத்து சாதிகளும் கூவுவதில் இருந்தே அவற்றின் fluidity புரியும்.இடங்கை சாதிகள் ,வலங்கை சாதிகள் என்று பிரிவுகள் மோதி கொண்டிருந்ததாக வரலாறு உண்டு.இதில் இப்போது உள்ள சாதிகளில் யார் இடங்கை,யார் வலங்கை என்று கூற முடியுமா
    சாதி ரீதியான பழக்க வழக்கங்கள்,பேச்சு மொழி அனைத்தும் முக்கால்வாசி ஒழிந்து விட்டன பிராமணர்களை தவிர்த்து.வன்னியர் குடும்பம்,ஆதித்ராவிடர் குடும்பம்,முதலியார் குடும்பம் என்று விளம்பரத்தில் காட்ட முடியுமா.சாதியை சொல்லாமல் சாதியை குறிப்பால் உணர்த்த முடியுமா இப்போது தமிழ் matrimony விளம்பரத்தில் வருவது போல
    தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் சமண மதம்,புத்த மதம் ,சைவ மதம் என்று ஒரு சுற்று வந்தவர்கள்.சென்ற தலைமுறை வரை கிராமத்திற்கு வெளியே,குடும்பத்திற்கு வெளியே பெண் எடுக்க.கொடுக்க மாட்டார்கள்.ஒரே சாதியின் பெயரில் வரும் உட்பிரிவுகளுக்கு இடையே கூட திருமண பந்தம் நடக்காது.ஒரே தலைமுறையில் எந்த செட்டிய்யாரவது,முதலியாராவது என்று பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்திலையே வரவில்லையா

    மதமும் சாதியும் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள்.மதம் மாறுவதால் சாதி அழியாது.புது மதம் வந்தால் சில,பல சாதிகள் ஒன்றாகி வலுவாக்கி கொள்ள கூடும்.
    எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது தனித்துவம் வாய்ந்த பழக்கங்கள்,பெருமைகள் இல்லாத சாதிகளிடம் சாதிபிரிவினை குறைந்து அல்லது அழிந்து விடும்.அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.
    கர்நாடகவிற்க்கு நானூறு ஆண்டுகள் முன் சென்ற அய்யங்கார்களோ அல்லது ஒரிஸ்ஸா எல்லையில் வாழும் பிராமணர்களோ பல நூற்றாண்டுகளாக அதே சாதியாக தான் உள்ளார்கள்.ஆனால் மற்ற சாதிகள் அங்குள்ள சாதிகளோடு ஐக்கியமாகி விடும்.
    நாயர்,எழவ சாதிகளோடு ஐக்கியமான தமிழ் சாதிகள் பல.அதே போல் தெலுங்கு பேசும் மக்களோடு புலன் பெயர்ந்து சென்றதால் தெலுகு சாதியில் ஐக்கியமான தமிழ் சாதிகள் பல உண்டு.
    தனித்து காட்டும் பழக்க வழக்கங்கள்,அதில் கொள்ளும் பெருமை தான் சாதியை தக்க வைத்து கொள்கிறது.
    பர்மாவில் வாழ்ந்து அங்கேயே தங்கி விட்ட தமிழர்களோ ,வடகிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கோ இரண்டு தலைமுறைகளுக்குள் அங்கே உள்ள குழுக்களோடு உறவுகள் ஏற்பட்டு அவர்களில் ஒருவராகி விடுவது தான் நடக்கிறது.
    பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைத்து தமிழகத்தை விட்டு பல நூறு,ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழ தொடங்கியவர்களில்,அங்கேயே வீடு வாங்கி குடிபெய்ரந்தவர்களில் பிராமணர்களை தவிர்த்து மற்றவர்கள் சாதியை தொலைப்பது எளிது.

  7. Avatar
    poovannan says:

    இந்தியன்,தமிழன்,இந்து,கிருத்துவன், செங்கேல்பட்டுக்காரன் எனபது மாதிரி v ஒரு அடையாளம்.அதை மாற்றி கொள்ளும் உரிமை எல்லாருக்கும் உண்டு.
    பிராமணர்களிலேயே இப்போது வெளிநாடுகளில் வசிப்பவர் பல லட்சங்களில் இருக்கலாம்.அங்கேயே பிறந்து வளர்ந்த அவர்களின் குழந்தைகள் எவ்வளவு பேர் அதே சாதியில் திருமணம் செய்வர்.ஒரு சதவீதத்தை கூட அது தாண்டாது.இந்துவாக,இந்தியனாக இருந்தால் பரவாயில்லை என்று தான் பெற்றோர் எண்ணுவர்.சாதி வாழ அக்ரஹாரம்,சாதிக்கு ஒரு தெரு,சாதிக்கு மட்டுமே உரித்தான வேலை எனபது முக்கியம்.அவை இல்லாமல் போகும் போது அதற்க்கு சங்கு தான்.
    IAS அதிகாரிகள்,அரசியல் தலைவர்களில்/கலைஞர்களில்,பைலோட்களில்,விமான பணிப்பெண்களில் ,மருத்துவர்களில்,வெளிநாடுகளில்,வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள்,பனி புரிபவர்களில் (அனைத்து சாதி,மத மக்களுடன் சேர்ந்து படிக்க,வேலை செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்) சாதி விட்டு சாதி திருமணம் அதிகம் இருக்கும்.சாதிக்கு மட்டுமே உரித்தான தொழில்கள் புரியும் அர்ச்சகர் போன்றவர்களிடம் அது மிக குறைந்த அளவில் /அல்லது இருக்கவே இருக்காது.அனைத்து தொழில்களிலும் அனைத்து சாதிகளும் இடம் பெறும் போது,அனைவரும் ஒன்றாக ஒரே அடுக்கு மாடி குடியிருப்பு,அரசு விடுதி,வீடுகளில் குடியிருப்பது பெருமளவில் நடக்கும் போது சாதி எளிதில் வலுவிழக்கும்

  8. Avatar
    poovannan says:

    சாதி என்பதே செய்யும் வேலைகளை குறிக்கும் சொல்.பிறப்பால் இவன் இன்ன தொழில் தான் செய்ய முடியும்,இன்ன செய்ய தகுதியில்லாதவன் எனபது தான் சாதியின் அடிப்படை.மருத்துவர்,பொறியாளர்,முடி திருத்துபவர்,பூஜை செய்பவர்,வணிகம் செய்பவர்,கணக்கு பார்ப்பவர்,போர் வீரர்,சலவையாளர்,மயான தொழிலாளி,ஆடை தைப்பவர் போன்றவற்றின் அடிப்படையில் உருவானது பிரிக்கப்பட்டது சாதி .

    ஒரே சாதிக்குள் திருமணம் எப்படி சாதிக்கு/வர்ணத்துக்கு முக்கியமோ(அது கூட ராஜாக்களுக்கும் ராஜகுருக்களுக்கும்,ஆண்களுக்கும் கிடையாது.நம்பூதிரிகள் வர்மா இன பெண்களை மணந்தாலும் அவர்களின் வாரிசுகள் கோவில் பணி செய்யலாம்.அவர்கள் நம்பூடிரிகலாக தான் கருதப்படுவார்கள்.ஆனால் வேறு வர்ண பெண்களை மணந்தால் அவர்கள் தாயின் வர்ணத்தை சேர்ந்தவர்கள்.தந்தையின் வர்ணத்தை மூன்று,ஐந்து,ஏழு தலைமுறைக்கு வழுவாமல் பின்பற்றினால் தந்தையின் வர்ணத்தை பெறலாம் என்று இருந்தது.ஒரே வர்ணத்துக்குள் திருமணம் என்பதில் பெரிய தடை கிடையாது.ஆண் தனக்கு கீழே உள்ள வர்ணத்தில் உள்ள பெண்ணை திருமணம் செயாவோ,வைத்து கொள்ளவோ தடை கிடையாது.பெண் செய்தால் அவர்களின் வாரிசுகள் ஐந்தாம் வர்ணமான பஞ்சமரில் தான் சேர்த்தி ) அதை விட முக்கியம் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தொழில்.அது இப்போது நடைமுறையில் இருக்கிறதா.அது மாறி விட்ட பின் யார் வேண்டுமானாலும் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம்,எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்று வந்த பின் சாதியின் அடித்தளமே ஆட்டம் கண்டு விட்டது.

    இப்போது சாதி எனபது எல்லா வேலைகளிலும் ,ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று கேட்டு சாதியின் அடிப்படையான சாதிக்கே உரித்தான தொழில் வேண்டாம் என்று போராட மட்டும் தான் பயன்படுகிறது.

  9. Avatar
    poovannan says:

    பல நூற்றாண்டுகளாக சாதிக்குள்ளயே திருமணங்கள் நடந்தது போல பலர் பேசுவது வியப்பளிக்கிறது
    அந்த வழக்கம் வெறும் உயர்சாதி பெண்களுக்கு மட்டும் தான்
    தன வர்ணத்திற்கு கீழ் உள்ள வர்ணத்தை சேர்ந்தவர்களை ஆண்கள் மணந்து கொள்ள எந்த தடையும் இருந்தது இல்லை
    தனக்கு கீழ் உள்ள சாதியை/வர்ணத்தை சார்ந்த பெண்களை மணக்க எப்போதும் தடை இருந்தது இல்லை. அதனால் தான் எல்லா சாதியிலும் கருப்பு,சிவப்பு,மாநிறம்,வெள்ளை எல்லாம்

    தனக்கு கீழ் உள்ள சாதிகளில் இருந்து பெண்களை மூன்றாவது தாரமாக,இல்லை வைத்து கொள்வதோ சில வருடங்கள் முன் வரை சாதாரணமான வழக்கம்

    ஜெமினி கணேசனும் கலைஞரும் உறவினர்கள்.ஜெமினியின் தாத்தா புதுகோட்டை திவான் மனைவி இறந்ததும் கலைஞரின் அத்தையை குழந்தைகளை பார்த்து கொள்ள வைத்து கொண்டார்.அவர் மகள் தான் தேவதாசி தடை சட்டத்திற்காக போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    எந்த சாதி பெண்ணை வேண்டுமானாலும் வைத்து கொள்வது உயர்சாதியினருக்கு மிகவும் சுலபமாக இருந்த ஒன்று

    ஒரே சாதிக்குள் திருமணம் எனபது கடந்த இரு தலைமுறைகளில் தான் எனபது தானே உண்மை.இப்போது இருக்கும் சாதிகளுக்கும் சென்ற நூற்றாண்டில் இருந்த சாதிகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
    எண்ணிக்கைகாக பல சாதிகள் நாம் ஒன்று தான் என்று ஒன்றாக இணைவது கடந்த இருவது வருடங்களில் நடைபெறும் ஒன்று.பெண் எடுத்து பெண் கொடுக்காத சாதிகள் கூட நாம் ஒரே இனம் என்று கூக்குரல் இடுவது எதற்காக
    உட்பிரிவுகள் பார்க்காதே எனபது எதற்காக

  10. Avatar
    poovannan says:

    சாதி வலுவிழக்க அனைத்தையும் விட முக்கிய காரணம் பெண் விடுதலை,பெண் கல்வி,குடும்ப கட்டுபாட்டு முறைகளால் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு மேல் குழந்தைகள் இல்லாத குடும்பங்கள்

    படித்து கணினி பொறியாளர்,கலெக்டர்,மருத்துவர்,ராணுவ போலீஸ் அதிகாரி ,விமான பணிப்பெண்,நடிகை யாரும் கண்ணை மூடி கொண்டு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணமுடித்து கொள்ள மாட்டார்கள்.அவர்களுடன் படித்த ,வேலை செய்பவர்களில் மனதுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.
    சாதி,மதம் இரண்டும் ஆணாதிக்கத்தின் வேர்.பெண் விடுதலை அதை வெட்டாமல் அதன் இலக்கை அடைய முடியாது.பாலியல் தொழில் செய்யும் பெண்ணை கல்லால் அடிப்பதை காப்பாற்றும் நிறுத்தும் கடவுள்கள் தான் உண்டே தவிர பல பெண்களிடம் செல்லும்/திருமணம் செய்யும் ஆணை ஓரமாக நிற்க சொல்லும் மதமோ,சாதியோ ஒன்று கூட கிடையாது.அப்படி இருந்திருந்தால் அது அக்பரின் தீன் இல்லாஹி போல ஒரு தலைமுறை கூட தாண்டாது.
    கலெக்டர் ஆக,போலீஸ் ஆக,அரசியல்வாதியாக இருக்கும் ஆண் தன ஒரு மகளோ,இரு மகள்களோ தன்னை போல் ஆக வேண்டும் என்று தான் விரும்புகிறான்.ஐந்து ஆண் ஐந்து பெண் குழந்தைகள் இருந்த போது பெண்களை பள்ளியோடு நிறுத்தி திருமணம் செய்த முறை அடியோடு ஒழிந்து வருகிறது.இருக்கின்ற ஒரிரண்டு பிள்ளைகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்பது தவறு என்ற எண்ணமும் வலுப்பட்டு வருகிறது.பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பங்களும் இப்போது அதிகம்.அந்த குழந்தைகளும் தன பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டுமானால் காதல் திருமணம் அவர்களுக்கு கை கொடுக்கும்.பெற்றோர் பார்த்து வைக்கும் ஒரே சாதி திருமணங்கள் பெற்றோருக்கு முழு டாடா காட்டி விட்டு செல்ல தான் செய்யும்.
    திருமண முறையின் புதிய மாற்றங்களான ஒத்த வயது உள்ளவர்களிடையே(நான்கு,ஐந்து வயது வித்தியாசங்களுக்கு மேல் இப்போது பெற்றோர் பார்த்து சொன்னாலும் எந்த பெண்ணும் ஒத்து கொள்வதில்லை) மணமுடிக்கும் பழக்கமும்,வயதானாலும் பரவாயில்லை,படித்து வேலை கிடைத்த பின்பே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும்,இருவரும் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையும் சாதிக்கு சாவுமணி அடித்து விடும்.போலீசோ,விமான பணிப்பென்னோ கோவிலில் வேலை செய்பவரை திருமணம் செய்து கொள்ள மாட்டாள்.அதே வேலை /அதோடு சம்பந்தப்பட்ட வேலை /அவளோடு பணிபுரிபவரை திருமணம் செய்தால் தான் நல்லது,புரிந்து கொண்டு வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகம் என்று நினைப்பார்கள்.
    ஒத்த வயது,படிப்பு,வேலை என்று வரும் போது இருபாலருக்கும் அதே சாதியில் துணை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு.

  11. Avatar
    poovannan says:

    கல்வி,வேலையில் ஒதுக்கீடு செய்யபடுவதால் அவர்களையும் கணக்கெடுக்கும் முடிவு எடுக்கப்பட்டு செயல்படுத்த படுகிறது.OTHERS உள்ளிட்ட நான்கு குழுக்களை அது உருவாக்குகிறது.
    அரசு உருவாக்கிய சாதிகள் SC /ST /OBC .பல சாதிகளை குழுக்களாக ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் அவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கி உள்ளது.OC யாக உள்ள சாதிகள் BC யாக, BC யாக உள்ள சாதிகள் SC /ST
    வேண்டும் என்று போராடுவதும் அரசு முடிவுகளால் இடம் மாறுவதும் உண்டு.இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் ஏழு பேர் கொல்லபட்டதர்க்கோ அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் சாத்திய அடக்குமுறைகளுக்கோ எதிராக குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள வேறு மொழி,உணவு,கலாசாரம் கொண்டவர்களையும் ஒன்றாக போராட வைக்க உதவியுள்ளது.
    இந்தியாவெங்கும் உள்ள அரசு ,பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தாழ்த்தப்பட்டோர் தொழில் சங்கங்கள்,மற்றும் ஊழியர் தொழிற்சங்கங்கள் சாதி விட்டு சாதி திருமணங்களுக்கு ஆதரவாக தான் உள்ளன.பல திருமணங்களை நடத்தியும் வைக்கின்றன. சாதிவெறியோடு ஒரே சாதியில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.பல சாதி உறுப்பினர்களை கொண்ட சங்கங்கள் /கட்சிகள் சாதி விட்டு சாதி நடக்கும் திருமணங்களுக்கு ஆதரவாக தான் இருக்க முடியும்.

    சாதி கிடையாது என்று யாரும் கூறவில்லை.அது தேவை இல்லாத ஒன்று என்றும்,சாதி பார்த்து வீடு வாடகைக்கு விடுவதோ,வசிக்குமிடம் முடிவு செய்வதோ,திருமணம் செய்வதோ வேண்டாம் என்று தான் சாதி ஒழிய வேண்டும் என்று விரும்புபவர்களால் பிரச்சாரம் செய்யபடுகிறது.

  12. Avatar
    தேமொழி says:

    தேசத் தலைவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பப் பட்ட வரலாற்றினை சுவைபட விவரித்த டாக்டர் ஜான்சனுக்கு நன்றிகள் பல.

    அன்புடன்
    ….. தேமொழி

  13. Avatar
    தேமொழி says:

    [1] சாதி ரீதியான பழக்க வழக்கங்கள்,பேச்சு மொழி அனைத்தும் முக்கால்வாசி ஒழிந்து விட்டன பிராமணர்களை தவிர்த்து.வன்னியர் குடும்பம்,ஆதித்ராவிடர் குடும்பம்,முதலியார் குடும்பம் என்று விளம்பரத்தில் காட்ட முடியுமா.சாதியை சொல்லாமல் சாதியை குறிப்பால் உணர்த்த முடியுமா …. தனித்து காட்டும் பழக்க வழக்கங்கள்,அதில் கொள்ளும் பெருமை தான் சாதியை தக்க வைத்து கொள்கிறது.

    [2] அனைத்து தொழில்களிலும் அனைத்து சாதிகளும் இடம் பெறும் போது,அனைவரும் ஒன்றாக ஒரே அடுக்கு மாடி குடியிருப்பு,அரசு விடுதி,வீடுகளில் குடியிருப்பது பெருமளவில் நடக்கும் போது சாதி எளிதில் வலுவிழக்கும்

    [3] இப்போது சாதி எனபது எல்லா வேலைகளிலும் ,ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று கேட்டு சாதியின் அடிப்படையான சாதிக்கே உரித்தான தொழில் வேண்டாம் என்று போராட மட்டும் தான் பயன்படுகிறது.

    [4] ஐந்து ஆண் ஐந்து பெண் குழந்தைகள் இருந்த போது பெண்களை பள்ளியோடு நிறுத்தி திருமணம் செய்த முறை அடியோடு ஒழிந்து வருகிறது.இருக்கின்ற ஒரிரண்டு பிள்ளைகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்பது தவறு என்ற எண்ணமும் வலுப்பட்டு வருகிறது.

    [5] அரசு உருவாக்கிய சாதிகள் SC /ST /OBC .பல சாதிகளை குழுக்களாக ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் அவர்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கி உள்ளது.OC யாக உள்ள சாதிகள் BC யாக, BC யாக உள்ள சாதிகள் SC /ST
    வேண்டும் என்று போராடுவதும் அரசு முடிவுகளால் இடம் மாறுவதும் உண்டு.

    மனித குல எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தருகிறது உங்கள் கருத்துக்கள் பூவண்ணன்.
    தற்கால நிலையை நன்கு கவனித்து, கடந்த காலத்துடன் நடுநிலையுடன் ஒப்பிட்டு அருமையாக ஆராய்சிக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட கருத்துக்கள்.
    இது காலம் வரை நான் படித்த கதைகளையோ, கட்டுரைகளையோ மீண்டும் படித்ததுண்டு, கருத்தக்களை மீண்டும் படிக்க நேர்ந்ததில்லை. உங்கள் கருத்துரைகளைதான் முதன் முதல் இரண்டிற்கும் அதிகமான முறை படித்தேன்.

    I salute You.
    நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  14. Avatar
    IIM Ganapathi Raman says:

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரைதான் பேசவேண்டும். காரணம் இம்மக்கள் அப்படி வேறுபாடாக இருக்கிறார்கள். இவர்கள் பிறரைவிட மோசம் என்று சொல்லவில்லை. வேறுபாடு என்றுதான் சொல்லப்படுகிறது. நிட்டிஸ் குமார் சொன்னது பொருந்தும். மோடியின் டெவலப்மெண்ட் மாடல் எல்லா மாநிலத்துக்கும் பொருந்தாது என்றார். அதுதான் இங்கும்.

    தமிழகத்தை இரு பிரிவுகளாகத்தான் பார்க்கவேண்டும். சென்னை போன்ற மாநகர வாழ்க்கை. அதைத்தவிர பிற ஊர்களும் கிராமங்களும். குறிப்பாகக் கிராமங்கள்.

    சென்னை போன்ற மாநகரத்தில் தமிழர் எனத்தனியாக தற்போது இல்லை. பலவகை மக்களால் நிரம்பி வழிகிறது. அடுக்குமாடிக்கலாச்சாரத்தில் எல்லாமே சரியாகும். சென்னை வாழ்க்கையிலும் சரியாகும். வன்னியர் யார், தலித்து யார் எனப்பிரிக்க முடியாமல் கலக்கல். கூவம் நதிக்கரையோரத்தில் (திருவல்லிக்கேணி) இருவரும் வாழ்கின்றனர். அங்கு ஏன் சண்டையில்லை. அவர்களுள் ஒருபையன் இன்னொரு பெண்ணைத்தான் காதலிக்கிறான். அங்கு ஏன் சண்டையில்லை?

    காரணம் இடம். இடத்துக்கென்று குணமுண்டு. மதுரையில் படிக்கும் மாணவன் அதிகபட்சக் கனவு அண்ணா பலகலைக்கழகத்தில் பி டெக் சீட்டுதான். தில்லியில் படிக்கும் மாணாவனின் அதிகபட்ச கனவு ஐ ஐ டியும் எம் ஐ டியும்தான். ஏன் இப்படி நிகழ்ந்தது? இடம் தந்த சூழல்.

    கிராமங்களிலும் சிற்றூர்களிலும் சாதி தழைத்தோங்கி மக்களைபாடா படுத்தக்காரணம் அந்தச் சூழல். அதை எப்படி மாற்ற முடியும்? அவை மாநகரங்களாக எப்போது மாறுமோ அப்போது மட்டும்தான்.

    அதுவரைக்கும் தலித்துகள் தீண்டாமைக்குள்ளாக்கப்படுவார்கள். அதாவது அவர்களை பிறர் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பையன்கள் வேறுசாதிப்பெண்ணைக் காதலித்து மணந்தால் குடிசைகள் எரிக்கப்படும். அவன் கொல்லப்படுவான். இதுதான் உண்மை.

    அடுக்குமாடிக்கலாச்சாரத்தில் சென்னையில் சாதிகள் பார்ப்பதில்லை என்பது இங்கு பொருந்தாது. வருணாசிரமம் ஒழிந்த சாதிகள் ஒழிந்தன என்பதும் பொருந்தாது. வருணாசிரம்த்தருமத்தில் வழிவந்த சாதிகள் ஒழிக்கப்பட்டாலும் இன்று கிராமங்களில் தலித்துகள் என ஒருசாராரை நாம் இனங்கண்டு ஒதுக்கப்படுவது இன்னும் நடக்கிறதற்கு மூலம் அததருமம். இன்று தலித்துகள் தொழில் மாறிச்செய்தாலும் தே ஆர் அன்னேபில் டு எக்ஸார்சைஸ் த கோஸ்டு ஆஃப் த காஸ்ட். They are unable to exorcise the ghost of caste.

    அரசியல்வாதி செய்தான் எனாதீர். அவன் செய்தது 60 ஆண்டுகளாகத்தான். அதற்கு முன் ஆயிரமாயிரமாண்டுகளாகச்செய்ததது நீங்களே. அவன் விட்டாலும் நீங்கள் விட்டுவிடுவீர்கள் என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஏன் விடாமல் பிடித்தீர்கள் என்ற கேள்விக்கு என்ன பதில்?

    நான் ஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி – சாதி என்றாலே தலித்துதான். அவனுக்கும் பிறருக்கும்தான் பிரச்சினை.

    இக்கட்டுரைப் பொருளை மட்டும் மீண்டும் எடுத்தால், இம்மாதிரி நினைவுமண்டபங்கள் நம் சமூகத்தைப் பிளவு படுத்தவே. Today, all statues of Ambedkar and Muthuramalinganaar are provocative pieces in towns and villages. Tinderboxes with the potential to burst.

    ரேசிசம் என்றால், ஒரு குறிப்பிட்ட இன மககள் மட்டம் என்று தாக்குதல் மட்டுமன்று. ஒரு குறிப்பிட்ட மக்கள் பிறரைவிட உயர்ந்தோர் என்பதும் ஆகும்.

    அதன்படி, நினைவு மண்டபம் ஒரு பெரிய தேசத்தியாகிக்குத்தான் என்பது வெளிக்குள் இருந்தாலும், உள்ளே அவரை ஜாதித்தலைவராக்கி அவர் ஜாதிக்காரர்களை தற்பெருமை பேசத்தான் உதவுகிறது. இதுவும் ரேசிசம். நினைவுச்சினனங்கள் ரேசிசத்தின் அடையாளங்கள். நினைவுச்சின்னங்கள் அவ்வாறு இருக்க்க்கூடாதென்றால், அத்தலைவனை சமூகத்தில் ஒவ்வொரு மாந்தரும் தம்மவராக எடுத்தால் மட்டுமே. It was wrong to have entertained a request for memorial from his descendants. The request should have come from open society. Whatever justification made here, it was wrong to have linked the brothers with Hindu religion as it delimits them into caste and religious representatives.

    மருது சஹோதரர்களும் முத்துராமலிங்கனாரும் இன்று மதுரை மாவட்டத்தில் முக்குலத்தோரின் ஐகான்களாகவே வைக்கப்ப்ட்டு விட்டார்கள். இது மறுக்கமுடியா உண்மை. The caste billboards and flex boards of this community bear the pictures of Maruthu brothers on horses brandishing swords with terriying eyeballs and in the boards we read comments glorifying the caste.

    We can’t defend that the memorials were not erected with the intention to foment discard amongst people, or between communities. But it does. In life, many things are done bona fide but turn out to be mala fide soon. தமிழகத்தில் அனைத்து மக்களை ஒன்றாக நினைத்து அவர்களுக்காக உழைத்து மறைந்தோர் இன்று சாதித்தலைவர்களாக உருவெடுத்துவிட்டார்கள்:

    உவேசாவும் பாரதியார் பார்ப்பன ஜாதி ஐகோசன்ஸ். (Just criticise anyone of them about their work; you will see who come and attack you! These simpletons may not have read the poems we talk about, or the essasys of the scholar. But attack they will. The very word Brahmins bring out their burning ire, have not you seen here?) வ உ சி பிள்ளைமார் ஐகோன். (This community has started a caste out fit just 10 days ago with their own flag. VOC appears prominently in their cut outs. All Madurai editions carried the news. பாண்டிய குல வெள்ளாள சங்கம் வெளியிட்டிருக்கும் நாட்காட்டிகளை மதுரையில் பல கடைகளில் தொங்கப்பார்க்கலாம். கடைக்காரர் அந்த ஜாதிச்சங்க உறுப்பினராக இருப்பார். நாட்காட்டியில் – அந்தோ பரிதாபம் – ஊருக்கு உழைத்த வ உ சி, ஜாதிக்கு உரமேற்றும் நாயகராகி விட்டார்.) மருது பாண்டியர்கள் முக்குலத்தோர் ஐகோன்ஸ். கட்டமொம்மனும் திருமலைநாயக்கரும் தெலுங்கைத்தாய்மொழியாக கொண்ட நாயுடூ, நாயக்கரின் ஐகோன். காமராஜர் நாடார்களின் ஐகோன். தீரன் சின்னமலை கோனார்களின் ஐகோன். இப்படியாக வாழ்க்கை அசிங்கப்படுகிறது. Whom are we insulting ? The very people who lived and died for us ! Shame on you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *