நியாயங்கள்

This entry is part 1 of 9 in the series 16 ஜூன் 2019

கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவனோடு தொடர்பில்லை. அறந்தாங்கியில் எட்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். பிறகு நான் கல்லூரியில் என் படிப்பைத் தொடர்ந்தேன். அவன் கோலாலம்பூரிலிருக்கும் அவன் அத்தாவின் பணமாற்று வியாபாரத்தில் இறங்கிவிட்டான். அசாத்தியத் துணிச்சல்காரன். ஒரு மழை இரவு முடிந்து நானும் அவனும் அறந்தாங்கி புதுக்குளக் கரையில் நடந்தோம். ஒரு நண்டுப் பொந்தைப் பார்த்துச் சொன்னேன். ‘இதுதான் உளுவை மீன்கள் ஒளிந்துகொள்ளும் இடம்’ அடுத்த நொடி அந்தப் பொந்துக்குள் கையை விட்டான். அவன் கையோடு வந்தது ஒரு தண்ணிப்பாம்பு. பிடி அதன் தலையில் இருந்தது. சிரித்துக் கொண்டே எல்லாருக்கும் வேடிக்கை காண்பித்துவிட்டு குளத்துக்குள் தூக்கிப் போட்டான். அவன் துணிச்சலைச் சொல்லும் ஒரு துளிச் செய்திதான் இது. இன்னும் எவ்வளவோ! அவன் அத்தாவோ ஒரு சதவீத ஆபத்திருந்தாலும் நெருங்கமாட்டார். அவரோடு இவன் எப்படி இருக்க முடியும்? யோசித்தேன். அவன் சென்று ஓராண்டுதான் ஆகியிருந்தது

கோலாலம்பூரில் இருக்கும் மற்றொரு நண்பர் இஸ்மாயில். அவர் சொன்னார். ‘அவனுக்கும் அத்தாவுக்கும் பெரிய சண்டையாம். ‘நீ மௌத்தானா உன் மூஞ்சில நா முழிக்கமாட்டேன். நா மௌத்தான நீ முழிக்காத’ என்று ஒருமையில் அத்தாவைத் திட்டிவிட்டு அவரிடமிருந்து வெளியேறிவிட்டான். அடுத்த ஆண்டே மௌத்தாகிவிட்டார். அவன் சொன்னது மாரியே மையத்தப் பாக்கக் கூட வரல. தெரிஞ்சவங்க அறிஞ்ச வங்கதான் அடக்கம் செஞ்சாங்க’

அப்படி அவன் திட்டியதற்கும் அவன்  அப்படி  இருந்ததற்கும்  நியாயங்கள் இருக்கலாம். அவன் திட்டும் அளவுக்கு அவன் அத்தா இருந்ததற்கு அவரிடமும் சில நியாயங்கள் இருக்கலாம்.

இப்போது அவன் கோலாலம்பூரில் இருக்கும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு பங்ளாதேஷ் ஊழியர்களைப் பணியமர்த்தும் வேலை. பென்ஸ், பிஎம்டபுள்யூ, லெக்சஸ் என்று மூன்று கார்களாம். நகர மத்தியில் இரண்டு காண்டோ வீடுகளாம். மகன்கள் பெயரில், மனைவி பெயரிலும் வீடுகளாம்.. அறந்தாங்கியில் அரண்மனை மாதிரி வீடாம் மண்டிக்குளக் கரையில். அவன் வளர்ச்சி விண்ணை முட்டிவிட்டு அடுத்த இலக்கைத் தேடுகிறது. அவன்தான் தற்போது அழைக்கிறான். அவனோடு உரையாடினேன். அவன் சொன்னான்

‘மேன்பவர் வேலை. நீ சரபோசி கல்லூரியில் இருபது ஆண்டுகள் சம்பாதிப்பதை ஒரே செக்கில் பார்க்கமுடியும். எனக்கு உதவிக்கு ஓர் ஆள் தேவை. உன் ஞாபகம்தான் வந்தது. உடனே வா. ஒத்துவந்தால் இரு. ஒரு மாதம் பொறு. பிடிக்காவிட்டால் ஓடிவிடு. குறுக்கே நிற்கமாட்டேன். நீ சரி என்றால் ஆரிஃப் டிராவல்ஸில் டிக்கெட்டுக்கு இப்போதே ஏற்பாடு செய்கிறேன். நீ வசதிப்படி புறப்படலாம். என்ன சொல்றே?’ யோசித்தேன். அவனின் கடைசி வார்த்தைகள் ஈர்த்தன. என் அத்தா அடிக்கடி சொல்வார். நாம் தேடிப்போகிற வேலையைவிட தேடி வர்ற வேலையே அல்லாஹ் தருவது’ . அந்த  ஞாபகம் வந்தது. ‘சரி’ என்றேன்.

கோலாலம்பூரில் சிட்டி பிளாஸாவில் ஒரு காண்டோவில் தங்கியிருக்கிறேன். காலை எட்டு மணிக்கு பிஎம்யபுள்யூவில் தாவூத் வருவான். எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு விண்ணப்பித்திருக்கின்றன என்ற பட்டியல் அவன் கையில் இருக்கும். ஐந்தாறு நிறுவனங்கள் அவனின் ஒரு நாள் இலக்கு. 100 மைல் சுற்றளவில் பல நிறுவனங்கள் தொழிற்சாலைகள். கையில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பெட்டி. இருவரும் புறப்படுவோம். ‘ரோஜா’ வும் ‘தேவர்மகனும்’ வெளியான ஆண்டு அது ‘புது வெள்ளை மழை இன்று பொழிகின்றது, இஞ்சி இடுப்பழகி’ பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டன. அந்த இரண்டு இசை வட்டுக்கள் அந்தக் காரில் தொடர்ந்து இசைக்கும்

ஒரு நிறுவனத்தின் மேலாளரிடம் தாவூத் பேசிக்கொண்டிருக்கிறான். நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ‘எனக்குத் தேவையான 300 ஊழியர்களுக்கான ஆர்டரை உனக்குத் தருகிறேன். 10 நாட்களுக்குள் எல்லா வேலையும் முடித்து 300 பாஸ்போர்ட்கள் வந்தாக வேண்டும். நீ தரும் ஆட்களை நிச்சயமாக நம்புவேன்.’ ஆர்டர் கையெழுத்தானது. அதை வாங்கிக்கொண்டு வெளியேறினோம். ‘எடுத்த எடுப்பில் 300. நீ வந்த அதிர்ஷ்டம்’ என்றான். என் ஈகோ தலைதூக்கியது. அமுக்கினேன். அந்த இரவே பங்ளாதேஷ் ஏஜண்டுகளுடன் பேசியாக வேண்டும். சௌத்ரி, சோட்டா, முஸ்தபா மூன்றுபேர்தான் ரொம்ப நெருக்கம். அந்த உணவகத்திற்கு இரவு உணவிற்காக சௌத்ரியை வரச்சொன்னான். ஆர்டரைக் காண்பித்தான். 300 பேர் தலைக்கு 800 ரிங்கிட். மொத்தம் இருநூற்று நாற்பதாயிரம் ரிங்கிட். இதில் 50 பெர்சண்ட் அட்வான்ஸாகத் தந்தால் உனக்குத்தான் இந்த ஆர்டர். சௌத்ரி ஒரு சாக்லெட்டை எடுப்பதுபோல் தன் காசோலையை எடுத்தார். கையெழுத்துப் போட்டு கிழித்துக் கொடுத்தார். ‘பெயரையும் தொகையையும் எழுதிக்கொள்.’ என்றார். தாவூது சொன்னது உண்மைதான் இது எனது 20 ஆண்டு கல்லூரிச் சம்பளத்தைவிட அதிகம்தான். சௌத்ரி சென்றபின் முஸ்தபாவை வரச்சொன்னான். அந்த ஆர்டரை அவனிடமும் காட்டினான். ‘இந்த 300 பேர் உனக்குத்தான் 50 பர்ஸன்ட் தந்தால் உனக்கு இதை ஒதுக்கிவிடுகிறேன். ‘ என்றான். முஸ்தபா மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு சென்றுவிட்டார். நான் தாவூதிடம் கேட்டேன்.

‘எப்படி ஒரு ஆர்டரை இரண்டு பேருக்குக் கொடுப்பாய்?’

‘அதற்கிடையே இன்னொரு 300 பேருக்கான ஆர்டர் கிடைக்கும்’

‘கிடைக்காவிட்டால்?’

‘பொட்ட மாரிப் பேசாத. நான் செய்றதக் கவனி. புரியும்’

அந்தப் ‘பொட்ட’ என்ற வார்த்தை நெற்றிப் பொட்டில் ஆணி அடித்தது..இவனோடு எப்படித் தொடர்வது?

சில நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் காலை 8மணி,  புது வெள்ளை மழையோடு நானும் தாவூதும் பயணிக்கிறோம். அதே நிறுவனத்துக்கு. பிஎம்டபுள்யூவில். காரின் பின் பகுதியில் ஓர் அழகான பையில் 300 கடவுச்சீட்டுகள் படுத்திருந்தன. சௌத்ரி தந்த கடவுச்சீட்டுகள்தான் அவைகள். போகிற வழியில் முஸ்தபா தங்கியிருக்கும் வீட்டின்முன் கார் நின்றது. முஸ்தபா வெளியே வந்தார். அந்தப் பையிலிருந்து ஒரு கடவுச்சீட்டை கிளி ஜோசியக்காரனின் கிளி உருவுவதுபோல் உருவினான். முஸ்தபாவிடம் கொடுத்தான். ‘ஒரு பாஸ்போர்ட் கேட்டியே. இத வச்சுக்க. உன் வேலய முடிச்சுட்டு நாளக்கு திருப்பி கொடு.?’ அடப்பாவி. அவன் எதற்காகக் கேட்கிறான்? இவன் எதற்காகக் கொடுக்கிறான்? இது யாரோட கடவுச்சீட்டு? அவனோட கதி என்ன? பதறினேன். கேட்டேன். இது சௌத்ரியின் பாஸ்போர்ட். இவன்ட ஏன் கொடுக்குற?’ 

‘ணொய் ணொய்னு ஏதாவது பேசாத. சும்மா இரு.’

‘ணொய். ணொய்….அந்த வார்த்தைகள் எனக்கு வலித்தது.

அப்படிப் பேசுவது அவனுக்கு நியாயமாக இருக்கலாம். அதைப் பொறுத்திருப்பதில் எனக்கு எந்த நியாயமுமில்லை.

அடுத்த நாள் இரவு நான் கோலாலம்பூர் விமான நிலையத்தில். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் சிங்கப்பூர் பறக்க இருக்கிறேன். தாவூதை அழைத்தேன். சொன்னேன். ஏதோ சொல்ல வந்தான். ‘குறுக்கே நிற்க மாட்டேன் என்றாய். அப்படியே இரு.’ பேசியைத் துண்டித்தேன். புறப்பட்டேன். அதன்பிறகு ஓரிரு ஆண்டுகள் தொடர்பில்லை.

ஒரு நாள் தாவூத் அழைத்தான்.  ‘என் மகளுக்கு அறந்தாங்கியில் திருமணம். வாட்ஸ்அப்பில் பத்திரிகை அனுப்புகிறேன். விபரங்களுக்காக. கோலாலம்பூரில் மணிசேஞ்சர் சிக்கந்தரின் மகன்தான் மாப்பிள்ள. மே மாதம் 19. உன் டைரியில் குறித்துக் கொள். 18ஆம் தேதியோ, 17ஆம் தேதியோ வந்துவிடு. அறந்தாங்கியில் உனக்காகக் காத்திருப்பேன்.

அறந்தாங்கி. மே 18. தாவூதின் வீடு. அல்ல. மாளிகை. அந்தக் கூடத்தை ஒரு பெரிய அலங்கார விளக்கு அடைத்துக்கொண்டு தொங்கியது. 19 லட்சமாம். ‘எங்கவீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்ஜியார் வருவதுபோல் இரண்டு பக்கமும் இரண்டு மாடிப்படிகள் இறங்குகின்றன. சென்னையிலிருந்து ஐந்து பென்ஸ்கார்கள் ஓட்டுநருடன் பத்து நாட்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அந்த மாளிகைக்கு வெளியே வரிசையில் நிற்கின்றன. மாப்பிள்ளைக்கு யானை ஊர்வலமாம். ஒரு கோயில் யானையைப் பேசியிருந்தான். சடங்கு சம்பிரதாயம் இடம் கொடுக்குமா? அதைப்பற்றிய கவலை அவனுக்கில்லை. அவன் செய்வது அவனுக்கு நியாயமாகவே இருந்தது. மாப்பிள்ளை விருந்துக்கு ராஜஸ்தானிலிருந்து ஒட்டகக் கறி வரவழைத்திருந்தான். ஹைதராபாத்திலிருந்து மான் கறி வரவழைத்திருந்தான். கும்பகோணம் பக்கத்தில் பண்டாரவாடையிலிருந்து பண்டாரிகள் (சமையல்காரர்கள்) படையே வந்திருந்தது. அப்படி ஒரு திருமணத்தை நான் படித்திருக்கிறேன். பார்த்ததில்லை. அறந்தாங்கியே அவன் முன் கைகட்டி நிற்பதுபோல் இருந்தது.

திருமணம் முடிந்தது. அன்று இரவு நான் அவசரமாக தஞ்சாவூர் செல்ல வேண்டி இருந்தது. ஹோட்டல் பரிசுத்தத்தில் தங்கியிருக்கும் என் நண்பரைப் பார்த்துவிட்டு அன்று இரவே அறந்தாங்கி திரும்பி அடுத்த நாள் நான் சிங்கப்பூர் செல்லவேண்டும். தாவூதிடம் சொன்னேன். ‘கார் அனுப்புகிறேன். உன் வேலையை முடித்துக் கொண்டு இரவு எவ்வளவு நேரமானாலும் திரும்பிவிடு’ என்றான். சென்னையிலிருந்து வந்த அந்த பென்ஸ் கார் இரவு எட்டு மணிக்கு வீட்டு வாசல் வந்து நின்றது. ஓட்டுநரை வீட்டுக்குள் அழைத்தேன். அவர் பெயர் குமார். ‘எட்டு மணி. வாருங்கள் சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவோம்.’ ‘ இதோ டாய்லெட். கைகால் முகம் கழுவிக்கொள்ளுங்கள்.’ கழிவறையிலிருந்து வந்த அவரிடம் ஒரு துவாலையை நீட்டினேன். வீட்டில் மிளகு ரசம் வைத்து ஆட்டிறைச்சியை மிளகுசீரகத்துடன் பொரித்திருந்தார் அம்மா. எனக்குப் பிடித்த ‘கெளங்க மீனு’ பொன் வறுவலாய் வறுத்திருந்தார்கள். பெரிய சகானில் சாதாரணச் சோறு. பெரிய பெரிய  தட்டுக்கோப்பைகளில் மிளகுரசம், பொறித்த கறி, மீன் பரப்பியிருந்தார் அம்மா. குமார் சாப்பிடத் தொடங்கினார். இடையே அவர் தலை நிமிரவே இல்லை. சோறு, இறச்சி, மீன் எல்லாம் காலி. அம்மா காலியானதை நிரப்பிக் கொண்டிருந்தார். என்னைப்பார்த்து ‘என்ன இப்புடிச் சாப்புர்றாரு’ என்பதாக ஜாடை காட்டினார். நானும் ‘புரியவில்லை’ என்று பதில் ஜாடை காட்டினேன். நானும் அவரோடு மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மதியம் உண்டதே கழுத்து வரை நிற்கிறது. எப்படிச் சாப்பிடுவது. நான்தான் பேச்சைத் தொடங்கினேன். ‘என்ன குமார். அவ்வளவு பசியா?’ நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்கள் கலங்கி யிருந்தன. ‘விழலாமா?’ என்று ஒரு சொட்டுக் கண்ணீர் யோசித்துக் கொண்டிருந்தது. குமார் சொன்னார். ‘வந்து மூணு நாளாச்சு. சாப்பிடவே இல்ல சார். அவனெ அங்க கூட்டிட்டுப் போ. இவன இங்க கூட்டிட்டுப்போன்னுதான் அந்த ஆளு சொல்றாரு. சாப்புட்டீங்களான்னு கேக்க வேணாமா? படுப்பதற்கு ஒரு அறையைத் தந்தார்கள். ஒவ்வொரு கொசுவும் ஈ மாதிரிப் பறக்குது சார். ஒரு சிமிண்டுத் தொட்டியில் தண்ணி. உள்ள பாசி புடுச்சிருக்கு. தொர்றதுக்கே அருவருப்பா இருக்கு. அதுலதான் குளிக்கணுமாம். நா வெந்நீர்ல குளிச்சுப் பழகினவன். மூனு நாளா குளிக்கல சார். நீங்க என்னெ கூடத்துல உக்காரவச்சு, துவாலத் துண்ட மரியாதயாத் தந்து அம்மா கையில சாப்பிட வச்சு ஒங்க வீட்டுப்புள்ள மாரி நடத்துறீங்களே, நீங்க மனுஷன் சார். அந்த தாவூது , நா சொல்லக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுச் சொன்னார். ‘எல்லாம் அழிஞ்சிரும் சார். எல்லா வேலக்காரங்களுமே நொந்துபோய் இருக்காங்க  சார். வேலக்காரங்கள கவனிக்காதவன ஆண்டவன் வேட்டையாடிருவான் சார். அவர் தேவைக்காக நீங்க சிங்கப்பூர்லேருந்து வந்துருக்கீங்க. நா சொன்னேன்னு சொல்லுங்க சார்’ குமாரின் பேச்சில் நியாயம் இருந்தது. இப்படிப் பேசுவதற்குக் காரணமாக தாவூது நடந்துகொண்டதில் அவனுக்கும் சில நியாயங்கள் இருந்திருக்கலாம்.

நான் சிங்கை வந்துவிட்டேன். இரண்டாண்டுகள் ஒலிம்பிக் வேகத்தில் ஓடிவிட்டன. ஒரு நாள் இஸ்மாயிலை அழைத்து தாவூத் பற்றி விசாரித்தேன். ‘அண்ணே சேதி தெரியாதா? அவரெ அரசாங்கமும் ஒதுக்கீருச்சு. பங்ளா தேஷ் ஏஜண்டுகளும் ஒதுக்கிட்டாங்க. எந்தக் காருக்கும் ‘டியூ’ கட்டலயாம்.  வீடுகளுக்கும் அப்படித்தானாம். மகன்கள் மனைவியிடம் இருந்த வீட்டுக்கு அவர்கள் ‘டியூ’ கட்டுகிறார்கள். பணம் செலுத்தாத சம்மன்களே பல ஆயிரம் ரிங்கிட்டாம். ஏகப்பட்ட கோர்ட் கேஷுகள். வாரண்டுகள். தாவூது குடும்பத்துல உள்ள எல்லார் பாஸ்போர்ட்டையும் முடக்கிட்டாங்களாம். அவர் குடும்பம் கேஎல்லை விட்டு வெளியேற முடியாதாம்.’ ஒரே மூச்சில் சொன்னார் இஸ்மாயில். குமார் சொன்னது பொறியாய்க் கிளம்பியது. ‘எல்லாம் அழிஞ்சிரும் சார்’ இஸ்மாயில் சொன்னார். ‘நீங்க வந்து பாருங்க அண்ணே. ஆளு வெளியேயே வர்றதில்ல.’ இஸ்மாயில் முற்றுப்புள்ளி வைத்தார். சில நாட்கள் சென்றன. போய்ப் பார்ப்பதற்கான சூழ்நிலைக்காக நான் காத்திருந்தேன்.

என் தொலைபேசியில் தாவூதின் மூத்த மகனின் எண் படபடத்தது. எடுத்தேன். ‘ அங்கிள்….அத்தா ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல இருக்கார் அங்கிள். ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டேன். ஒங்களப் பாக்கணும்னு சொன்னாரு. நிதானத்தோட அவரு இல்ல. ஆனா திரும்பத் திரும்பச் சொன்னாரு அங்கிள்.’

உடனே புறப்பட்டேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் அந்த மருத்துவமனையில் தாவூத் படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகே நின்று கொண்டிருக்கிறேன். மருத்துவமனைக் கஞ்சி வாயிலிருந்து வயிற்றுக்கு வழிந்திருந்தது. ஒரு தாதி சுத்தம் செய்து கொண்டிருந்தார். முகம் வீங்கி யிருந்தது. கையைத் தூக்கக் கூட பலமில்லை. மிக அருகில் சென்றேன் ‘தாவூத்’ என்றேன். சிரித்தான். இப்படிச் சிரிக்க அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும். யோசித்தேன். நிதானமாகப் பேசினான். ‘ வாயில் எதப் போட்டாலும் அப்படியே வெளியே வழிந்துவிடுகிறது. அது வாந்திதான். ஆனா வாந்திங்கிற உணர்வே இல்ல. ரெண்டு கிட்னியும் அவுட்டாம்’ மீண்டும் சிரித்தான். ஸ்ரீலங்காவில் என் டாக்டர் கிட்னி வாங்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டுருக்காரு. அது சம்பந்தமாத்தான் என் மனைவிக்கிட்டயும் மகன்கள்ட்டயும் பேசிக்கிட்டிருக்காரு. கிட்னி வந்ததும் எல்லாம் சரியாகிவிடும்’ மீண்டும் சிரித்தான். ‘அடப்பாவி. எப்புர்றா சிரிக்கிறே?’ நான் என்னையே கேட்டுக்கொண்டேன். அதுவரை டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்த மனைவி இப்போது ஒரு நாற்காலியில் அமர்ந்து யாரிடமோ தொலைபேசிக் கொண்டிருக்கிறார். இப்போது மூத்த மகன் பேசிக்கொண்டிருக்கிறான். ஐந்து நிமிடங்கள் அவன் பேசினான். அவன் பேசி முடிக்கட்டும் என்று நான் காத்திருந்தேன். அடுத்து இரண்டாவது மகன் பேசிக்கொண்டிருக்கிறான். தாவூத் சொன்னான். ‘இந்த டாக்டர்தான் என் ஆட்களுக்ககெல்லாம் மெடிகல் ரிப்போர்ட கவனிப்பார். எனக்காக ரொம்ப பாடுபட்டு கிட்னி வாங்க ஏற்பாடு செய்கிறார். ஒரு லட்சத்து பதினையாயிரம் வெள்ளியாம். எல்லாரும் அது சம்பந்தமாகத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அநேகமா இன்று இரவே கூட கிட்னி வரலாம். நீயும் டாக்டரிடம் பேசி விசாரித்துச் சொல்.’ என்றான். அப்போதுதான் இரண்டாவது மகனும் பேசி முடித்துவிட்டு அம்மாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்தான். டாக்டரிடம் சென்றேன். ‘ டாக்டர் நான் ரஜித். தாவூதின் பால்ய நண்பன். என் ஊர்க்காரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறேன். ரொம்ப துணிச்சல்காரன் டாக்டர். அவனெ இப்படிப் பாக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்றேன்

என்னை அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு வந்தார் டாக்டர். ‘மிஸ்டர் ரஜித், ஒங்கள எனக்குத் தெரியும். அடிக்கடி தாவூத் சொல்வார். கிட்னி கிடைத்துவிட்டது. ஒரு லட்சத்துப் பதினையாயிரம் வெள்ளி இன்று அனுப்ப வேண்டும். ஆனால்….ஆனால்……மனைவியும் மகன்களும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?’ ‘என்ன சொல்கிறார்கள் சார்?…’ ஒரு மயான அமைதி. டாக்டர் மூச்சு விடுவது காதில் விழுகிறது. பிறகு சொன்னார். ‘நீங்கள் கிட்னி வாங்க வேண்டாம். அப்படியே விட்டுவிடுங்கள். ஒடுறவரை ஓடட்டும்.’ எல்லாருமே ஒட்டுமொத்தமாகச் சொல்கிறார்கள். எல்லாரும் எப்படி ஒரு குடும்பத் தலைவனை ஒதுக்க முடியும்.  அவர்கள் அப்படி ஒதுக்கியதில் நிறைய நியாயங்கள் இருக்கலாம். அவர்கள் கிட்னி வாங்க ஏற்பாடு செய்வார்கள் என்ற தாவூதின் நம்பிக்கையிலும் நியாயங்கள் இருக்கலாம். நாம் என்ன செய்ய முடியும் சார்?’ என்றார். நான் கொஞ்சம் மகிழ்ச்சியாக முகத்தை சிரம்ப்பட்டு மாற்றிக் கொண்டு தாவூதிடம் வந்தேன். ‘இன்று இரவு கிட்னி வந்துவிடும்தானே. நான் எப்போதும்போல் இருப்பதை நீ நாளை பார்ப்பாய்.’ என்றான் தாவூத்

மனித நியாயங்களெல்லாம் மரணித்துவிட்டன. இறைவன் தன் நியாயத்தை எழுத பேனாவைத் திறந்து கொண்டிருக்கிறான். நான் அங்கிருந்து வெளியேறினேன். நான் வெளியேறியது தாவூதுக்கு அப்போது தெரியாது.  இனிமேலும் தெரியாது.

யூசுப் ராவுத்தர் ரஜித்  

Series Navigationகவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *