நிலவே முகம் காட்டு…

author
1
0 minutes, 42 seconds Read
This entry is part 8 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

                         ச.சிவபிரகாஷ்

“ பெரும் வளர்ச்சி ஏதும் வந்திராத பல காலங்களுக்கு முன்பு “

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம்  ‘நடுவபட்டி’. இங்கிருந்து…

அமாவாசை இருள் சூழ இருக்கும் ஒரு மாலை பொழுதில்…

ஜமீன்சல்வார்பட்டிக்கு தினமும் சிறார் தொழிலாளியாக ஒரு தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கூலி தொழிலுக்கு சென்று வரும்

வேலுவின் வருகையை எதிர்பார்த்தபடி, இவனது தாய் முத்து காத்துக்கிடந்தாள். எப்பவும் மணி  ஆறுமணிக்கெல்லாம் வந்திடுவான். இன்னிக்கு மணி ஏழாக போகுது. இன்னும் வரலீயே என படபடப்புடன்,மகனுடன் சேர்ந்து வேலைக்கு போகும் பக்கத்து வீட்டு பையனின் அம்மாவிடம்…

பொன்னம்மாக்கா….

பொன்னம்மாக்கா…

  ‘ ஓவ் ‘-என பதில் குரலாக

ஒன்னுமில்லை… உன் மவன் முருகன் வேலைலேர்ந்து  வந்திட்டானா?

என்னடி புதுசா கேட்டுக்கிட்டு ? ஒரு மாசமாக போகுது என்னிக்கு ரெண்டு பேரும் தனி தனியா வந்திருக்காய்ங்க?

இல்ல.. எம்புட்டு நேரமாகுது இன்னும் வரலீயேன்னு  கேட்டேன்.

அதுக்கா புள்ள ?… அங்கனக்குள்ள  என்ன  சோலியோ?… வருவாய்ங்க.  ஆமா இன்னிக்கு என்ன வந்தது திடீர்னு பீதியோட நிக்க  (நிற்கிறே) ?

இல்ல… பொன்னம்மாக்கா கொஞ்ச நாளா மனசு கனக்குது, நேத்து  கூட தூக்கத்துல  கெட்ட, கெட்ட கனவா வந்துச்சு, காலைல வெள்ளனே எந்திருச்சும், இன்னும் மனசும் சரியில்லாம தான் கிடக்கு. அதான்ய்.

இதுகாண்டி தானா?… ஜமின்சல்பார்பட்டிக்கும், நடுவபட்டிக்கும் , நம்ம அய்யன் வண்டியா  போய் வருது?  ரோட்டு (ரோடு) வேற நொடியா  கிடக்கு. பஸ்ஸூ வருதோ, போவுதோ (போகுதோ)  ?

(ஜமின்சல்பார்பட்டிக்கும், நடுவபட்டிக்கும் சுமார் பதினேழு, அல்லது பதினெட்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். பஸ் பகலில் அரைமணிக்கு ஒருமுறை மட்டுமே கடக்கும். சாலை சரியில்லாததால்  மாலையில் குறைவான ஒட்டம் தான் இருக்கும்)

பாவம் புள்ளைங்க வண்டி கிடைக்காம நடந்து வராய்னுங்களோன்னு தெரியல.   பேலாத….  சோலி இருந்தா போய் பாரு – என்று சொன்ன பொன்னம்மாவிடம்.

எனக்கென்னக்கா..?  புருஷனா, இல்லை வேற புள்ள குட்டியா… என்ன பெரிய சோலி இருக்க போகுது. நானும் இந்த ஒத்த மவனும் தான். இவனுக்காண்டி தான். நான் வாழுறேன்., இவனை… அவன் அப்பன மாதிரி பொசகட்ட பயனா இல்லாம  சூதனமா வளர்க்கணும். அது போதும்… அதுதான் பெரிய சோலியே

என்று முடிப்பதற்குள்,

பசங்க இரண்டும், இருளில் வருவது  தெரிகிறது. மண் தரையில் முகர்ந்தபடி  உடல் வற்றியிருந்த  தெரு நாய் ஒன்று  இவர்களை கண்டதும் பின் நோக்கி வாலாட்டி  வந்தது. (வேலு இந்த நாய் -க்கு குட்டியிலிருந்து உணவு ஏதேனும் கொடுத்து, விளையாடி மகிழ்ந்தவன்)  பொன்னம்மாளும் அவள் வீட்டினுள் சென்றாள்

அருகில் வந்தவனிடம்,

ஏண்டா வேலு இம்புட்டு நேரம்? முத்து விசாரிக்க

அம்மா… எங்க கம்பெனிக்கு யார் யாரோ ஆபிஸருங்க வந்தாய்ங்க, எங்கள மாதிரி சின்ன பசங்க கிட்ட வந்து… படிக்க வேண்டிய  வயசுல, எதுக்கீயா இந்த வேலை உங்களுக்கு? – ன்னு வையின்னாங்க

ஐயா… எங்களுக்கும்  பள்ளி கூடம் போகனும் தான் ஆசைக்கிங்யா. ஆனா…. வசதி இல்லாம தான் வேலைக்கு வந்தோம்ன்னு சொன்னதும். நாங்க ஏற்பாடு செய்றோம்ன்னு சொல்லிட்டு, எங்க முதலாளியை   ஏதோ  தோ வைய்யினாங்க.  என பேசியபடி வீட்டினுள் சென்றதும் தாமதத்துக்கான காரணம் கேட்காமலே மறந்தும் போனாள் முத்து.

         “….. “

அம்மா… பசி வவுத்த கிள்ளுது, சோறு பொங்கிட்டியா ?

  • ம் –

மதியம்  என்ன ஆணம் வெச்சே ?

கத்திரிக்கா, முருங்க, கடலை போட்ட ஆணம்.

என்னம்மா…? கோழி குழம்பு வெச்சா என்ன?  இப்போ… ரவைக்கும் இதானா?

ஆமா… வேணும்னா  முட்டை வெஞ்சனம் செய்யறேன்.

    “….. “

உணவருந்தி முடிந்ததும், படுக்கை விரித்து, படுத்ததும். வேலு தன் தாய் முத்துவிடம்

அம்மா… நான் பள்ளி கூடம் போகவா? சோலிக்கு போகவா?

ஏண்டா?

அதான்… அந்த ஆபிஸருங்க சொன்னாய்ங்கள்ள,

அவய்ங்க முதல்ல ஏற்பாடு செய்யட்டும், பொறவு பாக்கலாம்.

சரிம்மா… நான் படிக்க போல, சோலிக்கு போய், உன்னை காப்பாத்துவேன் காலையில் வெள்ளென  எழுப்பி வுடு  தீவாளி  (தீபாவளி)  இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு, வேலை அதிகமா இருக்கு வெள்ளனே வாங்க, வந்தா… இந்த தீவாளிக்கு, எங்கள மாதிரி பசங்க எல்லாத்துக்கும்  டவுசர், சட்டையும் எடுத்து தாரேன்னு சொல்லியிருக்காய்ங்க.. சம்பளமும் தருவாய்ங்க தந்தா, டவுனுக்கு போய் உனக்கு சீலை வாங்கி  தாரேன் – என்றவனை

 பெருமிதத்தில்இறுக்கி முத்தம் கொடுத்து அணைத்து கொண்டாள்.

வேலு…. இந்த வயசுலயே   எவ்வளவு நேக்காக பேசுற, நான் நினைச்சத விட ஒசக்கல தான்டா இருக்க  செல்லம்… எனக்கு உன்னைய  பள்ளி க்கோடத்துக்கு அனுப்பனும் தான் ஆச (ஆசை) என்ன செய்ய?

 உன் அப்பன் ஒரு குடிக்காரமட்டை தெனம், (தினம்) தெனம்  குடிச்சிட்டு, சோலிக்கும் போவாம, வந்து வசவுவான், அடிப்பான். கட்சி அது, இதுன்னு பொசக்கட்ட பயனா தான்யா திரிஞ்சான்.

குளிக்க போறேன்னு போதையில் மேக்கால (மேற்கில்) வெட்டவெளியா இருக்க  பெருமா (பெருமாள்) கோயில் ஊரணியில் முங்கி செத்தும் போனான்

உன்னைய வளர்க்கணும், திங்கணும், அதுக்காண்டி நானும்… உங்க  கம்பெனியில  தான் சோலிக்கு சேர்ந்தேன். பொன்னம்மாக்கா  எனக்கு முன்னமேயே அங்கிட்டு சோலி பார்த்தியவக  தான். அவக (அவர்கள்) தான் அங்கிட்டு என்னைய சேர்த்துவுட்டாக,

 எனக்கு கையில தடுப்பு, தடுப்பா, அலர்சி (அலர்ஜி) வந்ததனால, டவுன் னு  டாக்டர்  என்னைய இந்த சோலி வேணாம்… வேற சோலிய பார்த்துக்கன்னு சொன்னாக. பொன்னம்மாக்காவும், முடியலைன்னு  முருகனை அங்கன அனுப்புச்சு.

 நான்… சிவகாசி டவுன்ல ப்பிரஸ்ல (பிரிண்டிங் பிரஸ்) சேர்ந்தேன்.நல்லா தான் இருந்துச்சி, அங்கிட்டு… இப்ப (இப்போது) சோலி கம்மியாயிருக்கு, நிறைய வந்துச்சு ன்னா… சொல்லி அனுப்பறேன். பொறவு (பிறகு) வா. ன்னு அந்த முதலாளி அண்ணே சொன்னாய்ங்க.

நிலைமையை தெரிஞ்சி, தான் உன்னைய… சோலிக்கு அனுப்ப சொன்னாக, பொன்னம்மாக்கா. அதான்யா.. சோலி கெடைச்சி (கிடைத்து) நான் திரும்பவும் சேர்ந்துட்டா, உன்னைய நான் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி படிக்க வெக்கிறேன்யா. – என்றதும்

‘ஆட்டும்’-என்றான் வேலு.

“….. “

                         …..சில வாரங்களுக்கு பின்னர்…….

 

வழக்கம் போல, பையனை வேலைக்கு பக்கத்து வீட்டு முருகன் துணையுடன் “கோலாரா போயிட்டு வா “-ன்னு சொல்லி அனுப்பி விட்டு,   வீட்டு கொல்லையில் துணியை துவைத்தபடி  பொன்னம்மாக்கா விடம் பேசிக்கொண்டிருந்தாள் முத்து.

முருகனுக்கு  ‘தடுமம்  புடிச்சிருக்கு,’ காய்ச்ச வர மாதிரி இருக்கு உட்கார்ந்தே இருக்கிறதால ‘குறுக்கு பிடிச்சிருக்கு, மதியம் சொல்லிட்டு வந்திருவேன்னு சொல்லிட்டு போயிருப்பதாகவும், உன் மகன் வேலு மட்டும் வேலை முடித்து சாயங்காலம் தனியாக தான் வீட்டுக்கு வருவான். என முத்துவிடம் பொன்னம்மா சொல்லிக்கொண்டிருக்கும் போதே

 எதிர்பாராத வகையில், எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று  முத்துவின் தலையை தட்டி சென்றது. இதை அபசகுனமாக நினைத்தவள். என்னன்னு தெரியலையே, காக்கா தலையில அடிச்சிட்டு போகுதே. என்ன நடக்க போகுதோ? என்ன பயத்துடன் பொன்னம்மாவை பார்க்க,

உனக்கு மட்டும் ஏன் நல்லாராகத்தா நடக்குது”-என்றவள் தண்ணீய தலைய தெளிச்சுக்க என்றாள் பொன்னம்மா,முத்துவிடம்.

“…….. “

அன்று பிற்பகல் மூன்று மணி இருக்கும்

  

நாய் குலைத்து கொண்டே இருந்தது. இந்த சத்தம் ஒருபக்கம் இருந்த போதிலும்.,முத்து அசந்து தூங்கி கொண்டிருந்தாள். யாரோ குரல் கொடுப்பது போல் தெரிந்தது தடாபுடாலென எழுந்தவள். எட்டிபார்க்க முருகனுடன் போலீஸ்காரர். ஒருவர் உடையுடன் வந்து, வேலுங்கிறது உன் பையன் தானே.? தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமா தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் தப்பிக்க முடியாம சில குழந்தைங்க செத்து போனதாகவும், மீதி குழந்தைங்க உயிருக்கு ஆபத்தான நிலையில சிவகாசி  பெரியாஸ்பத்திரியில் இருப்பதாகவும், பையனை அடையாளம் காண வரசொன்னார்

இதை கேட்டு கதறி மயக்கம் அடைந்தவளை, முகத்தில் தண்ணீர் தெளித்து, எழுப்பி பதறியபடி பெரியாஸ்பத்திரிக்கு அழைத்து சென்றாள் பொன்னம்மா. இவர்களுடன் அக்கம்பக்கத்திலிருந்தவர்களும் சென்றனர்.

ஆஸ்பத்திரியில் குத்துயிரும், குலையிருமாக இருந்த சிறுவன் வேலு தீக்காயம் பொறுக்க முடியாமல். ரணத்தில் அம்மா….அம்மா-என முணுக்க. முகத்தை காண முடியாததாலும், எப்படியும் பையன் இறந்த விடுவது உறுதி என நினைப்பிலும்,

வேதனையை, காண பிடிக்காமலும், இனி யாருக்காக வாழ்வது, வாழ்ந்தும் என்ன பிரியோஜனம்,? என வாழவே பிடிக்காமல் பெரிய ஆஸ்பத்திரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

இந்நேரம் வேலுவும் மரணிக்கிறான்.

அம்மா கஷ்டபடக்கூடாதுன்னு, பையன் கூட்டிட்டு போயிட்டானா, இல்லை பையன் கஷ்டபடக்கூடாதுன்னு அம்மா கூட்டிட்டு போயிட்டாளான்னு தெரியல என பார்த்தவர்களும், கேட்டவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

தொழிற்சாலை முதலாளி கைது செய்யபடுகிறார்- என பத்திரிகை செய்தி சொன்னது.

ஒரு ஆன்மா, இன்னொரு ஆன்மாவை தோளில் சுமந்தபடி  தான் செல்கிறது. எங்கோ!?

 

 

*****முற்றும்*****

 

 

 

 

வட்டார பேச்சின் சொல் அர்த்தம்.

 

எம்புட்டு நேரம் = எவ்வளவு நேரம்

சோலி = வேலை

வெள்ளனே = சீக்கிரம்

பேலாத = பயப்படாதே

வருவாய்ங்க= வருவாங்க

நொடியா கிடக்கு = மேடு, பள்ளம்

பொசகட்டபையன் = உபயோகமற்ற / எதற்கும் லாயக்கு இல்லாதவன்

சூதனம் = ஜாக்கிரதை

வையினாங்க = திட்டினார்கள்

ஆணம் = குழம்பு

ரவைக்கும் = இரவுக்கும்

வெஞ்சனம் = துணை பதார்த்தம் (side dish)

உசக்கால = உயரத்தில்

ஊரணி = குளம்

குடிக்காரமட்டை = மது அருந்துபவன்

ஆட்டும் = ஆகட்டும் / சரி

கோலாரா போயிட்டு வா = பத்திரமாக போயிட்டு வா

தடுமம் புடிச்சிருக்கு = ஜலதோஷம் / சளி பிடிச்சிருக்கு.

நல்லாராகத்தா நடக்குது = விசித்திரமாக நடக்குது

 

 

Series Navigationஒளிப்பரவல்சிற்றிதழ்களின் சிறப்பிதழ் – காற்றுவெளி
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *