நீங்காத நினைவுகள் 16

This entry is part 18 of 24 in the series 8 செப்டம்பர் 2013

 

    சில ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்முக நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று.  ஓர் எழுத்தாளரைத் தொலைக் காட்சி பேட்டி கண்ட நிகழ்ச்சி அது. அந்த எழுத்தாளர் துளியும் ஆணவமே இல்லாதவர். எனினும் தம் சாதனைகள் சிலவற்றை நோக்கர்களுக்கு ஒரு தகவல் போல் செருக்கே இல்லாத தொனியில் சற்றே கூச்சத்துடன் தெரிவித்தார்.  தம் சாதனைகளை அவர் பகிர்ந்துகொண்ட விதம் பாராட்டும்படி இருந்தது.  அந்த “இனிய” எழுத்தாளருக்கு உடனே ஒரு பாராட்டுக் கடிதம் எழ்தி யனுப்பினேன்.. ’நாம் செய்யும் சில நற்செயல்களை நாலு பேர் அறியச் செய்வதில் தவறு ஏதும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டேன். அவற்றை யறியும் போது, “நாமும் இது போல் நல்லதைப் பிறர்க்குச் செய்ய வேண்டும்’ என்னும் ஆர்வமும் உந்துதலும் நமக்கு ஏற்படுமன்றோ! அது நல்லதுதானே?’ எனும் பொருள்பட நான் எழுதியிருந்த கடிதம் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அவரது பதிலிலிருந்து தெரிந்தது.

    சில நாள்களுக்கு முன் ‘நான் எழுதிச் சாதித்தது என்ன்?’ என்பது போன்ற தலைப்பில் எழுத்தாளர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று அவற்றை ஒரு நூலாய்த் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்ட ஒரு பதிப்பகத்தின் சார்பில் ஒரு நண்பர் என்னிடமும் கட்டுரை கேட்டிருந்தார். ஏனோ எனது இயல்பான கூச்சம் குறுக்கிட, ‘நான் என்ன சாதித்தேன் என்பதை நானே சொல்லுவது முறையாக இருக்குமா? அதை மற்றவர்கள் அன்றோ சொல்ல வேண்டும்?’ எனும் தொனியில் ஒரு சிறு கட்டுரையையே எனது பதிலாக எழுதி அவருக்கு அனுப்பினேன். ஆயினும் அப்ப்டிச் செய்திருந்திருக்க வேண்டாமோ என்று (தாம்தமாய்) இப்போது தோன்றுகிறது. நான் குறிப்பிட்ட, தொலைக்காட்சியில்  எழுத்தாளரின் பேட்டி பற்றிய ஞாபகம் திடீரென்று கிளர்ந்ததன் விளைவு.

 

    இவ்வாண்டின் தொடக்கத்தில் மன்னார்குடியில் நடந்த செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரியின் கூட்டத்தில் இது பற்றிப் பேசும்படி ஆயிற்று. அந்தக் கல்லூரியின் மாணவியர் பலருக்குப் இலக்கியம் படைக்கும் ஆர்வம் இருந்ததைப் புரிந்து கொண்டதன் விளைவாகச் சற்றே சுயத்தம்பட்டம் அடித்துக்கொள்ளும்படி ஆயிற்று.

     ‘எழுத்தினால் ஏதேனும் சாதிக்க   முடியுமா?’ என்பது கேள்வி. ‘பெரிய அளவில் சிலராலும், சிறிய அளவிலேனும் சிலராலும் நல்ல விளைவுகளைத் தங்கள் எழுத்துகளால் ஏற்படுத்த முடியும்’ என்பதே பதிலாகும். இக்கருத்திலிருந்து வேறுபடும் எழுத்தாளர்கள் சிலர் இருக்கிறார்கள். இவர்கள், ‘எழுத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.  நாம் நல்லவற்றை எவ்வளவுதான் வாய்ப் பிரசாரத்தின் மூலமும் எழுத்தின் மூலமும் சொன்னாலும் இந்த உலகத்தை – அதாவது மனிதர்களை – மாற்றவே முடியாது.  அது தன்பாட்டுக்கு வழக்கம் போலவே (தவறான வழியில்) போய்க்கொண்டிருக்கும்.  திருக்குறள், பைபிள், திருக்குரான், பகவத் கீதை ஆகிய நூல்கள் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. அவை பற்றிய பிரசாரங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.  ஆனால் மக்கள் திருந்திவிட்டார்களா?’ என்பது இவர்களது வாதம்.  இது குதர்க்க வாதமே என்பது வெளிப்படை. இந்த எழுத்தாளர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லவர்களாகவே இருந்தாலும், காசுக்கும் மலினமான புகழுக்கும் ஆசைப்பட்டுத் தங்கள் எழுத்துகளில் ஆங்காங்கு நச்சைக் கலந்து வாசகர்களுக்குகத் தேவையற்ற கிளுகிளுப்பான எண்ணங்களை ஏற்படுத்துகிறவர்கள். இது அவர்களுக்கே நன்கு தெரியும். தெரிந்தே கையாளுகிற உத்திதானே இது! எனினும், ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நல்லவற்றை எழுதினால் வாசகர் மனக்களில் நல்ல் எண்ணங்கள் ஏற்படும் என்பதை இவர்கள் ஏன் ஏற்பதில்லை யென்றால், அவ்வாறு ஏற்றால், கெட்டவை வாசகர் மனங்களில் கெட்ட எண்ண்ங்களை ஏற்படுத்தும் என்பதையும் ஏற்க நேரிடும் என்பதனால்தான் என்பது வெளிப்படை! இவர்களின் விகாரமான எழுத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்களை நோக்கி இவர்கள் கேட்கும் கேள்வி, ‘உங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால், படிக்காமல் இருக்க வேண்டியதுதானே?’ என்பதாகும்!

 

    இப்படி ஒரு நழுவலான பதிலைக் காலஞ்சென்ற ஒரு பிரபல எழுத்தாளர் கூறியுள்ளார். ஓர் இலட்சிய எழுத்தாளர் அவரை நேரடியாகவே ‘ஏன் இப்படி யெல்லாம் ஆங்காங்கு விகாரமாக எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘அதையெல்லாம் நான் உங்களைப் போன்றவர்களுக்காக எழுதவில்லை, சார்!’ என்று அவர் பதில் சொன்னாராம். அந்த நல்ல எழுத்தாளர் இதை என்னிடம் தெரிவித்து வருத்தப்பட்டதோடு, ‘இதெல்லாம் ஒரு பதிலா, அம்மா?’ என்றார். உண்மைதான். அப்பட்டமான நழுவல்தான்.

    மாக்சிம் கோர்க்கியின் “தாய்” என்னும் நாவல் சோவியத் ரஷ்யாவில் மாபெரும் புரட்சி வெடிக்க வித்திட்டதாய்ச் சொல்லுவார்கள்.  வெளி நாட்டு உதாரணங்கள் இன்னும் சில உள்ளன. ஏன்? நம் நாட்டையே எடுத்துக்கொண்டாலும், நிறைய உதாரணங்கள் உள்ளன.  தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் தியாக பூமி நாவலின் தாக்கத்தால் வேலையை விட்டுவிட்டும், படிப்பை நிறுத்திவிட்டும் பலர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களாகி இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்ததாயச் சொல்லுவார்கள்.  எனவே. ஒட்டுமொத்தச் சமுதாய மாற்றத்தையே எழுத்தால் விளைவிக்க இயலும் எனும் போது, தனிமனிதர்களை நல்ல் எழுத்தால் மாற்ற இயலாது என்று சொல்லுவது அண்டப் புளுகாகும். யாரையும் யாரும் திருத்த முடியாது என்று கூறுவது நொண்டிச் சாக்கேயாகும். அரிச்சந்திரன் நாடகம் வெறும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைக் காலப் போக்கில் மகாத்மா காந்தியாக் மாற்றவில்லையா! எல்லாரும் காந்தியாக முடியாதுதான். ஆனால், சிறு மாற்றங்களேனும் கண்டிப்பாக விளையும்தானே? பத்தாம் வகுப்பில் தேறாததால் உள்ளம் உடைந்து தற்கொலை செய்துகொள்ள ரெயிலடிக்குப் போன இன்றைய நீதிமன்ற நடுவர் திரு கற்பகவிநாயகம் அவர்கள் ரெயில் வர நிறைய நேரம் இருந்ததால் அருகில் இருந்த நூலகம் ஒன்றுக்குத் தம் பொழுதைக் கழிக்கச் சென்றாராம். அங்கே காந்தியடிகளின் “சத்திய சோதனை”யைப் படித்துள்ளார். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த காந்தி மனம் மாறி அவ்வெண்ணத்தைக் கைவிட்டது பற்றி அதில், படித்துத் தாமும் மனம் மாறி வீடு திரும்பி மறுபடியும் தேர்வை எழுத முற்பட்டாராம். இன்று அவர் ஒரு நேர்மையான நீதிபதி யென்று பெயரெடுத்துள்ளார். அவரை மாற்றியது காந்தியின் வரலாறு பற்றிய நூல்தானே?

 

    எனவே எழுத்தால் தனிமனிதர்களைத் திருத்த முடியாது என்று மலினப் புகழ் எழுத்தாளர்கள் சிலர் கூறுவது “லாஜிக்”கே இல்லாத புளுகு! அதாவது நேர்மையே இல்லாத குதர்க்கவாதம்.

 

எழுத்தா.ளர்கள், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் பிற தொழில்கள் புரிபவர்களை விடவும் உயர்ந்தவர்கள் – அதாவது இவகளின் தொழில்கள் பிற்வற்றையும் விட உயர்ந்தவை – என்பதாய் ஒரு கருத்து நிலவுகிறது. (தோட்டியின் தொழில் தொடங்கி அனைத்துத் தொழில்களுமே உயர்ந்தவைதானே? தோட்டி ஒரு நாள் செயல்படாவிட்டால், ஊரே நாறிப் போகுமே!) இந்தக் கருத்தின் படி நோக்கினால், எந்தத் தொழிலாளியும் மக்களுக்குக் கேடு செய்யாத முறையில் செயல் படுவதே நேர்மை என்பது வெளியாகிறது. எழுத்தாளர்களும் பிற ஊடகத்தினரும் மட்டும் இதிலிருந்து விதிவிலக்குக் கேட்பது முறைதானா?

பல்லாண்டுகளுக்கு முன், ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்த்தது. அப்போது தீங்கு செய்யும் எழுத்துகள் பற்றிய சர்ச்சை கிளம்பியது. கூட்டத்தில் இருந்த ஓர் அன்பர் எழுந்து ஒரு கேள்வி கேட்டார்: “ஆபாச எழுத்துகளுக்கு நீங்கள் விரோதி என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால், மறைமுகமாகவும், சமயங்களில் நேரடியாக்வும் விகாரமான படைப்புகளை வெளியிட்டு வரும் ‘அந்தப் பத்திரிகையில்’ நீங்கள் அடிக்கடி எழுதுகிறீர்களே! இதென்ன நியாயம்? இது உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் மதிப்பைக் குறைக்கிறதே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?”

கூட்டத்தினர் கைதட்டினார்கள்.

“என் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றி. கேள்வி கேட்டவர்க்கு முன்னதாய்ப் பேசிய அன்பர் அந்தப் பத்திரிகையின் அனைத்துப் பக்கங்களிலும் ஆபாசம் என்று சாடினார். என்னுடைய கதை அதில் ஐந்தாறு பக்கங்கள் போல் வரும்போது, அந்தப் பக்கங்களில் அவ்விதழின் வாடிக்கையான விகாரம் தவிர்க்கப்படுகிறது என்பதைக் கவனித்தீர்களா? அதாவது, அந்தப் பக்கங்கள் என் பங்களிப்பால் அதன் வழக்கமான ஆபாசம் இல்லாமல் வெளியாவதை நீங்கள் பாராட்ட வேண்டாமா?”  – இவ்வாறு பதிலளித்ததும் முன்னிலும் அதிக ஓசையுடன் கைதட்டல் ஒலித்தது. (இதில் தற்பெருமையும் ஒலித்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.) இது பற்றி நினைவு கூர்ந்ததற்குக் காரணம் எது பற்றியும் ஆழமாய்ச் சிந்தித்து எதற்கும் மாற்றுக்கோணம் ஒன்று இருக்கும் என்பதை உணராமல்  நாம் முடங்கிய எண்ணப்போக்குடன் இருப்பதைச் சுட்டிக்காட்டத்தான்.  சுட்டிக்கட்டப்பட்ட கோணத்தில் யொசித்திருப்பின், நான் ஆபாசப் பத்திரிகைக்குத் துணை போவதாய் அந்த நேயர் குற்ற்ஞ்சாட்டியிருந்திருக்க மாட்டார்தானே!

 

நான் பெரியவர்க்கான எழுத்தாளராக அறிமுகமாகிய பின் மிகச் சில ஆண்டுகளுக்குள் (ஐந்தே ஆண்டுகளுள்) பெண்ணுரிமை இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, “நீங்கள் விரசம் கலக்காமல் எழுதுகிறீர்கள். காதலைக் கூடக் கண்ணியமாய்க் கையாளுகிறீர்கள். பாராட்டுகள்.  ஆனால் உங்கள் கதைகளுக்குப் படம் வரையும் ஓவியர்களில் சிலர் அதை விரசமாக வரைகிறார்களே! அதை நீஙகள் ஏன் ஆட்சேபிப்பதில்லை? நீங்கள் பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் கூறி அதைத் தடுக்கலாமே! அப்படித்தான் வரைவேன் என்று ஒருவர் சொன்னால் அவர் என் கதைகளுக்குப் படம் போடக் கூடாது என்று நிபந்தனை விதிக்கலாமே!” என்று ஒரு கேள்வியை முன் வைத்தார்.

திகைத்துப் போய்க் கணம் போல் நின்ற பின், “உங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி.  ஆனால் எழுத வந்து ஐந்து ஆண்டுகளே ஆகியுள்ள என்னால் அப்படியெல்லாம் நிபந்தனை விதிக்க முடியாது. ஏன்? என்னைக் காட்டிலும் மூத்த எழுத்தாளரால் கூட அது இயலாது. அப்படியெல்லாம் நிபந்தனை விதித்தால் என் ஒரு கதை கூட வெளிவராது!” என்றேன்.

“சோ? பத்திரிகைகளில் எழுதுவதற்காகக் கொள்கையைத் துறந்து காம்ப்ரமைஸ் செய்துகொள்ளுவீர்கள். அப்படித்தானே?”

“நான் பத்திரிகை முதலாளி அல்லேன். என் கதைகளில் விரசம் இல்லாமல் பார்த்துக்கொள்ள மட்டுமே என்னால் இயலும். நீங்கள் சொல்லுகிறபடி நான் செய்தால், என் ஒரு கதை கூட வெளிவராது.  நான் வித்தியாசமாக் எழுதுபவள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு வரும் வாசகர் கடிதங்களும் அப்ப்டித்தான் சொல்லுகின்றன. இந்நிலையில் நீங்கள் சொல்லுகிறபடி நடந்தால் என் வித்தியாசமான கருத்துகள் மக்களைச் சென்றடையும் வாய்ப்பு இல்லாது போய்விடும். ஏன்? நீங்களே ஒரு பத்திரிகை தொடங்குங்களேன். ஆபாச ஓவியம் இல்லாமல் என் கதைகளைப் போடுங்கள். சன்மானமே வாங்காமல் எழுத்த் தயாராக இருக்கிறேன்.” என்று நான் சொன்னதும் சிலர் சிரிக்க அந்தப் பெண்ணும் சிரித்துவிட்டு மேற்கொண்டு என்னைத் தர்ம சங்கடக் கேள்விகள் கேட்காமல் விட்டு விட்டார்.

    இது ஒரு புறம் இருக்க, எழுத்தால் நல்லதைச் சாதிக்க முடியுமா எனும் கேள்விக்கு வருவோம்.  இதற்குப் பதில் சொல்லும்போதும் சிறிது தற்பெருமை தலைகாட்டத்தான் போகிறது. என்ன செய்ய? தவிர்க்க முடியவில்லை.

 

    அமரர் மணியன் அவர்களின் ‘இதயம் பேசுகிறது’ வார இதழில் எனது சிறுதை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. திருமணம் ஆகிச் சில ஆண்டுகள் கழிந்த பிறகும் தாய்மைப் பேற்றை யடையாத ஒரு பெண் ஏக்கத்தில் வாடுகிறாள். அவள் கணவ்னும்தான். முடிவில் தங்கள் குடும்ப நண்பர்களான மருத்துவத் தம்பதியரிடம் இருவரும் சோதனை செய்து கொள்ளுகிறார்கள். குறைபாடு பெண்ணிடமே என்பது வெளியாகிறது.  ஆனால் அவள் கணவன் மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் அதை மறைத்து இருவருமே சரியாகத்தான் இருப்பதாகவும், சில நேரங்களில் காரணம் ஏதுமின்றித் தாய்மைப் பேறு ஒத்திப்போகும் என்றும் அதனால் போறுமை காக்கும்படியும் மருத்துவர் சொன்னதாய் அவளிடம் கூறி அவளைத் தேற்றுகிறான்.

 

    நாள்கள் விரைகின்றன.  ஆனால் அப்படி நிகழவில்லை. மனமுடைந்து போகும் அந்தப் பெண் விழாக்காளுக்கெல்லாம் போவதைக் கூடத் தவிர்க்கிறாள். கேள்விகளுக்குப் பதில் சொல்லை அவளுக்கு மாளவில்லை.

    ஒரு நாள் அவள் தோழி ஒருத்தி அவள் வீட்டுக்குத் தன் சிறு குழந்தையுடன் வருகிறாள். குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு அவள் கழிவறைக்குச் செல்லுகிறாள். வேற்றுமுகம் பாராமல் அவளிடம் தாவிவரும் சிறுவன் அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் முகத்தை அவள் முகத்தோடு உரசுகிறான்.   தன் மழலையில் ஏதேதோ அவளோடு மிழற்றுகிறான். அவனது அணைப்பு அவளுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அவளும் அவனை அணைத்துக்கொள்ளுகிறாள். அவளது சிலிர்ப்பு அதிகரிக்கிறது. ‘பெற்றால்தான் பிள்ளை என்பதில்லை.  பெறாத பிள்ளையையும் நேசிக்க முடியும்’ எனும் தத்துவத்தை அவள் புரிந்துகொள்ளுகிறாள். உடனே அவளுக்குத் தாங்கள் ஏன் ஓர் அநாதைக் குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தோன்றுகிறது.  தோழி தன் குழந்தையுடன் கிளம்பிப் போனதும், கணவனின் அனுமதியுடன், “உதவும் கரங்கள்” அமைப்புடன் தொலைபேசுகிறாள். அதன் அமைப்பாளர் திரு வித்தியாகர் அவர்களிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள். “அதுக்கென்னம்மா? எங்கிட்ட நிறையவே இருக்குங்க குப்பைத்தொட்டிகள்ளேர்ந்து நான் எடுத்து வந்து வளர்த்துக்கிட்டு இருக்கிற குழ்ந்தைங்க. நாளும் நேரமும் கேட்டுக் குறிச்சுக்கிட்ட பெறகு நீங்க்ளும் உங்க வீட்டுக்காரருமா இங்க வந்து உங்களுக்குப் பிடிக்கிற குழந்தையை செலக்ட் பண்ணி தத்து எடுத்துக்கலாம்…” என்கிறர்ர்.

    அவள் நிம்மதியுடன் கணவனின் வரவுக்குக் காத்திருக்கிறாள்….

    இப்படி ஒரு கதை (சில மாறுதல்கள் இருக்கக் கூடும். நான் ஞாபகத்திலிருந்து எழுதியுள்ளேன்.) வெளிவந்த பின் இரண்டாம் நாள் “உதவும் கரங்கள்” வித்தியாகர் என்னோடு தொலை பேசினார்: “என்னம்மா! நீங்க பாட்டுக்கு  உதவும் கரங்கள்ளேர்ந்து குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு கதையில சொல்லிட்டீங்க்ளா? நேத்துலேர்ந்து ஃபோன் காலஸ் குழந்தை யில்லாதவங்ககிட்டேர்ந்து வந்துக்கிட்டே இருக்குது. தத்துக் குடுக்கிற எண்ணம் இருக்குதான்.  ஆனா இன்னும் ஃபைனலைஸ் ஆவலை. அது

சம்பந்தப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பத்தி கவர்ன்மெண்ட்டோட  பேசிக்கிட்டு இருக்கோம். அதுக்கு இன்னும் கொஞ்ச நாளாகும்னு அவங்களுக்கெல்லாம் பதில் சொன்னேன்.”

    ”ஐம் சாரி, மிஸ்டர் வித்யாகர். என்னால   உங்களுக்கு வீண் தொந்தரவு!” என்று வருந்திய என்னை அவர் இடைமறித்தார்: “நோ, நோ. அது பத்திப் பரவாயில்லீஙக. நான் எதுக்கு ஃபோன் பண்ணீனேன்னா, உங்க கதைக்கு இப்படி ஒரு நல்ல் ரெஸ்பான்ஸ் இருக்குன்றதை உங்களுக்குச் சொன்னா நீங்க சந்தோஷப் படுவீங்களேன்றதுக்காக   மட்டுந்தாங்க பேசறேன்…”

    எனக்கு உண்மையில் பெருமிதமாகத்தான் இருந்ததென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கதையின் விளைவாகக் குறைந்த பட்சம் இரண்டு-மூன்று அநாதைக் குழந்தைகளுக்கேனும் அம்மா-அப்பா கிடைத்திருந்திருக்கக் கூடும்  அல்லவா!

    இன்னொரு சுயத்தம்பட்ட நிகழ்ச்சி. என் தங்கையிடம் அவளுடைய தோழி சொன்னது: “நேத்து நான் என் ஃப்ரண்ட் ஒருத்தி வீட்டுக்குப் போயிருந்தேன் நான் போனப்ப தோட்டத்துப் பக்கத்துலேர்ந்து அவ தன் வீட்டுக்காரர் கிட்ட இப்படிக் கத்திக்கிட்டு இருந்தா” ‘எத்தினி ஜோதிர்லதா கிரிஜாக்கள் வந்து என்னதான் பக்கம் பக்கமா எழுதினாலும் ஆம்பளைங்க திருந்த்ப் போறதில்லே..மத்த நாள்கள்லேத்தான் கண்டுக்கிறதே இல்லைன்னா,

ஒரு நாயித்துக் கெழ்மையில கூடச் சின்னச் சின்ன ஒத்தாசை கூடச் செய்ய மாட்டேன்றீங்க. காப்பி குடிச்ச தம்ப்ளரைத் தொட்டி முத்தத்துல கொணாந்து போட்டா உங்க காலு என்ன குட்டையாயிறுமா? நீங்க உங்க் ஆபீஸ்ல கிழிக்கிறதைத்தானே நானும் எங்க ஆபீஸ்ல் கிழிக்கிறேன்? வீட்டுக்கு வந்ததும் ஹாய்யா உக்காந்துர்றீங்க டிவி. முன்னால ரீமோட்டும் கையுமா!”

    அவள் கணவன்  “திருந்தாதது” பெருமை யளிக்காவிட்டாலும், அந்தப் பெண்மணியை என் பெண்ணாதரவுக் கதைகள் பாதித்திருந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தரவே செய்தது.

    இவற்றையெல்லாம் பிதற்றியதற்குக் காரணம் எழுத்தால் எதையும் சாதிக்க முடியாது என்று சில எழுத்தாளர்கள் சொன்னதும், சொல்லிக்கொண்டிருப்பதும் எவ்வளவு பெரிய பொய் என்பதைச் சொல்லத்தான்!

………

Series Navigationகவிதையாக ஓர் உண்மைச் சம்பவம் நாகத்தினும் கொடியதுகறுப்புப் பூனை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

12 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    சிறுகதை போன்ற இலக்கிய எழுத்துப் படைப்புகள் மூலம் சமூகத்தில் ஓர் புத்துணர்ச்சி உண்டாக்க முடியும், புத்துலகை உருவாக்க முடியும், ஏன் நாட்டில் புரட்சியே எழுப்ப முடியும்.

    ஆத்திச்சூடியும், நாலடியாரும், பகவத் கீதையும் கற்பிக்க முடியாத உன்னத கருத்துக்களை ஒரு சிறுகதையில் சொல்லி விடலாம்.

    ஏசுநாதரின் பைபிள் கருத்துக்கள் பல சிறுகதைகள்தான். நமது பஞ்ச தந்திரக் கதைகள் பகவத் கீதையை விட வலுவானவை.

    பாராட்டுகள் கிரிஜா.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      புனைப்பெயரில் says:

      இங்கும் மதப் பிரச்சாரமா? உலகத்திலேயே எல்லா தத்துவங்களிலும், உயர்ந்தது ஏசு நாதரின் சிறுகதைகள் என்று ஒத்துக் கொண்டு, அவருக்கு சிறுகதை சக்ரவர்த்தி என்ற பட்டம் கொடுத்து விடலாம். சந்தோஷம் தானே? ஏதாவது ஒப்புமையுடன் பஞ்ச தந்திர கதைகளியும் ஏசு நாதர் ( அது என்ன பெயர், ஜீஸஸ் கிரைஸ்ட் தானே அவர் பெயர், அதற்கும் மொழி பெயர்ப்பா? அப்ப பில் கிளிண்டன் என்ற ஆங்கில பெயரை எப்படி மொழி பெயர்ப்பீர்கள்? ) கதைகள் எப்படி உயர்ந்தவை என்று எழுதுங்களேன்… ஓரிருவராவது மதம் மாறச் சான்ஸ் இருக்குமே…

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        ஜய பாரதன் சேர்க்க மறந்ததை நான் இணைக்கிறேன். புனைப்பெயர் போன்ற கிருத்துவமத எதிர்ப்பாளர்கள் இதையும் படிக்கட்டும்.

        இயேசு சொன்ன குட்டிக்கதைகள் (parables) மட்டுமல்லாமல், இயேசு மற்றும் அவர் சீடர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் குட்டிக்கதைகள், அல்லது நீள்கதைகளாக விவிலியத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. (எனக்கு ஆங்கில விவிலியம் மட்டுமே அதிலும் கூட புதிய ஏற்பாடு மட்டும்தான் என்பதால் ஆங்கில விவிலியத்தில் எழுதப்பட்ட என்று வாசிக்கவும்) இவையும் கூட கருத்துக்களை வாசகர் மனங்கள் ஆழப்பதியுமாறு எழதப்பட்டிருக்கின்றன.

        கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும் எனற பழமொழி இங்கு பொருந்தும்.

        ஜோதிர்லதாவின் கதைகளைப்படித்து அதன் கருத்துக்களினால் கவரப்பட்டு தம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டோர் அதே கருத்துக்களை இன்னொருவர் (எழுத்து வன்மை யில்லாதவர்) செய்திருந்தாலோ, அல்லது அக்கருத்தை சிறுகதைகளா எடுப்பாகச் சொல்லாமல் ஏதோ நீண்ட கொட்டாவியை வரவழைக்கும் வண்ணம் உரைநடையில் எழுதியிருந்தாலோ, ஜோதிர்லதா சொல்லும் எழுத்துக்களுக்குத் தாக்கமுண்டு என்பது போலியாகும் என்பதே ஜயபாரதனின் கருத்து.

        இங்கு மதமன்று சொல்லப்பட்டது. சொல்லிய வண்ணமே.

        இது நெகட்டிவாகவும் ஆகும் (இதைப்புனைப்பெயரிலோ கிருட்டிணக்குமாரோ மறந்துவிட்டார்கள். நானே சொல்லிக்கொடுக்கவேண்டியதாகவிருக்கிறது)

        அதாவது நச்சுக்கருத்துக்களையும் திறமையாகச் சொல்லியோ பேசியோ மக்களின் மனதைக்கவர முடியும். ஹிட்லரின் மேடை உரைகளில் கவரப்பட்டு ஜர்மானியர்கள் யூத அழிப்புக்குத் துணைபோனார்கள் எனப்து வரலாறு.

        செகப்பிரியரின் ஜீலியஸ் சீசர் நாடகத்தில் சீசரின் சடலத்தை வைத்து சீசரை இகழ்ந்து பேசியவுடன் மக்கள் சீசர் ஒழிக எனக்கோஷமிடுவார்கள். அதன்பின்னர் அந்தோணி எழுந்து எப்படிப்பேசவேண்டுமோ அப்படி பேசியவுடன் மக்கள் கொதித்தெழுந்து சீசர் ஒழிக என்று மட்டும் சொல்லாமல் புரூட்டஸையும் அவனாட்களையும் கொல்வோம் என விரட்டிச்செலவார்.

        செகப்பிரியர் சொல்வது நெகட்டிவோ பாசிட்டிவோ, சொல்லும் முறையில் மக்களைக்கவர முடியும்.

  2. Avatar
    ஷாலி says:

     திரு.ஜெயபாரதன் அவர்களே! ஏன் ஸார்! இப்படி எழுதி க்ருஸ்ணகுமார் வாயில் விழுகிறீர்கள்? // ஆத்திச் சூடி,நாலடியார்,பகவத் கீதை கற்பிக்க முடியாத உன்னத கருத்துக்களை ஒரு சிறு கதையில் சொல்லி விடலாம்.// என்று எழுதி விட்டு //இயேசு நாதரின் பைபிள் கருத்துக்கள் பல சிறுகதைகள் தான்.நமது பஞ்ச தந்திரக் கதைகள் பகவத் கீதையை விட வலுவானவை.// என்று முடித்துள்ளீர்கள். சும்மா வெறும் வாயையே மெல்லக்கூடியவர்களுக்கு அவல் மூட்டையை அள்ளிக்கொட்டிடிங்களே! இனி அவாள் எல்லாம் அர்ச்சனையை இப்படி ஆரம்பித்து விடுவார்கள் , ‘”அப்புறம்…… தோஷாரோபணம் என்றில்லை. பின்னும் சுவிசேஷப் பணியாளர்களுக்கு மட்டிலும் தாங்கள் ப்ரத்யேகமாக நன்றி தெரிவிக்கும் பாங்கையும் அவதானித்தேன். ம்……சுவிசேஷிகளின கால் சுவிசேஷிகளறியுமே.
    வ்யாசத்தில் தோஷம் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதைத் துலக்க ப்ரயாசிக்கலாமே….”..என்ற தேவ நாகரி மணிப்பிரவாள நடையில் க்ருஷ்ண குமார விஜயம் ஆரம்பித்துவிடும்.அதைத்தொடர்ந்து அசல் தேச பக்தர்களின் ஆலாபனை காதை பிளக்கும்.பிறகு சேர,சோழ.பாண்டியனார்களின் படையேடுப்பு கடை விரிக்கும்.ஒரு எம்ஜியார் பாட்டு-“உலகத்தில் திருடர்கள் சரி பாதி, ஊமையர்,குருடர்கள் அதில் மீதி. கலகத்தில் பிறப்பது தான் நீதி! மனம் கலங்காதே! மதி மயங்காதே!! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!…….தன்னாலே வெளி வரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!…..

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஷாலி அவர்களே, இப்படி வேடிக்கையாய், சிரிப்பை எழுப்பி கிருஷ்ண குமாரைச் சீண்டி விட்டு திருவிளையாடல் புரியலாமா ?

    சி. ஜெயபாரதன்

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ம்….அன்பர் ஷாலி ஒன் மேன் ஆர்மியின் பகுதி என்று தெரிந்திருக்காது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.

    காட்டெருமைக்குத் தேள் கொட்டினால் நாட்டெருமைக்கு நெறி ஏறாது என்பது விதி

    அன்பர் ஷாலியின் ப்ரகடன உத்ஸவம், நாள், நக்ஷத்ரம், திகதி எல்லாம் தெரிந்ததே.

    ம்…..ஸ்ரீமான் ஜெயபாரதனுக்கு ஹிந்து மதத்தைக் குறை சொல்லாது படுத்தால் தூக்கம் வராது போலும்? பௌத்தத்தைக் கரைத்து குடித்து இம்சை செய்தீர்கள். இப்போது பகவத் கீதையைக் கரைத்து குடித்து விட்டீர்கள் என்று தெரிகிறது.

    என்ன ஜெயபாரதன் comment crisp ஆக கொடுக்கணும் என்று தாங்கள் சொன்ன அறிவுரைப்படி உள்ளதா இந்த உத்தரம்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      ஜய பாரதனின் கருத்தைச் சரியாக உள்வாங்கவில்லை கிருட்டிணக்குமார்.

      ஜயப்பாரதனின் கருத்து நற்கருத்து. குறிப்பாக ஜோதிர்லதா கிரிஜா சொல்வதை இவர் அழுத்திச் சொல்கிறார். அஃதென்ன>

      பகவத் கீதை ஒரு இலக்கியமன்று. அஃதொரு நீண்ட உரை. வாசகங்கள். அவை கூட இலக்கிய சுவைபட கூறப்பட‌வில்லை. இலக்கியமாக்குதல் கீதையை எழுதியோரின் எண்ணமில்லையாதலால், கீதைக்கு இவ்வருணனை பொருத்தமாகும்.

      அதே சமயம் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இதே அடிப்படை நோக்கமே (இலக்கியாக்குதலில்லாமை) உண்டென்றாலும், அவை இலக்கியமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன தமிழ் இன்பம் ப்ருகும் ஆர்வலரால். வைணவர்கள் அப்படிச்செய்தால் பாவம். அப்பாசுர்ங்கள் ஆராதனைகளில் ஓதப்படுபவை.

      இப்படிப்பட்ட கீதையை ஒருவரிடம் அப்படியே எடுத்துச்சொல்லும்போது அவர் ஒரு முதிர்ந்த சிந்தனையாளர் அல்லது பக்திமான் என்றால் மட்டுமே கேட்பார். மற்றபடி, எனக்கு அவ்வளவு வயதாகவில்லை என நக்கலாகச் சொல்லி விலகிவிடுவார். எனவே தான் பகவத் கீதைக்கருத்துக்களை கதை வடிவங்களாகச் சொல்வர் மேடைகளில் – திருச்சி கலியாணராமனைக்கேட்கவும்.

      ஆக, ஜயபாரதன் சொவது யாதெனில், ஒரு பெருங்கருத்தை ஒரு நறுக்கிய சிறுகதை வடிவில் சொல்லும் போது அதன் தாககம் அளப்பரியது என்பதுதான்.

      அதற்கு இயேசுவின் பேரபில்ஸ் நல்ல எடுத்துக்காட்டுக்களென்கிறார்.

      அவற்றைப்படித்தொர் சரியென்பர். இயேசு என்ற பேரைக்கேட்டாலே கெட்ட கோபம் கொள்வோர் ஏற்கார்.கிருட்டிணக்குமாரைப்பற்றித்தான் தெரியுமே !

  5. Avatar
    பக்கிரிசாமி.N says:

    நஞ்சு கலக்காமல் எப்படி கமெண்ட்ஸ் எழுதுவது என்று நூல் எழுதினால் அநேகருக்கு உபயோகப்படும் என்று நினைக்கிறேன். எப்படியாவது நஞ்சு கலந்துவிடுவார்கள். உயர்படிப்புக்கும், நல்ல மனதுக்கும் சம்பந்தமில்லை என்று புரிகிறது.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      உயர் மனத்தையும் நற்கல்வியையும் காட்டும் ஒரு அடையாளம் அவற்றைக் கொண்டோர் நச்சுக்கருத்துக்களை அடையாளம் கண்டு பிறருக்குச் சொல்வதே.

      –எப்படி ஒரு காந்தீயவாதி திலக்கையும் தன் நாயகனாகக் கொண்டார்?

      –திலக்கின் கொள்கையும் காந்தியின் கொள்கையும் ரொம்ப வேறுபட்டதே!

      –திலக் கலப்பு மணத்தை பிராமணக் குருதி நஞ்சாகிவிடுமென தன் சாதி உயர்ந்தது என்ற் நோக்கத்தை தக்க வைக்கப் போராடினார்.

      –காந்தியோ, கலவரங்களில் விதவைகளாக்கப்பட்டவர்களை மணம் செய்து கொள்ளவேண்டுமென்றார்.

      –தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்றார். தாழ்த்தப்பட்டோருக்கு ஹ‌ரிசனங்கள் என்ற நாமத்தை வைத்தாலாவது அவர்களை உயர்ஜாதி இந்துக்கள் ஏற்றுக்கொள்ள் மாட்டார்களா என்று நினைத்தார். இந்து இசுலாமியர் ஒற்றுமையாக வேண்டுமென்ற கொள்கைக்காக கொலை செய்யப்பட்டார்.

      –திலக் அவ்வொற்றுமையை நினைக்கவில்லை. விநாயகர் ஊர்வலத்தை உருவாக்கினார். இந்துக்களை ஒன்று சேர்த்து மஹா சக்தியாக வேண்டுமென வாழ்ந்தார்.

      –எப்படி சீனிவாசன் ஒருபுறம் காந்தீயவாதி ; இன்னொரு புறம் திலக்வாதியாக இருக்க முடியும்?

      திரு பக்கிரிச்சாமி சார் கொஞ்சம் எங்களுக்குச் சொல்லுங்களேன்..

  6. Avatar
    Mahakavi says:

    I think there is no need to either extol or denigrate Hinduism vis-e-vis other religions. There are good people (lots and lots) in every religion. Likewise there are certain fringe elements in every religion who are prone to aggression and violence. I have one example to cite. There has recently been an uprising against the staunchly brahminical vaishnavites who ignore non-brahmin vaishnavites despite the original declaration of Ramanuja that all are equal. He converted several nonbrahmins to vaishnavism on that basis. But now there is some tension within the vaishnavite community and a group of nonbrahmin vaishnavites are restless about this discrimination.
    MaNipravALam centered writing irritates the nonbrahmin vaishnavites. Equality is only in writing.
    “Oorukku upadEsam unakkilaiyaDi kaNNE”. Is it true?

    http://srivaishnavasri.files.wordpress.com/2013/09/panchajanyam-171-august-2013.pdf

    Read page 8 through 12 in that magazine (Sep ’13 issue)

  7. Avatar
    IIM Ganapathi Raman says:

    எழுத்து வகைப்படும். வாசகர்களும் வகைப்படுவார்கள்.

    எழுத்தாளர்களின் படைப்புக்களை படித்துவிட்டு தாக்குண்டோர் உண்டு என்பது உண்மைதான். அப்படி இல்லாதோரும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    மாக்சிம் கார்க்கியையோ டிக்கன்ஸையோ நான் படிக்கும்போது அஃது இலக்கியம்; நான் இலக்கியத்தை நுகர்கிறேன் என்று மட்டுமே எனக்குத் தோன்றும் உள்ளாகவே.

    இரண்டாவதாக, ஒரு படைப்பைப் படித்தவுடன் எனக்குள் ஒரு பெரிய தாககம் ஏற்பட்டால், என் சிந்தனை எப்படி போகும் தெரியுமா? ஒரு பொருளை மக்களிடம் உரக்கச் சொல்லி விற்பவனை பற்றி நாம் நினைபபதுதான் அப்பொருளில் ஏதோ ஒரு தவறு; அதை மறைத்து விற்க‌ துடிக்கிறான் இவன். ஜோதிர்லாதா கிரிஜாவுக்கு உகந்த (மன்னிக்கவும்) உவமையைச்சொன்னால், வரதட்சணை வேண்டாம் எனக்கு பெண் மட்டும் போதும் என்றொருவன் கேட்டால், அவனை இவனிடன் ஏதோ ஒரு குறையிருக்கிறது எனவே இப்பெண்ணைக்கவர முயற்சிக்கிறான் என்று இன்றைய உலகம் நோக்கும். ஜோதிர்லதா கிரிஜா அவர்களே! வரதட்சணை எவ்வளவு அதிகம் கேட்கிறானோ அந்தப்பையனுக்குத்தான் மதிப்பு தெரியுமா? We got it. If literature ‘teaches’, people like our writer thinks it is a great literature. Really Madam?

    Literature should not teach overtly or covertly. எப்படி கெட்ட இலக்கியம் என்பதை ஆபாச இலக்கியத்தில் தேடுகிறாரோ, அதே போல, இலக்கிய வாதிகள் (படைப்பாளிகளல்ல இவர்கள். இவர்கள் வேறு), இப்படி பிறரைத்தாக்கும் அல்லது பாடம் சொல்லித்தரும் இலக்கியத்தையும் ‘கெட்ட ‘ இலக்கியம் என்பார்கள்.

    வாசகர்களில் என்னைப்போலில்லாத‌வர்களே. குறிப்பாக இளவயதினர். அவர்களை இலகுவாக இலக்கிய கரத்தாக்கள் தூக்கிக்கொண்டு செல்வார்கள் ஜோதிர்லதா கிரிஜாவின் கதைகள் ‘அவர் தங்கை பார்த்த அல்லது கேட்ட தன் புருஷனை வைதுகொண்டிருந்த பெண்ணைத் தூக்கிக் கொண்டு போனதைப்போல. Alas! our writer took that nagging woman as a victim of her stories ! A compliment, I mean ! :-p

    அவர்களைத்தான் ஜோதிர்லதா எடுத்துக்கொண்டு பேசுகிறார் இந்த எபிசோடில்.

    இலக்கியத்தின் எல்லைகள் குறுகியவை. படிப்போரின் எண்ணிக்கையும் நாட் அக்ராஸ் ஆல் செக்ஷன்ஸ் ஆஃப் சொசைட்டி. சிறந்த இலக்கியம் என்பது படிப்போரை, குலசேகரர் ஆழ்வார் ராம கதை கேட்ட மாதிரி, செய்யவிடாது. செய்தால் அஃது உயர்ந்த இலக்கியமன்று. A good writer does not rite ‘consciously’!

    ஆனால், “பொதுவாக” என்று மட்டும் எடுத்தால், ஜோதிர்லதா கிரிஜாவின் முடிவை ஏற்றுக்கொள்ளலாம். இலக்கியம் பாதிக்கிறது எல்லோரையும் .except the discriminating and discerning readers.

    But when it comes to discriminating readers, literature – ya…literature – remains literature…ya literature only i.e. to purvey pure pleasure to readers

    .(குலசேகராழ்வார் திவ்ய சரிதம்: …இவர் ஒரு மன்னன். வைணவ பக்தியின் மிகுதியால் தன் அரண்மனைக்கு ராம கதை கதா கலாட்சேபர்கர்களை அழைத்துக்கேட்பார். ஒரு சமயம். அக்கதையில் சீதையை இராவணன் தூக்கிச்சென்றான் என்று கேட்டவுடன், அஃது ஒரு புராணக்கதை – அல்லது நினைப்புக்கெட்டா நெடுங்காலத்துக்கு முன்பே – நடந்த செயல் என்ற உணர்வைப்புறந்தள்ளி, மற்ற உணர்ச்சிவசப்பட்டு – “எடு வாளை! சேனையோ புறப்படு இலங்கைக்கு, இராவணவதம் செய்து பிராட்டியை மீட்போம்!” என்று புறப்பட்டுவிட்டார்.

  8. Avatar
    admin says:

    பின்னூட்டம் இடுபவர்க்கு :
    1. தயவு செய்து ஆங்கிலத்தில் எழுதுவத்தைத் தவிர்க்கவும்.
    2. படைப்பிற்குத் தொடர்புள்ள வகையில் மட்டுமே பின்னுட்டங்கள் அமைய வேண்டும்.
    3. பிறரை இழிவு செய்யும் முறையில் தயவு செய்து எழுத வேண்டாம்.
    4. திண்ணை படைப்பாளிகளை விமர்சிக்கலாம், ஆனால் நோக்கங்கள் கற்பிக்கவோ, தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவதோ வேண்டாம்.
    ஆசிரியர் குழு, திண்ணை

Leave a Reply to பக்கிரிசாமி.N Cancel reply

Your email address will not be published. Required fields are marked *