நீங்காத நினைவுகள் – 42

This entry is part 7 of 19 in the series 13 ஏப்ரல் 2014

முனைப்பான விஷயங்களைப் பற்றியே எழுதிவரும் கட்டுரைகளுக்கிடையே, நகைச்சுவைக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தால் என்ன என்று தோன்றியதில், இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது. (முன்பே ஒரு முறை பத்திரிகைகளில் வந்த ஜோக்குகள் என்கிற அறிவிப்புடன் சில ஜோக்குகள் ஒரு கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தன.) ஒன்று சொன்னால் நம்புவீர்களோ என்னமோ, தெரியவில்லை.  கதைகள் படிப்பதை நிறுத்திப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன. வெகு நாள்களாக ஜோக்குகளைப் படிப்பதுதான் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. தொடர்கதைகளைப் பொறுத்தவரையில், யாருடையதாக இருப்பினும், அது வரும் பத்திரிகை கையில் கிடைத்தால் கதையின் முதல் அத்தியாயத்தைப் படித்துவிடுவேன். அடுத்து அதன் இடையே ஓர் அத்தியாயத்தைப் படிப்பேன். முடிவைத் தெரிந்துகொள்ள அதன் கடைசிப் பகுதியையும் படிப்பேன். சக எழுத்தாளர்கள் பற்றி அறியாமல் இருக்கக்கூடாது என்கிற எண்ணத்தில்தான் அவற்றைப் படிப்பது வழக்கம். இப்போதெல்லாம் அதற்கும் முடிவதில்லை. எனினும் ஜோக்குகளைப் படிப்பதை நிறுத்தவில்லை.  இவ்வாறு சின்னஞ்சிறு வயதிலிருந்து இன்று வரையில் படித்துள்ள பல ஜோக்குகளில் சில இன்றும் மனத்தில் நிற்கின்றன. அவற்றை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியதில், இக்கட்டுரை எழுதப்படுகிறது. இவற்றை எழுதியவர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. (அவர்களுக்கெல்லாம் மிக்க நன்றி.) சில   உண்மை நிகழ்வுகளும்    இவற்றில்     அடக்கம்.

 

1    குடியிருப்பவர்:   என்ன, சார்? உங்க வீட்டிலே ஒரே                      பொந்துமயமா யிருக்கு! எலியும் பெருச்சாளியும் டான்ஸ் ஆடுதுங்க!

வீட்டுக்காரர்:     பின்னே நீங்க குடுக்கிற முப்பது ரூபாய்            வாடகைக்கு லலிதா-பத்மினி வந்து ஆடுவாங்களாக்கும்!

(லலிதா-பத்மினி-ராகினி சகோதரிகள் தமிழ்த் திறைத்துறையில் அறிமுகமான போது வெளிவந்த ஜோக்கு இது.)

2        தெருவில் ஒருவர் வாழைப்பழம் விற்றுக்கொண்டு கூவியவண்ணம் போகிறார். திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருக்கும் ஒருவர் அவரை அழைத்து, “இந்தாப்பா! வாழப்பயம், வாழப்பயம்னு ஏன் கூவுறே? சும்மா தைரியமா வாழுப்பா!” என்பார்.

3        ஒரு திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும்  டீ.ஏ. மதுரமும் ஏதோ பந்தயம் போடுவார்கள். மதுரம் சொல்லுவார்: “இந்தாய்யா! பந்தயத்துல நீ தோத்துப்போனா உன் கையில போட்டுக்கிட்டு இருக்கிற மோதிரத்தைக் கழட்டி எங்கிட்ட குடுத்துடணும்! தெரிஞ்சுதா?” என்பார்.

“நான் ஜெயிச்சுசுட்டா?” என்று என்.எஸ்.கே. கேட்பார்: “நீ ஜெயிச்சா உன் மோதிரத்தை நீயே வச்சுக்கய்யா!” என்பார் மதுரம்!

4        சாட்டை போன்ற பின்னல் ஒரு பெண்ணுக்கு                   இருப்பதைப் பார்த்து வியந்து, “ உன் தலைமுடிக்கு நீ      என்ன எண்ணெய் தடவுறே?” என்று மற்றொரு பெண்      கேட்பாள். “நல்ல தேங்காய் எண்ணெய்தான்,” என்று            அந்தப் பெண் பதில் சொல்லுவாள். “அடிக்கடி தடவுவியா?” என்று அவள் வினவுவாள். “காலையில ஒரு தரம். மத்தியானம் ஒரு தரம்,” என்பாள் அவள். “ராத்திரியும் தடவுவியா?” எனும் கேள்விக்கு, “இல்லே. ராத்திரி சுவர்ல இருக்கிற ஆணியில மாட்டி வெச்சுடுவேன்!” என்பாள் அடர்கூந்தல்காரி.

5        தான் சொல்லுவதோ அல்லது எழுதுவதோ ஒருவர்க்குப் புரியவேண்டும் என்பதுதான் ஒரு பேச்சாளர் அல்லது எழுத்தாளரின் நோக்கமாக இருத்தல் வேண்டும்  என்பதைக் கீழ்க்காணும் சிறிய கதை மூலம் பேராசிரியர்  அமரர் கல்கி அவர்கள் விளக்குகிறார்:

கும்பகோணத்திலிருந்து திருவேங்கடம்   எனும் வைஷ்ணவப் பெரியார் திருச்சியிலிருக்கும் தம் நண்பர் வீட்டுக்கு வருகிறார். அதிகாலையில் நீராடும் வழக்கமுள்ள வைஷ்ணவப் பெரியவரைத் திருச்சி தெப்பக்குளத்துக்கு அழைத்துப் போகும் வேலையைத் திருச்சிக்காரர் தம் வேலையாளிடம்   ஒப்படைக்கிறார். ஏனெனில்   அவருக்கு    உடல்நலக்குறைவால்   நண்பருடன் குளத்துக்குச் செல்ல   இயலாதுள்ளது. வேலைக்கார     இளைஞன் அவரைக் குளத்துக்கு அனுப்பிவிட்டுக் கரையில் காத்திருக்கிறான்.

குளத்துக்குள்   இறங்கும் போது பெரியவர் கால் வழுக்கிக் அதனுள் விழுந்துவிடுகிறார்.  இருள் பிரியாத   அதிகாலை நேரமாதலால் அவரைத் தூக்கிவிட    அருகில் அப்போது யாருமில்லை. ‘மடி’ யான பெரியவரை வேலையாள் தொடமுடியாத நிலையில், “அடேய், பையா! இங்கே வா!” என்று அவர்   அவனை   அழைக்கிறார். அவன் வருகிறான். “என்ன சாமி?” என்று கேட்கிறான்.

“திருக்குடந்தையிலிருந்து வந்துள்ள திருவேங்கடத்தையங்கார் திருக்குளத்தில் திருநீராட   இறங்கும் போது, திருப்பாசி வழுக்கவே, திருவடி தவறித் திருக்குளத்தில் விழுந்துவிட்டாரென்று உன் எசமானரிடம் போய்ச் சொல்லி அவரைக் கூட்டிவா!” என்கிறார்.

“சொல்றேன், சாமி!” என்கிறான்    இளைஞன்.

“என்னடா சொல்லுவாய்? எங்கே? நான் சொன்னதைத் திருப்பிச் சொல்!” என்கிறார் பெரியவர்.

“கும்பகோணத்துப் பாப்பான் குட்டையிலே விழுந்துட்டான்னு சொல்றேன், சாமி!” என்கிறான்  அவன்!

6.    ரொட்டி விற்கும் சிறுமியிடம்   ஒருவர் கேட்கிறார்:                     “ஏன், பாப்பா! இம்புட்டுச் சின்ன வயசுலே ரொட்டி                    விக்கிறியே? வழியில ரொட்டியைத் திங்கணும்னு                   உனக்கு ஆசையா யிருக்காதா?” என்று.

“இருக்கும்தான். அப்பப்ப ஒவ்வொரு ரொட்டியா எடுத்து             நக்கிட்டுக் கூடையிலெ வெச்சிருவேன்!” என்கிறாள்                 சிறுமி.

7      “ஏம்ப்பா, செர்வர்! இப்படி வந்து பாரு. டீயிலெ ஒரு ஈ           மிதக்குது.  வேற டீ எடுத்தா!”                             “இதை ஏன் சார் பெரிசு படுத்துறீங்க? அந்த ஈ    எவ்வளவு       டீயைக் குடிச்சிருக்கப் போகுது!”

8     மராமத்து இலாகாவில்    உண்மையாகவே   நடந்த                ஒன்று     என்று இதனைச் சொல்லுவார்கள்.                            ஒருமுறை              ஓர்    எழுத்தர் தமது                         கோப்பில் கீழ்க்காணும் குறிப்பு               ஒன்றை                எழுதினார்:

“ஏ” என்னும் நகரத்திலிருந்து   “பி” என்னும்                   சிற்றூருக்குப் போகப் பாதை   இல்லை. பாதை                  போட்டால் நன்றாக   இருக்கும்.”

இந்தக் குறிப்பை அவர் தம் மேலதிகாரிக்கு ஒப்புதலுக்காகத் தலைமை எழுத்தர் மூலம்  அனுப்பிவைத்தார். மேலதிகாரி கீழ்க்காணும் பதில் குறிப்பை எழுதினார்:

“பி” ஒரு சிற்றூர்தான்.  சிற்றூர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல.  பெரிய ஊர்களுக்கும் நகரங்களுக்கும் போவதற்குத்தான் பாதை போடலாம். எனவே இதற்கு ஒப்புதல்   அளிப்பதற்கில்லை.

சில மாதங்கள   அவகாசம் எடுத்துக்கொண்டதன் பிறகு, அதே   எழுத்தர் அதே பொருள்தரும் குறிப்பை வேறு விதமாக எழுதினார். “சிற்றூர் “பி” யிலிருந்து பெரிய நகரமான “ஏ” க்குச் செல்லச் சரியான பாதை    இல்லை. பாதை போடுதல் பயணிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பேருதவியாக    இருக்கும்”  – இப்போது அதே மேலதிகாரி இதற்குத் தமது ஒப்புதலை அளித்துக் கையொப்பமிட்டாரரென்று சொல்லுவார்கள்!

8    ஓய்வூதியக்காரர்கள் உயிர்சார்ந்த சான்றிதழை ஆண்டு தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்பது விதி. அவ்வான்டின்     ஏப்ரல் முதல் தேதியில்   அவர்  உயிருடன்    இருந்தார்  என்று சான்றிதழ் கூற வேண்டும்.   ஏதோ சில காரணங்களால்   அதை ஒருவரால் சமர்ப்பிக்க     இயலவில்லை.  மேமாதம்தான் அவரால்   அது சம்பந்தமான சான்றிதழைப் பெற முடிந்தது.  சான்றிதழ்  அளித்த   அதிகாரி அவர் மே மாதம் பதினாறாம் நாளில்  உயிருடன்   இருந்ததற்கான      சான்றிதழை வழங்கினார். ஆனால் அவருக்கு ஓய்வூதியம்  அளிக்கும் அலுவலகத்தின்  எழுத்தர், “ரூல்படி நீர்  ஏப்ரல் முதல்தேதி உயிருடன் இருந்ததாகத்தான் நான்றிதழ் கூறவேன்டும். இதில் மே    பதினாறு என்று போட்டிருக்கிறது. இதை ஏற்க      முடியாது” என்றாராம்!

9    என்னுடைய  அலுவலர் சொன்னது இது: ஒரு முறை               அவர் தம் கீழ் வேலை செய்துவந்த ஓர் எழுத்தரிடம்                      கீழ்க்கண்டவாறு ஆங்கிலத்தில் கூறினாராம்.                       “நீங்கள் விஷயத்தை நன்றாகப் புரிந்து கொன்டு              ட்ராஃப்ட் எழுதுகிறீர்கள்.  ஆனால் ஆங்கிலம் சரியாக               இல்லை. நீங்கள் இம்ப்ரூவ் பண்ண வேண்டும்.”

அதற்கு அவர், “That is all I can able.  I cannot able more”               என்றாராம்!

10    எங்கள் அலுவலகத்தில் C.P.A.O.B. என்று ஒருவரை             அழைப்பார்கள். அவர்   ஒரு முறை விடுப்புக்கான                தமது விண்ணப்பத்தில், “As I am suffering from chest pain             all over the body, kindly grant me casual leave ……” என்று            எழுதினாராம்!

இப்போதைக்கு இவைதான் நினைவுக்கு வந்தன. மற்றவை     பிறகு.

……….

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம் -30ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் !திரை விமர்சனம் – மான் கராத்தேமருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்சீதாயணம் நாடகப் படக்கதை – 28​பொலிவு3 Books Launch in Canada – 6 th April 2014 – Kalamசூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *