நீங்காத நினைவுகள் – 6

This entry is part 10 of 24 in the series 9 ஜூன் 2013

8.6.2013 “ஹிந்து” ஆங்கில நாளிதழில் பிரபல எண்கணித ஜோதிடர் அமரர் நம்புங்கள் நாராயணன் அவர்கள் மறைந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய குடும்பத்தார் அவரது புகைப்படத்துடன் கொடுத்திருந்த விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அவரது வயதுக்குப் பொருந்தாத குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவரது அறிமுகம் கிடைத்த நாளில் நடந்தவை யாவும் நினைவுக்கு வந்தன.
1980 களின் தொடக்கத்தில் ஒரு நாள். நான் பணி புரிந்துகொண்டிருந்த அஞ்சல் துறைத் தலைவரின் அலுவலகத்தில், எனது அறைக்கு அடுத்த அறையில் இருந்த குப்புசாமி எனும் அலுவலர், தமது தொலைபேசியில் என்னை அழைத்து, “பிரபல எண்கணித நிபுணர் திரு நம்புங்கள் நாராயணன் அவர்கள் இப்போது என் அறையில் இருக்கிறார். தொலைபேசியில் உங்களோடு பேச விரும்புகிறார். கொஞ்சம் அவரோடு பேசுங்கள்,” என்றார்.
“பக்கத்து அறைதானே, சார்? இதோ நானே அங்கு வந்து அவரைப் பார்த்துப் பேசுகிறேன். அதுதானே மரியாதை? எவ்வளவு பெரிய மனிதர் அவர்!” என்றேன்.
“இல்லை, இல்லை! முதலில் உங்களோடு அவர் தொலைபேசியில்தான் பேச விரும்புகிறார். முதலில் பேசுங்கள். அதன் பின் அவரைச் சந்திக்கலாம்,” என்ற குப்புசாமி ஒலிவாங்கியை அவர் கையில் கொடுத்துவிட்டார்.
நேரில் நாங்கள் அதற்கு முன்னால் பார்த்துக்கொண்டதோ, சந்தித்துக் கொண்டதோ இல்லை. ஒருவர்க்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டபின் “நான் உங்களைப் பார்க்க வருகிறேனே, சார்? பக்கத்து அறைதானே?” என்றேன்.
அவர் ஒப்புக்கொள்ளவில்லை: “வேண்டாம். நாம் நேரில் சந்திப்பதற்கு முன்னால் நான் உங்களோடு தொலைபேசியில் ஒரு நிமிஷம் பேசவேண்டும். …”
“சரி, சொல்லுங்கள்.”
“ஏதேனும் ஒரு பூவின் அதாவது மலரின் பெயரை நினைத்துக்கொள்ளுங்கள்.”
“சரி,” என்ற நான் மல்லிகைப்பூ என்று மனத்துள் உடனே நினைத்துக்கொண்டேன். ஆனால் அவ்வாறு நினைத்ததன் பின் மறு நொடியே, ‘மல்லிகைப்பூ என்பது அன்றாடம் அடிபடும் சாதாரணப் பெயர். வேறு பூவின் பெயரை நினைப்போம்,’ என்றெண்ணிய நான் தாமரைப் பூ என்று மனத்துள் நினைத்துக்கொண்டேன்.
மறு கணமே, “பூவின் பெயரை நினைத்தாகி விட்டதா?” என்று நம்புங்கள் நாராயாணன் வினவினார்.
“ஆயிற்று.”
“தாமரைப் பூ என்று நினைத்தீர்களா?” என்று அவர் வினவியதும் நான் வியந்து போனேன். ஆனால், அடுத்து அவர் சொன்னதுதான் என்னை வியப்பின் விளிம்புக்கே இட்டுச் சென்றுவிட்டது.
“முதலில் மல்லிகைப் பூ என்று நினைத்துவிட்டுப் பிறகு தாமரைப்பூ என்று மாற்றிக்கொண்டீர்கள்தானே?” – இவ்வாறு அவர் கேட்டதும் தூக்கிவாரித்தான் போட்டது.
இவ்வவு சரியாக ஊகிப்பது எவ்வாறு சாத்தியமாயிற்று என்று கேட்க நினைத்தாலும், அவரிடம் அது பற்றிக் கேட்கவில்லை. அவரது அந்த அமானுஷ்ய சக்தி பற்றியும் extra sensory perception பற்றியும் பத்திரிகைகளில் வந்திருந்த செய்திகளை ஏற்கெனவே படித்திருந்ததுதான் காரணம். எனினும் எனது வியப்பை அவரிடம் தெரிவிக்காதிருக்க முடியவில்லை. ”நீங்கள் இவ்வளவு சரியாக ஊகித்தது ரொம்பவும் ஆச்சரியமான விஷயம், சார்!” என்று மட்டும் சொன்னேன்.
மறு நிமிடமே அவர் எனது அறைக்கு வந்து அமர்ந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு முறை தாம் ஒரு விபத்தில் சிக்கி, உயரத்தில் இருந்து கீழே விழுந்தது, அதன் விளைவாகத் தம் தலையில் அடிபட்டது, அதன் பின்னரே தமது மூளையில் ஏற்பட்ட மாற்றத்தாலோ என்னவோ அத்தகைய அமானுஷ்ய சக்தி தமக்கு ஏற்பட்டது ஆகியவற்றைப் பற்றித் தெரிவித்தார்.
பில் கிளிண்டன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த போது, ஒருவன் அவரைத் தாக்கிக் கொல்ல விருந்தது பற்றிய தகவலை முன்கூட்டியே அவருக்குத் தெரிவித்ததையும், அது உண்மைதான் என்று மெய்ப்பிக்கப்பட்டதன் பிறகு, தமது எச்சரிக்கைக்கு அவர் நன்றி தெரிவித்ததையும், தம்மை அமெரிக்காவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்ததையும், அச்செய்தி அமெரிக்க நாளிதழ்களில் வந்ததையும் கூறினார். அந்நாளிதழ்களின் நறுக்குகளையும் என்னிடம் காட்டினார். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சில நறுக்குகளின் புகைப்பட நகல்களை எனக்கு அனுப்பிவைத்தார். (அண்மையில் வீடு மாறியதில், அவற்றை வைத்த இடம் நினைவுக்கு வராமையால் அவற்றில் அடங்கிய செய்தியின் மொழி பெயர்ப்பு, இதழ்களின் பெயர்கள், தேதிகள் ஆகியவற்றை இங்கே தெரிவிக்க முடியவில்லை.)
பிறர் மனத்துள் புகுந்து பார்த்து அவர்களின் சிந்தனைப் போக்கைச் சரியாக ஊகிப்பதும், வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டியே மனக்கண்ணால் பார்த்தலும் எவ்வாறு சாத்தியமாகிறதோ, தெரியவில்லை!
முதலில் மல்லிகைப்பூ என்று நினைத்துவிட்டுப் பின்னர் அதைத் தாமரைப் பூ என்று மாற்றிக்கொண்டதைக் கண்டுபிடித்த அவரது சக்தி அப்போது எனக்களித்த வியப்பினின்று இப்போதும் நான் விடுபடவில்லை!

jothigirija@live.com

Series Navigationமொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்வெற்றி மனப்பான்மை
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

6 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இது “டெலபாதிக்” [Telepathy] வகைத் தொலை உணர்வு, தொலைத் தொடர்பு என்னும் அபூர்வ ஆத்மீக ஆற்றலைக் காட்டுகிறது.

    நல்லதோர் பகிர்வு கிரிஜா.

    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    //…அவரது அந்த அமானுஷ்ய சக்தி பற்றியும் extra sensory perception பற்றியும் …//

    இவற்றால் பொது சமூகத்திற்கு என்ன நலன் கிடைத்தது?

    இப்படிப்பட்ட அமானுஷ்ய சக்திகள் படைத்தோர் அதைப் பொது நலன்களுக்கல்லவா பயன்படுத்தியிருக்க வேண்டும்?

    அல்லது உலக விஞ்ஞான சமூகத்திடம் தம்மை ஒப்படைத்து தம்மிடம் எப்படி அச்சக்தி வந்தது அதைப் பரவலாக்கி உலகநன்மை புரியவுதிடமுடியுமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கவேண்டும்.

    நம்புங்கள் நாராயணனை என்று பத்திரிக்கைகளில் ஜோதிடக் குறிப்புக்களும் தனி நபர்களிடம் தன்னிடம் இப்படி சக்தி உண்டு என்பவருக்கும் தாஜ்மஹாலை மறைய வைத்து மேஜிக் ஷோ நடாத்தும் சர்க்கார்களும் ஒன்றே. They use it to earn their bread and butter.

    வேடிக்கை மனிதர்கள் இவர்கள்.

    வந்தார்கள்; வாழ்ந்தார்கள்; போனார்கள். Like a clown in a tragedy to offer a brief comic interlude.

    Sorry, this episode sucks !

  3. Avatar
    Dr.G.Johnson says:

    இதை மருத்துவ ரீதியாக விளக்க முடியாது. இதுபோன்று அடுத்தவரின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் அறிவியல் பூர்வமாக இருப்பது அரிதே! இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இறுக்க முடியவில்லை.இது எப்படி அவரால் முடிந்தது என்பது தெரியவில்லை. இவரைப் பற்றி அறிந்த மருத்துவர்கள் இந்த அபார சக்தி பற்றி ஏன் ஆராயாமல் போனார்கள் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு கடவுளின் அருள் உள்ளது என்று எண்ணினார்களோ? இன்றுகூட சில சாமியார்கள் இப்படிதான் குறி சொல்கிறார்களோ? எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் இதுபற்றி விளக்கலாம்…டாக்டர் ஜி.ஜான்சன்.

  4. Avatar
    கவிஞர் இராய செல்லப்பா, நியூஜெர்சி. says:

    ஐ.ஐ.எம்.கணபதிராமன் அவர்களே, தங்களிடமுள்ள சக்திகளை எந்த அளவுக்குப் பொதுநலனுக்குப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கலாமே! எப்போதுமே ‘நம்புங்கள் நாரயணன்’ போன்றோர் தான் பொதுநலனுக்குப் பாடுபட வேண்டுமா? – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  5. Avatar
    IIM Ganapathi Raman says:

    டாகடர் ஜாண்சன் சொன்னார் (நான் எப்போது டாக்டர் ஜாண்சன் என்றாலும் அது சாமுவெல் ஜாண்சனைத்தான் குறிக்கும்):

    “ஒரு மேஜையின் கால் சரியாக இல்லை எனவே அது சரியாக நிற்கவில்லை என்று விமர்சனம் செய்தால் அதைக்கேட்பவர் என்னிடம் ‘ஏன் நீயே செய்திருக்கவேண்டியதுதானே? சரியாக வந்திருக்குமே!’ எனக்கேட்பது குறும்புத்தனமாக குழந்தைத்தனமாகும். ஏனென்றால், மேஜையைச்செய்ய வேண்டியது தச்சனின் வேலை. அது சரியாக வந்திருக்கிறதா என்பது அதை உபயோகிக்கும் என் வேலை”

    என்றார் ஜாண்சன்.

    அவர் குறிப்பிட்ட காரணம், அவர் ஒரு கடுமையான விமர்சகர் இலக்கியம், அரசியல் என்று. ஒரு கவிதையை அவர் குறை சொன்ன போது அக்கவிஞனின் கண்மூடித்தனமான விசிறி இவரிடம், உன்னால் அக்கவிதை போல ஒருவரி எழுத முடியுமா? என்று கேட்டபோது சொன்னார்.

    அதேதான் இங்கும். மன்மோஹன் சிங் சரியான பிரதமராக இல்லை; அல்லது ஜெயலலிதா ஆட்சி சரியில்லையென்றால், என்னிடம், ஏன் நீ போய் இந்திய பிரதமராக இருந்து பார்; உன்னால் தமிழகத்தை ஆண்டுவிட முடியுமா” என்று கேட்பதெல்லாம் அடிப்படை அறிவுக்கோளாறு.

    நம்புங்கள் நாராயணன் ஒரு ஜோசியர். அவர் பத்திரிக்கைகளில் எழுதி பரவலாக அறியப்பட்டவர் மட்டுமன்றி, ஜோதிர்லதா போன்றவர்களையும் அசத்திய்வர்.

    சுருங்கச்சொல்லின், ஒரு பிரபலம்.

    பிரபலங்களைப்பற்றிப்பேசவும், விமர்சிக்கவும்தான் இந்த திண்ணைத்தளம். அப்பிரபலம் தனக்கு வாய்த்த வாய்ப்பைத் தவறவிட்டதென்று சொன்ன‌ ஒரு திண்ணை வாசகரை அல்லது விமர்சகரை ஏன் நீ செய்திருக்கவேண்டியதுதானே என்பதற்கு ஜாண்சனின் பேச்சே பதிலாகும்.

    பிரபலங்களை விமர்சித்தல் பொது மனிதன் ஒருவனுக்கு ஜனநாயகத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை. அஃதை எவரும் பரிக்கலாகாது. திண்ணை ஒரு ஜனநாயக மேடை.

  6. Avatar
    Needhidevan says:

    Jayamohan in his blog also narrates a similar experience with a hermit in thirunelvali Nelliappar temple

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *