நீள்வாட்களின் இரவில் நிமிர்ந்து நின்ற வர்ணவாள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 8 of 8 in the series 7 ஆகஸ்ட் 2022

 

 அழகர்சாமி சக்திவேல்

சில மாதங்களுக்கு முன்னால், நான் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்குச் சென்று இருந்தேன். பெர்லின் நகரின் முக்கியப்பகுதிகளைச் சுற்றிப் பார்க்க, ஜெர்மன் வழிகாட்டிகள் நடத்தும் இலவச நடைப்பயணம் ஒன்றை நான் தேர்ந்தெடுத்து, நடைப்பயணம் தொடங்கும் இடத்திற்கு, அந்தக் கடுங்குளிரில் நான் முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தேன். பல்வேறு நாடுகளில் இருந்து, என்னைப்போல் வந்து இருந்த சுற்றுலாப்பயணிகளின் கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடத் தொடங்க, நடைப்பயணம் ஆரம்பமாகியது. ஆகா.. கிட்டத்தட்ட, நான்கு மணிநேரம் நடந்த அந்த நடைப்பயணத்துக்குள்தான் எத்தனை, எத்தனை ஜெர்மானிய வரலாறுகள் சொல்லப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இருந்த பல்கலைக்கழகங்கள், மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கலைப்பொருட்களை உள்ளடக்கிய பொருட்காட்சிக் கூடங்கள், ஒன்றுபட்டு இருந்த பெர்லின் நகரினை, இரண்டு துண்டுகளாக்கி, சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்காவால், கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று பிரிக்க உதவிய, பெர்லின் சுவர்கள், உலகையே ஆட்டிப்படைத்த, ஹிட்லர் மறைந்த பதுங்குகுழி. நடைப்பயணத்தின் இறுதியில், மாவீரன் நெப்போலியன் முதல், பல்வேறு சாம்ராஜ்யங்கள், பெருமையுடன் நுழைந்த ப்ரான்டன்பர்க் வாசல். அப்பப்பா, எத்தனை எத்தனை போர்ச் சின்னங்கள்.. எத்தனை எத்தனை வீர வரலாறுகள். நான், மெய் சிலிர்த்துப் போனேன்

 

முக்கியமாக, ஹிட்லர் மறைந்த அந்த இடம். என்ன ஓர் ஆச்சரியம்… அங்கே, ஹிட்லருக்கென, எந்த ஒரு நினைவிடமும் இல்லை. மாறாய், ஹிட்லர் இறந்த பதுங்கு குழிக்கு மேல், ஒரு புல் மடிந்த, ஒரு கார் நிறுத்துமிடம்தான் இருந்தது. கொடுங்கோலன் ஹிட்லரின் நினைவை, ஜெர்மனியே மறந்து போக நினைத்து இருக்கலாம் என்பது எனது ஊகம். பிறகு, கொஞ்ச தூரத்தில் இருந்த, இன்னுமொரு சதுக்கத்தைக் கைகாட்டி, அந்த ஜெர்மன் வழிகாட்டி எங்களை நோக்கிப் பேசலானார். அந்தச் சதுக்கம், ஒரு மூன்றாம் பாலின நினைவிடச் சதுக்கம் என்றும், ஓரினச்சேர்க்கை எதிர்ப்புக் கொடுமையால் ஜெர்மனியில் கொல்லப்பட்ட, பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவால் எழுப்பப்பட்ட ஒரு நினைவிடம் அதுவென்றும் பேசிக்கொண்டு போன அந்த வழிகாட்டி, ஒரு கட்டத்தில், போர் வீரன் எர்னஸ்ட் ரோம் குறித்தும் பேசினார். ஹிட்லருக்கு இணையாக வளர்ந்த அந்த ரோம் என்ற போர்வீரன், ஓரினச்சேர்க்கையாளன் என்ற ஒரே காரணத்தால், எப்படி அழிக்கப்பட்டான், எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டான் என்ற, அந்த வழிகாட்டி சொன்ன வரலாற்றைத்தான், இந்தக் கட்டுரை, சற்று விரிவாக அலச நினைக்கிறது

 

நான் மட்டுமல்ல.. எல்லாருக்கும் இந்தக் கேள்வி, அவர்தம் மனதில் எழுந்து இருக்கலாம். ஒரு வேளை, சர்வாதிகாரி ஹிட்லர், தலைமைப் பதவிக்கு வருவதற்கு முன்னரே மறைந்து போய் இருந்தால், ஜெர்மன் என்னவாய் ஆகி இருக்கும்? யார் அந்த ஹிட்லர் இடத்தைப் பிடித்து இருப்பார்? இந்தக் கேள்விக்கான பதில்கள் பல இருந்தாலும், அவற்றில் ஒரு பதில், நமது இந்தக் கட்டுரை அலச நினைக்கும், ஓரினச்சேர்க்கைப் போர் வீரன் எர்னஸ்ட் ரோம் குறித்து, நிச்சயமாகப் பேசி இருக்கும். அந்த அளவிற்கு, ஹிட்லருக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்தவர்களில், எர்னஸ்ட் ரோமும் ஒருவராவார். “நீள்வாட்களின் இரவு” என்ற ஒரு நிகழ்வு மட்டும் நடைபெறாது போய் இருந்தால், ஜெர்மன் வரலாறு மட்டுமல்ல, இரண்டாம் உலகப்போர் வரலாறே, திசை திரும்பிப் போய் இருக்கலாம் என்பதும் ஒரு வாதம்தான்.

 

எல்லா நாடுகளைப் போலவே, ஜெர்மனியும், மன்னராட்சி நாடாகவே, பலகாலம் இருந்து வந்து இருக்கிறது. ஆனால், அண்டை நாடான ரஷ்யாவில், ஜார் மன்னராட்சி முடிவுக்கு வந்து, சோசியலிச மற்றும் கம்யூனிசப் புரட்சியால், மக்களாட்சியாக மலர்ந்தபோது, அந்தச் சோசியலிசம் மற்றும் கம்யூனிசக் கொள்கைகள், ஜெர்மனியையும் தொற்றிக்கொண்டது. இருப்பினும், “உழைப்பவர்களின் உழைப்பு அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு, அது மனிதனின் தேவைகளுக்கு ஏற்பப் பிரித்துக் கொடுக்கப்படும்” என்ற கம்யூனிச சித்தாந்தம் பிடிக்காத ஜெர்மனியின் பலர், ‘உழைப்பவர்களின் உழைப்பு அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு, அது மனிதனின் உழைத்த உழைப்பிற்கு ஏற்பப் பிரித்துக் கொடுக்கப்படும்” என்ற மிதவாத சோசியலிச கொள்கைகளை, ஜெர்மனி ஆட்சிக்குள் கொண்டு வர நினைக்க, ஜெர்மனியில் அங்கங்கே கலவரங்கள் வெடித்தன. ஒரு புறம் இன்னும் மறையாத ராஜ பரிபாலனம் உருவாக்கிய ஜெர்மானிய இராணுவத்தின் கொள்கைகள், வேறோர் புறம், மன்னராட்சியை முறியடித்து, மக்களாட்சியாய் மலர்ந்த வெய்மர் குடியரசு, இன்னொரு புறம் கம்யூனிசம், மற்றொரு புறம் மிதவாத சோசியலிசம் என்று ஜெர்மனி பிளவுபட்டபோது, இவை அனைத்தையும் வெற்றி கொள்ள, ஹிட்லர் சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டான் என்பது, நாம் அறிந்த வரலாறுதான். இந்தக் கட்டுரை, இந்த வரலாற்றைப் பேச, இங்கே நினைக்கவில்லை. மாறாய், மேலே சொன்ன, ஜெர்மானிய இராணுவகொள்கை, கம்யூனிசக்கொள்கை போன்ற கொள்கைகளை எதிர்த்த, சோசியலிசக்கொள்கைகள் மீது சற்றே அதிகம் நாட்டம் கொண்ட, ஒரு ஜெர்மானியத் தலைவன் ஆன எர்னெஸ்ட் ரோம், “எங்கே வளர்ந்து விடுவானோ” என்ற அச்சத்தில், “எர்னஸ்ட் ரோம் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்” என்ற ஒரே விசயத்தையே, அவன் வாழ்நாள் முழுதும் சொல்லிச் சொல்லி, அவனை மரணக்குழிக்குள் தள்ளிய கொடுமையையே, இந்தக் கட்டுரை பேச நினைக்கிறது.

 

‘நீள்வாட்களின் இரவு’ என்ற அந்தக் கொடுமையான நிகழ்வுக்குள் போகுமுன், வீரன் எர்னஸ்ட் ரோம் குறித்து, நாம் இங்கே கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 

ஒரு ஜெர்மன் ரயில்வே அதிகாரியின் மகனாகப் பிறந்த எர்னெஸ்ட் ரோம், தனது இளம் வயதிலேயே, ஜெர்மன் இராணுவத்தில் சேர்ந்து, படிப்படியாக வளர்ந்தவன். ஒன்றாம் உலகப்போரில், ஜெர்மன் தோற்றபோதும், ஜெர்மன் வெற்றிபெற வேண்டும் என்று அயராது உழைத்த ரோம், அவனது அந்த சேவைகளுக்காக பதவி உயர்வு பெற்றான். இருப்பினும், ஒன்றாம் உலகப்போரில்  தோற்றுப்போன ஜெர்மனியை வென்ற பிரான்ஸ் போன்ற நாடுகள், ஜெர்மனியை, அடக்கி ஒடுக்க ஆரம்பித்தன. அந்த அடக்குதலில் முக்கியமான ஒன்றாய், ஜெர்மன் இராணுவத்தின் எண்ணிக்கை ஒரு லட்சம் ஆக சுருக்கப்பட்ட நிகழ்வு, ரோம் போன்ற வீரர்களுக்குப் பிடிக்காமல் போனது. கூடவே, ஜெர்மன் நாட்டில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை,  வறுமை போன்றவை,   ரோம் போன்ற ஜெர்மன் தேசப்பற்று உள்ளோரை சிந்திக்க வைத்தது. இதன் விளைவாய், எர்னஸ்ட் ரோம், தனது இராணுவ சிந்தனையோடு, அரசியல் சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தான். வேலைவாய்ப்பின்றி வீதிக்கு வந்த ஜெர்மன் தொழிலாளர்களைக் கவர, ஒரு புறம் கம்யூனிசம் முயன்றது. இன்னொரு புறம் சோசியலிசம் முயன்றது. ஒற்றைக்குடைக்குக் கீழ், அனைத்தையும் கொண்டு வர நினைக்கும் கம்யூனிச சித்தாந்தம் பிடிக்காத எர்னஸ்ட் ரோம், ஹிட்லர் போன்றோர் சேர்ந்து இருந்த உழைப்பாளர் கட்சியில் சேர்ந்தான்.

 

ஜெர்மன் உழைப்பாளர்களையும், பசி பட்டினியில் வாடிய, இன்ன பிற ஜெர்மன் மக்களையும் ஒன்று திரட்டி, SA (புயல் துருப்புக்கள்) என்ற பழுப்புச் சட்டை ராணுவத்தை, எர்னஸ்ட் ரோம் உருவாக்கினான். இது போன்ற துணை ராணுவப்படைகள் உருவாக்கப்படுவது, ஜெர்மனி வரலாற்றில், காலம் காலமாய் இருந்து வந்த ஒன்றுதான் எனினும், முதலாம் உலகப்போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஜெர்மன் தனியார் ராணுவங்களில், எர்னெஸ்ட் ரோமின் துணை ராணுவப்படையே மிகப்பெரியது. முதலாம் உலகப்போரால், வெறும் ஒரு லட்சத்திற்கு சுருங்கிப்போன ஜெர்மன் இராணுவப்படையின் முன்னால், சுமார் முப்பது இலட்சம் வீரர்களைக் கொண்ட எர்னெஸ்ட் ரோமின் பழுப்புச் சட்டை ராணுவப்படைகள், பிரமாண்டமாய்த் தெரிய ஆரம்பித்தது. ரோமின் ராணுவப் படையைப் போன்று வளர்ந்த இன்னும் ஒரு துணை ராணுவப் படைதான், ஹிட்லரின் முக்கிய நம்பிக்கை வீரனான, ஹிம்லர் என்பவன் தோற்றுவித்த, நாசிக்களின் படையான பாதுகாப்புப்படை ஆகும். ஹிம்லரின் இந்தப் பாதுகாப்புப்படை, அளவில் சிறிதாக இருந்தாலும், ஹிட்லரின் மெய்க்காவல் படை ஆக இருந்ததால், ஹிட்லரின் அளவுகடந்த நம்பிக்கையை, ஹிம்லரின் படை பெற்று இருந்தது. எனினும் ஹிம்லரின் SS என்ற இந்தப் படையும், எர்னெஸ்ட் ரோமின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.  ஹிம்லரின் இந்த மெய்க்காவல்ப் படையே, கிட்டத்தட்ட அறுபது இலட்சம் யூதர்கள் கொல்லப்படுவதற்கும், இன்ன பிற, லட்சோப லட்ச, சோவியத், போலந்து படைவீரர்கள், ஊனமுற்றோர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்த படையாகும். ஹிம்லரின் நாசிப்படையில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர், ஜெர்மன் காவல் படையைச் சேர்ந்தவர்கள். சற்றே நடுத்தரவர்க்க மக்கள். ஆனால், எர்னஸ்ட் ரோமின் படையில் இருந்தவர்கள், பெரும்பாலும் ஏழை மக்கள், கூலித்தொழிலாளர்கள். இத்தோடு, ஹிட்லரின் இன்னொரு நம்பிக்கையான கோரிங் என்ற அதிகாரி, ரகசியப் படை என்ற நாசிப் படை உருவாகக் காரணம் ஆக இருந்தான். ஆக, இந்த நான்கு படைகளுக்குள் ஏற்பட்ட, ஆதிக்க மோதலில் பலியானவனே, எர்னஸ்ட் ரோம் என்ற வீரன் ஆவான். முப்பது லட்சம் வீரர்களுக்குத் தலைமை ஏற்று இருந்த எர்னஸ்ட் ரோமைக் கொல்வது என்பது சாதாரண விஷயம் அல்லவே. பெரும்பான்மையான ஜெர்மன் மக்களின் நற்பெயர் பெற்ற, எர்னெஸ்ட் ரோம் என்ற வீரனைக் கொன்றபின், மக்களிடம் என்ன சொல்வது? அதற்காக, ஹிட்லர் எடுத்தக்கொண்ட ஒரு விசயம்தான், எர்னெஸ்ட் ரோமின் ஓரினச்சேர்க்கை வாழ்க்கை ஆகும்.

 

அந்தக்காலம் என்றல்ல. இந்தக் காலத்திலும் கூட, மனித சமூகம், ஒரு சிறந்த இராணுவ வீரனுக்கு இலக்கணம் வகுக்கையில், முதலில், அவன் மிகை ஆண்மையுடன் இருக்கவேண்டும் என்று ஒரு விதி வகுக்கிறது. இரண்டாவதாய், அவன், போரில் வீர் தீர சாகசங்கள் செய்தவனாக இருக்கவேண்டும்  என்று இன்னொரு விதி வகுக்கிறது. இப்படிப்பட்ட இராணுவ வீர இலக்கணத்தின் முன், ஒரு ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கையாளன் எப்படிப் பார்க்கப்படுகிறான்? ஒரு ஓரினவிரும்பி இராணுவ வீரன், பெண்மைக் குணம் கொண்டவன் ஆகவே பார்க்கப்படுகிறான். அப்படி என்றால், பெண்மையில் வீரம் இல்லையா என்பது ஒரு கேள்வி. இன்னொன்று, ஆண்தன்மைக்கும், ஓரினச்சேர்க்கைக்கும் அவ்வளவு ஒன்றும் சம்பந்தம் இல்லை என்ற ஒரு உண்மையை, சமூகம் ஒத்துக்கொள்ளுவதில்லை என்ற கொடுமை. இந்தக் கொடுமை, எர்னஸ்ட் ரோம் வாழ்ந்த, ஹிட்லர் காலத்திலும் இருந்தது. பலகாலமாகவே ஓரினச்சேர்க்கையை தண்டிக்கும் பாராகிராப் 175 சட்டம், ஜெர்மனியில் இருந்து வந்தது. ஹிட்லர் காலத்திலும், இந்தச் சட்டம், அமலாக்கத்தில் இருந்தது. ஹிட்லர் காலத்து ஜெர்மனியில் இருந்த சோசியலிஸ்ட் கட்சிகளும், அப்போதிருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், பாராகிராப் 175 சட்டத்தைக், கொள்கை அளவில் எதிர்த்த போதும், ஹிட்லரின் நாசிப் படையில், எர்னெஸ்ட் ரோம் போன்ற கணிசமான ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதைக் கண்டுகொண்டு, ஹிட்லரின் நாசிப்படைகளின் வளர்ச்சியைத் தடுக்க, ஓரினச்சேர்க்கை விமர்சனத்தை, தனது கையில் எடுத்துக்கொண்ட போது, அந்த விமர்சனத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட முக்கியமான நபராக, எர்னஸ்ட் ரோம் இருந்தான்.

 

“தான் ஒரு வீரன்” என்று வெளியில் காட்டிக்கொள்ள விரும்பும் ஓரினச்சேர்க்கை ஆண்கள் பொதுவாய் என்ன செய்கிறார்கள் தெரியுமா? தங்கள் இயற்கையான ஆண்மையையும் மீறி, ஒரு மிகைப்படுத்தப்பட்ட செயற்கையான ஆண்மையை, வெளி உலகத்திற்குக் காட்டி, தங்களை அதற்குள் மறைத்துக்கொள்ள முயல்கிறார்கள். எர்னஸ்ட் ரோமும், இதே மிகைப்படுத்தப்பட்ட ஆண்மை பாணியையே, தம் இராணுவ வாழ்க்கையில் பின்பற்றி வாழ்ந்தான். இதன் காரணமாய், அதிக முரட்டுத்தனம் கொண்ட ஒரு மனிதனாய், எர்னெஸ்ட் ரோம், மற்ற இராணுவ அதிகாரிகளால், விமர்சிக்கப்பட்டான். இது, ரோமின் இராணுவ வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்தபோதும், ரோம், ‘தனது இயற்கையான ஓரினச்சேர்க்கை குணத்தை மறைத்து வாழ வேண்டி இருக்கிறதே’ என்று, வேதனைப்படாமல் இல்லை. ரோமின் இந்த வேதனை, அவன் எழுதிய சுயசரிதமான, “ஒரு பெருந்துரோகியின் கதை” என்ற நூலில், கொஞ்சம் மறைமுகமாக வெளிப்பட்டு இருந்தது. மனித ஒழுக்கம் குறித்த, ஜெர்மனின் முதலாளித்துவப் பார்வையை, தனது சுயசரிதையில் சாடும்போது, “நேர்மையற்ற பக்தி, வஞ்சகம், பாசாங்குத்தனம் போன்றவற்றை எதிர்த்துப் போராடும் சமூகம், அதன் போராட்டக் கண்ணோட்டத்தின் ஆரம்பக்கட்டமாய், ஒரு ஆணின், தொட்டில் காலத்தில் இருந்து, அவனுக்குள் வெளிப்படும் எல்லாவித இயற்கை உந்துதல்களையும் ஆராயத் தொடங்கவேண்டும். அததகைய போராட்டம் வெற்றி பெற்றால்தான், சமூக மற்றும் சட்டங்களை மறைத்து இருக்கும், முகமூடிகள் கிழிந்து போகும்” என்று எழுதி இருந்தான். எர்னெஸ்ட் ரோமின் சுயசரிதையைப் படித்துப் பார்த்த கார்ல் குந்தர் கிம்சோத் என்ற பாலியல் ஆராய்ச்சி மருத்துவர், ரோமின் மேற்கூறிய வரிகள் மூலம், ‘ரோம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்’ என்பதை அறிந்து கொண்டார்.

 

டாக்டர் கார்ல் குந்தர் கிம்சோத்தும், ரோமும் ஏற்கனவே நண்பர்கள்தான். எனவே கார்ல் குந்தர் கிம்சொத், தனது நண்பர் ரோமுக்கு எழுதிய கடிதத்தில், “நீங்கள், உங்கள் சுயசரிதையில் எழுதிய அந்த வரிகளின் மூலம், ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான, ஜெர்மன் சட்டமான, பாராகிராப் 175 சட்டத்தை விமர்சித்து இருக்கிறீர்களா?” என்று வினவ, அதற்கு பதில் கடிதம் எழுதிய எர்னெஸ்ட் ரோம், “நீங்கள் என்னை சரியாக புரிந்து வைத்து இருக்கிறீர்கள்” என்று பதில் எழுதினான்.  அதன் பின், இருவரது நட்பும், இன்னும் இறுக ஆரம்பித்தபோது, இருவருக்கும் இடையில், பல கடிதப் பரிமாற்றங்கள் நடந்தது. ரோம், தான் டாக்டர் கார்ல் குந்தர் கிம்சோத்துக்கு எழுதிய ஒரு சில கடிதங்களில், தனது ஓர்பால் ஈர்ப்பு குறித்த உண்மையை, அங்கங்கே மறைபொருளில் கோடிட்டுக் காட்டி இருந்தான். இன்னும் சில கடிதங்களில், தான் ஒரு ஓர்பால் ஈர்ப்பாளர் என்பதையும், பெண்களுடனான உடலுறவு மீது தனக்கு ஒரு வெறுப்பு இருப்பதையும் குறிப்பிட்டு இருந்தான். இருவர் நட்பும், இன்னும் அதிகம் ஆக, பெர்லின் ஓரினச்சேர்க்கை விடுதிகளில், இருவரும் சந்தித்து பல பாலியல் விசயங்களை, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். டாக்டர் கார்ல் குந்தர் கிம்சொத், எர்னெஸ்ட் ரோம் தனக்கு எழுதிய அத்தனை கடிதங்களையும், தனது வக்கீல் நண்பர் ஒருவரின் பாதுகாப்பில் வைத்து இருந்தார். “நாசிப் படையின் தலைவனாக, ஹிட்லருக்குப் பதிலாக, எர்னெஸ்ட் ரோம், தலைமைப் பீடத்துக்கு வரவேண்டும் என்பதும், அப்படி வந்தால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்புச் சட்டமான பாராகிராப் 175 சட்டம் மறைந்துபோகும்” என்பதும் டாக்டர் கார்ல் குந்தர் கிம்சொத்தின் ஆசை. ஆனால், அவரது ஆசை, கடைசி வரை நிறைவேறாமல் போனது.

 

இதற்கிடையில், எர்னெஸ்ட் ரோம், தனது கடின உழைப்பால், புயல் துருப்புக்கள் என்று அழைக்கப்படும், பழுப்புச் சட்டை துணை ராணுவப் படைக்கு தலைவன் ஆனான். அடிதடிகள் மூலம் கலவரங்களை அடக்குதல். கம்யூனிஸ்ட் மற்றும் பிற சோசியலிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் போய், கலவரம் செய்து, கூட்டம் நடத்த விடாமல் பண்ணுதல், கள்ளத்தனமாய் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வாங்கி, தனது துணை இராணுவ வீரர்களுக்கு உபயோகித்தல், நாசிப்படைக் கூட்டங்கள் நடத்த ஆள் சேர்த்தல், இப்படி எல்லா அரசியல் விசயங்களிலும் பேர்போன எர்னெஸ்ட் ரோம், தலைவன் ஆன போது, அது கண்டு கோபம் கண்ட கம்யூனிஸ்ட் மற்றும் பிற சோசியலிஸ்ட் கட்சிகள், ரோமின் ஓரினச்சேர்க்கை வாழ்க்கையைக் கையில் எடுத்துக்கொண்டன. “நாசிகளில் பெரும்பாலோனோர் ஓரினச்சேர்க்கையாளர்கள்” என்று, ஜெர்மன் பத்திரிக்கைகளில், வசை பாட ஆரம்பித்தன. நாளுக்கு நாள் அதிகரித்த அந்த வகை பத்திரிக்கைச் செய்திகளால், பெர்லின் போலிஸ், எர்னெஸ்ட் ரோம் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. எர்னஸ்ட் ரோம் வீட்டில் கைப்பற்றிய கடிதங்கள் மூலம், ரோமினை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தது. டாக்டர் கார்ல் குந்தர் கிம்சொத்தும், தீவிரமாக விசாரிக்கப்பட்டார். பற்பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட எர்னெஸ்ட் ரோம், கடைசி வரை கைது செய்யப்படவில்லை. காரணம், ஒரு மாபெரும் துணை இராணுவத்துக்கு தலைவன் ஆக இருந்த எர்னஸ்ட் ரோமை யாரும், அந்தக் கட்டத்தில் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இருப்பினும், இந்தக் கடிதங்கள் குறித்து, ஜெர்மன் அரசுச் செயலாளர் ஆக இருந்த ஒரு அதிகாரி, சோசியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெல்மத் கிளாட்ஸ் என்பவருக்குத் தகவல் சொல்ல, ஹெல்மத் கிளாட்ஸ், ரோமின் ஓரினச்சேர்க்கை வாழ்க்கையை, விலாவாரியாக பத்திரிக்கைகளில் எழுதித் தள்ளினார். ஆனால், அப்போதும் கூட, அந்த ஹெல்மத் கிளாட்ஸ் என்ற கட்டுரையாளர் மட்டுமே, நாசி வீரர்கள் சிலரால், அடித்து நொறுக்கப்ட்டாரே தவிர, எர்னெஸ்ட் ரோம் மீது எந்தவித குற்றங்களும் பதிவாகவில்லை. பின் ஏன், எர்னெஸ்ட் ரோம் கொலை செய்யப்பட்டான்? இங்கேதான், ஹிட்லரின் சுயநலமும், துரோகமும், பதவிவெறியும் முன்னே நிற்கிறது.

 

ஒன்றாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுப்போனதால், வெறும் ஒரு லட்சத்திற்கு சுருங்கிப்போன ஜெர்மன் ராணுவம், ஜெர்மன் அதிபர் பால் வான் ஹிண்டேன்பர்க் தலைமையின் கீழ் இருந்தது. ஆனால், எர்னெஸ்ட் ரோம் வளர்த்த, ஜெர்மன் துணை ராணுவத்திலோ, சுமார் முப்பது இலட்சம் பேர் இருந்தார்கள். ஒரு கட்டத்தில், எர்னெஸ்ட் ரோம், “ஜெர்மன் அரசாங்க ராணுவம், நான் வளர்த்த துணை இராணுவத்தோடு இணைக்கப்பட வேண்டும்” என்ற தொனியில் பேச, ஹிடலரின் நிலைமை தர்மசங்கடத்துக்கு உள்ளானது. ஏனென்றால், வயதான ஜெர்மன் அதிபர் பால் வான் ஹிண்டேன்பர்க் இறந்தால். அந்த ஜெர்மன் அதிபர் பதவியை, தான் அடைந்து விடவேண்டும் என்பதே ஹிட்லரின் கனவு. படித்தவர்கள் பலர் இருக்கும் ஜெர்மன் அரசாங்க ராணுவம், படிக்காத தொழிலார்கள், ஏழைகள் நிறைந்த எர்னெஸ்ட் ரோமின் துணை இராணுவத்தோடு இணைவதை வெறுத்தார்கள். எனவே, ஹிட்லரிடம் அரசாங்க ராணுவம் ஒரு நிபந்தனை விதித்தது. அதாவது, எர்னெஸ்ட் ரோம் ஒழிக்கப்பட்டால், ஜெர்மன் இராணுவ அரசாங்கம், ஹிட்லருக்கு முழு ஒத்துழைப்பு தரும். இந்த ஒப்பந்தம் ஹிட்லருக்குப் பிடித்துப்போக, எர்னெஸ்ட் ரோமைக் கொலை செய்வதற்கு, ஹிட்லர் சம்மதிக்க வேண்டி இருந்தது.

 

எர்னஸ்ட் ரோமும், ஹிடலரைப் போல கொலைகள் செய்யும் ஒரு பயங்கரவாதிதான். ஜெர்மன் கம்யூனிஸ்ட்டுகள், மற்றும் இதர ஜெர்மன் சோசியலிஸ்ட் கட்சிகளுக்கு, சிம்ம சொப்பனம் ஆக இருந்தவன்தான் ரோம். ஆனாலும், “ஜெர்மனின் நிலப்பிரபுத்துவம் அழிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் ஜெர்மன் வறியவர்களுக்கு பங்கிடப்பட்டு, மக்கள் சமத்துவம் பேணப்பட வேண்டும்” என்ற பொதுவுடமைச் சிந்தனை அதிகம் கொண்டவன் ரோம். ரோம், தனது பொதுவுடைமைச் சிந்தனை குறித்து, ஜெர்மன் மேடைகளில் பேசியபோது, ஜெர்மன் நிலப்பிரபுக்கள் கோபம் கொண்டார்கள். ஏனெனில், ஹிட்லர் வளர்வதற்கு, நிலப்பிரபுக்களின் பொருளாதாரப் பங்களிப்பு, பெரிதும் உதவியாக இருந்து வந்தது. அத்தோடு, ரோமின் பழுப்புச் சட்டை துணை இராணுவத்தில், இருந்தவர்கள் பெரும்பாலோனர் வறியவர்கள். ஆரம்பத்தில், “இவர்கள் வறுமையைப் போக்குவேன்” என்று பேசிய ஹிட்லர், அவர்களது துணை இராணுவ ஆதரவில் தான் வளர்ந்த பிறகு, ரோமின் இராணுவ ஏழை வீரர்களை, ஹிட்லர் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. கொதித்துப்போன ரோம், அந்த ஏழை வீரர்களின் சார்பாகப் பேசியது, ஹிட்லருக்குப் பிடிக்கவில்லை. “படையின் அளவைக் குறை” என்று ரோமுக்கு ஹிட்லர் சொன்ன அறிவுரையையும், ரோம் கண்டு கொள்ளவில்லை. எனவே, ஹிட்லரின் நம்பிக்கை நட்சத்திரமான ரோமைக் கொல்ல, ஹிட்லர் வழி தேட வேண்டியதாயிற்று.

 

ஹிட்லரைச் சுற்றி எப்போதும் அவனது விசுவாசப்படை ஒன்று இருந்தது. SS என்ற இந்த விசுவாசப்படையின் தலைவன் ஆக ஹிம்லர் இருந்தான். கூடவே, ஹிட்லரின் ஆணைகளுக்கு ஏற்ப இயங்கும் ஒரு ரகசிய உளவுப்படை ஒன்றும் இருந்தது. இதன் தலைவனாக கோரிங் இருந்தான். எனினும், இந்த இரண்டு படைகளுமே, எர்னெஸ்ட் ரோமின் கீழ்தான் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த ஒரு காரணத்தால், ஹிம்லரும், கோரிங்கும், ரோமைப் போல  வளரமுடியாமால் இருக்க வேண்டியாதாயிற்று. எனவே, தத்தம் பதவி உயர்வுக்காய், ஹிம்லரும், கோரிங்கும், எர்னெஸ்ட் ரோமைக் கொல்ல வழி தேடினார்கள். கூடவே, ஹிட்லரின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆக இருந்த கோயபல்ஸ் என்பவனும், கூடச் சேர்ந்துகொண்டான். “நாசிப்படை, ஒரு ஆண்—ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் நிறைந்து நிற்கும் கூடாரம்” என்ற கம்யூனிஸ்டுகளின், மற்றும் இதர சோசியலிஸ்ட் கட்சிகளின் வாதத்தை முறியடிக்க. அவர்கள் வாதத்திற்கு ஆணிவேராக இருக்கும் எர்னெஸ்ட் ரோம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது, கோயபல்சின் எதிர்பார்ப்பு. எனவே, கொயபல்சும் ஹிட்லருடன் சேர்ந்து கொண்டான். மேற்சொன்ன இவர்கள் அனைவரும் சேர்ந்து. எர்னெஸ்ட் ரோமுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தனர். “ஹிட்லரை ஒழிக்க, பிரான்சு அரசாங்கம், எர்னெஸ்ட் ரோமிற்கு, 1.2 கோடி பணம் கொடுத்தது” என போலி ஆவணங்களை, ஹிம்லரும், இன்னொரு அதிகாரியும் சேர்ந்து தயார் செய்தனர். கூடவே, எர்னெஸ்ட் ரோம் வளர்த்த, பழுப்புச்சட்டை துணை இராணுவத்தில் இருந்து, எந்தெந்த அதிகாரிகள் எல்லாம் கொல்லப்பட வேண்டும் என்றும் ஒரு பட்டியலும் தயார் செய்தனர். ஹிட்லரின் ஒப்புதலுடன், “நீள்வாட்கள் இரவு” அல்லது “ஹம்மிங் பறவை இயக்கம்” என்ற ஒரு படுகொலைத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

 

எஸ்சென் என்ற இடத்தில், ஒரு கல்யாண விழாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹிட்லர், அங்கிருந்தே, பேட்வெஸ் என்ற இடத்தில் உள்ள, எர்னெஸ்ட் ரோமின் துணை அதிகாரிகள் சிலரைக் கூப்பிட்டு, “எர்னெஸ்ட் ரோமின், பழுப்புச்சட்டை இராணுவத்தின் எல்லா தலைமை அதிகாரிகளும், பேட்வெஸ் இடத்தில், கூடவேண்டும்” என ஆணையிட்டான். காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அந்த அவசர சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள, அதன் முந்திய நாளே, எர்னெஸ்ட் ரோம் மற்றும் அவனது முக்கிய அதிகாரியான எட்மன்ட் ஹெயன்ஸ், மற்றும் இன்னும் நூற்றுக்கணக்கான பேர், பேட்வேஸ் இடத்தில் இருந்த, ஹன்செல்பார் என்ற ஹோட்டலுக்கு வந்து, அங்கே தங்கி இருந்தனர். அந்த இரவு, எர்னெஸ்ட் ரோமுக்கு, அந்த ஹோட்டலிலேயே கழிந்தது. அவன் கூட வந்து இருந்த முக்கிய அதிகாரியான எட்மன்ட் ஹெயன்ஸ், தன் கூடவே கூட்டி வந்து இருந்த ஒரு வாலிபனோடு, ஓரினச்சேர்க்கை செய்து சந்தோசத்தில் திளைத்துக் கொண்டு இருந்தான். அடுத்தநாள் காலை 6 மணிக்கு, ஹிட்லர், ஹிம்லர், கோரிங் மற்றும் அவர்களது பாதுகாப்புப்படை, இவர்கள் அனைவரும்,  ஹன்செல்பார் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். எர்னெஸ்ட் ரோமோ அல்லது ஹோட்டலில் தங்கியிருந்த அவனது சகாக்களோ, நடக்கப் போகும் படுகொலை குறித்து எதுவும் அறியாது, இன்னும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். ஹிம்லரின் பாதுகாப்புப்படை, ஹோட்டலை சுற்றி வளைத்து, துப்பாக்கி குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. ஹிட்லரே நேரில் போய், எர்னெஸ்ட் ரோமினை கைது செய்தான். கூடவே, ரோமின் முக்கிய அதிகாரியான எட்மன்ட் ஹெயன்சும், அவனுக்கு ஓரினச்சேர்க்கை சுகம் தந்த அந்த வாலிபனும், படுக்கையிலேயே கைது செய்யப்பட்டு, ஹோட்டலின் வெளியே கொண்டு வரப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். 

 

சில ரோமின் பழுப்புச்சட்டை அதிகாரிகள், காலையில் தான் பேட்வேஸ் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும், அவர்கள் வந்து இறங்கிய, ரயில் வண்டி நிலையத்திலேயே, கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அத்தனை பேரும், எர்னெஸ்ட் ரோமும், சிறைக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின், எர்னெஸ்ட் ரோமைத் தவிர, அனைத்து பழுப்புச்சட்டை அதிகாரிகளும் படுகொலை செய்யப்பட்டனர். எர்னெஸ்ட் ரோமிடம் மட்டும், ஒரு துப்பாக்கியைக் கொடுத்து, “நீயாகவே, உன்னை சுட்டுக்கொண்டு செத்துப் போ” என சிறை அதிகாரிகள் ஆணையிட்டனர். ஆனால், அந்தக் கட்டளைக்கு செவி சாய்க்காத, எர்னெஸ்ட் ரோம், “வேண்டுமென்றால் ஹிட்லரே நேரில் வந்து என்னைச் சுடட்டும்” எனச் சொன்னான். எர்னெஸ்ட் ரோமுக்கு, ஹிட்லரின் மீது அவ்வளவு நம்பிக்கை. ஏன் என்றால், ஃபுரேர் என்ற ஜெர்மன் அதிபர் ஆக பட்டம் சூட்டிக்கொண்ட ஹிட்லர், ரீச்சர் என்ற, ஜெர்மன் தலைமையின் இரண்டாம் இடத்தை, எர்னஸ்ட் ரோமுக்குக் கொடுத்து இருந்தான். எத்தனையோ நேரங்களில், ஹிட்லர் செத்துப் போகும் அபாயம் வந்தபோதெல்லாம், அங்கே ஆபத்பாந்தவன் ஆக இருந்தவன் எர்னெஸ்ட் ரோம். ஹிட்லரை, “அடோல்ப்” என்று கூப்பிட்ட ஒரே தலைவன், எர்னெஸ்ட் ரோம் மட்டுமே. நாசிக்கட்சியின் எதிரிகளான, கம்யூனிஸ்ட் கட்சியும், இன்ன பிற சோசியலிஸ்ட் கட்சிகளும், “எர்னெஸ்ட் ரோம் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்.. எர்னெஸ்ட் ரோம் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்” என்று மேடைகளில் பேசியபோதெல்லாம், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தவன் ஹிட்லர். எனவேதான், சாவின் விளிம்பில் இருந்த எர்னெஸ்ட் ரோம் அப்படிப் பேசினான். ஆனால், இது எதுவும் பலிக்காது போக, எர்னெஸ்ட் ரோம், ஒரு மணிநேரம் கழித்துக் கொலை செய்யப்பட்டான்.

 

ஆனால் ஜெர்மன் மக்களை எப்படி சமாதானம் செய்வது? கூடவே, எர்னெஸ்ட் ரோமின் கீழ் இருந்த முப்பது லட்சம் வீரர்களிடம், எர்னெஸ்ட் ரோமின் கொலையை, எப்படி நியாயப்படுத்துவது? இவர்கள் அனைவரையும், “ரோமைக் கொன்றது சரிதான்” என நம்ப வைக்க, ஹிட்லர் எடுத்துக்கொண்ட இரண்டு அஸ்திரங்களில் ஒன்று பொய்யானது. “அதாவது ரோம் ஒரு ஜெர்மன் ராஜதுரோகி” என்று ஹிட்லரால் ஜோடிக்கபட்ட செய்தி பொய்யானது. ஆனால், அவனது இன்னொரு அஸ்திரமான “ரோம் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்” என்ற செய்தி உண்மையானது. இந்த இரண்டு அஸ்திரங்களையும், ஹிட்லர், அவனது சகாவான, கொள்கைப் பரப்புச் செயலாளர் கோயபல்ஸிடம் கொடுக்க, கோயபல்ஸ், ஜெர்மன் ஊடகங்களைக் கொண்டு, தனது திறமையான பேச்சாலும், எழுத்தாலும், ஜெர்மன் மக்களை அமைதிப் படுத்தினான். அந்தகோ.. எர்னெஸ்ட் ரோமின் படுகொலைக்கு முந்தைய வருடத்தில்தான், நாசிக்கட்சியின் காங்கிரஸ் மாநாடு நடந்த போது, அந்த மாநாட்டில், எர்னெஸ்ட் ரோம் முக்கியப் பங்காற்றி இருந்தான். அந்த காங்கிரஸ் மாநாடு முழுவதும், “Victory of Faith” என்ற ஆவணப் படமாக் எடுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற, எந்தெந்த ஆவணப் படங்களில் எல்லாம் ரோம் இருந்தானோ, அந்த அனைத்து ஆவணப் படங்களும், ஹிட்லரால் அழிக்கப்பட்டன. இருப்பினும், ஹிட்லர் இறந்த பல வருடங்கள் கழித்து, “Victory of Faith” என்ற அந்த ஆவணப்படத்தின் ஒரு பிரதி, எதேச்சையாய்க் கிடைத்தபோது, அது உலகின் பார்வைக்கு வைக்கப்பட்ட போதுதான், “எர்னெஸ்ட் ரோம், ஹிட்லருக்கு இணையாக, ஏன், ஹிட்லரையும் விட அதிகமாக, மக்கள் ஆதரவோடு வளர்ந்து இருந்தான்” என்பதை, வரலாறு, இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டது.

 

ஹிட்லரை, இன்று உலகம் நன்கு அறிந்து இருக்கிறது. ஆனால், ரோம் குறித்து, உலகம் அவ்வளவு அறிந்து வைத்து இருக்கவில்லை. ஏன் என்றால், “எர்னெஸ்ட் ரோம் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்” என்ற ஒரே காரணமே. எர்னெஸ்ட் ரோம், ஹிட்லரையும் தாண்டி, மேலே, தலைமைப் பதவிக்கு வந்து இருந்தால், இரண்டாம் உலகப்போரே, நடக்காமல் போய் இருந்து இருக்கலாம். ஜெர்மன் நிலப்பிரபுக்கள் அழிந்து, ஏழைகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டு, ஒரு நிறைவான பொதுவுடைமை, எர்னெஸ்ட் ரோம் காலத்திலேயே, ஜெர்மனியில் நிகழ்ந்து இருக்கலாம். ஆனால் எங்கே எர்னெஸ்ட் ரோம் தவறினான்? காரணம் அவனது இயற்கையான ஓரினச்சேர்க்கை உணர்வு. ஒரு ஆண் இன்னொரு ஆணோடு புணர்வு கொள்ளுதல் என்ற ஒரே விஷயத்தால், எர்னெஸ்ட் ரோம், தனது இராணுவ வாழ்க்கையில், எவ்வளவு எல்லாம் வேதனைப்பட்டு இருப்பான், எவ்வளவு அவமானங்களைச் சந்தித்து இருப்பான், அவைகளை மீறி, தனது தலைமைப் பதவிக்காய் எவ்வளவு போராடி இருப்பான் என்பதற்கு, நம்மிடம் அவ்வளவு ஆதாரங்கள் இல்லை. எல்லா பாலியல் உணர்வுகளையும், தனக்குள்ளே மூடி மூடி வைத்துக்கொண்டு இருத்தல் என்பது, எவ்வளவு பெரிய சிரமம்?

 

ஆனாலும், எர்னஸ்ட் ரோமைப் போல, இன்று தலைமைப் பீடத்திலே இருந்து கொண்டு, மன உளைச்சலுடன் வாழும் ஓரினச்சேர்க்கையாளர்கள்,  ஓரினச்சேர்க்கை என்ற ஒரே விசயத்திற்காய், மேலே வரமுடியாமல், கீழ்மட்டப் பதவிகளிலேயே அழிந்து போகும் ஓர்பால் ஈர்ப்பு வாலிபர்கள், தலைமைப் பதவிகளுக்கு வரத் தகுதி இருந்தும், மன உளைச்சலால், தற்கொலை செய்து கொண்டு அழிந்து போகும், எத்தனையோ ஓர்பால் ஈர்ப்பாளர்கள், இவர்கள் அனைவருக்கும், எர்னெஸ்ட் ரோமின் வாழ்க்கை, ஒரு முன்னுதாரணம் என்பது கண்கூடு.

 

ஹிட்லரைப் போலவே எர்னெஸ்ட் ரோமும் ஒரு கொலையாளன்தான். ஆனாலும், ராணுவப் பின்புலத்தில் உள்ள எல்லோருக்கும் உள்ள கொலை உணர்வுதான் எர்னெஸ்ட் ரோமுக்கும் இருந்து இருக்கிறது. ஒன்று நிச்சயம். ஹிட்லரைப் போல, எர்னெஸ்ட் ரோம் ஒரு சர்வாதிகாரி அல்ல. மாறாய், பொதுவுடைமைக் கொள்கை மீது, நிறைய ஆசை உள்ளவன். அதனால்தான், முப்பது இலட்சம் ஜெர்மன் வீரர்கள், அவன் பின்னால் நின்று இருக்கிறார்கள்.

 

ஹிட்லர், ஹிம்லர், கோரிங், கோயபல்ஸ் போன்ற நீள்வாட்கள் நீட்டப்பட்ட அந்த இரவில், நிமிர்ந்து நின்ற வர்ணவாள், நமது கட்டுரை நாயகன் எர்னெஸ்ட் ரோம் ஆவான்.

 

இனியாவது உலகம் மாறுமா? எர்னெஸ்ட் ரோம் போலத் திறமையான, மூன்றாம் பாலினத்தவர், பாகுபாடின்றி போற்றப்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationதிண்ணை சிறுகதைக்கு விருது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *