நூல் கொண்டு ஆடும் பொம்மைகள்

This entry is part 6 of 26 in the series 17 மார்ச் 2013

-வாணிஜெயம்

மேலாளர் அறையிலிருந்து அவன் வெளிப்பட்ட போது அண்ணியிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளைக் காண நேர்ந்தது.பொதுவாக அண்ணி எப்போதும் அழைக்க மாட்டார்.அதுவும் அலுவல் நேரத்தைத் தவிர்த்துவிடுவார்.

தனது கைப்பேசியில் பதிவாகியிருந்த தவறிய அழைப்புகளைப் பார்த்தவாறே அலுவலகத்திற்கு வெளியே வந்தான். அண்ணியின் எண்களை அழுத்திக் காத்திருந்தான்.சில நொடிகளுக்குப் பிறகு மறுமுனையில் அண்ணி….

“இரண்டு மூணு தரம் கூப்பிட்டேனே..வேலையா இருந்தியா?”

“ஆமாண்ணி.என்ன விசயம்?”

“ரெண்டு நாளைக்கு முன்ன சரசம்மா விஷம் குடிச்சுடுச்சு.இன்னமும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கு.பிழைக்குமானு தெரியலை.நீ எதுக்கும் மதியை கூட்டி வந்து காட்டிடு.”

அண்ணியின் குரலில் பதற்றம்,பரிதவைப்பு ஏதும் இல்லை.எதோ பத்திரிகை செய்தியை படித்துவிட்டு தகவல் சொல்வது போல் சொன்னார்.

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஏன்..என்ன ஆச்சு அண்ணி?”

“எனக்கென்ன தெரியும்?எதோ புருசன் பொண்டாட்டி தகராறுனு பேசிக்கிறாங்க.நீ அவனை கண்டிப்பா கூட்டிட்டு வந்துடு.ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்துடுச்சுனா பெத்த பிள்ளையைக் கொண்டு வந்து காட்டலையினு ஊரு உன்னை குத்தம் சொல்லும்.சரி..” அண்ணி தொடர்பைத் துண்டித்து விட்டார்.

அவனுக்குத் தவிப்பாக இருந்தது.என்ன ஏதுவென அறியாமல் சரசம்மாவைப் பற்றிய அதிர்ச்சியுறும் செய்தி துயரத்தைத் தந்தது.எப்படி அண்ணி பட்டுப் படாமல் சரசம்மாவின் தற்கொலை முயற்சியை வெறுமனமே தகவல் சொல்வதுப்போல் சொல்கிறார்?

அவனால் சரசம்மாவை அவ்வாறு நினைக்கமுடியவில்லை. அன்பை அவனுக்காக பிரவாகிக்கும் சரசம்மாவின் கருணை மிகுந்தக் கண்கள் சித்திரம் போல் அவனுள் பதிந்திருந்தது. முக அமைப்பிலும் அழகிலும் நிறத்திலும் ஒரு நிறைவானப் பெண்ணாக சரசம்மா இருந்தார்.நாற்பதை நெருங்கிவிட்ட தோற்றம் என்று சொல்லத் தோன்றாது.

“என்ன தம்பி படிக்கிற பையன் இப்படியா பட்டினி கிடக்கிறது.நேரா நேரத்துக்கு சாப்பிடறது இல்லையா?” காலை பசியாறும் நேரம் கடந்துவிட்டால் குரலில் சற்று அதிகாரத் தொனியைக் கூட்டி கேட்பார்.

“சுடச் சுடத் தேனீர் கலக்கி தரட்டா?” அவன் முகத்தில் கொஞ்சம் சோர்வு கண்டுவிட்டாலும் குரலில் கரிசனம் ததும்பும்.

எப்போதுமே சரசம்மாவிற்கு அப்படியோரு அன்பு அவனிடத்தில்!வார்த்தைகளில் தாய்மையின் கனிவு வழியும்!

அண்ணியின் மூன்றாவது பிரவசம் கொஞ்சம் சிக்கலாகி அறுவைச் சிகிச்சையில் முடிந்தது.அண்ணிக்கு ஒத்தாசையாக வேலைக்கு அமர்த்தப்பட்ட சரசம்மா ஐந்து வருடம் ஆகியும் இன்னமும் அவனின் வீட்டிற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தார்.

சரசம்மாவின் உண்மைப் பெயர் என்னவென்று தெரியாது.சரஸ்வதி என்ற பெண் குழந்தை பெற்றதால் இந்த பெயர் வைக்கப் பட்டது என்பது மட்டும் புரிந்தது. தன்னை விட சரசம்மா வயதில் மூத்தவள் என்பதாலும் சரஸ்வதியின் அம்மா என்ற கரணத்தாலும் சரசம்மா என்று அண்ணி அப்படி அழைக்க பழக்கப்பட்டு விட்டார்.

ஆரம்பக்காலங்களில் மூன்று வயது சரஸ்வதியை தன்னுடன் வேலைக்கு அழைத்து வருவார் சரசம்மா.ஆனால் சரஸ்வதிக்கு முன்னமே சரசம்மாவிற்கு பாலசந்திரிகா,மதிவண்ணன் என்ற இருக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது பின்னொரு நாளில் அவன் அறிய நேர்ந்தது.

சரசம்மாவைப் பற்றி மேலும் பல விடயங்கள் அண்ணியும் அண்ணியை தேடிவரும் அவரது தோழியர்களும் பேசிக்கொண்டது வழியாக அவனுக்குத் தெரிய வந்தது உண்டு.சரசம்மாவிற்கு வயது பதினாறு இருக்கும் போதே திருமணமாகி மணவாழ்கை எட்டாண்டுகளுடன் முடிவடிந்து விட்டதாம்.அதன் பின் சரசம்மா இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்து சரஸ்வதியை பெற்றாராம்.

இவளுக்கு இந்த இரண்டாவது திருமணம் அவசியமா எனும் ரீதியில் அவர்கள் பேசிக்கொள்வது அவனுக்குள் அதிர்ச்சியைத் தந்திருக்கின்றது.ஆண் போல் பெண்ணின் மறுமணம் சமூகத்தினரால் அத்தனை சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் வகையில் தனது சமூகத்தினருக்கு தாராளமான சிந்தனை முதிர்ச்சி ஏற்படவில்லையெனவும் புரிந்தது.ஆயினும் இந்த திருமணம் சரசம்மாவிற்கு தேவை தானா என அவனே தன்னைத் தானே கேட்டுக்கொள்ளும் வாய்ப்பும் வந்தது.

அவன் பரபரப்பான நகரத்தில் பணியில் சேர்ந்த ஆறாவது மாதத்தில் ஒரு விடுமுறைக்கு வீடு திரும்பியிருந்தான்.அன்றைய நண்பகலில் அண்ணி வெளியே சென்றிருந்த போது அவனும் சரசம்மாவும் மாத்திரமே தனித்திருந்தார்கள்.சரசம்மா வேலை முடித்து புறப்படும் போது அவனிடம் தாயங்கி தயங்கி அதைச் சொன்னார்.

“தம்பி உங்களுக்கு தெரிந்த எந்த கடையிலாவது எடுபிடிக்கு வேலையிருந்தால் சொல்லுங்க,என் மகனை அனுப்பறத இருக்கேன்”

“உங்க மகனுக்கா?அவனுக்கு இப்போ என்ன வயசு சரசம்மா?”

“அவனுக்கு வயசு ஒன்பது தான் ஆவுது.பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிட்டேன்.அவனை வீட்டுல வைச்சுருக்கவே முடியலை.அந்த ஆளு நிதமும் அவனைக் கரிச்சுக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்.அடிக்கிறார்.என்னால பொறுக்க முடியலை.அதான் எதாவது சாப்பாட்டு கடையில் அவனை சேர்த்து விட்டுடலாம் என நினைக்கிறேன்”

அவன் அதிர்ச்சியோடு சரசம்மாவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“இதுங்க ரெண்டையும் வைச்சுக்கிட்டு எப்படி தனியா காலம் தள்ளுறது என்ற பயத்திலே இந்த மனுசனை ரெண்டாவதாக கட்டிக்கிட்டேன்.அப்போ என் முன்ன உலகமே இருட்டா இருந்துச்சு,இப்பவும் அந்த மனுசனுக்கு பிறந்த ரெண்டுப் பிள்ளைகளோட வாழ்க்கையும் இருட்டா தான் இருக்கு”சொல்லி முடித்த போது சரசம்மாவின் விழிகளில் நீர் வழிந்தது.

அவனுக்கு அந்த கண்ணீருக்கும் சரசம்மா கேட்டுக்கொண்ட உதவிக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்.மாலையில் நண்பன் வீடு சென்றிருந்தான்.திரும்பும் வழியில் தான் சரசம்மாவின் வீடு இருந்தது.எதோவொரு நெருடலில் சரசம்மாவின் வீட்டின் முன் வந்து நின்றான்.

“வாங்க தம்பி,வாங்க..”வாசலின் முன் நின்றவனை பார்த்துவிட்டு சரசம்மா அவனை அழைத்தாள்.அவன் தயங்கினான்.

“வாங்க தம்பி,அவர் வீட்டுல இல்லை.”

வீட்டினுள் நுழைந்ததும் அவனுக்கு வீட்டின் ஏழ்மை புரிந்தது.குட்டிப் பெண் சரஸ்வதி அவனைப் பார்த்ததும் வெட்கத்துடன் தாயின் பின்னால் ஒளிந்துக்கொண்டாள்.சரசம்மாவின் மூத்த பெண் பாலா எதும் புரியாது விழித்தாள்.குழந்தையும் இல்லாமல் குமரியும் இல்லாமல் இரண்டாங்கெட்டான் வயது அவளுக்கு.

“பாலா அண்ணனுக்கு குடிக்க ஏதாவாது கொண்டுவா” பாலா உள்ளேப் போக எத்தனித்தாள்.

“பரவாயில்லை,எதுவும் வேண்டாம்.உங்க மகன்…எங்கே?”

“இதோ ரூம்புக்குள்ள இருக்கான்,வாங்க …” சரசம்மாள் நுழைந்த அறைக்குள் அவனும் நுழைந்தான்.வெளிறிய முகத்துடன் அறைக்குள் நுழைந்தவர்களை மிரட்சியோடுப் பார்த்தான் மதி.எழ கூட சக்தியற்றவனாகக் காட்சித் தந்தான்.

“ரெண்டு மூணு நாளுக்கு முன்ன அந்த ஆளு இவன் கால்ல வைத்த சூடுல அவனால எழுந்திரிச்சு நடக்க முடியல.நான் செய்த பாவத்தினால் இவன் இப்படி அல்லல் படுகிறான்.நீங்க தான் தம்பி எதாவது வழிக்காட்டணும்”

அவன் மதியின் அருகில் அமர்ந்து அவனது கால்களை கவனித்தான்.பல காயங்களுக்கிடையில் சரசம்மா குறிப்பிட்ட அந்த தீப்புண்ணும் பெரிய அளவில் இருந்தது.தீப்புண் சீல் பிடித்ததுப் போல் தோன்றியதைக் கண்டதும் பதறினான்.

“என்ன சரசம்மா,புண்ணு இப்படி இருக்கு.கவனிக்கம விட்டிருக்கிறீர்கள்?” அவன் சொன்ன அடுத்த நொடியில் மதி,

“அண்ணே என்னை காப்பாத்துங்க,இங்கிருந்து என்னை எங்கையாவது கூட்டி போயிடுங்க.நான் இங்க இருக்க மாட்டேன்ண” ஒரு எட்டில் அவனை இறுகக் கட்டிக் கொண்டு அழுதான். மதியின் தேகம் நெருப்பாய் காய்ந்தது.

அவன் திகைத்தே போனான்.எத்தகைய துன்பத்தை மதி அனுபவித்திருந்தால் இப்படி கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவரிடம் இவ்வாறு உடைந்து அழுதிருப்பான்.அவனின் மனம் கனத்தது.

“சரசம்மா அவன் காயத்தை முதலில் கவனிங்க,நான் என்னால் முடிஞ்சுதை செய்கிறேன்.” அதற்கு மேல் அங்கு இருக்க மனமில்லாதவனாய் வெளியேறினான்.

அவனுடன் வேலைப் பார்த்த முருகன் ஆசிரமத்தில் வளர்ந்தவன்.அவனிடம் உதவிப் பெற்று அண்ணன் அண்ணியின் முக சுளிப்பிற்கு ஆளாகி எப்படியோ அவன் பணிப்புரிந்த நகரத்திலேயே அமையப் பெற்றிருந்த ஆசரமத்தில் மதியை சேர்த்தான்.

இது நடந்து இரு திங்கள் ஆகியிருந்தது.இப்போது மருத்துவமனையில் இருக்கும் சரசம்மாவைக் காண நாளை மதியை அவன் அழைத்துப் போக வேண்டும்.

ஆயினும் விதியின் விளையாட்டு வேறுவிதமாய் இருந்தது.அன்றைய இரவிலேயே சரசம்மாவின் இறப்பு செய்தி வந்து சேர்ந்தது.அவனின் இதயமே நின்றுவிடும் போலானது.விடியும் வரை துன்பத்துடனே விழித்திருந்தான்.

எல்லாம் காரியமும் முடிந்த மறுநாள் அவன் அண்ணியிடம் சொல்லிக்கொண்டு மதியுடன் புறப்படத் தயாரானான்.

“அப்போ மதியை திரும்பவும் பதினாறாவது நாள் காரியத்திற்கு அழைத்து வரணுமே?”

“ஆமாம் கூட்டிக்கொண்டு வருணும் அண்ணி”

“இதையெல்லாம் உனக்கு தேவையானு கேட்க தோணுது,இருந்தாலும் நம்ப சரசம்மாவிற்கு இப்படியாவது உதவ முடிந்திருக்கேனு சின்ன அறுதல் இருக்க தான் செய்யுது.பாவி இப்படி செய்துட்டுப் போகணும்?ரெண்டு பொம்பளப் பிள்ளைகளை விட்டுட்டு இப்படியா போறது?அது தான் குடிச்சுதோ இல்ல அந்த பாவி மனுசன் குடிக்க கொடுத்துப் கொன்னுப் போட்டானோ யாரு கண்டது? ”

அண்ணியின் புலம்பலை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவன் மதியோடு பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.மதி அழுத விழிகளோடு உடன் வந்தான்.

கடைசியில் கூட சரசம்மா மதியின் முகத்தை பார்க்க வாய்க்கவில்லையே?மதியை நல்லவிதமாக சேர்த்த பின் சரசம்மா அவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதது இன்னும் அவனின் நினைவில் இருந்தது.

“தம்பி இனி நிம்மதியாய் சாவேன்”

“என்ன சரசம்மா சாவைப் பற்றி பேசிக்கிட்டு?” அவன் சரசம்மாவை கடிந்துக்கொண்டான்.

தனக்கு நேரப்போகின்ற மரணத்தைப் பற்றி சரசம்மாவிற்கு முன்னமே தெரிந்திருக்குமா?சரசம்மாவே திட்டமிட்ட மரணமா இது?இல்லை இரண்டாவது கணவன் என்ற பேரில் அந்த மனிதனின் சதியா?

அவன் பேருந்தில் ஏறி அமர்ந்து தனக்கு பக்கத்தில் மதியை அமர்த்திக் கொண்டான்.மதியின் கண்களில் இன்னும் ஈரம் இருந்தது.மெதுவாக அவனது தலையை தடவிக்கொடுத்தான்.அந்த தடவலைக் கூட தாங்க முடியாதவனாக மதி தேம்பினான்.

அவனுக்கும் மெல்ல அழுகை வந்தது.

அவன் பிடிவாதமாய் கடைசி வரையில் சரசம்மாவின் முகத்தைப் பார்க்கவேயில்லை.கண்ணு நிறைவாய் தன் முன்னே நடமாடிய சரசம்மாவை எப்படி பிணக்கோலத்தில் காணமுடியும்?அத்தகையத் துணிவு அவனிடமில்லை.

நெஞ்சுக்குள் சரசம்மாவின் முகம் தோன்றியது.வாழ்க்கையில் நல்லது கெட்டது எதுவென்று அறியத் தெரியாத அபலைப்பெண்!இருவாரங்களுக்கு முன் அவன் வீடுத் திரும்பியிருந்த போது சரசம்மா இவனிடம் பேசியது ஏனோ நினைவிற்கு வந்தது.

“பொறந்தா பொண்ணா பொறக்க கூடாது தம்பி.இந்த பெண் பாடுகிற பாடு இருக்கே பெரும் பாடு”

அவன் புரியாது சரசம்மாவை பார்த்தான்.

“பாலா வயசுக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு.எதுவும் பண்ணலை.சீர் சடங்கு செய்யற சொந்தக்காரங்களை எல்லாம் பகைச்சு தான் இந்த ஆளை கல்யாணம் பண்ணி இந்த ஊருக்கு வந்தேன்.இனி யாரு என்ன செய்து இவளை அழகு பார்த்திட முடியும்.என் தலையெழுத்து.”

“…………………………………………………………………..”

“இதுல இன்னொரு கஷ்டமும் வந்து சேர்ந்திருச்சு.நீ என் பிள்ளையாட்டும்.உன்கிட்ட சொல்றதுக்கு என்ன…இந்த ஆளு பாலாவை பார்க்கிற பார்வையே சரியில்லை.எப்ப கொத்தலாம்னு பார்க்கிற கழுகு மாதிரி பார்க்கிறாரு.மதியை போல இதையும் எங்கையாவது பாதுகாப்பாய் கொண்டு வச்சுடணும்.அதைதான் இப்ப யோசிச்சுகிட்டு இருக்கேன்”

அதைக் கேட்டு அவனுக்கு அந்த மனிதன் மீது கோவம் எழுந்தது என்னமோ உண்மை தான்.பின் அவனையழுத்தும் அலுவலுக்கிடையில் அதை மறந்துப் போயிருந்தான்.

குளத்திலெறிந்த கல் திடுப்பென்று நீர் திவாலைகளை மேலேழ செய்வதுப் போல் சரசம்மா வேதனையோடு அவனிடம் பேசிய வார்த்தைகள் நினைவில் எழுந்து மனதைப் பதற வைத்தது.

ஐயோ!இனி பாலாவின் கதி?பேருந்தை நிறுத்தி பாலாவையும் அழைத்து வந்துவிடலாமா?அந்த ஆள் விடுவானா?வயசுக்கு வந்த பெண் பிள்ளையை அழைத்துப் போக ஊர் சம்மதிக்குமா?

.சரசம்மா எதற்கு சாகணும்?பாலாவை காப்பாற்ற முடியாமலா?அல்லது பாலாவை காப்பாற்ற வேண்டும் என்றா…?சரசம்மாவின் முட்டாள் தனமான செயல் மீது முதல் முதலாக கோவம் வந்தது. சரசம்மாவின் இறப்பு தந்த துயரத்தை விட பாலாவின் நிலை துயரத்தைத் தந்தது.

சரசம்மாவை போலவே நிறைவான முகம் பாலாவிற்கும்.ஆனால் அதில் குழந்தை தனம் இழையோடிருந்தது. குழந்தையும் இல்லாத குமரியும் இல்லாதத் தோற்றத்தில் கடைசியாக பாலாவை சரசம்மாவின் வீட்டில் பார்த்து நினைவிற்கு வந்து அவனை துன்பப் படுத்தியது.

சரசம்மாவின் பதினாறாவது துக்கத்திற்கு திரும்பும் வரை இந்த துன்பத்தை அவன் அனுபவித்துதான் ஆக வேண்டும்.

(முற்றும்)

Series Navigationகாலம்எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
author

வாணி ஜெயம்,பாகான்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ” குளத்திலெறிந்த கல் திடுப்பென்று நீர் திவாலைகளை மேலெழ செய்வதுப்போல் சரசம்மா வேதனையோடு அவனிடம் பேசிய வார்த்தைகள் நினைவில் எழுந்து மனதைப் பதற வைத்தது .”

    இதுபோன்று மென்மையும், நளினமும். நாசூக்கும் கலந்த தனித்தன்மையான எழுத்துக்குச் சொந்தக்காரர்தான் வாணி ஜெயம்.

    ” நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் ” பல பெண்களின் சோகத்தையும் அவர்கள் படும் பாடுகளையும் சரசம்மா எனும் கதாபாத்திரத்தால் கூறும் சிறுகதை.

    ” பொறந்தா பொண்ணா பொறக்கக் கூடாது. இந்த பெண் படுகிற பாடு இருக்கே பெரும் பாடு. ” உள்ளம் நொந்துபோன சரசம்மாவின் உள்ளக் குமுறல் இது!

    ” குழந்தையும் இல்லாமல் குமரியும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் வயதுடைய ” பாலாவின் கதி என்ன ஆகுமோ என்ற ஆதங்கத்தை உண்டுபண்ணி கதையை முடித்துள்ள விதம் நன்று….பாராட்டுகள் வாணி ஜெயம்…டாக்டர் ஜி. ஜான்சன் .

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் வாணி ஜெயம் அவர்களுக்கு,

    உண்மையின் நிதர்சனம் ஒவ்வொரு வரியிலும் இழையோட நெகிழ வைத்த கதை.
    முடிவில் கதை முடிந்த பின்பும் ஒரு பதற்றம்…!
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *