நேர்த்திக்கடன்

This entry is part 25 of 30 in the series 17 பிப்ரவரி 2013

சார்… என்னை மாதிரி ஒரு முட்டாள நீங்க பார்த்து இருக்கீங்களா… இருக்காதுன்னு தான் நெனக்கறேன்… என்ன நடந்துச்சுன்னு நீங்க கேட்டீங்க.. உங்களுக்கும் அந்த நம்பிக்கை என் மேல உறுதியா வந்தே தீரும்…  வாழ்க்கையில எப்பவாவது  ஒரு தரம் அதிர்ஷ்டம் வரும்ன்னு சொல்வாங்க.. அதுவும் அலாவுதீனுக்கு கெடைச்ச அற்புத விளக்கு மாதிரி ஒரு பொருள் நம்ம கைக்கு கெடைச்சி… அதனால நமக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டோன்னு கொட்டிச்சினா… சொல்லவே வேண்டாம்… அப்படித்தான் எனக்கு ஒரு பொருள் கெடைச்சது… அது ரெண்டு வருஷம் என்கிட்டே இருக்கிற வரைக்கும் என் லைப் ரொம்ப நல்லாத்தான் போச்சு… இப்ப பாருங்க அந்த அற்புதப் பொருள தொலைச்சி… இப்படி கன்னத்துல கைவைச்சி… எங்க தொலைச்சேனு யோசிச்சிட்டு இருப்பேனா..

 

அது என்ன பொருளுன்னு கேக்கறீங்களா… காதுல விழுது… சொல்றேன்… அதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்.. அந்தப் பொருள் கெடைச்சப்புறம் எப்படி எல்லாம் எனக்கு நல்லது நடந்துடுச்சின்னு சொன்னாத்தானே உங்களுக்கு எல்லாம் விளங்கும்.

 

‘அங்கன தேடிட்டு இருக்கீங்க… ஆபீஸுக்கு கெளம்பல… தட்டில இட்லி வச்சி எவ்வளவு நாழியாச்சு’ அவ தான் என் தர்மபத்தினி ஜானகி…. டைனிங் ஹால்ல இருந்து கத்தறா..

 

‘இதோ வந்திடறேன்..’ பதில் சொல்லலைனா அதுக்கும் பேச்சு வாங்க வேண்டியிருக்கும்..   உங்க வீட்லேயும் அப்படித்தானே… மௌனமா இருக்கும் போதே தெரியுது…

 

எனக்கு எப்பவுமே ஒரு பழக்கம் தரையில் ஏதாவது ஒரு பொருள் விழுந்து கெடச்சிதுனா அதை எப்படியாவதுஅந்தப் பொருளுக்கு சொந்தமானவங்கள கண்டுபிடிச்சி ஒப்படைச்சுடணும் தோணும்… இல்லனா மனசு உறுத்திட்டே இருக்கும்… ராத்திரில தூக்கமே வராது… அப்படி ஒரு நல்ல பழக்கம்…  ஒரு  தடவ  நடந்து  போகும் போது…

 

‘என்னங்க.. கப்பல் கவுந்து போன மாதிரி கன்னத்தில கை வச்சியிருக்கீங்க… அப்படியெல்லாம் வச்சுக்க கூடாது… வீட்டுக்கு வர்ற லஷ்மியும் வராமா போயிடும்’ அருகில் வந்த ஜானகி கன்னத்து கையை தட்டிவிட… என் தாடை மேஜையை பதம் பார்த்தது….  இருக்கிற வேதனையில் இந்த வலி வேறு… வந்த லஷ்மியைத்தான் தொலைச்சிட்டு இருக்கேன்னு எப்படி அவ கிட்ட சொல்றது.  இதற்குத்தான் சொன்னேன்… அது தொலைந்ததில் இருந்து இப்படித்தான் ஏதாவது அடி மேல் அடி படுகிறது.

 

‘இருங்க.. இட்லி சாப்பிட்டு வந்து… ஆபீஸ் போகுற வழியில விட்ட இடத்திலிருந்து மறுபடியும் சொல்ல ஆரம்பிக்கறேன்…’

 

‘ஏண்டா குருமூர்த்தி… காரு இல்லாம எப்படிடா ஆபிஸ்ஸுக்கு போவ..’ அம்மா மாடியிலிருந்து இறங்கியபடி கேட்டாள்.

 

‘வர்ற வழியில இருக்கிற மெக்கானிக் ஷெட்லதான் விட்டுட்டு வந்தேன்… போற போது ரெடி ஆச்சுன்னா எடுத்திட்டு போயிடறேன்..’

 

இப்பத்தான் ஞாபகம் வருது… ஒருவேளை இதுவும் அதன் வேலையாக இருக்குமோ.. அப்போ… அது நேத்தே தொலைஞ்சுப் போச்சோ… இதுவரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாம போன காரு.. கரேக்டா நேத்து பாத்தா பஞ்சர் ஆகணும்.. வயித்துகுள்ள இட்லி போச்சோ இல்லையோ.. பயம் வயிற்றைப் புரட்டி எடுத்தது.. இன்னும் என்னென்ன ஆபத்து வரப்போகுதோ..

 

ஆங்… எங்க விட்டேன்.. ஒரு தடவ நடந்து போகும் போது…  எனக்கு  பர்ஸ் ஒண்ணு யார் கண்ணுலேயும் படாமா என் கண்ல மட்டும் பட…  முன்னாடி பின்னாடி யாராவது போறாங்களான்னு பார்த்தேன். ஒருத்தரும் போற வர மாதிரி தெரியல… சரின்னு குனிஞ்சி அந்தப் பர்ஸ எடுத்து அதில்  அட்ரஸ் இருந்ததுனா… அத அவுங்க கிட்ட கொடுத்திடலாம்ன்னு தொறந்து பார்த்தா…  அதில மூணு பத்து ரூபா… அதில ஒண்ணு கிழிஞ்சது… ஒரு நகை அடகு சீட்டு,  ரெண்டு மூணு விசிட்டிங் கார்ட்..  பயபுள்ள குடிகாரன் போல… பர்ஸ்ல இருந்து வர்ற நாத்தத்த என்னால தாங்க முடியல…  எப்படித்தான் அவ பொண்டாட்டி தாங்கிக்கறாளோ…

 

எடுத்த நகை ரசீதைப் பாத்து.. அடகு வச்ச கடைக்கு போயி…  அவனோட அட்ரஸ் வாங்கி.. அவன் வீட்டுக்குப் போனா அந்த குடிகார பாவி வீட்ல இல்ல… இங்கதான் என் துரதிஷ்டம் துரத்திகிட்டு வந்தது… அத அடகு வச்சவனோட மனைவிடம் கொடுத்திட்டு வீடு வந்து சேர்ந்தப்புறம் தான்…   அத ஏண்டா கொடுத்தேன் பின்னாடி வருத்தம் படியா ஆயிடுச்சி..  அது அவன் மனைவிக்கு   தெரியாம அடகு வச்ச நகையாம்… அவன் என் வீட்டிற்கே வந்து சத்தம் போட்ட பிறகு தான் தெரிஞ்சிகிட்டேன்.

 

அன்னிக்கே ஒரு முடிவு பண்ணிட்டேன்.. இனிமே தரையில கிடக்கிறது எடுத்தா… ஒண்ணு  பக்கத்தில  இருக்கிற  போலீஸ் ஸ்டேஷன்ல  ஒப்படைச்சிடனும்… இல்லையினா  வர்ற  வழியில  உள்ள  கோயில்  உண்டியல  போட்டுடனுமின்னு..

 

ஆனா பாருங்க…  அன்னிக்கு ஒரு நாள் என்னாச்சி தெரியுமா….  உங்களுக்கு எங்கே தெரியப்போகுது.. சொன்னாத்தானே  தெரியும்..  வடபழனி கோவிலுக்கு நானும் அம்மாவும் போனோம்.. அம்மா  கோவில் வாசலுக்கு போனப்பறம் தான் அர்ச்சனை பண்ணணுமின்னு சொல்லி தேங்காய், பூ, பழம் வாங்கிட்டு வரச்சொன்னாங்க… சரின்னு பக்கத்து கடையில அர்ச்சனை தட்ட வாங்கிட்டு…  அங்கேயே  செருப்ப  விட்டுலாம்ன்னு அம்மா சொல்ல… என்னோட  ஷீவை  குனிஞ்சி  கழட்டும்  போது  தான் அது மின்னிச்சி….   என்னடா  பளபளன்னு இருக்குதுன்னு  குனிஞ்சி  எடுத்தா… மூணு கல்லு வச்ச மூக்குத்தி… திருவாணி இல்லாம மண்ணுல நசுங்கி கெடந்தது.. யாரோடதோ பாவம்.. அதை தவற விட்ட முகம் தெரியாத பெண்ணின் மேல் பரிதாபமே வந்தது.. யாரையாவது கேக்கலாம்னு பார்த்தா.. தங்கத்தை யார் வேணாம்மின்னு சொல்வாங்க… அதனால…

 

கோவிலுக்குத் தானே போறோம்… உண்டியில போட்டா போகுதேன்னு…  அத எடுத்து என்னோட பர்ஸ்ல பத்திரமா வச்சிக்கிட்டேன். கோவில அன்னிக்கு பாத்து ஒரே கூட்டம்…  அங்கதான் அவள முதல் முதலாப் பார்த்தேன்…. அழகுன்னா அழகு… அப்படி ஒரு அழகு… இப்படி ஒரு பொண்ணு எனக்கு மனைவியா வந்தா எப்படி இருக்குமின்னு நெனெச்சிட்டே சாமி கும்பிட்டதில அதை  உண்டியில  போடறதே  மறந்திட்டேன்.

 

மறுநாள் காலையில் பேப்பர்ல ஷேர் மார்க்கெட் பக்கம் புரட்டினேன்.. வாங்கற வரைக்கும் நல்லா போயிட்டு இருக்கிற ஷேர்ஸ், நான் வாங்கின உடனே அடிமாட்டு விலைக்கு வித்தாலும் யாரும் சீண்டாத அளவுக்கு குறைஞ்சிப் போயிடும்… ஆனா பாருங்க…. அன்னிக்கு என்னோட ஷேர்ஸ்  எல்லாம்  மூணு  மடங்கு  அதிகமா எகிறிடுச்சி…  ஏதோ மார்கெட் நல்லா இருக்குதுன்னு நெனெச்சி அதப் பெருசா எடுத்துக்கல.

 

ஆபீஸ் போனா…  மேனேஜர் என்ன கூப்பிட்டார்..  ‘குரு.. இன்னிக்கு செம மூட்ல இருக்கார்… பாத்து…’ போகும் போதே எச்சரிக்கை விடுத்தனர் அலுவலக நண்பர்கள்.. எப்பவும் திட்டத்தான் கூப்பிடுவார்…  இன்னிக்கு என்ன பிரச்சினையோ நடுங்கியபடியே உள்ளே சென்றேன்.. ‘குரு.. நீங்க   அனுப்பின அந்த புராஜெக்ட் எஸ்டிமேட் ஷீட் ரொம்ப சரியா இருந்திடுச்சி… கிளையண்ட் அக்செப்ட் பண்ணிட்டாங்க…  குட் ஜாப்…  அப்பிடின்னு இப்படின்னு பாராட்டினார்.. அதோட விட்டாரா.... உங்கள  இந்த வருஷம் ப்ரோமோஷன்  லிஸ்ட்ல சேர்த்திருக்கேன்… பெஸ்ட் ஆப் லக்  அப்படின்னு  சொன்னதும்  எனக்கு  உலகமே தலை கீழா சுத்தற மாதிரி இருந்திச்சி.. இத்தனைக்கும்  அந்த  மூக்குத்தி…  என்னோட  பர்ஸ்ல தான் இருந்ததுன்னு எனக்கு அப்ப தெரியவே இல்ல.

 

ஒரு நாள் மத்தியானம் அம்மா போன் பண்ணி.. ‘குரு  இன்னிக்கு  பெர்மிஷன்  போட்டு  சீக்கிரம் வாடான்னு’  சொல்ல… ‘எதுக்கும்மான்னு கேட்டேன். ‘அயனாவரத்துக்கு பொண்ணு  பாக்கப் போறோம்…’ சொல்லி முடிக்கவில்லை எனக்கு  கோபம்  கோபமாய்  வந்து ‘எனக்கு இப்போதைக்கு கல்யாணம் காட்சி எதுவும் வேண்டாம்மா.. கொஞ்ச நிம்மதியா ஆபிஸ் வேலைய செய்ய விடறியா..’ இதுவரைக்கும் 18 பொண்ணுங்களை பார்த்தும் எதுவும் செட் ஆகவில்லை என்ற ஆத்திரத்தில் எனக்கு கல்யாணத்து மேல இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விட்டிருந்தது.

 

அம்மாதான் இன்னிக்கு நெறஞ்ச அமாவாசை… புதன் கிழம… நல்ல நாள் அது இதுன்னு எப்பவும்  போல  தாஜா  பண்ணி அழைச்சிட்டு  போனாங்க.  அங்கப் போயி பார்த்தா.. அன்னிக்கு வடபழனி கோவில பார்த்த அதே பொண்ணு…  பார்த்ததும்  பட்டுன்னு சரின்னு  சொல்ல….  என்ன  ஆச்சிரியம்…  அந்த பொண்ணுக்கும் என்ன  பிடிச்சிருக்குன்னு  சொல்லிடிச்சி… ‘அட்ரா சக்க…’   மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

 

வர்ற வழியில…  அடையார் சிக்னல்ல  ஒரு  பிச்சைக்காரன்  கார் ஜன்னல் வழியே தலை நீட்டி ‘அம்மா தாயேன்னு…’ பிச்சை கேட்க….

 

‘குரு… சில்லறை இருந்தா கொடுடா… என்கிட்டே இருந்த சில்லறையில பூ வாங்கிட்டேன்’ அம்மா சொல்ல…  அப்பத்தான்  பர்ஸ்  எடுத்து   திறந்து  பார்த்தா….  அதிலே  ரெண்டு ரூபாய்  காயின்   தையல் பிரிஞ்ச பர்ஸ்ல மாட்டி வெளியே வராம இருந்தது.  லேசா ஒரு குலுக்கி கையில கவிழ்த்தேன்…  சில்லறையோட அந்த  மூக்குத்தியும் கையில  விழுந்தது.

 

‘அடடா… இதை அன்னிக்கே உண்டியில போடாம விட்டுட்டோமேனும் ஞாபகம் வந்தது… சரி…  நாளைக்கு  மறக்காம  ஆபீஸ்  போற  வழியில இருக்கிற விநாயகர் கோவில் உண்டியில போட்டுடனும் நெனெச்சி..  அத  எடுத்து  டேஷ்  போர்டுல வச்சிட்டேன்….’ அப்ப  எனக்கு  தெரியாது….  கையில  இருக்கிற வரைக்கும்  தான்  அந்த  அதிர்ஷ்டம் வேல செய்யுமின்னு…  அது எப்படி தெரிஞ்சதும் கேக்கறீங்களா… சொல்றேன்..

 

வீட்டுக்கு வந்தப்புறம் அம்மா.. ‘குரு….  எனக்கு  தலை  வலிக்கிற  மாதிரி  இருக்கு… ரெண்டு அனாசின் வாங்கிட்டு வாப்பான்னு’  சொல்ல…. கடைவீதில  இருக்கிற  அந்த  மெடிக்கல்  ஸ்டோருக்கு என்னோட கைனெடிக்கை எடுத்திட்டுப் போனது தான் தெரியும்… கண்ண தொறந்து பார்த்தா… என்ன சுத்தி வெள்ளை தேவதைங்க ரெண்டு பேரு என் தலையில கட்டு போட்டுட்டு இருந்தத பார்த்தேன்.. தூரத்தில அம்மா அழுதிட்டு இருக்காங்க….

 

‘குரு வலிக்குதாடா.. ‘ பக்கத்தில வந்து அம்மா கேட்டப்புறம் தான் எனக்குத் தெரியும்.. ஸ்கூட்டர்ல போகும் போது  நடுவழில கெடந்த உடைந்த திருஷ்டி பூசணிக்காய் சறுக்கி விழுந்திட்டேன்னு… ரெண்டு நாள் ஹாஸ்பிடல் பெட்ல இருந்த போது யோசித்துப் பாத்ததுல… அந்த மூக்குத்தி என் பர்ஸ் இருந்த வரைக்கும் நல்ல நடந்ததும்.. அது என்னொடு இல்லாத போது தான் இந்த அசம்பாவிதம் நடந்ததையும் கூட்டி கழிச்சி பார்த்து… வீட்டுக்கு வந்தப்புறம் முதல் வேலையா காரில டேஷ் பொர்டுல வச்சிருந்த அந்த அதிர்ஷத்த எடுத்து என் பர்ஸ்லே வச்சிக்கிட்டேன்.

 

அதிலிருந்து… கர்ணனுக்கு கவச குண்டலம் எப்படி இருந்ததோ அது மாதிரி எனக்கு அது கூடவே இருந்தது.. ‘அந்த பொண்ண பார்த்து வந்த நேரம் சரியில்லடா… அந்த இடம் சரிப்படாதுன்னு சொல்லிடாமாப்பா..’ அப்படின்னு அம்மா கேட்டப்ப.. ‘வேண்டாமா.. எனக்கு பிடிச்சிருக்கு….  நான் பாக்காம ஸ்கூட்டர்ல இருந்து விழுந்ததுக்கு அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணிச்சி.. அப்படின்னு சொல்லி அம்மாவ சமாதனப்படுத்த.. அப்புறம்  ஜானகியோட கல்யாணம்…. குடும்பம்…. வேலை… ரொம்ப மகிழ்ச்சியாக ரெண்டு வருஷம் போனதே தெரியல..

 

ஒரு நாள் அதே மானேஜர் கூப்பிட்டு… ‘குரு… நம்ம ஆன்சைட் டீம்ல இருக்கிற சதீஷ் சொந்த வேலையா இந்தியா திரும்பறாராம்… அதனால நீங்கதான் அவருக்கு பதிலா அமேரிக்கா போகனும்..  இதில உங்களுக்கு எதும் ஆட்சேபனை எதுவும் இல்லையே…’

 

‘இல்ல சார்.. கண்டிப்பா கிளம்பறேன்… ரொம்ப தேங்க்ஸ் சார்…’  நீண்ட நாள் வாய்ப்பு கிடைத்ததில் மனதில் வானத்திற்கும் பூமிக்குமாய் குதிக்க ஆரம்பித்தேன். ஜானகியை சர்பிரைஸ் பண்ண அவளிடம் சொல்லாமல் வீட்டிற்கு வந்தேன்.

 

‘ஜானகி… ஒரு சந்தோஷமான விஷயம்..’ பாத்திரம் கழுவிட்டு இருந்தவளை பின்புறத்தில் இறுக்கியபடி கழுத்தில் தலை சாய்த்து கூந்தலிலிருந்து வரும் மல்லிகையை  நுகர்ந்தபடி அவள் கழுத்தில் முகம் புதைத்தேன்…

 

‘ம்ம்ம்… சொல்லுங்க…’

 

‘என்ன… ஆபிஸ்ல வேலை விஷயமா அமெரிக்கா அனுப்பப்போறாங்க…’ அவள் முகம் வாடியபடி திரும்பினாள்…

 

‘தனியாவா போகப்போறீங்க..’

 

‘ஆமாம் ஜானகி.. ஒரு ஆறு மாசம்தான் வந்திடுவேன்.. நீ சமத்தில்ல..’  கைகளால் மேலும் இறுக்கினேன்.

 

நான் அமெரிக்கா போறதுக்கும் அந்த மூக்குத்தியை தொலைச்சதுக்கும் என்ன சம்பந்தமின்னு கேக்கறீங்களா… இருக்கு சொல்றேன்…

 

அது நடந்து ரெண்டு வாரம் இருக்கும்… மறுவாரம் அமெரிக்கா போகணும்… அமெரிக்கா போகறதுக்கு வேண்டியத ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன்.. இந்த நேரம் பார்த்தா அத தொலைப்பேன்.. இப்ப பாருங்க பயந்தபடியே ஆபிஸ் போறேன்…

 

‘கங்கிராட்ஸ்… கேள்விபட்டேன்‘ நண்பன் ஹரிஷ் காபி சாப்பிடும் சமயத்தில் எதிர்பட..

 

‘தேங்க்ஸ்…. ‘

 

‘எப்ப ட்ராவல்… எவ்வளவு நாள் ஸ்டே அமேரிக்காவில..’

 

‘அடுத்த வாரம் கெளம்பறேன்…’ அவனிடம் சிறிது நேரம் கதை பேசிவிட்டு இருக்கைக்கு வந்தமர்ந்தேன்.

 

செல்போன் அடித்தது… மேனெஜர்தான் அழைத்தார்.. சீட்டை விட்டு எழுந்து அவர் அறைக்குள் நுழைந்தேன். அமெரிக்க செல்வதற்கான முன்னேற்பாடுகளையும் ஆலோசனைகளையும் கூறுவதற்காக அழைப்பதாய் நினைத்து உற்சாகமாய் உள்ளே நுழைய..

 

‘கமீன்… பிளீஸ் சிட்டவுன் குரு..’ அமர்ந்தேன்.

 

‘சாரி குரு… இத எப்படிச் சொல்றதுன்னு தெரியல.. ஆனா சொல்லித்தான் ஆகனும்…’ பீடிகையுடன் அவர் ஆரம்பிக்க… எனக்கோ வயிற்றில் புளியைக் கரைத்தது…

 

‘பராவயில்ல சார்… சொல்லுங்க..’

 

‘உங்க யுஸ் ப்ரொக்ராம் கான்ஸல் ஆயிடுச்சி… சாரி டு சே…’ முகம் தொங்கிப் போய் மறுபடியும் சீட்டுக்கே திரும்பினேன், சொல்லி வைத்தாற்போல் அது தன் வேலையை காண்பித்து விட்டது காலையில் இருந்தே தெரிய ஆரம்பித் அதன் அறிகுறி இப்பொழுது இதன் மூலம் மேலும் நிருபணம் ஆகிவிட்டது… எங்கே தொலைச்சேன் அதை… என் மேல் எனக்கோ கோபம் கோபமாய் வந்தது. ஆபிஸீல் வேலை ஓடவில்லை… மாலை சீக்கிரம் வீட்டுக்கு திரும்ப.. வீடு பூட்டிருந்தது.. மேலும் என் கோபத்தை அதிகப்படுத்தியது…. வாசலிலே தவம் இருக்க… அம்மாவும் ஜானகியும் சிரித்துப் பேசியபடி நடந்து வந்தனர்.

 

‘அம்மா.. சாவியை பக்கத்து வீட்ல கொடுத்திட்டு போயிருக்க கூடாதா…’

 

‘எனக்கு என்னடா தெரியும்… நீ இவ்வளவு சீக்கிரம் வருவேண்னு… எப்பயும் போல லேட்டா வருவேண்ணு நெனெச்சிட்டோம்… அதான் வடபழனி கோவில் வரைக்கும் போயிட்டு வந்தோம்…’

 

‘ம்ம்ம்…’ எப்படி அந்த விஷயத்தைச் சொல்றது என்று தெரியாமல் அப்படியே சோபாவில் சரிந்தேன்.

 

‘இந்தாங்க.. கோவில் பிரசாதம்….’ ஜானகி நீட்ட..

 

‘இப்ப இதுதான் கொறச்சல்…. என்ன திடீர்னு மாமியாரும்  மருமகளும் சேர்ந்தாப்ல கோவிலுக்கு போயிட்டு வந்திருக்கீங்க..’

 

‘ஏங்க.. இப்படி அலுத்துக்கிறீங்க.. இன்னிக்குதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்‘

 

.’ம்ம்ம்.. என்ன விசேஷம்… சொல்லு’ அவளின் சந்தோஷத்தை எதற்கு கெடுப்பானேன் என்று  நினைத்து கேட்க..

 

‘ரெண்டு வருடத்துக்கு முன்னாடி வடபழனி கோவிலில ஒரு வேண்டுதல்… எனக்கு அப்ப மாப்பிள தேடிட்டு இருந்த நேரம்… எதுவும் சரியா அமையல… அப்பத்தான் சொந்தக்காரங்க ஒருத்தர் சொன்னாங்க எனக்கு பிடிச்ச ஒரு பொருளை சாமியை வேண்டிக்கிட்டு அதை சாமிக்கு அர்ப்பணம் பண்ணா நல்ல புருஷன் கிடைப்பாருன்னு…’

 

‘ம்ம்ம்’ கொட்டினேன்.

 

‘அப்ப எனக்கு ரொம்ப பிடிச்ச பொருள் எதுன்னா அது நான் போட்டிருந்த மூக்குத்தித்தான்.. என் துரதிஷ்டம்.. அத கோவில் வாசல்ல கழட்டும்  போது  திருவாணி  தான்  கையில  இருந்தது…. மூக்குத்தி எங்க விழுந்ததுன்னு தெரில  அம்மாவுக்கு தெரியாம  திருவாணியை   மட்டும்  உண்டியல  போட்டு எப்படியோ அன்னிக்கு சமாளிச்சிட்டுட்டேன்… அதுக்கப்புறம்  தான்  நீங்க பொண்ணு  பாக்க  வந்தீங்க… எல்லாம் நல்லபடியா நடந்திச்சு….  ஆனாலும்  மனசுல எனக்கு  ஒரு  குறை  இருந்திட்டுதான் இருந்தது. வேண்டுதல முழுசா பண்ணலையோன்னு…’ எனக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது…

 

‘அதனால  தான்  ரெண்டு  வருஷம்  ஆகியும்  வயித்துல  எதுவும்  தங்கலையோன்னு  மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சி…அதான் இப்ப அத நிறைவேத்திட்டு அப்படியே  நீங்க அமெரிக்க போயிட்டு வர்ற பிரயாணம் நல்லபடியா இருக்கணுமின்னு சாமியை வேண்டி ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்தோம்..’ புல்ஸ்டாப் கமா வைக்காமல் சொல்லி முடித்தாள்.

 

‘அதனால இப்ப இருக்கிற மூக்குத்தியை போட்டுட்டு வந்திட்டியாக்கும்..’ முந்திக்கொண்டு கேட்டேன்.

 

‘இல்ல.. அதையே இப்ப போட்டுட்டேன்… இப்பத்தான் எனக்கு திருப்தியா இருக்கு..’

 

‘எப்படி.. அதான் தொலைஞ்சு போச்சே…’

 

‘ம்ம்… அதாங்க எனக்கு ஆச்சிரியமா இருக்கு… நம்ம பெட்ரூமை கிளீன் பண்ணிட்டு இருக்கும்போது பெட்டுக்கு அடியில அது கெடைச்சது… என்ன ஒண்ணு…. நசுங்கி போய் இருந்துச்சு… பாருங்க ஆண்டவனோட அருமையை.. என்னோட பொருள் என் கண்ணுலே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கார்’ அவள் சொல்லச் சொல்ல எனக்கு தலையை சுற்றியது.

 

இதில மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா…. ஜானகி அந்த  மூக்குத்தியை   உண்டியல  போட்டதுக்கு அப்புறம்..  நான் போறாத இருந்த அந்த அமெரிக்க விமானம் ஆக்கிஸடண்ட் ஆகி தரையில் விழுந்து நொறுங்கி 318 பேர் இறந்ததோட இல்லாம அதற்கு ஒரு  மாதம்  கழிச்சி  அவ உண்டானது தான். ஜானகியே எனக்கு அதிஷ்டமா கெடைச்சப்புறம் அந்த மூக்குத்தி முக்கியமா என்ன… நீங்களே சொல்லுங்களேன்.. இப்ப நான் முட்டாளா இல்ல அதிர்ஷ்டசாலியான்னு.

 

 

(முற்றும்)

 

 

 

Series Navigationபூமி நோக்கி ஒலிமிஞ்சிய வேகத்தில் வந்த விண்கல் வெடித்து ரஷ்யாவில் 1200 பேர் காயம்போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8
author

ரிஷ்வன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Sivakumar N, New Delhi says:

    இனிமையான கதை! 80, 90 களின் கதையை படித்தது போன்ற ஒரு உணர்வு… நன்றி!!

Leave a Reply to rishvan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *