நைலான் கயிறு…!…?

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 33 in the series 11 நவம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

பெங்களூரு விஜயமஹாலில் இன்று ரவியின் திருமண ரிசப்ஷன். போன ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விமரிசையாக திருமணம் நடந்து முடிந்து விட்டாலும், தன்னுடன் ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்காக பெங்களுரில் இன்று ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தான் ரவி. ஊரிலிருந்து ரவியின் அப்பா, அம்மாவும், மதுரையிலிருந்து ரமாவின் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் வந்திருந்தார்கள்.

ரவி சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் முடித்தவன். படிப்பு முடிந்தவுடன் பெங்களூருவில் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து கைநிறைய சம்பாதிக்கிறான். ரமா, மதுரையில் இந்த வருடம் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கிறாள். உடனே அவளுடைய அப்பா திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார். அன்பையெல்லாம் கொட்டி செல்லமாக வளர்த்த ஒரே மகளுக்கு ஊர் மெச்ச திருமணம் செய்து வைத்தார். தொழிலதிபரான அவருக்கு, தூரத்து சொந்தத்தில் நல்ல பையனாக கெட்டிக்கார மாப்பிள்ளை அமைந்ததில் ரொம்ப திருப்தி.

ரவியின் வீடு பெங்களூருவில் B.T.M  லே அவுட்டில் இருக்கிறது. ரிசப்ஷனை சில்க் போர்டு அருகே உள்ள விஜயமஹாலில் வைத்திருந்தார்கள். ஒவ்வொருவராக வந்து பரிசுப் பொருட்களை கொடுத்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய ஆபீஸ் நண்பர்களை எல்லாம் ரவி தன் இளம் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“ரமா, இவர்தான் என்னுடைய மேலதிகாரி மகேந்திரன்” என்று ஒருவரை அறிமுகம் செய்தான். அவர் ஒரு பார்சலை பரிசாக ரவியின் கையில் கொடுத்து விட்டு, சின்னதாக தங்க நிறத்தில் பேக் செய்யப்பட்ட ஒரு பொருளை ரமா கையில் கொடுத்தார். கொடுத்து விட்டு உடனே பிரித்துப் பார்க்கவும் சொன்னார். ரமா அதை வாங்கிப் பிரித்தாள். அது பச்சைக் கலரில் ஒரு நைலான் கயிறு.

ரமாவுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மனிதர் எதற்கு நைலான் கயிறை கொடுத்திருக்கிறார். வீட்டில் துணி காயப் போடுவதற்காகவா? அல்லது இந்த ரவியோட டார்ச்சர் தாங்க முடியாமல் தூக்கில் தொங்க வேண்டியிருக்கும் என்று உணர்த்துகிறாரா? திருமண ரிசப்ஷனில் இப்படியெல்லாமா பரிசு கொடுப்பார்கள். லேசாக கணவனை இடித்தாள். அவன் புரிந்து கொண்டு, “சார்! இது எதற்கு என்று இவள் கேட்கிறாள்” என்றான்.

அவர் ரமாவைப் பார்த்து, “ரமா, இதற்கு என்ன அர்த்தம் என்று இன்னும் பத்து அல்லது இருபது நாட்களுக்குள் தெரிந்து கொள்வாய். எதற்கும் அவனிடம் ஜாக்கிரதையாக இரு” என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே போய்விட்டார். “என்னங்க அர்த்தம்” என்று ரவியிடம் கேட்டாள். “சும்மா விளையாட்டுக்காக இப்படி செய்திருப்பார்” என்று சொல்லி ரவி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான். ஆனாலும் அந்த நிகழ்ச்சி முடியும் வரை அது அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது.

அடுத்த நாள் தன்னுடைய அப்பாவைத் தனியே அழைத்து, “அப்பா, உங்கள் மாப்பிள்ளையைப் பற்றி நன்றாக விசாரித்தீர்களா?” என்றாள். அவர் அதிர்ந்து விட்டார். “என்னம்மா, மாப்பிள்ளை உங்கிட்டே எதும் தப்பா நடந்துக்கிறாரா?” என்றார் பதட்டமாக. நேற்று ரிசப்ஷனில் நடந்த விஷயத்தைச் சொன்னாள். அவர் சமாதானமாக, “மாப்பிள்ளை சொன்னது போல ஏதோ விளையாட்டுக்காக செய்திருப்பார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே” என்றார்.

இரண்டு நாளில் எல்லோரும் ஊருக்கு கிளம்பிப் போய் விட்டார்கள். தினமும் வீட்டுக்கு முன்னால் இருக்கும் பார்க்கில் ரவியுடன் வாக்கிங் போவது; வாக்கிங் முடிந்ததும் அப்படியே அவுட்டர் ரிங் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே இருக்கும் அடையார் ஆனந்த பவனில் காப்பி சாப்பிடுவது; பின்பு குளித்து விட்டு டிபன் செய்து ரவியை ஆபீசுக்கு அனுப்புவது; சாயந்திரம் ரவியுடன் எங்காவது வெளியில் செல்வது என்று வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.

லால்பாக்கை சுற்றிப் பார்த்ததும், இஷ்கான் கோயிலுக்குச் சென்றதும், கோரமங்களாவில் ஃபோர் எம் மாலுக்குச் சென்று ஆசைப்பட்ட பொருட்களையெல்லாம் வாங்கி வந்ததும், ரமாவுக்குப் புதுவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. பெங்களூருவின் இதமான தட்ப வெப்பமும், ரவியின் அன்பும் சேர்ந்து அவளுக்கு ஒவ்வொரு நாளும் சொர்க்கத்தில் வாழ்வது போல் இனிமையாக கழிந்தது.

நான்கு நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து அப்பா, ‘மாப்பிள்ளை நல்லபடியாக வைத்துக் கொள்கிறார் அல்லவா?’ என்று கேட்கும் வரை அவளுக்கு அந்த நைலான் கயிறு விஷயமே ஞாபகத்துக்கு வரவில்லை. “ஆமாம்ப்பா, நன்றாகத்தான் வைத்துக் கொள்கிறார். ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன்” என்றாள். அவளுக்கு நைலான் கயிறு விஷயம் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது. அதற்கு அர்த்தம் தான் தெரியவில்லை.

“மாப்பிள்ளை தங்கம்டா, நீ எதுக்கும் கவலைப்படாதே. திருமணத்து முன்னேயே நான் நன்றாக விசாரித்து விட்டேன். மாப்பிள்ளை ரொம்பவும் புத்திசாலி. தொழில்நுட்ப அறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் மிக்கவர் என்று அவருடைய மேலதிகாரி சொன்னார். அந்த நிறுவனத்துக்கு மாப்பிள்ளை ஒரு பெரிய சொத்து என்றும் சொன்னார். சிகரெட் பிடிப்பதைத் தவிர வேறு எந்த கெட்ட பழக்கமும் அவருக்குக் கிடையாது. அதையும் கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கச் சொல்லிவிடு” என்றார்.

“சொன்னேம்பா, ஆனால் சிகரெட் பிடிக்கும் போது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது என்றும் பளிச்சென்று ஏதாவது ஐடியா தோன்றுகிறது என்றும் சொல்கிறார்.” என்றாள் ரமா.

“அதெல்லாம் சும்மா ஒருவகையான நம்பிக்கை. இன்னும் கொஞ்ச நாளில் அந்தப் பழக்கத்தை விட்டு விடுவார். கவலைப் படாதே” என்றார். ரமாவுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது.

அடுத்த வாரத்தில் புதன்கிழமை அன்று சினிமாவுக்குப் போகலாம் என்று சொல்லியிருந்தான். அதனால் அவன் ஆபீசிலிருந்து வருவதற்குள் கிளம்பி ரெடியாக இருந்தாள். காரில் கிளம்பி சினிமா தியேட்டருக்கு சென்றார்கள். போகும் வழியில் ரமாவுக்கு தன்னுடைய செல்போனை எடுத்து வர மறந்து விட்டது ஞாபகம் வந்தது. ‘பரவாயில்லை, தன்னுடைய போன் இருக்கிறது’ என்று அவளை சமாதானப் படுத்தினான் ரவி.

அது ஒரு சுமாரான படம்தான். ஆனால் திருமணம் ஆன பிறகு கணவனுடன் பார்க்கும் முதல் படம் என்பதால், ரமா மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இடைவேளையின் போது ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள். மறுபடி படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் இதோ வருகிறேன் என்று ரவி வெளியே சென்றான். சிகரெட் பிடிக்கப் போகிறான் என்று நினைத்தாள்.

பத்து நிமிடம் ஆகியது. அவன் வரவில்லை. இருபது நிமிடம், முப்பது நிமிடம் ஆகிவிட்டது. அவன் திரும்பி வரவில்லை. அவளுக்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த ஒரு வாரத்தில் அவன் கூடத்தான் எல்லா இடத்துக்கும் போயிருக்கிறாள். பெங்களூரு இன்னும் பழகவில்லை என்பதால் தனியே எங்கும் போகத்தெரியாது. என்ன செய்வது? இப்போது படமும் முடிந்து விட்டது. ஆனால் அவன் வரவேயில்லை. எல்லோரும் எழுந்து வெளியே வந்த போது அவளும் வெளியே வந்தாள்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த ஊரில் யாரையும் தெரியாது. பாஷையும் தெரியாது. அழுகையாக வந்தது. அருகில் இருந்தவர்கள் அவள் அழுவதை வேடிக்கை பார்த்தார்கள். சிலர் என்ன என்று விசாரித்தார்கள். ஆனால் அவர்கள் கேட்பது அவளுக்கு புரியவில்லை. இன்னும் அழுகை கூடியது.

“ரமா, நீங்களா? ஏன் அழுகிறீர்கள்? ரவி எங்கே?” என்று ஒரு பெண், தமிழில் ரமா, ரவி என்று பெயர்களை சொல்லிக் கேட்டதும் நிமிர்ந்து அவளைப் பார்த்தாள்.

“என்னைத் தெரியவில்லையா? நான்தான் லதா, இது என்னோட கணவர் ரமேஷ். ரவியுடன் வேலை செய்கிறார். ரிசப்ஷனுக்கு வந்திருந்தோமே!” என்றாள் லதா

“இடைவேளைக்குப் பிறகு வெளியே போனார். சிகரெட் பிடிக்கத்தான் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் இதுவரை திரும்பி வரவில்லை” என்று அழுதாள்.

“சரி, கவலைப் படாதீர்கள். அவனுடைய நம்பருக்கு நான் போன் செய்கிறேன்” என்று சொல்லி போனைத் தட்டினான் ரமேஷ். ஆனால் ரவியின் போன் அணைக்கப் பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் ஓ! வென்று கதறினாள் ரமா. அவளுக்கு ஆறுதல் சொல்லி தங்களுடைய காரில் ஏற்றிக் கொண்டு போய் அவளுடைய வீட்டில் இறக்கி விட்டார்கள். ‘இன்னும் சிறிது நேரத்தில் அவன் எப்படியும் தொடர்பு கொள்ளுவான்; கவலைப்பட வேண்டாம். கொஞ்ச நேரம் கழித்து போன் செய்கிறோம்’ என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். ரமா கவலையுடன் கணவனுக்காக காத்திருந்தாள்.

    சரி! ரவிக்கு என்ன ஆயிற்று? அவனைப் பின் தொடர்ந்து செல்வோம். சினிமா தியேட்டரில் திடீரென்று எழுந்து வெளியே போனானல்லவா? ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். கொஞ்ச நேரம் சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று மின்னல் போன்று அவனுக்குள் ஒரு எண்ணம் உதித்தது. ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள ‘ஐ.சி’ இப்போது டிசைன் பண்ணிக் கொண்டிருக்கும் சர்க்யூட்டுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அவனுடைய நாடி நரம்புகளிலெல்லாம் உற்சாகம் ஏற்பட்டது. ஆர்வம் கொப்பளித்தது. உடனே தியேட்டரை விட்டு வெளியே வந்து, காரைக் கிளப்பினான். எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் இடம் நோக்கி வேகமாக செலுத்தினான்.

அவன் வழக்கமாக எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் கடை பூட்டியிருந்தது. இவ்வளவு வேகமாக வந்தும் ஒன்பதரை மணிக்கே கடையை மூடி விட்டார்களே! இன்னொரு கடைக்கு போகலாம் என்று அங்கே சென்றான். நல்ல வேளை, அந்தக் கடை திறந்திருந்தது. தேவையான அந்த ‘ஐ.சி’யை வாங்கிக் கொண்டு வேகமாக தன் அலுவலகம் சென்றான். அந்த நேரத்திலும் சிலர் ஆபீசில் இருந்தார்கள்.

தன்னுடைய இடத்துக்குச் சென்று, வாங்கி வந்த ‘ஐ.சி’யை பொருத்தி ஆராய்ந்தான். அவன் நினைத்தது சரிதான். மிக கச்சிதமாக பொருந்தி விட்டது. வெற்றி! ஆஹா! இன்னொரு சர்க்யூட் ரெடியாகி விட்டது. நாளை ஆபீஸே களைகட்டப் போகிறது. மேலதிகாரி அவனை பாராட்டுவது இப்போதே கண் முன் தெரிந்தது. இந்த சர்க்யூட்டுக்கு ஏற்கெனவே ஸ்பெஷல் போனஸும் அறிவித்திருக்கிறார்கள். அந்தப் பணத்தில் ரமாவுக்கு தங்கத்தில் ஒரு பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும். ரமா எவ்வளவு சந்தோஷப் படுவாள்.

ரமா! ரமா எங்கே? மனம் திடுக்கிட்டது. அய்யோ! தியேட்டரில் இருந்து அப்படியே இங்கு வந்து விட்டேனே! இப்பொழுது தியேட்டரில் படம் முடிந்திருக்கும். என்ன செய்வாள்? பாவம்! அவளுக்கு தனியாக எங்கேயும் போய் பழக்கமில்லையே! வியர்த்து விறுவிறுத்துப் போனான்.

அவசரமாக தியேட்டரை நோக்கி காரில் பறந்தான். தியேட்டருக்கு வெளியே யாருமே இல்லை. அந்த தியேட்டரில் இரவுக்காட்சி கிடையாது. அதனால் லைட்டைக்கூட அணைத்து விட்டிருந்தார்கள். ரமா எங்கே போயிருப்பாள்? அய்யய்யோ, ரமாவை தொலைத்து விட்டேனே! இப்போது எங்கே போய் தேடுவது? தியேட்டர் முழுவதும் அலசினான். ஆபரேட்டரிடம் விசாரித்தான். ரமாவைக் காணவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. அழுகை வந்தது. தலையில் கைவைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டான்.

திடீரென்று ஒரு யோசனை வந்தது. அவளுக்கு போன் பண்ணிப் பார்க்கலாமே என்று! ஆனால் அவள் போனை வீட்டிலேயே வைத்து விட்டு வந்ததாகச் சொன்னது ஞாபகம் வந்தது. எதற்கும் முயற்சி பண்ணிப் பார்க்கலாம். ஒரு வேளை எப்படியாவது அவள் வீடு போய் சேர்ந்திருந்தால்? போனை எடுத்தான். அவனுடைய போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. கடவுளே! இதுவரை இதைக்கூட நான் கவனிக்கவில்லையே!

சரி! பொது தொலைபேசியில் பேசலாம் என்று தேடினான். ஓரிடத்தில் ஒரு கடையின் முன்னால் பொது தொலைபேசி இருந்தது. ஓடிப்போய் ரமா நம்பருக்கு போன் செய்தான். ‘கடவுளே! அவள் எடுக்க வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டான். கொஞ்ச நேரம் மணி அடித்த பின் ரமா எடுத்தாள்.

“ரமா, ரமா எங்கே இருக்கே?” பதறினான்.

“ரவி, எங்கே போனீர்கள்?” அழ ஆரம்பித்தாள்.

“சாரிடா, ஏதோ ஞாபகத்தில் ஆபீஸ் போய் விட்டேன். இப்போ வீட்டிலேதானே இருக்கே?”

“ஆமாம்”

“இதோ இப்பவே ஓடி வந்திடறேன்” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு ஓடினான்.

    அடுத்த நாள் ரவியின் மேலதிகாரி மகேந்திரன் ரவியின் வீட்டுக்கு வந்திருந்தார்.

“ரமா, நேற்று தியேட்டரில் விட்டு விட்டுப் போய்விட்டானாமே? ரமேஷ் சொன்னான்” என்றார்.

“ஆமாம்! அவர்கள் மட்டும் நேற்று இல்லையென்றால் என் பாடு திண்டாட்டமாகி இருக்கும்” என்றாள் ரமா.

“இப்போது புரிகிறதா, நான் ஏன் உனக்கு நைலான் கயிறு கொடுத்தேன் என்று?” என்றார் மகேந்திரன். ரமாவுக்கு அவர் திருமண ரிசப்ஷனில் நைலான் கயிறு கொடுத்தது ஞாபகம் வந்தது. ஆனால் இன்னும் அதற்கான காரணம் புரியவில்லை.

“இனிமேல் எங்காவது வெளியே போனால், அவன் இடுப்பைச் சுற்றி இந்த நைலான் கயிறைக் கட்டி இன்னொரு முனையை கையில் வைத்துக் கொள். இல்லையென்றால் இது போல் மறுபடி எங்காவது ஓடி விடுவான்” என்றார் மகேந்திரன்.

ரமா வெட்கத்துடன் ரவியைப் பார்த்து மெதுவாக சிரித்தாள்.

Series Navigationவீடுநம்பிக்கை ஒளி! (6)
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *