பஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்

This entry is part 12 of 47 in the series 31 ஜூலை 2011

நட்பு அறுத்தல்

இப்பொழுது நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரம் ஆரம்பமாகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு:

காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே சிறப்பாக வளர்ந்து வந்த சிநேகத்தை, பேராசையும் போக்கிரித் தனமுமுள்ள ஒரு நரி நாசம் செய்தது.

அது எப்படி என்று பார்ப்போம்:

தெற்குப் பிரதேசத்தில், இந்திரலோகத்துக்கு ஈடாக மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்று உண்டு. அது சகல சுப லட்சணங்களும் பெற்றிருந்தது: பூதேவியின் கிரீடத்திலிருக்கும் சூடாமணி போல் சிறப்புற்றிருந்தது; கைலாசத்தில் முடி போன்ற ரூபத்துடன் இருந்தது. அந்நகரின் கோபுரங்களிலும், அரண்மனைகளிலும் பலவகையான இயந்திரங்கள், ஆயுதங்கள், ரதங்கள் நிரம்பியிருந்தன. அதன் பிரதான வாயில் இந்திரகில மலைபோல் பிரம்மாண்டமானதாகத் தெரிந்தது. தாழ்ப்பாள்களும், நாதாங்கிகளும், பலகணிகளும், வளைவுகளும் அதில் பொருத்தப்பெற்றிருந்தன. வாயில் புறத்தின் உட்சுவர்கள் கனத்த மரப்பலகைகளாலான மேற்கவசம் அணிந்து யாரும் அதைத் தகர்த்து வெற்றி கொள்ள முடியாதபடி விளங்கியது. சதுரமான பிராகாரங்களுக்கும் நெடிய சாலைகளுக்கும் நடுவே அலங்காரமிக்க தேவாலயங்கள் நிமிர்ந்து நின்றன. வளையமிட்ட அகழியோடு கூடியதாய், நகரின் வெளிச்சுவர்கள் நெடிதுயர்ந்து இமயமலை போல் காட்சியளித்தன.

அந்நகரில் வர்த்தமானன் என்று ஒரு வணிகன் வசித்து வந்தான். அவன் அநேக நற்குணங்கள் உடையவன். பூர்வ ஜன்மத்தின் புண்ணியத்தால் பெருஞ் செல்வமும் உடையவன். ஒரு சமயம் நடுராத்திரியில் அவன் பல யோசனைகளில் ஆழ்ந்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். சேகரித்த செல்வம் அதிகமாயிருந்தபோதிலும், செலவழித்துக் கொண்டே போனால் அது மை போல் கரைந்து விடுகிறது. சேர்த்தது கொஞ்சமேயானாலும் அதை மேலும் மேலும் வளர்த்தால் எறும்புப் புற்றுபோல் பெருகிக் கொண்டேயிருக்கும். ஆகவே பொருள் அதிகமாக இருந்தாலும் அதை மேன்மேலும் பெருக்குவதே சரி. பெறாத பொருளைப் பெறவேண்டும்; பெற்றதைக் காக்க வேண்டும்; காத்ததை விருத்தி செய்து சரியான துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். சாதாரணமாக, சும்மா பத்திரப் படுத்தி வைக்கும் செல்வம்கூட அநேக இடையூறுகளால் நாசமடைகிறது. சந்தர்ப்பம் கிடைத்த போது முதலீடு செய்யாத பணம், கைக்கு வராத பணத்துக்குச் சமம். ஆகவே, கிடைத்த பணத்தைப் பாதுகாத்து, பெருக்கி, நல்ல துறையில் ஈடுபடுத்த வேண்டும்.

சேர்த்த பணத்தைக் காக்க வேண்டுமென்றால் அதைப் புழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். குளத்தில் நீர் அதிகமானால் அது வடிவதற்கு வடிகால் இருக்க வேண்டுமல்லவா? பழக்கிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதுபோல், பணத்தைப் போட்டுத்தான் பணம் ஈட்ட வேண்டும். விருப்பம் மட்டும் இருக்கிற ஏழைக்கு வாணிபம் செய்வது சாத்தியமல்ல.

விதியால் தன்னிடம் குவிந்த தனத்தைத் தானும் அனுபவிக்காமல் நற்செய்கை களிலும் செலவிடாமல் இருப்பவன், இரு உலகங்களிலும் சுகம் பெற மாட்டான். அவன் ஒரு பணம் படைத்த முட்டாளே.

இப்படித் தீர்மானம் செய்தவுடனே, வர்த்தமானன் மதுராபுரிக்குப் போவதற்காகச் சகல விதமான வியாபாரப் பொருட்களையும் திரட்டினான். நல்ல நட்சத்திரமும் சுபமான திதியாகவும் பார்த்து, பெற்றோர்களின் உத்தரவும் பெற்றுக் கொண்டு, வேலையாட்களைக்கூட அழைத்துக்கொண்டு, உறவினர்கள் பின்தொடர, சங்கும் பேரிகையும் முன்னே முழங்கிச் செல்ல, அவன் நகரத்தை விட்டு புறப்பட்டான். வழியில் ஆறு ஒன்று வந்தடைந்ததும் தன் சிநேகிதர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு அவன் மேலே நடந்தான்.

அவனுடைய வண்டியின் நுகத்தடியில் வெண்மேகம்போல் ஒளி பொருந்திய நந்தகன், சஞ்சீவகன் என்ற இரண்டு மங்களகரமான எருதுகள் பூட்டப்பட்டிருந்தன. அவற்றின் கழுத்தில் தங்கச் சலங்கைகள் துலங்கின.

எல்லோரும் ஒரு காட்டை அடைந்தார்கள். இலுப்பை, வேல், பலா, சாலமரங்கள் நிறைந்த அந்தக் காடு பார்ப்பதற்கு மனோரம்மியமாயிருந்தது. இன்னும் அழகான இதர மரங்களும் அங்கே அடர்ந்து வளர்ந்திருந்தன. யானைகள், எருதுகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், மான்கள், புலிகள், சிறுத்தை, கரடி எல்லாம் நிறைந்து பயங்கரமாயுமிருந்தது. மலையிலிருந்து நீர் பெருகி நிறைந்தோட, பல விதமான புதர்களும் குகைகளும் காடெங்கும் காணப்பட்டன.

வண்டிப் பாரம் அதிகமாயிருந்ததால் சஞ்சீவகன் என்கிற எருது மிகவும் தளர்ந்து போயிற்று. ஒரு இடத்தில் மலையருவியில் பெருகிவந்த நீர் வெகுதூரம் பரவியோடி, அதனால் குழம்பியிருந்த சேற்றில் சஞ்சீவகனின் ஒரு கால் சிக்கிக் கொண்டது. எப்படியோ எருது நுகத்தடியிலிருந்து அறுத்துக்கொண்டு விழுந்தது. வண்டிக்காரன் பரபரப்புடன் வண்டியைவிட்டு இறங்கியோடி பின்னாலேயே வந்து கொண்டிருந்த வியாபாரியை நெருங்கினான். அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு, ”எஜமானே! சஞ்சீவகன் களைப்படைந்து சகதியில் விழுந்துவிட்டது” என்று தெரிவித்தான்.

இதைக் கேட்டதும் வணிகன் வர்த்தமானன் மிகவும் கவலையடைந்தான். ஐந்து நாட்களுக்குப் பயணத்தை நிறுத்தி வைத்தான். என்றாலும், சஞ்சீவகன் குணமடைய வில்லை. பிறகு அதைக் காப்பாற்றுவதற்குத் தேவையான தீவனத்துடன் சில ஆட்களை நியமித்து அவர்களிடம், ”சஞ்சீவகன் உயிரோடிருந்தால் ஓட்டிக் கொண்டு வாருங்கள்; இறந்து போனால் கிரியைகள் செய்துவிட்டு வந்துவிடுங்கள்” என்று உத்தரவு போட்டு, தான் செல்ல வேண்டிய ஊருக்குப் பயணம் தொடர்ந்தான். காட்டில் அபாயங்கள் அநேகமுண்டு என்ற பயத்தால் அந்த ஆட்கள் மறுநாளே காட்டைவிட்டு நீங்கி தங்கள் எஜமானனிடம் சென்று, ”சஞ்சீவகன் இறந்து விட்டதால் அதற்குத் தகனக்கிரியைகள் செய்துவிட்டு வந்தோம்” என்று பொய் சொன்னார்கள். இந்தச் செய்தியைக் கேட்ட வணிகள் ஒரு கணம் துக்கப்பட்டான்; பிரேதத்துக்குச் செய்யவேண்டிய ஈமச் சடங்குகளை நன்றியறிதலோடு அவனும் செய்தான். பிறகு ஒரு தடங்கலுமில்லாமல் மதுராபுரி வந்து சேர்ந்தான்.

சஞ்சீவகன் அதிர்ஷ்டசாலி; ஆயுளும் கெட்டி போலும். மலையோடையின் நீர்த்திவலைகளிலே உடம்பைத் தேற்றிக் கொண்டு மெதுவாக நடந்து சென்று யமுனா நதிக்கரையை எட்டியது. மரகதம் பரப்பிவைத்தாற்போல் காணப்பட்ட புல்வெளிகளில் சஞ்சீவகன் நுனிப்புல் மேய்ந்து சில நாட்களிலிலேயே சிவபிரானின் நந்திபோல் பருத்துக் கொழுத்தது. திமில் வளர்ந்தோங்கி, பலசாலியாயிற்று; தனது வளைந்து வளர்ந்த கொம்புகளின் நுனியால் தினந்தோறும் எறும்புப் புற்றுக்களில் முகடுகளை முட்டிப் பெயர்த்தெறிந்து யானைபோல் விளையாடிக் கொண்டிருந்தது.

இப்படியிருக்கையில், ஒருநாள் பிங்களகன் என்ற பெயருடைய சிங்கம், சகல விதமான மிருகங்களும் புடைசூழ, யமுனா நதிக்கரைக்கு நீர் குடிக்க வந்தது. அங்கே சஞ்சீவகன் பலமாக முக்காரம் போடுவதைக் கேட்டது. சிங்கத்துக்கு ஒரே மனக் கலக்கமாய்ப் போயிற்று. அந்த உணர்ச்சியை மறைத்துக்கொண்டு, ஒரு பரந்த ஆலமரத்தின் கீழ் மிருகங்களையெல்லாம் நான்கு வட்டங்களாக அணிவகுத்து நிறுத்தியது. இதற்குச் சதுர் மண்டலாவஸ்தானம் என்று பெயர்.

சதுர் மண்டலாவஸ்தானம் என்பது இதுதான்: சிங்கம், சிங்கத்தின் மெய்க்காப்பாளர்கள், மத்தியதர சிப்பந்திகள், ஏவலாட்கள் என்ற வகையில் நான்கு வட்டங்களாக மிருக இனம் பிரிக்கப்பட்டு இருக்கும். காட்டிலுள்ள ராஜ்யங்கள், தலைநகரங்கள், பட்டணங்கள், கிராமங்கள், வியாபார ஸ்தலங்கள் குடியேற்ற ஸ்தலங்கள், எல்லையோர ஊர்கள், மான்யங்கள், மடாலயங்கள், பொது இடங்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதற்குத் தனது ஸ்தானத்தில் சிங்கம் இருந்தது. சிங்கத்தின் மெய்க்காப்பாளர்களாகச் சில மிருகங்கள் இருந்தன. மத்தியதர அந்தஸ்திலுள்ளவை ரொம்பவும் குறைவாகவோ, ரொம்பவும் அதிகமாகவோ இல்லாமல் மிதமான எண்ணிக்கையில் இருந்தன. எராளமான ஏவலாட்கள் எல்லைப் புறங்களிலே வசித்தன. இம்மூன்று வர்க்கங்கள் ஒவ்வொன்றும் மேல் நிலையிலிருப்பவன், மத்திய நிலையிலிருப்பவன், கீழ்நிலையிலிருப்பவன் என்றபடி மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

மந்திரிகளும், நெருங்கிய நண்பர்களும் புடைசூழ பிங்களகன் இப்படித்தான் ராஜ்யபாரம் நடத்திவந்தது. அதன் அரசாட்சியிலே வெண்குடை, வெண்சாமரம், வாகனங்கள், கேளிக்கைகள் போன்ற படாடோபங்கள் எதுவும் இல்லை. இல்லாமற்போனாலும், நடிப்பற்ற உண்மை வீரம் தரும் பெருமையினால் அதன் ஆட்சி உயர்ந்து விளங்கியது. தோல்வியறியாத ரோஷமும், கர்வமும், நிறைவான தன்மதிப்பும், பிங்களகனின் பிறவிக் குணங்களாகும். கட்டற்ற அதிகாரத்தில் அதற்கு ஒரே மோகம்; தனக்குப் போட்டியாகத் தலைதூக்க யாரையும் விடவில்லை. பிறருக்குத் தலைவணங்கிக் குழைந்து பேசும் வழக்கம் அதற்குத் தெரியாது. பொறுமையின்மை, ஆக்ரோஷம், கோபம், பரபரப்பு ஆகியவற்றைக் கொண்டுதான் தன் காரியங்களைச் சாதித்து வந்தது. பயமின்றித் திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப்பிடித்துக் கெஞ்சுவதை வெறுப்பது, மனக்கலக்கமின்றி இருப்பது- இவைதான் அதன் பௌருஷத்தின் லட்சியங்கள். இச்சகம் பேசிக் காரியத்தைச் சாதிக்கிற உபாயத்தைப் பிங்களகன் கையாண்டதில்லை. அதற்கு மாறாக, முயற்சி, வீரம், சுயகௌரவம் ஆகியவற்றை நம்புவதிலே பிறக்கும் சோபையிலே அது பிரகாசித்தது. பிறர்க்கு அடிமை செய்யாமலும், பிறருடன் சேராமலும், தன்னைப் பற்றிய கவலையெதுவும் இல்லாமலும் இருந்தது. பிறருக்கு உபகாரம் செய்து சந்தோஷமடைவதிலேயே தன் வீரத்தைக் காட்டியது. தற்காப்புப் படைகளைப் பெரிதாக்க அதற்கு எண்ணமில்லை என்றபோதிலும், அதை யாராலும் வெல்ல முடிய வில்லை.

அற்பப் புத்தியும் அதற்குக் கிடையாது; வரவுசெலவுக் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. சுற்றிவளைத்துப் பேசுவதும், காலத்திற்கேற்ற கோலம் போடுவதும் அதனிடம் கிடையாது. உயரிய நோக்கங்கள் கொண்டு உற்சாகத்தோடு இருந்தது. ஆயுதங்களையும், நகைகளையும் அது திரட்டிக் குவிக்கவில்லை; ஆறுவித உபாயங்களைப் பற்றிச் சிந்திப்பதிலும் நேரம் போக்கவில்லை. அதிகாரத்தின் மேல் அதற்கு அசாதாரணமான ஆசை. அது யாரையும் நிந்திக்கவுமில்லை; யாரும் அதனிடம் அவநம்பிக்கை கொள்ளவுமில்லை. தனது மனைவிகளையும், அவற்றின் கண்ணீர்ப் பெருக்கையும், கூச்சல்களையும் அது சட்டை செய்யவில்லை. மறைவிலிருந்து தாக்குபவர்களையும் அது லட்சியம் செய்யவில்லை. அது குற்றங்குறையற்றது. ஆயுதப் பிரயோகத்தில் அதற்குச் செயற்கைப் பயிற்சி கிடையாது. ஆபத்து வருவதை எதிர் பார்த்து அறியும் சக்தி அதற்கு உண்டு. ஏவலாட்களின் உதவியின்றியே அதற்கு உணவும் இருப்பிடமும் திருப்தியாகக் கிடைத்தன. வேற்றுக்காடுகளைக் கண்டு அது அஞ்சினதில்லை; நிர்பயமாய் நிமிர்ந்த தலையுடன் நடந்து திரிந்தது. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

வலிமையும் கர்வமுங்கொண்டு தனியே காட்டில் திரியும் சிங்கத்திற்கு ராஜ தந்திரமும் சாஸ்திரமும் தேவையில்லை. அதனை எல்லா மிருகங்களுமே ”ராஜா” என்று சொல்லி வணங்குகின்றனவே!

சிங்கத்திற்கு மகுடாபிஷேகமும், சடங்குகளும் மிருகங்கள் செய்து வைக்க வில்லை. சுய பராக்கிரமத்தினாலல்லவா சிங்கம் ராஜ பதவி பெற்றது?

மதநீர் பெருக்குகின்ற யானையே சிங்கத்திற்கு மாமிசம், விரும்பிய உணவு கிடைக்காவிட்டால் சிங்கம் புல்லைத் தின்னாது.

பிங்களகனிடம் கரடகன், தமனகன் என்று இரண்டு நரிகள் இருந்தன. அவை மந்திரி குமாரர்கள், தற்போது வேலையற்றிருந்தன. அவை இரண்டும் பேசிக்கொள்ள ஆரம்பித்தன:

”பிரியமுள்ள கரடகனே! அதோ பார்! நீர் குடிப்பதற்காக வந்த நம் எஜமானர் ஏன் மனங்கலங்கி நிற்கிறார்?” என்றது தமனகன்.

”நண்பனே! இந்த விவகாரம் எல்லாம் உனக்கு எதற்கு?

அனாவசியமான விஷயத்தில் தலையிட விரும்புகிறவன், ஆப்பைப் பிடுங்கிய குரங்குபோல் தன் உயிரைத்தான் இழக்கிறான் என்று வழக்கமாய்ச் சொல்வார்கள்”

என்றது கரடகன்.

”அது எப்படி?” என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்ல ஆரம்பித்தது.

அன்னபூர்னா ஈஸ்வரன்

Series Navigationதீராதவை…!காண்டிப தேடல்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Comments

Leave a Reply to விருட்சம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *