பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்

author
0 minutes, 24 seconds Read
This entry is part 5 of 14 in the series 28 ஜூன் 2020

விநாயகம் 

‘சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்” என்ற முனைவர் பீ பெரியசாமி அவர்கள் திண்ணையில் (22 ஜீன்) எழுதிய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட‌ சில கருத்துக்களையொட்டி கீழ்க்காணும் கட்டுரை எழதப்படுகிறது.

கட்டுரையாசிரியர் தொடக்கத்திலேயே கட்டுரைத் தலைப்பை (‘சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்’  ) மறந்து விடுகிறார்.   சங்க இலக்கிய காலம், பொதுவாக,  கி மு 3 லிருந்து கி பி 2 வரை கொள்ளப்படுகிறது.  கி மு வே அன்று. கி பி தான் என்பாரும் உளர்.  இக்காலத்தைப் பற்றித்தான் தலைப்பு.  ஆனால் ஆசிரியர் காப்பிய கால சிலப்பதிகாரத்தைக் காட்டுகிறார்.  சிலப்பதிகாரம் சங்க நூலன்று.  சிலர் அது சங்க நூலே என்றாலும், அது காட்டும் தமிழர் நாகரிகம் வடவிந்திய பண்பாடு கலந்தவொன்று.  சங்க இலக்கியத்தில் சனாதன கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை.  சிலப்பதிகாரம் அதை நன்கு செய்கிறது.  சனாதன முறைப்படியே கோவலன்-கண்ணன் தீ வலம் வந்து புரோஹிதரால் நடத்தப்பட்ட மணம்.  ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை’ ) அம்மி மிதித்து அருந்ததி பார்த்த மணம் ! சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல், என்று சொல்லி சிலப்பதிகாரத்தைக் காட்டுகிறார்.  இதைக்கூட விட்டுவிடலாம். விவேக சிந்தாமணியையும் அல்லவா காட்டுகிறார்? அது இடைக்கால காப்பியம் கூட அல்ல.  பழந்தமிழ் இலக்கியத்தில் விருந்தோம்பல் என்று தலைப்பே சரியானது. 

சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் ‘விருந்தோம்பல்’ என்றால் என்ன? என்று அடிப்படையைச் சொல்லிவிட்டு கட்டுரை தொடங்க வேண்டும்.

‘விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் நினைக்கின்றனர். ஆனால் உறவினர் வேறு விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களையே விருந்தினர் என்று குறிப்பிடுவர்.’  என்கிறது கட்டுரை.

முன்பின் அறியாத புதியவர்கள் என்றால் யார்? அவர்களேன் நம் வீட்டுக்கு வருகிறார்கள்? வள்ளுவர், இளங்கோ, ஏலாதி, விவேக சிந்தாமணி என கட்டுரையில்  சுட்டப்பட்ட இவற்றுள் எங்கானும் முன்பின் தெரியாதவர்களுக்குத் தொடர்புபடுத்தியதுதான் விருந்தோம்பல் என்றிருக்கிறதா? 

விருந்தோம்பல் இல்வாழ்க்கையின் சிறப்பாகும்.  அதைப் பேணாதார் செல்வம் செல்வமே அல்ல. இப்படிப்பட்ட கருத்துக்களை மட்டுமே வள்ளுவர் வைக்கிறாரே ஒழிய விருந்தோம்பல் யாருக்குச் செய்யப்படுவது என்பதை அவர் சொல்லவில்லை. சம காலத்தவருக்கு அவர் எழுதினார்.  அவர்கள், தான் எதைக்குறிப்பிடுகிறேன், என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதினார். எனவேதான் குறிப்பால் உணர்த்தும் ஈரடிச்செய்யுள்.

புதியவருக்கு என்பது ஊகமே. ஓரிடத்தில், அகநானூற்றில் மாற்றூர்கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் ‘விருந்து’ என்ற சொல்லை ‘புதியவர்’ என்ற பொருளில் கையாண்டுள்ளார்.  “விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,

வேந்தனும் வெம்பகை தணிந்தனன்” (அகம்.54).  எனவே விருந்து என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருகிறது.

‘இத்தனை நாள் கோவலன் இல்லாமல் விருந்தோம்பல் போய் விட்டதே! என்று அழுகிறாள்.” என்கிறது கட்டுரை. பாடல் என்ன சொல்கிறது?

அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை

சனாதனக்கொள்கைகளுள் ஒன்று பிராமணர் வீடுதோறும் வரும்போது, அவர்களுக்கு உணவிட வேண்டும்; துறவிகள் வரும்போதும், அறவோர் வரும்போதும் உணவிட வேண்டுமென்பதும். கண்ணகி இம்மூன்று செயல்களைச் செய்ய முடியவில்லை என்கிறாள். அதில் விருந்தோம்பல்தான் முதலில் வருகிறது. அதைச்செய்ய முடியவில்லையே என அழுகிறாள்; என்பது பாடலைச் சரியாகப் புரியாமல் வந்த வினை.  பாடலில் ஒன்றுக்கொன்று இளைத்ததில்லை எனறே வருகிறது. மற்றும், அறவோர், அந்தணர், துறவிகளுக்கு அளித்தல் விருந்தோம்பல் இல்லை. மதவழி வந்த வாழ்க்கை பண்பாடு. மதவழி கடமையைச் செய்ய முடியவில்லையே என்பதுதான் கண்ணகியின் கவலை.

.

”ஒரு ஆண் தனித்து இருந்தாலும், பெண் தனித்து இருந்தாலும் விருந்தினர் வரமாட்டார்.” என்கிறது கட்டுரை.  சொல்லிவிட்டு வரும் விருந்தினர், முன்சொல்லாமல் வருபவர். முதல்வகையின் போது கண்டிப்பாக கணவன்-மனைவி எதிர் நோக்கி காத்திருப்பார்கள். இரண்டாவது வகையில், வந்தவர் ‘அப்புறமா வரேன்’ என்று தனியாக இருந்த ஆணிடம்  சொல்லிவிட்டுப் போய் விடுவாரா? பெண்ணிடம் சொன்னால் அது சரி.  ஆணைக் கண்டுமா?

”பகைவர்களை விருந்தினர்களாக வரவேற்கும் முறை தமிழர்களிடம் இருந்ததில்லை. தமிழர்கள் பகைவர்களுக்கு தலை வணங்க மாட்டார்கள். உதவி தேடிவந்தவர்களையே விருந்தினராக ஏற்றுக் கொண்டு உபசரித்து வந்தனர். ” என்கிறது கட்டுரை.

பகைவர்கள் ஏன் விருந்தினர்களாக வருவார்கள்? வந்தால்தானே வரவேற்பார்களா என்ற கேள்வி எழும்? உதவி தேடி வந்தவர்கள் என்பவர் யார்? அவர்கள் எப்படி விருந்தினர்கள் ? இக்குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணம் விருந்தோம்பல் என்ற சொல்லுக்கே சரியான விளக்கம் இல்லாததனால்.

புறம் 42 ஐக் குறிப்பிடுகிறார். அதில் கேளிர் என்றுதான் சொல்லப்படுகிறது.  கேளிர் என்றால் உற்றார், உறவினர்கள்.  நம்முடன் வாழ்பவர். புதியவர்கள் அல்ல. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால் எங்கு போய் வாழ்ந்தாலும் அங்கு உடனுறைபவர்களைப் புதியவர்களாகப் பார்த்து விலகாமல் அவர்களுள் நீயும் ஒருவன் என நினைத்து வாழ்! என்று பொருள்.

சிலப்பதிகாரப்பாடலோ, விவேக சிந்தாமணிப்பாடலோ, ஏலாதி பாடலோ, விருந்தோம்பலும் இல்லறப் பண்பாடுகளுள் ஒன்றுதான் என்கின்றனவே தவிர, விருந்தோம்பலே அனைத்திலும் முதலானது என்று சொல்லவில்லை.

சங்ககாலத்தமிழர், இடைக்காலத் தமிழர், இக்காலத்தமிழர் வெவ்வேறு ஆட்கள்.  வெவ்வேறு பண்பாட்டு வாழ்க்கை முறையைக்கொண்டவர். தமிழ் மொழிமட்டும்தான் இணைக்கிறது. இன்று விருந்தோம்பல் என்பது இல்லை. இருந்தாலும் அது தலை போகிற காரியமில்லை.  ஆனால் கட்டுரையாளரோ, தொடக்கத்திலேயே ‘என்றும் மாறாப் பண்பாடு தமிழருக்கு” என்கிறார். 

சரி…ஏன் பழந்தமிழ் நாட்டில் விருந்தோம்பல் இல்வாழ்க்கையில் சிறப்பாக்கப்பட்டது எனபதற்கு ஊகத்தின் அடிப்படையில் தமிழறிஞர்கள் சொல்வது: அக்காலத்தில் மக்கள் நடந்துதான் ஊர்களுக்குச் சென்றார்கள்.  வெகு தொலைவில் உள்ள ஊருக்குச் செல்லும்போது இரவில் வழியிலுள்ள ஊர்களில் தங்க வேண்டும்; அல்லது பகலில் களைப்பில் தங்க வேண்டும். இவர்கள் இளைப்பாற திண்ணைகள் கட்டப்பட்டன.  ஊரின் நுழைவில் சுமைதாங்கி கற்கள் நட்டப்பட்டன. இவர்கள் முன்பின் தெரியாத வழிப்போக்கர்கள்.  இது விருந்தோம்பல் என்கிறார்கள். 

‘’தன் இல்லறத்திற்கு வரும் விருந்தினரை மெச்சுதலும், அவனிடத்து இனிமையான மொழி பேசுதலும், முகமலர்ச்சி கொண்டு நோக்குதலும், வருக என வரவேற்றலும், மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதும், அவன் மகிழும்படியான செய்திகளைக் கூறுதலும் வந்து சேர்ந்த அவனது அருகிலேயே அமர்வதும், விடை பெற்றுச்  செல்லும் போது நேசமுற்று பின் சென்று, மகிழ்வான முகத்துடன் அவனை வழியனுப்புதல் என ஒன்பது வித முறைகளில் ஒருவன் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறது.” இப்படி இயம்புகிறது கட்டுரை.  இவற்றையெல்லாம் யாருக்குச் செய்ய வேண்டும்? வழிப்போக்கர்களுக்கா? அல்லது வேறெந்த விருந்தினர்கள்? 

இரவுச்சாப்பாட்டை முழுவதும் வழித்துச்சாப்பிட்டு பாத்திரங்களைக் கழுவி விடாமல், கொஞ்சம் மீதி வைப்பதே இரவில் திண்ணையில் படுக்க வந்தவர் பசியாற கொடுக்கத்தான்.  விருந்தை நோக்கிக் காத்திருந்தாள் இல்லத்தாள் என்பதும் அதைத்தான் காட்டுகிறது.  யாராவது வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம்.  இரவில் வருபவர் அவரே திண்ணையில் படுத்தாலும் – அதாவது கதவைத் தட்டாமல் – வீட்டிலுள்ளோர் அரவம் கேட்டு திறந்து பார்த்து செய்வார்கள். குறிப்பாக ஊர்ப்பயணம் செல்லவேண்டிய மாதங்களில்: கோயில் விழாக்கள்; மணங்கள் நடக்கும் மாதங்களில். இவை போக ஊர் ஊராகச் சென்று வாழும் சாமியார்கள்.  இரவில் வந்து வழிப்போக்கர் திண்ணையில் படுக்க, அவருக்குப் படுக்க பாயும், உண்ண உணவும், தலையணையும் கொடுப்பது மரபு.  அக்காலம் அப்படி.

தங்களுக்குக் கிடைத்த ஒன்றை பிறருடன் பகிர்ந்து உண்ணுவதே விருந்தோம்பல் என்ற பண்பாட்டு கூறின் அடிநாதம்.  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே விருந்தோம்பல் அக்காலத்தில். இதில் தெரிந்தவர், தெரியாதவர் என்று வேறுபாடில்லை. மனித நேயத்தால் நிரம்பிய ஒரு சமூகக் கட்டுப்பாட்டை வலியறுத்தவே விருந்தோம்பல் அழுத்தம் கொடுக்கப்பட்டது. 

சங்க காலம் கூட்டுச்சிந்தனை கொண்ட சமூகம். எல்லா மக்களும் ஒரே வழி நடந்தார்கள்.  தனித்துவம் (individualism) என்பது ஐரோப்பிய சிந்தனை.  மறுமலர்ச்சி (Renaissance) காலத்தில் தொடங்கப்பட்டு வளர்ந்தது.  இன்று கூட, தமிழகத்தில் அஃது ஓம்பப்படவில்லை. தமிழ்ப்பண்பாடு கூட்டுச்சிந்தனையை போற்றி வளர்த்தது.  விருந்தோம்பல் ஓர் கூட்டுச்சமூகத்தின் விழுமியங்களுள் (values) ஒன்று.  அக்காலத் தமிழ்ப்புலவர்கள் கூட்டுச்சிந்தனையையே தங்கள் பாடல்களில் பிரதிபலித்தார்கள் வள்ளுவர், இளங்கோ உட்பட. 

*****

Series Navigationப.ப.பாவெகுண்ட உள்ளங்கள் – 5
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *