பதில்

This entry is part 12 of 26 in the series 30 டிசம்பர் 2012

தாம்பரம் ரயில் நிலையம்.முன் போலவா இருக்கிறது அதுதான். இல்லை. தமிழ் பேசுபவர்களைவிட இந்தி மொழி பேசிக்கொண்டு ராஜ நடை நடந்து செல்பவர்களே அதிகம்.
தமிழுக்குத்தாலாட்டு இந்திக்கு ,,,, என்னவென்றால் வே அது இது என்று கையில் கிடைத்த கரிக்கட்டியால் ரயில்வே சுவரில் எழுதிவிட்டு அப்போதைக்கு கண்ணில் பட்ட இந்தி எழுத்துப் பெயர்ப்பலகைகளையெல்லாம் எல்லாம் ஔசியில் கிடைத்த தார் பூசி கன்னா பின்னா என குழப்பியும் கீறியும் விட்டு என்னைப்பார் என் அழகைப்பார் என்கிறபடி ஒரு காலத்தில் நாம் மட்டுமேதான் இந்த ஊரைச் சுற்றி ச்சுற்றி வந்தோம். அது எல்லாமே பாட்டி மஞ்சள் குளித்த காலத்துக் கதை..
பிஹார்க்காரனும் ஒரியாக்காரனும் அவரவர்கள் தாய்மொழயில் பேச மலையாளம் தெலுங்கு உருது என பல மொழிகளின் பேச்சொலிகள் நம்மால் இப்போது இங்கே கேட்கமுடிகிறது
சப்பை மூக்காய் வெள்ளை நிறத்து நேப்பால்காரர்கள். அதுதான் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் முழுதும் இறைந்து கிடக்கும் அந்த பரட்டைத்தலை அரைக்கால் சட்டை அணிந்த குள்ளர்கள் பார்க்கும் திசை எல்லாம் எப்படி சந்தோசமாய்த்திரிகிறார்கள்…
தாம்பரம் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுகொண்டு ரயிலுக்குக்காத்திருக்கும் குழாத்தில் நான்கு பேரில் மூவர் காதில் நீட்டமாய்க் கொம்பு சொறுகி என்ன எல்லாமோ பாட்டு கேட்கிறார்களாம். நிச்சயம் அது அந்த பெங்கலூரு ரமணியம்மாள் பாடும் அந்தப் பழநி முருகன் மலையைச்சுற்றி வரும் பால்காவடி பன்னீர்க் காவடிப்பாடு மட்டும் இல்லை. அடிக்கொரு தரம் அவர்கள் ஏன் அண்ணாந்து ஆகாயத்தை விடாமல் வெறித்துப்பார்த்துக்கொகொண்டே இருக்கிறார்கள். ஆகாயத்தில் அங்கு ஏதும் தெரியலாமோமோ என்னவோ. இடை இடையே அவர்களே தலையை வலிப்பு வந்த மாதிரிக்கு விடாமல் ஆட்டுகிறார்கள்
. செல்போன் என்னும் சின்ன சைத்தான் இந்த பூலோகத்தில் அவதரித்தபின்னர் சக மனிதர்களின் பார்வையில் பேச்சில் அன்பு என்னும் அரும்பொருள் சொல்லிக்கொள்லாமலே விடைபெற்றுக்கொண்டுவிட்டது. நல்லவர்க்கு அடையாளம் அப்படிப் சொல்லிக்கொள்ளாமல் போய்விடுவது என்கிறார்களே.. இந்தக் கலியுகம் மட்டும் தன் சுய குணத்தை எப்படி கைவிடும்.
இத்தனைக்கும் மத்தியில் விஷயம் ஒன்று சொல்ல வேண்டும் சென்னை மின் இழுவை ரயில் சவுகரியம் மாதிரி எங்கேயும் வருமா என்ன. அத்தனை சவுகரியங்கள்.. மக்கள் இனத்தில் எத்தனை வகை வகையோ அத்தனை பேருக்கும் அத்தனை வசதி.
காதலில் டக்கென்று ஆரம்பிக்கலாம். நோக்கும் திசையெல்லாம் காணக்கிடைக்கும் அதுவே காதல். அது என்ன என்பதுவே அறியா ஒரு ரெண்டுங்கெட்டான் வயதில் வலிய வந்து ஆக்கிரமித்து வாழ்க்கையைத் தொலைக்க வைத்துவிடும். பாவி. தொலைந்துபோதல் என்றால் அதுதான் சரியாய் என்ன என்று பின்நவீனத்துவ மேதாவிகள் வினாக்கள் வைக்கலாம். நாம் பெற்ற செல்வங்கள் காதல் என்னும் ராரட்ச சுனாமியை சந்திக்கும் வரை கண்டிப்பாய் நம் விவாதங்களும் செழுமையோடு தொடரும்.
பாலியல் ஈர்ப்பு அது ஒரு உயிரிய வேதியியல் பிரச்சனை. உயிர் வாழ்வன இற்றுக்கொண்டுவிடாமல் பூவுலகில் தொடர்ந்து போய்க்கொண்டிருக்க விடப்பட்டுள்ள இயற்கையின் ஆணை. தெரு நாய்களின் காதல் மும்முரம் பார்த்து அய்யய்ய என்று முகஞ்சுளிக்க ஒரு நியாயமுமே இல்லை
. ரயில்வே நடைமேடைகளில் இப்படி எத்தனையோ அரங்கேறும். இத்யாதிகார்யங்களில் மிச்ச சொச்சமாய் வரும் அந்த பாவமோ அது புண்ணியமோ ரயில்வே துறைக்குத்தான் போய்ச்சேரும் என்பதில் மட்டும் யாருக்கும் சந்தேகமில்லை.
போச்சி போ என்கிறபடி. திருகி வளைக்கும் நெளிக்கும் இளிக்கும் அந்தக் காதல் வயப்பட்டோர் நடப்புகள் அருகில் இருப்போரை நிலைகுலையச்செய்துவிடும். நிகழ் சேட்டைகள் நானாவிதம். இவை அவரவர்க்கு எதிர்ப்படும் மன்மத மலர் முள்ளின் ஆழம் பொருத்தது. அவன் அன்றி அணுவும் அசையாது என்றால் அந்த இதுவும் சேர்த்தா என்ன. இருக்கலாம் நிற்பதும் நடப்பதும் அவன் செயலாலே காண்பதெல்லாம் அவன் கண்விழியாலே என்று ஒத்துக்கொண்டுவிட்டால் பிரச்சனை எப்போதுமில்லை..
. ஒடும் மின் சார வண்டியில் பிச்சைக்காரர்களின் தொடர் கூவல். இவர்களும் ரயில்வேயின் ரன்னிங் ஊழியர்களின் கணக்கில் சேர்த்தி என்கிறபடி.. ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூபாய் அய்நூறுக்கு குறையாத சம்பாத்யம். இந்தப்படிக்கு விஷயதானம் என்னிடம் சைதாப்பேட்டை பிளாட்பார பெட்டிக்கடைக்காரர் சொன்னது. பார்வையற்ற பிச்சைக்காரர்களில் ஒருவரை நான் கேட்கவும் அவரும் வழிமொழிந்த விஷயம்தான்.. ஒருவர் என்றால் அந்த பிச்சைக்காரரைத்தான் சொல்லுகிறேன். அவர் என்னிடம் நாள் ஒன்றுக்குப் பிச்சையில் கிடைப்பது எழுநூற்று ஐம்பதென்றார். இதனை நீங்கள் எல்லாரும் ஒருக்கால் நம்பமாட்டீர்கள் ஆகவேதான் ஒருமாதிரி கொஞ்சம் குறைத்துச்சொன்னேன்.
பிச்சை எடுத்துக்கொண்டு கோஷ்டியாய் வருவோர். சோடியாய்த் திரிவோர். தாயும் குழவியும் கனவனும் மனைவியும் .நண்பர்கள் குழாம் என ஒருவரைப்பிடித்துக்கொன்டு ஒருவர். இரும்பு வளையம் புகும் பச்சிளம் சிறுமி, டமுக் டட்டு டமுக்கு டட்டு என நீட்டமான உருட்டுப் பம்பையில் ஒலி எழுப்பும் அந்தச்சிறுமியின் தாய். இந்தக்கோஷ்டியோடு அந்தச்சிறுமியின் தகப்பன் மட்டும் எப்போதும் வருவதே இல்லை.
காவடிப்பாட்டு கல்வாரிப்பாட்டு நாகூரார் பாடல் சீர்காழி. கோவிந்தராஜன் பாட்டு என எல்லாம்தான் கேட்க முடிகிறது.. குரல் வளம் கூடித்தெரிந்தால் அதற்கு த்தனி மரியாதைதான். பிச்சைக்காரர்களில் சிலர் ஒலிப் பெறுக்கி வைத்துக்கொண்டும் பாடுகிறார்கள். மின்சார ரயில் பிச்சைக்காரர்கள் ஆயிற்றே ஒரிஜினல் பேட்டா செறுப்பு அணிந்து இருக்கிறார்கள். வண்ணத்தில் நாய்த்தோல் ஒக்கும் அந்த சான்டக் சிலிப்பர் அணிவதில்லை. பளிச்சென்று பவ்யமாய் இருக்கிறது எப்போதும் அவர்களின் காலணி.. காலணி என்பது அவ்வளவு சரியில்லையோ. அதனை மிதியடி என்பதும் ஒரளவுக்கு த்தான் சரி
அது இருந்துவிட்டுப்போகட்டும் தமிழாய்ந்தோர் கவலை.
. விண்ணென்று தோள்பட்டையில் தொங்கும் த்தோல்பை. அதனுள் உறையும் செல் பேசி. கச்சிதமாக ஒரு டார்ச்லைட் எது இல்லை. மினரல் வாட்டர்பாட்டல்தான் பிச்சைக்காரர்களின் தாகத்திற்கு.
போதும் கதைப்போட்ட பீடிகை நாம் சொல்ல வேண்டிய மெயின்கதைக்கு வருவோம்
. பத்து மணிக்குள் நான் அலுவலகம் சென்றாக வேண்டும் கட்டை விரல் ரேகை வைத்துவிட்டுத்தான் யாருக்கும் அலுவலகத்தின் உள்ளே நுழைய அனுமதி. மாலை பணிமுடிந்து திரும்பும் சமயமும் அந்தக்கட்டைவிரல் ரேகை வைக்கவேண்டும்.. பத்து நிமிடங்கள் தாமதம் மன்னிக்கப்படும். மிகுவது அரை நாள் விடுப்பு விழுங்கி விடும். மாதம் முடிந்தால் சம்பளம் போடும் அந்த பேபில் செக்ஷனுக்கும் இந்த கட்டை விரல் ரேகை மெஷினுக்கும் ஒரு முடிச்சுப்போட்டு இருக்கிறார்கள்..
தாம்பரத்து ஒன்றாம் நடைமேடயில் ரயில் வந்து நின்றது . மாரிக்காலத்து மண்தெருவில் ஊர்ந்து செல்லும் மரவட்டைக்கணக்காய் இரண்டு புறமும் முகம்கொண்ட மின்சார இழுவை ரயில். வடக்குத்திசை நோக்கி ரயில் விரைந்தால் தெற்கில் இருக்கும் டிரைவருக்கு பச்சைக்கொடியும் சிவப்புக்கொடியும் ஆட்டும் அல்லது காட்டும் கார்ட் வேலை. ரயில் முகம் திருப்பிக்கொண்டு தெற்கு நோக்கிப் புறப்பட்டால் வடக்குப்பகுதி டிரைவருக்கு அதே கார்டு வேலை. இவர்கள் வசம் மேலும் கீழும் ஆட்டிக்காட்டும் வண்ண ஒளி பீச்சும் டார்ச் விளக்கும் தொண்டைகட்டிய விசிலும் உண்டென்பது உலகம் அறிந்தது.
இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்றில் ஏறி ஒரு இருக்கை பிடித்தாயிற்று. பரமபதத்தில் இடம் பிடித்த டிகிரிக்கு அல்லவா மகிழ்ச்சி. ஒரு சாண் இடம் பிடித்து அமர்ந்து விட்டோரின் முகத்தில் தேஜசை பார்க்கவேண்டும்.. மக்கள் கூட்டம் உள்வந்து இடம் கிடைக்காமல் திணறுவது பார்த்துப்பார்த்து இருக்கை கிடைத்து முன்னமே அமர்ந்துவிட்ட மக்களின் முக தேஜசு எப்படிக் கூடிக்கொண்டே போகிறது.
மின்சார ரயில் வண்டி, தான் யாரோடோ கோபித்துக்கொண்ட மாதிரிதான் தன் பயணத்தைத்தொடங்குகிறது. திடீர் என்று ஒரு சந்தேகம். நாம் உட்கார்ந்திருப்பது முதல் வகுப்புபெட்டியாக இருந்துவிட்டால் என்ன செய்ய. கழுத்தில். நீள டை என்ற ஒன்று கட்டிக்கொண்டு அபராத ரசீது கிழித்துக்கொடுத்து பணம் வசூலிக்கும் ரயில்வே டிக்கட் செக்கர்களிடம் எப்படித்தப்புவது. யாருக்கும் வர வேண்டிய நல்ல சந்தேகம் தான். எப்படி இதனை நிவர்த்திப்பது. பெட்டியின் வெளிப்புறத்தில் மாத்திரம்தான் இது என்ன வகுப்பு பெட்டி என்று எழுதி வைத்துள்ளார்கள். பெட்டியின் உட்புறம் அதனை எழுதி வைக்கலாம். அப்படி இல்லையே. ஆக சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருக்கும் காலில் ஷூ இல்லை செருப்பு மட்டுமே இருந்தது .ஒருவர் இருவர் இடுப்பில் வேட்டிக்கட்டி கையில் இலவசமாய்க்கிடைத்த ஒரு துணிப்பை மஞ்சள் நிறத்தில் வைத்துக்கொண்டிருந்தனர். ஆக இது நிச்சயம் முதல் வகுப்பாய் இருக்கவே முடியாதுதான். மனதிற்குச் சற்றுத் தெம்பாக இருந்தது.
குரோம்பேட்டை நிறுத்தத்தில் ஏறியவர்கள்தான் இவர்கள்.
எனக்கு முன்பாக இப்போது பார்த்தால் மஞ்சள் பைக்காரர்கள் ஒருவர் ஒருவராய்க்கூடிப் பத்து பேருக்கும் மேலாக நின்று கொண்டிருந்தனர். அது சரி குரோம்பேட்டையை ஏன் ரயில் வே க்காரர்கள் கிரோம்பேட்டை என எழுதிவிட்டிருக்கின்றனரோ விளங்கவில்லை. இந்தி மொழியில் குரோம்பேட்டை என்று சரியாக எழுதி விட்டு தமிழில் மட்டும் கிரோம்பேட்டை என எழுதியிருப்பது யாது கருதியோ அது தெரிந்தால்தானே. க்ரோம் என்பது இலக்கனத்தவறு ஆக கிரோம் என்றால் குரோம்பேட்டை என எழுத வேண்டியதுதானே சரி.. விட்டுவிடுங்கள் ஒத்துவராத ரயில்வேக்காரர்களின் அந்த இலக்கணக் கழுதையை.
கிரோம்பேட்டையில் ஏறிய பதின்மரில் நான்கு பேருக்கு நெற்றியில் திருமண் இருந்தது. திருமண் என்றால் நெற்றியியில் போட்டுக்கொள்ளும் நாமம் (ராமம்) புரியாமலும் இருக்கலாம். மற்றெல்லாரும் பட்டை பட்டையாய் வெள்ளைப் பெயிண்ட்டால் கோடு போட்ட மாதிரிக்கு விபூதி இட்டுக்கொண்டு இருந்தனர். அவர்கள் சட்டையும் பேண்டும் மிடுக்காய் இருந்தது.. நங்க நல்லூரில் புது மார்டன் பள்ளி அருகே இப்படி பேண்ட்டு சட்டை மாட்டிக்கொண்டு ஒரு வீட்டில் அய்ம்பது பேருக்குக்கூடுவர். கூடிய பின் வேட்டிக்குள்ளாக கூடு மாறிக்கொள்வர். பேண்ட்டும் சட்டையும் அந்த நங்கநல்லூர் வீட்டிலேயே ஒய்வு எடுத்துக்கொள்ளும் .மாநகர் முழுவதும் அங்கிருந்து புரோகிதப் பிராம்ணர்கள் சப்ளை. கல்யாணமோ கருமாதியோ இழவோ பூணல் போடுவதோ கும்பாபிசேகமோ கணபதி ஹோமமோ எதுவானால் என்ன. மஞ்சள் நீராட்டு குழந்தை பிறந்த தீட்டு கழிப்பது எந்த எதுவானால்தான் என்ன எங்கும் அவர்கட்கு தவறாமல் வேலையுண்டுதானே. பிர்மத்தை அறிந்து கொள்ள முனையும் மேன் மக்கள். பிச்சைக்கரர்கள் என உருமாறி காசுக்குத்தம்மை அவ்வப்போது விற்றுக்கொள்கிறார்கள். அதே குலத்துப்பெண்களும் இங்கு வருவதுண்டு. காரியங்கள் அவர்கள் இல்லாமலா. மஞ்சள் கயிரோடு கைலாயம் போனவர்கள் இல்லை அந்த வைகுண்டம் போய்விட்டவர்களுக்கு இங்கே சடங்கு செய்து நாம் போய்ச்செர்ந்த அவர்களின் மனமது நிறைவு செய்ய வேண்டாமா. வாழ்ந்த மண்ணை விட்டுப் போயே சேர்ந்தவர்கள் மனம் குளிர வேண்டுமே. ஆனால் இந்த மாமிகளுக்கு இன்னும் உடைமாற்றிக்கொண்டு வர வேண்டிய அந்த அவசியம் மட்டும் வரவில்லை. காலம் இன்னும் எப்படியெல்லாமோ போகலாம். குரோம்பேட்டை பேண்ட்டு சட்டைப்பிராம்ணர்கள் எதோ கதை சொல்லிக்கொண்டே வந்தனர். தீனி ப்பண்டாரங்கள் அல்லது மன்மதக்குஞ்சுகள் பற்றியதாகவே அவர்களின் உரையாடல் தொடர்ந்தது.
நான் அமர்ந்திருந்தது மூவர் அமரும் இருக்கை. எதிரேயும் அம்மாதிரிதான். மூவர் இருக்கையில் நால்வர் அமருவதும் இங்கு வாடிக்கைதான். அது தானாகவே மட்டும் நடந்தும் விடாது. கேளுங்கள் கொடுக்கப்படும்தான்.கேட்டா பெறுவது என்று இறுமாப்போடு கூரையைப்பார்த்துக்கொண்டு நின்றால் யாரும் சட்டைசெய்ய மாட்டார்கள்.. எதிரே இருந்த இருக்கையில் மூவரும் பெண்களாய் உட்கார்ந்திருந்தார்கள். மூவரில் இருவருக்கு காதில் கொம்பு சொறுகி பாட்டு ஒடிக்கொண்டு இருந்தது.
இன்னொருத்தி கையில் செல் பேசி வைத்து அப்படி இப்படி எதனையோ அழுத்தி விட்டு அதனை நட்டு நட்டு பார்த்தாள்.
அந்த இடத்தில் முடி புதுசாய் முளைக்க அடிக்கொருதரம் தனியாய்ப்போய் அதனை ப்பார்த்துக்கொண்டாளாம். அந்த இடம் எது என்பதில் உங்களுக்கு ஏதும் குழப்பம் இல்லையே.
எங்கள் இருக்கையில் இன்னும் இருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்சார ரயிலுக்கும் தூக்கத்திற்கும் என்ன அத்தனை நெருக்கமோ.
வயது கூடிய ஒரு பெண்மணி அதுதான் அவளை ஒரு மூதாட்டி என்றே சொல்லிவிடலாம். அவள் என் சீட்டுக்கு எதிர் வரிசை அருகே வந்தாள். எனக்கு எதிரே இருந்த பெண்களிடல் தன்னால் நிற்க முடியவில்லை கொஞ்சம் இடம் கொடுங்கள் என்று கெஞ்சினாள். அழுதால் பிள்ளைக்கே பால் கிடைக்கிறது. ஆனால் என்ன செய்ய அது பொய்க்கிறதே உட்கார இடம். கொடுத்தால்தானே .யாரும் அசையவில்லை. முகத்தை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக்கி வைத்துக்கொன்டார்கள். இல்லை என்றால் வேறு திக்கில் திரும்பி தனக்கும் அந்தப்பெண்மனிக்கும் என்ன சம்பந்தம் என்கிற மாதிரி பாவித்துக்கொண்டார்கள். யாருக்கும் அந்தக்கிழவியை கண்ணால் பார்க்கக்கூட பிடிக்கவில்லை. இந்தப்பெண்கள் கிழங்களாக ஆக மாட்டார்களோ என்னவோ. நான் மட்டும் அந்த மூதாட்டியை ப்பர்த்துக்கொண்டே இருந்தேன். இடுப்பில் ஒரு துணிப்பை அதனில் பாதிக்கு எதுவோ கொண்டு நிறைத்து வைத்திருந்தாள். கையில் துணிப்பை வைத்திருப்போரும் புடவை க்கட்டிக்கொண்டு தெருவில் நடப்போரும் ஆதிவாசிகளாகவே மாநகரில் மதிக்கப்படுகிறார்கள். வேட்டி க்கட்டிக்கொண்டு சினிமா ட்ராமாவில் நடிக்கலாம். பிச்சைக்காரர்கள் மட்டும்தான் என்ன வேட்டிக்கட்டிக்கொண்டா பிச்சை எடுக்கிறார்கள் மாபெரும் தலைவர்கள் வேட்டியில் வீதி உலா வரலாம். மாபெரும் தலைவிகள் இங்கே புடவையில் ஊர் சுற்றி வரலாம் போகலாம்… கொள்ளிவைக்கும் நெருப்புக்கலயத்தை கையில் தூக்கி ப் சவ ஊர்வலத்தின் முன்பாகச்செல்பவன் வேட்டியை கோணா மூணா என இடுப்பில் கட்டியபடி அந்தக்கணம் தான் அடித்துக்கொண்ட மொட்டைத்தலையோடு நடக்கிறான். இல்லை இடுகாடு வெகுதூரம் என்றாகிப்போனால் பிணஞ்சுமக்கும் வன்டியில் ஒரமாக இடுக்கிக்கொண்டு அமர்ந்து கொள்கிறான் .கோவில் பூசாரிகள் இன்னும் மாநகரக்கோவில்களில் வேட்டிக்கட்டிக்கொண்டுதான் சூடம் காட்டுகிறார்கள். வட இந்தியக் கோவில் பூசாரிகள் முழு கோட் போட்டிருப்பார்கள். அங்கே குளிர் என்பது வேறு விஷயம்.
எனக்குப்பாவமாக இருந்தது.மூவர் அமரும் இருக்கை நால்வருக்கு பகிர்ந்து அளித்தல் சாதாரணமாக வாடிக்கை என்றாலும் அதற்கும் ராசி வேண்டும். வத்தல் தொத்தலாய் வருபவர்க்கு உடனே இடம் கிடைக்கும். கொஞ்சம் சரீரம் கனம் கூடி த்தெரிந்தால் இது ஏது இம்சை என யாருக்கும் அவர்களைப் கர்ஷிப்பதில்லை. கிராமத்துச்சாயலில் தலை காய்ந்து கீய்ந்து தெரிந்தால் அவர்களுக்கு எல்லாம் உட்கார இருக்கைதான் எதற்கு கீழே யே உட்கார்ந்துகொள்ளட்டும் ஒன்றும் தவறில்லை அவர்கட்கு அதுமட்டுமே சரி என்று யாரும் அலட்டிக்கொள்வதில்லை
தனக்கு முன்பாக இருப்பவர்கள் எல்லாருமே ஏனோ வெட்டியாய் மட்டுமே அலைகிறார்கள். இல்லை நம்மிடம் இருந்து எதையோ பிடுங்கி எடுத்துக் கொண்டுபோய் விடவேண்டு மென்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் இப்படித்தான் அடுத்தவர் பபற்றிய மாநகர வாசிகளின் மனோ ஒவியங்கள்.
அன்பும் பண்பும் எப்போதோ காய்ந்து கருகிப்போய் அவர்களின் முகங்கள் எத்தனை க்கோரமாய் வெளியூர்க்காரர்கட்கு அனுபவமாகிறது. இது பற்றியெல்லாம் எங்கேனும் விவாதிக்கமுடியுமா என்ன. விவாதிக்க ஆரம்பித்துவிட்டால் இங்கு பிறகென்னதான் பாக்கி இருக்கிறது நம்மை ஒரு மாதியாய்த்தான் பார்ப்பார்கள். அந்தப்பார்வை ஒன்று போதும் பல்லாயிரம் சொல்ல வேண்டுமா என்ன..
ஒருவர் சொல்வதை அடுத்தவர் காது கொடுத்துக் கேட்பதென்பதும் அதற்கு எல்லாம் இயைந்து விடை அளிப்பதென்பதும் எல்லாம் ஈனத்தனமானது என்று எப்போதோ முடிவுகட்டி விட்டு நடமாடும் மாநகர மனித உருக்கள் இவர்கள்.
ஒரு கிழவிக்கு உட்கார கொஞ்சம் இடம் அளிக்காத அவர்கள் கந்த சஷ்டி கவசம் அட்சரம் பிசகாமல் வாய்க்குள்லேயே முணு முணு என்று சொல்கிறார்கள். பாதையோரத்தில் பிள்ளையார் கோவில் சன்னமாய் துருத்திக்கொண்டு கண்ணில் பட்டுவிட்டால் முக ஜாடை காட்டி பிள்ளையாருக்கு சின்னதாய் ஒரு வந்தனமும் சொல்கிறார்கள்.. எதிரே நிற்கின்ற கிழவிக்கு சற்று இடம் அளிக்கலாம் நான்தான் கிழவியை அழைத்தேன், கொஞ்சம் கால்களை நெருக்கிக்கொண்டு உட்கார இடம் தந்தேன். பக்கத்தில் இருப்போர் அசைந்து அசைந்து கொடுக்க கிழவி நன்றாகவே உட்கார்ந்து கொண்டாள்.
‘ எக்மோர் வந்தா செத்த சொல்லுங்க’
‘நானும் அங்கதான் இறங்குறேன்’
‘ரொம்ப நல்லது சாரு’
கிழவி இப்போது வேடிக்கைப்பார்க்க ஆரம்பித்தாள். எனக்கும் மனம் ஏதோ சாதனை செய்துவிட்டமாதிரி பீற்றிக்கொண்டது..
பளிச்சென்று ஒரு பெண் சுடிதாரில் எதிரே தெரிய எதிர் சீட்டுக்காரர்கள் இப்போது மட்டும் எப்படியோ இடம் கொடுத்து அந்தப்பெண்ணை அமரச்சொன்னார்கள், நானும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். என்ன நியாயமோ எனக்குத்தான் அது தெரியவில்லை
கிழவிக்கோ தனக்குத்தறாத அந்த இடத்தை இன்னொருத்திக்கு எதிர் சீட்டுப்பெண்டிர் இப்போது.கொடுத்து விட்டிருப்பது பற்றி ஒன்றும் தெரியாது. கிழவி யாரேனும் உட்கார இடம் கொடுத்தால் அமருவாள் இல்லை என்றால் ஒன்றும் பிராது இல்லை. அவளிடம்..
சென்ட்தாமசு மவுண்ட் வந்தது. வண்டியில் ஒரே கூட்டம். ஊரின் ஆங்கிலப் பெயருக்கு தூயதாமசுகுன்றம் என்பதுதானே சரி அது என்ன பரங்கிமலை. பரங்கியன் என்றால் அதுதான் நம்மை ஆண்டுவிடைபெற்ற வெள்ளைக்காரன் ஆக வெள்ளயன் மலை அதுவே பரங்கிமலை. இந்தியிலும் ப ர ங் கி ம லை என்றுதான் எழுதியிருக்கிறார்கள். இது எல்லாம் கட்சிகட்டிக்கொண்டு யாரிடம் போய் யார்கேட்பது. யாருக்கு நீட்டி முழக்கி ஒரு முடிவுக்கு கொண்டுவர இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது. ஔடுவது ஔடுவது ஔடுவது தெரு நாய் கணக்குக்கு அனுபவப்படும் மனித வாழ்க்கை. பசிக்கு என்னவோ எதோ கிடைத்தது அவசர கதியில் வாயில் அள்ளிப் கொட்டிக்கொண்டு ஒடும் ஔட்டம். இல்லாவிட்டால் மளிகை மருந்து பால்க்காரன் வீட்டுவாடகை இதற்கெல்லாம் எப்படி பதில் சொல்வது.
விதிக்கப்பட்ட இடத்தில் கைகால்களை முடிந்த மட்டும் நீட்டி உறங்குவது உதிக்கும் சூரியன் கிழக்கில் வந்து பல பல என்று விடியும் வரை சென்னைக் கொசுக்களோடு ஒயா ப்போர். அது ஒரு தொடர்கதை.. மனிதனை எழுபிறப்பும் விரட்டியபடி அது தொடரவும்கூடுமோ.
மின் இழுவை வண்டியில் கைகளில் கிடைத்தது பற்றிக்கொண்டு தொங்கும் மக்கள்.
நான்தான் கேட்டேன். ‘ எவ்விடம் போறீங்க ஆயா எக்மோர்ல’
‘ ஆசுபத்திரிக்கு போயி என் கண்ணு காட்டுனும் அதான். ஒரு பொருள பாத்தா ரெண்டு மூணு இன்னும் கெனமாகூடம் தெரிது. எதிரே மொத்தமா சனம் நிக்குற மாதிரியே இருக்கு.து என்ன செய்வே சொல்லு. எங்கிட்ட நீ பேசுறே சாரு ஆனா எனக்கு உம் மொகமே ரெண்டா மூணா தெரிதே இ.து என்னா வெசாதின்றே.’.
வண்டி அடையாறு தாண்டிக்கொண்டிருக்க வேண்டும். மனித மலம் அழுகிப்போன துர்நாற்றம் வந்தால் அது சைதாப்பேட்டையின் முகப்பு நெருங்கிக்கொண்டிருப்பதாக முடிவு செய்யலாம்.
இப்படி ஊர் ஊருக்கு ஒரு துர்கந்தம் இங்கே.. தாம்பரத்தில் மூத்திர வாடை குரோம்பேட்டையில் பிணம் சுடும் வாடை காய்கறியொடு கனி அழுகல் வீச்சம் தென்பட்டால் அதுதான் தி நகர் தன் மடிசுமக்கும் அந்த மாம்பலம் மொத்தமாய் நகரத்து எலிகள் அழுகும் நாற்றம் தாங்கிவரும் கூவம் குடிகொண்ட நுங்கம்பாக்கம், மச்ச வாடை முப்போதும் வீசுபுகழ் எக்மோர், பொட்டலச் சோறு வீசி வீசி அழுகிப்போன பார்க் எனும் பூங்கா, பெருச்சாளிகள் அங்கங்குப் புழங்கி மணம் வீசு கோட்டை, பெயர் சொல்லவும் விளங்காத அழுக்குகளின் கூட்டு நெடியால் மக்களைத்துரத்தும் துறைமுகம் இது மாதிரி அழகுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை அத்தனையும் மெய்யாலுமேதான் சும்மா ஏதோ கதை சுவாரசியத்திற்கு மட்டும் இப்படி சொல்லிவிட்டேன் என்று யாரும் எண்ணவேண்டாம்.
இடுப்பில் ஒரு கைக்குழந்தை. அது எங்கோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தது.பிச்சை கேட்பவளுக்கு . வாய்ப் பேச வராததால் சின்ன மஞ்சள் அட்டையில் தன் தற்கால நிலவரம் எழுதி படிக்கத்தெரிந்த மக்களிடம் கேட்கும் ஹைடெக் பிச்சை. அந்தப்பெண் இந்த மென்னியைப் களேபரக்கூட்டத்தில் எப்படி இந்த காரியவித்தை எல்லாம் சமத்தாய் செய்கிறாளோ. யாரும் கை நீட்டி வாங்காத அந்த அட்டையை அவரவர் தொடையில் அவள் வைத்துக்கொண்டே செல்கிறாள் ..பத்து அட்டைகள் இருக்கலாம். பத்து பேரில் இருவர் காசு தருகின்றனர் என்பது உறுதி.
மேலே தொங்கும் அபாய சங்கிலியைப்பார்த்தேன். அது அனாதையாய்த்தொங்கிகொண்டிருந்தது. மிளகாய்ப்பழ நிறத்தில் ஒரு கைப்பிடி. அது என்னை இழுத்துப்பார் என்று சதா கெஞ்சிக்கொண்டே இருந்தது. இழுத்தால் என்ன ஆகிவிடுமோ அச்சம் மனம் நிறைத்துக்கொண்டது. அந்தக்காலத்தில் கும்பகோணத்தருகேயுள்ள ஆடுதுறை ரயில் நிறுத்தத்தில் நிப்பாட்டா மெயில் வண்டியில் நாதசுவர சக்ரவர்த்தி ராஜரத்தினம்பிள்ளை ஏறி அமர்ந்து விட்டால் தன் ஊர் திருவாவடுதுறை வந்ததும் அபாய சங்கிலியைப்பிடித்து இழுத்து விடுவாராம். ரயில் நிற்கும் சமயம் தயராய் அபராதத்தொகையை கையில் வைத்துக்கொண்டு இந்தாபிடி என்று முறைத்துக்கொன்டு தன் எதிரே தோன்றும் அந்த ரயில் அதிகாரியிடம் நீட்டுவாராம். ஆடுதுறை ஊராரும் அக்கம் பக்கது மக்களும் ரயிலை விட்டு இறங்கி அப்பாடி என்று நடக்க ஆரம்பித்து விடுவார்களாம்.’நீ இந்த ஊரூக்குத்தானே டிக்கட் வாங்கினாய் அங்கு மட்டுமே நீ இறங்கவேண்டும் என்று இன்னும் ரயிலில் சட்டம் கொண்டுவரவில்லை இவையெல்லாம் யார் .யாரோ சொன்னக்கதைதான். கொஞ்சம் மெய்யாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம் . ஆனால் சுவாரசியமாக இருக்கிறதுதான் இதே தோரணையில் .அண்ணாதுரையின் ஆங்கிலப்புலமைக்கு முத்திரை கூட்ட ஆளுக்கு ஒரு கதை சொல்வார்கள். விமானத்தில் அவர் ஏறும் சமயம் ஏணியில் தன்னோடு உடன் ஏறிய ஒரு பெண்ணின் புடவை தலைப்பு அவர் மீது அனாவசியமாய்ப் பட்டுவிட்டதாம். உடன் அவர் ‘ஐ ஆம் நாாட் எ லாரி டு காரி யுவர் சாரி’ என்று அந்தப்பெண்ணிடம் சொன்னாராம். யார் போய் இது அது எல்லாம் கேட்டு விசாரித்து இத்தனை காரட்டுக்கு மெய் என்று சர்டிபிகேட் தரவேண்டியிருக்கிறது.
என் அருகே அமர்ந்திருந்த மூதாட்டியைப்பர்த்தேன். அவளுக்கு தூக்கம் நிறைத்துக்கொண்டு வந்தது..
‘ முழிச்சிகிட்டு தான் இருக்கேன்’
‘தூங்கினாலும் ஒண்ணும் தப்பில்ல. நானு இறங்குறது எக்மோர்தான். நான் உங்களை இறக்கிவிட்டுடுவேன்’ பதில் சொன்னேன்.
மின் இழுவை வண்டியில் யார் தான் தூங்கவில்லை. ஔட்டும் டிரைவர் தூங்காமல் இருக்கலாமோ என்னவோ. நானாவித க்கடவுள்களைத் தியானம் செய்வோர், தோத்திரங்கள் பாராயணம் செய்வோர், கொண்டுவந்த டிபன் பாக்சைக்காலி செய்வோர், கிடைத்த பெண்களை விட்டு விடாமல் சைட்டு அடிக்கும் ஆடவர், மல்லிகை மொட்டு வாங்கி மடியில் கொட்டிக்கொண்டு சரம் தொடுப்போர். சென்னை எங்கும் இரட்டைப் பிரியாக மட்டுமே உதிரிப் பூக்கட்ட நூல் விற்கிறார்கள். அது எங்கேனும் காசே இல்லாமல் கிடைக்குமா என்று ஐயமாகவே இருக்கிறது. ஒட்டலில் பாரசல் டிபனுக்கும் இந்த இரட்டை நூல்தான் தாராளாமாய் உபயோகம் ஆகிறது. இந்த ரெட்டைப்பிரி நூல் சப்ளையில் ஏதேனும் ஒரு விக்கிரமாதித்த ரகசியம் இருக்கலாம். அது எல்லோருக்கும் தெரிந்தால்தானே.
ஏன் இந்த இளம்பெண்களுக்கு வயதான அல்லது உடம்புக்கு ஒன்றுமே முடியாத ஒரு தாயைக்கண்டால் இரக்கமே வருவதில்லை. பொதுவாகவே இப்படித்தான் இருக்கிறார்கள். கைக்குழந்தயோடு யாரேனும் பெண்மணிகள் வந்தால் மட்டும் இவர்கள் கொஞ்சம் இடம் தருகிறார்களா என்ன. அது போகட்டும் வயிற்றில் ஒரு குழந்தையோடு வரும் ஒரு கர்ப்பிணித்தாயைக்கண்டால் மட்டுமென்ன மனம் இரங்கி இடமா தந்துவிடுவார்கள். அதுதான் இல்லை. கால்களை நீட்டி எதிர் சீட்டில் வைத்துக்கொண்டு இறுமாப்பாய் பெண்கள் அமர்ந்துகொன்டிருப்பதை எத்தனை முறை பார்த்திருக்கிறேன். கால்களை முடிந்த அளவு பரப்பிக்கொண்டு சம்மணமிட்டபடி தன் அமரும் இருக்கையை முடிந்த அளவுக்கு அடைத்துக்கொண்டு ரயில் வண்டிப்பலகையில் பயணிக்கும் பெண்டிரை என்ன சொல்வதோ.
மாம்பலம் என்று சொல்லக்கொண்டு தி நகருக்கு இறங்குபவர்கள்தான் அதிகம். நூற்றுக்கு நாலு பேர்வழிகள் மட்டும் ரயிலை விட்டு இறங்கி. மாம்பலம் பக்கம் வளைந்து போகிறார்கள். வட்டமாய் சந்தனப்பொட்டும் அதன் மீது அடக்கமாய் குங்குமமும் இட்டுக்கொண்ட ஒரு ஜோசியரிடம் காட்ட அவர்கள் ஏதோ ஜாதக் குறிப்பு இத்யாதிகளைத் துணிப்பையில் வைத்து க்கொண்டு இப்படியும் அப்படியும் அலைகிறார்கள் . மற்றபடி திபு திபு என்று ரயிலை விட்டிறங்கும் கூட்டத்தார் அந்த ரெங்கனாதன் தெருவுக்குள்தான் சங்கமிக்கிறார்கள்..
மாம்பலம் ரயில் நிறுத்தத்தில் தண்டவாளங்களை க்கடந்து நடந்து போகிறவர்கள் ஒருநாளைக்கு லட்சம் பேர் இருக்கலாம். 2ஜி அலைக்கற்றை போணி பண்ணியதில் ஊழல் என்று வந்தபிறகு லட்சம் என்பதெல்லாம் ஒரு எண்னிக்கையே இல்லை. டூ ஜீயையும் அலைக்கற்றயையும் யார்கண்டார்கள். ஊழல் மட்டும் தானே நன்கு விளங்குகிற விஷயமாய் இருக்கிறது. தூ மாதெச்’செரு லட்சம் இது எல்லாம் ஒருதொகையா என்ன. மாம்பலத்தில் ஒரு தொத்தல் பொத்தல் வீடு எல்லாம் கோடி ரூபாய் இன்னும் அதற்கும் கூடவே தான் என்று விலை கூவிவிட்ட இந்தக்காலத்தில் கோடீசுவரனாவது மண்ணாங்கட்டியாவது. அப்படிக்கணக்கெடுத்து ஒருவழியாய்ப்பார்த்தால் இங்கு கோடீசுவரப்பிரஜாபதிகளின் எண்னிக்கையே அதிகமாக இருக்கலாம்
என் பக்கத்தில் அமர்ந்திருந்த மூதாட்டிக்குக் கண்கள் மீண்டும் இழுத்துக்கொண்டு போனது. சிரமப்பட்டு அவள் கண்களை திறந்து திறந்து பார்த்தாள்
தன் புடவைத்தலைப்பால் மூக்கை மூடினாள். பின் திறந்து கொண்டாள். மின் சார ரயில் வண்டி நுங்கம்பாக்கம் கடந்து கூவம் தாண்டுவது. உறுதியானது. சன்னல் வழியே நோட்டமிட்டேன்..கூவம் கரையில் அதனைச்சுத்தம் செய்து மீண்டும் நிமிர்த்துவதற்கசன ராஜாங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன.கூலி கிடைத்தால் போதும்தானே ந்டக்கும் வேலை பற்றியெல்லாம் யாருக்கு என்ன வேண்டிகிடக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னே இதே கூவம் நதிக்கரையில் தன் தாயுக்கு பத்தாவது நாள் காரியம் செய்து முடித்ததாக ஒருவர் தன் நண்பருக்கு எழுதிய வெள்ளையர் க்கால கடிதமொன்றின் ஒளி ந்கலை ஏதோ பத்திரிகை ஒன்றில் வெளியிட்டிருந்தார்கள். சுவாரசியமான செய்திதான். இனி அதெல்லாம் நடக்கிறகாரியமா என்ன.
தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன். வேப்ப மரங்கள் தோப்பாய் நிற்கும் கல்லூரி ஒன்றின் புராதன விடுதி தாண்டியது. வேப்பமரத்தோப்பும் நாய்கள் ஒன்றாய் அமர்ந்து இருப்பதுவும் பார்க்கமுடியாத ஆச்சரியம்தான். மின்சார ரயில் இப்போது தான் கிழக்காத்கத்திரும்பிச் சென்றுகொன்டிருந்தது. அந்த சேத்துப்பட்டு நிலையம் கண்ணில் பட்டது…
‘ நாம இறங்குலாமா”
‘ எக்மோர் வரப்போவுது’
நான் பதில் சொன்னேன். மீன் வாசனை ஒருபக்கத்திலிருந்து வந்துகொன்டே இருந்தது. பறக்கும் ரயில் வந்துகலக்குகிறது ஆனால் பாதாள ரயில் இன்னும் பாக்கியாய் இருப்பதால் அதற்கான ராட்சச இயந்திரங்கள் மன்ணைத்துளைத்துவிட்டு பின் ஆகாயம் பார்த்து பொறுமிக்கொன்டு இருந்தன
‘ விசாரிச்சுகிட்டே போ கண் ஆசுபத்திரி எதுன்னு சொல்லுவாங்க’
‘ சரி சாரு’ கிழவி சொல்லிக்கொண்டே போனாள். நான் ஏதோ சாதித்து விட்ட போதை தலைக்கேறிதான் நடந்து கொண்டிருந்தேன், வயதாகிறதே தவிற இன்னும் பக்குவம் மட்டும் ஏனோ எட்டிக்கூட பார்க்கமாட்டேன் என்கிறது அறிவு மனத்திடம் ரகசியமாக சொல்லிக்கொண்டது. வயதானால் பக்குவம் வரும் என்று ஒன்றும் சட்டம் கிடையாதுதான். .
எக்மோர் ரயில் நிலயத்தில் அத்தனை கூட்டம். எல்லோருக்கும் ஏதோ வேலை இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு மணி நேரம் ரயில் நின்று போனால் மாநகரம் திணற த்தொடங்கிவிடுகிறது. வடக்கில் இருந்து வரும் பயணிகள் ராமேசுவரம் செல்வோர் இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லா நடைமேடையிலும்தான். எதைப்பற்றியும் கவலையே இல்லாதவர்கள். கூட்டம் கூட்டமாய் அமர்ந்து எப்போதும் எதுவோ சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அது இன்ன உனவு எனத்தான் நம்மால் அறிய முடியவில்லை
எக்மோர் நிலய வடக்குப்பகுதியில் தொடர்ந்து ஏதோ களேபரம் நடக்கிறது. வர இருக்கும் பாதாள ரயிலுக்கு மண்ணை நோண்டு நோண்டென்று நோண்டுகிறார்கள். டைனோசர் கணக்காய் எத்தனை இயந்திரங்கள் செயல்படுகின்றன.
மைக்கில் ரயில் வரும் சேதியைச் சொல்வோர் அறிவிப்பு செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தி ஆங்கிலம் தமிழ் என அறிவிப்பு மாறி மாறி வந்துகொண்டே இருக்கிறது. படிகள் பலவும் ஏறி ஏறி த்திமிங்கலம் ஒன்றின் எலும்புக்கூடு ஒத்த பாலம் தாண்டிப் பேருந்து நிறுத்தம் வந்தாயிற்று. முதலில் மீன் அழுகிய நாற்றம் இப்போதோ உணவுப்பொருள் அழுகும் நெடி.
.சென்னை ப்போக்குவரத்தின் அழகு ஒன்று சொல்லியாக வேண்டும் பேருந்துகள் வந்தால் அவை ஒன்றன் பின் ஒன்று வரும் இல்லாவிட்டால் எல்லாம் படுத்துக்கொண்டு விடும். மனம் தொலைத்துவிட்ட ரோபோ நடத்துனர்கள் தான் இங்கு ஏராளம். ஔட்டுநர்கள்பற்றி ப்பேச வே வேண்டாம். அவர்கள்தான் திரும்பிப் பார்ப்பது என்பதே கிடையாதே.. .சில்லரையை ச்சரியாக மாற்றி வைத்துக்கொண்டால் டிக்கட் வாங்கிப் பிழைத்தோம். இல்லாவிட்டல் தொங்கல்தான் .டிக்கட் வாங்கிப் பத்திரமாக வைத்துக்கொள்வதெல்லாம் நம் பொறுப்பு. யார் இல்லை என்கிறார்கள். கண்டக்டர் என்கிற நடத்துனர் பயணிகளை எல்லாம் தேடி வந்து டிக்கட் கொடுத்துவிடுவார் என்று இந்தச் சென்னை மாந்கரில் மட்டும் ஏமாந்துபோய் இருந்துவிட்டால் உங்களுக்கு அட்டமத்தில் சனிதான்.. அட்டமத்தில் சனி என்றால் என்ன யாருக்கும் சந்தேகம் வரலாம். அது ஒன்றுமில்லை. இரண்டுபேர் தேங்காய்த் திருடப்போனார்கள். ஒருவன் தென்னை மரத்தில் ஏறிக்காய் ப்பறித்தான் மற்றொருவன் கீழே இருந்தபடிக்கு அதனைப்பொறுக்கிக்கொண்டிருந்தான். தென்னை மரத்துக்குச்சொந்தக்காரன் அங்கே வந்துவிட கீழே இருந்தவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஒரே ஒட்டமாய் ஔடிவிட்டான். மரத்தின் மேலிருந்தவன் மட்டும் பத்திரமாய் இறங்கி தோட்டக்காரனிடம் வசமாக மாட்டிக்கொண்டான். அடி உதை வாங்கினான். தரும அடிகள் வாங்கினான். பிறகு தரும அடி என்றால் என்ன என்பீர்கள். நிகழ்ச்சிக்குச் சம்மந்தமே இல்லாது தெருவில் வருவோர் போவோர் எப்படியோ அங்கு அகப்பட்டுக்கொண்ட ஒருவனைத்தாக்குவது. அகப்படுக்கொண்டவனுக்கு மட்டும் அட்டமத்தில் சனீசுவரன். இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள் விஷயத்தை..
யமகிங்குரர்கள் கணக்காக மூன்று பேர் காக்கி சட்டை ப்போட்டுக்கொண்டு பேருந்தை மறித்து நின்றால் அவ்வளவு தான் மோசம் போயிற்று. டிக்கட்டைத்தேடி கண்டு பிடித்து க்கொடுத்துவிட்டால் பிழைத்துவிட்டீர்கள். நீங்கள் காட்டியது வேறு ஏதோ பழைய டிக்கட் அது இந்த ப்பேருந்தில் வாங்கியதில்லை என்று அவர்கள் வாயால் சொல்லிவிட்டால் நீங்கள் என்னத்தை கண்டீர்கள். அந்தக்கிரிதர கோபாலன் கிருஷ்ண பரமாத்வே பிரத்யட்சமாய் இங்கு வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. நீங்கள்தான் இந்த உலகத்தையே ஏமாற்ற அவதாரம் எடுத்துக்கொண்டு வந்து விட்டதாய் கணக்குப்போட்டு உங்களைக் கொன்று விடுவார்கள். கொன்று என்பது அதிகமே இல்லை. சரித்தான். தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் மட்டும் தானே தெரிகிறது. மாதத்திற்கு இரண்டு கேசாவது இப்படிப்பிடித்தால் பிடித்தால்தான் அவர்கள் தப்பலாமாம். இல்லாவிட்டால் ஆஜானுபாகுவாய் நிற்கும் அந்தப் பேருந்துக்கிளை மேலாளருக்கு எப்படி அவர்கள் பதில் சொல்வது
வண்டி நாயர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அந்த நாயர் மேம்பாலத்து ஒரமாய் எப்போதும் சயனத்தில் இருக்கும் அந்த பூதாகார சரீரம் உடைய பேரிளம் பெண் அப்படியே படுத்துக்கொண்டுதான் இருக்கிறாள். அவள் முகத்தை எங்கே பார்ப்பது. அந்த முகம் எப்போதும் அந்தப்பக்கமாய்க் கட்டைச்சுவரையே பார்த்துக்கொண்டிருக்கிறதே. எக்மோர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் வண்டிகள் நீட்டு நீட்டு மரவட்டைகளாய் நெளிந்துகொண்டு கண்ணுக்குத்தெரிகின்றன.
தாசபிரகாஷ் நிறுத்தத்தில் வண்டி நின்று கிளம்பியது. ஆனால் அந்த ஆகா ஒகோ தாசப்பிரகாஷ் ஒட்டல் தரை மட்டமாகி அந்தத்தரை மட்டுமேதான் பார்ப்போருக்குப் பரிதாபமாய்த் தரிசனம் தருகிறது. பணம் பணம் என்று அலையும் உலகு அல்லவா. மேகம் தொடும் வரை பிளாட் கட்டி நிற்க வைத்தாலும் ஆள் இருக்கிறார்கள் பணம் கொட்டி கொட்டி வாங்குவதற்கு.
பாதாள பொன்னியம்மன் கோவிலின் வாயிலில் ஏகப்பட்ட சேட்டுகள் ஆண்களும் பெண்களுமாய் நின்றுகொண்டு இருக்கிறார்கள். கருப்பு வண்ணத்தில் ஒரு சேட்டு ப்பெண்ணையோ ஆணையோ பார்க்கமுடிவதில்லை. ஜாங்கிரி நிறத்திலே தலைப்பா கட்டிய ஒரு சேட்டு மாப்பிள்ளை உயரமான குதிரை ஒன்றில் அமர்ந்துகொன்டு மில்லர் சாலையையே முறைத்தபடிக்கு இருக்கிறான். பாண்டு வாத்யகோஷ்டி அது வடக்கத்திப் பாட்டுக்களை தெரிந்த இந்தியில் மைக் பிடித்துப்பாடுகிறது. சிறுவர்கள் நடனமாடிக்கொண்டே நடக்கிறார்கள்.
‘மோச்சம்’ கத்தினார் நடத்துனர். ஒரு நான்கு ரூபாய் கொடுத்தால் எல்லாருக்கும் இங்கே மோட்சம் கிடைக்கிறது. வண்டிக்கு பரமபத வாசல் இருக்கிறதே. அதன் வழி இறங்கி என் அலுவலகம் நோக்கி நடக்கிறேன். அந்த கிளி ஜோசியக்காரன் தென்னை இளநீர்க்காய்கள் விற்பவளோடு சிரித்தபடி பேசிக்கொண்டே இருக்கிறான்..
‘ போலிசுக்கு தினம் ரெண்டு காயு ஒசில போயிடுது’
‘ பெறகு என்ன செய்வே. ஆனா என்கிட்ட ஒண்ணும் வர்ரதில்ல அந்தப் போலிசு. குந்தி ஜோசியம் கேக்க காக்கிசட்ட சரிப்படாதுல்ல’
கேட்டுக்கொண்டே என் அலுவலகம் உள் நுழைகிறேன். ஆபீசு வாயிலில் கையேந்தி பவன் டிபன் வியாபாரம் மும்முரமாய் நடக்கிறது. கழுத்தில் நீட்டமாய் டை கட்டிக்கொண்டவர்கள் கூட இங்கே வந்து டிபன் சாப்பிடுகிறார்கள்.
‘ டை கட்னுவன் இங்க சாப்புட்றான்னா பாத்துக்க’ என்றாள் இட்டலிக்கடைக்காரி.
‘ ஏரியாக்குப்புத்சா இருக்கும். இல்லன்னா கழுத்துல டை கட்டிருப்பான் கையில துட்டுமட்டும் இருக்காது’
இட்டலி சாப்பிடும் இன்னொருவன் பதில் சொன்னான்..
மூன்று வாட்ச்மென் சம்பளம் பெருவதை ஒன்றாய்க்குறைத்து அதனில் பாதி காண்ட்ராக்ட்டுக்காரனுக்குப்போய் மீதிப் பாதியை இரண்டாய்ப்பிரித்து சாம்பல் நிற சட்டைப்போட்டுக்கொண்டு நிற்கும் கருப்பு நிற குச்சி குச்சி இரண்டு செக்யூரிடிகளுக்குச் சம்பளமாக்கி இருக்கிறார்கள். மத்திய அரசு அலுவலகம்தான். தேசபிதா காந்திப்படம் உள்ளே கட்டாயம் மாட்டியிருக்கிறார்கள். உங்களுக்குத்தெரியாதது இல்லை.
செக்யூரிடி அவன் தான் எனக்கு ‘சார் வணக்கம்’ என்றான்.
கட்டை விரல் ரேகை கணினியில் வைத்து நான் அலுவலகம் வந்துவிட்டேன் என்பது உறுதி செய்து இருக்கைக்குச்சென்று அமர்ந்தேன். சம்பளம் வாங்கக் கையெழுத்துப்போடாமல் கட்டைவிரல் பதிந்தால் அவமானம் அது எல்லாம் பழைய கதை.
சும்மா இருந்திருக்கலாம். நான் தான் ஆரம்பித்தேன். பக்கத்து இருக்கைப்பெண்ணிடம் ஆரம்பித்தேன்,..
‘ இந்து மேடம் இதக்கேளுங்க இன்னைக்கு எலக்ட்ரிக் ரயிலில் செம கூட்டம். ஒரு வயசான அம்மா சரியா கண்ணுக்கூட புரியல நிக்க முடியாம செரமப்பட்டுது. அதுக்கு சீட்டு குடுத்தேன். ஆனா இந்த பொம்பளங்க இருக்காங்களே ரொம்ப மோசம். ரவ எடம் தரல யாரும் மனம் இறங்குல’
‘ தெனம் ஒரு சேதி எப்பிடியாவது கெடச்சிடுது ராம் சாருக்கு’
‘ இல்லங்க பொம்பளங்க மனசுபத்தி சொன்னேன்’
‘ சார் எல்லாருக்கும் மனசு இருக்குது இல்லாமலா’
‘ பெத்த தாய் மாதிரி தெரியற அந்த அம்மாவுக்கு உக்கார எடம் தரலியே’
‘ உங்களுக்கு ப்பெத்த தாய் மாதிரி தெரியிற அந்த அம்மா அவங்களுக்கு அப்படி தெரியிலயே’
‘ அதான் ஏன்னு கேக்குறேன்’
‘ சாரு ஒரு ஆம்பிளைக்கு அம்மாவா தெரிஞ்ச அந்த அம்மா எப்படி எங்களுக்கும் அம்மாவா தெரிவாங்க,
எங்களுக்கு அவங்க ஒரு மாமியாரா மட்டும்தானே தெரிவாங்க. அதான்’ அந்த இந்து பதில் சொன்னாள்.
நான் அசடு வழிந்தபடி சிரித்துக்கொண்டே சமாளித்தேன். எத்தனையோ ஆண்டுகளாய் என்னைத்துளைத்தெடுத்த இந்த குடைசல் கேள்விக்கு இந்தப்பெண் எத்தனைக்கச்சிதமாய் இப்படி பதில் சொல்லி முடித்துவிட்டாள்.
அதுதான் உங்களுக்கும் சொல்லிவிட்டேன்..
——————————————————————–

Series Navigationஇரு கவரிமான்கள் – 3அக்னிப்பிரவேசம்-16
author

எஸ்ஸார்சி

Similar Posts

Comments

  1. Avatar
    k~~ kumar says:

    இந்து மேடத்தின் ப‌தில் சரியில்லை. அல்லது ஒரு உண்மையை மறைக்கிறாள்.

    ஒரு வயதான பெண்ணை இளம்பெண்டிர் நோக்காத காரணம். அப்பெண் அவர்களுக்குத் தங்கள்தங்கள் முதுமையை நினைவுபடுத்துவதால். முதுமையில் தானும் இப்படி ஆகிவிடுவோம் என்பது உறுதி. ஆனால் அவ்வுறுதியை மனமொத்துக்கொள்வதில்லை. இது பெண்களின் சுபாவம்.

    ஒரு கிழவனைப்பார்த்து ஆண்கள் கொள்ளும் வெறுப்பு இவன் ஒரு பழைமைவாதி. தங்களை இவன் புரிந்து கொள்ள விரும்பாமல் தன் பழைமைவாதத்தையும் திணிப்பான் என்பதால். தாங்களும் ஒருநாள் இவனைப்போல அசிங்கமாக ஆவோம் என்பதற்காகவ‌ன்று.

    பெண்ணுக்கும் ஆணுக்கும் வாழ்க்கை அணுகுமுறைகள் அடிப்படை வேறுபாடுகள் எக்காலமும் உண்டு. அவ்வேறுபாடுகளில் பல அசிங்கமானவை. அதிலொன்று இது. பெண்ணிடம் காணப்படுவது.

    ஆண்-பெண் என்ற பிரிவுக்கு அப்பாற்பட்டும் இக்குணம் காணக்கிடைக்கும். ஒரு நொண்டி இன்னொரு நொண்டியை விரும்புவதில்லை. ஒரு செவிடன் இன்னொரு செவிடனை விரும்புவதில்லை. அதாவது அணுக்கலில் இருப்பதை விரும்புவதில்லை. இப்படி. இதற்குக்காரணம் தன் குறையைத்தானே ஏற்றுக்கொள்ள மறுக்கும் சுபாவம்.

    உலகம் விசித்திரமானதன்று. வேறுபாடானது வேடிக்கையானது மட்டுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *