பயணம் மாறிப் போச்சு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 12 of 14 in the series 15 நவம்பர் 2020

குணா

காலையில் எழுந்தவுடன் ஒரு சுற்று நடந்து வந்து மைக்ரோவேவில் பாலை சூடு பண்ணி ஒரு காபியை போட்டு எடுத்து ஆற அமர உட்காரும் பொழுது, மகன், மருமகள், பேரன், பேத்தியென்று அனைவரும் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

யோசித்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்…

கல்லூரி முடித்து ராக்கெட் விடுகிறேன் பேர்வழியென்று வேலைக்குச் சேர்ந்து… ஒரு நகரியத்தோடு ஒன்றி தொடங்கிய வாழ்க்கை.

அதது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டுமென்று, உடனேயே மைதிலி என் வாழ்க்கைக்குள் வந்தாள். போதுமென்றில்லாமல் ஒரே மகனாகிப் போனான். அவனைக் கிளப்பி பஸ்ஸில் விட்டு, பள்ளி முடிந்ததும், பஸ்ஸிலிருந்து வருபவனை வரவேற்று, அன்றாடமாய் பேணி வளர்த்த அவள், பையன் படித்து அமெரிக்கா வந்த கையோடு, மும்முரமாய் தன் அண்ணன் பெண்ணை மணமுடிக்க முற்பட்டாள்.

அமெரிக்க வாசம், சௌகரிய தேடல், கூடவே வேலை, இவளை பிடிக்கிறேன் என்றதை தட்டமுடியவில்லை. மைதிலிக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம். அவள் அண்ணன் மகளை மணம் முடிக்க இயலவில்லையென்று.

மருமகளும் சொக்கத் தங்கம். வடக்கத்தி கலாச்சாரம் என்றாலும், இந்திய கலாச்சாரம் என்ற சின்ன சந்தோஷம். நகரிய கலாச்சாரத்தில் பெரும்பாலான காலம் வாழ்ந்து முடித்ததால் அது ஒன்றும் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை.

தெரிந்தோ தெரியாமலோ கூட வேலை பார்த்த ஷர்மா உறவுக்காரன் ஆகிப் போனான். மருமகளுக்கு அவன் தூரத்து சொந்தமாம். அப்படி இப்படியென்று, நகரியம், வடக்கு, தெற்கு, அந்நிய தேசம் என எல்லாமாய் கலந்த கலாச்சாரம் கலகலப்பாய் எங்கள் வாழ்க்கைக்குள் அங்கமாகிப் போனது. ஸ்ரீரங்கத்து கலாச்சாரத்துடன் அது ஒன்றிப்போனது.

பள்ளிப் படிப்பு முடிந்து பையன் ஐ.ஐ.டியில் சேர்ந்தால், நகரியத்தில் ஒரு கெத்து. அலுவலகத்தில் என்ன தான் சாதித்தாலும், பெற்றதுகள் இது மாதிரி சேர்ந்து விட்டால் அதில் வரும் பெருமையே அலாதி. அதை சொல்லிக் கொள்ளும் போது ஒரு புல்லரிப்பு. கண்ணுக்குள் ஆனந்தக் கண்ணீர் வரட்டா என்று நிற்கும்.

நான் மட்டும் வேறா என்ன.

அவன் முடித்தது பெருமை தான் என்றாலும், எல்லா புகழும் மைதிலிக்கே. நான் ராக்கெட் ராக்கெட்டென்று ஓடிக்கொண்டிருந்த போது, அவள், கோச்சிங், படிப்பு என அனைத்துக்கும் துணையாய் இருந்து ஒரு வழியாய் தேற்றி அனுப்பி விட்டாள்.

ஐ.ஐ.டி முடித்த கையோடு எம்.எஸ், பி.எச்.டி என சுறு சுறுப்பாய் முடித்து கையோடு கல்யாணமும் முடித்து, ஒண்ணுக்கு ரெண்டாய்… இதோ ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

பையன் கல்யாணம் முடிந்த கையோடு, சுகமில்லை என்றாள். அவசர கதியில் பார்த்தும், காலம் கடந்து போய் விட்ட கேன்சர். மாட்டுப்பெண் வந்த நேரம் என்றார்கள். நான் பார்க்கவில்லையோ என்ற வருத்தம். பையன் இங்கு வந்து பார்க்கலாம் என்று எவ்வளவோ மன்றாடியும், அடையாறு போதுமென்று… மைதிலி போய் சேர்ந்து விட்டாள். நான் தனித்து விடப் பட்டேன்.

இளம் பருவம் முதல் என்னோடாய் இருந்து, எங்களுக்கானது தான் அவளுக்கும் என்றிருந்து வாழ்ந்து போய் விட்டாள். அது வாழ்க்கையா… இதோ இந்த மாட்டுப் பெண்ணும் ஓடிக் கொண்டிருக்கிறாளே… இது வாழ்க்கையா…

ஒவ்வொன்றையும் கணவனும் மனைவியும் பரிமாறிக் கொள்கிறார்கள். யாருக்கு முடிகிறதோ செய்கிறார்கள். இன்னதை இன்னார் தான் செய்ய வேண்டுமென்றில்லாமல்…

இவன் வளர்ந்த காலத்தில் இது மாதிரி நான் எதுவும் செய்ததில்லை. மைதிலிக்கு தோள் கொடுத்து இவனை வளர்த்ததில்லை. மைதிலியும் எந்த காலத்திலும் எதிர் பார்த்ததில்லை. காலையில் அலுவலகம் புறப்பட்டால், பல சமயம் சூரியன் அஸ்தமித்து விடும். படித்துக் கொண்டிருப்பான், இல்லை உறங்கிப் போயிருப்பான். அது தான் வாழ்க்கை என்று படிப்பிக்கப் பட்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் என்ன செய்தேன். அலுவலகம் சென்று, அந்த சம்பாத்தியத்தில் அவர்கள் காலம் நகர்த்த செய்து, அவ்வப்போது, நான்கு வருடத்திற்கு ஒரு முறை எல்.டி.சி. ஆண்டு விடுமுறையில் தாத்தா வீடு என்பதும் வெகு சீக்கிரம் மறைந்து போனது. கூமான், இசை என, அதிகமாய் திணித்தலில், தாத்தா வீட்டு வாசம் மறந்து போனது. அவ்வப்போது தாத்தா, பாட்டி வந்து போனதோடு சரி. அவர்களுக்கும் நகரிய வாழ்க்கை சரி பட்டு போகவில்லை. அவர்களும் ஒரு கால கட்டத்தில் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

நகரிய வாழ்க்கை எந்தவித அசௌகரியமும் இல்லாமல் அதுவாய் நகர்ந்து விடும். இது எனக்குள் இருந்த கணக்கு, இங்கு வந்து இவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் வரை. ஒவ்வொரு அசைவிற்கும் எத்தனை போராட்டம். அதை போராட்டம் என்றில்லாமல் யதார்த்தம் என்று பழகிக் கொண்டு விட்டார்கள்.

வார முடிவில் குடும்பமாய் எங்காவது போதல்… வருடத்திற்கு ஒரு முறை நீண்ட பயணம்… எல்லாம் அவர்களுக்குள் ஒரு அந்நியோன்யத்தை உண்டு பண்ணியிருந்தது.

இந்தவித அந்நியோன்யம் எங்களுக்குள் இருந்ததாய் தோன்றியதில்லை. ஆனால் ஒரு மெல்லிய பாச பிணைப்பு. அது தான் இந்த வயதிலும், மைதிலி போன பின்பு, தனிமைப் பட்ட போது கூட்டிக் கொண்டு வந்ததும்… அவ்வப்பொழுது பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை தாத்தாவிடம் கேள் என்று சொல்லும் பொழுதும்… பட்டும் படாமல் இருந்து கொண்டிருக்கின்றது.

வேலை பணி ஓய்வு என்று வந்த பின்பு, அறிவியல் ஆலோசகர் பதவி வந்தது. மகன் சொல்லைத் தட்டாமல், வேண்டாமென்று விட்டு வந்து பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டது.

எதற்காக ஓடிக் கொண்டிருந்தேன். பணிக்காலத்தில் எதையோ சாதிக்கப் போவதாய்… ஓய்வில்லாமல்… மைதிலிக்கும் சிரமம் கொடுத்து… சொல்லிக் கொள்ளாமல் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கும் அந்த ஜீவன்.

இதை உணர வேண்டும் என்பதற்குத்தான் இன்னும் வாழ்கிறேனோ…

நானும் அவனுக்கு பக்கபலம் என்பதை ஒரு நாள் உணர வைத்தான்.

அவரவர் அலுவலகம், பள்ளி என்று சென்று விட்டார்கள். நான் பிரம்ம ஞானத்தில் பயணித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். வீட்டின் கேரேஜ் திறக்கும் சத்தம். ஓர் அசாதாரணம். போய் பார்க்கலாமா என்று யோசிக்கும் போதே வந்து விட்டான். வந்தவன், என் மடியில் தலை வைத்து கேவினான். முதல் முறை… என்னிடம். என்ன செய்வதென்று புரியவில்லை. மெல்ல என் கையை அவன் தலை மீது வைத்து வருடினேன். கொஞ்ச நேரத்தில் கேவல் நின்றது. எழுந்து போய் விட்டான்.

அன்று மாலை நடக்க கூப்பிட்டேன். மாட்டுப் பெண் மாதிரியாய் பார்த்தாள். ஒரு புது பழக்கமாய் அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

நடந்தோம். ஓகையோ நதிக்கரையோரம். பனி மறைந்த நேரம். கரைந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

“உனக்கு சொல்லத் தேவையில்லை. இருந்தும்… இந்த நதி போல… தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிருக்கிறதாய் தோன்றும், அதற்கு தடங்கல் வராத வரை. தடங்கலிலும் நிற்கும், தன் சக்தியை அபரிதமாக்க… அடுத்து தங்கு தடையின்றி ஓடும். அது எங்கே போகிறதென்று அதற்குத் தெரியாது. ஆனால் போய்க் கொண்டேயிருக்கும். நமக்கு சொல்லி வைத்தது கடலைத் தேடியென்று. இந்த நீண்ட நதிகளைப் பார்த்த பின்பு தான் தோன்றுகிறது… அதற்கு முன் சில பல கடமைகளும் இருக்கிறதென்று. பெருக்கெடுத்தால் கடலை நோக்கி… இல்லாவிட்டால் முடிந்த மட்டும் கடமையாற்றி அது போகும் பூமியோடு ஐக்கியமாகி விடும். அது வளர்த்த பச்சைகளும் பயிர்களும், வாழும் ஜீவன்களும் தான் அதைச் சொல்லும்.”

நான் பேசப் பேச கேட்டு நடந்து கொண்டிருந்தான்.

“அம்மா இல்லாததை உணர்கிறாயா…” – நான் கேட்டதும் அவன் கண்ணில் நீர் முட்டியதைப் பார்த்தேன்.

“எனக்கும் தான்”.

அவனுக்குள் சில மாற்றங்கள் வந்ததாய் புரிபட்டது.

மறுநாள் ஒரு தெளிவோடு அவன் அலுவலகம் புறப்பட்டு சென்றதாய் உணர்ந்தேன்.

அன்று மாட்டுப்பெண் முன்னமேயே வந்து விட்டாள். என்னைச் சுற்றி ஏதோ நடக்கிறது என்று மட்டும் தோன்றியது.சுறுசுறுப்பாய் ஏதோ செய்து கொண்டிருந்தாள். ஒரு சில போன்களைச் செய்தாள்.

பேரன் பள்ளி விட்டு வந்ததும் எனக்கு விளங்கியது.

“தாத்தா உங்க பையன் வி.பி ஆயிட்டார். நெக்ஸ்ட் சி.இ.ஓ வாமே. கூட ஒர்க் பண்ற சங்கீத் அப்பா சொல்லி லேடீஸ் சர்க்கிள்ல அவுட்டாயிடுச்சு. டாடிக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் பார்ட்டி. சொல்லாதீங்கோ”.

சொன்னதும் விளங்கியது, அவனுக்குள் இருந்திருந்த மன உளைச்சல். எதிர்பார்க்கும் ஒன்று கிடைக்குமோ இல்லையோ என்ற பதை பதைப்பு.

அன்று மாலை கொஞ்சம் லேட்டாகத்தான் வந்தான். அதற்குள் அந்த நண்பர்கள் குழாம் வீட்டின் அடித்தளத்தில் குழுமியிருந்தது.

சந்தோஷமும், துக்கமும் பகிர்ந்து கொண்டால் தான் கூடவும், குறையவும் செய்யும். அதனால் தான் இப்படி போலும்.

அவனைக் கூட்டிச் சென்று அதை வெளிப்படுத்திய விதம், அவனுக்குள் அந்த மகிழ்ச்சி வெளியானது.

குடும்பத்துடன் நான் பகிர்ந்து கொண்டதாய் எனக்கு ஞாபகமில்லை. ஏதாவதென்றால் ஓர் இனிப்பு அதிகப்படியாய் மைதிலி சேர்ப்பாள். அது தான் சந்தோஷம்.

அவன் மறுபடியும், குடும்பத்தோடு இயந்திர கதியில்…

எத்தனை காலம்… இதோ பேரன் அடுத்த வருடம் கல்லூரி. பேத்தி இன்னும் இரண்டு வருடம். அவளும் கல்லூரி.

அதற்கப்புறம்… அவர்கள் வழி… இவன் என்ன செய்வான்… என்னைப் போல… ஓய்வெடுக்கும் வரை ஓடிக் கொண்டிருப்பான். அடுத்து…

மாட்டுப்பெண் என்ன செய்வாள்… அவளும் கூப்பிட்டுப் பார்த்தாள், அவள் பெற்றோரை… வர மறுத்து விட்டார்கள். மும்பை வாசம் உன்னதமென்று.

மறுநாள் இரவு உணவு நேரத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்தாள். வேலையிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாய்… முழு நேரம் கலைகளில் ஆழப் போவதாய்… அவளுக்கு பழகிப் போன குச்சிப்படியும், இந்துஸ்தானியும்…

“ஹை ஜாலி… இனி மம்மி நம்மள ட்ராப் பண்ணுவா” என்று பேரனும் பேத்தியும் ஹை பை செய்து கொண்டார்கள்.

என் பையன் அதை ஆமோதிப்பது போல் அமைதியாய் இருந்தான்.

ஒவ்வொரு தீர்மானங்களுக்குப் பின் ஒன்றிருக்கும். மைதிலிக்கு இது போன்ற தருணம் வாய்க்கவில்லை. அவளும் நாட்டியம் பயின்றவள். கர்நாடக சங்கீதம் முறையாக கற்றவள். திருமணமாகி வந்த கையோடு அதை மறந்து விட்டதாய் தோன்றியது. இல்லை என்பதை உருவான சமயங்களில் வெளிப்படுத்த தவறவில்லை. அவ்வப்பொழுது, கலை நற்பணி மன்ற நிகழ்வுகளில் பாடியிருக்கிறாள். ஒரு சிலருக்கு நாட்டியம் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். ஆனால் ஒரு போதும் இந்த மாதிரி சொன்னதில்லை. இது விகல்பமாகவும் தோன்றவில்லை. வித்தியாசமாகவும் இல்லை.

ஆனால் எதற்காக… பிள்ளைகள் கல்லூரி வாசமென்றால் செலவு அநேகமாகும். இந்த நேரத்தில்… எனது யோசனைக்கு மறுநாள் பதில் தந்தாள்.

மறுநாள் வழக்கம் போல் நடந்து விட்டு வந்த எனக்கு கையில் ஃபில்டர் காபியுடன் மருமகள் காத்திருந்தாள். அவளும் பருகிக் கொண்டு…

“எதற்கு இந்த நேரத்துலன்னு உங்களுக்கு யோசனை ஓடறது தானே…” – அட்சர சுத்தமாய் ஸ்ரீரங்கத்து தமிழ். இதைச் சொல்லி அநேக நேரம் மைதிலி ஆத்துப் போயிருக்கிறாள். அவளின் நாட்டிய நளினம், சங்கீத ஞானம்… கர்நாடகமும், பரதநாட்டியமும் பக்கென்று அவளோடு ஒட்டிக் கொண்டது. ஒரு முறை மைதிலியே சொல்லியிருக்கிறாள்… நமது தேர்வு கூட இப்படி இருந்திருக்காது என்று.

பருகிக் கொண்டே அவளைப் பார்த்தேன்.

“ஸ்ரீதருக்கும் வேலைப் பளு ஜாஸ்தியாயிருக்கும். இனி மத்ததை திணிக்கறது நல்லதில்லை. வீட்டில இருந்தே பாத்துக்கலாம்ணு… முடியும். எல்லோருக்கும் ஒரு பக்க பலமா இருக்கும்னு தோணுச்சு… அதான்”.

“உனக்குன்னு ஒரு கனவு…லட்சியம்…”

“என்னத்த சாதிக்கணும். வாய்க்கு நல்லதா செஞ்சு கொடுத்தால்… அம்மான்னு ஒரு பிணைப்பு வரும்… ஸ்ரீதர் மாதிரி. அது தான் லட்சியம். சின்ன வயசுல அநேக கனவுகள்… அதெல்லாம் அர்த்தமில்லையோன்னு தோணுது. மனசுக்கு பிடிச்சா மாதிரி நாட்டியம், பாட்டுன்னு, பிள்ளைங்களுக்கு முடிஞ்ச மட்டும் செஞ்சுட்டு… இன்னும் எவ்வளவு காலம்… அவங்களுக்குன்னு பாதைய வகுத்துகிட்டாங்கன்னா நாம எங்க நிக்கப் போறோம். காசு தான் பிரதானம்ணு வந்துட்டோம். அது மட்டுமில்லைன்னு தோணறப்போ வெகு தூரம் போயிடறோம். மூணு தலை முறை ஆயிடுச்சு விட்டு வந்து… ஸ்ரீரங்கம் இப்போ வேத்து பூமி நமக்கு. பாம்பே கேக்கவே வேணாம். இது தான் எங்க ஊர். நாங்க பண்ண பாக்கியம் நீங்க ஒத்துட்டு வந்தீங்க. பிள்ளைங்க அவங்க வழியை பார்க்க ஆரம்பிச்ச பிறகு எங்களுக்கு என்ன வழின்னு கட்டாயமா புரிஞ்சுக்கணும். உங்களைப் போல வரும் நேரத்தில் என்ன செய்யணும்னு இப்பவே தீர்மானிக்கணும்”.

இவள் என்ன சொல்ல வருகிறாள்… நான் அப்படி யோசிக்கவில்லை என்றா… ஆனால் நிதர்சனமான உண்மை. இந்த தலைமுறை எத்தனை யோசிக்கிறார்கள். யதார்த்தங்களை உணர்ந்த வாழ்க்கை. ஆடும் ஆட்டம், ஓடும் ஓட்டம் எல்லாம், முடிந்தும் வாழ வேண்டும். அதற்குள் நம்மை புகுத்துவதைவிட, தெளிவாய்… கடலில் கலக்கும் ஆற்றைப் போல… எந்தவித குழப்பங்களுமில்லாமல்…

இதைவிட பக்கபலம் தேவையா என்ன…

மைதிலியைக் கேட்டேன்… நான் காத்திருக்கிறேன் என்றாள். மறுநாள் எனக்கு விடியவில்லை. மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

எனக்கான விடியல் நோக்கிப் புறப்பட்டேன்.

  • குணா (எ) குணசேகரன்
Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *