பலவேசம்

This entry is part 6 of 21 in the series 31 மே 2015

சிறகு இரவிச்சந்திரன்.

இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சமாச்சாரம் ஒன்று, காலக்கண்ணாடியின் முன் நின்றோ அல்லது, கொஞ்சம் நாகரீக உலகைச் சேர்ந்தவராக இருந்தால் டைம் மெஷினின் உள்ளே சென்றோ, ஒரு ஐம்பது அல்லது அறுபது வருடங் கள் பின்னோக்கி செல்லவேண்டும். உடனே ஏதோ இது மாயாஜாலக் கதையென்றோ, அல்லது நவீனச் சிறுகதை என்றோ கற்பனை பண்ணி விடாதீர்கள். இது சராசரி சமுகக் கதை. ஆனால் இதில் உள்ள பாத்திரங்களை, நீங்கள் பார்த்திருந்தாலும், மறந்திருக்க வாய்ப்புண்டு என்பதாலே இந்த முஸ்தீபு.
சின்னப்பிள்ளையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் அவரிடம் கேள்வி மட்டுமல்ல, அடிபட்டும் உதைபட்டும் இருக்கிறேன் என்பதால் எனக்குக் கூடுதல் தகுதி உண்டு, இந்தக் கதையை எழுதுவதற்கு.
சின்னப்பிள்ளை என்ற பேரைப் பார்த்தவுடன் அது ஏதோ சின்னப்பிள்ளை என்று எண்ணிவிடாதீர்கள். அவர் ஒரு வளர்ந்த ஆள். மதுரைப் பக்கத்தில், செங்கனாம்பட்டி என்ற கிராமத்தில், கூத்து கட்டும் குடும்பத்தில் பிறந்த சின்னப்பிள்ளை, பின்னாளில் ஒரு பெரிய நாடகக் கம்பெனிக்கே உரிமையாளராக ஆனதுதான், இந்தக் கதையின் அச்சாணி.
சின்னப்பிள்ளை, படிப்பு சரியாக வராமல், விவசாயமும் ஒட்டாமல் இருந்த பத்து வயது பிராயத்தில், அந்த ஊர் மாரியம்மன் திருவிழாவுக்கு வந்து சேர்ந்தது ஒரு கூத்து கோஷ்டி. ஆந்திராவும் தமிழ்நாடும் இணைந்த காலம் அது என்பதால், கொஞ்சம் சுந்தரத் தெலுங்கில் பேசிக்கொண்டனர் அந்தக் கோஷ்டி உறுப்பினர்கள். கூத்து நடத்துகிற கூட்டத்தின் தலைவனாக மதுசூதனராவும், அவன் இணையாக அவன் மனைவி பத்மாவதியும் இருந்தார்கள்.
ஆயிரம் மனைவி கட்டி, அடுக்கடுக்காக பிள்ளை பெற்ற தசரதன் கதையாக இருந்தாலும், ஒரே பிள்ளை பெற்று, அதையும் பலி கொடுத்த அரிச்சந்திரன் புராணமாக இருந்தாலும், மதுசூதன ராவ் வேசம் கட்டி பாட ஆரம்பித்தால், கூட்டம் கட்டிப் போட்டாற் போல் அசையாது நிற்கும்.
சின்னப்பிள்ளையின் தாய் மருக்கொழுந்து, ஏற்கனவே கணவனை இழந்தவள். சின்னப்பிள்ளையும் அவனது தங்கை பரிமளமும் அவளது குழந்தைகள். சின்னப்பிள்ளைக்கு பத்து வயது. பரிமளத்திற்கு நாலு வயது. கைக்கும் வாய்க்குமான போராட்டமாக இருந்தது அவர்களது வாழ்க்கை.
மருக்கொழுந்துக்கு முப்பது வயது கடந்திருந்தது. அவள் இன்னமும் அழகாகத்தான் இருந்தாள். கணவனை இழந்த அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க பலர் அந்த ஊரில் தயாராக இருந்தார்கள். ஆனால், அவளைப் பெண்ணாக ஏற்றுக்கொள்ள அவர்கள் தயார். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாராக அல்ல.
“ சின்னதுகூட பரவாயில்ல நாலு வயசு தான் ஆவுது. வெவரம் தெரியாது. நாளைக்கு நாந்தான் ஒங்கப்பன்னு சொன்னா, அது பிஞ்சு மனசுல பதிஞ்சுடும். சின்னப்பிள்ளை பெரியவன். அவன் மனசை மாத்த முடியாது..அதான்.. “
அவள் தன் கணவனை இழந்த கதை கொடுமையானது. மருக்கொழுந்துவின் கணவன் தானப்பன் தோல்பட்டறையில் வேலை பார்த்து வந்தான். கொஞ்சம்போலக் குடிப்பழக்கமும் அவனுக்கு இருந்தது. நட்டத்தில் ஓடிய தோல்பட்டறையை இழுத்து மூட முடிவு செய்த போது, அதன் முதலாளிக்கு பட்டறையின் மேல் வாங்கிய வங்கிக் கடனை எப்படி அடைப்பது என்று தெரிய வில்லை.
முதலாளி ராசரத்தினத்தின் மச்சான் பினாங்கில் வேலை பார்த்து வந்தவன். விசயத்தைக் கேள்விப் பட்டு அவன் இப்படிச் சொன்னான்:
“ இன்ஸ¥ரன்ஸ¤ பண்ணியிருக்கீங்களா மாமா.. பெனாங்கில அது பண்ணலேன்னா யாவாரம் பண்ண முடியாது.. தெரியுமில்ல “
ராசரத்தினம் யோசித்தான். உடனே அம்பதாயிரம் ரூபாய்க்கு காப்பீடு செய்தான். ஒரு வருடம் சிரமப்பட்டு நடத்தினான் பட்டறையை. இரண்டாவது வருடம் ஆரம்பத்தில் வேலை முடிந்து எல்லோரும் வீட்டுக்கு போக ஆரம்பித்த சமயத்தில், சொற்ப சரக்கே இருந்த கோடௌனை தீவைத்துக் கொளுத்தினான். புகையில் எல்லா ஊழியர்களும் வெளியேற ஆரம்பித்தனர். பட்டறை முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. ஆனால் முதலாளி எதிர்பார்க்காத ஒன்று அன்று நடந்து விட்டது. தானப்பன் வேலை முடித்து, தான் மறைத்து வைத்திருந்த சாராயத்தைச் சாப்பிட மறைவிட மாக தேர்ந்தெடுத்தது அந்த கோடௌன் தான். மப்பில் எரியும் நெருப்பு பரவுவதை அறியாமல் அவனும் எரிந்து சாம்பலானான்.
மருக்கொழுந்துக்கு அரசு ஐந்தாயிரம் ரூபாய் தந்தது. அது ஏற்கனவே தானப்பன் வாங்கியிருந்த கடனை அடைக்கத்தான் உதவியது. அந்த நேரத்தில் மாரியம்மன் திருவிழாவும் வந்தது. அரிச்சந்திர புராணம். லோகிதாசன் பாத்திரத்தை ஏற்கவேண்டிய பையன் உடல் நலம் கெட்டு படுத்து விட்டான். ஊரில் அவன் வயதொத்த பையன் யாராவது தென்படுவார்களா என்று மதுசூதன ராவ் தேடும்போது அவர் கண்ணில் பட்டான் சின்னப்பிள்ளை.
“ படிப்பு கெட்டுப்போகுங்க.. நாடவம் கூத்துன்னு பிள்ள மனசு தெச மாறும்.. வேணாங்க சாமி “
மருக்கொழுந்தை சரிக்கட்ட ஒரு பத்து ரூபாய் தாள் கை மாறியது.
“ ரெண்டு நாள் திருவிழா கூத்தை முடிச்சிட்டு ஊர் போயிருவோம். அதுக்குள்ள எங்க பையனே சொஸ்தமாயிருவான்.. அனுப்புங்க! பையனுக்கு ஒண்ணும் ஆவாது “
சின்னப்பிள்ளையின் மனதை கூத்து ஆக்ரமித்தது. அந்தப் பாட்டுச் சத்தமும், விளக்கொளியும், ஜிகினா உடைகளூம், அவன் மனதில் ஒரு கனவு உலகத்தை சிருஷ்டி செய்ய ஆரம்பித்தன. கூத்து கோஷ்டி ஊர் செல்ல ஆயத்தப்படும்போது, சின்னப்பிள்ளையுடன் மருக்கொழுந்து ஊர் எல்லையில் நின்றிருந்தாள்.
“ இவனையும் கூட்டிக்கிட்டு போங்க.. நாடவம் கூத்துன்னு ஒரே மொரண்டு பிடிக்கிறான். பகல்ல எதுனா ரெண்டெழுத்து படிக்க வைங்க “
மதுசூதன ராவுக்கு சந்தோஷம். சின்னப்பிள்ளையிடம் கலை நீரோட்டமாக ஒளிந்திருப்பது அவருக்கு தெரிந்திருந்தது. எதையும் சட்டென்று பற்றிக்கொள்ளும் சுபாவமும், சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு, உடனே அதை செயல் வடிவில் நடிப்பாக வெளிக்கொணரும் திறமையும் அவரை வியக்க வைத்தன.
நாட்கள் உருண்டோடின. சின்னப்பிள்ளை இப்போது வாலிபன். மதுசூதனராவும் பத்மாவதிக்கும் பிள்ளைப்பேறு இல்லை என்பதால், அந்தக் குழுவில் அவன் அவர்களது செல்லப் பிள்ளையாகவே வளர்ந்திருந்தான். இப்போதெல்லாம் வள்ளி திருமணத்தில் அவன் தான் முருகன். ராமாயணத்தில் ராமன். பாரதத்தில் அருச்சுனன். அவனுக்கு சேலத்தில் கொடிகட்டிப் பறந்த குமரன் நாடக மன்றத்தின் தலைவர் குமரேசனின் மகளான சாந்தகுமாரியை திருமணம் செய்து வைத்தனர் அவனது வளர்ப்புப் பெற்றோர்.
சாந்தகுமாரி நாடகக்குழுவின் தலைவர் மகளாக இருந்தபோதிலும் அவளுக்கு கலையின் மீது எந்த நாட்டமும் இல்லை. திருமணமான புதிதில் சும்மாயிருந்த அவள், நாளாக நாளாக சின்னப்பிள்ளை கூத்திலோ நாடகத்திலோ பங்கேற்கக் கூடாது என்று நிபந்தனை போட ஆரம்பித்தாள்.
“ மாசமாயிருக்குறா.. அவ ஆசையை நெறவேத்தணும்டா சின்னப்பயலே “ ராவ் புத்திமதி சொன்னார்.
“ எப்படி நைனா.. சின்னப்பிள்ளைலேயிருந்து கத்துக்கிட்டது.. நமக்கு சோறு போடறது அதுதானே! திடுதிப்புன்னு வுட்டுறணும்னா எப்பிடி.. செப்பு நைனா செப்பு “
“ அவ என்னா சொல்லிட்டா நீ மேடையேறக்கூடாது அவ்ளவுதானே.. ஆனால் நாடவம் போடக்கூடா துன்னு இல்லையே.. நாடவம் தயார் பண்ணு! வேற ஆள வச்சு போடு.. ஒன்ன யாரு தொழில வுட்டுரச் சொன்னாங்க “
சாந்தகுமாரிக்கு சந்தோஷமாக இருந்தது. எப்படியோ தன் கணவன் தன் சொல்லை கேட்டு விட்டான். அந்த சந்தோஷத்திலேயே அவள் ரெட்டைப் பிள்ளை பெத்துப் போட்டாள். ரெண்டும் ஆண் பிள்ளைகள்.
“ அஞ்சு வருஷம் கழிச்சு லவ குசா நாடவம் போடலாம்.. இப்பவே ஆக்டரு ரெடி “ சின்னப்பிள்ளை துள்ளினான்.
“ தோ பாரு கூத்த ஒன்னோடவே வச்சிக்க.. எம் பிள்ளைங்களுக்கு கொண்டு வராதே ஆமா “
ராம் லட்சுமண் என்று பெயர் வைத்து வளர்த்த பையன்களுக்கு, நல்ல படிப்பு சொல்லிக் கொடுத்தாள் சாந்த குமாரி. அவர்கள் வளர்ந்து பெரியவர்களான இந்த இருபது வருடத்தில், தொலைக்காட்சி வந்து கூத்தும் நாடகமும் ஒழிந்து போனது. மதுசூதனராவும் பத்மாவதியும் இறந்து போயிருந்தார்கள். அவர் களது பூர்வீக சொத்து காக்கிநாடாவில் இருந்தது. அதுவும் சின்னப்பிள்ளைக்கும் அவனது மகன் களுக்கும் வந்து சேர்ந்தது.
அடுத்த ஐந்து வருடங்களில் சின்னப்பிள்ளையின் மகன்கள் நன்றாகப் படித்து பெரிய வேலையில் அமர்ந்தார்கள். கல்யாணமும் செய்து கொண்டார்கள். சென்னை மாநகரில் பெரிய அடுக்குமாடி குடி யிருப்பில் இரண்டு தனித்தனி வீடுகள் வாங்கிக் கொண்டார்கள். ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரு பையனும் ஒரு பெண்ணும் இருவருக்கும் உண்டு.
சின்னப்பிள்ளையின் மகன்களும் மருமகள்களும் வேலைக்கு போகிறவர்கள். அவர்கள் உலகம் இயந்திர உலகம். வேலை நெருக்கடி அவர்களை வெகுவாக மாற்றியிருந்தது. அவர்களுடைய உணர்வுகளுக்குத் தகுந்தபடி வீட்டில் உள்ள பெரியவர்களும் குழந்தைகளும் நடக்க வேண்டியிருந்தது.
வாசலில் வாகனச் சத்தம் கேட்டவுடன் வரவேற்பறையில் இருக்கும் மின்விசிறியை சுழலவிட்டு, வரும் மகனுக்கோ மருமகளுக்கோ பிடித்த பானத்தை தயார் செய்து வைத்திருப்பார்கள் சின்னப் பிள்ளையும் சாந்தகுமாரியும். அதைப் பார்த்த அவர்கள் முகம் மலரும். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு மகனும் மருமகளும் ஓய்வாக இருக்கும்போது, பேரன்களையோ பேத்திகளையோ விளையாட்டுகாட்டி வேறு அறைக்கு அழைத்துச் சென்று விடுவதும் அவர்கள் வேலைதான்.
“ ஏங்க பேசாம நாம ஊரோட போயிரலாமா.. இந்தப் பட்டண வாழ்க்கை ஒத்துக்கலைங்க “
“ என்னா பேச்சு பேசற.. சின்னஞ்சிறுசுங்க கொழந்தைங்கள வச்சிக்கிட்டு கஷ்டப்படுதுங்க.. இப்ப வுட்டுட்டு போறதா.. வேற பேச்சு பேசு “
மகனுக்கு அனுசரணையான தந்தையாக, மருமகளுக்கு இங்கிதம் தெரிந்த மாமனாராக, பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லும் நடிகனாக பலவேசம் போடும் இந்த வாழ்வு சின்னப்பிள்ளைக்கு பிடித்து தான் இருந்தது.
அடுத்தடுத்த வீடுகளின் பால்கனியில் இப்போதும் சின்னப்பிள்ளையை நீங்கள் பார்க்கலாம். அவர் தன் பேரனையோ பேத்தியையோ கொஞ்சிக்கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தபடியே “ காயாத கானகத்தே நின்றுலாவும் “ என்ற வள்ளி திருமணப் பாடலை பாடிக் கொண்டிருப்பார். சாந்தகுமாரி வரும் அரவம் கேட்டால் அது “ காக்க காக்க கனகவேல் காக்க “ என்று மாறும்.

Series Navigationஒவ்வாமைசாயாசுந்தரம் கவிதைகள் 3
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    Mani says:

    உண்மைதான். நிறைய இடங்களில் பார்க்கலாம். நாமும் இதைத்தான் செய்யப்போகிறோம் !!!

Leave a Reply to Mani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *