பழமொழிகளில் ‘காடு’

This entry is part 7 of 33 in the series 11 நவம்பர் 2012


 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

     ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தான். நாகரிகமற்ற சூழலில் விலங்களைப் போன்று வாழ்ந்தான். சிறிது சிறிதாக நாகரிகமடைந்த பின்னர் தனக்கேற்றவாறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டான். மலைக்குகைகள், மரப்பொந்துகள், மரத்தடிகள் என்று வாழ்ந்தவன் பின்னர் காடுகளை அழித்துத் தனக்கேற்ற வசிப்பிடங்களையும், விவசாயம் செய்வதற்குரிய நிலங்களையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்தான். அன்று முதல் இன்று வரை மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் காடுகள் பின்னணியாக உள்ளன.

காடு மனித வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றது. வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கும் இத்தகைய காட்டினை மையமாக வைத்து நமது முன்னோர்கள் வாழ்வியல் உண்மைகளை விளக்கும் வகையில் பல பழமொழிகளை வழங்கியுள்ளனர். இத்தகைய பழமொழிகள் வாழ்வின் சூட்சுமததை விளக்குவனவாக உள்ளன.

காடையும் காடும்

காட்டில் பல்வேறு பறவைகள் வாழ்கின்றன. அவை காட்டில் வாழ்வதற்கேற் தகவமைப்புகளையும் கொண்டுள்ளன. சில பறவைகள் மரப்பொந்துகளிலும், மரத்தின் கிளைகளிலும், தங்களின் வாழ்கின்ற முறைகளுக்கேற்ப கூடுகள் கட்டிக் கொண்டு வாழ்கின்றன.

அவ்வாறு வாழும் பறவைகளைப் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் கூண்டுகளில் அடைத்து வளர்க்க முடியாது. அவ்வாறு வளர்க்கப்படும் பறவைகள் வீட்டுச் சூழ்நிலைக்கேற்ப வாழ இயலாது. ஆனால் இன்று காடுகளில் வாழ்ந்து திரிந்த காடைகள் என்ற சிறுபறவைகளைப் பிடித்து வந்து அவற்றை உணவிற்காக வளர்க்கின்றார்கள். அவற்றைத் தீனிபோட்டு வளர்த்து, அவை வளர்ந்தவுடன் கொன்று உண்ணுகின்றார்கள். இக்காடைகளை மக்கள் கூண்டுக்குள் அடைத்தே வளர்க்கின்றனர். அக்கூண்டை அவர்கள் திறப்பது இல்லை. திறந்தால் அவை காட்டை நோக்கிப் பறந்துவிடும். இத்தகைய காரணத்தாலேயே கூண்டைத் திறவாது அவற்றை வளர்க்கின்றனர்.

இக்காடையை அதற்குப் பிடித்தமான உணவைப்போட்டு வளர்த்தாலும் அப்பறவையானது வளர்த்தவரை விரும்பாது. அது காட்டையே விரும்பிப் பறந்து போகும். வளரும்வரை இருந்துவிட்டுப் பின்னர் வளர்ந்தவுடன் அது காட்டை நோக்கிப் பறந்து சென்றுவிடும். அதுபோன்று மனிதர்கள் பலரும் தாங்கள் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க ஒருவராக வளரும் வரை பிறரைச் சார்ந்து இருப்பர். பிறருடைய உதவி தேவையில்லை என்று தெரிந்தவுடன் தன்னை வளர்த்தவரையே தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிவிடுவர். மனிதர்களின் இத்தகைய பண்பினை,

‘‘காடைக்குக் கலக் கம்பைக் கொட்டினாலும்

காடை காட்டைத்தான் நோக்கும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

ஏறுகின்றவரை ஏணியைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டு ஏறியபின் ஏணியை எட்டி உதைப்பதைப்போன்று மனிதர்கள் நன்றிகெட்டதனமாக நடந்து கொள்வர். வறுமையில் வாடும்போது உதவி செய்து உயரத்தில் ஏற்றிவிட்டவரை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டுச் சென்றுவிடுவர். அடுத்தவர் தமக்கு வறுமைக்காலத்தில் உதவியதை மறந்துவிடுவர். இவர்கள் அற்பர்கள் ஆவர். இத்தகைய அற்பர்களின் பண்பினை விளக்கும் வண்ணம் இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டில் வளரும் பறவைக் குஞ்சானது வளரும் வரைக் கூட்டிலேயே இருக்கும். வளர்ந்து இறகு முளைத்த பின்னர் அக்கூட்டைவிட்டுப் பறந்து சென்றுவிடும். தான் வளர்ந்த கூடு என்று அப்பறவை நினைக்காது. அதுபோன்றே மனிதர்களும் இருப்பர். நன்றி உணர்வு உள்ளவர்களாக மனிதர்கள் இருத்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி உள்ளடக்கி இருப்பது சிறப்பிற்குரியதாக உள்ளது.

காடும் வீடும்

மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது எங்கு எவ்வாறு முடியும் என்று யாராலும் கணித்துக் கூற இயலாது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு நிலையில் மனிதன் இருப்பான். அவனால் ஒரு வயதில் செய்யக் கூடியது பிறிதொரு வயதில் செய்ய இயலாது. தன்னால் செய்ய இயலாத போது மனிதன் தனது இயலாமையை நினைத்து விரக்தி நிலைக்குத் தள்ளப்படுகின்றான். அங்ஙனம் விரக்தி நிலையை அடையும் மனிதன் எந்த இன்பத்தையும் விரும்பாமல் இருப்பான்.

அவனுக்கு இறப்பொன்றே அடைக்கலமாகும். அவ்வாறு விரக்தி நிலையில் உள்ளவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வதுமுண்டு. ஆனால் பலர் அவ்வாறு தற்கொலை முடிவை எடுக்க மாட்டார்கள். இறைவன் விட்டவழி என்று விதிவழிப் பயணிப்பர். திரைப்படம் பார்க்க வருகிறாயா? என்று வயதான நிலையில் உள்ள பெரியவரைப் பார்த்துக் கேட்டால்,

அவர், ‘‘அடப் போப்பா, ‘‘காடு வா வாங்குது, வீடு போபோங்குது’’ இதுல எனக்குச் சினிமா வேறயா?’’ என்று கேட்பார்.

இறக்கப் போகும் நிலையில் உள்ள தனக்கு எந்தவிதமான ஆசையும், தேவைகளும் இனி இல்லை என்பதையே இப்பழமொழி உணர்த்துகின்றது. இங்கு ‘காடு’ என்பது சுடுகாட்டைக் குறிக்கும். மனிதன் ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் வாழ்ந்தால் அவனை யாரும் மதிக்கமாட்டார்கள். மேலும் அவனால் எந்தவிதப் பயனும் இல்லையென்றால் அவனை ஒரு பொருட்டாகக் கருதவும் மாட்டார்கள். வேண்டாத அம்மனிதர் ஜடப்பொருளைப் போன்றவராகக் கருதப்படுவார்.

தன் குடும்பத்தாரலேயே ஒதுக்கப்பட்ட இந்தப் பெரியவர் தனக்கு எப்போது மரணம் வரும் என்று தினமும் எதிர்நோக்கியபடியே இருப்பார். இந்தக் கருத்தை உள்ளடக்கியே வீடு(வீட்டில் உள்ளவர்கள்) போபோங்குது என்றும், காடு(சுடுகாடு) சீக்கிரம் வந்துவிடு என்று அழைப்பை விடுப்பதைப் போன்றும் இப்பழமொழி அமைந்துள்ளது. பெரியோரை மதித்து அவர்களைப் பாதுக்காத்தல் வேண்டும் என்ற வாழ்வியல் நன்னெறியையும் இப்பழமொழி நமக்கு உணர்த்திநிற்கிறது.

சுடுகாடு

இறந்தவர்களைப் புதைக்கின்ற இடம்-இடுகின்ற இடம்-இடுகாடு என்றும், சுடுகின்ற இடம்(எரிக்கின்ற இடம்) சுடுகாடு என்றும், மயானம், புங்காமணி தோப்பு என்றும் பல பெயர்களில் வழக்கில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. இச்சுடுகாட்டிற்கு எப்போதும் யாரும் சென்று கொண்டிருக்க மாட்டார்கள். யாராவது இறந்து போனால் ஒழிய அப்பக்கம் செல்வதற்கு மக்கள் அஞ்சுவர்.

இறப்பினைக் கண்டு அஞ்சுவதால் இறந்தவர்களைப் புதைக்கின்ற சுடுகாட்டையும் கண்டு மக்கள் அஞ்சினர். சிலவற்றை அறியாதிருந்தும் அதுகுறித்துத் தாங்கள் அறிந்திருப்பதைப் போன்று அவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வர். அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரியும். அதனால் அவர்கள் அறியாது கூறுவதை, ‘‘முன்னே பின்னே செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்’’ என்று கூறுவர்.

அதாவது யாராவது இறந்து அவரது இறப்புச் சடங்கில் கலந்து கொண்டிருந்தால்தான் சுடுகாடு எங்கு இருக்கின்றது என்று தெரியும். எதிலும் கலந்து கொள்ளாதவர்களுக்கு எது எங்கு, எப்படி நடக்கின்றது என்பது தெரியாது. அத்தகைய அறியும் திறன் இல்லாதவர்கள் தங்களது அறியாமையை ஒத்துக் கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் அறிந்து செயல்பட வேண்டும். எதனையும் அறியாது, அறிந்தது போன்று காட்டிக் கொள்ளக் கூடாது என்ற அரிய சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு நல்குகின்றது.

காடு வளத்தைக் குறிக்கும் குறியீடாக இருந்தாலும்  மனித வாழ்க்கையையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. நம்மோடு நடமாடும் தெய்வங்களாக விளங்கும் வயது முதிர்ந்தோரை நன்கு பாதுகாத்து மனமகிழ்வுடன் அவர்களை வைத்துக் கொள்வோம். எனக்கு எல்லாம் தெரியும் என்று வெற்றுப் பேச்சுப் பேசாது அனைத்தையும் நாம் கற்றுக்கொள்வோம். கற்றுக்கொண்டு நன்றி மறவாது உலகில் வாழ்வாங்கு வாழ்வோம். வாழ்வு வளமுறும்.

————————————————

Series Navigationநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்காவீடு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *