பழமொழிகளில் கிழவனும் கிழவியும்

This entry is part 37 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

மனிதனுக்குப் பல பருவங்கள். ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பெயர். பிறப்பிலிருந்து இறப்புவரை மனிதனின் பருவங்களுக்குத் தனித்தனியான பெயர்கள் வழங்கப்படுகின்றன. குழவி, இளங்குழவி, சிறார், விடலைப் பருவம், குமரப்பருவம், இளைஞன், நடுவயதுக்காரன், கிழவன், கிழடு, வன்கிழடு என்று பல பெயர்கள் இம்மனிதப் பருவங்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என ஏழு பருவங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒவ்வொரு காலங்கழிவிலும் ஒவ்வொரு பெயராக வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றன.

நமது முன்னோர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இவ்வயது முதிர்ந்த மனிதப் பருவம் பழங்காலத்தில் மிகவும் சமுதாய மக்களால் போற்றி மதிப்பளிக்கப்பெற்ற பருவமாக விளங்கியது. வயதான மனிதனின் நிலையை முதியோர், விருத்தன், விருத்தாப்பியப் பருவம், முதுமைப் பருவம் என்றும் வழங்கினர். ஆனால் இன்று வயதில் முதிர்ந்த மனிதனைப் பலரும் பலவிதமாக இழிவுபடுத்துகின்றனர். அவர்களைச் சுமையாகக் கருதுகின்றனர். அவர்கள் தாய், தந்தை, வேறு யாராக இருந்தாலும் அவரால் தமக்குப் பலனேதும் இல்லை என்று கருதி அவர்களை நாதியற்ற அநாதைகளாக்கி விட்டனர். தம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரை முதிர்ந்த பருவத்தில் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுவிடுகின்றனர்.

அன்புக்கு ஏங்கும் அப்பெரியோரின் மனம் கொழுகொம்பில்லாக் கொடிபோன்று அலைபாயக் கூடிய சூழல் இன்றும் சமுதாயத்தில் நிலவுகின்றது. முதியவர்கள் தேடிய சொத்துக்கள் மட்டும் தேவை. முதியவர்கள் தேவையில்லை என்று இன்றுள்ள இளைஞர் பட்டாளங்கள் கருதுகின்றனர். அவர்கள் தாங்களும் முதுமை அடைவோம் என்பதனை மறந்து விடுகின்றார்கள். முதியவரான தங்களது தாய், தந்தையரை வீட்டிலிருந்து வெளியூர், வெளிமாநிங்களுக்குக் கொண்டு சென்று விட்டுவிட்டு வரும் அவல நிலையும் இச்சமுதாயத்தில் நிலவுவது கொடுமையிலும் கொடுமையானதாகும்.

இக்கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகப் பழமொழிகளின் வாயிலாக முதியோரின் அருமை, பெருமைகளை உணர்த்தி நம்முன்னோர்கள் நம்மைச் சிந்திக்க வைத்துள்ளனர். இதனை இன்றைய இளைஞர்கள் உணர்ந்தால் முதுமைப் பருவம் சுமையாகக் கருதப்படாமல் சுகமாகக் கருதப்படும் சூழல் உருவாகும்.

வீடும் – கிழடும்

கிழம் – என்றால் முதிர்ந்த பொருள்படும். வழக்கத்தில் வயது முதிர்ந்த பெற்றோரை அவர்களது பிள்ளைகள், ‘‘எங்க வீட்டுல ரெண்டு கெழடுங்க கெடந்து பாடாப்படுத்துது’’ என்றும்

‘‘எங்க கெழவன், கெழவியக் கவனிக்க ஆளில்லை’’ என்றும் பலவாறாகக் கூறுவர். வயது முதிர்ந்த பெற்றோரை அப்பா, அம்மா என்று கூறாது கிழவன், கிழவி என்று அவர்களின் காதுபடவே கூறுவது அவர்களைத் துன்புறுத்துவதாக உள்ளது.

வயது முதிர்ந்தவர்களைப் பார்த்து, ‘‘எப்படி இருக்குறீங்க’’ என்று கேட்டால் அவர், ‘‘வீடு போ போங்குது, காடு வாவாங்குது’’ என்று கூறுவார். வீட்டில் பெரியோர்கள்(வயது முதிர்ந்தோர்) இருப்பது மனதளவில் நமக்கு துணையாக விளங்குகின்றது. இதனை Moral Support என்று கூறுவர். அப்பா இருக்கிறார், அம்மா இருக்கிறார் என்பதே தவறான செயல்களில் மனிதனை ஈடுபட வைக்காது எனலாம். பெரியவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மன வலிமையை அதிகரிக்கும். பிறர் நமக்குத் தீங்கு செய்ய அஞ்சுவர். குடும்பம் மேன்மையுறும். மேலும் தவறான செயல்களில் மகனோ, மகளோ ஈடுபடும்போது, ‘‘டேய்…. போகாதேடா…. அப்படிச் செய்யக் கூடாதுடா . . ……..குடும்பம் கெட்டும் போகும்டா…’’ என்று அறிவுரைகள் கூறித் திருத்துவர். பெரியோர் இல்லாத வீடு பாழடைந்துவிடும். தவறுகளைக் கண்டிப்பதற்கு ஆளின்றி தறிகெட்டுப் போகக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். இதனை,

‘‘வீடான வீட்டுல ஒண்ணு களப் பணம் வேண்டும்

அல்லது ஒரு கௌப் (கிழம்) பொணமாவது வேணும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

பணம் இருப்போரைக் கண்டு யாவரும் அஞ்சுவர். பணக்காரனுடன் மோதினால் மீண்டு வரமுடியாது என்று எதனையும் யோசித்தே செய்வர். அதுபோல் வயதானவர்கள் வீட்டிலிருந்தால் அந்த வீட்டிற்குத் தீங்கு செய்வதற்காகச் செல்வோரும் வேண்டாம் என்று திரும்பி வந்துவிடுவர். கிழப்பொணம் என்பது வயது முதிர்ந்தவரைக் குறிக்க வழங்கப்படும் சொல்லாகும். பணம் என்பதற்கு இணையாக வழங்குவதற்காகப் பொணம்(பிணம்) அமைந்துள்ள சொல் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.

வீட்டில் பெரியவர்கள் இருப்பது பாதுகாப்புக்குரியதும், மதிப்பிற்குரியதும் ஆகும். வயது முதிர்ந்தோரைப் பாதுகாத்து அவரை வீட்டில் வைத்திருந்தால் வீட்டிற்கும் வீட்டிலுள்ளோருக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற கருத்தினை இப்பழமொழி தெளிவுற விளக்குகிறது.

வீடும் – காடும்

வீட்டினை, இல், இல்லம் என்று வழங்குகின்றனர். இல்லத்தை ஆள்பவள் இல்லாள் எனப்பட்டாள். எத்தனை ஆண்களிருந்தாலும் வீடு சிறப்படையாது. பெண் இல்லையென்றால் அவ்வீடு வீடாக இருக்காது. அதனால்தான்,

‘‘மனைக்கு விளக்கம் மடவார்’’

என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

வீட்டில் முதியவள் ஒருத்தி இருந்தால் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வேலையையும் பார்த்துத் தான் செய்யவில்லை என்றாலும் மற்றவர்களைச் செய்ய வைப்பாள். அதுபோன்று காட்டில் உள்ள விவசாய வேலைகளை வயதானவர் ஒருவர் இருந்தால் அவர் பொருப்புடன் பார்த்துக் கொள்வார். அவரால் முடியாவிட்டாலும் மகனையோ, மற்றவர்களையோ வேலையைப் பாருங்கள் என்றாவது கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் வீடும் காடும் சிறக்கும். இதனை,

‘‘வீட்டுக்கொரு கிழவியும் காட்டுக்கு ஒரு கிழவனும் வேண்டும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. முதியோர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களால் நாம் பெறும் பல்வேறுவிதமான நன்மைகளையும் இப்பழமொழி தெளிவுற விளக்குவது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையும் – கிழவனும்

குழந்தைச் செல்வம் என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் செல்வங்களுள் மேலானது. குழந்தைகள் இல்லையெனில் அவ்வீடு திருவிழா முடிந்த இடம்போல வெறிச்சோடிக் கிடக்கம். ஆனால் குழந்தையே இல்லையென்றால் நாமே குழந்தையாகிவிடுவவோம். ஏனெனில் வயதான நிலையில் முதியோர் குழந்தை நிலைக்குத் தளளப்படுகின்றனர். அவர்கள் குழந்தை போன்று நடந்து கொள்ளத் தொங்குவர். இத்தகைய முதியோரின் நிலையை,

‘‘பிள்ளையில்லாத வீட்டில் கிழவன்

துள்ளி விளையாண்டானாம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. வயது முதிர்ந்தோர் சிறுகுழந்தைகளுடன் விளையாடுகின்றபோது அவர்களே குழந்தைகளாக மாறிவிடுவர். குழந்தைகளில்லா நிலையிலும் அவர்கள் குழந்தைநிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். அத்தகைய நிலையில் உ்ளள பெரியோர்களை நாம் குழந்தைகள் போன்று கவனித்துக் கொள்ளவேண்டும் என்று இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துவதாக உள்ளது.

கிழவியும் – கிண்ணரக்காரனும்

வயது முதிர்ந்த பெண்ணைக் கிழவி என்பர். இவ்வயதான பெண்மணியுடன் யாரும் அமர்ந்து பேசுவது கிடையாது. அவர்கள் கூறுவதை யாரும் வீட்டில் கேட்கமாட்டார்கள். அங்ஙனம் கிழவி கூறினாலும் காதில் வாங்காதது போல் சென்று விடுவர். தான் கூறியதைக் கேட்காது யாராதவது சென்றால் அம்மூதாட்டி வருந்துவாள். வயதான அவளும் தன் நிலையை நினைத்து வருந்துவாள். அவளுக்கு அதைததவிர வேறொன்றும் செய்ய இயலாது. இன்றைய நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் இதுவே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. யாரும் பெரியவர் முதல் சிறியவர் வரை கிழவிகள் சொல்லுவதைக் கேட்பதில்லை. அவர்கள் காதில் விழுந்தாலும் கேட்காதது போலச் சென்று கொண்டே இருப்பர். இதனை,

‘‘கிழவி சொல்றதைக் கிண்ணரக்காரன் கேட்கமாட்டான்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

‘கிண்ணரம்’ என்பது ஒரு இசைக்கருவி. இது இசைக்கப்படும் போது ஒலி அதிகமாக வெளிவரும். அதனால் பிறர் எது கூறினாலும் அதனை இசைப்பவனுக்குக் கேட்காது. அதிலும் வயதான மூதாட்டி கூறுவதுகேட்குமா? எனில் கேட்காது. அவன் தனது இசைக் கருவியை இசைத்துக் கொண்டே இருப்பான். அது போன்றே வயதில் முதியவளான கிழவிகள் தம்மைச் சார்ந்தோரிடம் ஏதாவது கூறினாலும் அவர்கள் கேட்பதில்லை என்ற சமுதாய நிலையை இப்பழமொழி எடுத்துரைப்பதுடன் முதியோரின் கூற்றுக்குச் செவி சாய்த்து அவர்கள் கூறுவதைக் கேட்கவேண்டும் என்ற பண்பாட்டு நெறியையும் இப்பழமொழி நமக்குப் புலப்படுத்துகின்றது.

முதுமை சுமையல்ல. அது போற்றிப் பேணப்பட வேண்டிய பருவமாகும். முதுமைப் பருவத்திலுள்ளோரைக் கேலி செய்ாது அவர்களுடன் அன்பாகப் பேசிப் பழகுதல் வேண்டும். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று இருத்தல் கூடாது. அவர்கள் கூறுவதைச் செவிமடுத்துக் கேட்டு அவர்களுக்கு மதிப்பளித்துப் பண்பட்ட அவர்களின் அறிவுரைப்படி வாழ்ந்து அவர்களது வழி காட்டலில் நடந்து நன்மை பெறுவோம். இதனால் முதியோரின் வாழ்வு சுகமாவதுடன் நாமும் சுகமாக வாழ்வோம். முதுமையைப் போற்றிப் பாதுகாப்போம். நாடும் வீடும் வளமுறும்.

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.“சமரசம் உலாவும்……..”
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *