பழமொழிகளில் ‘வழி’

This entry is part 5 of 40 in the series 1 ஏப்ரல் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

வழி என்ற சொல்லிற்குப் பாதை, நெறி, தீர்வு என்ற பொருள்கள் வழக்கில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவர் தனது நண்பரிடம், ‘‘நான் என் வழியில் போறேன். நீங்கள் உங்க வழயில போங்க’’ என்றும், ‘‘என் வழியில குறுக்கிடாதீங்க’’ என்றும் கோபத்துடன் கூறும்போது வழி என்பதற்குப் பாதை, நெறி என்ற பொருள் புலப்படுகின்றது. ‘‘ஒரு வழியும் புலப்படவிலலை’’ என்று கவலையுடன் கூறும்போது, ‘தீர்வு, முடிவு’ என்ற பொருள் தொனிக்கக் காணலாம்.

‘வழி’ என்ற சொல்லை வைத்துப் பல வாழ்வியல் கருத்துக்களை நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துஐரத்துள்ளனர்.

தை – வழி

நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்யக் கூடிய காலம் தைமாதம் ஆகும். அம்மாதமே பல புதிய வருவாய்கள் வரக்கூடிய மாதமாகும். பல நாள் பாடுபட்டதற்குப் பலன் கிடைக்கும் மாதம் இத்தைமாதமே ஆகும். இத்தை மாதத்தில் பல்வேறு விழாக்கள் மக்களால் கொண்டாடப்படுகின்றன. தமக்குப் பணப்பிரச்சனையோ, அல்லது ஒருவரிடம் வாங்கியுள்ள கடனைத் தீர்க்கவேண்டுமென்றாலோ அவர் கடன் கொடுத்தவரிடம், ‘‘தை மாதம் வரட்டும் உங்க கடனைக் கட்டிவிடுகிறேன்’’ என்று கூறுவார். ஏன் அவ்வாறு கூறுகிறார் என்றால் அத் தை மாதத்தில் அறுவடை தொடங்கி வயலில் விளைந்த நெல் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வீட்டிற்கு வரத் தொடங்கும். அவ்வாறு வரும் விளைபொருள்களைத் தமது தேவைக்குப் போக எஞ்சியதை விற்றுப் பணமாக்குவர். அப்பணத்தைக் கொண்டு தமது தேவைகளை நிறைவு செய்து கொள்வர். இத்தகைய தமிழர்களின் வாழ்வியல்முறைகளை,

‘‘தை பிறந்தால் வழி பிறக்கும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

திருமணம் உள்ளிட்ட நல் நிகழ்வுகள் தையில் நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. விளைச்சல் கிடைப்பதினாலேயே தை மாதத்தை மக்கள் குறிப்பிட்டனர். இங்கு, ‘தீர்வு’ எனும் பொருளில் ‘வழி’ என்பது ஆளப்பட்டுள்ளது.

வழியும் – தேவையற்றவையும்

சிலர் தேவையின்றி பிறருடைய வாழ்க்கையில் குறுக்கீடு செய்வர். இன்னும் சிலர் பிறருடைய பிரச்சனைகளையெல்லாம் வலியச் சென்று தன்மீது எடுத்துப் போட்டுக் கொள்வர். அங்ஙம் பிறருடைய பிரச்சனைகளில் தலையிடுவதால் அதனைத் தீர்க்க முடியாது திண்டாடி விழிபிதுங்கித் தன்புறுவர். இஃது தேவையற்ற ஒன்றாகும். இவ்வாறு பிரச்சனைகளைத் தேவையின்றித் தங்கள் மீது திணித்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறிருந்தால் வாழ்வில் அமைதி நிலவும். இல்லெனில் பிரச்சனைகளும், மன உளைச்சலும் இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய அரிய வாழ்வியல் நெறியை,

‘‘வழியில போற ஓணானை மடியில விட்டுக்கிட்டுக்

குத்துதே கொடையுதேன்னு சொன்ன மாதிரிதான்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இங்கு வழி என்பது பாதை என்று பொருள்படும். பாதையில் போய்க் கொண்டிருக்கின்ற ஓணான் என்பது தேவையில்லாத பிரச்சனைகளைக் குறிக்கும் ஒரு குறியீடாகும். தமக்குத் தொடர்பில்லாத பிரச்சனைகளில் எதிலும் தலையிடக் கூடாது. அவ்வாறு தலையிட்டால் துன்பம் ஏற்படும். துன்பம் ஏற்பட்டவுடன் தமக்கு அத்தகைய துன்பம் வந்துவிட்டதே என்று புலம்புதல் கூடாது எனும் நயத்தக்கப் பண்பாட்டு நெறியை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ளனர்.

வாயும் – வழியும்

நமக்குத் தெரியாத விஷயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் எப்படிப் பிறரிடம் கேட்க முடியும். கேட்டால் நமக்கு மதிப்புக் குறைவல்லவா? என்றெல்லாம் கருதி கேட்காது இருக்கக் கூடாது. சிலர் நமக்குத் தெரியாததைப் பிறரிடம் கேட்டால் நமக்கு ஒன்றும் தெரியாது எனப் பிறர் நினைத்து விடுவார்களோ? என்று நாம் கேட்காதிருத்தல் கூடாது. நமக்குத் தெரியாதவற்றைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. வள்ளுவரும்,

‘‘கற்றிலனாயினும் கேட்க’’

என்று வலியுறுத்துவது நோக்கத்தக்கது. ஏதேனும் ஊருக்குச் செல்கின்றோம் . அங்குள்ள ஒருவர் இருக்கும் இடத்திற்குப் போக நமக்கு வழி(பாதை) தெரியவில்லை. நாம் அங்குள்ளவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டால் அவ்விடத்திற்கு விரைவில் சென்றடைந்து விடலாம். இல்லையெனில் நாம் சுற்றிக் கொண்டே திரிய நேரிடும். எதனையும் வாய்திறந்து பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை வாழ்வியல் பண்பினை,

‘‘மதுரைக்கு வழி வாயில’’

என்ற பழமொழி எடுததுரைக்கின்றது.

மதுரைக்குப் போவதற்கு வழி(பாதை) தெரியவில்லை என்றால் வாய்திறந்து வழி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதனைப் இப்பழமொழி குறிக்கின்றது. வாய்திறந்து கேட்காவிடில் எதுவும் செம்மையாக நடக்காது என்பதனை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டுள்ளது.

புரிந்து கொள்ளல்

சிலரிடம் நாம் ஒன்றினைப் பற்றிக் கேட்டால் அவர் தொடர்பில்லாத ஒன்றினைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பார். நாம் கேட்பதற்கும் அவர் கூறுவதற்கும் எவ்விதத் தொடர்பும் இராது. முதலில் ஒருவர் என்ன கூறுகிறார் என்பதனைப் பொறுமையாகக் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர் கேட்பதற்குப் பதிலுரைக்க வேண்டும். அதுவே சரியானதாகும். சிலர் எதையும் கேட்காது அவர் என்ன நினைக்கின்றாரோ அதனைக் கூறுவர். சில மருத்துவர்கள் நோயாளியிடம் ஓரிருவார்த்தைகள் கூடப் பேசாது அவர் மருந்துகளை எழுதிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அது தவறான ஒன்றாகும். பிறர் கூறுவதைக் கேட்கச் சிலருக்கு நேரமில்லை. அமைதியாகக் கேட்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை. அதனால் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படும். அங்ஙனம் இருக்கக் கூடாது என்பதனை,

‘‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு எத்தனை ரூபாய்ன்னு சொன்னானாம்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

மேலும் ஒருவர் நம்மிடம் என்ன கேட்கிறாரோ அதனைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் அவருக்குத் தேவையான கருத்துக்களைக் கூற வேண்டும். அதுவே சரியானது. மாறாக அவர்கேட்டதற்குத் தொடர்பே இல்லாத செய்திகளைப் பற்றிக் கூறுவது கூடாது என்பதனையே இப்பழமொழி கூறுகிறது. எதைக் கூறுகிறோமோ அதற்குரிய தேவையானதை மட்டும் தெளிவாகப் பேச வேண்டும் என்ற தனிமனித பண்பினை எடுத்துரைப்பதாக இப்பழமொழி அமைந்துள்ளது.

கலகமும் – வழியும்

ஏதாவதொரு பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே நமக்குச் சிலவற்றிற்குத் தீர்வுகள் கிடைக்கும். ஏதும் பிரச்சனைகளோ சிக்கல்களோ ஏற்படாவிட்டால் தீர்வின்றிப் போய்விடும். வாழ்க்கையில் ஏற்படுகின்ற இடர்ப்பாடுகளை எதிர்நோக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். மாறாக நாம் விலகி ஓடுதல் கூடாது. இதனை,

‘‘கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும்’’

என்ற பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது. கலகம் என்பது சிக்கல், குழப்பம் என்று பொருள்பாடும். இது ஏற்பட்டால்தான் நமக்கு ஏதேனும் தீர்வு அல்லது முடிவு கிடைக்கும் என்ற கருத்தினை இப்பழமொழி பிரதிபலிக்கின்றது. இதுபோன்றே,

‘‘குழம்புனாத்தான் தெளிவு கிடைக்கும்’’

என்ற தொடரும் அமைந்துள்ளது. சிக்கல் தீர்வுக்கு வழிகோலும் என்ற பண்பட்ட வாழ்க்கை நெறியை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துவதாக உள்ளது.

போகா ஊரும் – வழியும்

வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்குச் சிலரிடம் சென்று ஏதேனும் ஆலோசனை கேட்டால் அவர்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத பொறுத்துக் கொள்ள முடியாத தீர்வுகளைக் கூறி நம்மைத் திக்கு முக்காடச் செய்வர். அத்தகையவர்களிடம் சென்று நாம் எதற்கும் தீர்வு கேட்கக் கூடாது. என்னை ஒருவர் அடித்துவிட்டார் அதை நீங்கள் தான் கேட்டு நியாயம் வழங்க வேண்டும் என்று ஒருவரிடம் சென்று கூறினால் அவர் தன்னிடம் குறை கூறியவரைப் பார்த்து, ‘‘நீ கையில் அல்லது காலில் வெட்டிக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடு’’ என்று கூறுவார். இது மேலும் பிரச்சனையைச் சிக்கலாக்கிவிடுவதற்குரிய அறிவுரையாகும். கால்கையில் நாம் வெட்டிக் கொள்வது செய்ய முடியாத அறத்திற்குப் புறம்பான ஒன்றாகும். இத்தகையவரிடம் நாம் சற்று எச்சரிக்கை உணர்வோடு இருத்தல் வெண்டும் என்பதனை,

‘‘போதா ஊருக்கு வழி சொன்னது மாதிரிதான்’’

என்ற பழமொழி மொழிகிறது.

யாராலும் போக முடியாத ஊருக்கு வழி – பாதை கூறுவது சாத்தியமாகாத செயலாகும். அது போன்று யாராலும் செய்ய இயலாத செய்வதற்கு அஞ்சும் காரியத்தைச் செய்யக் கூறுவதற்குரியனவற்றை ஆலோசனை என்று கூறக் கூடாது என்ற கருத்தினை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

தீவழி விடுத்து நல்வழி சென்று பிறருக்குப் பயன் நல்கும் வாழ்வினை வாழவேண்டும். சிக்கல்களைக் கண்டோ, பிரச்சனைகளுக்குப் பயந்தோ இராது அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் வாழ்வில் நல்வழி புலப்படும். அல்வழி விடுத்து நல்வழி வாழ்ந்து நலமுடன் வாழ்வோம். வாழ்க்கை வளமுறும்.

Series Navigation‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமிமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *