பாப விமோசனம்

This entry is part 7 of 14 in the series 26 பெப்ருவரி 2017

——————————————-

வையவன்
——————————
சாபத்திற்கு விமோசனம் உண்டு. பாபத்திற்கு விமோசனம் உண்டா பகவானே ?”
மணிநாதம் போல் கேட்ட அந்தக் குரல் தங்கள் தலைவனுடையதோ என்று பிரம்ம லோகத்திற்கு கீழே தாழ்வாக நகர்ந்து சென்ற மேகங்களுக்கு கேட்டன .ஒரு மேகத்திற்குத் துணிச்சல் வந்தது. கூட்டத்தை விட்டு உயர்ந்து ஏறத்தொடங்கியது.
“ஏய், அத்து மீறிப்போய் சாபத்திற்கு ஆளாகி விடாதே” என்று கீழேயிருந்து ஒரு மேகம் எச்சரித்தது. 
ஆம்! மேகநாதனான இந்திரன் தான்.
அவன் பார்வையில் படும் முன் மேலேறிப்போன மேகம் வேகமாகக் கீழிறங்கியது.
“என்ன?”
“நம் தலைவர் தேவேந்திரர் தான் “
 பிரம்மலோகத்தில் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த பகவான் பிரம்மாவின் மனத்தில்  சிறு சலனம்.  இந்திரன் குரலால் ஈர்க்கப்பட்டு நிஷ்டை கலைந்தது. 
மெதுவாக விழிகளைத் திறந்தார். 
எதிரே இந்திரன் நின்றான். 
முகத்தில் கருநிழல். தேவேந்திரனுக்குரிய வசீகரக் களை மறைந்து, சோகமும் சுய இரக்கமும் கலந்த மனத்தொய்வின் ரேகைகள்.
“இப்போது என்ன புதுப்பிரச்சினை இந்திரா?”
தெளிந்த தடாகத்தின் நிர்ச்சலனமான முகத்தோற்றத்தோடு பிரம்மா கேட்டார்.
“எப்போதும் உள்ள பிரச்சினை தான் பகவானே!”
“தங்கள் சிருஷ்டி!”
“எதைச் சொல்கிறாய்?”
“என்னையே சொல்கிறேன்!”
“உனக்கென்ன இப்போது? என் பௌத்திரன் ராவணனைக் கொன்று  இந்திரலோகத்தை ஸ்ரீ ராமன் அவனது கொடும் பிடியிலிருந்து  விடுதலை செய்து விட்டானே!”
“ராஜ்ஜியம் மீண்டுவிட்டது.ராவணன் அழிந்து விட்டான்.ஸ்ரீ ராமனின்
பாத தூளி பட்டு சிலையாகக் கிடந்த அகல்யா சாபவிமோசனம் பெற்று மீண்டும் பழைய உடல் பெற்றுக்கொண்டாள்.ஆனால் நான்.. நான்?” இந்திரன்
தனது உடலெங்கும் பரவியிருந்த கண்விழிக்குறிகளைத்தோள் திருப்பியும், இரு முழங்கைகளை நீட்டியும் நீதி கேட்பது போல் காட்டினான்.
பிரம்ம பகவான் மெதுவாக நெற்றியைத்தேய்த்துக் கொண்டார்.
“விதைத்தாய் .அறுத்தாய்.வினைப்பயனுக்குத் தப்பிக்க முடியாது.அது விதி.”
இந்திரன் மண்டியிட்டு பிரம்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். 
“படைத்தவர் தாங்கள்.அதன் பலாபலன்களுக்கு என்னை ஆளாக்கிவிட்டு வினை என்ற விதியை என் பால் சுமத்தினால் நியாயமாகுமா?”
“சிருஷ்டிக்கும்போது உருவாகும் என் மனோதர்மமே வினையை உருவாக்கும் விதியாகிறது. அது நீ சுமந்த ஜென்மஜென்மாந்திரச் செயல்களின் தொகுதி. நீ சிருஷ்டிக்கப்படும் போது அவற்றினால் உருவான என் மனச்சலனமே நீ! ” 
” ஆனால் அகலியாவைச் சிருஷ்டிக்கும்போது தாங்கள் படைக்கும் பொறுப்பிலிருந்து விலகி  தனி மன எழுச்சியுடன் அவளைச் சிருஷ்டித்தீர்கள். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அம்சத்தோடு, தேவர்கள் எல்லாரும் போட்டிபோட்டு ஓடித்தேடிய பேரழகியாக!”
“உண்மைதான் “
பிரம்மா ஒப்புக்கொண்டார்.
“அந்த அழகு ஒரு தூண்டிலாகி எல்லாரையும் ஈர்த்தது போல் என்னை ஈர்த்தது. என்னை நிலை மறக்கச் செய்தது. அது என் குற்றமல்ல. அவளது அழகின் குற்றம். அதை அவ்வளவு அக்கறையும் ஆர்வமும் காட்டி உருவாக்கிய தங்கள் குற்றம்.”
“எங்கே போயிற்று உன் தன்னடக்கம்? கட்டுப்பாடு?”
“என்னைத் தாங்கள் தவ மேன்மையுள்ள துறவியாக சிருஷ்டிக்கவில்லை”
“ஆத்மாவின் யாத்திரையில் ஒவ்வொரு பிறவியும் ஒரு சத்திரம். இந்திரனாக நீ பெற்ற அனுபவ வினைத்தொகுதி அடுத்த சத்தியத்திற்கு போகும்போது உதவும்”
“நான் பாபவிமோசனம் கேட்க வந்தேன். தாங்கள் ஞானோபதேசம் செய்கிறீர்கள்.”
“நான் சிருஷ்டிகர்த்தா.சிருஷ்டிகளின் வினைக்குப் பொறுப்பேற்பவன் அல்ல.”
” அப்போது என் கதி?”
” இந்திராணியிடம் மன்னிப்புக் கேட்டாயா?”
“கேட்டுவிட்டேன்.”
“என்ன சொன்னாள் ?”
“தங்களைப் போய்த் தரிசித்து வரச்சொன்னாள் ” 
“சரி.உன்னைப் பாபம் செய்யத் தூண்டியவர் யாரோ,சாபத்திற்கு ஆளாக்கியவர் யாரோ அவர்களிடம் போய் மன்றாடு. கெஞ்சு.கதறி அழு.”
“இது தான் தங்களது இறுதி முடிவா? “
“அல்ல.நியதியின் முடிவு”
இந்திரன் மீண்டும் பிரம்மாவின் தாள் தொட்டுப் பணிந்தான். அவனது அங்கலாய்ப்பிற்கு அவர் சூட்சுமமாக மனமிரங்கி வழி காட்டி விட்டார். 
‘போ. முயற்சி செய்’ 
செய்ய வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டிவிட்டார். இந்திரன் போனபின்பு கோடானுகோடி உயிர்கள் தாங்கள் செய்த வினையின் விளைவுக்குத் தன்னைச் சபிக்கிற சாபக்கனல் மீண்டும் ஒரு முறை அவரைத் தீண்ட வந்தது.தன்னைச் சுற்றித் தவக்குளுமையால் அவர் போட்டிருந்த அமிர்த வளையம் அதை அகற்றியது.
அகல்யாவின் பேரழகை அவர் சிருஷ்டிக்கவில்லை.
ஜென்ம ஜென்மாந்திரங்களாக அவள் தனக்குத் தானே சேமித்த சௌந்தரியக் கற்பனையின் விளைவு அது  .
‘இந்திரன்?பாவம்!மீன் சிக்கிக் கொள்வதற்குத் தூண்டில்பொறுப்பாக முடியாது! போகவேண்டிய இடத்திற்குப் போய்ப்புரிந்துகொள்வான்.’
சிந்தனையிலிருந்து விடுபட்டார்.ஒரு பரிவு நெஞ்சை வருடியது.இரண்டு கண்களை வைத்துக்கொண்டு ஒரு அகல்யாவுக்காகப் பட்டபாடே போதாதா? ஆயிரம் கண்களில் எத்தனைப் பெண்ணழகு தட்டுப்பட்டு என்ன பாடு படுத்துமோ! 
                                             2 
 
ந்திரனது வாகனம் ஐராவதம் பூமியை நோக்கி இறங்கியது.
அகல்யாவும் கௌதமரும் சதானந்தனுடன் சரயூவின் கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டான். தண்டகாரண்யம் வெறிச்சோடிப்போயிருக்கும் .
 அயோத்திக்கு ஏன் வந்தார்கள்?
ஓ! ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேகம். அயோத்தி மட்டுமல்ல; சகல ரிஷி குலங்களும் கண்களில் கசியும் கண்ணீரோடு,நெஞ்சில் நிறைந்த வேதனையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வைபவம்.
பாத தூளி பட்டு விமோசனம் பெற்ற அகல்யா வராமல் இருப்பாளா? 
அயோத்தியின் அக்கரையில் யார் கண்ணும் படாத இடத்தில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையில் ஐராவதத்தை நிறுத்திவிட்டு  இந்திரன் கால் நடையாக மானிட வடிவெடுத்து ஓடத்துறைக்கு வந்தான்.மானிட வடிவெடுத்தபோது எல்லா மானிட நியதிக்கும் கட்டுப்படுவது முறை. அந்த வடிவில் தானே அகல்யாவைச் சந்திக்கப்போனான்! 
‘எவ்வளவு காலமாயிற்று சரயூ நதிக்கரைக்கு வந்து! ராம ஜனனத்தின் போதா?விஸ்வாமித்திரர் .ராம லட்சுமணர்களை தவம் காக்க கானகத்திற்கு அழைத்துச் சென்ற போதா?’
சரியாக நினைவு வரவில்லை. 
ஓடக்கரையில் ஓடக்காரன் நின்றிருந்தான்.
“அக்கரைக்கு.. அயோத்திக்கு..”   
“அயோத்தி என்றால் எந்த இடம்? எந்தக் கரை?”
ஓடக்காரன் வெருட்டிக் கேட்டான்.
” கௌதம மகரிஷி ஆசிரமம்”
“அப்படித் தெளிவாகச் சொல்லவேண்டும்.சரயூவின் கரை நெடியது.இரண்டு பணம் ”  
“என்னிடம் பணம் இல்லை.அதற்குப் பதில்..”என்று இந்திரன் சுண்டுவிரல் மோதிரத்தைக் கழற்றப்போனான்.
தேவேந்திரன் ஏறிஅமர்ந்தும் படகில் பளு இல்லை. தேவனாகையால் காற்றைப் போல் லேசாக இருந்தான் வெற்றுப்படகு போல துடுப்பு போடுவது  இலேசாக இருந்தது. இந்திரனை ஏற இறங்கப்பார்த்த ஓடக்காரன் மனசில் ஒரு மரியாதை தோன்றியது  
“வேண்டாம். வைத்துக்கொள்ளுங்கள்.திரும்பி வரும்போது வாங்கி கொள்கிறேன்”
“ஸ்ரீ ராமச்சந்திரபிரபுவின் பட்டாபிஷேகம் பார்த்தீர்களா?” ஓடக்காரனை இந்திரன் விசாரித்தான். 
“ஓ! கண்கொள்ளாக் காட்சி. இந்தப் பிறவி செய்த புண்ணியம். இதோ இப்போது தான் ஸ்ரீ ராமச்சந்திரபிரபு எங்கள் தலைவர் குகனை வழியனுப்பப் போய்க்கொண்டிருக்கிறார்.”
நல்லது. அகல்யாவிடம் விமோசனம் கேட்கப்போகும்போது ராமன் இல்லாதிருப்பது மேல்.
ஆசிரமக்கரையோரம் ஓடம் நின்றது. இந்திரன் ஓடக்காரனுக்கு நன்றி கூறிவிட்டு இறங்கி ஆசிரம எல்லையில் நுழைந்தான்.
இந்திரன் ஆசிரமத்திற்குள் பிரவேசித்தபோது கௌதமர் அங்கு இல்லை. ஒரு விசேஷ அதிசயமாக சீதா நின்றிருந்தாள் . 
“நீங்களா ?”அகல்யாவின் குரலில் அச்சமில்லை.அதட்டிக் கேட்கும் கம்பீரம்.
இந்திரனின் பார்வை முதலில் அன்று இரவு சுவைத்த அந்த அதரங்களில் ஊர்ந்து, உயிரைக் கவர்ந்து இழுத்த விழிகளுக்குத் தாவியது. அகல்யாவின் எழில் முற்றிலும் குன்றிவிடவில்லை. ஆனால் அச்சமூட்டும் ஒரு தீச்சுடராக ஜொலித்தது. 
“எதற்கு வந்தீர்கள்?”
இந்திரன் தலை குனிந்து நின்றான்.
 எதிரில் அகல்யா . 
இடப்புறம் சீதா. 
மிக அருகில் யாரோ  வரும் மரக்காலடிகளின் ஓசை கேட்டது. இந்திரன் திரும்பிப்பார்த்தான்.
கௌதமர். [தொடரும்]
————————————————————————–
வலப்புறத்தில் வந்து  நின்றார்.
சற்றுத்தொலைவில் சதானந்தன் சரயூ நதியின் அருகில் கண்பார்வை படாத இடத்தில் நின்றான்.
ஏதோ நிகழ இருக்கிறது. இந்திரன் விசாரிக்கப் படப்போகிறானா? தாய் அகல்யாவா?அந்தக் குற்றவிசாரணைக் கீழ்மையின் கொடுக்குகள் தன்னைத் தீண்டித் தாய்மையின் முறையீடு தனக்குள் எழுந்து  தான் செய்து வரும் தவத்திற்கு இடையூறு நேருமோ என்று  நிற்பது போலிருந்தது அது.
யுகயுகங்களுக்கும் இனி தலைநிமிர்வு இல்லை என்று  கூனிவளைந்த இந்திரனின் முதுகெலும்பு ஒப்புதல் சாட்சியம் அளித்தது 
அகல்யா நிமிர்ந்து நூறு நூறு அக்கினிப்பிரவேசங்களைக் கடந்து வந்த கற்பின் கனல் சுடர் வீச நின்றாள் .
அவளது கண்கள் இந்திரனின் குனிந்த தலையை,தொங்கிய தோளை , அவளைத் தீண்டிய அந்தக் கரங்களை, இப்போது துடிக்கும் விரல்களை அவனது உடல் முழுவதும் கௌதம சாபம் வரைந்த ஆயிரம் யோனிக் குறிகளை பச்சாதாபத்தோடு பார்த்தன.தேவராஜனாய் இருந்தும், மண்ணாகப்போகிற  மனிதனுக்குரிய பலவீனம் அவனைப் பற்றிய அந்த இழுக்கிற்கு ஆளாக்கிய இரக்கம் அவளில் மிதந்தது. தான் பொறுப்பில்லை. தனது பேரழகு. காண்கிற எல்லோரையும் அது வசீகரிக்கின்ற காந்தம். இவை தான் காரணம் என்ற விடுபடல் அந்த இரக்கத்தில் வெளிப்பட்டது.
சீதா அகல்யாவின்  முகத்தில் நிலவிய தேஜசைப் பார்த்தாள் அதனால்   ஈர்க்கப்பட்டாள் . அவளையே கண்கொட்டாமல் பார்த்தாள் 
கௌதமரோ  சாபம் இடுமளவு கொதித்த சினம் சாம்பல்   மேடாகி,  அதை மௌனமாகக் கடந்து வரும் சாம்பசிவம் போன்று உணர்ச்சியற்று நின்றார்.இச்சை. மோகம். அழகு தருகின்ற லாகிரியின் அவஸ்தை எல்லாம் கடந்து அவற்றைக்காலில் சுற்றிய பாசியை, லேசாய்  சூலத்தினால் அகற்றி எறியும்  சாந்தம் நிலவியது. 
பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் எல்லாம் தீர்ந்து மழை விட்டுவிட்ட நிம்மதியில், பதிமூன்று  வருஷ கானக அமைதிக்கு மனம் ஏங்கியது.இராமனோடு தனிமை நாடி சரயூ நதிக்கரைக்கு வந்திருந்தாள்.
கரையோரம் கௌதமர் ஆசிரமம் கண்ணுக்குப் பட இருவரும் சென்றபோது அங்கே மீண்டும் இந்திரன்.சேவலாய்க்கூவி பொய்ப்பொழுதை விடியவைத்து, வெளியேறிய கௌதமர் திரும்பியதும் பூனையாய், பதுங்கி ஓடி இப்போது ருசிகண்ட நாயாக வந்திருக்கிறானோ!
எதிரில் இடுப்பின் மேல் கைவைத்தபடி அகல்யா.தூரத்திலிருந்து  சற்றும் பதறாமல் வரும்  கௌதமர்.
சீதா முதலில் திகைத்தாள்.ஏதோ அசம்பாவிதமோ?.அங்கே தான் நிற்கவேண்டுமா? காண விரும்பாமல்   விலகி நடக்க முயன்றாள் 
“நில்லுங்கள்.”என்று தடுத்தாள் அகல்யா.
சீதா நின்றாள்.
“இந்திரன் ஏன் வந்தார்?” சீதா அகல்யாவைக் கேட்டாள்.பதிதன் ஆயினும் ஆண். தேவேந்திரன்.மரியாதை குறைக்கக்கூடாது.
‘அவனையே கேளுங்கள்!’ சொல் இல்லை. முகம் திரும்பி இந்திரனைச் சுட்டும் சைகை.
“தேவேந்திரா!” சீதை நீதிபதி போல் இன்றி கருணை காட்டும் கனிவோடு கேட்டாள்.
சற்றே நிமிர்ந்து சீதையைப்  பார்த்த இந்திரன் அதில் நிலவிய மேன்மையைப் பார்த்து சட்டென்று குனிந்து அவளது பாதங்களைத் தொடப்போனான் .
” நான் மனுஷி. நீங்கள் தேவேந்திரர்.”
அருகில் வந்த கௌதமர் மார்பில் கைகட்டி நின்றார்.
எழுந்துகொண்டு இந்திரன் சொன்னான்.” இல்லை.அன்னையே!எந்தப் பாத தூசுக்கு விமோசன சக்தி உள்ளதோ அவரது பத்தினி தாங்கள்.”
“இங்கே ஏன் மீண்டும் வந்தீர்கள்? “
“பாப விமோசனம் கேட்க வந்தேன்.”
“அகல்யா தேவியிடமா?”
“ஆம், அன்னையே!”
“சாபம் கொடுத்தவர் இவர். இவர் இல்லாத சமயத்தில் இங்கு வந்தால்  இவ்வளவும் நடந்த பின் வந்தால் ..அதற்கு என்ன பொருள்?”  கௌதமரைக் காட்டி சீதா கேட்டாள். 
“சாபத்திற்கு அகல்யா தேவியை ஆளாக்கிய பாவத்திலிருந்து விமோசனம் வேண்ட  வந்தேன் “
அகல்யாவின் மனசில் சாபவிமோசனம் கிடைத்தபின்பும் பாபக்கறையை  போக விடாத  எத்தனை பார்வைகள் ..அருவருப்பு..ஏளனம்.. இந்திரனை நினைத்துத் தனக்குள் தோன்றும் சபலம் மறைத்த பரிவுகள்.
“இவள் தான் அகல்யா..” தன்னைச் சுட்டிக் காட்டி அடையாளம் சொல்லும் எத்தனை ஆண்கள்  . எத்தனை பெண்கள். ரிஷிபத்தினிகள் முதல் இளவரசிகள் வரை. சாபங்களுக்கு அஞ்சி நரிப்பார்வை பார்க்கிற கோழைகள்
“சாபம் கொடுத்தது என் பலவீனம்.” என்றார் கௌதமர்.அவர் குரல் கம்மியிருந்தது.
சீதா அவரை வியப்போடு பார்த்தார். எதை முன்னிட்டுச் சொல்கிறார்?என்னென்னமோ எண்ணங்கள்  உள்ளத்தில் ஓடினாலும் இதுவாயிருக்குமோ அதுவாயிருக்குமோ என்ற சிந்தனை ஓட்டம் மேலும் அவளைக் கிளறியது.
அக்கினிப் பிரவேசத்திற்கு முந்திய சீதை அல்ல அவள். இப்போது மிகவும் மாறியிருந்தாள்.
“என்ன சொல்கிறீர்கள்  மகரிஷி?”
திடீரென்று ஒரு சலசலப்பு கேட்டது. ஒரு சிறுத்தைப் புலியால் விரட்டப் பட்டு வந்த மான் ஒன்று மனிதத் சூழலைக் கண்டு சற்றே 
மருண்டு ஆசிரம வேலி தாண்டிக் குதித்து திறந்திருந்த குடிசை கதவுக்குள் பாய்ந்து நுழைந்தது.  
“ஐயோ பாவம்” என்று மானைப்பார்த்து  அனுதாபத்தை வாய்விட்டுச் சொன்னாள் சீதை.
“கொஞ்சம் பொறுங்கள்.உள்ளே யாகத்திற்கு உரிய பாலும் தயிரும் வைத்திருக்கிறேன்.மான் உருட்டி விடப்போகிறது. ” என்று அனுமதி கேட்டுக்கொண்டு அகல்யா குடிசையை நோக்கிப் போனாள்.
சீதா அவள் போவதைப்பார்த்துவிட்டு கௌதமர் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
அதில் கௌதமரின் கருத்தறிந்து தேவை உணர்ந்து  அகல்யா பொறுப்புள்ள பத்தினியாக பணியாற்றி வருவதன் அங்கீகாரம் அந்தப்பார்வையில் வெளிப்பட்டது .
” அகல்யா இல்லையேல் என் தபஸ் இல்லை.” அதற்குப் பதில் போல மெதுவாக தாடியை உருவிக்கொண்டு கௌதமர் சொன்னார்.
அந்த இருவர் எதிரில் இன்னும் தான் நீசனாக நிற்பதன் சிறுமை இந்திரனின் தலையை  மீண்டும் ஒரு முறை குனிய வைத்தது. 
“சீதா!” கௌதமர் அவளை மெல்லிய குரலில் அழைத்தார். “ராமனைப் பார்க்க வந்த குகன் சரயூவின் இக்கரையில் காத்திருக்கிறான். அங்கே ராமனோடும் குகனோடும் அனுமனும் இருக்கிறான்.அவனும் உன்னைக் காண வேண்டி காத்திருக்கிறான்.நாம் போவோமா?”
“உள்ளே போன அகல்யா வந்து விடட்டுமே!”
“இல்லை. நாம் போவோம். இந்திரன் அவளிடம் பாபமன்னிப்புக் கேட்க வந்திருக்கிறான்.மன்னிப்புக் கேட்பவர், கொடுப்பவர்  இருவருக்குமே வேறு சாட்சிகள் இருப்பது தர்மசங்கடம்”
ஒருமுறை இந்திரனையும், கதவுக்கு அப்பாலிருந்த அகல்யாவையும் பார்த்துவிட்டு கௌதமரின் கம்பீரமான பெருந்தன்மைக்குக் கட்டுப்பட்டு சீதா அவரைப் பின்தொடர்ந்தாள்.
அந்த இருவரை ஒன்றாகப் பார்த்ததற்கு சபித்தவர், இப்போது இருவரையும் தனியே இருக்க விட்டு வரும் கண்ணியம் அவள் நெஞ்சைத் தொடாமலில்லை. 
சற்றுதூரம் வாய்ப்பேச்சின்றி நடந்தவர் ஒரு சலசலப்பு கேட்டு நின்றார்.ஆசிரம எல்லையில் ஒரு கனி மரத்தில் இருந்து ஒரு பழம் விழவும்,அதைக் கவ்விக்கொண்டு ஓட வந்து இரு கீரிகள் ஒன்றை ஒன்று துரத்திவர  , மரத்திலிருந்து பாய்ந்து குதித்தோடி  வந்த ஒரு அணில் அதைக் கவ்வி ஓடியதை, வெறித்துப் பார்த்தபடிக்கு நிற்கிற காட்சியைக் கண்டு கௌதமர் அனுதாபத்தோடு உச்சுக் கொட்டினார்.
” இப்போது நான் அகல்யாவை உணர்ந்து கொண்டது போல் அப்போது உணர்ந்திருக்கவில்லை. எனக்குள்ளும் பொறுத்துக் கொள்ள வேண்டிய  அளவு போதிய தபோபலம் வளர்ந்திருக்கவில்லை.”
சீதா அவரது கண்களில் நிலவிய சாந்தத்தை மனசிற்குள் வாங்கிக் கொண்டாள்.
“சபிக்கும் அளவுக்குஅப்போது நான் பலவீனன்.. ஒரு ரிஷிபத்தினி  சாபங்களுக்கு அப்பாற்பட்டவள் . சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள்.என் அறிவீனம் அவள் சபலங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது என்ன அகந்தை!. விளைவு பல ஆண்டுகள் கல்லின் கடினத்தை அவள் சுமந்தது.இந்திரனுக்கு இட்ட சாபத்தால் அவனைக் காண்பவர்கள் எல்லாரையும்  அகல்யாவின் வீழ்ச்சியை நினைக்கச் செய்து விட்டேன்”
  எதிரில் ஒரு பெரிய பாறை தென்பட்டது.
“அம்மா சீதா! அங்கு போய் சற்று அமர்ந்து பேசுவோமா?” என்று கேட்டார்.
“ஆகட்டும் மகரிஷி!”
இருவரும் எதிரெதிரே பார்த்தபடி அமர்ந்தனர் 
“என் மனசில் வளர்ந்திருக்கும் புற்றிலிருந்து நான் இன்று வெளிவரவேண்டும் அம்மா சீதா!”
சீதா புன்னகையோடு அவரை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள்.
” அகல்யா பிரம்மாவின் மகள். அவரது கற்பனையை எல்லாம் குழைத்து இனி இவளுக்கு மேல் ஒன்று இருக்கக் கூடாது என்ற சங்கல்பத்தோடு உருவாக்கிய பேரழகி.தேவாதி தேவர்களையெல்லாம் ஓட்டப்பந்தயம் ஓடவைத்துப் பார்த்தபின் தேர்ந்தெடுத்த முனிவனான எனக்கு பத்தினியாக்கப் பட்டவள் முனிவனுக்கு மனைவியாக இருப்பது மட்டுமே போதும் என்று இயற்கையை நிர்ப்பந்திக்க முடியாது. அதுவும் தேவர்களுக்கே தலைவனான இந்திரன் தன்னை இச்சிக்கிறான் என்ற கர்வத்திலிருந்து விடுபட்டு நிற்கவும்  அகல்யா கற்பிக்கப் படவில்லை”
 ஆண் பெண் என்ற பாலின பேதம் கடந்த ஞானியாக எதிர்பாராவிதமாக கௌதமர் வெளிப்படுவதைக் கண்டு சீதா அந்த ஞானசாந்நித்தியத்தில் நிற்கிற அனுபவம் பெற்றாள்
“சீதா! உன் வைராக்கியம் பூஜிக்கத்தகுந்தது.அகல்யாவின் பலவீனம் மன்னிக்கத் தகுந்தது.”
“மகரிஷி ..தாங்கள்..?” சீதா வாசகத்தை முடிக்காமல் இழுத்தாள்.
“இந்திரன் மன்னிக்கப்படவேண்டியவன்.என்ன செய்கிறோம் என்பதன் கனம் அறியாமல் ஒரு கணத்தில் தவறிழைத்து விட்டான்.பாபம் அவனைச் சாராது .”
“பின் யாரைச் சாரும்?”
“அகல்யாவின் சிருஷ்டியை.அதை உருவாக்கிய  சிருஷ்டிகர்த்தாவை.”
ஒரு கணம் கண் மூடி யோசித்து வானத்தைப்பார்த்தார். பிறகு எதிரிலிருந்த சீதையைப்  பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.
“இல்லை. தெளிவாக யோசித்தால் பிரம்ம தேவர் கூட இதற்குப் பொறுப்பாகமாட்டார். ஒரு பேரழகை தனக்குள் இச்சித்ததால் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்ட  வடிவம் அது. நாம் நம்மையே சிருஷ்டித்துக் கொள்கிறோம். அகல்யா அப்படி இச்சித்துப்பெற்ற அனுபவத்தால் தான்  அழகின் பிரமையில் இருந்து இப்போது விடுபட்டிருக்கிறாள்.”
சீதைக்கு ராவணன் நினைவு வந்தது! எவ்வளவு பெரிய சக்திமான்!எப்பேர்ப்பட்ட வீரன்!கைலயங்கிரியைத் தன் கைகளால் அசைத்துப் பார்த்தவன். எப்படித் தன் அழகில் வீழ்ந்து அழியாத அவப்பெயருக்கு ஆளானான்? அவன் பாவங்களை இராமபாணம் துருவித் துளைத்தெடுத்து விட்டது. அவன் மன்னிக்கப்பட்டிருப்பானா?
இருக்காது என்ற எண்ணம் தோன்றியது. அவன் சிந்தையைக் குலைத்த அழகிற்குத் தான் காரணம் என்று நினைவு வந்தது. நடந்தது என்ன? விதி எழுதிய ஒரு பெரிய சோக நாடகமா? திரை விழுந்த பின் உணர்ச்சிகளுக்கு வேலையில்லை.
சீதை ராவணனை மன்னித்தாள்.
 அவன் பாவங்களை எல்லாம் மன்னித்தாள்.
பரிபூரணமான சாந்தி அவளுள் பிரவேசித்தது 
இந்த சாந்தியை அகல்யாவும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள்.
வேறொன்றும் கேளாது “போவோம் மகரிஷி!”என்றாள். 
இருவரும் சரயூவின் கரை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினர்.   
Series Navigationஇன்றும் வாழும் இன்குலாப்உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
author

வையவன்

Similar Posts

Comments

  1. Avatar
    valava.duraiyan says:

    “முட்டாள் முனிவன்” என்று நான் ஒரு குறுங்காவியம் மரபில்பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன். பொய்ச்சேவல் கூவுவது கூடவா முக்காலமும் உணரக்கூடிய முனிவர்க்குத் தெரியாது. அப்படியிருக்க எனக்கு எப்படி பொய்க்கௌதமரைத் தெரியும் என்று அகல்யா அதில் கேட்பாள். பிரச்சனையே பாதி சுகத்தில் வந்திருப்பது இந்திரன் என்பதை உணர்ந்தும் அதிலிருந்து மீளாது உடன்பட்டதே அகல்யாவின் பிழை. தனக்கு என்ன பிராயச்சித்தம் என்று கேட்கக்
    கூட நேரமின்றி அச்சத்தோடு இந்திரன் ஓடிவிட்டான். இதைக் கருவாகக் கொண்டு வையவன் கதை வடித்துள்ளார். இந்திரன் செய்த பிழையை விட கௌதமர் செய்ததே அதிகம் அவர்க்கு யார் சாபம் கொடுப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *