பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

 

 

  1. பூமி

 

நள்ளிரவில் நடுவழியில்

பயணச்சீட்டுக்குப் பணமில்லாத

பைத்தியக்காரனை

இறக்கிவிட்டுப் பறக்கிறது பேருந்து

 

இருளைப் பூசிக்கொண்ட திசைகளில்

இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கும்

அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கும்

மாறிமாறிப் பார்க்கிறான் அவன்

நடமாட்டமே இல்லாத தனித்த சாலையில்

பிறகு நடக்கத் தொடங்குகிறான்

 

கைவிரித்து நிற்கும் மரங்கள்

புதர்கள் மண்டிய மேடு

தவளைகள் இரைச்சலிடும் அல்லிக்குளம்

பார்த்தினியம் மணக்கும் வெட்டவெளி

இவை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியை

அவன் கண்கள் நிரப்பிக்கொள்கின்றன

 

ஓய்வுக்காக

ஒரு மரத்தின் கீழே அமர்கிறான் அவன்

காற்று ஊட்டிய வேகத்தில்

குதிரைகளென திமிறுகின்றன கிளைகள்

சத்தமே இல்லாமல்

நாலைந்து இலைகள் உதிர்ந்து

புரண்டு புரண்டு உருள்கின்றன

 

இடியோசை கேட்டதுபோல

வெடிச்சிதறல்கள் வீசப்பட்டதுபோல

அந்த இலைகளை

அச்சமுடன் பார்க்கிறான் பைத்தியக்காரன்

 

அவன் உடல் நடுங்குகிறது

ஏதோ ஓசை அவன் காதை அடைக்கிறது

எழுந்து வேகவேகமாக ஓடுகிறான்

இன்னொரு மரத்தடியை நோக்கி

 

பெருமூச்சில் விம்முகிறது அவன் இதயம்

கண்ணீரால் நிறைகின்றன அவன் கண்கள்

சில கணங்களில்

புயலிலும் மழையிலும்

நனையத் தொடங்குகிறது பூமி

 

  1. நாடகம்

 

யாத்திரை ஊர்வலம்போல

பலநூறு பேர்கள் சூழ

புன்னகை படர்ந்த உதடுகளோடு

கைகுவித்து வணங்கியபடி

தெருவுக்குள் நுழைந்தார் வேட்பாளர்

அவர் முகம் ஒப்பனையில் சுடர்விட்டது

அவர் உடைகள் வெள்ளைவெளேரென்றிருந்தன

ரோஜாவா மல்லிகையா என

பிரித்தறிய இயலாத சுகந்தமொன்று

அவரைச் சுற்றி மணம்வீசியது

நொடிக்கொரு முறை உணர்ச்சிவசப்படும்

தொண்டர்களின் முழக்கங்கள்

வீட்டுச் சுவர்களில் மோதிச் சிதறின

தெருப்பக்கமாக ஓடிவந்த மக்கள்

கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்தார்கள்

மாடியிலிருந்தும் ஜன்னலோரமாகவும் நின்று

மறைந்துமறைந்து பார்த்தார்கள் சிலர்

பொதுப்பார்வையால்

அனைவரையும் வணங்கியபடி நடந்தார் வேட்பாளர்

அவர் சின்னத்தை

அறிவித்தபடி தொடர்ந்தது தொண்டர்படை

எதிர்பாராத தருணத்தில்

ஆரத்தித்தட்டோடு வெளிப்பட்ட பெண்களுக்கு

நூறு ரூபாய் நோட்டொன்றை

அன்பளிப்பாக வழங்கினார் வேட்பாளர்

கைகளில் ஏந்தி வந்த குழந்தைக்கு

அழகான தமிழ்ப்பெயர் சூட்டி வாழ்த்தினார்

அனைவருடைய முகங்களும்

கண்ணாடிபோல பளபளத்தன

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு

உற்சாகம் தொற்றிப் படர்ந்தது

தண்ணீர் விளக்கு அரிசி என

ஏதோ குறைசொல்லத் தொடங்கிய பெண்களிடம்

விசேஷமாக நின்று வாக்குறுதி அளித்தார்

தெருக்கோடி வரைக்கும் சென்று

திரும்பி நடந்தார் புடைசூழ

பயிற்சிபெற்ற நாடகக்காரர்கள்போல

எல்லோரும் கச்சிதமாக நடந்துகொண்டார்கள்

அடுத்த காட்சிக்கு தயாரித்துக்கொள்ள

திரும்பிப் புரண்டது தெரு

 

  1. ஓவியம்

 

அதிகாலை நடையில்

தினமும் நான் காணும்

இலைநுனியில் நிற்கும் பனித்துளி

முன்பொரு நாளில்

விடைபெறும் கணத்தில்

உன் கண்விளிம்பில் உறைத்த அழுகையை

இன்னொருமுறை தீட்டிக் காட்டுகிறது

 

  1. அணில்

 

எப்போதும் தென்பட்டபடி இருக்கின்றன

மரணக் காட்சிகள்

 

மரணத்தின் முகத்தில் உறைந்திருக்கிறது.

வாழ்க்கை கைவிட்ட அதிர்ச்சி

வாழ்க்கையின் முகத்தில் துளிர்த்திருக்கிறது

மரணம் தூவிய விதை

 

மருத்துவமனை மரணங்களைவிட

நடுத்தெரு விபத்து மரணங்கள்

ஒரு நொடியேனும் நடுங்கவைக்கின்றன

 

மரணம் தழுவிய முகம்

ஒருகணம் உதிர்த்த பூப்போல தெரிகிறது

இன்னொரு கணம்

உலர்ந்த சருகெனத் தோன்றுகிறது

 

தற்கொலை மரணங்களும்

கொலையுண்ட மரணங்களும்

ஆழ்ந்த வடுக்களாக பதிந்துவிடுகின்றன

பிறகு அந்த உருவங்கள்

கனவுவெளியில் நின்று

நாளெல்லாம் கைதட்டி அழைக்கின்றன

 

உறக்கத்தின்

ஏதாவது ஒரு வாசல்வழியே நுழைந்து

ஏதாவது ஒரு வாசல்வழியே வெளியேறுகிறது

மரணம்

 

நடந்துசெல்லும் மானுடக்கூட்டத்தின்

பாதங்களுக்குக் கீழே

நிழல்போல ஒட்டிக் கிடக்கிறது மரணம்

 

மரணம் விளையாடிக்கொண்டே இருக்கிறது

பழங்கள் தொங்கும்

கிளைக்குக் கிளைநகரும் அணில்போல

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *