“பிரபல” என்றோர் அடைமொழி

author
0 minutes, 3 seconds Read
This entry is part 12 of 15 in the series 18 மார்ச் 2018

கோ. மன்றவாணன்

நாளிதழ்களில் பிரபல ரவுடி, பிரபல கிரிமினல் என்று எழுதுகிறார்கள். அதுபோலவே பிரபல நடிகர், பிரபல எழுத்தாளர் என்றும் குறிப்பிடுகிறார்கள். நற்செயல்கள் அடிப்படையில் அறியப்படும் ஒருவரைப் பிரபல என்ற அடைமொழியிட்டு அழைக்கையில், தீச்செயல்கள் மூலம் அறியப்படும் ஒருவரை அதே “பிரபல” என்ற அடைமொழியிட்டுக் குறிப்பிடுவது சரியாகுமா?
நல்வகையில் புகழ்பெற்றவரை ஆங்கிலத்தில் Famous என்றும்- தீய குணத்தால் ஊரறிந்தவரை Notorious என்றும் குறிப்பிடுகிறார்கள். தமிழிலும் அவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கும் சொல் இருக்கிறதா?
சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற அகரமுதலியில் Notorious என்ற சொல்லுக்குக் கீழ்க்கண்ட பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வசைப்பெயர் எடுத்த; தகாவழிப் பேர்போன; இகழார்ந்த; அறிபழியான என்பன அவை. இச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு வசையுறு, பேரறி, பலரறி, பலரறிந்த, இகழார்ந்த: பழியார்ந்த, இகழுறு ஆகிய சொற்களை Notorious என்பதற்குப் பொருத்தமாக்கலாம். வசையுறு திருடன், பேரறி திருடன், இகழார்ந்த திருடன் என்பன எடுத்துக்காட்டுகள் ஆகும். என்றாலும் இச்சொல்லாக்கங்களில் இயல்பழகு குன்றித்தான் உள்ளது.
நொட்டோரியஸ் என்ற சொல்லோசைக்கு இணங்க கெட்டறி, கெட்டறிந்த சொற்களைக் கையாளலாம். கெட்டறி கள்வன் என்பது எடுத்துக்காட்டு. கெட்டதால் அறியப்பட்ட / அறியப்படும் கள்வன் எனப்பொருள் கொள்ள முடியும். கெட்டறி அல்லது கெட்டறிந்த ஆகிய சொற்கள், பிறரைக் குறிக்கின்றனவா தன்னைக் குறிக்கின்றனவா என ஐயுறவும் வைக்கலாம். இத்தகைய சொல்லாக்கங்களிலும் செயற்கைத் தன்மை, நீள்பல் காட்டி இளிக்கிறது.
பிரபலம் என்பதற்குப் பெரும்பாலும் புகழ் என்றே அகராதியில் பொருள்சொல்லப்பட்டிருக்கிறது. பிரசித்தி என்ற வடமொழிச் சொல்லும் புகழ்ச்செயலுக்கு உரியதாக ஆளப்படுகிறது. பிரபலம் என்பது பலரறிந்த ஒருவரை அல்லது ஒன்றைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் புழக்கத்தில் பிரபலம் என்பது புகழை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகிவிட்டது. அதனால்தான் புகழ்பெற்றவர்களைப் பிரபலங்கள் என்று அழைக்கின்றனர். பிரபலங்கள் என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் புகழ்மாந்தர்கள், புகழாளர்கள் ஆகிய சொற்களை முன்நிறுத்தலாம்.
பாராட்டுக்குரிய செயல்கள் மூலம் பலரால் அறியப்பட்டால்… அதுதான் புகழ்.
பழிக்குரிய செயல்கள் மூலம் பலரால் அறியப்பட்டால்… அது புகழல்ல. அதன்பேர் பழி.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் “பழி” என்ற சொல்லுக்குத் தகாத அல்லது முறையற்ற செயலைச் செய்தார் என்று மற்றவர் கேவலமாக நினைக்கும் வகையில் ஒருவர் மீது கூறப்படுவது / அப்படிக் கூறப்படும் நிலை என்று பொருள்சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ் – தமிழ் அகராதிகளில் “பழி” என்ற சொல்லுக்குக் குற்றம், நிந்தனை, பொய், விரோதம், வஞ்சம் தீர்த்தல், பொல்லாங்கு ஆகிய பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வேறுபாட்டை விளக்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றுண்டு. அது,
புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்.

ஆக நற்செயல்கள் மூலம் அறியப்பட்டவரை நாம் புகழ்பெற்ற / பிரபல ஆகிய அடைமொழிகளால் குறிப்பிடலாம். இதில் யாரும் மறுப்புரைக்கப் போவதில்லை. எ.கா. புகழ்பெற்ற எழுத்தாளர்.
தீச்செயல்கள் மூலம் அறியப்பட்டவரைப் பழியுறு, பழியுற்ற, பழியார்ந்த, பழிசார் ஆகிய அடைமொழிகளால் குறிப்பிடலாம். எ.கா. பழிசார் திருடன், பழியுற்ற திருடன்.
திருடன் என்றாலே அதில் இழிவு, பழிப்பு ஆகியவை அடங்கி உள்ளன. எனவே தனியாக பழிசார் திருடன் என்று சொல்ல வேண்டியதில்லை.
பேர்போன என்ற அடைமொழிச் சொல்லும் தமிழில் உண்டு. பேர் என்றாலே பெருமை, புகழ் போன்ற பொருள்கள் உண்டு. தீச்செயல்களால் அந்தப் பெருமை போய்விட்டால் பேர்போன என்ற அடைமொழி வந்து சேரும். “அவன் பேர்போன அயோக்கினாச்சே” என்று தமிழில் சொல்வதை இங்கே ஒப்பு நோக்கலாம். ஆக Notorios என்பதைத் தமிழில் “பேர்போன” என்ற அடைமொழிச் சொல்லால் குறித்தாலும் பொருந்துகிறது. ஆனால் பேர்போன என்ற அடைமொழியைப் புகழ்வாய்ந்தவர்களைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார்கள். அறிந்து, ஆழ்ந்து, ஆய்ந்து பார்த்தால் அது தவறான பயன்பாடு.
Notorious என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரடித் தமிழ்ச்சொல் “தெரிந்த” என்பதுதான்.
“புகழ்பெற்ற” என்ற சொல் famous என்பதைக் குறிக்கும். “ஊரறிந்த” என்ற சொல் Notorious என்பதைக் குறிக்கும்.
நம்பேச்சு வழக்கில் “அவன் ஊரறிந்த திருடன் ஆச்சே” என்கிறோம்.
பள்ளியில் தமிழ்இலக்கணம் சொல்லித் தரும்போது இடவாகு பெயருக்கு எடுத்துக்காட்டாக “ஊர் சிரித்தது” என்ற சொற்றொடரைத் தமிழாசிரியர்கள் சொல்வதுண்டு. ஊர் சிரித்தது என்றால், ஊரில் உள்ள மக்கள் சிரித்தனர் என்பதே அதன் பொருள்.
அந்த வகையில் “ஊரறிந்த” என்ற சொல்லில் “ஊரில் உள்ள மக்கள் அறிந்த” என்ற பொருள் பொதிந்துள்ளதை நாம் அறிவோம். ஆக ஊரறிந்த என்றால் “மக்கள் யாவருக்கும் தெரிந்த” என்றே பொருள் வந்துவிடுகிறது.
ஊரறிந்த ரகசியம் என்ற சொற்றொடரையும் பலரும் சொல்லக் கேட்பதுண்டு. இதிலுள்ள ரகசியம் என்பது சமூகத்தால் இழிவாகக் கருதப்படும் செயலின் கசிவே ஆகும். ஊரறிந்த என்ற அடைமொழியை அடுத்துவரும் எந்தச் சொல்லும் இழிமையை உணர்த்துவதாகவே தமிழ்மரபில் உள்ளது.
தமிழ்ச்சூழலுக்கும் தமிழ்வழக்கத்துக்கும் ஏற்ப Notorious என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஊரறிந்த என்ற அடைமொழிச் சொல்லைப் பயன்படுத்தலாம்.
எ.கா. : ஊரறிந்த திருடன்
திறன் மற்றும் நற்செயல்கள் அடிப்படையில் பிரபல நடிகர் என்றோ புகழ்பெற்ற கலைஞர் என்றோ புகழ்மிகு கவிஞர், புகழ்வாய்ந்த அறிஞர் என்றோ சொல்லுங்கள்.
தீச்செயல்கள் அடிப்படையில் ஊரறிந்த திருடன் என்றே சொல்லுங்கள்.
முடிவாக…. Famous என்ற அடைமொழிப் பயன்பாட்டுக்குப் புகழ்வாய்ந்த, புகழ்பெற்ற, புகழ்மிகு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். Notorious என்ற அடைமொழிப் பயன்பாட்டுக்கு ஊரறிந்த என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
ஓர் அறிவுரை :
ஊரறிந்த ரவுடியைக் கண்டால் கொஞ்சம் ஒதுங்கிச் செல்லுங்கள்.

Series Navigationஅக்கா !அந்தரங்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *