பிராயச்சித்தம்

1
0 minutes, 6 seconds Read
This entry is part 17 of 29 in the series 28 ஏப்ரல் 2013

 

 

_கோமதி

 

கருணாகரனுக்கு வயதாகிவிட்டதென்றாலும் வாட்டசாட்டமான அவன் உடல் தளர்ந்துபோனதன் காரணம் அவன் மனைவிக்குகூட தெரியவில்லை. டாக்டர் களும் எந்தவிதமான வியாதியும் இல்லை, கவலைப்படும்படி ஏதுமில்லை என்கிறார்கள். வீட்டிலோ வியாபாரத்திலோ எந்தவிதத் தொந்தரவுமில்லை, பின் ஏன் மனதிற்குள் ஒரு குழப்பம்?

 

அவர்கள் கம்பெனியில் புதிதாக ஒரு பையன் வேலையில் சேர்ந்தான், சூப்பிரவைசர் வேலை. அவனுக்குக் குடியிருக்க வீடு தேடும்போது மாம்பலத்தில் அவர்கள் ஃப்ளாட்டில் அவனை வரச்சொல்லி சாவி கொடுத்தார் கருணாகரன்.

 

ஒருநாள் அவர்கள் வீட்டுக்குப் போனபோது அவன் தாயாரை அவருக்கு அடை யாளம் தெரிந்தது அவளுக்குத் தெரியவில்லை. எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டது, எப்படித் தெரிய முடியும்?

 

அவள் கணவர் ராகவேந்திரனுடன் திருமணமான புதிதில் பார்த்திருப்பாள். அப்போது கருணாகரன் பதினெட்டு வயதுப் பையன். வேலை இல்லாதவன், ஒரு டெயிலரிடம் சேர்ந்து பட்டன் கட்டி கொஞ்சம் கொஞ்சமாக காஜா எடுத்த பையன் மிஷினில் உட்கார ஆரம்பித்தான், கட்டிங் கற்றபின் அவனே எக்ஸ்பர்ட் என்று பெயரெடுத்தான், கருணா ’கட்’ செய்து கொடுத்தால் கச்சிதமாயிருக்கும் என்று சொல்வார்கள். சினிமாத்துறையைச் சேர்ந்த ராகவேந்திரன் நடிகர்களுக்கு கருணாவை அறிமுகப்படுத்தினான், எல்லாருமே அவன் தைத்திருப்பதை விரும்பினார்கள். கருணாகரனுக்கு மதிப்பு உயர்ந்தது. நடிகை சந்திரலோசனி புகழின் உச்சத்திலிருந்த காலம் அவளுக்கு வீட்டிலேயே போய் தைத்துக்கொடுப்பது வழக்கம்,

 

கருணாகரன் தானே ஒரு கடை திறந்து இரண்டு மிஷின்கள் போட்டு இரண்டு தையல் தைக்கும் ஆட்களும், இரண்டு சிறுவர்களை அளவு எடுக்க, பட்டன் கட்ட என்று நியமித்துக்  கடைநடத்தினான். செல்வச்செழிப்பும் உண்டாயிற்று. பெயரும் வந்தது. ராகவேந்திரனுக்கு ’ஷர்ட்டு-பேண்ட் தைத்தால் பணம் வேண்டாம் என்று கருணா சொன்னாலும் அவர் ”உன் உழைப்பு எனக்கு வேண்டா”மென்று கூலியை கொடுத்துவிடுவார் சிலசமயம் ரெடிமேட் டிரஸ்களை வாங்கிவிடுவார் அவர் கம்பெனி பம்பாய்க்கு மாற்றிக்கொண்டு போனபோது அவரும் அங்கேயே தங்கிவிட்டார்.

 

சந்திரலோசனி கருணாகரனை மாதம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை வீட்டுக்கு வரச்சொல்லி இருந்தாள், ஒருமுறை கருணா போனபோது அவள் ரொம்பவும் பதட்டமாகத் தோன்றினாள், இவனைப் பார்த்தவுடன் சற்று இரு என்று உட்காரச் சொல்லிவிட்டு ஒரு பெரிய துணி ’பண்டிலை’ எடுத்துவந்து கொடுத்துவிட்டு இதை தைத்து உன்னிடமே வைத்திரு, நானே வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்றாள்.

 

பண்டில் கனமாயிருந்தது எடுத்துக்கொண்டு நேராக வீட்டுக்கு வந்துவிட்டான்.

நல்லவேளை, யார் எதிரிலும் பிரிக்கவில்லை தன் அறையில் வந்துதான் பிரித்தான். பூராவும் செங்கல் போன்ற தங்கக்கட்டிகள். அத்தனையும் சொக்கத் தங்கம்.

 

அவைகளை அலமாரியில் அடுக்கி ஒரு பலகையால் மூடி, ஆணி அடித்து வைத்தான். ஒருவரும் ஓடிவிட்டது சந்திரலோசனி வீட்டில் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்று பேப்பர் செய்தி சொன்னது. ’வீட்டில் சோதனை நடக்கும்போது இவன் போனதால் இவனை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் இவனும் யோக்கியமான நல்ல பையன் என்று நம்பகமாக நடிகை கொடுத்திருக்கிறாள்.

 

சிங்கப்பூருக்கு ஷூட்டிங் என்று சென்ற சந்திரலோசனி விமான விபத்தில் எரிந்துபோய்விட்டாள். அவளுடைய பங்களா, கார் போன்ற சொத்துக்கள் எல்லாமே அரசாங்கத்தைச் சேர்ந்துவிட்டன, ஏனென்றால், அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. உறவினர் என்று யாருமே சொத்துக்கு உரிமையாளர் இல்லை, அப்படியே தங்கக்கட்டிகளும் கருணாகரனைச் சேர்ந்துவிட்டது.

 

ஒன்றொன்றாக கட்டிகள் வெளிவந்து ஒவ்வொரு சொத்தாக உருமாறியது. தையல்கடையே பெரிய கம்பெனியாக ரெடிமேட் ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஆரம்பித்தது, தாயாரின் பெயரில் பெண்கள் பள்ளிக்கூடம் விதவைத் தங்கை பெயரில் ஆஸ்பத்திரி என்று நடத்தபடுகின்றன.

 

அக்காவின் மகனுக்கும் அண்ணாவின் மகளுக்கும் பிரமாதமாக திருமணம் செய்துவைத்து வெளிநாட்டுக்கு அனுப்பினார். தன் பெண், பிள்ளைகளையும் நன்றாகப் படிக்கவைத்து திருமணம் நடத்திவைத்தார். அவர்களும் நல்ல வேலைகளில் இருந்தனர். கோவில்கள், குளங்கள் என்று தருமக் காரியங்களுக்கு முடிந்த அளவுக்கு தானம் செய்தார். ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டி அதிலேயே மாதம் ஐம்பதாயிரம் வருமானமாக வருகிறது.

 

பணம் தானே வளருகிறது கருணா கையால் தொட்டாலே போதும்,  எனது எல்லாரும் புகழுகிறார்கள். ஆனால்கருணாவின் மனதில் ராகவேந்திரனின் நினைவு துளைக்கிறது பார்க்கவே முடியவில்லையே அவருக்கு உதவ வேண்டும் என்று மனம் ஆதங்கப்பட்டது. அவர்  கேன்ஸரில் படுத்திருப்பதாக கேட்டு பார்க்கவென்று பம்பாய் போன போது அவர் விலாசம் சரியாக யாருக்கும் தெரியாமல் திரும்பிவர நேர்ந்தது.

 

இப்போது இந்தப் பையன் சர்டிபிகேட் பார்த்து சாயலிலும் நன்றாக தெரிந்த போது மனம் ஆறுதல் பெற்றது. அந்த ஃப்ளாட்டை அவன் பெயரில் எழுதிவைத்து அவன் தங்கைக்கு வரன்தேடி விமரிசையாக திருமணம் செய்து வைத்து எல்லா விஷயத்திலும் அவர்கள் குடும்பத்திற்கு உதவியாய் இருந்தபோது யாருக்குமே காரணம் தெரியவில்லை.

 

 

 

 

0

Series Navigationமறுபக்கம்எத்தன் ! பித்தன் ! சித்தன் !
author

கோமதி

Similar Posts

Comments

  1. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் கோமதி அம்மா அவர்களுக்கு,

    தங்களின் பிராயச்சித்தம் கதை சிம்பிளாகவும் அதே சமயத்தில் பல வருடங்களைத் திருப்பி போட்ட கதையாகவும் இருந்தது. தங்கக் கட்டிகளை சொத்துக்களாக மாற்றி அனுபவித்தவர் அதை சமயம் வந்தபோது அதைச் சேர்ந்தவருக்கு பிராயச்சித்தமாக உதவியது நிறைவை கொடுத்தது. இது போன்ற அதிர்ஷ்ட தேவதைகள் எப்போதாவது யார் வீட்டுக்கதவையும் மனக் கதவையும் தட்டுவார்கள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *