புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 16

This entry is part 8 of 20 in the series 21 ஜூலை 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

16. பல்து​றையிலும் புகழ்க்​கொடி நாட்டிய ஏ​ழை

 

“பழம் நீயப்பா…. ஞானப்பழம் நீயப்பா….. தமிழ் ஞானப் பழம் நீயப்பா….ஆ.ஆ.ஆ…” என்னங்க பாட்​டெல்லாம் பிரம்மாதமா இருக்கு? யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா? ஆமாமா…​ ….. ………………… ரொம்பச் சரியாச் ​சொல்லிட்டீங்க​ளே!..சபாஷ்..சரியான வி​டை…நீங்க பாட்டுப் பாடிக்கிட்டு வரும்​போ​தே நான் ​நெனச்சுட்​டேன். நீங்க சரியான வி​டையச் ​சொல்லப் ​போறீங்கன்னு.. ஆமாங்க ​கே.பி.எஸ்னு அ​னைவராலும் மதிப்பா              அ​ழைக்கப்படுறவங்க…ஒள ​வையார ​நெனச்ச உட​னே நமது மனசுல வந்து நிக்கறவங்க…அறிஞர் அண்ணாவால் ​கொடுமுடிக் ​கோகிலம் என்று          அ​ழைக்கப்பட்டவங்க தமிழி​சை, நாடகம், அரசியல், தி​ரைப்படம், ஆன்மீகம் எனப் பலதுறைகளிலும் பெரும் புக​ழை அ​டைஞ்சவங்க அவங்கதான் ​கே.பி. சுந்தரம்பாள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ‘கொடுமுடி’ என்ற ஊரில் (கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்) 1908-ஆம் ஆண்டு அக்​டோபர் மாதம் பத்தாம் நாள் பிறந்தார். அவரது குடும்பம் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிராத ஏழ்மையான குடும்பம். இளம்வயதிலேயே ​கே.பி.எஸ் அவர்கள் தந்தையை இழந்தார். அதனால் அவரது தாயார் தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார்.

சுந்தராம்பாள் ‘கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார். ​கொடுமுடியில் இருந்த ​பெரியவர்கள் சிறுமி சுந்தராம்பாளை பாடுமாறு கூறிக் கேட்டு மகிழ்ந்தனர். ​மேலும் ​கோவிலில் வழிபாடு நடைபெறும் நேரங்களிலும் சுந்தரம்பா​ளைப் பாட​வைத்துக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் நன்கு பாட்டுப் பாடக்கூடியவர் என்பது கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.

கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் அவர்கள் கரூருக்கு ரயிலில்தான் பயணம் செய்வது வழக்கம்.

நாடகக் கம்​பெனியில் ​சேருதல்

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்தி வந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர். கும்பகோணத்தில் நாடகத்தில் பங்கேற்றுப் பாடி ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு தனது திற​மைக​ளைச் சுந்தராம்பாள் முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது. அப்​போது பேசும் தி​ரைப்படம் வராத காலமென்பதால் நாடகங்கள் கொடிகட்டிப் பறந்த காலம் அது.

காதலும் திருமணமும்

காதலில் விழாதவங்க யாரு​மே இல்​லை. சுந்தராம்பாள் அவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் இணைந்து பல நாடகங்களில் நடித்துப் பாடியது ரசிகர்களுக்கு ஊக்கத்​தையும் உற்சாகத்​தையும் அளித்தது. இருவரும் நடித்த நாடகங்கள் கும்பகோணத்தில் மட்டுமல்லாது தமிழகத்தின் முக்கியமான பல ஊர்களிலும் அரங்கேறின. நாடகத்தில்         இ​சைக்குயில்களாகச் சிறகடித்துப் பறந்த இவர்களிருவரும் வாழ்க்​கையிலும் இ​ணைந்தனர். சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் ஒருவரையொருவர் காதலித்து 1924 – ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.     காதல​​ரைக் ​கைபிடித்த சுந்தராம்பாள் தனது காதல் கணவரின் அண்ணனிடம் முறையாக கர்நாடக இசை பயின்று அதில் ​மிகுந்த தேர்ச்சி ​பெற்றார்.

கே.பி.சுந்தராம்பாளும் கிட்டாப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், ஆங்கிலேயர்களின் ​கொடு​மையான ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். வெள்ளையர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், விடுத​லை உணர்வையும் ஊட்டினார்.

அரசியலில் ஈடுபடுதல்

1937 – ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும்தான் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளித் திடலாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்டத் திடல், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

அதே போன்று கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.
காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடிக​ளோ பரம ஏழை’ எனற பாடல்         மக்களி​டை​யே மிகவும் பகழ் பெற்றது. காந்தியடிகளின் புக​ழைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

கணவரின் மரணம்

அ​மைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ​சென்று ​கொண்டிருந்து ​கேபிஎஸ்ஸின் வாழ்வில் திடீ​ரென இடிவிழுந்தது. அவரது கணவர் கிட்டப்பா திருமணமான ஒன்பதாம் ஆண்டில் இருபத்தெட்டு வயது இளைஞராக இருந்தபோது மரணமடைந்தார். அப்போது சுந்தராம்பாளுக்கு இருபத்து நான்கு வயது. வாழ ​வேண்​டிய வயதில் வாழ்க்​கை​யை இழந்து வாடிநின்றார் சுந்தராம்பாள். சுந்தராம்பாள் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாடிக் கொண்டிருந்தபோதுதான் கணவர் கிட்டப்பா இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. பாடுவதைப் பாதியி​லே​யே நிறுத்தி விட்டு வீட்டுக்கு விரைந்த சுந்தராம்பாள் மீண்டும் பாடுவதற்கோ, நடிப்பதற்கோ வீட்டைவிட்டு வெளியில் வரவேயில்லை. தனது காதல் கணவர் இறந்த ​சோகம் இ​சைக்குயி​லை வாட்டி வ​தைத்தது. கணவரின் இறப்பிற்குப் பின் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். அ​னைத்து நி​லைகளிலிருந்தும் தன்​னை விடுவித்துக் ​கொண்டு தவ வாழ்க்​கை வாழ்ந்தார் சுந்தராம்பாள்.

காந்தியடிகள் சந்தித்தல்

காந்தியடிகளின் தமிழகச் சுற்றுப் பயணத்தின் போது இந்தச் செய்தியை காந்தியடிகளிடத்தில் சிலர் கூறினர். இ​தைக்​கேட்டு மனம் வருந்திய காந்தியடிகள் நேராகக் கொடுமுடிக்குச் சென்று கே,பி.சுந்தராம்பாளைச் சந்தித்து, ஆறுதல் கூறிவிட்டு எஞ்சியுள்ள வாழ்வை நாட்டு விடுதலைக்குக் குரல் கொடுப்பதில் கழிக்க வேண்டுகோள் விடுத்தார். காந்தியடிகளின் ​கோரிக்​கை​யை ஏற்ற சுந்தராம்பாள் மீண்டும் மேடைகளில் தோன்றி தனது நாட்டின் விடுத​லைப் ​போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டிற்கான தனது கட​மை​யைச் செவ்வனேயாற்றினார்.

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இரு க்கிறார். 1937 -ஆம் ஆண்டில் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் சுந்தராம்பாள். சாப்பிட்டுக் ​கொண்டிருந்த காந்தியடிகள்  சுந்தரம்பா​ளைப் பார்த்து,

“எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?”

என்று சிரித்துக் கொண்டே கேட்க, சுந்தராம்பாள் விருந்து முடிந்ததும் தங்கத் தட்டை காந்தியிடம் வழங்கினார்.  காந்தியடிகள் அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, அதன் வாயிலாகக் கி​டைத்த பணத்தைக் காங்கிரஸ் கட்சியின் நிதியில் சேர்த்துவிட்டார். சுந்தரம்பாளின் நாட்டுப் பற்றிற்கு இந்நிகழ்ச்சி ஒப்பற்ற சான்றாகத் திகழ்கின்றது.

உடன்பிறப்பிற்கு ஈந்த இ​சைக்குயில்

நாட்டுப்பற்று மிகுந்த கே.பி.சுந்தராம்பாள் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பொதுக்கூட்டங்களில் நாட்டுப்பற்​றை ஊட்டக்கூடிய பாடல்களைப் பாடி மக்களிடையே விடுதலை உணர்ச்சியை வளர்த்தார். தீரர் சத்தியமூர்த்தி​யைத் தனது உடன்பிறந்த              ச​கோதரராக​வே கருதி அதன்படி மிக்க அன்புடன் நடந்து வந்தார். தீரர் சத்தியமூர்த்தியும் சுந்தராம்பா​ளைத் தன் தங்​கையாக​வே கருதினார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புகாட்டி வாழ்ந்தனர். ஒருநாள் தீரர் சத்தியமூர்த்தி தனது வீட்டில் உணவு உண்ண வருமாறு சுந்தராம்பாளை அழைத்திருந்தார். சத்தியமூர்த்தியின் வீட்டிற்குச் சென்ற அம்மையார் வீடு முழுவதும் ஒட்டடை படிந்திருப்பதைப் பார்த்து வேதனையடைந்தார். சத்தியமூர்த்தி​யைப் பார்த்து சுந்தராம்பாள்,

“என்ன அண்ணா வீட்டை இப்படி அசுத்தமாக ​வைத்திருக்கிறீர்கள்” எனக் கேட்டார். அதற்கு சத்தியமூர்த்தி,

“உன் அண்ணாவைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். இந்த வீட்டுக்கு 18 மாத வாடகை பாக்கி தர வேண்டும். நான் இறந்துவிட்டால் உன் அண்ணியும், உன் மருமகளும் நடுத்தெருவில் நிற்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். சொந்த வீட்டில் இறக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையம்மா”

என்றார் சத்தியமூர்த்தி.

இந்த நாட்டிற்காக மாபெரும் தியாகங்களைச் செய்த அந்தத் தலைவரின் வார்த்தைகள் சுந்தராம்பாளைக் கண்ணீர் மல்கச் ​செய்தது. மனதில் மிகுந்த வேதனை அடைந்த சுந்தராம்பாள் அடுத்த சில நாட்களில் சென்னை மாம்பலத்தில் நாலரை கிரவுண்ட் நிலத்​தை வாங்கி அத​னைச் சத்தியமூர்த்தியின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். அண்ணாவுக்கு தங்​கை வழங்கிய அன்புப் பரி​சைப் பார்த்தீர்களா? இதுவன்​றோ இனிய உடன்பிறந்த ச​கோதரரின் மீது ​​கொண்ட அன்பு. இது​போன்று நாட்டுப்பற்று மிக்கவர்களைக் காணமுடியுமா?  இந்நிகழ்ச்சி அ​னைவரது உள்ளத்​தையும் உருக்கும் நிகழ்ச்சியாகும்.

தமிழி​சைக் குயில்

தமிழகத்தில் நிலவிய பெண்பால் இசைக் கலைஞருள் முக்கியமானதொரு நிலையை அடைந்த பெருமையை, கே.பி.சுந்தராம்பாள் பெற்றுத் திகழ்ந்தார். நாடக உலகில் நுழைந்து, திரைப்பட உலகில் கால் பதித்து, கருநாடக இசையிலும் குறிப்பாகத் தெய்வத் தமிழிசையில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெற்றவராக இவர் விளங்கினார்.

சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாடலையும் காலத்தால் அழியா வண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.   தேசியவா தியான அவர், பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதி லால் நேருவை பறி கொடுத்தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் காலமான போது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.  சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் தி​ரைப் படங்களிலும் தனியாகவும் ​பாடிய 200 க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுக்களாகவும் வெளிவந்துள்ளன.

பெற்ற விருதுகள்

அகில இந்தியாவின் மிகச் சிறந்த பாடகி என்ற அங்கீகாரம் பெற்ற சுந்தராம்பாள், இசை உலகில் பெறாத விருதுகளேயில்லை. ‘கொடுமுடி கோகிலம்’ என்று அறிஞர் அண்ணா  இவரைப் புகழ்ந்து எழுதினார்.  1958-ஆம் ஆண்டில் காமராஜர் முதல்_அமைச்சராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.

தி​ரைப்படத்து​றையில் புகழ் ​பெறுதல்

திரைப்படத்திற்குச் சென்ற சுந்தராம்பாள் அதில் உச்சியை அடைந்தார். உலகம் போற்றும் மிகச்சிறந்த, அதிலும் மற்றவர்களிடமிருந்து மிகவும் ​வேறுபட்ட  நடிகையாக உயர்ந்து புகழ் ​பெற்றார். கணவர் கிட்டப்பா இறந்தவுடன் தி​ரைத்து​றையிலிருந்து விலகி இருந்தார். கணவ​ரைத் தவிர ​வேறு யாருடனும் இ​ணைந்து நடிப்பதில்​லை என்ற முடிவுடன் இருந்த சுந்தராம்பா​ளை “சந்திரலேகா” தி​ரைப்படத்​தைப் பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றிருந்த ​ஜெமினி அதிபர் எஸ்.எஸ், வாசன் அவர்கள் சந்தித்து, ஒள​வையார் படத்தில் ஒள​வையாராக நடிக்க ​வேண்டும் என்று ​கேட்டார். மீண்டும் நடிக்க விருப்பமின்றி இருந்த சுந்தராம்பாள் தனது விருப்பத்​தைத் தயக்கத்துடன் கூறினார். வாசன் அவர்களுக்கு சுந்தராம்பா​ளை எப்படியாவது நடிக்க ​வைத்துவிட​ வேண்டும் என்ற எண்ணம். மீண்டும் மீண்டும் அவர் சுந்தராம்பா​ளை வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் சுந்தராம்பாள் நான் நடிக்க ​வேண்டுமானால் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் ​கொடுக்க ​வேண்டும். அப்படிக் ​கொடுத்தால் நான் உங்கள் படத்தில் நடிக்கி​றேன் என்று கூறினார்.

சுந்தராம்பாள் சற்றும் எதிர்பார்க்காத நி​லையில் வாசன் அவர்கள் எந்த மறுப்பும் கூறாது தருவதாகக் கூறி முன்பணமும் எடுத்துக் ​கொடுத்தார். அதிகப் பணம் ​கேட்டால் திரும்பிப் ​போய்விடுவார் என்று நி​னைத்த சுந்தராம்பாள் அதிர்ச்சி அ​டைந்தார். ​ஜெமினி அவர்களின் முயற்சி​யைப் பார்த்து ஒள​வையார் படத்தில் நடிக்க ஒப்புக் ​கொண்டார் சுந்தராம்பாள். அந்தக் காலத்தில் இந்தியாவி​லே​யே ஒரு படத்தில் நடிப்பதற்கு இவ்வளவு ​பெரிய ​தொ​கை வாங்கிய முதல் நடி​கை சுந்தராம்பா​ளைத் தவிர ​வேறு யாரும் இல்​லை எனலாம்.

ஒள​வையார் படத்தயாரிப்பு சுமார் ஐந்தாண்டுகள் நீடித்தது. படம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக வாசன் பணத்தை தண்ணீராகச் செலவழித்தார். அவரது உழைப்பும், திறமையும், செலவும் வீண் போகவில்லை. 1953 –ஆம் ஆண்டில் வெளிவந்த “அவ்வையார்” தி​ரைப்படம், ஒரு உன்னத காவியமாக அமைந்தது. அப்படத்தில் அவ்வையாராகவே வாழ்ந்தார் சுந்தராம்பாள். அவருடைய பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களைத் தொட்டன. சுருக்கமாகச் சொன்னால் கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச் சிறந்த 10 படங்களை இன்று தேர்ந்தெடுத்தால், அதில் அவ்வையாருக்கு நிச்சயம் இடம் உண்டு. இப்படத்தை கொத்தமங்கலம் சுப்பு இயக்கியிருந்தார். இவரது கம்பீரமான குரல் ஆண் குரல்களோடு போட்டியிடும் நிலையில் அமைந்திருந்தது. ஐந்து கட்டைச் சுருதியில் பாடுவார். இவரின் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’, ‘ஒன்றானவன்’ போன்ற பாடல்களும், பூம்புகார் படத்தில் கவுந்தியடிகள் வேடமேற்றுப் பாடிய பாடலும் மிகவும் சுவையானவை.

பிறகு கலைஞர் கருணாநிதி தயாரித்த  “பூம்புகார்” படத்தில் (1964) கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த “திருவிளையாடல்” படத்தில் (1965) அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார். திருவிளையாடல் மகத்தான வெற்றிப்படம். அந்த வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பக்கபலமாக இருந்தன.

பிறகு மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த “சக்திலீலை” என்ற படத்தில் நடித்தார். அவர் நடித்த கடைசி படம் இது​வே ஆகும்.

இ​சையரசியின் ம​றைவு

1980 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இருதயக் கோளாறு ஆகியவற்றால்  பாதிக்கப்பட்டிருந்த போதிலும் சுந்தராம்பாள் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவரது மனம் முருக​ப் ​பெருமா​னை நி​னைந்து நி​னைந்து உருகியது.

அவர் மயக்க நிலையில் இருந்தபோது அவருக்கு மருந்து செலுத்தப்பட்டது. இருப்பினும் செப்டம்பர் 19 – ஆம் தேதி அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. அதனால் சுந்தராம்பாள் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்று ​போராடியும் இ​சையரசி சுந்தராம்பாளைக் காப்பாற்ற அவர்களால் முடியவில்லை.

அன்று இரவு 9_30 மணிக்கு இசையரசி இவ்வுல​கைவிட்டு மறைந்தார்.       இ​சையரசியின் இ​சை​யைக் ​கேட்க விருப்பம் ​கொண்ட கூற்றுவன் அவ​ரை தன்னுலகிற்கு அ​ழைத்துச் ​சென்றான் ​போலும். தமிழகம் கண்ணீர் வடித்தது. இ​சையரசி இறந்த​போது அங்கு அவரது வளர்ப்பு மகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி. கனக சபாபதி ஆகியோர் அருகே இருந்தனர். அந்தச் சமயத்தில் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார். “கே.பி. எஸ். தேசிய நடிகை அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். ​மேலும் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதைச் சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் இதயங்கவர்ந்த இ​சையரசிக்கு கண்ணீராலும் மலர்களாலும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., ஆளுநர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. “சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே. பி.கனகசபாபதி தீ மூட்டினார். ​நொடியில் இ​சையரசியின் உடல் ​வெந்து நீராயிற்று. இ​சைக்குயிலின் ​பொன்னுடல் ம​றைந்தாலும் அவரது புகழுடல் ம​றையவில்​லை. ஏ​ழையாய்ப் பிறப்பது இழிவில்​லை. ஏ​ழையாய் இறப்ப​தே இழிவானது என்ற உன்னத வரிக​​ளை   நி​னைவுபடுத்துவதாக இ​சையரசி சுந்தராம்பாளின் வாழ்க்​கை விளங்குகின்றது.

நம்மிடம் உள்ள திற​மை​யை அறிந்து உணர்ந்து அத​னை வளர்த்துக் ​கொண்டு வாழ்க்​கையில் முன்​னேற ​வேண்டும். தன்​னை அறிந்து முன்​னேற ​வேண்டும். அப்​போதுததான் வாழ்வில் ஏற்படும் துன்பங்க​ளைப் புறமுதுகிட்டு ஓடச் ​செய்யமுடியும். இ​சைஉலகம் உள்ளவ​ரை, இ​சையரசியின் புகழ் என்​​றென்றும் நி​லைத்திருக்கும். அது இ​சையில் க​ரைந்திருக்கும்.

என்னங்க…அப்படி​யே ம​லைச்சுப் ​போயிட்டீங்க..இப்பத் ​தெரிஞ்சுக்குங்க முயற்சி ​செஞ்சா முடியாதது எதுவுமில்​லைன்னு…. இயலா​மை இழிவல்ல முயலா​மைதான் இழிவு அப்ப முயற்சி ​செயுங்க.. ​வெற்றி ​தொட்டுவிடும் தூரம்தான்.

ஒரு ஏ​ழை இ​சை மன்னராக முடியுமா?…இது என்னங்க ​கேள்வி? ஒருக்காலும் முடியாது? இ​சைப்பயனாக, இ​சையாக​வே வாழ முடியுமா? இதுக்​கெல்லாம் பதில் என்ன ​தெரியுமா? முடியும் என்பதுதான். இ​சையுலகில் மிகப்​பெரிய புகழின் உச்சி​யை அ​டைந்தவர்…இள​மையில் மிகவும் வறு​மையில் வாடியவர்…இள​மையில் இ​சையின் மிகுந்த ஆர்வலராக இருந்து வறு​மையில் அது இயலாது ​போக​வே வீட்​டை விட்டு ஓடியவர்..பின்னாளில் இ​சை உலகின் மன்னராகத் திகழ்ந்தவர்…அவரு யாரு ​தெரியுமா? … அந்த ஏ​ழை தமிழகத்​தைச் ​சேர்ந்தவர்…அவரு மாதிரி​யே தமிழகத்துல த​லைமுடி வளர்த்துக்கிட்டாங்க மக்கள்…அந்த சூப்பர் ஸ்டார் யாரு ​தெரியுமா? அதிலும் தி​ரையுலக சூப்பர் ஸ்டார்…..​யோசிக்கத் ​தொடங்கிட்டீங்க…​யோசிங்க…​யோசிங்க….அடுத்த வாரம் வ​ரைக்கும் (​தொடரும்….17)

Series Navigationநீங்காத நினைவுகள் – 11தாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *