புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-41

This entry is part 7 of 29 in the series 12 ஜனவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                     E. Mail: Malar.sethu@gmail.com

41.​மொழி ஞாயிறு என்று ​போற்றப்பட்ட ஏ​ழை…………

     வாங்க…வாங்க…என்ன ​பேசாம வர்ரீங்க….அட என்னங்க அ​மைதியா ஒக்காந்துட்டீங்க…ஒடம்புக்கு ஏதும் முடியலியா…?இல்​லையா? ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்குப் பதில் ​தெரியலயா….? ​தெரிய​லைன்னா என்னங்க…நான் ​சொல்​றேன்…. எல்லார்க்கும் எல்லாம் ​தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்​லை… ​தெரிஞ்சவங்களுக்கிட்டக் ​கேட்டுத் ​தெரிஞ்சுக்கலாம்… ​போனவாரம் ​கேட்ட ​கேள்விக்குப் பதில் என்ன ​தெரியுமா? அவரு ​வேற யாருமில்​லை…நம்ம ​தேவ​நேயப் பாவாணர்தான்…

வாழ்நாள் முழுதும் ​மொழியின் வளர்ச்சிக்காக​வே பாடுபட்ட ​பெரியார்…தமிழ், தமிழகம், தமிழ் மக்கள் என்று எண்ணி எண்ணி உ​ழைத்து உலகத்தில் ஒருத்தரு வாழ்ந்தாருன்னா அவரு பாவாணர் ஐயாதான்… தன்​னோட இறுதி மூச்சுவ​ரை இவற்றிற்காக​வே வாழ்ந்தாரு…வறு​மை அவ​ரோட இள​மை வாழ்க்​கை​யைத் தின்றது…இல்​லை இல்​லை…​கொன்றது… என்னங்க அப்படிப் பாக்கறீங்க…தின்னுட்டா ​கொஞ்சம் இருக்கும்…​கொன்னுட்டா ஒண்ணு​மே இருக்காது…ஆமாங்க நம்ம பாவாணர் ஐயா வறு​மையால் ​கொல்லப்பட்ட இள​மை வாழ்க்​கையத்தான் வாழ்ந்தாரு…என்ன மனசு கஷ்டமா இருக்கா…? இருக்காதா பின்​னே…தன்​னோட நலத்​தைவிட தமிழ் ​மொழியின் நலத்​தையும் தமிழர்களின் நலத்​தையும் உயர்வா ​நெனச்சா​ரே அவரு மாதிரி யாராலும் இப்ப வரமுடியுமா…? ஒருக்காலும் வரமுடியாது..அவரப்பத்திச் ​சொல்​றேன் ​​கேட்டுக்​கோங்க…

வறு​மை ​கொன்ற இள​மையும் கல்வியும்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் 7.2.1902-ஆம் ஆண்டு ஞானமுத்தன், பரிபூரணம் ஆகிய இருவருக்கும் பத்தாவது மகனாக, நெல்லை மாவட்டம், சங்கரநயினார் கோயிலில்  பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் ‘தேவநேசன்’ என்பதாகும்.  பாவாணர் சிற்றிளம் பருவத்திலேயே தமது தாய் தந்தையரை இழந்தார். பால்மணம் மாறாப் பருவத்தி​லே​யே பாவாணர் தம் தாய்தந்​தையர் அன்​பை இழந்து பரிதவித்தார். தமது ஐந்தாம் அகவையிலேயே கொடிய வறுமைக்காளானார். அனா​தையான அவர் தாயைப் பெற்ற தந்தையார் குருபாதம் என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரது உதவியினாலேயே வடார்க்காடு   மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.

பின்னர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திருச்சபை விடையூழியக் கூட்டுறவு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1921-ஆம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், ‘பண்டிதர் மாசிலாமணி’ என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரினை, ‘தேவ நேசக் கவிவாணன்’ என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகப் பாவாணர் கொண்டார். அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசியரியராகப் பணியிலமர்ந்தார்.

கவிவாணன் பாவாணர் ஆதல்

1924-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். அத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது தமது ஆசிரியர் தமக்கு வழங்கிய பெயரையே தம் பெயராகக் குறிப்பிட்டார் பாவாணர். ‘நேசன்’ என்பதும் ‘கவி’ என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்து கொண்ட பின்னர் தம் பெயரைத் ‘தேவநேயப் பாவாணர்’ என அமைத்துக் கொண்டார். இப்பெயரே தமிழ்கூறும் நல்லுலகத்தில் நிலைத்து விட்டது.

1926-ஆம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வினை எழுதி அதில் வெற்றி பெற்றார். அப்போது பாவாணர; சென்னை கிறித்தவ கலாசாலையில் பணியாற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகம் நடத்திய வித்துவான் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பின்னர் பி.ஓ.எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார். எம்.ஓ.எல் பட்டம் பெறுவதற்கு ‘‘திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே” என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி சென்னைப் பல்கலைக்கழகத்தில் அளித்தார். பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. அதன்பின்னர் பாவாணர் இனிமேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை என்று முடிவு செய்து முற்றிலும் சொல்லாய்விலேயே வாழ்நாளெல்லாம் பாவாணர் செலவிட்டார்.

பாவாணரின் பணி

பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை. முகவை மாவட்டத்திலுள்ள சீயோன் மலை உயர்தொடக்கப்பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடி, பின்லே கல்லூரியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பல்வேறு போராட்டங்களுக்கும், சிந்தனையின் எண்ண ஒட்டங்களின் முடிவாக 12.7.1956 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆராய்ச்சித் துறையில் ஆய்வராளராகவும் பணியை தொடங்கினார்.

பாவாணர் அண்ணாமலை நகர் சென்று ஐந்தாண்டு காலம் முடிந்தது. ஆறாம் கல்வியாண்டுத் தொடக்கத்தில் துணைவேந்தர் மாறினார். புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப் பற்று சிறிதுமில்லை. பேராசிரியர்களின் பெருமையுணரும் திறமுமில்லை. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட தமிழ்ப் பகைவரும் தந்நலக்காரரும் கூடித் தமிழுக்குக் கேடு செய்துவிட்டனர். திடீ​ரென்று பாவாணர்க்கு வேலை​யை விட்டு நீக்கிவிட்டதாகக் கடிதம் ​கொடுத்துவிட்டனர்.

முறைப்படி மும்மாத அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அதையும் பல்கலைக் கழகத்தார் பாவாணர்க்குக் கொடுக்கவில்​லை. அந்நி​லையில், “எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு” என்று கூறிவிட்டுப் பாவாணர் 1961-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் நாள் அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினார். அவரோடு தமிழும் வெளியேறியது. என்னங்க, ”மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா”ங்கற திருக்குறள் நி​னைவுக்கு வருதுல்ல. இதுதாங்க காலத்தின் ​கோலங்கறது. நல்லவங்களுக்குச் ​சோத​னை வரும்; ஆனா அது ​கொஞ்ச நாளுதான். அவங்களுக்கு வர்ர துன்பந்தான் துன்பப்படும்…….சரி…சரி…​மேல ​கேளுங்க…

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற் பாவாணர் பணி நலம் பாராட்டிய பாவேந்தர்,

“நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று

கூவும் அதுவுமோர் குற்றமா? – பாவிகளே

தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர்

யாவர்க்கும் செய்வதே யாம்”

என்று ‘குயில்’ இதழில் பாவாணர்க்குப் பதிகம் பாடி அத​னை மனமுருகி எழுதி ​வெளியிட்டார்.

​சொல்லாய்வுப் பணி

பாவாண​ரை வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக அவர் நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார். திருச்சி பிசப்ஹீபர் உயர்நிலைப்பள்ளியிலும், சேலம் நகராண்மைக் கல்லூரியிலுமாகப் பற்பல இடங்களில் அலைவுற்று பணிபுரிந்தார். இஃது இவரது சொல்லாய்வுக்கு உறுதுணையாய் இருந்தது.

பாவாணர், ‘‘கடன் கொண்டும் செய்வர் கடன்” என்பதை மெய்ப்பிக்கும் சான்றோராகவே என்றும் நூல் வாங்குதலில் விளங்கினார். 1974-ஆம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு, மாராட்டிய மொழி அகர முதலி ஒன்று தேவையாயிருந்தது. அப்போது மூர் அங்காடியில் இராசவேல் என்ற பழைய பொத்தக வாணிகரிடம் அந்நூல் இருந்தது. அவர் பாவாணரிடம் பேரன்பு கொண்டவராக விளங்கினார். அந்நூலை வெளிநாட்டார் 600 உரூபாய்குக் குறையாது வாங்கிக்கொள்வதற்கு வாய்ப்பிருந்தபோது அந்நூலை பாவாணர்க்கென உரூபாய் 480க்குக் கொடுத்தார். பாவாணர் தம் ஆய்வை முடித்து அவ்வகர முதலியைத் திருப்பித் தந்தால் அத்தொகையை மகிழ்வோடு திருப்பித் தருவதாக உறுதியும் மொழியும் கொடுத்தார். இவ்வகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்மொழிப் புலவராகிய பாவாணர் அவர்கள் வீட்டில் உள்ள அலமாரிகளில் உலக மொழிகளிலுள்ள அகராதித் தொகுப்புகள் இருந்தன. அவை அனைத்தும் அவர் சொந்தமாக வாங்கிய நூல்கள். ஆய்வுப் பணி கருதியே இவற்றை வாங்கிப் பயன்படுத்தினார். பாவாணர் தாமே முயன்று பலமொழிகளையும் கற்றார். திராவிடமொழிகள், இந்திய மொழிகள், உலகமொழிகள் ஆகியவற்றில் பெருமொழிகளாய் அமைந்த 23 மொழிகளைக் கற்று, அவற்றின் இலக்கண அறிவும் பெற்றவர் என அறிஞர் கூறுவர்.

சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியினை ஆராய்ந்து அதில், ஆயிரக்கணக்கான தென் சொற்கள் விடப்பட்டிருப்பதும், தமிழின் அடிப்படைச் சொற்களையெல்லாம் வடசொல்லென்று காட்டியிருப்பதும் தமிழ்ச் சொல் மறைப்பாகும்  எனப் பாவாணர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்​மொழிக் காதலர்

தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

பாவணரின் கொள்கை

திராவிடத்தின் தாய், ஆரியத்தின் (வடமொழி) அடிப்படை தமிழ் என சான்றுகளால் நிறுவியவர் பாவாணர். இதற்காகக் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள சொற்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி விளக்கினார்.

– உலக முதன் மொழி தமிழ்

– உலக முதல் மாந்தன் தமிழன்

– அவன் பிறந்தகம் குமரிக்கண்டம்

தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் வடமொழிக்கு மூலம் என்பன அவர்தம் உண்மையான அடிப்படைக் கொள்கைகளில் சிலவாகும்.

பாவாணர் மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆழ்வேராகவும் அடிமரமாகவும் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவையும் கருதி, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அறிஞர்களால் அழைக்கப்பட்டார்.

விருதுகளும் எழுதிய நூல்களும்

பாவாணரின் ஆய்வுப் பணி​யைப் பாராட்டி மதுரை தமிழ்க் காப்புக் கழகம் – 12.1.64 அன்று ‘தமிழ்ப்பெருங்காவலர்’ பாவாணருக்கு விருது வழங்கியது. குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவில் பாவாணருக்குச் “செந்தமிழ் ஞாயிறு” என்ற விருதி​னை வழங்கினார். இவரது ​சொல்லாராய்ச்சிப் பணி​யைப் பாராட்டித் தமிழக அரசு பாவாணருக்குச் “செந்தமிழ்ச் செல்வர்” என்ற விருதி​னை வழங்கிச் சிறப்பித்தது.

பாவாணர் பல்​வேறு நூல்க​ளை எழுதியுள்ளார். இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம், இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும், ஒப்பியன் மொழி நூல், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், தமிழர் திருமணம், திராவிடத் தாய், பழந்தமிழாராய்ச்சி, இசைத்தமிழ் சரித்திரம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அதிலும் பாவாணர் திருக்குறளுக்கு எழுதியுள்ள திருக்குறள் மரபு​ரை அ​னைவராலும் ​போற்றிப் பாராட்டப்​பெறும் சிறந்த நூலாக விளங்குகின்றது.

மொழிஞாயிறு

கருமிச் செல்வன்போன்று காலமெல்லாம் பாவாணார் சொல் வழக்காறுகளைத் தொகுத்தார். வள்ளலைப் போன்று அவர் தொகுத்த சொற்களஞ்சியச் செல்வத்தினைத் தாம் எழுதியவற்றில் வாரி வழங்கினார். எழுதுவது போலவே பேசுவார் பாவாணர். அவர் நூல்கள் போலவே உரையாடலிலும் ஊடகமாகச் சொல்லாய்வு தலைதூக்கி நிற்கும். பாவாணரைப் பற்றி ‘‘சொல்லாராய்ச்சித் துறையில் திரு.தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றோம்” என மறைமலையடிகளார் குறிப்பிடுகின்றார்.

பலசொற்கள் வடமொழியில் இருந்தே வந்தது என்று பலர் கூறியபோது அதனை மறுத்து அவை தூயதமிழ்ச் சொற்களே என மெய்ப்பித்தவர் பாவாணர். புத்தகம் எனும் சொல் வடசொல்லில் இருந்து வந்ததாகக் கூறுவர். இதனை மறுத்து பாவாணர், ‘புத்தகம்’ என்னும் சொல் ‘பொத்தகம்’ என்பதன் வழிவந்த சொல்லாகும்.

அதாவது, புல்லுதல் – பொருந்துதல், புல்-பொல்-பொரு-பொருந்து-பொருத்து-பொத்து-பொட்டு, பொத்துதல்-பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல், பொத்து-பொத்தகம்- பொத்திய(சேர்த்தல்)ஏட்டுக்கற்றை, எழுதிய ஏட்டுத் தொகுதி என விளக்கி இஃது தூய தமிழ்ச்சொல் என்று மொழிகிறார். ஆனால், ‘புஸ்தகம்’ என்ற வட சொல்லில் இருந்து வந்ததாகக் கருதிக் கொண்டு தமிழியல்புக்கு ஏற்பப் புத்தகம் என எழுதுவதாகப் படித்தவரும் கருதுகின்றனர் என புத்தகம் என்பதன் உண்மையான பொருளை பாவாணர் தெளிவுறுத்துகிறார்.

ஞாயிறின் ம​றைவு

சொல்லாய்விற்காக அரும்பாடுற்றவர் பாவாணர். பாவாணரின் முதற்கட்டுரை, ‘மொழியாராய்ச்சி’ என்பதாகும். இஃது செந்தமிழ்ச் செல்வி ஒன்பதாம் சிலம்பு, ஆறாம் பரலில் 1931-ஆம் ஆண்டு சூன்-சூலைத் திங்களில், அவரது 29-ஆம் அகவையில் வெளிவந்தது. பாவாணரின் இறுதிக்கட்டுரை, ‘‘உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு’’ என்பதாகும்.  இதுவும் செந்தமிழ்ச் செலிவி இதழில் 1980-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் வெளிவந்தது. இருப்பினும் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை நகரில் 14.1.1981-இல் தொடங்கியபோது வெளியிடப்பட்ட மலரில் இடம்பெற்றதும், பாவாணரால் மாநாட்டரங்கில் படிக்கப் பெற்றதும் ஆகிய கட்டுரை, ‘‘தமிழனின் பிறந்தகம்” என்னும் கட்டுரையாகும். செந்தமிழ்ச்செல்வி இதழுக்கு வந்த இறுதிக் கட்டுரையும் இஃதேயாகும். முதற்கட்டுரைக்கும் இறுதிக் கட்டுரைக்கும் உள்ள இடைவெளி ஐம்பது ஆண்டுகள்.

மாநாட்டரங்கில் இக்கட்டுரைக்கு பாவாணர் விளக்கம் கூறிக்கொண்டிருக்கும் போதே (15.1.1981)  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரது 79-ஆம் அகவையில் இயற்கை எய்தினார். பாவாணர் என்ற ​மொழிஞாயிறு ம​றைந்தது. இது தமிழர்களின் தவக்கு​றை​யென்​றே கூற​வேண்டும். அவரது ​சொல்லாய்வுப் பணியால் தமிழ்​மொழி த​லைநிமிர்ந்தது. தமிழர்கள் உலகில் உயர்ந்து நின்றனர்.

தொகுப்புக் கலைத்தோன்றலாகிய பாவாணர் அகரமுதலிகளைத் தொகுப்பதில் பேரார்வம் கொண்டுழைத்தார். அப்பணி வளர்ந்து கொண்டே இருந்தது. அவரது மூச்சின் ஓய்வில் தான் அத்தொகுப்பு முடிவுற்றது. வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே வாழ்ந்தார். இதனைத் தமிழ்கூறும் நல்லுலகத்தார் அனைவரும் அறிவர். பாவாணர் தோன்றி 107 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவரது வழியில் ​சென்று அன்​​னைத் தமிழ் ​மொழி​யைக் காப்பது அ​னைவரின் த​லையாய கட​மையாகும். அது​வே நாம் அவருக்குச் ​செய்யும் உண்​மையான மரியா​தையாகும்…​ என்னங்க அசந்து ​போயி ஒக்காந்துட்டீங்க… “பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே” வறு​மை அவங்க​ளை ஒண்ணும் ​செய்யாது…இத ​மொதல்ல ​தெரிஞ்சுக்குங்க…..நம்ம ​மொழி​யையும், நாட்​டையும் இரு கண்களா ​நெனச்சு வாழணும்… நம்ம​ளோட குறிக்​கோள சரியா நிர்ணயிக்கணும்…. அப்புற​மென்ன ​வெற்றி ஒங்களுக்குத்தான்….​வெற்றி​யை ​நோக்கி ந​டையப் ​போடுங்க…சரியா….!

ஒருத்தரு ஊரால் ​பெயர்​பெற்றார்…அந்த ஊரச் ​சொன்னஉட​னே​யே நமக்கு அவ​ரோட ​பெயர்தான் நி​னைவுக்கு வரும்….தி​ரையி​சையில் ​கோட்​டையாகத் திகழ்ந்தவர்…..வாழ்ந்த​தோ 29 ஆண்டுகள்…இளம் வயதில் அவ​ரை வறு​மை தின்றது..அவர் பள்ளிக்​கே ​செல்லவில்​லை….17 ​தொழில்க​ளைப் பார்த்தவர்…..பாரதிதாசனிடம் மாணவராகக் ​கொஞ்ச காலம் இருந்தார்….பல தத்துவங்க​ளை எழுதித் தி​ரையி​சைத் திருவள்ளுவர் என்ற பட்டத்​தைப் ​பெற்றார்,,,மக்கள் கவிஞர்னனு அவ​ரை மக்கள் வாயார வாழ்த்திக்கிட்​டே இருக்காங்க…அவரு…..,யாருக்கும் த​லைவணங்காத ​நேர்​மையாளர்….அவரு யாரு…என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா….? என்னது எழுந்துருச்சுட்டீங்க…ஓ…​ஹோ​ஹோ…அடுத்தவாரம் கண்டுபிடுச்சுக்கிட்டு வந்து ​சொல்லப் ​போரிங்களா..சரி..சரி ​போயிட்டு வாங்க..அடுத்த வாரம் பார்ப்​போம்….           (​தொடரும்……42)

Series Navigationநீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *