பெண்ணுக்கென்று ஒரு கோணம்

This entry is part 7 of 18 in the series 31 அக்டோபர் 2021

 

 

ஜோதிர்லதா கிரிஜா

(கல்கி தீபாவளி மலர்-1987 இல் வந்தது.  “மகளுக்காக” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)

               தயாநிதியும் கிருத்திகாவும் ஒருசேரத் தலை உயர்த்தித் தங்கள் தாயைப் பார்த்தார்கள். இருவருக்கும் முன்பாகப் பரப்பி  இருந்த இலைகளில் நெய் ஊற்றிவிட்டுப் பட்டம்மா இறுகிய முகத்துடன் அப்பால் நகர்ந்து அடுத்த அயிட்டங்களைப் பரிமாற அடுக்களை மேடைப் பாத்திரங்களை நகர்த்தலானாள்.

பட்டம்மாவின் முதுகு தெரியத் தொடங்கியதும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கண்களாலேயே தங்கள் எண்ண எதிரொலிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டார்கள்.

சாதத்தின் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிவிட்டுப் பட்டம்மா நகர்ந்ததும், இனி அடுத்து ரசத்துக்குச் சாதம் பரிமாறத்தான் வருவாள் என்கிற நிலையில், “எம்புட்டு வெறுப்பு இருந்தா அம்மா இப்படிப் பேசுவாங்க அப்பாவைப் பத்தி?” என்று கிருத்திகாவின் காதருகே தயாநிதி குசுகுசுத்தான்.

        “அதையேதான் நானும் நினைச்சுக்கிட்டிருக்கேன், தயா… பாவம், அம்மா.  எல்லாருக்கும் வாய்க்கிற மாதிரி நிம்மதியான வாழ்க்கை அவங்களுக்கு வாய்க்கலை. நாமாவது அவங்களை சந்தோஷமா வச்சுக்கிறணும்,” என்று பதிலுக்கு முணுமுணுத்த கிருந்த்திகா சிந்தனை வயப்பட்டுப் போனாள்.

       மேற்கொண்டு சில விநாடிகள் வரை பேசிக்கொள்ளாமலே இருவரும் பரபரவென்று சாப்பிடலானார்கள். எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும், பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும், தத்தம் அலுவலகங்களில் நடந்தவற்றை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டும், சில நேரங்களில் காரசாரமாக எதைப் பற்றியேனும் விவாதித்துக்கொண்டும், காரசாரமான விவாதங்களின் போது அடித்துக்கொள்ளாத குறையாகச் சண்டை போட்டுக்கொண்டும் சாப்பிடும் வழக்கமுள்ள மகனும் மகளும் திடீரென்று மவுனமாகிவிட்டதற்கு அவர்களுடைய அப்பாவைப் பற்றித் தான் உதிர்த்துவிட்ட சொற்கள்தான் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட பட்டம்மா அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுதில் அவரைப் பற்றிய பேச்சைத் தான் எடுத்திருந்திருக்க வேண்டாமோ என்று தன் மீதே அங்கலாய்ப்புக் கொண்டாள். வழக்கம் போல் அவரை மட்டந்தட்டியும் குத்தலாகவும் பேசுகிற வழக்கம் உள்ளவள்தான் என்றாலும், இன்றைய வார்த்தைகள் வழக்கத்தை மீறிய கடுமையுடன் வெளிப்பட்டுவிட்டதாக அவளுக்கே தோன்றியது. கணவனின் மீது எவ்வளவுதான் மனத்தாங்கலும் ஆத்திரமும் தனக்கு இருந்த போதிலும்,  “அவன்” என்று ஒருமையில் அவரைப் பற்றித் தான் வாய் தவறியும் அதுகாறும் குறிப்பிட்டதே இல்லை என்பதை நினைவு கூர அவள் தவறவில்லை. ‘உங்கப்பன் என்ன கிழிச்சுடப் போறான் நம்மோட இருந்தா மட்டும்?’ என்கிற சொற்கள் மகனையும் மகளையும் அயர்த்திவிட்டதை எண்ணி அவள் கசப்புடன் மனத்துள் சிரித்துக்கொண்டாள். எத்தனையோ தடவைகள் அவள் தன் கணவனைத் தன் மனத்துள் அவ்வாறு ஒருமையில் அவமதித்துகொண்டது உண்டுதானெனினும், பெற்ற குழந்தைகளுக்கு முன்னால் அப்படி ஒரு தரக்குறைவான பேச்சை அவள் அதற்கு முன்பாகப் பேசியது கிடையாது என்பதால் இருவரும் அதிர்ந்து வாயடைத்துப் போனதை அவள் புரிந்துகொண்டாள். அவளுக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது. மனசில் இருந்த அவமரியாதை சொற்களில் வெளிப்படாதிருக்குமளவுக்கு எப்போதுமே கவனமாக இருக்க முடியுமா என்ன என்றெண்ணியவாறு அவள் ரசத்துக்குச் சாதம் பரிமாற அவர்களுக்கு முன்பாக வந்து நின்றாள்.

         “ரெண்டு பேரும் ஒரேயடியா மவுனமாயிட்டீங்க? என்னடா, இந்த அம்மா தாலி கட்டின புருஷனை அவன் இவன்னு மரியாதைக் கொறச்சலாப் பேசிட்டாளேன்னா? எம்மனசில எம்புட்டுக் கோவம் இருந்தா அப்படி ஒரு வார்த்தை வரும்!” என்று தன் சொற்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவள் கூறியதும், முதலில் கிருத்திகாதான் பேசினாள்.

        “நீ பேசினதைப் பத்தி நாங்க தப்பாவே நினைக்கல்லேம்மா. இன்னும் சொல்லப் போனா, நாங்களே அப்பவை அநியாயக்கார ஆளு, அக்கிரமக்கார ஆளுன்னுதானே சொல்றோம்? அப்பான்னுன் ஒரு பிரியத்தோட என்னிக்காவது சொல்லியிருக்கோமா?”

       இப்போது தயாநிதி குறுக்கிட்டுப் பேசினான்: “நீ பேசினது ஏதோ தப்புங்குற மாதிரி நாங்க நினைக்கிறோம்னு நீ நினைக்கிறயாம்மா? எதுக்கு விளக்கம் கொடுக்கிற மாதிரி பேசறே? அப்பா சங்கதி தெரிஞ்ச சங்கதிதானே? நாங்களே அவரை தினமும் திட்டிக்கிட்டுத்தானே கெடக்குறோம்? இன்னும் சொல்லப் போனா, அவரு இந்தக் குடும்பத்துக்குச் செய்திருக்குற அக்கிரமத்துக்கு, நாங்களே அவரை அவன், இவன்னு சில நேரங்கள்லே நீ பக்கத்துல இல்லாதப்ப பேசிக்கிட்றோம். ஒருவேளை உனக்கு அதனால மனவருத்தம் வருமோன்னுதான். நீ என்னடான்னா எங்களுக்கு விளக்கம் தர்றே. சரியாப் போச்சு, போ!”

        “ரசத்துக்கு உப்பு சரியா இருக்குதாடா?”

        சமையல் அயிட்டங்களை விமர்சிப்பது எப்போதுமே தயாநிதிதான். ‘ஒரே ஒரு உப்பு வேணும்… அரை உப்பு தூக்கல்’ என்றெல்லாம் மிகச் சரியாகக் கணித்து விடுவான். இதனால் பட்டம்மா அவனைப் பார்த்து ரசம் பற்றி விசாரித்தாள்.

        “எல்லாம் ரொம்ப கரெக்டா அமைஞ்சிருக்கும்மா இன்னிக்கு. என்ன இருந்தாலும், உனக்குக் கைமணம் அலாதிம்மா! வெறும் மிளகாய்த் தூளைப் புளித் தண்ணியில கலக்கித் துளி பெருங்காயத்தையும் போட்டு நீ சாதாரணமா ஒரு ரசம் வெச்சாலும் இந்தத் தெருவே மணக்குதும்மா!”

        “நாக்கையும் மூக்கையும் நல்லா வளர்த்து வெச்சிருக்குறேன். நாளைக்கு உனக்கு வர்ற மகராசி எப்படி  சமைச்சுப் போடுவாளோ, என்ன கண்ராவியோ!”

         தயாநிதியின் முகம் சிவக்க, கிருத்திகா சிரிப்புடன் குறுக்கிட்டாள்: “அட, போம்மா. நீ வேற. இவன்தான் சமைக்கப் போறான். அதுதான் தெரியுதே, அவன் அடிக்கடிக்கு சமையக்கட்டுக்கு வந்து, இது எப்படிப் பண்றது, அது எப்படிப் பண்றதுன்னு கேக்குறதுலேருந்தே!”                                                                     “அதுக்கு அப்படி அர்த்தமில்லே. எது ஒண்ணும் ஆணுக்கும் தெரிஞ்சிருக்கணும், பொண்ணுக்கும் தெரிஞ்சிருக்கணும். ஒரு சமயம் போதுன்னா தன் வயித்துக்குக் கூட சமையல் பண்ணிக்கத் தெரியாம தவிக்கக் கூடாதில்ல? இன்னும் சொல்லப் போனா, ஆம்பளைங்கதான் சமையல்ல கெட்டிக்காரங்க.”

        “கேட்டியாம்மா. அண்ணன் பேசுறதை? அப்ப, இவருதான் சமையல் பண்ணிப் போடப் போறாரு. அண்ணி உக்காந்து சாப்பிடப் போகுது.”

        “இருக்கட்டுமேடி? அதுல என்ன தப்பு? ரெண்டு பேருமே, இவன் சொல்றாப்ல, எல்லாம் தெரிஞ்சவங்களா இருக்குறது நல்லதுதானே? இல்லைன்னா, உங்கப்பா மாதிரி பாயசத்துல இனிப்புப் பத்தலைன்னு என் முகத்துல அதை வீசிக் கொட்டினாரே, அது மாதிரி செய்யணுமா ஒரு ஆம்பளை? சமையல் தெரிஞ்ச ஆம்பளை அது மாதிரி அடாவடியா நடந்துக்க மாட்டானில்ல? … அதுசரி, நீ எப்ப சமையல் கத்துக்குறது? ஒரு சாதம், கறி, குழம்பு மட்டும் வைக்கத் தெரிஞ்சா ஆச்சா? இன்னும் எத்தினி அயிட்டமெல்லாம் இருக்குது? ஞாய்த்துக் கிழமைகள்ல வந்து கத்துக்கயேன்.”

        “அதெல்லாம் மாட்டாம்மா. அவ புருஷன் தானே சமையல் பண்ணப் போறான்?”

        கிருத்திகா பதில் சொல்லாமல் சிரிக்க, பட்டம்மா கறி எடுத்துவர அங்கிருந்து நீங்கினாள்.

அதன் பிறகு சாப்பிட்டு முடிக்கும் வரையில் அண்ணனும் தங்கையும் பேசிக்கொள்ளவில்லை. சாப்பிட்ட பிறகு நல்ல உடைகளை அணிந்து கொண்டு இருவரும்  புறப்படத் தயாரானார்கள். ஸ்கூட்டரில் அண்ணனும் தங்கையும் புறப்பட, வழக்கம் போல் வாசலுக்கு வந்து நின்று விடை கொடுத்துக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே போனாள் பட்டம்மா.

        … ஸ்கூட்டரைக் கிளாப்பிய பிறகு சில வினாடிகள் வரையில் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. தெருவில் போக்குவரத்து நெரிசல் இருப்பின், ஒரு சின்ன முனகலைக் கூட வெளிப்படுத்தக் கூடாது என்பது தயாநிதியின் கடுமையான உத்தரவு. இன்று எதனாலோ தெருவில் அவ்வளவாக வண்டிகளின் ஓட்டமோ மனிதர்களின் நெரிசலோ காணப்படவில்லை.

        “என்ன கிருத்திகா பலத்த யோசனை? அம்மா சொன்னதைப் பத்தியா?”

        “ஆமாண்ணா. என்னதான் சொல்லு, நம்ம நாட்டுப் பொம்பளைங்க புருஷனை அவன் இவன்னெல்லாம் சொல்ல மாட்டாங்க. மனசில எம்புட்டு வெறுப்பு இருந்தா அம்மா அப்படிச் சொல்லியிருக்கும்?”

        “அப்பா நம்மளை யெல்லாம் உதறிட்டுப் போன அன்னிக்கு அம்மா இன்னிக்குச் செய்த அதே அயிட்டங்களைத்தான் செய்திருந்தாங்க. அது எனக்குத் திடீர்னு நெனப்புக்கு வர, அதனால நான் அந்தாளைப் பத்தின பேச்சை எடுத்துட்டேன்.”

        “அம்மா அடிக்கடி அந்தாளைப் பத்தி நெனச்சு நெனச்சு மனசு வெடிச்சுப் பேசறாங்க. நாம வேற இன்னிக்கு தூபம் போட்டுட்டம் …”

        “அப்பா இந்த வீட்டை விட்டு நிரந்தரமா வெளியேறின அன்னிக்கும் நீ இதே

அயிட்டங்களைத்தானேம்மா சமைச்சிருந்தேன்னு கேட்டதும் அம்மாவுக்குத்தான் முகம் எப்படி மாறிப் போயிறுச்சு!”

        “எப்பவுமே அந்தாளு பேச்சை எடுத்தாலே அம்மா முகம் மாறித்தான் போகுது. அதுலயும் இன்னிக்கு மகா மோசமா மாறிட்டுது. ‘நல்ல நாளும் அதுவுமா அந்தாளு பேச்சை எதுக்குடா எடுக்குறே’ அப்படின்னுட்டாங்களே! நானே அசந்து போயிட்டேன்.”

        “எப்பவானும்,  அந்தாளு உங்கண்ணுல பட்றதுண்டா?”

        “இல்லேண்ணா. எங்கண்ணுல பட்டுக் கிட்டத்தட்ட ஆறேழு மாசம் போல ஆயிடுச்சு.”

        “நான் பார்த்து ஒரு வருஷம் கூட ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். கீதா கஃபேக்கு முன்னாடி அந்தப் பொம்பளையோட ஒட்டி உரசிக்கிட்டு நின்னிருந்தாரு. ஆனா, என்னயப் பார்க்கல்லே அந்தாளு.”

        “பாவம் நம்ம அம்மா. கொஞ்சம் கறுப்பா  இருக்காங்கங்கிறதைத் தவிர நம்ம அம்மாவுக்கு என்ன குறைச்சல்? அந்தப் பொம்பளை வெள்ளைத் தோலும் மயக்குற மேக்கப்புமா இருக்கவே, அவளே கதின்னு போயிட்டாரு. கொழந்தைங்க கூட வேணாம்னு தோணிடிச்சே? அதைத்தான் தாங்க முடியல்லே.”

        தயாநிதி சிரித்தான்: “அந்தாளு ரொம்பத்தான் செவப்பு!”

        “அதைப் பத்தி என்னண்ணா? அவங்க கறுப்பா இருந்தாலும் பொஞ்சாதி வெள்ளையா இருக்கணும்கிறதுதானே அவங்க நியாயம்?”

        “சரி. போனதுதான் போனியே? மாசா மாசம் வந்து அம்மா கையில கொஞ்சம் பணமாவது குடுத்தியா? நம்மை வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைக்கிறதுக்கும் தெரிஞ்சவங்க கையைக் காலைப் பிடிச்சு நமக்கு ஒரு வேலையை  வாங்கி வைக்கிறதுக்கும் அம்மா என்ன பாடு பட்டிருக்காங்க! பாவி மனுஷன்!  நாம இருக்கமா, செத்தமான்னு கூடக் கவலைப் படாத ஜென்மம். இப்படியும் மனுஷங்க இருக்காங்களே!”

        “அண்ணா! அது சரி,  அந்தப் பொம்பளை மூலமா ஏதாச்சும் பசங்க பிறந்திச்சா?”

        “இல்லைன்னுதான் நினைக்கிறேன்.”

        “ரெண்டு பிள்ளைங்க பிறந்து செத்திடிச்சுன்னு நீதான் ஒரு வாட்டி அம்மாவுக்குத் தெரியாம தெரிஞ்சுக்கிட்டு வந்து சொன்னே. அதுக்குப் பிறகு ஒண்ணுமில்லியாக்கும்?”

        “அப்படித்தான் தோணுது. அந்தாளு இருக்குற தெருவிலதானே என் ஃப்ரண்ட் ஒருத்தன் இருக்கான்? அவன் மூலமாத்தான் இதெல்லாம் எனக்குத் தெரிய வரும்.  ஆனா அந்தாளு நம்ம அப்பான்றது அவனுக்குத் தெரியாது. தெரிஞ்ச ஆளுன்னுதான் சொல்லி வச்சிருக்கேன்.”

        “தெரிஞ்ச ஆளுன்னு சொல்லிக்கிறது கூட அசிங்கந்தாண்ணா. நம்ம ரெண்டு பேருக்கும் அம்மா பிறந்த நாள் கொண்டாடின அன்னிக்குப் போன ஆளு இல்லே? அது

நமக்கு எத்தனையாவது பிறந்த நாளுண்ணா?”

        “எட்டாவது பிறந்த நாள்னு நினைக்கிறேன்.”

        “அப்படின்னா அந்தாளு நம்மை விட்டுப் போய்ப் பனிரெண்டு வருஷம் ஆயிடிச்சில்ல?”

        “ஆமா. ஒரே பிரசவத்துல நாம ரெண்டு பேரும் ரெட்டையாப் பிறந்ததால அம்மா உடம்புக்கு ஏதோ சுகவீனம் ஏற்பட்டுப் போச்சுன்னு தோணுது. அதுக்குப் பிறகு அவங்களுக்குக் குழந்தையே பிறக்கலையே?”

         “அந்தாளுதான் அம்மாவை உதாசீனப்படுத்திட்டாரே. நமக்கு விவரம் தெரிய வர்றதுக்கு முன்னாடியிலேருந்தே அந்தப் பொம்பளை கூடப் பழக்கமாமே அந்தாளுக்கு?”

  “ஆமாமா.”

         “நீ சொல்றாப்ல மாசா மாசம் அம்மா கையிலெ கொஞ்சம் பணமாவது குடுத்திருக்கலாம் அந்த மனுஷன்.  நீ வேணாப் பார்த்துக்கிட்டே இரு. கடைசிக் காலத்துல அம்மா கிட்ட ஓடி வருவாரு.”                                                                                                                                                         

       “வந்தா, நான் நிஜமாவே செருப்பைக் கழட்டுவேன்.”

       “நீ என்ன கழட்றது? இன்னிக்கு அம்மா ஒருமையில அந்தாளைப் பத்திச் சொன்னதை நினைச்சா, அம்மாவே செருப்பைக் கழட்டும்னு தோணுது!”

       “அம்மா எங்கே செருப்பு மாட்றாங்க?”

       “அப்ப, துடப்பக்கட்டையை எடுத்துக்கும்!” என்று கூறிவிட்டு, கிருத்திகா வாய்விட்டுச் சிரித்தாள்.

       “வண்டி ஓட்டுறப்ப சிரிச்சுப் பேசாதீங்கம்மா!” என்று ஒரு டாக்சி ஓட்டுநர் அவர்களைக் கடந்து சென்ற கணத்தில் கூற, இருவரும் அதற்கு மேல் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. தயாநிதி அவளை அவளது அலுவலக வாயிலில் இறக்கிவிட்டு   விட்டுத் தனது தொழிற்சாலை நோக்கி வண்டியைத் திருப்பினான்.

       … அன்று மாலை வழக்கம் போல் ஐந்தரை  மணிக்கு அவளைத் திரும்பவும் ஸ்கூட்டரில் ஏற்றிகொண்டு தயாநிதி வீட்டுக்கு வந்தான். ஸ்கூட்டரை விட்டு இறங்கி வாசற்படியில் கால் வைத்த இருவர் செவிகளையும் ஒரு பெரிய அழுகுரல் தாக்கியது. இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டு திகைப்படைந்தார்கள். ‘அம்மாதான் அழுகிறாளோ’ என்று பயந்து போன தயாநிதி படபடவென்று கதவைத் தட்டினான்.        

       அடுத்த வினாடி அழுகுரலின் ஓசை குறைந்தது. பட்டம்மா வந்து கதவைத் திறந்தாள். அம்மாவின் முகத்தில் அழுததற்கான அடையாளம் தெரியாததால் நிம்மதியடைந்த போதிலும், அம்மாவுடன் உள்ளே இருந்தது யார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் இருவருள்ளும் கிளர்ந்தது.

        “யாரும்மா அழறது?” என்று கிருத்திகா ஆவலை அடக்க மாட்டாது வினவினாள்.

       கதவைத் திறந்து விட்டு விட்டு உள்லே போகத் தொடங்கிய பட்டம்மா, “வேற யாரு? எல்லாம் நம்ம மருதாயிதான். அவ புருசன்காரன் தொல்லை பொறுக்கவே முடியல்லியாம். தினமும் அடிக்கிறானாம்.  நேத்து குடிச்சுட்டு வந்து அவளை அடிச்ச அடியிலே அவளுக்கு மயக்கமே வந்திடுச்சாம். சொல்லிச் சொல்லி அழுது. பாவம். இம்புட்டுக்கும் கல்யாணம் கட்டி முழுசா ஆறு மாசம்  கூட ஆவலை… அதென்ன குடியோ, என்ன மாயமோ?”

       பட்டம்மாவைப் பின்பற்றி உள்ளே வந்து உட்காரந்த தயாநிதியையும் கிருத்திகாவையும் பார்த்ததும் அவர்கள் வீட்டு வேலைக்காரி மருதாயி தன் அழுகைக்கு வெட்கப்பட்டுப் போய்த் தலையைக் குனிந்துகொண்டு நகரலானாள்.

        “ஏய், மருதாயி! உக்காரு, சொல்றேன். என்ன பிரச்னை உனக்கு? சொல்லேன் எங்ககிட்ட. உம் புருசனை ஒரு மெரட்டு மெரட்டி வைக்கிறேன்,” என்று தயாநிதி சொல்லவும், மருதாயி திரும்பி நின்றாள்.

        “அத்தையேங் கேக்குற தம்பி? நெதமும் அடி, நெதமும் ஒதை. ஃபாக்டரியில வாச்மேனா வேலை செய்யுது. மாசம் நானூறு ரூவா சம்பாரிக்குது. ஆனா ஒரு பைசா நம்ம கண்ணுல காட்டாது. மொத ரெண்டு மாசம் பாதிச் சம்பளத்தை ஏங்கையில குடுத்திச்சு. அதுக்கு அப்பால நிப்பாட்டிடுச்சு. சாப்பாட்டுக்கு நான் என்ன செய்யிறது? அதுக்காகத்தான் நான் வேலைக்கு வந்தேன். மொத மொத நான் உங்க வீட்டுக்குத்தான் தம்பி வேலைக்கு வந்தேன். நீங்க குடுக்கிற சம்பளத்துலயும் பிடுங்கிக்குது. அப்புறம் நான் என்னத்தைத் திங்கிறதாம்? எனக்கும் வவுறு ஒண்ணு இருக்குதில்ல?”             மூவருக்கும் காப்பி எடுத்து வந்து கொடுத்த பட்டம்மா, “இந்த லச்சணத்துல இது முழுகாம வேற இருக்குது. இது மூணாவது மாசமாம். பாவம்!” என்று பெருமூச்செறிந்தாள். மருதாயி சிவந்துபோன முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள்.

        “நாளை காலை உங்க வீட்டாண்டை வரட்டுமா? வந்து நல்லா நாலு கேள்வி கேக்குறேன் அந்தாளை – நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி,” என்று காட்டமாக அறிவித்த தயாநிதியை மருதாயி நன்றியுடன் நோக்கி, “வேணாந்தம்பி! அப்புறம் அதுக்கு எம்மேல கோவம் இன்னும் தாஸ்தியாவும். விட்டுத்தள்ளுங்க. எல்லாம் அவங்கவங்க தலையெளுத்துப்படிதான் நடக்கும். … என்னம்மா நான் சொல்றது?” என்றாள்.

       மூவரும் வைத்த காப்பித் தம்ப்ளர்-டவராக்களக் கழுவுவதற்கு அவள் எடுத்துச் சென்ற பிறகு, “உங்கப்பா கல்யாணம் ஆன புதுசுல வீட்டுக்குள்ள என்னய வெச்சு வெளியில பூட்டிக்கிட்டுப் போவாரே, அத்த விடவாடா இது கொடுமை?” என்றாள் பட்டம்மா. தொடர்ந்து, “நீங்க ரெண்டு பேரும் இல்லாதப்ப ஒரு நாளு அவ புருசன்காரன் இங்க வந்திருந்தான். அவசரமாப் பணம் வேணும்னு சொல்லிக்கிட்டு வந்தான். அவ வெச்சிருந்த ஒண்ணையோ ரெண்டையோ பிடுங்கிக்கிட்டுப் போனான். மூஞ்சியில ரவுடிக்களை சொட்டுது. என்ன மனுசங்களோ, என்ன எழவோ! ஏந்தான் இப்படிக் குடிச்சு சாகறாங்களோ! இவங்க குடி இவங்களோட நின்னாப் பரவாயில்ல. பொஞ்சாதியை அடிக்கவில்ல சொல்லுது? அதன் பொறுக்க முடியல்ல …”

       பட்டம்மா பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்து போனாள். தயாநிதியும் கிருத்திகாவும் தத்தம் எண்னங்களில் மூழ்கினர் ..

       அவர்களின் அப்பா வேதரத்தினம் அம்மாவோடு போட்ட கண்மூடித்தனமான சண்டைகளெல்லாம் இருவருக்கும் நன்றாக ஞாபகம் இருந்தன. அவர்களின் எட்டாவது பிறந்த நாளுக்கு முந்தின நாள் இருவரும் வெட்டுப்பழி குத்துப்பழி என்கிற ரீதியில்தான் ஒருவரையொருவர் சொல்லம்புகளால் தாக்கிக்கொண்டார்கள். முடிவில் அப்பா பதில் சொல்ல மாட்டாமல் அம்மாவை அடித்து நொறுக்கியதை அண்ணனும் தங்கையும் திகைப்பும் திடுக்கிடலுமாய்ப் பார்த்தபடி நட்டுவைத்த கம்பங்களாய்ச் செயலிழந்து நின்றார்கள். அந்த வயதில் எதுவும் புரியாவிட்டாலும், இருவரும் பரிமாறிக்கொண்ட சொல்லாடல் நினைவில் இருந்தது. தங்கப் பொம்மைகளாய் வீட்டில் இரட்டைக் குழந்தைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இருக்க, ஒரு சிறுக்கி பின்னால் போக எப்படித்தான் மனசு வருமோ என்று அம்மா கேட்ட கேள்விக்குத்தான் அவர்களின் அப்பா தன் கைகளல் பதிலிறுத்தார்.  ‘இத்தினி நாளு வீட்டுக்காவது வந்து போய்க்கிட்டிருந்தேனில்ல? இனி அதுவும் கெடையாதுடி, தெரிஞ்சுக்க. இனிமேப்பட்டு இந்த வீட்டு வாசப்படி மிதிச்சா ஏண்டா நாயேன்னு சொல்லு …’ என்று அறிவித்தார்.

       அன்றிரவு வெளியே தங்கினார். மறு நாள் அவர்களின் பிறந்த நாள். அம்மா இன்றைக்குச் செய்த சமையல் அயிட்டங்களை அன்றும் தயாரித்திருந்தாள். பாயசம் மட்டும் அதிக்ப்படி. அப்பா சாப்பிடவில்லை. தன் மானவெட்கங்களை ஒதுக்கிவிட்டு அம்மா அவரைக் கூப்பிட்டாள். ஆனால் பதிலே சொல்லாத அவர் தம் சாமான்களை யெல்லாம் இரண்டு பெரிய பெட்டிகளில் திணித்துக்கொண்டு ஒரேயடியாக வெளியேறினார்.

       சென்னையில் ஏதோ ஒரு பகுதியில் இருந்து வந்த அவர் தம் குழந்தைகளைப் பார்க்க வரும் எண்ணங்கூட அற்றவராக இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை என்று அம்மா வாய்க்கு வாய் புலம்புவாள்.

        … நாள்கள் நகர, நிறை மாதம் வந்ததும் மருதாயி வேலையிலிருந்து நின்றுகொண்டாள்.

       … அன்று ஞாயிற்றுக்கிழமை.  காலை சுமார் எட்டு மணிக்குக் கதவு தட்டப்பட்ட ஓசை கேட்டு, தயாநிதி வாசலுக்குப் போனான். அவனைப் பின்பற்றி மெதுவாய்ச் சென்ற கிருத்திகா வாசலில் யாரோ வேற்றாள் நிற்பதைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றுகொண்டாள்.

       பரட்டைத் தலையும் அழுக்கடைந்த உடைகளுமாய் ஒரு தடிமனான ஆள் பற்களைக் காட்டியபடி நின்றிருந்தான்.

        “யாரு வேணும்?”

        “நாந்தாங்க உங்க வீட்டுல வேலை செய்யிற மருதாயியோட புருசன். இன்னிக்குக் காலியில அஞ்சு மணிக்கு எங்களுக்கு ஒரு ஆம்பிளைப்பிள்ளை பொறந்திருக்குதுங்க. அதான் இஸ்வீட்டு குடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். உள்ளே வரலாங்களா?”

      “வாங்க, வாங்க. நீங்கதான மருதாயியோட புருஷனா?”

       தயாநிதியைப் பிடித்துத் தள்ளாத குறையாக உள்ளே வந்தான் மருதாயியின் புருஷன்.

       “அம்மா, அம்மா! மருதாயியோட  புருசன் வந்திருக்குது…”

       பட்டம்மா ஈரக்கையைத் துண்டில் துடைத்தபடி வெளியே வந்தாள்.

       “வாப்பா.”

       அவன் பற்கள் அத்தனையையும் வெளிப்படுத்தி இளித்தான். முகத்தில் பெருமை வழிந்துகொண்டிருந்தது.

        “இன்னிக்கு விடிகாலை அஞ்சு மணிக்கு எனக்கு ஆம்பளைப்பிள்ளை பொறந்திச்சுங்க. இந்தாங்க, சாக்கலேட்டு எடுத்துக்குங்க.”

         “ரொம்ப சந்தோசம்ப்பா. மருதாயி எப்படி  இருக்கா?”

         “நல்லாருக்குங்க. கவலைப்படும்படியா எதுவும் இல்லீங்க. கொழந்தையும் நல்லா இருக்குதுங்க. பருமனா, திடகாத்திரமா இருக்குது. என்னய மாதிரி மாநெறமா இருக்குதுங்க! மருதாயி மாதிரி கறுப்பு இல்லே.”

       தயாநிதி சட்டென்று தலை உயர்த்தி அவனை ஆழமாகப் பார்த்தான். மருதாயியின் கணவன் தன் கையிலிருந்த காகிதப் பொட்டலத்தைப் பிரித்து முதலில் பட்டம்மாவிடம் நீட்ட, அவள் அதிலிருந்து ஒரு மிட்டாயை எடுத்துக்கொண்டாள்.

       “என்னம்மா, நீங்க ஒண்ணே ஒண்ணு எடுத்துக்குறீங்க? கை நிறைய அள்ளிக்குங்க. … அட, எடுத்துக்குங்கம்மான்னா?” – அவன் விடாப்பிடியாகப் பட்டம்மாவின் கையில் ஐந்தாறு மிட்டாய்களை வைத்துவிட்டுக் கிருத்திகாவிடம் பொட்டலத்தை நீட்டினான். அவளும் அவனை வைத்த விழி விலகாது பார்த்தபடி இருந்தாள். அவளுக்கு அவன் ஐந்தாறு மிட்டாய்களைக் கட்டாயமாய்க் கொடுத்துவிட்டு, தயாநிதியிடமும் அவ்வாறே செய்தான். பட்டம்மா அடுக்களைக்குப் போனாள்.

        “வர்றேங்கம்மா…வர்றேந்தம்பி,” என்று சிரித்தபடி பின்னர் அவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுப் போனான். தயாநிதி அவனது முதுகை வெறித்துக்கொண்டிருந்தான். அவனுள் எதுவோ மலர்ந்து கொண்டிருந்தது.

        “கிருத்திகா! பார்த்தியா அவனோட சந்தோஷத்தை? என்னதான் சொல்லு. ஒரு குழந்தையைப் பெத்ததும் ஒவ்வொரு ஆணும் விளக்க முடியாத பரவசத்தை யடையறான், இல்லியா? நம்ம அப்பா கூட நாம ரெண்டு பேரும் – அதுலயும் அம்மாவோட முதல் பிரசவத்துல ரெட்டைக் குழந்தைகளா– பொறந்தப்ப அப்படியே பூரிச்சுத்தான் போயிருக்கணும். என்ன சொல்றே? என்ன இருந்தாலும் தகப்பன்கிற அந்த உணர்ச்சி ரொம்ப மேன்மையானதுதான். ஒவ்வொரு ஆணையும் அப்படியே பரவசப்படுத்தி விடக்கூடிய ரொம்பப் பெரிய உணர்ச்சி அது. இல்லியா?”

        தயாவின் குரலில் தெறித்த எதுவோ கிருத்திகாவைச் சிந்திக்க வைத்தது. அவள் பதில் சொல்லாமல், அவன் மேலும் பேசக்கூடும் என்று நினைத்தவள் போல், கண் கொட்டாது அவனைக் கவனித்தபடி இருந்தாள்.

        “அம்மா! அம்மா! இங்கிட்டுக் கொஞ்சம் வாயேன்,” என்று அவன் கூப்பிட, அவன் அம்மா அவனருகே வந்து, “என்னடா?” என்றாள்.

        “ரவுடி, ரவுடின்னு மருதாயியுடைய புருஷனைப் பத்தித் திட்டுவியே? தனக்கு ஒரு குழந்தை பொறந்ததும் அவன் முகத்துல ஜொலிக்கிற ஆனந்தத்தைப் பார்த்தியா! நீ என்னதான் சொல்லும்மா, எவ்வளவு மோசமான ஆம்பளையா இருந்தாலும் தகப்பன்கிற ஒரு ஸ்தானம் கிடைக்கிறப்ப, அவன் எப்படிப் பரவசப்பட்டுப் போயிடறான், பாரும்மா! நாங்க ரெண்டு பேரும் பொறந்தப்ப அப்பா இது மாதிரி ஸ்வ்விட், கீட் குடுத்துக் கொண்டாடினாரா?”

        பட்டம்மாவும் அவனை விந்தையான கண்களால் பார்த்தாள். கிருத்திகாவின் பார்வையில் தெறித்த அதே உணர்ச்சி அவள் பார்வையிலும் ததும்பி நின்றது.

        “ஓ! கொண்டாடினாராவது! பெரிய அமர்க்களமே செய்தாருடா. இருநூறு ஜாங்கிரி வாங்கியாந்து, தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, எதிர்ப்பட்டவங்கன்னு அன்னிக்குப் பார்வையில பட்டவங்களுக்கெல்லாம் விநியோகம் செய்தாரு.”

        தயாநிதியின் கண்களில் ஒரு கலக்கம் விளைந்ததைக் கவனித்து இருவரும் வியப்பெய்தினர்.

        “என்னடா? எதுக்குக் கேக்குறே?”

        “இல்லேம்மா. அப்பாவும், என்னதான் முரட்டு மனுஷரா யிருந்தாலும், நாங்க பொறந்த அன்னிக்கு சந்தோஷப் பட்டிருப்பாரில்ல?” – தயாநிதியின் குரல் அவனையும் மீறித் தழுதழுத்துவிட்டது. கிருத்திகாவின் முகத்தில் வியப்பும் வேதனையும் படர்ந்தன. அவள் சட்டெனத் தலை உயர்த்திப் பட்டம்மாவைப் பார்த்த போது, அவளும் கண்களில் வெளிப்படையாக வியப்புக் காட்டி நின்றாள். அவளும் கண நேர இடைவெளிக்குப் பிறகு சாடையாகக் கிருத்திகாவை நோக்கினாள்.

        “அண்ணா! அப்பா நாம பொறந்த அன்னிக்கு இனிப்பு விநியோகம் பண்ணினாருன்னு அம்மா சொல்றங்க. ஆனா அது எதுக்குன்னு தெரியுமா?”

        கண்களைத் துடைத்துக்கொண்டு, “எதுக்குன்னு சொல்றே, கிருத்திகா?” என்று தயாநிதி வினவினான். குரல் கம்மி இருந்தது.

        அவன் அம்மா அவளை முந்திக்கொண்டு பதில் சொன்னாள்: ”எதுக்கா? நல்ல கேள்வி கேட்டே, போ! தான் ஒரு ஆம்பளைங்கிறது நிரூபணமாயிறுச்சில்ல? அதைக் கொண்டாடத்தான் இனிப்பு விநியோகம் நடத்தினாரு, உங்க அப்பா! என்னைய வீட்டுக்குள்ளாறவே பூட்டி வச்சிருந்ததால நீங்க ரெண்டு பேரும் தன்னோட கொழந்தைங்கதான்னு சர்வ நிச்சயம் வேற அந்தாளுக்கு. … அதைத்தான் அப்படிக் கொண்டாடினாரு. தகப்பனான சந்தோஷமாவது, மண்ணாங்கட்டியாவது! மெனக்கெட்டு வந்து மிட்டாய் குடுத்துட்டுப் போறானே, அவன் தன்னோட ஆண்மையைக் கொண்டாடினானா, இல்லாட்டி கொழந்தையை நேசிக்கிறவனாங்கிறது போகப் போகத்தான் தெரியும்!”

        பட்டம்மா நிறுத்தியதும், கிருத்திகா தொடர்ந்தாள் “சாதாரணமா ஒரு தகப்பனுக்கு ஏற்பட்ற பாச உணர்ச்சியும் பரவசமும்தான் நம்ம அப்பாவுக்கும் ஏற்பட்டிருந்திச்சுன்னா, அந்தாளு என்ன செய்திருக்கணும்? நம்மை விட்டுப் பிரியாம இருந்திருக்கணும். நம்ம தேவைகளைக் கவசிச்சிருக்கணும். நமக்குச் சோறு போட அம்மாவுக்கு மாசாமாசம் கொஞ்சமாச்சும் பணம் குடுத்திருக்கணும். நம்மை விட்டுப் பிரிஞ்சதுக்கு அப்புறம், ஏம்பாவின்னு கேக்கலை. நாம இருக்கமா, செத்தமான்னு கூடக் கவலைப்படல்லே. ஒரு தகப்பனுடைய இயல்பான பாச உணர்ச்சி நம்ம அப்பாவுக்கு இருந்ததே இல்லே. அம்மா சொல்றாப்ல, தன்னோட ஆண்மை நிரூபணமாச்சுங்கிறதைத்தான் அவர் கொண்டாடினதா வச்சுக்கணுமே தவிர, ஒரு தகப்பன் ஆனதுக்கான சந்தோஷக் கொண்டாட்டம்னு அதை ஏத்துக்க முடியாது. நீயும் ஒரு ஆம்பளையா இருக்கிறதுனால அப்படி நினைக்கிறே போலிருக்கு!”

கிருத்திகாவின் கடைசி வாக்கியத்தால் பளாரென்று இதயத்தில் அடிபட்டு அவன் தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.           

 

Series Navigationநாமென்ன செய்யலாம் பூமிக்கு?‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *