பெண்பால் ஒவ்வாமை

This entry is part 7 of 38 in the series 10 ஜூலை 2011

பசுவுக்குப் பூஜை
பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்
தொல்காப்பியன் அறியாத
பால்வேற்றுமை

என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு  வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான  பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற  அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும்  எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும்  ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.  இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும்  செய்திகள் ஒரு மாஃபிய கும்பலின் அதிகார வளையத்திற்குள் மருத்துவமும்  சிக்கிக்கொண்டு விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சொத்துடமை சமுதாயம் ஒவ்வொரு ஆணுக்கும் தன் உதிரத்தில் உதித்த  வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துடமையாக வேண்டும் என்ற எண்ணத்தில்  திருமண உறவு, பெண்ணுக்கு கற்பொழுக்கம் என்று சில சமூகக்கட்டுப்பாடுகளை  ஏற்படுத்திய போதும் கூட பெண்பால் ஒவ்வாமை வளர்த்தெடுக்கப்படவில்லை.  போரில் ஆண்களை இழப்பதும் சிசு மரணங்களும் மிகவும்  அதிகமாக இருந்தக் காலத்தில் ஒரு பெண் ஆண்குழந்தையைப் பெற்றெடுப்பது  அவளுக்கான கட்டாயமாக மட்டுமல்ல சமூகத்தின் தேவையாகவும்   இருந்திருக்க முடியும். அதிலும் குறிப்பாக அதிகார வர்க்கத்தில்,  அரச குடும்பங்களில் ஆண்வாரிசைப் பெற்றெடுக்கும் கட்டாயம் அரசிக்கு இருந்திருக்கும்.  இதுவே கூட அரசனின் மனைவியரின் அந்தஸ்த்தை நிர்ணயித்திருக்கும்.

பால் அழித்தல் என்பதும் பால் மாற்று அறுவைச்சிகிச்சையும் இக்கருத்துகளின்  பின்புலத்தில் நடந்தேறி இருக்கின்றன. குறிப்பாக சீனத்தில் இப்பழக்கம் குறித்த வரலாற்று பதிவு கி.மு. 8ஆம் நூற்றாண்டுவரைப் பின்னோக்கிப் போகிறது. அதற்கும் முன்னரே இப்பழக்கம் வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்றே அப்பதிவு காட்டுகிறது. இவர்கள் நபுஞ்சகர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆண்பால் அழித்தல்/ அறுவைச்சிகிக்கை மூலம் ஆண்பால் உறுப்புகளை அகற்றப்பட்டவர்கள் தான் நபுஞ்சகர்கள்.

தாய்மையடையக்கூடிய பெண்கள் இருக்கும் அரசனின் அரண்மனையில் வேறு எந்த ஆணுடைய விந்தும் விழுந்து எந்தப் பெண்ணின் கருமுட்டையிலும் கலந்து துளிர்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதையும் மீறி சிநேகங்கள் உருவான கதைகள் பல உண்டு. ஆனாலும் கரு உருவாக முடியாது என்பதால் அரசனின் வாரிசு தூய்மை பேணப்பட்டது எனலாம்.

மிங்க் முடியாட்சியில் மட்டும் 70,000 ஆண் குழந்தைகளுக்கு பால் அழிப்பை அறுவைச்சிகிச்சை மூலம் செய்திருக்கிறார்கள்! இந்த அறுவை நிபுணர்கள் அறுவைச்சிகிச்சையை பரம்பரை பரம்பரையாக குடும்பத்தொழிலாகவே செய்துவந்திருக்கிறார்கள். நரம்புகளை மரக்க வைக்கும் மூலிகைக் கஷாயங்கள் கொடுத்து உறுப்புகளை மிளகுக்கலந்த சுடுநீரால் கழுவுவார்களாம். ஆணுறுப்பை முழுக்க அறுத்தெறிவது ஒரு வகை, பீஜக்கொட்டை மட்டும் அகற்றப்படுவது இன்னொரு வகை என்று இரண்டு வகையான அறுவைச்சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. இந்த அறுவையின் போது நிறையபேர் இறந்தும் போயிருக்கிறார்கள். இதெல்லாமே ஆண் தன் சொத்துடமைக்கு வாரிசாக தன் உதிர வழி வாரிசு மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற எண்ணத்தின் உச்சக்கட்டம்! அரண்மனையில் மற்ற வேலைகள் செய்ய ஆண்களும் வேண்டும் அதே நேரத்தில் எங்காவது அந்த இருட்டில் ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் விளைவு தான் ஆண்பால் அழித்த நபுஞ்சர்களின் வரலாறு. 19 ஆம் நூற்றாண்டில் சீனத்தில் போய் வசித்த ஆங்கிலேயர் மூலம் தான் வெளியுலகுக்கு சீனாவின் இந்த வழக்கம் தெரியவந்தது.

ஆண்பால் அழிப்பு அன்று நடந்ததற்கு எப்படி சொத்துடமை வாரிசுடமை காரணமாக இருந்ததோ அதன் இன்னொரு பக்கம் தான் பெண் சிசுக்கொலை, பெண்கருவை அழித்தல், அண்மையில் கழிவோடையில் கண்டெடுக்கப்பட்ட பெண்கரு அழிப்புக்குவியல்கள், இப்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆண்குழந்தைகளாக மாற்றும் அசிங்கம், அருவெறுப்பு…

மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இதற்கெனவே புகழ்ப்பெற்ற 7 அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள் . ஓராண்டுக்கு இதுவரை 200 முதல் 300 வரை இம்மாதிரி அறுவைச்சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களிலிருந்து இதற்காக செல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை 8 விழுக்காடு. இதற்காகும் செலவு 1.5 இலட்சம். ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணத்திற்கு சீர்வரிசையாகக் கொட்டிக்கொடுக்கும் செலவுடன் ஒப்பிட்டால் இந்த அறுவைச்சிகிச்சைக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்றும் அந்தச் செய்தி பதிவு செய்துள்ளது.

இச்செய்தி வெளிவந்தவுடன் குழந்தைகள் நலன் காக்கும் பிரதமரின் அலுவலகம், இந்திய மருத்துவக் கழகம், மத்திய பிரதேசம் அனைத்தும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன. பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆணாக மாற்றும் போது அப்படி மாற்றப்பட்ட ஆண், ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இக்கருத்து இன்னொரு சந்தேகத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் ஆண்வாரிசை விரும்புவதன் அடிப்படை நோக்கம் தன் வம்சாவளி விருத்தியும் அது தொடர வேண்டும் என்ற ஆசையிலும்தான்.

செயற்கை குழாய்வழி குழந்தை ஜனிக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் பெண் வழி வாரிசுகளை தங்கள் வாரிசுகளாக ஏற்றுக்கொள்ள அறிவார்ந்த சமூகமும் முன்வரவில்லை . எனவே பெண் குழந்தையை ஆண் குழந்தையாக்கி தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டத்துடிக்கும் பெற்றோர்கள் அப்படி மாற்றப்பட்ட ஆண் வாரிசால் தன் வம்சம் தளைக்கும் வாய்ப்பில்லை என்றால் அவர்கள் இந்தப் பால் மாற்று அறுவைச்சிகிச்சையை செய்வார்களா? அவர்களின் நோக்கம் நிறைவேறாத போது இந்த அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இந்தச் செய்திக்கு எதிர்வினையாக வைக்கப்பட்டிருக்கும் இக்கேள்வி மிகவும் கனமானது. மிகவும் யோசிக்க வைப்பதும் கூட.

மற்றபடி, பிறப்பிலேயே சில பெண் குழந்தைகளின் உடல் உறுப்பில் ஆண் குழந்தைகளின் அடையாளம் காணப்படுவதுண்டு.
(a child with abnormal or ambiguous genitals. A girl may be born with a noticeably large clitoris giving impression of a penis or lacking a vaginal opening. A boy may be born with a notably small penis or with a scrotum that is divided so that it looks like labia, a part of female sexual organ)
எனவே வளர்ந்தப் பின் அக்குழந்தைக்கு ஏற்படும் பால் வேற்றுமை குழப்பம் தீர்க்கவே பால் மாற்று அறுவைச்சிகிச்சைகள் (genitoplasty)நடக்கின்றன என்கிறார்கள்

பால்மாற்று அறுவைச்சிகிச்சையில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் டாக்டர். எஸ்.வி. கோட்வால் “ஒரு குழந்தைக்கு இம்மாதிரியான பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்வது சாத்தியமே இல்லை” என்று உறுதியாகச் சொல்கிறார்.

இக்கருத்துகளை எல்லாம் முன்வைத்து பார்க்கும் போது எனக்குச் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. குழந்தைகளுக்குச் செய்ய முடியுமா ? செய்ய முடியாதா? என்ற கேள்விகளை மருத்துவர்கள் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும்.

*இம்மாதிரி அறுவைச்சிகிச்சைக்கு தங்கள் பெண் குழந்தைகளை எடுத்துச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் வரலாறு. ஒருவேளை அவர்களுக்கு வாரிசை வளர்த்தெடுக்க ஏற்கனவே ஆண்குழந்தை இருந்தால், நமக்கெதற்கு இந்தப் பெண் குழந்தையை வளர்க்க வேண்டிய சிக்கல்? என்று எண்ணி ஒன்றரை இலட்சத்தில் தங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முன்வருகின்றார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

* இந்த அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் உடல் ரீதியான பால் உறுப்பு சம்பந்தமான குறைபாடுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்தூர் மருத்துவமனைகளில் இருக்கின்றனவா?

* ஓராண்டில் சற்றொப்ப 200 முதல் 300 அறுவைச் சிகிச்சை நடக்கிறது இந்தூரில் என்றும் புதுடில்லியில் இருக்கும் சர்.கங்காராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 2 முதல் 5 வரை இம்மாதிரியான குறைபாடுகளுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் செய்திகள் சொல்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களின் வரலாறு என்ன? இக்குறைபாடு அண்மையில் அதிகரித்திருக்கிறதா? எந்தப் பகுதியில் வாழ்ந்த/பிறந்தக் குழந்தைகளுக்கு இக்குறைபாடு பொதுவாக அதிகமாக இருப்பதாக தெரிகிறது? இக்குறைபாட்டின் காரணம் என்ன? மூலம் என்ன? பரம்பரை வியாதியா?

சமூகத்தின் மீது அக்கறைக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இம்மாதிரியான ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. கத்தரிகாயிலிருந்து பூச்சி மருந்து வரை உலகக் கண்டு பிடிப்புகளின் சோதனைக்கூடாமாகி விட்டது இந்தியச்சந்தை. இப்போதெல்லாம் நம் மனித வளம் வெள்ளை எலிகளுக்கு மாற்றாக மாற்றப்பட்டிருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது .

ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் மும்பையில் 1000 : 874 டில்லியில் 1000 : 866. சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தற்போது இந்தியாவில் பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளின் எண்ணிக்கை 7 மில்லியன் அதிகம்! என்ற புள்ளிவிவரமும் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்து என்னை அலைக்கழிக்கிறது.

எங்கேயோ ஏதோ ஒரு மூலையில் என்னவொ நடக்கிறது ….
நடந்ததும் நல்லதாக இல்லை
நடப்பதும் நல்லதாக இல்லை
நாளை.. ?

——–

துணை நின்ற பதிவுகள்:

Hindustan Times , 26/6/11

Asian Tribune , 27/6/11 by R Vasudevan

பால் அழித்தல் – சிங்கை ஜெயந்தி சங்கரின் கட்டுரை,
இருவாட்சி பொங்கல் மலர் 2, 2010

Series Navigation“கானுறை வேங்கை” விமர்சனம்தாய் மனசு
author

புதிய மாதவி

Similar Posts

3 Comments

  1. Avatar
    charusthri says:

    Excellant!So far nobody has touched this topic in this critical way!As you said nadandhadhu nanraaga illai

  2. Avatar
    puthiyamaadhavi says:

    do u notice that Times of India, Mumbai edition
    is covering the news of mumbai metro regarding the same issue. Ultra sound &Fury over Girl child, BMC ups heat on ‘stung ‘ doctors & Crush old attitudes to fix skewed sex ratio etc etc

  3. Avatar
    charusthri says:

    Have you read Samudrams novel VAADamalli? In that author wrote everything in detail how male organ is cut to makeSuyambu the hero as woman.That is really horrible.

Leave a Reply to charusthri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *