பெரியம்மா

author
3
0 minutes, 7 seconds Read
This entry is part 38 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012
ரிஷ்வன்
ஏதோ பொத்தென்று என் மேல் விழ போர்வையை விலக்கி என்னவென்று  பார்த்தேன்… அணில் ஒன்று ‘கீச் கீச்’ என்ற சத்தத்தோடு ஜன்னல்  திரையை  விலக்கி வந்த வழியே ஓடியது என் கண்ணில் பட்டது…  என் போர்வையிலோ பாதி தின்ற கொய்யாப் பழம் விழுந்து  கிடந்தது…  என்ன  நடந்தது  என்று  என்னால்  ஓரளவு  ஊகிக்க  முடிந்தது… ஜன்னலோடு  ஒட்டிய  வேப்ப மரத்திலிருந்து  அணில்  உள்ளே  நுழைய  அந்த நேரம் பார்த்து காற்று  பலமாய்  அடித்திருக்க வேண்டும்…  காற்றிலே திரைச்  சீலையும்  ஜன்னல்  கதவும் ‘பட்  பட்’ அடித்துக்கொள்ள  அணில்  பயந்து,  என்  மீது  கொய்யாப்  பழத்தை  தவற விட்டு  சென்றிருக்க  வேண்டும்.

இப்பொழுதெல்லாம்அணில் தான் எனக்கு ஒரு தோழனாய்.. ஒரு தோழியாய் இருந்து வருகிறது. அது செய்யும் சேட்டைகளைப் பார்ப்பதிலும்   ரசிப்பதிலும்  எனக்கு பொழுது கழிகிறது.  வேப்ப மரத்திலிருந்து காற்று  ரம்மியமாய்  வீசியது… வேப்பமரக்  காற்றுக்கே ஒரு தனி மகோத்துவம்  இருக்கத்தான்  செய்கிறது… அதுவும் அதிகாலை  என்றால்  சொல்லவும்  வேண்டுமா  என்ன… பறவைகளின்  கீச் கீச்  ஒலியும்… அவை ஒன்றுக்கொன்று கொஞ்சி மகிழ்வதும்  உரசி  கொள்வதும்  அன்பை  பரிமாறிக் கொள்வதையும்  தங்களுக்குள்ளே சண்டை  போட்டுக் கொள்வதையும்  பார்த்துக்  கொண்டே  இருக்கலாம்.

அந்த அணில்  என்னையே  மரத்திலிருந்து உற்று உற்று பார்க்கிறது…தவற விட்ட கொய்யாப் பழத்தை நான்  திருப்பி தருவேன்  என்றோ..  இல்லை..  அதை  நானே  சாப்பிட்டு  விடுவேனோ என்றோ… ஏதோவொன்று  அது  பார்க்கும் பார்வையில்  தெரிந்தது. அதற்குள்  இன்னொரு அணில் எங்கிருந்தோ வந்தது.  அது  பெண்  அணிலாய்  இருக்க வேண்டும் என்னைப்  பார்ப்பதை நிறுத்தி விட்டு…  அது பெண் அணிலைத் துரத்த  ஆராம்பித்து  விட்டது… பார்க்கவே பரவசமாய்  இருந்தது.. அவை  ஒன்றுக்கொன்று சண்டை போட… அந்த  பெண்  அணில்  ஆண் அணிலின்  காதில் ஏதோ கிசுகிசுக்க.. அது  ஓட அதன்  பின்னால் இது   ஓட.. சற்று  நேரத்தில்  கண்ணில்  இருந்து  மறைந்து  விட்டது….

இந்த  மாடியில் இருந்து  பார்க்க….  தெரு காம்பவுண்ட் சுவர்  தெளிவாய்த்   தெரிந்தது… தெருவின்  மின்  கம்பத்தை  நாய்  ஒன்று  அசுத்தம்  செய்து  கொண்டிருக்க… அடுத்த வீட்டுப்  பெண்       தெருவில்  கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.  வீட்டைச் சுற்றி வேப்பமரம் தென்னை மரம் கொய்யாமரம்  மல்லிகை கொடியும்  முல்லை.. .கணகாம்பரமும் பூத்துக் குலுங்கி நறுமணத்தைப்  பரப்பியது  வண்ணத்துப் பூச்சிகள்  பூக்களை  ரீங்கரமிட்ட வண்ண்ம் இருக்க… பூக்களோ  வண்ணத்துப்  பூசசிகளைக்  கவர தங்களின்  நறுமணத்தை  காற்றில்  தவழ விட்டபடி இருக்க… எனக்கோ  அது  தினமும்  பார்க்கும்  காட்சிகள்  என்றாலும்  ஒவ்வொரு  முறை பார்க்கும் பொழுதும் புது அனுபவமாய்  இருந்தது.

மரம் செடிகளின் மேல் எனக்கு பொறாமை பொறாமையாய் வந்தது… எதோ வளர்கிறது.. பூ பூக்கிறது.. காய்.. கனியாகிறது.. அதற்கு பின்… அதன்  கனியிலிருந்து வரும் விதை.. மறுபடியும் மரமாகிறது… தாய் மரத்திற்கும்.. தாய்ச் செடிக்கும்.. பிள்ளை  மரத்திடமோ… பிள்ளைச் செடியிடமோ.. அன்பு  பாசம் அரவணைப்பு.. எதுவும்  காண்பிப்பதும்  இல்லை… நாமும்  மரமாய்  பிறந்திருக்கக்  கூடாதோ… மனிதர்களாக  பிறந்து  அன்பு பாசத்திற்கு  அடிமையாகி இப்படி அவஸ்தைப்  பட வேண்டாமே…
இதென்ன… அதிசயமா…. என்றைக்கும் இல்லாத திருநாளாய் இன்றைக்கு காலையிலே… இட்லி, வடை, பால் பாயசம், கேசரி  எல்லாம்  தட்டில் வைத்து   கொடுத்த்து விட்டு அலமு போறாளே.. வீட்ல ஏதாவது விஷேஷமா… அதெப்படி  எனக்கு தெரியாமால் போகும்… வீட்டுக்கு  பெரிய  மருமகள்   நான் இருக்கும் போது.. என்னை கேட்காமல் அவள் எப்படி  இதை எல்லாம் செய்வாள்.. அவளையே கேட்டேன்…  இன்றைக்கு ஏதாவது விஷேஷமா என்று..

அப்புறம் தான் அலமு சொன்னாள் .. எனக்கு பிறந்த நாளாம்…  அதுவும்  ஐம்பதாவது  பிறந்த நாளாம்….   அட… அது  கூட  எனக்கு  எப்படி மறந்து போயிற்று…  என்னைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது… இப்பொழுதுதான் இந்த  வீட்டுக்குள்  புகுந்த  மாதிரி தோன்றியது… அதற்குள்ளே எப்படி  முப்பது  வருஷம்   சென்றது  என்றே எனக்குத் தெரியவில்லை.. எனக்கு  இருபது வயதிருக்கும்,  புத்தம் புதிய  மஞ்சள் புடைவையை கட்டிக்கொண்டு … கழுத்தில  புது மஞ்சள் தாலியோட இந்த வீட்டுக்கு நுழைந்தேன், அப்போதெல்லாம்… இப்பொழுது  இருக்கிற  இந்த  மாடி வீடு இல்லை…  சின்ன  ஓட்டு வீடுதான்,  நடுவில் முற்றம்… சுற்றிலும் மரத்தூண்கள் நான்கு  மூலையிலும்  வீட்டைத் தாங்கி  பிடித்தபடி  இருக்கும்…  கிழக்கு பார்த்த மாதிரி  வீடு, வெளி  வாசலில் இருந்து பார்த்தால்…  தோட்டத்தில்  நான்  கிணற்றில்  தண்ணீர் இறைப்பதை பார்க்கலாம்.  தெருவில்  இருந்து  கண்ணை  கட்டிக் கொண்டு நடந்தால்.. புழக்கடைக்கு தடுக்கி விழாமல் போய விடலாம் ..  நான்  தண்ணீர் இறைந்து கொண்டே.. வெளியில  யார்  போகிறார்கள்  வருகிறார்கள்  என்று  பார்த்துக்  கொண்டே  இருப்பேன்…  அப்போழுதெல்லாம் டிவி  எல்லாம் கிடையாது…  எப்பொழுதாவது சிலோன்  ரேடியோவில  பாட்டு மட்டும்  கேட்பேன்…  பாட்டு என்றால் எனக்கு  உயிர்.. அதுவும்  இளையராஜா  பாட்டென்றால் எனக்கு மிகவும் இஷ்டம்…

ஓடிப் போன  அந்த  பெண்  அணில் மேலே  உள்ள உள்ள  கிளையில்.  இலைகளின் மறைவில்  பின்  பக்கமாய்  பார்த்து அமர்ந்து கொள்ள.. சமிக்ஞை கிடைத்த  சந்தோஷத்தில் ஆண்  அணில் வேகமாய் அதைப் பின்தொடர்ந்து அதன்  மேல் அமர்ந்தது…

முற்றம் பெரிதாக இருக்கும்,  மழைக்காலம் வந்துவிட்டால் போதும்.. மழை  சோ  சோன்னு கொட்டி… ஒரே  சத்தமாய்… பேய் இரைச்சலோடு… ஓட்டின் வழியே  மழைத் தண்ணீர் கலந்து.. ஒரு சிற்றருவியாய்  முற்றததின் நான்கு திசைகளிலும்  ‘சர் சர்’ என்று  தண்ணீர் விழும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  அந்த  மழை  நீரை அண்டா குண்டாககளில்  சேமித்து வைத்து  இரண்டு மூன்று நாள்  நீர்த்  தேவையை  பூர்த்தி  செய்து  விடலாம்… அவையும்  நிறைந்து விட்டால் தண்ணீரைப் பிடிப்பதற்க்கென்றே ஒரு  பெரிய  சிமெண்ட் தொட்டி அந்த முற்றத்தின் ஒரு ஓரத்தில் இருந்தது… மழைக்காலம்  வந்துவிட்டால் அடுத்த  இரண்டு  மூன்று  நாளுக்கு  தண்ணீர் இறைக்கும் வேலை மிச்சமாகும்…

இப்போதோ அந்த ஓட்டு வீடு… ஒரு  பெரிய  மாடி  வீடாக  மாறியிருக்கிறது…  அப்போது இருந்த முற்றம் இல்லை…  அது தான்  தற்ச்சமயம்  ஹாலாக மாறி இருக்கிறது, ஹாலின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய படுக்கை  அறை… வீட்டின்  உள்ளேயே  மாடி ஏற படிக்கட்டு.. இப்பொழுது   நான்  இருக்கும் மாடி அறைக்கு அதன் மூலம் தான் வர முடியும்  மாடி அறையை விட்டு வெளியே  வந்தால்… மொட்டை  மாடி தான்…

நான்  இந்த  வீட்டிற்க்கு  வந்த  அதிர்ஷ்டம் தான் ஒட்டு வீடு இவ்வளவு பெரிய மாடி வீடாக மாறியது  என்று  எல்லாரும்  சொல்வார்கள்.. அந்த சமயத்தில்  ஊரிலே  இந்த  வீடுதான்  பெரிதாக இருக்கும்… எல்லாரும்  அதிசயாமாய்  வீட்டைப்  பார்த்திட்டு  போகும்போது  பெருமையாய்  இருக்கும்
எனக்கு

சின்னவயசிலே  நான்  அழகாஇருப்பேனாம்…  என் அத்தை  அடிக்கடி  சொல்வாங்க…  நான்  ஆறாவது      படிக்கும்  போதே  பெரியவாளாயிட்டேனாம், எட்டாவது படிக்கும் பொழுது, பெரிய  பொண்ணா  ஆயிட்டேனாம்.. என்னுடன்  படிக்கும்  தோழிகள்  எல்லாம் பாவாடை சட்டையோடு ஸ்கூல்லுக்கு வர.. நான் மட்டும் தாவணி போட்டிருந்தேன்… எனக்கு  அப்பொவெல்லாம்  வெட்கம்  வெட்கமா இருக்கும்.

அதனால் தானோ.. என்னவோ…எனக்கு பதினெட்டு வயதிலே திருமண  பேச்சு  ஆரம்பிச்சு… இதோ இந்த வீட்டுக்கு மருமகளா  காலடி எடுத்து வச்சது.. இன்னிக்கும் என் கண் முன்னே அப்படியே நிக்குது.
‘ரஞ்சனி….இங்க கொஞ்சம் வாயேன்…’ அவர் அப்படி தான் என் பேரைச் சொல்லி கூப்பிடுவார்… என்னுடைய முழுப் பேரு சிவரஞ்சனி… எனக்கு தெரிஞ்சி  ஸ்கூல்  அட்டடன்ஸ் எடுக்கும் போது  டீச்சர்  மட்டும்  தான்  அந்த  பெயரை சொல்லி கூப்பிடுவாங்க … அம்மா எப்பவும்  அம்முன்னு தான் கூப்பிடுவாங்க…. அப்பா பேரச்சொல்லியே கூப்பிட்டதே இல்ல… அவர் எப்பவும் பெரியவளேன்னு தான் கூப்பிடுவார்.

அதுக்கு ஒரு காரணமும் இருந்தது… நான் பொறந்து  ரெண்டு வருஷம் கழிச்சி.. எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா பொறந்தா…  தங்கச்சிய சின்னவளேன்னு கூப்பிட்டதாலேயோ என்னவோ என்ன அப்படித்தான் கூப்பிடுவாரு.

‘சிவராமா…..சிவராமா ‘  அத்தை அப்படித்தான் அவர் பேரச் சொல்வாங்க … அதுதான்  என்  வீட்டுக்காரு பேரு….  அது என்னமோ தெரியல…  அந்த பேரு  மேல  எனக்கு  எப்பவும்  ஒரு கிறக்கம் உண்டு… ஏன்னா…  அந்த  பேருலேயே   சிவனும் ராமனும் சேர்ந்து  இருக்கறதாலையோ என்னவோ  எனக்கு  எப்படின்னு சொல்லத் தெரியல

எனக்கு சின்ன  வயசிலே ஒரு ஆசை இருந்தது…எங்க  ஊர்ல ப்ரெசிடென்ட்   ஒருத்தர்  இருப்பார்… அதான் ஊரு பஞ்சாயத்து தலைவர் …  அவர்  வெள்ள வெளேறேன்னு வெட்டி  சட்டை.. கடா  மீசையோட… பைக்கில போற  வரத  பார்த்த்திலிருந்து… எனக்கும்  அவரைப்போல  தான்  புருஷன்  வரணுமின்னு மனசுல அடிக்கடி தோணும்…

அந்த அளவுக்கு இல்லாம போனாலும்… ஓரளவு சின்ன கிராப் வச்சி… கொஞ்சம் கிருதாவோட… கம்பளிப் பூச்சி மாதிரி மீசை வச்சி இவர்  இருக்க… பார்த்த  உடனே  எனக்கு  பிடிச்சிப்  போச்சி… உடனே சரின்னு சொல்லிட்டேன்…

என்ன எப்பவும் ரொம்ப  அதிர்ஷ்டசாலின்னு  தான்னு  அவர்  சொல்வார்…  என்ன  கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் தான் ஸூப்பர்வைசரா இருந்தவர் .. மேனேஜர்  ஆகிட்டாராம்… அப்புறம்… வசதி பெருகிடுச்சி… ஓட்டு  வீடு… மச்சு  வீடும் ஆயிடுச்சி…  வாழ்க்கை  ஜம்முன்னு  தான்  போயிட்டு இருந்தது…

ஆனா…. நாள் ஆகா ஆகா என்னோட அத்தைக்கு மட்டும் என்ன பிடிக்கறதே இல்லை… அன்னிக்கு ஒருநாள்.. சொல்ல  மறந்திட்டேன்… அத்தை அவர  தனியா கூப்பிட்டு என்ன சொன்னாங்க தெரியுமா…

‘டேய்… சிவா…. உனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சி… எனக்கோ வயசாயிடுச்சி… இன்னும்  எவ்வளவு நாள் இருப்பேன்னு  எனக்கு தெரியல….பேரனையும் பேத்தியையும் கொஞ்சனும்  போல  இருக்க.. அதனால ….’

‘அதனாலா… என்னம்மா …’

‘நீ … வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்…’

‘அதெப்படிம்மா… ரஞ்சனி  இருக்கும் போதே… எதுக்கு இப்ப அவசரப் படுறே.. எல்லாம் நடக்கும் பொது நடக்கும்…’

‘இல்ல சிவராமா.. நானும்  நிறைய  ஜோசியக்காறன  பார்த்துட்டேன்.. உனக்கு ரெண்டாம் தாரத்துக்குதான்  கொழந்த பொறக்குமாம்… சொல்றத கேளுடா…’
அப்புறம் அவர் என்ன சொன்னார்ன்னு  எனக்கு  சரியா  கேக்கல…  எங்க  கேக்கறது… அத்தை  அப்படி சொன்னதும் எனக்கு தலையிலே இடி விழுந்த  மாதிரி ஆயிடுச்சு… என்ன பண்றது.. என்ன  அதிர்ஷசாலின்னு   சொன்ன  அத்தையா  இப்படி சொல்றாங்க… எனக்கு  நெஞ்சே  வெடிச்சிடும்  போல  இருந்துச்சி…. எல்லாம் என் தலை எழுத்து… ஏற்கனவே  பக்கத்து  வீட்ல  இருக்கிற  காமாட்சி…  எதிர்வீட்டு கற்பகம்… எல்லாரும் என்ன… மறைமுகமா இதையே வேறுவிதமா சொல்லி கரிச்சி கொட்டறாங்க… எந்த நல்லது  கெட்டதுக்கும் என்ன கூப்பிட கூட  யோசிக்கிறாங்க   இப்பவெல்லாம்… எனக்கு  ஆதரவா  இருந்த  புருஷனே  அம்மா  பேச்ச கேட்டு மாறிடுவாரோன்னு மனசுல எல்லா சாமியையும்  வேண்டிக்கிட்டேன்..

நானும் சுத்தாத கோவில் இல்ல…….பாக்காத வைத்தியம் இல்ல… என்ன  பண்றது… எல்லாம் நம்ம கையிலா இருக்கு.. ஆண்டவன் விட்ட வழி… எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும்… ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு… என் வேலையை செய்ய ஆரம்பிச்சுட்டேன்…என்  போறாத  காலாம்  எல்லாம்  என்ன  மீறி நடந்துப் போச்சி…

அப்புறம்தான்… அலமு வந்தா.. அலமு யாருன்னு சொல்லவே இல்லையே… அவ வேற யாரும் இல்ல… என் கூடப் பொறந்த தங்கச்சி தான்… கூடப்  பொறந்தவளே சக்களத்தியா வந்தா.. அதுல  ஒரு  சௌகரியம்  இருக்கத்தான்  செய்தது

எங்களுக்குள்ள போட்டியும்… பொறாமையும்…வர்றது  இல்ல… அப்புறம்…  ஒருத்தர் துணியையும்  நகையையும்  மாத்தி போட்டுககலாம்… வேலைக்கு  ஒத்தாசையாய் இருக்கலாம்…வேறோருத்தியா  இருந்தா… அவ வேலைய நம்மால செய்ய மனசு வருமா… கூடப்  போறந்தவளாச்சே… அவ  வேலையையும் இழுத்துப்  போட்டு செய்யலாம்… இப்படி பல வசதி… ஆரம்பத்துல அப்படித்தான் என் மனசுல தோணி… என்ன  நானே  சமாதானம்  பண்ணிக்கிட்டேன்…

சொல்லி வச்ச மாதிரியே… அவ வந்த பத்தாவது  மாசமே…  ரோஹிணியை  பெத்து கொடுத்திட்டா…  பெத்தது என்னமோ அவதான்… ரோஹிணிக்கு  பால் மட்டும் தான் நான் கொடுக்கல… மத்தபடி சீராட்டி… குளிப்பாட்டி… சோறூட்டி.. வளத்தது… இந்த கையால தான். அவ..  அம்மா..  அம்மான்னு…  பெத்தவள்  அழைச்சத  விட…  பெரியம்மா…  பெரியம்மா… என்ன  தான் சொல்லி அழைச்சது அதிகம் … அவ்வளவு  பாசம் என்மேல…

அந்த பாசத்த வச்சியே அலமு என்ன அவகூட இருந்து பிரிச்சிட்டா… அவர்  கூட பேசவோ ஏன் பாக்க கூட விடறது இல்ல… ரோஹிணியை  என்கிட்டே  கொடுத்திட்டு  அவர் கூட ஊர் சுத்த கிளம்பிடுவா… புருஷன  எப்படி  மயக்கினாலோ எனக்கு தெரியல.. அவர் வீட்ல இருந்தாவே … எனக்கு  தோட்டத்து வேல கொடுத்திட்டு அவர பாக்க விடாம சதி பண்ணிடுவா…
வெக்கத்து  விட்டு ஒண்ணு சொல்றேன்  நான்  அவர  பாக்கணும்மின்னு  தோணுச்சினா… தோட்டத்தில துணி காய வைக்கிற சாக்கில… அவர் கெளம்பும் போது தூரத்தில இருந்து பாத்துக்குவேன்…  எதோ   கொழந்தாயையாவது  என்கிட்டே தராளேன்னு  நான்  என்னையே  ஆறுதல்  பண்ணிக்குவேன்..  ஆனா விதி யாரை  விட்டது… அதுக்கும் வெட்டு விழுந்தது…  அது எப்படின்னா..

ரோஹிணிக்கு பத்து வயசு இருக்கும் போது… அவள  ஸ்கூல்க்கு  அழைச்சிட்டு  போனேன்… அப்ப என்னாச்சின்னா… எவனோ கட்டையிலே போறவன்… என்ன ஸ்கூட்டர்ல இடிச்சிட்டு போய்ட்டான்… அப்ப  மண்டையிலே  நல்லா  அடிவிழுந்து ரத்தம் ரத்தமா போய்டுச்சி…  அலமு  தான் என்ன  பக்கத்துல  இருந்து  கவனிச்சிக்கிட்டா… அப்பாதான் தெரிஞ்சுது… அவ  எனக்கு தங்கிச்சியா இருந்தது  நான்  செய்த புண்ணியம்னு…

அதுக்கப்புறம்  ஒரு  நாள்  அலமு  கூட கோவிலுக்கு போனேன்… எப்பவாவது  என்ன கோவிலுக்கு அவர் இல்லாதபோது துணைக்கு கூப்பிடுவா…

‘பெரியம்மா…   பெரியம்மா… நானும் வரேன்னு’   என்  கூட  ரோஹினியும் வந்தா…

அப்ப … தெருவில போற வர்ர  ஸ்கூட்டர்காரனை பாத்தாவே  அடீக்கப்  போயிட்டேன்னாம்.. அது  மட்டும்  இல்லாம  தெருவில  ஸ்கூட்டர்ல  யார்  போனாலும் கல்ல எடுத்திட்டு அடிக்கப் போறேன்னு… அதுக்கப்புறம் என்ன வெளியே யாரும் கூட்டிட்டுப் போறதே இல்ல… அதுகூட பரவாயில்ல..

யாரும் என்கூட பேசறதும் இல்ல… எனக்கு  பேச்சு  துணைக்கு  கூட  இருந்த அத்தையும் ஒரு நாள் போய்ச் சேர்ந்திட்டாங்க…
ரோஹிணியையும் என் கூட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டா… அதுமட்டுமா  அந்த ஊர்லே படிக்கக் கூடாதுன்னு எங்கேயோ தூரத்துல போய்
சேர்த்துட்டாங்க…

எனக்கும் இந்த அறையையும் ஒதுக்கிட்டாங்க… இப்படி  எல்லா  உறவும்  எனக்கு இருந்தும்… தனியா அல்லாடரேனே… இப்ப  சொல்லுங்க..  அவ  கூடப் பொறந்த தங்கச்சியா  இருந்தும்  சக்களத்தி  புத்திய  காமிசிட்டாளா இல்லையா…  அப்ப இருந்து இந்த ரூமே கதின்னு இருக்கேன்…  அப்புறம்  ரோஹினியும் வளர்ந்து கல்யாணம் பண்ணிகிட்டா…

ஆங்… சொல்ல மறந்திட்டேன்…. ரோஹிணிக்கு பொண்ணு பொறந்திருக்காம்…. அலமு தான் சொன்னா… கார்ல  என்ன  பார்க்க  வரலாம்.. அவ  காரெல்லாம்  ஒட்டுராளாம்  இப்ப… ஆம்பள மாதிரி… அமெரிக்கா  எல்லாம்  தனியா  போயிட்டு வந்தாவளாம்…. கார் வர்ர சத்தம் கேக்குதே… அவ தான் புருஷனோட வந்திட்டாப் போல.. எனக்கு  ரோகினியை வளர்த்த  மாதிரி அவ கொழ்ந்தையையும் நானே  குளிப்பாட்டி,  பவுடர் பூசி…  தலையில பூ வச்சி… அழகு பாக்கணும்னு ஆசை…

கீழே கலகலன்னு சத்தம் கேக்குதே… கொழந்த வேற அழறாளே… நான் போய் ரோஹிணியைப் பாத்து கொழந்தைக்குப் பால் கொடுக்கச் சொல்லணும்…

அலமு… அலமு… கொஞ்சம் கதவ தெரயேன்… எனக்கு பேத்தியை பாக்கணும்
போல இருக்கு… நான் கரடியா கத்தறேன்… யாரும் காதில வாங்கற  மாதிரி  தெரியலையே

அந்த சண்டாளி… கட்டையிலே  போற  அலமு… நான் கத்த கத்த காதிலே வாங்காம…   அட என்ன  இது  மத்தியான சோத்த கூட ஜன்னல்  வழியா  வச்சிட்டு போறாளே… நான் என்ன பைத்தியமா… கதவ  திறக்க  மாட்டேன்னு சொல்றா… நீங்களாவது  அலமு கிட்ட சொல்லி  மாடி  ரூம  தொறந்து விடச் சொல்லுங்க… இல்லன்னா  னீங்களாவது அலமுக்கு தெரியாம இந்த  மாடி ரூம தொறந்து விட்டீங்கன்னா…  ஒரு  எட்டு  கொழந்தையைப்  பாத்திட்டு வந்திடறேனே…  உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

sureshteen@gmail.com
Series Navigationபடைப்பாளி ‘பழமனு’க்கு ஒரு விமர்சனக் கடிதம் (‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து)இடைவெளிகள் (8) – கருத்துப் பறிமாறலும் கவனமான பரிசீலிப்பும்
author

Similar Posts

3 Comments

Leave a Reply to sakthivel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *