பேஸ்புக் பயன்பாடுகள் – 3

This entry is part 13 of 45 in the series 26 பிப்ரவரி 2012

“என்னப்பா ஸ_ப்பரான டீ-சர்ட் போட்டிருக்கே..”

“ஆமாம் சுரேஷ்.. எனக்கு பேஸ்புக் போட்டி ஒண்ணுல டீ-சர்ட் பரிசாக கிடைச்சது”

“என்ன பேஸ்புக் போட்டியா? அதுல பரிசா? அது எப்படி?”

“காதே பசிபிக் விமான நிறுவனம் பேஸ்புக்ல்ல சுனாமி வந்த ஜப்பான் பக்கமா வியாபாரத்தைப் பெருக்க ஒரு போட்டி நடத்தினாங்க. ஹாங்காங் மக்கள் ஜப்பான் பற்றிய போட்டோக்களையும், சுவையான அனுபவங்களையும், ஜப்பான் மக்கள் ஹாங்காங் பற்றிய போட்டோக்களையும், சுவையான அனுபவங்களையும் பேஸ்புக்கிலேயே பதிய வேண்டும். அதில் நல்லப் பதிவுகளுக்குப் பரிசுன்னு சொன்னாங்க. நான் நாலஞ்சு போட்டோவை பதிவு செய்தேன். அதற்கு எனக்கு இந்த டீ-சர்ட் கிடைத்தது..”

“பேஸ்புக்ல்ல போட்டியெல்லாம் கூட நடத்தலாங்கறது எனக்கு இப்பத்தான் தெரியும்..”

“சுரேஷ்.. அது மட்டுமல்ல.. இன்னும் பல விஷயங்களை பேஸ்புக் மூலமாக செய்யலாம்..”

“அப்படியா?”

இந்த உரையாடல் மூலமும் பேஸ்புக் மூலமாக நாம் செய்யக் கூடிய ஒரு பயன்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
விமான நிறுவனங்களும் பேஸ்புக்கை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மக்களுக்கு விமானம் இரத்தானச் செய்திகள், புதிதாக புகுத்தப்பட்ட விசயங்கள் என்று பலவற்றை பேஸ்புக் மூலமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சொல்ல ஆரம்பித்துள்ளனர். நமக்கு அந்தச் செய்திகள் உடனுக்குடன் தெரிய வேண்டும் என்றால், லைக் என்ற விருப்பம் பொத்தானை அழுத்தி, அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் வேண்டிய போது அவர்களது பக்கத்திற்குச் சென்று விவரங்களை அறிந்தும் கொள்ளலாம்.

பத்திரிக்கைகளும் இப்போது தங்கள் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது. படிப்போரின் கருத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.
இன்னும் பேஸ்புக்கில் பல்லாயிரக்கணக்கான பயன்பாடுகள் இருக்கின்றன. நாள்தோறும் இலட்சக்கணக்கானவர்கள் பயன்பாடுகளை உருவாக்க முயன்று வருகின்றனர்.

18-24 வயதிற்குட்பட்டோரே பெரும்பாலும் இதன் பயனர்கள். ஒரு நிமிடத்திற்கு கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்த வலை விரிய விரிய, தொழில் அபிவிருத்தி செய்ய எண்ணம் கொண்டோர், தங்களைப் பற்றியும் தங்கள் வியாபாரம் பற்றியும் விளம்பரங்களைத் தர ஆரம்பித்தனர். வலையின் மூலமாக விளம்பரம் செய்வதன் மூலமாக அவர்கள் கோடிக்கணக்கானவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.

பேஸ்புக் பல பயன்பாடுகளுடன் மேலும் மேலும் வளர்ந்து, பயனர்களின் தேவைக்கேற்ப வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனர்களும் தங்களுக்கு வேண்டிய பயன்பாடுகளைச் செய்யும் வசதிகளையும் கொடுக்கிறது. சமூக வலை மட்டுமல்லாது, பயன்பாடுகளை உருவாக்க ஏதுவான மென்பொருளாகவும் திகழ்கிறது.

வர்த்தகக் குறி அங்கீகரிப்பும் (பிராண்ட் ரெகக்னிஷன்) மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையையும் இதன் மூலம் பெறலாம். இந்தச் சமூக ஊடகச் சூழல், வியாபாரத்தைப் பெரியளவில் பெருக்க முடியும் என்று பலரும் நம்புவதால் தற்போது பேஸ்புக் பற்பல நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஒருவருக்கு நண்பர்களே இல்லாமல் இருக்கலாம். பேஸ்புக்கில் பதிவு செய்து கொண்டு, பத்தாயிரம் பேர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவில் சேர்ந்து கொண்டு, தன் கருத்தை வெளியிட்டால், அக்கருத்து உடனே அந்தப் பத்தாயிரம் உறுப்பினர்களுக்கும் பேஸ்புக்கைத் திறந்ததும் காணும் வாய்ப்பை ஏற்படுத்தும். அக்கருத்து ஆக்கப்பூர்வமாகவோ, அக்குழு விரும்பும் கருத்தாகவோ இருந்தால், உடனடியாக அக்குழுவின் நண்பராக மாறிவிடலாம். உடனுக்குடன் பத்தாயிரம் பேர்களுக்கு உங்களை அறிமுகம் செய்து கொண்டுவிடலாம்.

அதனால் ஒருவரின் விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ற குழுக்களில் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சியை மிகவும் பிரபலமான வலைகளான பேஸ்புக், லின்க்ட்இன் என்ற நம்பகமான வலைதளங்களின் மூலமாகச் செய்வது உசிதம்.

பேஸ்புக்கில் மக்கள் தங்கள் பொழுதைக் கழிப்பதற்கு மட்டுமே இருப்பதைப் பெரும்பாலும் பார்க்கலாம். ஆனால் அதன் மூலம் வியாபாரம் செய்து வெற்றி பெற்றவர்களும் உள்ளனர் என்றால் ஆச்சரியப்பட வேண்டாம். தாங்கள் விற்பனைச் செய்யும் பொருட்கள் பற்றிய விவரங்களை செலவில்லாமலோ அல்லது மிகக் குறைந்த செலவிலோ, தகுந்த குழுக்களில் பதிவு செய்து, தங்கள் விற்பனைத் திறனை அதிகரித்துக் கொண்டுள்ளனர். அதனால் பேஸ்புக்கைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

பேஸ்புக் பயன்பாடுகளை பயனர்களே உருவாக்குகின்றனர். தற்போது 52000க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் வரை உள்ளன. ஆமாம்.. இந்த பயன்பாடுகள் பயனுள்ளவையா என்ற கேள்வி எழலாம். சில பயன்பாடுகள் 5 இலட்சம் பேர்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருகிறதென்றால், பல பயனுள்ளதாக இருக்கின்றது என்று தானே அர்த்தம்.

பயன்பாட்டை உருவாக்க வேண்டுமென்றால், பேஸ்புக் பக்கத்தின் கடைசியில் தரப்பட்டிருக்கும் வரியிலுள்ள டெவலப்பர் என்ற உருவாக்குநர்கள் வார்த்தையைச் சொடுக்க வேண்டும். உடன் மற்றொரு பக்கம் திறக்கப்படும். அதில் உங்கள் கைபேசி எண்ணோ, வங்கிக் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) எண்ணோ கேட்கப்படும். இது உண்மையில் நீங்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே. உங்கள் கணக்குச் சரிபார்க்கப்பட்ட பின் நீங்கள் உங்கள் பயன்பாட்டை உருவாக்க ஆரம்பிக்கலாம்.

ஆரம்பித்த பயன்பாட்டைக் கொண்டு உங்களைப் பற்றியோ, உங்கள் குழுவின் கொள்கையைப் பற்றியோ, நீங்கள் தயாரிக்கும் அல்லது விற்கும் பொருளைப் பற்றியோ விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். சி.பி.எம் – ஒரு ஆயிரம் பார்வைக்கானத் தொகை அல்லது சி.பி.சி – சொடுக்கிற்கு ஏற்ற தொகை என்ற இரு வேறு முறையில் அதற்கான தொகையை பேஸ்புக்கிற்கு கட்ட வேண்டும். தொலைக்காட்சியில் காட்டுவதை விடவும் பல மடங்கு குறைவானக் கட்டணமாகவே இது இருக்கும். ஆனால் இது உலகம் முழுவதும் உள்ள மக்களை எளிதில் சென்று சேரும்.

பயன்பாட்டை பயனர்களுக்கு தரும் முன்பே நம்முடைய விளம்பர முறையை முடிவு செய்து கொள்ள வேண்டும். இடம், வயது, எந்த விருப்பம் உடையவர்கள் என்பதை குறிப்பிட்டால், அத்தகைய மக்களுக்கு மட்டுமே அது சென்று சேரும் வகையிலும் நாம் அமைத்துக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் பெங்களுரு நகரில் வாழ்வோரில் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உடையவர்கள் என்று பயனர்களின் தன்மையைக் குறிப்பாகக் கொண்டு விளம்பரம் செய்வது அவசியம். இல்லாவிட்டால், அது உலகத்தில் உள்ள அனைத்துப் பயனர்களும் கண்டு, அதைச் சொடுக்கினால், நீங்கள் தான் பணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும். அதனால் விளம்பரம் செய்ய எண்ணுவோர், அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். விளம்பரம் செய்ய எளிய சாதனம். ஆனால் தவறு செய்தால், தண்டனைத் தொகை கணிசமாக இருக்கும்.

ளுஉசiடின என்ற மின்புத்தகம் வெளியிடும் பயன்பாடும் பேஸ்புக் தொடர்புடையது. நீங்கள் விரும்பி எழுதிய புத்தகத்தை அச்சிட்டு வெளியிட முடியவில்லையா? கவலை வேண்டாம். அதை மின்புத்தமாக வெளியிட்டு, நீங்கள் உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் படிக்கும்படி அழைக்கலாம். உங்கள் புத்தக வெளியீட்டுக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம். அவ்வப்போது, அங்கே சென்று எத்தனை பேர்கள் படித்துள்ளனர் என்பதையும் பார்த்துக் கொள்ளலாம். அதிகமான வாசகர்கள் உருவாகிய பின், வெளியீட்டாளர்களைச் சந்தித்து புத்தகமாக வெளியிட்ட நிகழ்வுகளும் உண்டு.
பேஸ்புக்கைப் பயன்படுத்தும் போது அதிக கவனமும் தேவை.

ஏனென்றால் நாம் அனுப்பும் செய்திகள் அழிக்கப்படுவதேயில்லை. உங்களுக்கு நீங்கள் அனுப்பிய மற்றும் செய்த விசயங்களின் பட்டியல் வேண்டுமென்றால், பேஸ்புக் இரண்டு வருடங்களென்றாலும், அச்சடித்துக் கொடுக்கும். நீங்கள் பேஸ்புக்கை அதிகமாகப் பயன்படுத்துவர் என்றால், 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் என்றாலும், தரக்கூடியது பேஸ்புக் நிறுவனம்.

நீங்கள் லைக் என்ற “விருப்பம்” என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உங்கள் இணையதள முகவரி அந்த பயன்பாட்டிற்குச் சென்று தன்னைப் பதித்துக் கொள்ளும். இதன் மூலம் உங்களைப் பற்றிய விவரம், நீங்கள் வெளியுலகிற்குத் தரலாம் என்று குறிப்பிட்டுள்ள விவரம், அந்தப் பயன்பாட்டால் உபயோகித்துக் கொள்ளப்படும்.

பேஸ்புக் தற்போது அமெரிக்காவில் புலனாய்வுத் துறையினருக்கு பேருதவி செய்து வருகிறது. குற்றம் புரிந்தவர் பேஸ்புக்கைப் பயன்படுத்தியவராக இருந்தால், அவரைப் பற்றிய விவரங்கள் பலவற்றை தெரிந்து கொள்ளலாம். அவரது விருப்பமான விசயங்கள், அவர் செய்த செயல்கள் என்று தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

கணினி உலகில் வைரஸ் என்பது மிகவும் பிரபலம். பேஸ்புக் கணக்காளர்களின் கணக்குகளையும் கண்டு கொண்டு வைரஸ் பரப்புவதாகவும் சில வதந்திகள் உள்ளன. அது எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
பயன்பாட்டை உருவாக்க என்னென்ன வேண்டும்?

கேன்வாஸ் ஏரியா என்று சொல்லப்படும் வரையும் பகுதி. பொரபைல் ஏரியா என்று சொல்லப்படும் குறிப்புகள் பகுதி மற்றும் செய்திகள் பகுதி. இவை மூன்றும் தான் உங்கள் பயன்பாட்டைப் பயனர்கள் தொடர்பு கொள்ளும் முக்கிய இடங்கள். இதுவும் பேஸ்புக் போன்றே காணப்படும். பேஸ்புக் உங்கள் பயன்பாட்டை பக்கத்தின் மத்தியில் புகுத்திவிடும்.

இதை உருவாக்க பல எ.பி.ஐ ஆணைகள் பயன்படுத்தப்பட வேண்டும். செயல்பாட்டு நூலகத்திலிருந்து ஆணைகளை அறிந்து கொள்ளலாம். பி.எச்.பி 5, ஜாவா, ஐ போன் தொடர்பு பேஸ்புக், ஆக்சன் ஸ்கிரிப்ட் 3.0, போர்ஸ்.காம் என்பனவற்றைப் பயன்படுத்தி பயன்பாட்டை உருவாக்க வேண்டும்.

உருவாக்கப்பட்ட பயன்பாட்டை எப்படி பரிசோதித்துப் பார்ப்பது? நீங்களாகவே ஒரு பரிசோதனைக் கணக்கை உருவாக்கிக் கொண்டு, அதைப் பரிசோதித்துப் பார்க்கலாம்.

மிகச் சிறந்த பயன்பாட்டை செய்தவரை பாராட்ட வேண்டுமல்லவா? அதையும் பேஸ்புக் வருடாவருடம் செய்து வருகிறது. சிறந்த பயன்பாட்டிற்கு பரிசு உண்டு. பல பயன்பாடுகள் ஒரு இலட்சம் டாலர்கள் வரை பரிசுகளை தட்டிச் சென்றுள்ளன.

பேஸ்புக்கின் வளர்ச்சி மேலும் மேலும் நன்முறையில் கொண்டு செல்ல, அதில் வலையேற்றப்படும் நல்ல பயன்பாடுகளுக்கு, அந்நிறுவனமே பொருளுதவிகள் செய்து ஆதரிக்கின்றன. அனுபவமுள்ள பயன்பாட்டை உருவாக்குபவர்கள், பேஸ்புக் நிறுவனத்தை அணுகினால், பயன்பாட்டை உருவாக்க நிதியும் பெறலாம். அதனால் பயன்பாட்டை உருவாக்கிப் பயனடையுங்கள்.

பயன்பாட்டை எப்படிச் செய்வது என்பது பரந்த விரிந்த விசயம் என்பதால், இந்தக் கட்டுரை வரிசையில் அதை கொடுக்கவில்லை. பயன்பாட்டைச் செய்யப் பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

பேஸ்புக்கை கவனத்துடன் பயன்படுத்தி, உங்கள் கருத்துச் சுதந்திரத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள என் வாழ்த்துக்கள்.

Series Navigationஜென் ஒரு புரிதல்- பகுதி 31பட்டறிவு – 2
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *