பையன்கள் : சுப்ரபாரதிமணியன்

This entry is part 7 of 15 in the series 23 ஜூலை 2017

” அந்த பீகார் பையனெ எதுக்குடா அடிச்சே ”

” திருட்டுப் பய… கை ..வெச்சுட்டான்.””

” எங்க..”

“ சண்முகம் மாளிகைக் கடையிலே என்னமோ சாமான திக்கித் திணறி கேட்டிருந்தவன் சக்கரை ஒரு கிலோ பாக்கெட் கட்டி வெச்சிருந்ததை எடுத்திருக்கான். ”

” என்ன ஒத்துட்டானா… இல்ல சாத்தனும்னு சாத்தறீங்களா. ”

” ஒத்துட்ட மாதிரிதா உளறுனான். அவன் பாஷை யாருக்குத் தெரியும்.

” அவன் பீகார்க்காரன , ஒரிசாக்காரனா , இல்லெ…”

” இப்போ ஒரிசா இல்லே …ஒடிசாதா …”

” ஆமாமா … அவன் பீகார்க்காரனா, ஒடியாக்காரனா , பெங்காலியா, வடகிழக்கு இந்தியா, மேகலயாக்காரன…”

” ஆமாமா…இதிலே ஒருத்தன் அவன் பீகார்க்காரனாக்கூட இருக்கலாம். ஒடிசாக்காரனாகவும் இருக்கலாம்,மெகாலையாக்காரனா கூட இருக்கலாம். எல்லாருந்தா இங்க வேளையில இருக்காங்களே. காலையிலிருந்து கடைகள்மூடிக் கிடந்தது. இப்பத்தா தொறந்த மாதிரி இருந்துச்சு ”

ரத்னவேல் அடிபட்டவனைப் பார்த்தான். உதடுகள் வீங்கிப் போயிருந்தன. சின்னதாய் ரத்தக் கீற்று அவனின்மேலுதட்டில் தென்பட்டது. தலை கச கச வென்று கலைந்து போயிருந்தது. சட்டையைப் பிடித்து உலுக்கிய மாதிரிகசங்கிப் போயிருந்தது. கட்டம் போட்ட சட்டையில் அவனின் கை புஜங்கள் தெரியுமாறு சுருட்டி தைக்கப்பட்டிருந்தசட்டை. அழுக்கடைந்த ஜீன்ஸ் பேண்ட் தரையில் புழுதியுடன் சேர்ந்திருந்தது.

” இங்க வந்தவனா இதுக்குன்னு… இல்லே இங்க எங்காச்சும் வேலை செய்யறவனா…”

” கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யறவன்னு நினைக்கறேன். அடிச்சப்பறமும் ஒரு வார்த்தை கூட தமிழ்ல பேசல.புது ஆளு போல இருக்கு. முந்தி வந்தவன்னா ஏதாச்சும் நாலு வார்த்தை தமிழ்ல பேசுவானில்லே.பழகிருப்பானே..”

” இருக்கலாம். இல்லே பயத்திலே தமிழ் வரமே இருக்கலாம். ”

சண்முகம் கண்களை விரியத் திறந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். குண்டு பல்ப் லேசானவிளக்கொளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. குண்டு பல்ப்பை மாற்றச் சொல்லி பல சமயங்களில் ரத்னவேலு கூடசொல்லியிருக்கிறான். அவர் அதைப் பார்த்து சாமாதானம் ஏதாவது சொல்வார்.

” ஆனா இந்த வெளிச்சம் போதுங்க எதுக்கு மாத்திட்டு… வேற லைட்டுன்னா அதிகம் செலவாகும். ”

” இதுலதா கரண்ட் அதிகமா செலவாகும். எல். இடி யெல்லா போட்டுட்டா கம்மி செலவாகும். அப்புறம் சுற்றுச் சூழல்,காரியமிலவாயுன்னு நிறைய…”

” இருக்கட்டுங்க. பல்ப் போயிட்டாலோ, உடைஞ்சுட்டாலோ மாத்தறப்போ யோசிக்கிறன் ”

மாடசாமியின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று விறு விறுவென்று நடந்தான் ரத்னவேல் . தெற்கு முக்கைகடக்கும்போது அதே போல் குண்டு பல்ப் மாட்டப்பட்ட மாடசாமியின் வீட்டைப் பார்த்தான். தூரத்து உறவில்அம்மாவின் உறவாக மாமா ஆகிறார் மாடசாமி. மாடசாமி எப்போதும் சாயங்காலமானால் குடித்துவிட்டு தள்ளாடியபடிதிரிவார். வெத்திலைத் தோட்டமொன்றில் வேலை செய்பவர். வேலை செய்கிறதிற்குச் சம்மாக ஓய்வெடுப்பார்.

” வெயில்ல அலையறமில்லையா… சாயங்காலம் ஆனா உடம்பெல்லா அடுச்சுப் போட்ட மாதிரி ஆகுது. அதுதாகுடிக்கரன். ”

” வெத்தலைத் தோட்டத்தில வேலை செய்யற மத்தவங்க உங்களை மாதிரிதான் சாயங்காலம் ஆனாகுடிக்கறாங்களா…”

” அதெல்லா அவனவன் பிரியம். அவனவன் சவுகரியத்தைப் பொறுத்தது.”

” அப்போ நீங்க ரொம்பவும் சவுகரியமா இருக்கறதா சொல்றீங்களா”

” அதுதான் அவனவன் இஷ்ட்டம் … அவனவன் பிரியம்ன்னு சொல்லியிருக்கேனில்லையா.”

அவர்கள் வீட்டில் இஷ்டத்திற்குத் தகுந்த மாதிரி பலரும் குடிப்பார்கள். அத்தை கூட குடிப்பாள். இரு மருமகன்கள் அங்குவரும்பொழுது மாமாவுடன் சேர்ந்து குடிப்பார்கள். ஒரே களேபரமாக இருக்கும். எந்த வகை வசவாக இருந்தாலும்அப்போது சாதாரணமாகப் புழங்கும்.வசவைத் தெளித்துக் கொள்வதற்காக ஒன்றாய் உட்காருவதைப் போலிருக்கும்.

குண்டு பல்ப் வீட்டு முகப்பை கூசி தெளிவற்றதாகிக் கொண்டிருந்தது. யாரோ விட்ட கைபேசி அழைப்பு மாடசாமிக்குவந்து அதை அவர் எரிச்சலுடன் பட்டனை அமுக்கி நிராகரித்தார். அழைப்பு மணி மறுபடியும் வந்தது. மறுபடியும்நிராகரித்தார்.

திருச்சேரையில் நடந்த பிரச்னையையொட்டி காவல் நிலையத்தில் கூட்டம் கூடி விட்டது. திருச்சேரைக்கும்,பழையனூருக்கும் சேர்ந்து ஒரு காவல் நிலையம் இருந்தது. பழையனூரில் காவல் நிலையத்தில் பொது மக்கள்கூடியதால் போக்குவரத்து தடைபட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. டாஸ்மார்க் பார் மட்டும் காவல் துறையைச்சார்ந்த இருவரின் காவல் துணை கொண்டு திறந்திருந்தது. அவர்கள் சவுகரியமாய் உட்கார்ந்து கொள்ளநாற்காலிகளும் தரப்பட்டிருந்தன.

மாடசாமியின் முன்னால் சின்ன டீப்பாய் இருந்தது அதில் இரவின் மங்கிய வெளிச்சத்திலும் ஊறுகாய் பாட்டில்தெரிந்தது. மது பாட்டில் ஒன்றில் பாதி சரக்கு தீர்ந்திருந்தது. அதன் மினுங்கல் பாட்டிலை அழகாக்கியிருந்தது.

” ஒயின் ஷாப் போலீஸ் பாதுகாப்போட இன்னிக்குத் தொறந்திருந்தது கண்ணு”

போதை ஏறி விட்டால் மனைவியை மாடசாமி கண்ணு என்றுதான் கூறுவார். ” என் கண்ணு இல்லமே நான் இருக்கமுடியுமா ” என்பார் மிகவும் நெருக்கமாய் உட்கார்ந்துகொண்டு .

” நேத்து போலீஸ் பாதுகாப்போட பொணம் போச்சாமா ”

” பாதுகாப்போட எங்க போச்சு. பொணத்தை போலீஸ்காரங்கதா தூக்கிட்டுப் போனாங்களாம்.

இன்னிக்கு போலீஸ்காரங்க பொணத்தைத் தூக்கிட்டுப் போறதா படமாக் கூட பத்திரிக்கையில் போட்டிருக்காங்களாம். ”

” செரி… செரி… போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலையுன்னு சொன்னது இப்போ பொணத்தைத் தூக்கறதும்போலீஸ்காரன் வேலைன்னு ஆயிப் போச்சு போல…”

மாடசாமியின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று விறு விறுவென்று நடந்தான் ரத்னவேல். பெரும்பாலும்மிதிவண்டியில்தான் உள்ளூரில் இருக்கும் இடங்களுக்குச் செல்வான்.

” தவணைக்குன்னு ஒரு டி. வி.எஸ் வாங்கிக்க என்று அவன் அம்மா சொன்னாலும். ” சைக்கிள் போதும்மா” என்பான்.

” நெறைய விஷயம் இருக்கும்மா. ஒடம்புக்கு சைக்கிள் ஓட்டறது ஒரு எக்சசைஸ் போல அப்புறம் எரிபொருள் ,மாசுன்னு…”

” ஸ்கூல்ல கிளாஸ் எடுக்கறமாதிரி என்கிட்டயும் பேசாதடா…”

” உனக்கு வெளங்கற மாதிரி சொல்லனும்னு…”

” செரி.. நானும் புரிஞ்சிக்கறேன்….”

புழுதியைப் பரப்பிச் சென்ற டூரிஸ்ட் வேனின் விரைவு அபரிதமான வேகத்தில் இருந்தது.

மூக்கைச் சுளித்தவாறு பெரிய தும்மலை போட்டான். புழுதி சற்றே அடங்கி எதிரிலிருந்த ” டாஸ்மாக் பாரை” க்காட்டியது. ” இயற்கை சூழலுடன் இருக்கும் மதுபானக் கடை” என்ற போர்டு பல வருடங்களாய் அங்கிருந்தது. அந்தபோர்டு போட்ட சில நாட்களிலிலேயே அந்தப் பெயருக்கான காரணத்தைப் புலனாய்வு செய்து கண்டறிந்தான். உள்ளேஇரண்டு வேப்ப மரங்களும், ஒரு புன்னை மரமும், சீமைக்கருவேல மர புதரும் இருந்தன. அவையே இயற்கைச் சூழல்என்ற அடைமொழியை அந்த மதுபானக் கடைக்குக் கொண்டு வந்திருந்தது. வண்டியில் இருந்த பாத்திரங்களூடே ஆவிபறந்து இட்லி தயாராகிக் கொண்டிருப்பத்தைச் சொன்னது. பாத்திரத்தின் வெக்கை கொஞ்ச தூரம் பரவியிருந்தது.

மதுபானக் கடையிலிருந்து சாவகாசமாக வெளியேறிய இரு மாணவர்கள் எட்டாம் வகுப்பு ” ஈ ” பிரிவைச் சார்ந்தவர்கள்என்பதை ரத்னவேலால் சரியாக அடையாளம் காண முடிந்தது.தன்னிடம் பாடம் கற்கிற மாணவர்கள்தான் என்பது ஞாபகம் வந்தது. லாரியொன்று பெருத்த புழுதியால் அவன் முகத்தை கைக்குட்டையால் மூடச் செய்தது..மூச்சு முட்டுவதுபோலிருந்து.

சண்முகம் மாளிகைக் கடையில் அடிபட்டப் பையன் கண்களில் வீக்கம் தெரிய கால்களை விந்திக் கொண்டு நடந்து அவனின் மிதிவண்டியைக் கடந்து போனான்.

subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur : blog: www.rpsubrabharathimanian.blogspot.com

Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003

Series Navigationமாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்பறப்பியல் பொறித்துவப் புரட்சி ! வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” !
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *