பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல ,  பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!

author
1 minute, 1 second Read
This entry is part 8 of 9 in the series 2 அக்டோபர் 2022

 

 

                                                                   முருகபூபதி

சில மாதங்களுக்கு முன்னர்,  நியூசிலாந்திலிருந்து  ஊடக நண்பர் சத்தார், மெய்நிகரில் என்னை பேட்டி கண்டபோது,                  “  கல்கியின் பொன்னியின் செல்வனை நான் இதுவரையில் படித்ததில்லை  “ என்று சொன்னதும், அவர் ஆச்சரியமுற்றார்.

அதன்பிறகு, எனது மனைவி மாலதி,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்களும் எழுத்தாளரா..?   “ எனக்கேட்டார்.

 “ ஆம், பொன்னியின் செல்வனைப் படிக்காதமையால்தான் நான் எழுத்தாளனாக இருக்கின்றேன். அந்தத்  தொடர்கதையை கல்கியில் படித்தவர்கள் பல ஆயிரம்பேர் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிட்டார்களா.. ?  “ எனக்கேட்டேன்.

 “ இது குதர்க்க வாதம்  “ என்றார் மனைவி.

மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன், நான் வதியும் ஆஸ்திரேலியாவில் மெல்பன் திரையரங்கிற்கு  இம்மாதம் 30 ஆம் திகதி வந்ததும்,  அதனை கதையாக இதுவரையில் படித்திராத, அதனை எழுதிய எழுத்தாளர் கல்கி பற்றி எதுவித குறிப்புகளும் அறியாத 1980 இற்குப்பின்னர் பிறந்த எனது இரண்டு  மகள்மாரும் மற்றும் இரண்டு பெறாமகள்மாரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக என்னை தனித்தனியாக அழைத்தனர்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், நான் மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல் பிரதேச  திரையரங்கில், இதற்கு முன்னர் எந்தவொரு தமிழ்த் திரைப்படமும் காண்பிக்கப்படவில்லை.  அந்தப்பிரதேசத்தில் வசிக்கும் மருத்துவரான ஒரு பெறாமகள்,  “ அங்கிள், பொன்னியின் செல்வன் பார்ப்போம் வாருங்கள்  “ என்றார்.

 “ மெல்பன் நகருக்குள் வசிக்கும் எனது மூத்த மகள் அழைத்துவிட்டாள்,  அவளுடன் மெல்பனில் பார்க்கச்செல்கிறேன் “  என்றேன்.

இவ்வாறு பொன்னியின் செல்வன் திரைப்படம் எங்கள் குடும்பத்திற்குள் கொண்டாடப்பட்டது.

இதற்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன், 2009 ஆம் ஆண்டளவில் எங்கள் வீட்டில் தமது துணைவியார் அருண்மொழியுடன் தங்கி நின்றபோது, மற்றும் ஒரு எழுத்தாளரும் வந்திருந்தார். அவர் இலங்கையிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்.

ஜெயமோகன்,  ஆர்யா நடித்த நான் கடவுள் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய காலப்பகுதியில் வந்திருந்தார்.  தெளிவத்தை ஜோசப்  வி. பி. கணேசன் தயாரிப்பில்  முன்னர் வெளியான புதிய காற்று திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர். இத்திரைப்படத்தில் மனோகணேசனும், அவரது தம்பி பிரபா கணேசனும்  குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருப்பர்.

எங்கள் மெல்பன் வீட்டின் நூலகத்திலிருந்த முள்ளும்மலரும் மகேந்திரன் எழுதிய சினிமாவும் நானும் என்ற நூலை ஜெயமோகன் எடுத்துப்பார்த்து அதன் பக்கங்களை புரட்டினார்.

அதில் மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.  தன்னை வீட்டுக்கு அழைத்து மூன்று மாதங்கள் தங்க வைத்து  கல்கியின்  பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை வசனம் எழுதவைத்த கதையை மகேந்திரன் சொல்லியிருப்பார்.

மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் சில காட்சிகளை இலங்கையிலும் எடுக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இலங்கை செல்லும் தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் கண்டனம் எழுப்பியதனால், அந்த முயற்சியும் மணிரத்தினத்திற்கு கைகூடவில்லை. கடல் திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதியவர் ஜெயமோகன்.

பொன்னியின் செல்வனுக்காகவும் திரைப்படக்குழு இலங்கை வரவிருந்தது.  ஆனால், கொவிட் பெருந்தொற்று அவர்களை பாலித்தீவை நோக்கி நகர வைத்தது.

மணிரத்தினத்தின் இரண்டாவது விருப்பமும் நிறைவேறவில்லை.  இத்தனைக்கும் பொன்னியின் செல்வனை தயாரித்தவர்  லைக்கா நிறுவனத்தை நடத்தும் இலங்கையரான சுபாஸ்கரன்.

மக்கள் திலகம் பொன்னியின் செல்வனை அன்று கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புதல்வர் கி. இராஜேந்திரனிடம் இந்திய நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா கொடுத்து வாங்கியிருந்தார்.

அதில் வந்தியத்தேவனாகவும் எம். ஜி. ஆர். நடிப்பதற்கு விரும்பியிருந்தார்.  பின்னாளில் நடிகர் கமல்ஹாசனும் பொன்னியின் செல்வனை தயாரித்து நடிக்க விரும்பியிருந்தார்.

மருதநாயகம் திரைப்படத்தை பெரும் பொருட்செலவுடன் தயாரிக்க முனைந்து பின்னர் கைவிட்டவர் கமல்.

தற்போது வெளியாகியிருக்கும்  மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் குரல் கொடுத்துள்ளார் கமல். ,உலகெங்கும் திரையரங்குகளுக்கு வருமுன்னர்,  தயாரிப்பாளர், இயக்குநர்,  கதை வசன கர்த்தா, மற்றும் பங்கேற்ற தொழில் நுட்பக்கலைஞர்கள் உட்பட நடித்த நட்சத்திர பட்டாளம் பங்கேற்ற மேம்பாட்டு  நிகழ்ச்சியையும்                ( Promotion programme ) மகள்மாருடன் சேர்ந்து பார்த்தேன்.

அவர்கள் கல்கிபற்றியும்,  பொன்னியின் செல்வன்  கதையின் பின்னணி வரலாற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காண்பித்தனர்.

அவர்களுக்கு  1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழின் முதல் சினிமாஸ்கோப்  திரைப் படம் ராஜராஜ சோழன் பற்றியும் சொல்லநேர்ந்தது.

குறிப்பிட்ட ராஜராஜசோழன் திரைப்படத்தில்  அந்தப் பாத்திரமாகத்தோன்றிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சிபாரிசில், இலங்கை நடிகர் ஶ்ரீசங்கருக்கு ஈழத்து புலவர் வேடம் தரப்பட்டது.  கண் மூடி கண் திறப்பதற்குள் அந்தக்காட்சி மறைந்துவிடும்.

சோழ சாம்ராஜ்யத்திற்கும் இலங்கைக்குமிடையே தொடர்புகள் இருந்தமையால்தான், கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொன்னியின் செல்வனை எழுதிய காலப்பகுதியில்              ( 1950 – 1955 ) ஓவியர் மணியம் அவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு,  இலங்கையில் அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை  முதலான இடங்களுக்கும் வந்தார்.

ஓவியர் மணியமே பொன்னியின் செல்வன் தொடர்கதைக்கு ஓவியம் வரைந்தவர். ஆயினும்  மணிரத்தினம் இலங்கை வந்து படப்பிடிப்பு நடத்த முடியாது போய்விட்டது. எனினும் திரைப்படத்தில் இலங்கை உச்சரிக்கப்படுகிறது. இலங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் பல வருகின்றன.

சிங்களத்திலும் வசனங்கள் இடம்பெறுகின்றன.  பெளத்த பிக்குகளாக  பலர் தோன்றுகிறார்கள். 

இலங்கை சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே அவர்களுக்கும் எழுத்தோட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்கியில் பொன்னியின் செல்வன் வெளிவந்த காலத்தில் கல்கி இதழ் எண்பதினாயிரம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவுக்கெல்லாம் கல்கி வந்தது.

எங்கள் குடும்பத்தில் பெத்தாச்சி, அம்மா மற்றும் சில உறவினர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் உட்பட சில தொடர்கதைகளை படித்தனர்.  எனது அக்காவின் கணவருக்கு தற்போது எண்பது வயதும் கடந்துவிட்டது.

அவர் பல தடவைகள் மீண்டும் மீண்டும் படித்த கதை பொன்னியின் செல்வன்தான்.

இவ்வாறு கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வனை – அது  வரலாற்றுப்புனைவு என்ற காரணத்தினாலோ என்னவோ, நவீன படைப்பிலக்கியத்துறையில் தீவிரம் காண்பித்தமையினாலோ,   நான் படிக்கவில்லை. 

அம்புலிமாமா கதைகளை ஆரம்பத்தில் படித்துவிட்டு, கண்ணன் இதழ்களை வாசித்துவிட்டு, முதலில் மு. வரதராசன், அதன்பின்னர்  புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன்,  சுஜாதா, பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி, கி. ராஜநாராயணன்,  அசோகமித்திரன்,  பிரபஞ்சன்,  சுந்தரராமசாமி ,  அம்பை , ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன்… என்று கடந்து வந்துவிட்டதனால்,  கல்கி, அகிலன், நா. பார்த்தசாரதி, விக்ரமன், சாண்டில்யன்   முதலானோரின் வரலாற்றுப்புனைவு தொடர்கதைகளை படிப்பதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.

அதனால்,  “ பொன்னியின் செல்வனை படிக்காத நீங்கள் எல்லாம் என்ன எழுத்தாளர்..?  “ என்று எனது மனைவி சொன்னபோது,  சுந்தரராமசாமி தனது ஜே.ஜே. சிலகுறிப்புகள் நாவலில்  ஒரு பாத்திரம்,   “ உங்கள் சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா..?   “ எனக்கேட்கும் எனச்சொன்னேன்.

ஒரு காலத்தில்,   சார்ள்ஸ் டிக்கன்ஸை படிக்காமல் ஒருவர் ஆங்கில இலக்கிய எழுத்தாளராக முடியாது எனச்சொல்வார்களாம்.

ஆனால், தற்காலத்தில் அவ்வாறு சொல்ல மாட்டார்கள் என நம்புகின்றேன்.

கல்கியின் கள்வனின் காதலி, தியாகபூமி, பார்த்திபன் கனவு முதலான கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. அவை கறுப்பு – வெள்ளை திரைப்படங்கள்.

தற்போது பென்னியின் செல்வன் நவீன டிஜிட்டல் உலகில் வண்ணத்திரைப்படமாக உருவாகியிருக்கிறது.  அன்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி இதழை பொன்னியின் செல்வனுக்காகவே வாங்கிப்படித்தவர்கள் திரையில் தோன்றும் பொன்னியின் செல்வனை திரையில்  பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள்…?  என்பது பற்றிய நேர்காணலை தொகுத்தால் சுவாரசியமான செய்திகள் கிடைக்கலாம்.

திரையில் பார்த்த பொன்னியின் செல்வன் பிரமாண்டமான தயாரிப்புத்தான்.  சந்தேகமில்லை.  நட்சத்திரப்பட்டாளமே தோன்றியிருக்கிறது.

ஏ.ஆர். ரகுமானின் இசையும் ஜெயமோகனின் வசனமும் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

முதல் பாகத்தின் முடிவில் ஒரு முடிச்சை வைத்துள்ளனர். இரண்டாம் பாகம் வெளிவரும்போது அந்த முடிச்சு எவ்வாறு அவிழ்க்கப்படுகிறது என்பது தெரியவரும்.

பொன்னியின் செல்வனின் ரிஷிமூலத்தை அறிவதற்கு   புதிய தலைமுறை ரசிகர்கள்  காத்திருப்பார்கள்.

—0—

letchumananm@gmail.com

Series Navigationசத்தியத்தின் நிறம்ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *