மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “

This entry is part 9 of 41 in the series 10 ஜூன் 2012

ஒரு சாதாரணக் குடிமகனை ஜெட் லீயாக ஆக்கும் கதைகள் சாகாவரம் பெற்றவை. அப்படி ஒரு கதைதான், தடையறத் தாக்க. இம்மாதிரிப் படங்கள், சரியான திரைக் கதையும், பாத்திரங்களும், சம்பவங்களும், தேர்ந்த நடிகர்களும் சேரும்போது, சூப்பர் டூப்பர் வெற்றியாகின்றன. அப்படி ஒரு வெற்றி பெற்ற படம், சமீபத்திய ‘ நான் மகான் அல்ல ‘ இம்மாதிரிப் படங்களுக்கு, ரசிகனை யோசிக்க விடாமல் செய்யும், பர பர காட்சிகள் முக்கியம். எதிர்பாராத திருப்பங்கள் அவசியம். கடைசியில் நாயகன் வென்றே தீர வேண்டும் என்கிற கிளைமேக்சும் ஒரு கட்டாயம்.

தடையறத்தாக்க, இந்த அம்சங்களை, வெகுவாக பின்பற்றி, எடுக்கப்பட்ட படம். அதனால், ரசிகன் கவனம், பாடல் காட்சிகளில் மட்டுமே சிதறுகிறது. பாடல்களை எடுத்து விட்டால், படம், ஒரு ஆங்கிலப் படத்துக்கு இணையாகச் சொல்லப்படும்.

டிராவல் ஏஜென்சி நடத்தும் செல்வா ( அருண் விஜய்), தனது காரில் இரண்டு வருடங்களாக ஏற்றி வரும், ஐடி பெண்ணின் சிக்கலுக்கு தீர்வு சொல்ல, தோள் கொடுத்து, சிக்கலில் தானே மாட்டிக் கொள்ளும் வித்தியாசமான முடிச்சு. இதனிடையில் செல்வாவுக்கும், பிரியா ( மம்தா மொகன்தாஸ்) வுக்கும் காதல். ஊரின் தாதா மகா, அவன் கடத்தி வைத்திருக்கும் உலகில் நாலாவது பணக்காரரான ராம கிருஷ்ணனின் மகள் காயத்ரியை ( ராகுல் பிரீத் சிங் ) வன்புணர்ச்சி செய்ய, அடைத்து வைத்திருக்கும் கிளைக்கதை. இதில் காயத்திரிக்கு முன்நினைவு ஏதும் இல்லை என்று ஒரு டிவிஸ்ட். செல்வாவைக் குறி வைக்கும் மகாவின் ஆட்கள். மகா மண்டையைப் போட, உடைந்த பேட், ரத்தக் கறையுடன் செல்வாவின் காரில். செல்வா தான் கொலை செய்யவில்லை என்பதை நிரூபிக்கப் போராடுவதும், எல்லோரையும் கொன்று கைமா பண்ணி வெற்றி பெறுவதும் இரண்டாவது பாதி.

ஆல்பிரட் ஹிட்காக்கிற்குப் பிடித்த கதைகளில் ஒன்றில், ஒருவன் மனைவியைக் கொன்று, சிறு துண்டுகளாக வெட்டி, பொடிப்பொடியாக அரைத்து, கோழிகளுக்குத் திவனத்துடன் கலந்து போட்டு விடுவான். இதில், வெள்ளை வேட்டி அரசியல்வாதி, பல லட்சம் பெறுமானமுள்ள கைமா மெசின், அதே போன்று உடல்கள் பொடியாக்கப்பட்டு பன்றிகளுக்கு தீவனமாகப் போடப்படுகிறது.

மகிழ் திருமேனி கௌதம் மேனன் அசிஸ்டெண்ட் என்று சொல்கிறார்கள். காட்சிகளின் நேர்த்தியில் அது அப்பட்டமாகத் தெரிகிறது. அதுவும் பல top angle ஷாட்டுகள். பாடல் காட்சிகளில் அழகு அள்ளுகிறது. பாடல்கள் தான் மனதில் பெரிதாகத் தைக்கவில்லை. பாடல்களில் விட்டதை பின்னணி இசையில் ஈடு செய்து விடுகிறார் தமன்.

அருண் விஜய் ஏன் இன்னமும் முன்னணிக்கு வரவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு ஹீரோவுக்குரிய அனைத்து அம்சமும் இவரிடம் இருக்கிறது. குரலும் அப்பாவைப்போல இல்லாமல், கணீர் என்று இருக்கிறது. பாலாவோ, ஷங்கரோ இவர் மேல் பார்வையைத் திருப்ப வேண்டும். மம்தா மோகன்தாஸ் அற்புதமாக நடிக்கிறார். முக்கால் பகுதி சிம்ரன், கால் பகுதி சாவித்திரி என அவர் முகம் பாவனைகளை அள்ளி வீசுகிறது.

முழுவதும் நகைச்சுவை அற்ற படம், நம்மை உட்கார வைப்பதற்கு இயக்குனரின் யதார்த்த காட்சிகளே காரணம். அருண் விஜய் வரும் முதல் காட்சியிலேயே நம்மை ஆர்வம் கொள்ள வைக்கிறார் இயக்குனர்.

“ நான் டிராவல்ஸ் வச்சிருக்கேன். இரண்டு வண்டி இருக்கு. ஐ டி கம்பெனில காண்ட்ராக்ட் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க. பேங்கில இரண்டு லட்ச ரூபாய் போட்டு வச்சிருக்கேன். உங்க பொண்ண எனக்கு ரெண்டு வருசமாத் தெரியும். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். உங்களுக்குச் சம்மதம்னா சொல்லுங்க.. இல்லைன்னா.. வேற நல்ல பையனாப் பாத்து உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிடுங்க.. நான் வேற நல்ல பொண்ணா பாத்துக்கறேன்.”

நாயகனின் புத்திசாலித்தனமும், ரௌடிகளின் ஆத்திரம் கூடிய முட்டாள்தனமும் ஒரு சேர திரைக்கதையை அமைத்திருக்கும் மகிழ் திருமேனி தான் ஒரு மாடர்ன் திரைப் பட இயக்குனர் என்பதை நெத்தியடியாகச் சொல்லியிருக்கிறார். அனாவசிய நீட்டல்கள் இல்லாத காட்சிகள் கதையை வெகு வேகமாக ஓட்டிச் செய்கின்றன.

‘மைனா’ புகழ் சுகுமார் தான் ஒளிப்பதிவு. காட்சிகள் நகரையே சுற்றி வருகின்றன. கதைக்கு அது அவசியமும் கூட. ஆனாலும் காடு மலை ஏறியதற்கு ஒரு ஓய்வாக, இதை இவர் ரிலாக்ஸாகச் செய்திருக்கலாம். எடுத்தவரை குறை ஏதுமில்லை.

மகாவின் தம்பியாக வருபவர் யார் என்று தெரியவில்லை. மனிதர் அதிகம் பேசாமல் பார்வையிலேயே குரூரத்தை வரவழைத்து விடுகிறார். தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஹீரோவுக்கு பிளாஷ் பேக் கிடையாது. வில்லனுக்கு உண்டு. அருண் விஜய்யின் எந்தச் செய்கைகளுக்கும் முன் விளக்கம் கிடையாது. ரசிகனின் கற்பனைக்கு விடப்பட்ட காட்சிகள். ரசிகனும் ஏன் எதற்கு எப்படி என்று சுஜாதா பாணியில் கேட்காமல், புரிந்து கொண்டு விடுகிறான் என்பதே இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி.

மகிழ்திருமேனிக்கு அடுத்த படத்திற்கு சூர்யாவோ, விஜய்யோ, அஜீத்தோ கால்ஷீட் கொடுத்தால் எங்கேயோ போய்விடுவார்.

வெளியிட்ட வாரத்தில் ‘மனங்கொத்திப் பறவை’ முந்திக் கொண்டு பெரிய அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டதில், த.தாக்கவிற்கு சின்ன தியேட்டர்கள் தாம் கிடைத்திருக்கின்றன . ஆனாலும் ஒரு வாரம் கழித்து, டெண்டுல்கர் போல் நின்று நிதானித்து சதமடிக்கும் இந்தப் படம் என்பது என் அவதானிப்பு.

#

கொசுறு

விருகம்பாக்கத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் பனிலிங்கம் செய்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். நாத்தீகன் கூட ஒரு முறை பார்க்கலாம். உள்ளே போனால் சில்லென்று இருக்கும், வெயிலுக்கு இதமாக.

சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலின் உற்சவ மூர்த்திகளான பெருமாளும் தாயாரும் பல்லக்கில் வீதி உலா வந்தபோது, பாதி பரோட்டாவில் எழுந்து எச்சில் கையால் கும்பிட்ட எனக்கு மோட்சம் உண்டா?

#

Series Navigationபன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்ஊமைக் காயங்கள்…..!
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *