மணல்வெளி மான்கள்-2

0 minutes, 3 seconds Read

(சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம் – அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறந்த வாசகர். அவர் வையவனுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஆங்கில நூல்களை வாங்கிக்கொடுத்து படிக்க ஊக்கப்படுத்தினார். சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் புலமைபெற்றார் வையவன். தாயும் இவரது கற்பனை விரியக் காரணமானார். அவர் சொன்ன கதைகளும், சம்பவங்களும் இவரது கற்பனையை விரியச் செய்து எழுத்தார்வத்தைத் தூண்டின. குடும்பம் மீண்டும் சென்னையிலிருந்து வேலூரில் உள்ள திருப்பத்தூருக்குக் குடி பெயர்ந்தது. வையவன் சென்னையிலேயே தங்கினார். ஏதிலியர் இல்லத்தில் அவரது கல்வி தொடர்ந்தது.

வாசிப்பார்வமும் எழுத்தார்வமும் இவரை எழுதத் தூண்டின. மாணவர்களுக்காகதமது 12ம் வயதில்  ‘தமிழொளி’  என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். அதில் கட்டுரை, சிறுகதைகளை எழுதியதோடு ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். பள்ளியிறுதி வகுப்பை நிறைவுசெய்த பின்னர் குடும்பத்தார் வசித்த திருப்பத்தூருக்குச் சென்றார். அங்குள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். வருவாய்க்காக நியூஸ் ஏஜெண்ட், கணக்கர், மளிகைக்கடை உதவியாளர், மலேரியா ஒழிப்பு சூபர்வைசர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். அவற்றில் கிடைத்த அனுபவங்கள் அவரது எழுத்துப் பணிக்கு மெருகூட்டின. ஓய்வுநேரத்தில் கதை, கட்டுரைகளை ’வையவன்’ என்ற புனைபெயரில் எழுதினார். முதல் சிறுகதை 1956ல் ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகிப் பரவலான வாசக கவனம் பெற்றன. எழுத்துப் பணிக்கு வேலை இடையூறாக இருந்ததால் அதிலிருந்து விலகினார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். 1963ல் ஆசிரியர் வேலை கிடைத்தது. மேலும் கற்கும் ஆர்வத்தில் தொடர்ந்து பயின்று முதுகலைப் பட்டங்களையும், பட்டயங்களையும் பெற்றார். கூடவே சிறுகதை, நாவல்களை தீவிரமாக எழுதத் துவங்கினார்.

இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. இரண்டாவது புதினமான ‘ஜமுனா’விற்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது கிடைத்தது. தொடர்ந்து நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகளை எழுதி குவித்தார். உயிரோட்டம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி, வைரமணிக் கதைகள், ஜங்ஷனிலே ஒரு மேம்பாலம், போன்றவை இவரது சிறந்த படைப்புகளாகும். பாடிப்பறந்த குயில், நங்கூரம், செண்பக மரங்கள், தீபிகா போன்றவை இவரது குறுநாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை. நிசப்தகோபுரம், வெடிவழிபாடு  போன்றவை இவரது கவிதை நூல்கள். கண்ணாடிச் சிறையில் சில கடல்கள், ஒரு புதிய பறவை போன்ற இவரது கட்டுரைத் தொகுதிகளும் முக்கியமானவை. ஆனந்த பவன், இடிபாடுகள் போன்றவை நாடகங்கள் ஆனந்தபவன் பாரத வங்கியின் சிறந்த நாடகத்திற்கான விருதைப் பெற்றது. ‘Loving Animals’ Nation builder Nehru’ போன்ற இவரது ஆங்கில நூல்களும் குபிப்பிடத்தகுந்தன. “வையவன் கதைகள் என்ற தலைப்பில்இரு பாகங்களாக வெளியாகியுள்ளன.

நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவையே இவரது கதைகளின் பேசுபொருளாகும்.  வார்த்தை ஜாலங்களோ, மிகைப்படக் கூறுதலோ இல்லாமல் உள்ளதை உள்ளபடிச் சித்தரிப்பவை இவரது படைப்புகள். இவரது பல படைப்புகள் இளமுனைவர், முனைவர் பட்ட மாணவர்களால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

வையவன் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் காமுகண்டே டைரி என்ற நாவலை ஒரு காதல் டைரி என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து மொழிபெர்த்த மகாபலியின் மக்கள் (1982) என்ற நூல் தமிழக அரசின் சிறந்த மொழியாக்க நூலுக்கான பரிசினைப் பெற்றது. ஆண்மை, மாலை மயக்கம் போன்ற படைப்புகளுக்காக இலக்கியச்சிந்தனை பரிசினைப் பெற்றுள்ளார். இளஞ் சிறார்களுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவரது விமர்சனக் கட்டுரை நூல்களும் குறிப்பிடத்தகுந்தன. மகாகவி என்னும் பாரதி பற்றிய விமர்சனக் கட்டுரை நூல் அமுதசுரபி – ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதி பண்பாட்டு மைய விருதையும் பெற்றிருக்கிறது. ஜெகசிற்பியனின் படைப்புலகம்பற்றி ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் ஜெகசிற்பியன் ஒரு பார்வை நூலும் குறிப்பிடத்தகுந்தது. ஆழ்கடலியல் லேசர், அழிவில்லாத ஆற்றல், விண்வெளியும் மனித மேம்பாடும், நோயறியும் கருவிகள் போன்ற இவரது அறிவியல் நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை. தனது அறிவொளித் திட்ட எழுத்தறிவுப் பணிக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்றிருக்கிறார். இவரது கதை வசனத்தில் உருவான நம்ம ஊரு நல்ல ஊரு குறும்படம் கிராமப்புற மேம்பாடுபற்றிச் சித்திரிக்கும் சிறந்த குறும்படமாகும்.

சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிய வையவன், பணி ஓய்விற்குப் பின் தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாமே ஆசிரியராக, பதிப்பாளராக இருந்து தனது படைப்புகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து 100 நூல்களாகக் கொண்டு வந்திருக்கிறார். தனது மகள் பெயரில் அமைந்த தாரிணி பதிப்பகம் மூலம் தமிழிலும், English Titles பதிப்பகம் மூலம் ஆங்கிலத்திலும் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறார். பள்ளிப்படிப்பை முறையாக முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி  அளிப்பதற்காக மத்திய அரசின் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் திட்டத்தின் ஆதரவுடன் ஐக்கியா டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுது்தி மாணவர்களுக்கு உதவி வருகிறார். தனது பள்ளிப் பருவத்தில் எழுதத் துவங்கிய வையவன் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகிறார். அகவை எழுபத்தைந்தைக் கடந்த போதும் இளைஞர்களுக்கு இணையாக இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைப்பூக்களில் பங்களித்து வருகிறார். innaiyaveli.blogspot.in என்பது இவரது வலைப்பதிவாகும்.

மனைவி சகுந்தலா, மகள் தாரிணி, மகன் ஜீவகன்.மகனுடன் சென்னையில் வசித்துவரும் வையவன், புகழையோ, பிரபலத்தையோ விரும்பாது, தன்னை எதிலும் முன்னிறுத்திக் கொள்ளாது அமைதியாக எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்ல, சிறந்த மனிதராகவும் மதிக்கத்தக்கவர் வையவன்.: நன்றி – தென்றல் பிப்ரவரி 2015 )

 

 

“ஐயய்ய…இது வேணாம் தம்பி.”

சண்டையிலிருந்து திரும்பிய சக்தி தடுத்தாள்.

“ஏன்?”

“உனக்கு நாஷ்டா வாங்கியாரச் சொல்லியிருக்கேன்.”

“இருக்கட்டும். அதையும் ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.”

“இது கேப்பக் கூளு. நீயெல்லாம் சாப்பிடக் கூடாது.”

ஒரு மணி நேரத்துக்கு முன் சண்டை போட்ட ஆதியா இவன்? என்னமாய்க் கூசிக் குறுகுகிறான்? மனிதன் கூச்சப்படும்போதுதான் அவன் மேன்மை வெளிப்படுகிறது.

“நானும் கிராமத்தான் தான் ஆதி! நான் ஒண்ணும் மகாராஜா பிள்ளை இல்லே. சாதாரண ஹெட் கான்ஸ்டபிள் மகன்.”

“அதுக்கில்லே.”

“அம்மா போனப்புறம் அப்பாவுக்குப் பிடிக்குமேன்னு கூழ் கிண்டக் கத்துக்கிட்டேன்.”

“பட்டம் வாங்கியிருக்கியே தம்பீ! பம்பு செட்டு ரிப்பேர் பண்ண வச்சதே தப்பு. அப்புறம் வேற கூளைக் கொடுக்கணுமா?”

மேலும் அவனைப் பரிதவிக்க அனுமதியாமல் ஈய டிபன் தூக்கின் மூடியைத் திறந்தான். கும்மென்று மணம் தூக்கிற்று.

“சுடக் கூழா.”

“ஏன் உனக்குப் புடிக்காதா தம்பீ?”

“நானா சொன்னேன்? இங்கே ஒரே ஒரு டம்ளர்தானே இருக்கு? இன்னும் ஒரு டம்ளர் வேணுமே!”

“இரு… பம்பு ஷெட்டிலே வேற ஒரு கிளாஸ் வச்சிருக்கேன்.”

ஆதி எழுந்து போனான்.

யதேச்சையாகப் பார்வையைத் திருப்பிய போது சின்னதாகத் தேய்ந்து போன டிடர்ஜெண்ட் கட்டி தெரிந்தது. நித்யா விட்டு விட்டுப் போனது. ஆதி சண்டையிலிருந்து மீண்டு வருமுன்பே அவள் போய்விட்டாள்.

அவன் அவளுக்காகத் தண்ணீர் இறைத்ததையும், துணி துவைத்துக் கொண்டே அவர்கள் வம்பளந்ததையும் கூட்டம் பார்த்திருக்கிறது. கௌதம் நினைத்தான்‘விட்டலாபுரத்தில் ஒருவன் பார்த்தாலே ஊரே பார்த்த மாதிரி. இது கூட்டம். கொஞ்சம் சிறகு வைத்துப் பறக்க விடுவார்கள். சிலருக்கு ஆதங்கம். பலருக்கு வயிற்றெரிச்சல்.’

“வெளியூரானுக்குத் தாண்டா நாம் ஊர்லே யோகம்!”

அன்றைக்கு பஸ் ஸ்டாப்பில் டீக்கடை வைத்திருக்கிற நாயருக்கும், தனக்கும் என்று பொதுவாக ஒருவன் வீசிவிட்டுப் போன சொல் நினைவு வந்தது.

அவன் திரும்பி, எத்தனையோ தாம்போகிப் பாலத்தையும் ஆற்று மணல் வெளியையும் கரையோரம் இமைத்து நிற்கும் தென்னை மர வரிசையையும்,ஊருக்கு மகுடமிட்டு நிற்கும் அனந்த சயனப் பெருமாள் கோயிலையும் பார்த்தான்.

நெஞ்சில் ஏதோ கேவிற்று. ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை ஏழு வருஷம். ஆற்றில் ஏழு வெள்ளங்கள். தாம்போகிக் கண்மாய்க்குள் ஆற்று வெள்ளம் பாயும் போது எதிர் நீச்சல்கள்.

பிறந்து வளர்ந்து இந்த ஊரின் அழகும் அருமையும் அறியாது மாண்டு போன ஆயிரக்கணக்கானோருக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தம் எனக்கில்லையா?

அம்மா கையைப் பிடித்துக் கொண்டு போய் ஹைஸ்கூலில் சேர்த்தாள். ‘பையன் எப்படிப் படிக்கிறான் சார்?’ என்று மாதம் தவறாமல் வகுப்பு விடாமல் வந்து, ஆசிரியருக்குத் தாய்மைக் கரிசனத்தைக் கூச்சமின்றி வெளிப்படுத்தினாள். கடைசியில் அதோ அந்த ஈச்ச மரப் புதர் அருகே சாம்பலானாள். அப்புறம் அவன் பதக்கம் வாங்கியதைப் பத்திரிகைகள் படம் போட்டு வெளியிட்டன. விட்டலாபுரம் மேல் நிலைப் பள்ளியின் பெயரையும் சேர்த்து.

தான் வெளியூர், இங்கே தனக்குச் சொந்தமில்லை என்று பொறுமுகிறவர்களை நினைத்தான்.

இதற்கு மேல் ஒரு சொந்தமா? யார் வழங்குவது அதை? கிராம நிர்வாக அதிகாரியா? ஜனன மரண ரிஜிஸ்தரா?

நித்யா விட்டலாபுரத்தில் பிறந்தவள். அந்த ஊர் மண் காலில் ஒட்டிக்கொண்டு கூட அடுத்த ஊருக்குப் போய்விடக் கூடாதாம்.

கையில் தம்ளரோடு ஆதி திரும்புவதைக் கண்டதும் மனசுக்குள் யாரோடு நாம் சண்டை போடுகிறோம் என்று விழிப்பு வந்தது. யாரிடமுமில்லை. சொந்த ஊர் என்பதால் மட்டும் சொந்தம் வந்து விடாது. இல்லாததால் அது போய் விடாது.

ஆதி தம்ளரைக் கழுவிக் கொண்டு வந்திருந்தான்.

அவன் மிதமான உயரம். சிரிக்கும் போது ஒரு பேதைமை. உழைக்கும்போது ஒரு மூர்ச்சனை. ஆதிக்கு இது சொந்த ஊர். காலின் சக்கரம் சென்னை,பம்பாய், தில்லி என்று திரிந்து சுற்றிவிட்டு இப்போது துபாய்க்குத் துடிக்கிறது.

கூழை வாங்கி ஒரு மிடறு குடித்தான்.

ஆலிலையில் எலுமிச்சையளவு புளியும் வெங்காயமும் வைத்து அரைத்த துவையல்.

“இதைத் தொட்டுக்கோ தம்பி…”

கூழில் மிதமான உப்பு. லேசாக மோர் விட்டிருந்தாள் மகாலட்சுமி. துவையல் நாவில் ஊற்றிய நீரில் ஐக்கியமாகி, சுகம் மண்டை வரை எட்டியது.

“அற்புதம் ஆதி!”

“சும்மானாச்சும் சொல்லாத தம்பீ!”

எளிமை, தான் எளிமையானதே என்று உணர்ந்திருப்பதால் அது எத்தனை சத்தியம்!

“இந்த ஊரை விட்டுட்டு, இந்த ஆத்தோர நெலத்தை விட்டுட்டு, இந்தக் கூழை விட்டுட்டு, ஏன் எங்கேயோ பறந்து போயிடணும்னு துடிக்கிறே ஆதி?”

அவன் வாயைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தவறு நேர்ந்து, அதற்கு நீதி உபதேசம் கேட்கிற பாவனையில் ஆதியின் முகம் பவ்யமாயிற்று.

“இதுக்கு மேல நிம்மதியும், திருப்தியும் வெளியே கிடைக்கும்னா நினைக்கிறே?”

ஆதி அவனையே ஒரு முறை கண் சிமிட்டாமல் பார்த்தான். பிறகு தலைகுனிந்து இன்னொரு தம்ளர் கூழ் வார்த்தான்.

“அப்படியில்லே தம்பி…” சொல்லிக் கொண்டே தம்ளரை நீட்டினான்.

கௌதம் வாங்கிக் கொண்டான்.

“நீ பட்டம் வாங்கினே. வேலை கிடைக்கலேன்னு ரோதனை கொட்டிக்காம பொசுக்குணு தெரிஞ்ச வேலைகளைச் செஞ்சு காலம் தள்றே. தெம்பா இருக்கே. மனசைச் சஞ்சலப்பட விடாமே கட்டுலே நிக்கிறே.”

“இதெல்லாம் எதுக்கு இப்போ? காதுக்குப் பூ சுத்தறியா?”

“அட நீ ஒண்ணு! உள்ளதுதானப்பா.”

“இப்ப நான் சொல்லட்டா?”

“சொல்லு.”

“எனக்குக் கட்டும் இல்லே. கத்தரிக்காயும் இல்லை. வேலைக்கு எழுதிப் போடறேன். வர்றதில்லை. வந்து தான் எதுவும் ரொம்பணும்னு விதியில்லே. அப்பா பென்ஷன் வந்துட்டிருக்கு. போன வருஷம் ஊர்ல புஞ்சை மோட்டிலே ரெண்டு புட்டிக் கடலைக்காய் வந்தது. கைச்செலவுக்கு அவருக்குப் போதும். படிக்க மட்டும் தானா செஞ்சேன்? எத்தனையோ கைத்தொழில் கத்துகிட்டேன் அதுங்க எல்லாம் எங்கே போறது? பழங்கடப்பானையிலே போட்டு மூடியா வக்கச் சொல்றே?”

ஆதி துவையலை வழித்த விரலைப் பார்த்துக் கொண்டே கேட்டான்;

“வெள்ளிக்கிளமை சினிமாக் கொட்டாயிலே பாதில மிஷின் ரிப்பேர்ன்னு அவுட் பாஸ் குடுத்தானே! அதை நீதான் ரிப்பேர் பண்ணினியா?”

ஆதி திடீரென்று விஷயத்தை விட்டு விட்டு தன் அதிசயோக்திகளுக்குத் தாவி விட்டான். புரிந்தது.

“ஆபரேட்டர் சொன்னாரா?”

“அடடா அவரு ஒன்னைப் புகழ்ந்ததை நீ கேட்டிருக்கணுமே!”

“நீயும் ஒரு கிளாஸ் கூழ் ஊத்திக்க.”

ஆதியை மேலே பேச விடாமல் கரை மாற்றினான். ஆதியும் சொல்லுக்குக் கட்டுப்பட்டான்.

ஒரு வாய் அவன் விழுங்கட்டும் என்று காத்திருந்து கௌதம் கேட்டான்.

“நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலே ஆதி.”

“நான் மறக்கலியே.”

“சொல்லு.”

ஆதி ஆற்றைப் பார்த்தான், திடீரென்று முகம் திரும்பி அவனது கீழ்க் கன்னச்சதை நடுங்குவது தெரிந்தது. அழுகிறானோ?

கௌதமுக்கு அழுகை பிடிக்காது. அதுவும் ஆண் அழுகை. எதற்காகவும் என்ன நேரிட்டாலும் அழுது அழுது புலம்புவதும் அழுகையை ரசிப்பதும்,ரசிக்கிறார்கள் என்பதற்காக அழுவதும்!

எட்டாவது முடித்த கையோடு பூந்துறை ஸ்டேஷனில் கௌதமின் அம்மா சாவித்திரியின் பிரேதத்தை இறக்கிய போது, ஓவென்று அவன் கதறிய கதறல் பூந்துறை ஸ்டேஷனைக் கலக்கிற்று.

அம்மாவின் பிரேதத்தோடு உடன் இறங்கிய அவன் தந்தை சபாநாயகம், அவனைக் கட்டிப் பிடித்துக் கதறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அவன்கூட.

ஆனால் அவர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் வந்தது.

சீச்சீ, இதென்ன வெட்கக்கேடு! என்று அவர் வெட்கப்பட்டவர் போலக் கண்ணீர் முகத்தில் வழியுமுன் தோளில் போட்ட துண்டால் துடைத்துக் கொண்டார்.

பிறகு அவனை ஆழமாக, இடைவெளியின்றி வெகு நேரம் பார்த்துவிட்டு அவன் வலக்கையைத் தம் கையால் இறுகப் பற்றிக் கொண்டார். அதற்கப்புறம் அவர் அவனுக்கு அழ வாய்ப்பளித்ததே இல்லை.

“என்ன ஆதி?”

அவன் முகம் திரும்பினான். விழிகள் பளபளத்தன. அழுகை கரைகட்டி நின்றது. அதைச் சந்திக்க விரும்பாமல் இமை தாழ்த்தினான் கௌதம்.

“அம்மாவுக்கு, எனக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு ஆசை தம்பீ… என் கைல நாலு காசு இல்லன்னா ஊமை மாமியாரை எந்த மருமவ மதிப்பா சொல்லு?”

ஆதி மனசைத் தாக்கி விட்டான்!

“அட பொம்பளை வேணும்னா எங்கியோ போய்ப் பொரண்டு எவளையோ இஸ்தாந்து வச்சுக்கலாம். இந்த வாயில்லா ஜன்மத்து மனசு கலங்காம அதுக்குச் சோறு போட்டு, துணி தொவிச்சு, வாரிப் போடறதுக்கு முன்னே கால் மாட்டிலே ஒக்கார ஒருத்தியாப் பார்க்கறேன். எல்லாம் பணம். எதுக்கும் பணம். போவுது காலம்! நானும் தேடறேன்.”

ஆக இதுவும் அம்மாக்கள் விவகாரம்.

அம்மா.அம்மா. இப்படி சின்னச்சின்னப் பல் சக்கரங்களாக ஒன்றையொன்று தள்ளி, சிறியது பெரியதைத் தள்ளி, எதற்கோ எங்குமே இயங்கும் யந்திரங்களின் உந்துவிசை அவள்தானா? இருக்கலாம். யார் அறிவார்?

பேச்சை மாற்றியாக வேண்டியிருக்கிறது. இதோ பாம்பு உரித்துப் போட்ட தோல் கிடக்கிறதே இது மாதிரி. புது வளர்ச்சிக்கு, புதிய பரிமாணத்திற்கு புகழ்ச்சியில் மூச்சுத் திணறி விடாமல் இருக்க, ஆள் மாற்றமடைவது போல் பேச்சும் மாற வேண்டும்.

“நொணாமரத்து மாசிலாகிட்டே என்னத்துக்குத் தகராறு?”

“நானா பண்றேன்?”

“பின்னே?”

“நல்ல கதையா இருக்கே! அவ கொளுந்தியா மச்சினன் துபாய்ல வேலை வாங்கித் தர்றான்னு ஆயிர ரூபாயை வாங்கிக்குடுத்தேன். அஞ்சு வட்டி அசலுக்கு நெஞ்சு முட்ட வட்டி ஆயிடுச்சி. வேல வேணாம். ரூபா குடுண்ணு மூணுமாசமாகக் கேக்கறேன். தோ தோண்ணு வாய்தா வக்கிறான். போன செவ்வாச் சந்தையிலே ஆறாந் தேதி தர்றதா சொன்னான். இன்னிக்குத் தேதி எட்டு.”

“என்ன சொல்றான்?”

“கேக்கப்போனா அவன் கொளுந்தியாள வுட்டுட்டு எங்கியோ ஓடிட்டான்னாம். இவன் தானே ஜாமீனு. பொறுப்பா பதில் சொல்லணுமில்லே.”

கௌதம் காது கொடுத்தான்.

“நீ என்ன பண்றியோ பண்ணிக்கன்னான். கொலவுழும்ணு கத்தினேன். கொடலை உருவிடுவேன்னான். உருவுடா பார்க்கலாம். நீ ஆம்பளையானாக் கொடலை உருவுடான்னேன்.”

“கை வச்சுட்டான். இல்லியா?”

ஆதி பதில் சொல்லவில்லை.

“அவனாலும் கொடுக்க முடியாது. அவன் நெலையே ஆட்டம் கண்டு போச்சு. தெரியும்லே.”

“தெரியும் தெரியும்.”

“ஆறு மாசத்துக்குள்ளே ஒருத்தன் ரெண்டு அடி வாங்கினான்னா…அதுவும் என்ன மாதிரி அடி?”

கௌதம் நினைவில் தோய்வது போன்று பேச்சை நிறுத்தினான்.

கூழ் தீர்ந்து விட்டது. ஆதி இரண்டு தம்ளர்களையும் பாத்திரத்தையும் கழுவ எழுந்தான். கௌதம்,  தாம்போகிப் பாலத்தின் மீது வீட்டு வேலை முடிந்து துணி வெளுப்பதற்காக இடுப்பில் ஆளுக்கு ஓர் அன்னக் கூடையோடு கைவீசி நடந்துவரும் பெண்களைப் பார்த்தான். பாத்திரங்களை அலம்பிக் கொண்டே ஆதி பேசினான்.

“நான் கொடுத்த பணத்தைக் கேக்கத் தானே போனேன், தம்பீ?”

“நீ போன வேளை சரியில்லே.”

“நான் என்ன செய்யட்டும், என் கடன்காரன் பொழுது விடியறப்பவே என் வீட்டுக் கதவைத் தட்டிடறான்.”

லேசான காற்று வந்தது. அலையலையாகப் பயிர் வரிசைகளை, மயில் கழுத்து நெளிவது போல அசையச் செய்தபடி, அந்த அலை நுணாமரத்துப் பம்பு ஷெட் வரை ஒரு சிறு தூரப் பயணம் போயிற்று.

காற்றோட்டத்தோடு கண்ணோட்டம் செலுத்திய கௌதம் பார்வையை மாசிலாவின் குத்தகை நிலத்தில் நிறுத்தினான்.

பதின்மூன்று ஏக்கர் நிலம் அது!

முதலில் மாசிலா பத்து வயதுப் பையனாக மண் மிதித்த பூமி. அவனுடைய அப்பன் மாரிமுத்துதான் கைபிடித்து அவனை அழைத்து வந்தானாம்.

விட்டலாபுரமே சொல்லும்.

கோரையும் காட்டுச் செடிகளுமாகப் புதர் மண்டியிருந்த நிலம். ஆற்றை ஒட்டிய சிறு மேடு. குறுக்கு வழியென்று மாட்டு வண்டிப் பாதைக்காகச் சக்கரங்கள் ஓடி ஓடி திமிசு வாங்கிய பூமி.

மாரிமுத்துவை கௌதம் பார்த்ததில்லை. விட்டலாபுரம் சொல்லியிருக்கிறது.

கருங்காலி மரத்துச் சட்டம் மாதிரி, வலுவான கட்டடம் உள்ள உடம்பாம். ஆள் வைத்து வேலை வாங்கினான் என்றாலும் வெள்ளி முளைத்ததும் தெரியாது; மறைவதும் தெரியாதாம். அப்படி ஓர் ஈடுபாடு! அவன் சமப்படுத்திய நிலம் அது!

இன்றுதானே டிராக்டர்! அன்று மாரிமுத்து கலப்பையைப் பிடித்தால் ஏர்முனை அரையடி இறங்குமாம். மாசிலாவின் ஏர்முனை முக்கால் அடி இறங்குவதைக் கௌதம் பார்த்திருக்கிறான்.

எவ்வளவு வியர்வை. எல்லாம் ரத்தம். வியர்வையான ரத்தம். அவன் அப்பன் மாரிமுத்து மஞ்சள் காமாலையில் உயிர் விட்டான். விட்டலாபுரத்து விளைச்சல். காண கொல்லி மலையில் இருந்து இறங்கி வந்து உதிரம் ஊற்ற வந்த சொந்தம்.

நுணா மரத்துப் பம்பு ஷெட் அவர்கள் முன்னின்று வெட்டியதுதான். முகம் தெரியாத முதலாளி, பணம்தான் அனுப்ப முடியும். பணமா கிணற்றை வெட்டும்?மனிதர்கள் தேவைப்பட்டனர். மாரிமுத்துவையும் மாசிலாவையும் போல் மண்ணை நேசித்த மனிதர்கள்.

மண் கூட மாதா மாதிரிதான். அம்மாவேதான். முட்டி முட்டிக் குடிக்கிற கன்றுக்குத் தாய்ப் பசு நிறையத்தான் சுரக்கிறது. சொந்தமா சொந்தமில்லையா என்ற கணக்கு வழக்குப் பார்க்காமல் மாதாவின் மார்பில் முட்டி முட்டி வெட்டிய கிணறு அது.

வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே வெள்ளம் ஓடும் பாலாற்றில், மீதி நாட்களில் விட்டலாபுரம் பெண்களுக்கு நுணா மரத்துப் பம்பு ஷெட்தான். படித்துறை, வம்பளப்பு கவுண்ட்டர்.

“கரண்ட் வந்துச்சு தம்பி.”

“போ… போ, போயி மோட்டார் ஸ்விட்சைப் போடு.”

ஆதி ஸ்விட்சைப் போட்டு விட்டான்.

உறுமிக் கொண்டே எழுந்து உதறிவிட்டு ஹூங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது மோட்டார்.

author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *