மணல்வெளி

This entry is part 15 of 33 in the series 6 அக்டோபர் 2013

திருவரங்கப்ரியா

 

மனவெளி என்றதலைப்பைவிட இந்த மணல்வெளி  என்னும்  தலைப்புஅனைவருக்குமானதாக  தோன்றியது. மனவெளியின் பதிவு தனிமனித அனுபவச்சாயல் படர்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். மணல்வெளி  பொதுவானதாக இருக்கிறதல்லவா? மேலும் வெளி அனைவருக்கும் சொந்தமானது. உள் என்பது பிரத்தியேகமானது அவரவர்க்கானது.

 உள் என்பதிலிருந்துதான் உள்ளம் என்ற சொல் வந்திருக்கவேண்டும். உள்ளம்  இருக்கிறது ஆனால்  கண்ணுக்குத்தெரிவதில்லை. இல்லாத ஒன்றுடனே நமக்கான உறவு பலமானது. உள்ளத்தின் உட்ச்செல்ல  ஒருவரால்தான் முடியும். இதயச்சுரங்கத்தில்  ஒற்றையடிப்பாதைமட்டும்.
உள் என்பதன்  எதிர்ச்சொல்  வெளி என்றாலும் பொருள்  எனப் பார்த்தால் இரண்டும் ஒன்றாகத்தெரிகிறது. இரண்டும் -. இருக்கிறது ஆனால்   தொடும்  வகையில் இல்லை  சிதம்பர ரகசியமே இதுதானே சித்- அம்பரம்! அம்பரம் எனில் வானம் என அனைவரும் அறிவோம். புறவெளி நமக்கானதுதான். ஒவ்வொருத்தருக்கும் சொந்தமான பொதுச்சொத்து.
வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதிதரும் என்ற கவிஞரின் வரிகள் அற்புதமானவை..ஆண்டாளும்  அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்    என  வானத்தை முதலில் சொல்லிக்கொண்டாடுகிறாள்
அப்படி என்ன இருக்கிறது புறவெளியில்? ஒவ்வொன்றாய்ப்பார்க்கலாம்.
திருவரங்கம் கோவிலில் மணல்வெளி என்றே  ஒரு வளாகம் இருக்கிறது  சென்னைம்மக்களுக்கு மெரீனா கடற்கரைபோல் அரங்கநகரமக்களுக்கு மணல்வெளி  மாலைநேர மனவெளிப்பாடுகளின் வடிகால். நல்ல ஆற்றுமணல்  ..காலைப்புதையப்புதைய இழுக்கும்..வெய்யில் நாட்களில் பாதம் பழுத்துவிடும்.  அக்குப்பஞ்சர் முறையில்  இப்படி மணலில் பாதம் அழுத்தி நடப்பதுவும் நரம்புகளுக்கு நல்லது என சொல்கிறார்கள்.
சிறுமியாக இருந்தநாட்களில்   அந்தவழியாக அரங்கன்சந்நிதிக்கு ஒருநாள் நடந்து போனபோது  ஒரு வயதானபாட்டி அங்கே அமர்ந்திருந்தார்..  கைவிரல்கள் மணலில் ஏதோ எழுதிப்பார்த்துக்கொண்டிருந்தன.
 அந்த விளையாட்டுப்பருவத்தில் எனக்கு அந்தசெய்கை வேடிக்கையாக  இருந்தது
அருகில்  போய் நின்று குனிந்துபார்த்தேன் மணலை சமப்படுத்தி சிலேட்டு வடிவம் செய்து அதில் அ ஆ   இ ஈ  என்று  விரலால் குழியிட்டு அழகாக எழுதிக்கொண்டிருந்தார்.
என்னைக்கண்டதும் ,’படிக்கிறியா  பாப்பா?’ என்று  ஆர்வமாய் கேட்டார்.
’ஏழாவது படிக்கறேன் ஆமா  பாட்டி இங்கஎன்ன செய்றீங்க?
’உன்னை மாதிரி பொண்ணுகிட்ட நேத்து ஆனா ஆவன்னா இனா ஈயன்னா வரைக்கத்துட்டேன்மா…படிக்க  ரொம்ப ஆசை ஆனா நான் அனாதை  ஏழை..  யாரும் என்னைப்பள்ளிக்கூடம் சேர்க்கல..
சமையல் செய்துபோட உறவுக்காரர் வீட்டோடு வச்சிருக்காங்க.  நேத்து இங்க வெளையாடிட்டு இருந்த   பொண்ணுகிட்ட எதேச்சையா கேட்டேன்  அ ஆ சொல்லித்தரியாபாப்பா  படிக்கணும்னா  ஆசைம்மா” அப்படீன்னேன். சட்டுன்னு கையைப்பிடிச்சி மணல்ல நாலுதடவை எழுதவச்சது..’நாளை வருவேன் பாட்டி மீதி சொல்லித்தரேன்’னு சொல்லிப்போனது.  நேரமாச்சு   காணோம் இன்னும் காத்திட்டிருக்கேன்”
’அப்படியா  இன்னும் நாலெழுத்து  இன்னிக்கு நான் சொல்லித்தரேன்   பாட்டி’என்று  சொல்லத்தோன்றவே இல்லை
ஏதோ  பார்த்தேன் கேட்டேன்  பதில் பெற்றேன்  வந்தேன்  என்ற நிகழ்வாகிவிட்டதை   உடனே மறந்தும்போனேன்
பலவருடம் கழித்து  மணல்வெளியில் நடந்தபோது  கால்தடம் படாத  ஓரிடத்தில் ஏபிசிடி என்ற  ஆங்கிலஎழுத்துக்கள் மணலில் குழிகுழியாய் எழுதப்பட்டிருந்தன. எந்தக்கரத்தின்  ஆர்வ ஊற்று அங்கு பொங்கிவரப்போகிறதோ?
காற்று  வந்து அதைக்கலைத்துவிடக்கூடாதே என்ற கவலையுடனே நகரமட்டுமே முடிந்தது.
சின்னஞ்சிறுவிஷயங்களில்  தப்பிப்போய்விடுகிற  கவனம்   பிறகு பெரிதாக உறுத்திக்கொண்டே தான் இருக்குமோ?
 அனுப்புநர்
Series Navigationஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்காய்நெல் அறுத்த வெண்புலம்
author

திருவரங்கப்ரியா

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    மணல் வெளி மனுஷி.

    அரங்கனின் ஆற்று மணல்
    பாட்டி மாணவி பள்ளியறை.
    அ..ஆ..ஆசிரியரை தேடும்
    சருகான சுள்ளி இலை.
    ஏழாவது படித்த பொண்ணு
    ஆற்றாமையின் மணலுக்குள்ளே
    அலைபாயும் நினைவுகளில்
    பாயும் மனம் ஆத்துக்குள்ளே.
    அரங்கனை பிரியா நல்
    உளம் மட்டும் அகத்துக்குள்ளே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *