மணல்

This entry is part 6 of 18 in the series 23 ஏப்ரல் 2017

 
சுப்ரபாரதிமணியன்
 

”இந்த வீடுதானா.. ஆத்துமணலுக்காக செத்துபோன பையன் இருந்த வீடுன்னு சொல்லியிருந்தா இத்தனை அலைச்சல் இருக்காது” ஆட்டோக்காரன் சற்று அலுப்புடன் வீதியில் நிறைந்திருந்த புழுதியைப் பார்த்தான். மணியனின் பார்வை இரண்டாம் மாடியில் குத்தியிருந்தது. கண்களின் கீழ் பூத்த வியர்வை சிறு தண்ணீர் பள்ளங்களாகியிருந்தது. உடம்பை ஒரு சிரமத்துடன் நகர்த்தி ஆட்டோவை விட்டு வெளியேறினார். ‘அன்பு இல்லம்’ என்ற பெயர் அழுத்தமான நீல நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.

“பத்து நாளா இங்க வர்ரதுக்கு போலீஸ் தொந்தரவு இருந்துச்சு. யாரையும் இந்த பில்டிங் பக்கமே உடலே. எங்க போகணும்.”

“செத்துப்போன பையன் இருந்த ரூமுக்கு..”

“அது ரெண்டாம் மாடியாச்சே.”

“ஆமா.. அதெப் பாக்கணும்ன்னு வந்தேன்.”

“போயிருவிங்களா.”

மணியனின் இயலாமையை அவர் முகம் காட்டிக் கொடுத்து துரோகம் செய்துவிட்டது போலிருக்கிறது. இல்லையென்றால் இப்படியொரு வார்த்தை வந்திருக்காது.

“பதினெட்டு படியிருக்குமா..”

“ரெண்டாவது மாடி அதிகமாகவே இருக்கும்”

பதினெட்டு படி என்று ஏன் கேட்டேன். ஏதோ யாத்திரை போகிற எண்ணத்தில் அந்த வார்த்தைகள் வந்து விட்டதா.. இரண்டு மாடிகளைக் கடந்து போயிட முடியுமா.. சின்ன ராமசாமி இப்படித்தான் பைபாஸ் என்று அறுவை சிகிச்சை செய்தவர் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு வாடகை வாங்கச் சென்றவருக்கு சிரமம் ஏற்பட்டு செத்துப் போனார்.

கொஞ்சம் இனிப்பு நீர் வியாதி இருக்கிறது. அதற்கு மாத்திரை போட்டுக் கொண்டிருக்கிறார். நாலு வருடமாய் . இப்போது நிறைய மாத்திரைகள் சேர்ந்து விட்டன.

இரண்டாம் மாடியில் அவரின் மூச்சிரைப்பை கவனித்த ஒரு முதியவள் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை கையில் எடுத்து திமுதிமுவென்று வந்தாள். வாயைத் திறந்த குருவி ஆகாயம் பார்ப்பது போல மணியன் வாயைத் திறந்து மூச்சு விட்டுக் கொண்டார்.மார்புக்கூடு மேலே கீழே என்று ஏறி இறங்கி இம்சை செய்தது. அவரின் சட்டை வியர்வை மணம் கொஞ்சம் தூரம் கடந்து போனது.

“செத்துப் போன பையன் எங்கிருந்தான்”

“மணலாத்திலெ செத்துப் போனவனா..”

“ ஆமா.”

“நீங்க உக்கார்ந்திருக்கற எடத்துக்கு எதிர் ரூம்தா. எதுக்கு..”

“பாக்கணும்ன்னு வந்தன்”

“சொந்தக்காரங்களா”

“ஆமா..”

“சொந்தக்காரங்கன்னா அவங்க வீட்டுக்கல்ல எழவு கேட்கப் போயிருக்கணும்..”

“அவன் இருந்த ரூமைப் பாக்கணும்ன்னு ஆசை வந்துச்சு..”

பேருந்து பிடித்து ஒன்றரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு வந்து சேர்ந்திருந்தார். தெருவின் பெயரை மட்டும் சொன்னதால் ஆட்டோக்காரன் அலைந்து திரிந்தான்.

“பாக்கணும்மா.. நீங்க யாரு.”

“இந்த பில்டிங் வாட்ச்மேன்னோட வீட்டுக்காரி..”

“அவர் இல்லியா..”

“போலீஸ் ஸ்டேசனுக்கு போயிருக்கார்”

“எதுக்கு..”

“வந்துட்டு போன்னு சொன்னாங்க. அதுதா..”

“எதுக்கு..”

“பையன் செத்தது செத்தான். எங்களுக்கு பெரிய இம்சை..”

வீரண்ணண் மணலை அள்ளுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தான். இன்னும் பெரிய அமைப்பு  எதையும் உருவாக்கவில்லை. ஆற்று மணலை அள்ளிக் கொண்டிருந்த லாரி முன் கைகளை விரித்துக் கொண்டு நின்றிருக்கிறான். லாரி ஓட்டுனரும், கூட இருந்த இருவரும் மிரட்டி அவனை தூரத் தள்ளிப் போகச் சொல்லி தள்ளியிருக்கிறார்கள். மணலில் விழுந்தவன் எழுந்து மறுபடியும் லாரி போகாதபடி கைகளை விரித்துக் கொண்டு நின்றிருக்கிறான். லாரி அவனை அடித்து வீழ்த்திக் கொண்டு போய்விட்டது.

“தாசில்தார், கலெக்டர், போலீஸ்சுன்னு தட்டிக் கேட்ட  பல பேரை இப்பிடித்தா கொன்னிருக்காங்க. பையனுக்கு விபரம் பத்தாது.. வீணா உசிரக் குடுத்திட்டான்.”

“ஆர்வந்தா அம்மா.. எதிர்க்கணும்ன்னு எண்ணம் வந்துட்டப்போ குருட்டு தைரியம் சாதாரணமா வந்திரும்..”

“ரூமைப் பாத்து என்ன பண்ணப் போறீங்க.”

“பாக்கணும்ன்னு தோணுச்சு. அதுதா பஸ் புடுச்சு வந்தேன்.”

“செரி.. இவ்வளவு தூரம் வந்ததுனால தொறந்து விடறன். பத்து நாளா போலீஸ்காரங்க சீல் வெச்ச மாதிரி மூடி வெச்சிருந்தாங்க. இன்னிக்குத்தா இங்கிருந்து எடுத்துட்டு போன கொஞ்சம் புஸ்தகம், போட்டோன்னு கொண்டு வந்து போட்டுட்டு போனாங்க.. இன்னம் வருவம்ன்னு சொல்லிட்டுப் போனாங்க.”

கட்டில் மேல் விரிக்கப்பட்டிருந்த போர்வை சற்றே அழுக்குத் தனத்துடன் கைவிரலில் பிசுபிசுப்பாய் ஓட்டும் என நினைத்தார். மெல்ல மெத்தையில் உட்கார்ந்து அதைத் தடவிக் கொண்டார். தலையணையின் ஓரம் பிய்ந்து பஞ்சு அழுக்காய் வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அவரது தடவலில் சற்றே பரபரவென்று உடம்பைத் தாண்டிச் சென்றது. அவர் உடம்பு பரபரத்துக் கொண்டது.

“பாவம்.. மானாவரி பயிர் பண்ற குடும்பம். பையன் படிச்சு வந்து காப்பாத்துவாங்கன்னு நெனச்சிருப்பாங்க. இப்பிடி அல்பாயுசிலெ போயிட்டான்.”

கட்டிலின் வலது மூலையில் கொஞ்சம் புத்தகங்கள் தாறுமாறாய்  கலைந்து கிடந்தன. அவற்றிலிருந்து அவரின் இடது கால்பட்டு சிதைந்து பழுப்புத் தனத்துடன் வாடை வாசம் கிளம்பியது. கென்சரோ விவாவின் படம் ஒரு புத்தக முகப்பில் தென்பட்டது.

“ஆர்வக் கோளாறு போல..”

“அதிலம்மா.. தீவிரமான பையந்தா..”

”என்ன  தீவிரமோ.. பெத்தவங்களுக்கு கூட பிரயோஜனமில்லாமெப் போனா..”

“அப்பிடி அர்த்தம் ஆகாதம்மா. அவன் உயிர் எத்தனை மதிப்புன்னு உலகமே தெரிஞ்சிருக்கு. பெரிய தியாகம்தான்..”

“தியாகம் சோறு போடுங்களா..”

எழ விருப்பமில்லாதது போல கைகளை மெத்தை மேல் ஊன்றிக் கொண்டு எழுந்தார். வராண்டாவின் இடிந்த கைப்பிடிச் சுவரை தடவிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார். சொர சொரவென்று அதன் சிமெண்ட் தளம் கைகளை உறுத்தியது. அந்த அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாதவர் மாதிரி  இருந்தது. அவர் சட்டென கிளம்பியது. ஏனோ ஆச்சர்யம் தந்தது போல் முதியவள்  அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெயிலின் உக்கிரம் அவள்  பார்வையை வேறு பக்கம் திருப்பச் செய்தது.

 

“போராளியின் வாழ்வைவிட மரணம் அதிகமாகச் சாதிக்கும்” என்ற முத்துகுமாரின் வரிகளை கென்சரோ விவாவின் படத்தினருகில் எழுதியிருந்ததை அவர் கவனித்திருந்தார்.

“என் கண்ணை தோண்டி அமிலம் ஊற்றி, காலை வெட்டி, கையை உடைத்து, குடலை கிழித்து, சதையை அறுத்து, என்னை கொன்று விட்டதாக மார்தட்டும் என் இனிய எதிரியே, நீ அறிவாயா.. போராளியின் வாழ்வை விட மரணம் அதிகமாகச் சாதிக்கும்” என்ற முழு வாக்கியத்தையும் மனதில் கொண்டு வந்து பார்த்துக் கொண்டார்.

கைபேசியில் ஏழெட்டு புதுச் செய்திகள் வந்திருந்தன. தேனம்மை நான்கு முறை அழைத்திருக்கிறாள். ‘அன்பு இல்லம்’ பார்க்கப் போவதாகச் சொல்லியிருந்தாள் தேனம்மை. ‘அன்பு இல்லத்தில் அவரின் உறவினர் ஒருவரைச் சேர்க்கக் கேட்டிருந்தார். போய் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார். அந்த உறவினர் பெற்றக்குழந்தைகளால் நிராகரிக்கப்பட்டு தனிமையாக்கப்பட்டிருந்தார். தனிமை அவரை தற்கொலைக்குக் கூட தள்ளிக்கொண்டு போக பல சந்தர்ப்பங்கள் அமைந்து விட்டன.

இப்போது  கூட அரைமணி நேரமாய் இருந்த இடம் கூட  இன்னொரு  ‘அன்பு இல்லம்’  என்பது ஞாபகம் வந்தது. இக்கட்டிடத்தில் ‘அன்பு இல்லம்’ என்ற பெயர் அழுத்தமான நீல நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டார்.

——————————-

Series Navigationநவஜோதி ஜோகரட்னம் தொகுத்திருக்கும் மகரந்தச்சிதறல்மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    Nagarathinam Krishna says:

    மணல் சிறுகதை ஆசிரியருக்கு பாராட்டுதல்கள்.

Leave a Reply to Nagarathinam Krishna Cancel reply

Your email address will not be published. Required fields are marked *