மண் சமைத்தல்

This entry is part 30 of 44 in the series 16 அக்டோபர் 2011

(ரெ.கார்த்திகேசு)

இருபது மாணவர்கள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் வேன்டன்பர்க் வழக்கமாக தாமதமாக வருபவர்தான். ஆனால் பத்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது. பதினைந்து நிமிடம் வரை பேராசிரியர் வரவில்லையென்றால் மாணவர்கள் கலைந்து செல்லலாம் என்ற விதி உண்டு. இருந்தும் மாணவர்கள் காத்திருந்ததன் காரணம் வேன்டன்பர்கின் வகுப்பு சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். அதை எதிர்பார்த்துத்தான்…!

அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக் கழகத்தில் பரவெளி ஆய்வு மையத்தின் ஆய்வுக் கூடத்தில் காத்திருந்த மாணவர்கள் இருபது பேரும் பரவெளிக் கோள்களில் கனிம வளங்கள் பற்றி வெவ்வேறு தலைப்புக்களில் பி.எச்டி. செய்பவர்கள். வேன்டன்பர்க் அதில் வல்லுநர். பரவெளிக் கனிமங்கள் பற்றி எட்டுப் புத்தகங்கள் எழுதியுள்ளார். 2052இல் சந்திரனுக்குப் போய் ஆறு மாதங்கள் தங்கி ஆராய்ந்திருக்கிறார்.

அருணன் செல்வராஜ் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்டெஃப்னி டங்கனின் தொடையத் தடவியவாறு இருந்தான். “சும்மா இரு அருண்! ஆளைச் சூடேத்தாதே!” என்று அவள் அவன் கையைத் தட்டியபடி இருந்தாள்.

“வா ஸ்டெஃப், எங்காவது போய் காதல் செய்வோம்! வேன்டன்பர்க் இனி வரமாட்டார்!”

“ஒரு அஞ்சு நிமிஷம் பார்ப்போம். அதுவரை காத்திருக்காத காதல் என்ன காதல்?” என்றாள் ஸ்டெஃப்.

“காதல் வாழ்நாள் வரை காத்திருக்கும். என்னால்தான் முடியாது!” என்றான்.

வேன்டன்பர்க் ஒரு புயல் போல உள்ளே நுழைந்தார். அவர் நுழைந்த வேகத்தில் அவர் போட்டிருந்த கோட்டும் டையும் பறந்தன.

“கிளாஸ், இன்றைக்கு வகுப்பு கேன்சல்!” என்றார் உற்சாகமாக!

ஆனால் வகுப்பு மகிழ்ச்சி ஆரவாரம் ஏதும் செய்யவில்லை. வகுப்பு ரத்தாவதை விரும்பிக் கொண்டாடும் மாணவர் கூட்டமல்ல அது. தீசிசை எப்போ முடிக்கலாம் என படபடப்புடன் காத்திருக்கும் கூட்டம். அமைதியாக, கொஞ்சம் கவலையாகக்கூட இருந்தார்கள்.

“ஓகே! நான் என்ன பிணங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேனா? யாராவது ஏன் என்று கேளுங்கள்!” என்றார்.

“ஏன் பேராசிரியரே?” என நாலைந்து குரல்கள் எழும்பின.

“ஏன் என்றால் நான் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்!”

“உங்கள் மனைவி விவாகரத்து கொடுக்கச் சம்மதித்துவிட்டாரா?” என்று ஒரு மாணவர் கேட்டார். வகுப்பு சிரித்தது.

“நான்சென்ஸ்! அப்படி நடந்தால் நான் உங்களுக்கெல்லாம் ஷெம்பேன் பார்ட்டி கொடுத்துக் கொண்டாடுவேன். இது வேறு.ஆனால் இன்றும் என் சந்தோஷத்துக்கு ஒரு விருந்து உண்டு. இன்றைக்கு மாலை நீங்கள் அனைவரும் என் அப்பார்ட்மண்டிற்கு வரலாம். அனைவருக்கும் பிட்சாவும் சாண்ட்விச்சும் உண்டு!”

“வைன்?”

“ஆம், வைனும் உண்டு!”

வகுப்பு “ஏ” என்று கத்தியது.

அருணன் கேட்டான்: “என்ன விசேஷம் பேராசிரியரே?”

“அப்படிக் கேள். இந்த வகுப்பில் உன்னைப் போல ஒரு புத்திசாலி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த ஆய்வு கிராண்ட் எனக்குக் கிடைத்திருக்கிறது. இப்போதுதான் இமெயில் பார்த்தேன்!”

வேன்டன்பர்கிடம் ஏற்கனவே நாலைந்து பெரிய கிராண்டுகள் உள்ளன. அதற்கெல்லாம் சாதாரணமாக மகிழ்பவர் இல்லை. இந்த கிராண்ட் மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

“இது சாதாரண ஆய்வு இல்லை. பிராக்சிமா சென்டோரி (Proxima Centaury) மண்டலத்தில் பிசி306 என்ற கிரகத்தில் கனிம வள ஆய்வு செய்ய எனக்கு அமெரிக்க அரசும் ஜப்பானிய அரசும் சேர்ந்து பெரும் கிராண்ட் வழங்கியுள்ளன. பெரிசு! சில நாடுகளின் வருடாந்திர பட்ஜெட்டை விடப் பெரிசு. கிளாஸ்! நான் இந்த சூரிய மண்டலத்தை விட்டுப் பறக்கப் போகிறேன். என்னோடு துணைக்கு நாலு பேர் வேண்டும். கமான் பீப்பள்! இன்றிரவுக்குள் என் வீட்டுப் பார்ட்டியில் யார் என்னிடம் பெயர் கொடுக்கிறீர்களோ அவர்களை நான் என் உதவியாளர்களாக அழைத்துச் செல்வேன். இந்த வகுப்பில் உள்ளவர்களுக்குத்தான் முதல் சலுகை. யோசியுங்கள்! தாராள அலவன்ஸ் உண்டு. திரும்பி வந்தவுடன் உங்கள் அனுபவம் பற்றிப் புத்தகம் எழுதியும் சம்பாதிக்கலாம்.”

*** *** ***

கேம்பசிலிருந்து ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பேராசிரியர் வேன்டன்பர்க்கின் அடுக்குமாடி வீட்டிற்கு சூரிய சக்தியில் இயங்கும் டிராமில் சென்றுகொண்டிருந்தபோது அருணன் ஸ்டெஃப்னியிடம் கேட்டான்: “என்ன நெனைக்கிற ஸ்டெஃப்? வேன்டன்பர்க் பயணத்தில நாமும் கலந்து கொள்ளலாமா?”

ஸ்டெஃப்னி கொஞ்சம் யோசித்துச் சொன்னாள்: “இந்தப் பயணம் ரொம்பக் கடுமையானது அருண். அதோட எனக்கு இப்படிப் புதிய கண்டு பிடிப்புக்களெல்லாம் செஞ்சி பெரிய சாதனை புரியிறதில ஆர்வம் இல்ல!. பட்டம் வாங்கின கையோட ஒரு விரிவுரையாளர் வேலய தேடிக்கிட்டு உன்னோட அமைதியா வாழணும். நான் சொல்றது இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றண்டின் பிற்பகுதியில ஒரு பித்துக்குளித்தனமா தெரிஞ்சாலும் நான் உன்னோட சேர்ந்து நிறையக் குழந்தைகள் பெத்து வளர்க்க விரும்புறேன் அருண்!”

அவளை அணைத்து இதழ்களில் ஒரு அன்பு முத்தம் கொடுத்தான். “கிரேட்! நானும் அப்படித்தான். தீஸிஸ் சப்மிட் பண்ணின அன்னைக்கு ராத்திரியே ஆரம்பிப்போம்!”

“எத ஆரம்பிப்போம்?”

“குழந்தைகள் பெத்துக்கிறதத்தான்!”

இருவரும் சிரித்தார்கள்.

அருண் தொடர்ந்து சொன்னான். “சூரிய மண்டலத்த விட்டு வெளியேறி ப்ரோக்சிமா செண்டோரிடோரிக்குப் போனாலே வாழ்க்கை முறையே மாறிப்போகும். இப்பத்தான் முதல் மனிதக் காலனி அங்கே குடியேறியிருக்கிறாங்க! அவங்க வாழ்க்கையில ஏற்பட்ற மாற்றங்கள் என்னன்னு இன்னும் கூட சரியா ஆய்வு செய்யப்படல. இந்த வேண்டர்பர்குக்கு ஏன் இப்படி ஒரு ஆசையோ தெரியில!”

“எனக்குத் தெரியும். விவாகரத்து மூலம் தன்னுடைய சொத்து அத்தனையையும் பறிச்சிக்கப் பேய் போல அலையிற அவருடைய மனைவி கிட்ட இருந்து எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போக விரும்புறதுதான் காரணம்!”

சிரித்தார்கள். டிராமிலிருந்து இறங்கி வேன்டன்பர்கின் 160வது மாடி அப்பார்ட்மெண்ட் போக முதல் லிஃப்டில் ஏறினார்கள். இன்னும் இரண்டு லிஃப்ட் ஏறியாக வேண்டும்.

*** *** ***

வேண்டர்பர்கின் அப்பார்ட்மெண்ட் கட்டிடம் 21ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியின் மேம்பட்டக் கட்டிடத் தொழில் நுட்பங்களை வைத்துக் கட்டப்பட்டது. 160வது மாடி அப்பார்ட்மெண்டிலிருந்து பார்த்தால் மிசௌரி நகரத்தின் விளக்குகளின் ஜொலிப்பில் அது நட்சத்திரங்களாலான ஒரு சிறிய வான மண்டலம் போலத்தான் தோன்றியது. அந்த உயரத்தில் அப்பர்ட்மெண்டின் உள்ளே செயற்கைக் காற்றழுத்தமும் செய்திருந்தார்கள். பெரிய காற்றடித்தால் அந்தக் கட்டடம் ஒரு மரம் போல இலேசாகச் சாயும். ஆனால் உள்ளே இருப்பவர்கள் அதை உணர முடியாது.

மாணவர்கள் வேண்டர்பர்கின் பிட்சாவை மென்று அவரின் விலையுயர்ந்த வைனை பல பாட்டில்களைக் காலி செய்தார்களே தவிர யாரும் அவரோடு பிராக்சிமா செண்டோரிக்கு போக பேர் கொடுக்கவில்லை. சூரிய மண்டலத்தைத் தாண்டும் வான்வெளிக் கப்பலின் ஜி ஃபோர்ஸ் அழுத்தமே முதல் பயம். அதோடு பிராக்சிமா செண்டோரியில் வாழ்க்கை நிலைமை பற்றிய நிச்சயமின்மையும் அவர்களைத் தடுத்தது.

அருணனும் ஸ்டெஃப்னியும் வைன் கோப்பைகளுடன் சோஃபாவின் ஒரு மூலையில் புதைந்து கிடந்த இடத்துக்கு வேண்டர்பர்க் வந்தார். ஒரு சிறிய ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

“அப்புறம் உங்கள் ரெண்டு பேருக்கும் என்ன எதிர்காலத் திட்டம்?” என்று கேட்டார்.

ஸ்டெஃப்னி சொன்னாள்: “கிராஜுவேட் பண்ணினவுடன் இவனுக்கு ஒரு ஆய்வாளர் வேலை. எனக்கு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை வேலை. காலை பத்து முதல் மாலை ஆறு மணிக்கு மேல் வேலை பார்க்க மாட்டோம். எங்களுக்கு வாழ்க்கையில் பெரிய சாதனையெல்லாம் பண்ண வேண்டும் என்ற லட்சியம் கிடையாது.”

“ஆனால் ஸ்டெஃப்னிக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. ஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றான் அருணன்.

“ஏய்! நான் ஒரு டஜன் என்று சொல்லவில்லை. ஆனால் அரை டஜன் வரை ஆட்சேபணை இல்லை!” என்று சிரித்தாள்.

வேன்டன்பர்க் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“என்ன ஒரு பரிதாபகரமான ஜோடி. ஓ மை கோட்!” என்றார்.

“ஏன் அது நல்லதில்லையா பேராசிரியர்?” அருணன் கேட்டான்.

“முதல்ல கல்யாணமே நல்லதில்ல! குழந்தைகள், குட்டிகள், பெரிய நியூசன்ஸ்!”

“உங்க அனுபவத்திலிருந்து பேசிறிங்க. எங்க அனுபவம் வேற மாதிரி இருக்கலாம் இல்லியா?” என்றாள் ஸ்டெஃப்னி.

“அப்படியே இருந்து தொலையட்டும். உங்க விருப்பம். என் வாழ்த்துக்கள். இந்தக் காலத்தில குழந்தைகளப் பெத்து வளர்த்துப் படிக்க வைக்கிறதுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? கிடக்கட்டும்! அருணன், இதக் கேளு. நீ என்னோட ஃபேவரட் மாணவன். புத்திசாலி. இந்தத் துறையில என்னப் போலவே நீயும் அதிகமா சாதிக்கப் போறன்னு எனக்குத் தெரியும். நீ என்னோட பிராக்சிமா செண்டோரிக்கு வா. ஆறே மாதங்கள்தான் நாம் அங்க இருக்கப் போறோம். என்னோட தலைமை உதவியாளனாக நீ இரு. அந்த ஆறுமாதங்களுக்கு நான் உனக்கு பெரிய ஊதியம் தர்ரேன். நீ இந்த பூமியில 20 வருஷம் உழைச்சாலும் அப்படிச் சம்பாதிக்க முடியாது. நீங்க திட்டமிட்ற ஆறு குழந்தைகளையும் படிக்க வச்சி ஆளாக்கலாம். திரும்பி வந்தவுடனேயே உனக்கு உதவி விரிவுரையாளர் வேலையும் தர்ரேன். என்ன சொல்ற?”

அருணன் ஸ்டெஃப்னியைப் பார்த்தான். “ஹனி! என்ன சொல்ற? ஆறு மாதங்கள் காதல் காத்திருக்குமா?”

“காத்திருக்கும். இது நல்ல வாய்ப்புன்னுதான் நெனைக்கிறேன். போ அருணன்! போய் நம்ம குழந்தைகளுக்காகச் சம்பாதிச்சிட்டு வா!” அவன் கைகளை அழுத்திச் சிரித்தாள். அப்புறம் வேன்டன்பர்கைப் பார்த்துச் சொன்னாள்: “ஆனா இந்த ஆறு மாதத்தில பிராக்சிமா செண்டோரியில வேற அழகான பெண் யாரையும் இவன் கண்ணில காட்டிடாதீங்க!”என்றாள் ஸ்டெஃப்னி.

“அழகான பெண்களா? சரியான ஜோக்! அப்படி யாரும் அந்தக் கோள்ல இல்ல. எல்லாம் மண் சமைக்கிற முரட்டுப் பயலுங்கதான்!” என்றார் வேன்டன்பர்க்.

**** **** ****

ஜி ஃபோர்ஸ் அழுத்ததில் அதிர்ந்து போய் பிராக்சிமா செண்டோரியின் பிசி306 கிரகத்தில் காலடி எடுத்து வைத்தபோது அது சிறிய சிறிய கொட்டகைகள் அமைந்த, கட்டிடங்கள் இல்லாத பொட்டல் வெளியாக இருந்தது. பெரும் கண்ணாடிக் கூண்டு அமைத்து அதனுள் காற்றுச் சூழலை உற்பத்திச் செய்துகொண்டிருந்தார்கள். எல்லாரும் பூமியிலிருந்து வந்த முதல் தலைமுறை மனிதர்கள். பொறியியலாளர்கள், தொழில் நுட்பர்கள், விவசாய விஞ்ஞானிகள், மற்றும் முரட்டு உடல் உழைப்பாளர்கள். இனிவரும் தலைமுறைகளுக்காக இந்தப் பொட்டல் வெளியை உயிர்ப்புள்ள உலகமாக்கும் அடிப்படை வேலைகள் ரோபோக்களின் துணையுடன் நடந்து கொண்டிருந்தன.

அங்கு மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது மண் சமைக்கும் வேலைதான். பிசி306இன் பாறைகளை உடைத்து நொறுக்கி நுணுக்கி அதனோடு பூமியிலிருந்து கொண்டு வந்திருந்த சில ரசாயனங்களைச் சேர்த்து மண்ணை உற்பத்தி பண்ணிக் கொண்டிருந்தார்கள். மண் இருந்தால்தான் ஏதாகிலும் பயிர் பண்ணலாம். பயிர் பண்ணினால்தான் வாழ்க்கை. வரப்புயர வாழ்வுயரும்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த குறுகலான அறைகளில் சென்று வேன்டன்பர்க், அருணன் மற்றும் அவர்களின் இரண்டு உதவியாளர்கள் தங்கினார்கள். பிராக்சிமா செண்டோரியின் சூரியன் பிரகாசமாக இருந்தாலும் பிசி360 வாசிகள் அமைத்திருந்த கண்ணாடிக் கூண்டின் கறுப்பு டிண்டினால் அதன் ஒளி பாதி இருளாகவே தரையை வந்து அடைந்தது. பிசி360இன் நாள் பூமியின் நான்கு நாட்களுக்குச் சமம். ஆகவே நான்கு நாட்கள் இந்த அரையிருளிலும் மேலும் நான்கு நாட்கள் முழு இருளிலும் கழிக்க வேண்டும். தூக்கம் எப்படி எனத் தெரியவில்லை. நான்கு நாட்களுக்கா தூங்க முடியும்?

“ஒரு ஆறு மணி நேரம் எல்லாரும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்க. நான் போய் நாம் பிரயாணம் பண்ணுவதற்கு ரோவர் வண்டியும் வான்வெளி சூட்டும் கொண்டு வருகிறேன்” என்று வேன்டன்பர்க் புறப்பட்டார்.

“எங்கே நாம் பிரயாணம் பண்ணப்போகிறோம்?” என்றுகேட்டான் அருணன்.

“இந்தக் கூண்டைவிட்டு பத்து கிலோமீட்டர் தூரம். அங்கேதான் நான் தேடும் கனிமங்கள் இருக்கின்றன.”

“அங்கே காற்று வெளி இருக்காதே!” என்று கவலையுடன் கேட்டான்.

“அதற்காகத்தான் ஸ்பேஸ் சூட்!” என்றார் வேன்டன்பர்க்.

**** ***** *****

வான்வெளி உடைக்குள் இருப்பது ஒரு சௌனாஅறைக்குள் இருப்பது போல் இருந்தது. விடாமல் வேர்த்துக் கொட்டியது. ஆனால் அந்த வியர்வையை உறிஞ்சிக்கொள்ளும் கருவிகள் இருந்தன. இந்த நீரையே குளிரச் செய்து மறுசுழற்சியில் உடலுக்குள் செலுத்தி தோல் வறண்டு போகாமலும் சூட் பார்த்துக் கொண்டது.

பிசி360இன் காற்றுச் சூழல் உள்ள கூண்டை விட்டு வெளியேறுபவர்கள் கூண்டுக்கு வெளியே ஆறு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து இருக்கக் கூடாது என நகர மேயர் எச்சரித்திருந்தார். அதற்கு மேல் இருந்தால் பிராக்சிமா செண்டோரியின் சூரியனின் நச்சுக்கதிர்கள் வான்வெளி உடையையும் ஊடுருவித் தீமை விளைவிக்கும் என்றார்.

ரோவர் வண்டியில் இருந்த ரோபோ பாறையை கடகடவென்று குடைந்தது. தூளாக வெளியில் கொட்டியதை ரோபோவே பரிசீலித்து அதில் உள்ள கனிமங்களைக் கண்டு கணினியில் காட்டியது. ஆனால் அவற்றின் மேல் வேன்டன்பர்கிற்கு அக்கறையில்லை. ரோபோவால் கண்டு பிடிக்க முடிந்தவை பூமியிலும் கிடைக்கும் கனிமங்கள். அல்லது கனிவளம் ஏதும் இல்லாத பாறைத் தூள். அவற்றை அந்தத் தரையிலேயே கொட்டிவிடுவார்.

வேன்டன்பர்கிற்கு வேண்டியது ரோபோவால் அடையாளம் காணமுடியாத கனிமங்கள். அவற்றைப் பற்றித்தான் அவரது ஆராய்ச்சி. அவற்றைத்தான் வேன்டன்பர்க் சேகரிக்க முனைந்தார். வெவ்வேறு இடங்களுக்கு மாறி மாறித் தேடினார்கள்.

ஆனால் அவர்களின் முதல் ஆறு பயணங்களில் எந்தப் புதிய கனிமமும் கிடைக்கவில்லை.

ஒரு மாதம் ஓடிவிட்டது. இரண்டு மாதங்கள் ஓடின. மேலும் இரண்டு வாரங்கள் ஓடின. ரோபோ எற்கனவே தோண்டிய கனிமங்களையே தோண்டி பிசி360 தரையில் கொட்டி அலங்கோலம் செய்துகொண்டிருந்தது.

வேன்டன்பர்க் மிகவும் சோர்ந்திருந்தார். அருணனுக்கும் உதவியாளர்களுக்கும் கூட சோர்வு இருந்தது. பிசி360 என்னும் கோள் அவர்களின் உயிர்ச்சத்துக்களை உறிஞ்சிக்கொண்டிருந்ததே தவிர அவர்களுக்குத் திரும்ப ஒன்றும் கொடுக்கவில்லை.

அருணன் தன் சோகத்தை அடிக்கடி ஸ்டெஃப்னிக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பகிர்ந்துகொண்டான். மின்னஞ்சல் சென்று ஸ்டெஃப்னியின் ஆறுதலான பதில் வருவதற்கு 48 மணி நேரம் எடுத்துக்கொண்டது. பண்டைய காலத்தில் அஞ்சல்காரர் கடிதம் கொண்டுவருவதை எதிர்பார்த்திருப்பதைப் போலக் காத்துக்கிடக்க வேண்டியதாயிற்று.

அருணனின் கனவுகளில் ஸ்டெஃப்னி வந்தாள். சில கனவுகளில் பேசுவாள். சில கனவுகளில் செத்தவள்போல் கிடப்பாள். ஆனால் ஒரு நாள் ஆறு குட்டிக் குட்டிக் குழந்தைகள் நிர்வாணமாகப் பின் தொடர ஸ்டெஃப்னி திருமண கவுன் அணிந்து தோன்றினாள். சொல்லொணா மகிழ்ச்சியுடன் அவன் தூக்கத்திலிருந்து விழித்து அப்புறம் பல மணி நேரம் தூங்க முடியாமல் தவித்தான்.

ஆறு மாதங்கள் முடியும் காலம் வந்துவிட்டது. இன்னும் மூன்று நாட்களில் பூமி திரும்ப வேண்டும். வேன்டன்பர்கின் முகத்தில் தோல்வி என்பது ஒரு சாவுக்களைபோல படர்ந்திருந்தது. யாரிடமும் பேசாமல் முடங்கிக் கிடந்தார். நிறையக் குடித்தார்.

அடுத்த இரண்டு நாட்களும் நான்கு பயணங்கள் என்று முடிவாயிற்று. இந்தப் பயணங்கள் 15 கிலோமீட்டர் வரை இருந்தன. பிரயாண நேரம் அதிகமாக இருந்ததால் தோண்டும் நேரம் குறைந்தது. எல்லாம் ஆறுமணி நேரத்துக்குள் முடிய வேண்டும்.

15ஆவது கிலோமீட்டரில் ஒரு மலையில் ஏறி ஒரு பள்ளத்தாக்கில் ரோவரை நிறுத்தி ரோபோவை இறக்கித் தோண்டினார்கள். நான்கு மணி நேரம் ரோபோ தோண்டியும் புதிய கனிமம் ஏதும் அகப்படவில்லை. ஆனால் அங்குள்ள பாறையின் தன்மை கொஞ்சம் வேறுபட்டிருந்ததை அருணன் கவனித்தான்.

கறுப்பும் வெள்ளி நிறமுமாக ஒரு கொத்து கனிமம் வந்தது. ரோபோவின் கணினி அதனை ஆராய்ந்தது. பெயர் ஒன்றையும் காட்டவில்லை. அப்புறம் “ஸ்கேன்டியம்” என்று காட்டி அப்புறம் ஒரு கேள்விக்குறி போட்டது. பின்னர் அழித்துவிட்டு “அடையாளம் தெரியவில்லை” என்றது.

வாண்டன்பர்க் ஓடிவந்து அந்தக் கனிமத்தைச் சோதித்தார். அவர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. “அருணன், இது நமது ஸ்கேன்டியம் போன்ற ஒரு புதுக் கனிமம். வேறு தன்மைகள். பையா! நமக்கு அதிர்ஷ்டம் வந்துவிட்டது! இன்னும் தோண்டு!” என்றார்.

ஸ்கேண்டியம் பற்றி அருணனுக்குத் தெரியும். பூமியில் அரிதாகக் கிடைப்பது. அலுமினியத்தோடு கலந்தால் விமானப் பாகங்கள் செய்யலாம். இலேசானது. ஆனால் இங்குள்ள கனிமம் இன்னும் நுண்ணியதாக இருந்தது. அப்படியானால் இதை வைத்து விமானப் பாகங்களை இன்னும் இலேசாக்கலாம். இன்னும் வலுவாக்கலாம். இரண்டாயிரம் பயணிகள் பறக்கும் விமானம் செய்யலாம்.

வேன்டன்பர்க் மிக ஆர்வமாக அதனைச் சேகரித்துப் பத்திரப் படுத்தினார். பின்னர் ரோவர் வண்டியை இன்னொரு இடத்துக்குத் திருப்பினார். அங்கு ரோபோ தோண்டியதும் இன்னோரு கனிமம் வந்தது. ரோபோ “அடையாளம் தெரியவில்லை” என்றது.

“இது ஹோல்மியம் போல இருக்கிறது. ஆனால் வேறு தன்மைகள் கொண்டது. லேசர்கள் செய்யலாம். இன்னும் பல பயன்கள் உண்டு!” சேகரித்து வைத்தார்.

ரோவரை வேறு பக்கம் திருப்பினார். அருணன் கொஞ்சம் கவலையுடன் கடிகாரத்தைப் பார்த்தான். “பேராசிரியரே, இன்னும் 30 நிமிடம்தான் இருக்கிறது. திரும்ப வேண்டுமே!”

“திரும்பிவிடலாம். தோண்டு தோண்டு! இன்னும் என்ன இருக்கிறதென்று பார்த்து விடுவோம்!”

ரோபோ தோண்டியது. 20 நிமிடம் தோண்டிய பிறகு பச்சையாக ஒரு களிம்பு வந்தது. “ஓ கோட்! இங்கும் புதிதாக ஏதோ இருக்கிறது. தோண்டு” என்றார்.

“நேரம் முடிந்து விட்டதே!” என்றான் அருணன்.

“அருணன்! உலகம் வியக்கப்போகும் கண்டுபிடிப்பில் நாம் இருக்கிறோம். ஒரு சில நிமிடங்கள் கூடிவிட்டால் என்ன? நான் உங்களுக்கு ஓவர்டைம் கொடுக்கிறேன். போனஸ் கொடுக்கிறேன். பரவாயில்லை தோண்டு!” என்றார்.

புதிய புதிய கனிமங்கள் வந்தன. உதவியாளர்கள் போனஸ் கனவுகளுடன் பைகளில் சேகரித்தவை ரோவர் வண்டியில் நிரம்பி வழிந்தன.

வேன்டன்பர்கை வற்புறுத்தி இழுத்து ரோவரைச் செலுத்திப் பாதுகாப்புக் கூண்டுக்குள் வருவதற்குள் பத்து மணி நேரம் ஓடிவிட்டது.

பாதுகாப்புக்குக் கூண்டுக்குத் திரும்பியதும் அருணன் தன் உடலைப் பரிசோதித்துப் பார்த்தான். ஒன்றும் மாற்றமில்லை. பிசி360 சூரியன் அப்படி ஒன்றும் பெரிய பாதகத்தைச் செய்துவிடவில்லை என்று தோன்றியது.

வேன்டன்பர்க் விடிய விடிய தன் கணினியில் புதிய கனிமங்களைப் படம் பிடித்துப் போட்டு அறிக்கை எழுதிக்கொண்டிருந்தார். அன்றிரவு முழுக்கக் காப்பி மட்டுமே குடித்தார்.

அருணனும் அன்றிரவு அந்த நற்செய்தியை ஸ்டெஃப்னிக்கு எழுதினான். புதிய கண்டுபிடிப்புக்கள் இருப்பதால் வேன்டன்பர்கும் தானும் கூட மகிழ்ச்சிப் பிரவாகத்தில் இருப்பதை எழுதினான். தங்கள் லட்சியம் கைகூடும் நேரம் வந்து விட்டது என எழுதினான். கனிமங்களைப் பற்றிய விவரங்கள் ஏதும் எழுதவில்லை. அதை ரகசியமாகக் காக்க வேண்டும். அது வேன்டன்பர்கிற்கே உரியது.

*** *** ***

மறுநாள் கடைசிப் பயணம். நேற்று புதிய கனிமங்கள் கிடைத்த அதே பகுதிக்கு விரைந்தார்கள். அங்கு தோண்டியபோது நேற்று கிடைத்த கனிமங்களே கிடைத்தன.

அங்கிருந்து மேலும் இரண்டு கிலோமீட்டர் செல்லவேண்டும் என வேன்டன்பர்க் ஆணையிட்டார். அருணனுக்குக் கவலையாக இருந்தது. பாதுகாப்புக் கூண்டுக்கு வெளியே அதிக நேரம் செலவிடுவது பற்றி வேன்டன்பர்க் அதிகம் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.

புதிய இடத்தில் பாறை மிகவும் கரடுமுரடாக இருந்தது. ஒரு தருணத்தில் ரோபோவின் தோண்டும் கத்தி பட்டென்று உடைந்தது. நல்ல வேளை. ஸ்பேர் பார்ட் இருந்தது. கனமான சுழல் கத்தி. நாலு பெரும்சேர்ந்து தூக்கவே சிரமப்பட்டார்கள். அதனை எல்லாருமாகச் சேர்ந்து மாற்றினார்கள். அதில் ஓர் இரண்டு மணி நேரம் கழிந்தது.

மாற்றிப் பரிசோதித்து மீண்டும் தோண்டினார்கள். ஒரு புதிய கனிமம் அகப்பட்டது. ரோபோ வழக்கம்போல் “அடையாளம் தெரியவில்லை” என்றது. அடுத்து “இலேசாக கதிர்வீச்சு இருக்கிறது” என அபாயக்குறியிட்டது. வேன்டன்பர்கும் அருணனும் கையில் தொடாமல் கூர்ந்து பார்த்தார்கள். “இது எது மாதிரி இருக்கிறது?” என அருணனைக் கேட்டார்.

“ரேடியோ ஆக்டிவ் ஆக இருக்கிறது. பார்த்தால் ப்ரொமிதீயம் போல தெரிகிறது.” என்றான்.

“ஆம் பிரோமிதீயம் போல. ஆனால் ப்ரொமிதீயம் இல்லை. வேறு தன்மைகள் கொண்டது. இதனை தனி ரேடியோ ஆக்டிவ் வெளியாகாத சிறப்புப் பேக்கேஜிங் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நம் வான்வெளிக் கப்பலில் ஏற்றமாட்டார்கள்” என்று உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்படி தனியாக கதிர்கள் ஒழுகாத பாதுகாப்பாகப் பொட்டலம் கட்ட ஒருமணி நேரம் ஆனது. அருணன் பேராசிரியருக்கு நேரம் பற்றி நினைவூட்டினான்.

“அருணன்! நீ ஒரு நியுசன்ஸ்! நேரத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறாய். நேற்றுப் பத்து மணி நேரம் இருந்தோமே, செத்தா போய்விட்டோம்? இன்று நமக்குக் கடைசி வாய்ப்பு. நாம் தோண்டி எடுக்கும் ஒவ்வொரு புதுக் கனிமத்துக்கும் பூமியில் மில்லியன் கணக்கில் பணம் கிடைக்கும். கவலைப்படாதே! என் புதையலை உங்களோடு பகிர்ந்து கொள்ளுவேன்! தோண்டு!” என்றார்.

அன்றும் பத்து மணி நேரத்துக்கு மேல் செலவிட்டுத்தான் திரும்பினார்கள்.

*** **** ****

அன்று இரவு பாதுகாப்புக் கூண்டின் உள்ளே இருந்த பாரில் வேன்டன்பர்க் எல்லாருக்கும் விருந்துகொடுத்தார். பாருக்குள் வந்தவர்கள் அத்தனை பேருக்கும் விரும்பிய பானம் வாங்கிக் கொடுத்தார். அவருடைய கிரெடிட்கார்டில் அளவில்லாப் பணம் இருந்தது. அவரும் குடித்து மயங்கி இருந்தார்.

பாரில் ஒரு மூலையில் உட்கார்ந்து அமைதியாகத் தனது மது கலக்காத பானத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தவர் டாக்டர் லீ சுவான் பெங். பாதுகாப்புக் கூண்டின் தலைமை டாக்டர். பிசி360க்கான சுகாதாரப் பாதுகாப்புக்களை அமைத்தவர் அவர்தான்.

அருணன்அவரை நோக்கி நடந்தான். புன்னகைத்தான். லீயும் புன்னகைத்து அருணனை அருகில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னார். “நீங்கள் அருணன் அல்லவா? பேராசிரியர் வேன்டன்பர்க் குழுவில் உள்ளவர்!” என்றார் டாக்டர் லீ.

“நன்றி டாக்டர் லீ! இவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறீர்களே!”

“இங்கு வரும் புதியவர்களின் பற்றிய கோப்பு ஒரு பிரதி எனக்கு வரும். அதனால் தெரியும்!” என்றார்.

“பிசி360இல் உடல்நலப் பிரச்சினைகள் அதிகம் உண்டா?” என்று கேட்டான் அருணன்.

“உண்டு. ஆனால் சராசரியாக பூமியில் உள்ளதை விடக் குறைவுதான். இங்கு புதிய பாக்டீரியாக்களும் வைரசுகளும் இல்லை. அதுவே ஒரு பெரிய நன்மை. நாம் கொண்டுவந்தவை மட்டும்தான்!” என்றார்.

தன் மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என அருணன் முடிவு செய்தான்.

“டாக்டர் லீ! பாதுகாப்புக் கூண்டுக்கு வெளியே ஆறு மணி நேரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என ஒரு விதி இருக்கிறதே, ஏன்?”

“ஓ, இந்த பிராக்சிமா செண்டோரியின் சூரியக் கதிர்களில் பலவிதப் பாதிப்புக்கள் இருக்கின்றன. அதன் முழுத் தாக்கம் நமக்குத் தெரியவில்லை. ஓரளவுதான் இப்போது ஆராய்ந்திருக்கிறோம். ஆகவே சூட் அணிந்திருந்தாலும் ஆறு மணி நேரத்துக்கு மேல் பாதுகாப்பு இல்லை!”

“இருந்தால் என்ன ஆகும்? தோலில் ரணங்கள்…?”

“ஏன் கேட்கிறீர்கள்? ஒரு வேளை உங்கள் குழு ஆறு மணி நேரத்துக்கு மேல் அங்கு இருந்தீர்களா?”

“ஆம்! இருந்தோம்!”

டாக்டர் லீ அவனைக் கவலையுடன் பார்த்தார். “நீங்கள் வந்து உடலை ஸ்கேன் செய்து பார்த்துவிடுங்கள்!” என்றார்.

“நாளை அதிகாலையில் எங்கள் வான்வெளிக் கப்பல் புறப்படுகிறதே…!”

“அப்படியா? அப்போது இப்போதே வாருங்கள். என் லேப் பக்கத்தில்தான். பத்து நிமிடங்களில் ஸ்கேனிங் முடித்துவிடலாம்.”

அவர் எழுந்து நடக்க அருணன் பின்னால் போனான்.

**** **** ****

உடல் ஸ்கேனிங் இயந்திரம் சத்தமில்லாமல் இயங்கியது. ஒரு சுகமான “ஹம்” மட்டும் கேட்டது. ஒரு பத்து நிமிடங்களுக்குள் முடிந்தது.

அருணன் எழுந்து உடுத்திக் கொண்டிருந்த பொழுது டாக்டர் லீ அவனுக்கு விளக்கினார்.

“தோல் ரணங்கள் சிறிது காலத்துக்குப் பிறகு தோன்றலாம். ஆனால் ஆறிவிடும். அது பெரும் பிரச்சினை இல்லை. ஆனால் உள்ளுறுப்புக்களில் பாதிப்புக்கள் ஏற்படும்.”

“என்ன பாதிப்புக்கள்?”

“வேன்டன்பர்கிடம் ஒரு முழுப் பட்டியல் கொடுத்திருந்தேனே!”

“எங்களிடம் அவர் காட்டவில்லை. நீங்கள் எனக்குச் சொல்லலாமா?”

“சுருக்கமாகச் சொல்லுகிறேன். ஆறு மணி நேரத்துக்கு மேல் இன்னும் ஒரு மணி நேரம் இருந்தால் பெரும் பாதிப்பு இல்லை. இரண்டு மணி நேரம் இருந்தால் தோலின் ஈரப்பசை குறையும். ஆனால் நல்ல உடல் நலம் உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை. மூன்று மணி நேரம் தொடர்ந்து இருந்தால் பின்னால் தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. நுரையீரல் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இதுவும் சில ஆண்டுகள் கழித்தே தெரியும்!”

“அதற்கும் மேல்?”

“நான்கு மணி நேரம் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோமே! இப்போது இது ஆழமாகப் பாதிக்க ஆரம்பிக்கிறது. கல்லீரல், கிட்னி ஆகியவற்றுக்கு நீண்ட நாள் பாதிப்புண்டு. எங்கள் ஆய்வில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் தெரிய வந்துள்ளது!”

“என்ன?”

“நான்கு மணி நேரத்துக்கு அதிகமான எக்ஸ்போஷர் இருந்தால் அது ஆணின் விந்தணுவை முற்றாகப் பாதிக்கிறது. ஆண்கள் மலடாகப் போவார்கள்!”

**** **** ****

அன்றிரவு பாரில் குடித்து மயங்கிக் கிடந்த பேராசிரியரைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்த குற்றத்துக்காக அருணன் கைது செய்யப்பட்டான்.

(முடிந்தது)

Series Navigationஇந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !ஈடுசெய் பிழை
author

ரெ.கார்த்திகேசு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *