மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை

This entry is part 14 of 33 in the series 14 ஏப்ரல் 2013
மந்திரமும் தந்திரமும்
ஒரு காலத்தில், ஒரு பெரிய மலைக்கு அருகே, ஒரு அழகிய கல்விக்கூடம் இருந்தது. அதில் ஒரு இளைஞன் பயிலச் சேர்ந்தான்.  அவன் மிகவும் குறும்புக்காரன்.  எப்போதும் ஏதாவது சில்மிஷம் செய்து கொண்டே இருப்பான்.  அடுத்தவர்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்து மகிழ்ச்சி கொள்வான்.  கடினமான பயிற்சிகளைச் செய்ய விரும்ப மாட்டான். அடிக்கடி குட்டித் தூக்கம் போட விரும்புவான்.  எப்போதும் முயல்களை துரத்திப் பிடித்து இம்சை செய்வான்.  குருவிற்கு அவனை எப்படித் திருத்துவது என்று புரியவில்லை.  அவருக்கு அவன் பெருத்த தலைவலியாகிவிட்டிருந்தான்.
ஒரு இலையுதிர் காலத்தில், மரத்தின் இலைகளெல்லாம் நிறம் மாறிக் கொண்டிருந்த போது, அந்த இளைய மாணவன், மலைகளில் இருந்த மரங்களில் கஷ்கொட்டைகள் காய்த்து மணம் வீசுவதைக் கண்டான்.  அவனுக்கு பிடித்த கொட்டைகள்.  சென்று பறித்து வர விருப்பப்பட்டான்.
குருவிடம் அனுமதி கேட்கச் சென்றான்.
“குருவே.. அங்கே மலை மேலே நிறைய கஷ்கொட்டை மரங்கள் காய்த்து நிற்கின்றன.  எனக்கு கஷ்கொட்டைகளைத் திங்க மிகவும் பிடிக்கும்.  நான் சென்று அதைப் பறித்து உண்ணலாமா?” என்று கேட்டான்.
“மலைக்கு அருகே செல்வது கூடாது.  மக்கள் அந்த மலையில் ஒரு சூன்யக்கார மந்திரவாதி ஒருத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.  நீ அங்கே போனால் அவளுக்கு இரையாக வேண்டியது தான்..” என்று அறிவுறுத்தும் வகையில் சொன்னார் குரு.
அறிவுரைகளை கேட்கும் நிலையில் இல்லை மாணவன்.  “ஓ… அதெல்லாம் உண்மையாக இருக்காது.  யாராவது சும்மா கதை கட்டி விட்டிருப்பார்கள்.  தயவு செய்து நான் போய் வருகிறேன் குருவே..” என்று கெஞ்சினான்.
குருவிற்கு சொன்னால் புரியாதது பட்டால் தான் புரியும் என்று எண்ணி, சொல் பேச்சு கேட்காத மாணவனின் மனம் கோணாமல், சம்மதம் தெரிவிக்கும் வகையில் தலையை ஆட்டிவிட்டு, அவனது பாதுகாப்பை மனதிற்கொண்டு, “சரி.. ஒரு தரம் பட்டால் தான் உன்னைப் போன்ற குறும்புக்காரன் திருந்துவான்.  நீ போகலாம். ஆனால் நீ அங்கு சூன்யக்காரியைச் சந்திக்க நேர்ந்தால் இதைப் பயன்படுத்திக் கொள்..” என்று கூறி, அந்த மாணவனிடம் மூன்று அதிர்ஷ்ட மந்திரப் பத்திரங்களைத் தந்தார்.  அவை காகிதத்தால் ஆன நல்ல வாசகங்கள் கொண்ட பத்திரங்கள்.  மாணவன் அதை எடுத்துக் கொண்டு, உடனே மலையை நோக்கி வேகமாக விரைந்தான்.
மலையை அடைந்ததுமே, அவன் எண்ணியதைப் போன்று, அடர்ந்த கஷ்கொட்டை மரங்களில் பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்திருப்பதைக் கண்டான்.  அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்துச் சேர்க்க ஆரம்பித்தான்.  அவன் நேரம் போவது தெரியாமல் பழங்களைப் பறிப்பதில் இருந்தான். மதியத்திற்கு மேல் தான் மலைக்கு வந்த காரணத்தால், விரைவிலேயே மேற்கே சூரியன் இறங்குவதைக் கூட அவன் உணரவில்லை.  அவன் உணர்விற்கு வந்து சுற்றிலும் பார்த்த போது, இருள் கவிழ்ந்து விட்டிருந்தது.  “இருட்டாக இருக்கும் போது சற்று பயங்கரமாகத் தான் இருக்கிறது.  ஆனால் பயப்படக் கூடாது” என்று தனக்குத் தானே தைரியம் கூறிக் கொண்டான். ஆனால் அதே நேரத்தில் “இப்போது சூன்யக்காரி வந்தால் என்ன செய்வது?” என்ற எண்ணமும் ஏற்பட்டது.
கல்விக்கூடத்திற்குத் திரும்ப எத்தனித்த போது,  அவனுக்குப் பின்னால் திடீரென்று சத்தம் வந்ததைக் கேட்டான். “ஓ.. சிறுவனே.. எப்படி இருக்கிறாய்?” என்றது அன்பான குரல் ஒன்று.  சூன்யக்காரியை எண்ணிக் கொண்டு இருந்த வேளையில், அக்குரலைக் கேட்டதும், சற்று பயந்து போனான்.  ஆனால், சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் திரும்பிப் பார்த்த போது, மிகவும் கருணை மிகுந்த முகத்துடன் ஒரு கிழவி நிற்பதைக் கண்டான்.  “நீ கஷ்கொட்டை பறிக்க வந்தாயா?  இருட்டி விட்டதே!  நீ வந்த வேலை முடிந்ததா?”
அவளது அன்பான வார்த்தைகளில் பயம் விட்டு “ஆமாம்” என்றான் அமைதியாக.  “நீ என் வீட்டிற்கு வருகிறாயா? நான் இந்த கஷ்கொட்டைகளை சுவையாக வேக வைத்துத் தருகிறேன்” என்றாள் மேலும்.
மாணவன் மிகவும் பசியுடன் இருந்ததாலும், கஷ்கொட்டை சீக்கிரமே உண்ண விரும்பியதாலும்,  உடனே அந்தக் கிழவியைத் தொடர்ந்து சென்றான்.  வீட்டை அடைந்ததும், கிழவி கஷ்கொட்டையைப் பதமாக வேக வைத்துக் கொடுத்தாள்.  மிகவும் மகிழ்ச்சியுடன் வயிறு முட்ட உண்டான் மாணவன்.  உண்டதும் களைப்பு மேலிட, தூங்கிப் போனான்.  திடீரென்று முழிப்பு வந்து எழுந்தான். எவ்வளவு நேரம் தூங்கியிருப்பான் என்று அவனுக்குத் தெரியவில்லை. விழத்த போது அந்த அறையில் கிழவி இல்லாததைக் கண்டு, அவளைத் தேடச் சென்றான்.  அறையை விட்டு வெளியே வந்ததுமே, அடுத்த அறையில் சற்றே வித்தியாசமான சத்தம் கேட்டது.  வியப்புடன் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.  அங்கே மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் யாரோ கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்ததைக் கண்டான்.
“ஆ..” என்று பயந்து அலறினான்.
சத்தம் கேட்டு அந்த உருவம் தலையைத் தூக்கி அந்த மாணவனைப் பார்த்தது.
“என்னைப் பார்த்து விட்டாயா?  வா சிறுவனே.. வா.. பயப்படாதே.. நான் தான் உன்னை அழைத்து வந்தேன்..”
“நீ… யார்… யார்?” என்று பயத்துடன் கேட்டான்.
“நான் தான் மலைச் சூனியக்காரி. நான் இப்போது உன்னை உண்ணப் போகிறேன்” என்றாள் நிதானமாக.
இதைச் சொல்லிக் கொண்டே எழுந்து வந்த சூன்யக்காரி, மாணவனை லாவகமாக பிடித்துக் கொண்டாள்.
கிழவியின் பிடியில் சிக்கிய மாணவன் தப்பிக்க யோசனை செய்ய, முதலில் சிறிது நேரம் கிடைக்க வழி செய்ய எண்ணினான்.  உடனே அவன் “ஓஹோ நீ தான் அந்த சூன்யக்காரியா.. சரி சரி.. எனக்கு இப்போது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும். நான் இப்போது போகவில்லையென்றால், என் உடை ஈரமாகி விடும்.  இதனால் என்னை முதலில் கழிப்பிடம் செல்ல விடு..” என்றான் சற்றே தைரியமாக.
சூன்யக்காரி மிகவும் இருட்டிவிட்டதால், மாணவன் அங்கிருந்து எப்படியும் தப்ப முடியாது என்று தீர்மானமாக எண்ணியதால்,  அவன் போக்கில் விட்டுப் பிடிக்கலாம் என்று எண்ணி, “அப்படியா.. சரி சரி..  ஆனால் நான் உன்னைக் கயிற்றால் கட்டிய பின்னரே அனுப்புவேன். நீ என்னிடமிருந்து எப்படியும் தப்பிக்க முடியாது தெரியாமா?” என்று அவனைக் கயிற்றால் கட்டி, அதன் முனையைத் தன் கைகளில் சுற்றி கட்டிக் கொண்டாள்.
மாணவன் கழிவறைக்கு கட்டிய கயிற்றுடன் சென்றான். சூன்யக்காரி வாயிலில் காத்துக் கொண்டு நின்றாள்.
சில நொடிகளுக்கு பின், “என்ன.. முடிந்ததா?” என்று கேட்டாள் கிழவி.
“இதோ வந்து விட்டேன்..” என்று பதில் கூறிய மாணவன், வெகு நேரம் இது போல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு, தப்பும் வழியை யோசிக்க ஆரம்பித்தான்.  கழிப்பறையில் ஒரு சிறிய ஜன்னல் இருந்தது.  அதன் வழி தப்பிவிடலாம்.  ஆனால் சூன்யக்காரியை தான் உள்ளே இருப்பதாக நம்ப வைக்க வேண்டும்.  “ஊம்.. என்ன செய்யலாம்?” என்று யோசித்தான்.  “ஆ.. சூன்யக்காரியிடம் மாட்டினால் தப்பிக்க வேண்டி, குரு நமக்குக் கொடுத்த மந்திரப் பத்திரத்தை இப்போது உபயோகித்தால் என்ன?” என்று தோன்றியது.  உடனே தன்னிடமிருந்த மூன்று பத்திரங்களில் ஒன்றை எடுத்து சுவரில் ஒட்டி, அதன் உதவியை நாடினான்.
“ஓ.. அதிர்ஷ்ட பத்திரமே.. நீ சூன்யக்காரிக்கு என்னைப் போல் பதில் சொல்..” என்று சொன்னான்.
கயிற்றினை நொடியில் பிரித்துக் கொண்டு தப்பித்து, உடனே அங்கிருந்து கல்விக்கூடத்தை நோக்கி முயன்ற அளவு வேகமாக ஓடினான்.
மாணவன் இன்னும் உள்ளே இருக்கிறான் என்று எண்ணி, சில நிமிடங்கள் கழித்து, “சிறுவனே.. என்ன இன்னும் முடிப்பவில்லையா?” என்று சூன்யக்காரி கோபத்துடன் கத்தினாள்.  “இதோ வந்து விட்டேன்” என்று மாணவனின் குரலில் மிகவும் பணிவுடன் மந்திரப் பத்திரம் பதில் கூறியது.  மூன்று முறை இதே பதில் வரவுமே, சூன்யக்காரிக்கு சந்தேகம் வந்து, கடைசியில் பொறுக்க மாட்டாமல், அறையைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள்.  மாணவன் அங்கு இல்லை.  “பொடிப்பயல்.. என்னை ஏமாற்றி விட்டானே.. இதற்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கோபத்துடன் வீட்டிற்கு வெளியே வந்தாள்.  இருட்டில் தூரத்தில் ஓடும் மாணவன் அந்தச் சூன்யக்காரியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தான். அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.
மூச்சிறைக்க சற்று தூரம் ஓடிய பின், “ஓ.. எப்படியோ தப்பித்தோம்..” என்று மாணவன் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயத்துடன் திரும்பிப் பார்த்தான்.
“சிறுவனே.. நீ எங்கே இருக்கிறாயோ.. அங்கேயே நில்.. என் பசியைக் கிளப்பி விட்டாய். உன்னை இப்போதே நான் பிடித்துச் சாப்பிடப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டே துரத்தி வந்தாள்.  அதிகக் கோபத்தால் சூன்யக்காரியின் முகம் சிவந்து மிகவும் கோரமாகக் காட்சியளித்தாள்.
கோரமான முகத்தைக் கண்டு பயந்து மிரண்ட மாணவன், சுதாரித்துக் கொண்டு, “ஐயோ.. போச்சு.. அவள் என்னைப் பிடித்தால் தப்பிக்கவே முடியாது.. சாக வேண்டியது தான்..” என்று குரு தந்த இரண்டாவது பத்திரத்தை எடுத்து, “எனக்குப் பின்னால் பெரிய நதி ஓடட்டும்..” என்று வேண்டிக் கொண்டான்.
இதை அவன் வேண்டியதுமே, ஓடிக்கொண்டிருந்த அவன் பின்னால், திடீரென்று ஒரு பெரிய நதி தோன்றியது.  வேகமான நீர்ச் சுழலில் சூன்யக்காரி சிக்கிக் கொண்டாள்.  அதற்குள் மாணவன் தலை தெரிக்க ஓடினான். இன்னும் சிறிது தூரம் ஓடிய பின், “சூன்யக்காரி நிச்சயம் மூழ்கி இருப்பாள்.. அப்பாடா..” என்று நம்பிக்கையுடன் மாணவன் சற்றே நின்றான்.  அவன் அதை நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, சூன்யக்காரியின் குரல் மறுபடியும் கேட்டது.  சூன்யக்காரி தன்னுடைய மந்திரச் சக்தியால், நதியின் நீர் அனைத்தையும் உறுஞ்சிக் கொண்டு மாணவனை துரத்த ஆரம்பித்தாள்.
“ஓ.. வேண்டாம் வேண்டாம்.. இந்த முறை தீக்கடலை உருவாக்கு..” என்று தன்னிடமிருந்த மூன்றாவது அதிர்ஷ்டப் பத்திரத்தை வேண்டினான்.  திடீரென்று அவன் பின்னால் கடலென தீக் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது. சூன்யக்காரியைச் சூழ்ந்து கொண்டது.  ஆனால் சூன்யக்காரியோ தன் சக்தியால், குடித்திருந்த அத்தனை நீரையும் உமிழ்ந்து, தீயை அணைத்தாள்.  மறுபடியும் துரத்த ஆரம்பித்தாள்.
“முடிந்தது என் கதை.. எப்படியோ கல்விக்கூடம் அருகே வந்து விட்டோம்.  அவள் வந்து பிடிக்கும் முன்னே உள்ளே சென்று விட வேண்டும்” என்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேலும் வேகமாக ஓடினான்.  சூன்யக்காரி அவளை அடையும் தருவாயில்,  அவன் கூடத்தை அடைந்து விட்டிருந்தான்.  அங்கு கூடத்தின் முற்றத்தில் இரவு உணவு உண்டு கொண்டிருந்த குருவை நோக்கி ஓடினான். “ஐயா.. தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். மலைச்சூன்யக்காரி என்னைத் துரத்தி வருகிறாள்.” என்று அடிபணிந்தான்.
“ஓ.. நீ அவளைச் சந்தித்தாயா.. நாங்கள் சொன்னது புத்திக்கு எட்டியதா?” என்று கேட்டார் குரு.
மாணவன் நடந்ததை நினைத்துப் பார்த்தான். தலை தப்பிக்க குருவிடம் மன்னிப்புக் கோரினான். “என்னை மன்னித்து விடுங்கள் ஐயா.. நான் இப்போதிருந்தே திருந்தி விட்டேன்..” என்று சொல்லி காலில் விழுந்தான்.  அங்கிருந்த பெரிய ஜாடிக்குப் பின் அவனை ஒளிந்து கொள்ளச் சைகை செய்தார் குரு.  அவன் ஓடிச் சென்று ஒளிந்து கொண்ட அதே நேரத்தில், சூன்யக்காரி கூடத்தின் கதவைக் கால்களால் எட்டி உதைத்து உள்ளே நுழைந்தாள்.
“ஏய்.. இங்கு ஓடி வந்தச் சிறுவன் எங்கே? அவனை வெளியே அனுப்பு..” என்றாள் கோபத்துடன் சூன்யக்காரி.
குரு தன்னுடைய உணவில் கவனம் செலுத்துவதைப் போன்று நடித்துக் கொண்டே, “என்ன.. என்ன கேட்கிறாய்? நான் இங்கே வெறும் இந்த அரிசி ரொட்டிகளைத் தின்று கொண்டு இருக்கிறேன்.  நான் எதையும் பார்க்கவில்லை..” என்றார் மெத்தனமாக.
இதைக் கேட்ட சூன்யக்காரிக்கு பெருங்கோபம் வந்தது.
“உனக்குத் தெரியாதது போல் நீ நடிக்கலாம். எனக்கு அதைக் பற்றிக் கவலையில்லை.  ஏனென்றால் நீ அவனை எனக்குத் தரவில்லையென்றால், என் பசிக்கு நீ இரையாக வேண்டியிருக்கும்.. அவ்வளவுதான்..” என்று சொல்லிக் கொண்டே குருவை நோக்கி முன்னேறினாள்.
“சரி.. சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.  நீ தான் மலைச் சூன்யக்காரியா?” என்று கேட்டார் பொறுமையுடன்.
“ஆமாம்.. அதெற்கென்ன?” என்று சொல்லிக் கொண்டே மேலும் நெருங்கி வந்தாள்.
“உன்னை நான் வெகு நாட்களாக சந்திக்க வேண்டுமென்றிருந்தேன்.. இன்று தான் உன்னைப் பார்க்க முடிந்தது..”
“அதற்கென்ன.. பார்த்துவிட்டாயால்லவா?”
“இரு இரு.. முதலில் நம்மில் யார் இன்னொரு உருவத்திற்கு மாறுவதில் சிறந்தவர் என்று பார்த்த பின், நீ செய்வதைச் செய்யலாம்..” என்றார் குரு.
“ஏன் நான் தான் சிறந்தவள்.. அதிலென்ன சந்தேகம்?” என்று சற்றே நின்றாள்.
“அதை நிரூபிக்க வேண்டும்.  நீ ஜெயித்தால் நீ நினைப்பதைச் செய்யலாம்.  இப்போது நான் சொல்கிற உருவத்திற்கு உன்னால் மாற முடியுமா? அதை முதலில் சொல்..” என்று சவால் விட்டார்.
“என்னை கேலி செய்கிறாயா?” என்று மிகவும் தன்னம்பிக்கையுடனும் கோபத்துடனும் சொன்ன சூன்யக்காரி, “என்னை நான் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.  நீ விரும்பியதைக் கூறு.. நான் மாறிக் காட்டுகிறேன்” என்றாள் அகந்தையுடன்.
சூன்யக்காரி ஆணவத்தினால் அறிவிழந்து நிற்பதைப் புரிந்து கொண்ட குரு, “நீ இந்த உத்திரத்தின் அளவிற்கு உயரமாக முடியுமா?” என்றார்.  அவர் சொல்லி முடிக்கும் முன்பே, எந்தவித கஷ்டமுமின்றி, சூன்யக்காரி அப்படியே வளர்ந்து, உத்திரத்தைத் தொட்டாள்.
“ஊம்.. ஆனால் உன்னால் அந்த மலையளவு உயரம் நிச்சயம் ஆக முடியாது என்று அடித்துச் சொல்வேன்..” என்று சொல்லி அவளது கோபத்தை மேலும் தூண்டினார்.
“ஏய்.. நீ என்னை என்ன நினைத்து கொண்டிருக்கிறாய்.. இதெல்லாம் எனக்குக் கைவந்த கலை” என்று கூறிக் கொண்டே, தன்னை மலையளவு உயர்த்திக் காட்டினாள்.
குரு அவளது செய்கைக் கண்டு பிரமிப்பது போல் நடித்து, “நிச்சயம் நீ திறமைசாலிதான்.  சரி.. சரி.. நீ உன்னை பெரிதாக்கிக் கொள்வது வெகு சுலபம்.  ஆனால் மிகச் சிறிய பருப்பாக உன்னால் ஆக முடியாது என்று நான் அடித்துச் சொல்வேன்” என்று சூன்யக்காரியின் கோபத்தை மேலும் தூண்டி விட்டார்.
குருவின் கேலியால் எரிச்சலுற்ற சூன்யக்காரி, ஆத்திரத்துடன், “அது மிகவும் எளிது.. பார்..” என்று உடனே குருவின் விரல் உச்சி அளவு தன் உருவத்தை சுருக்கிக் காட்டினாள்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதைப் புரிந்து கொள்ளாத சூன்யக்காரி குருவின் தந்திரத்தை சற்றும் எண்ணிப் பார்க்காமல், மந்திரச் சக்தி இருந்த போதும், அவரது தந்திர வலையில் சிக்கினாள்.
“அடடா.. அடடா.. அபாரம்.. அபாரம்.. இப்போது என் முறை..” என்று சொல்லிக் கொண்டே குரு, சூன்யக்காரி சற்றும் எதிர்பாராத போது, திடீரென்று அந்த மிகச் சிறிய பருப்பை எடுத்துத் தான் உண்டு கொண்டிருந்த அரிசி ரொட்டியின் இடையே வைத்து, ஒரே வாயில் ரொட்டியைத் தன் வாயிலிட்டு மென்று விழுங்கினார்.
அப்போது முதல் காட்டில் மலைச் சூன்யக்காரி காணப்படவில்லை.
தான்தோன்றித்தனமும் ஆத்திரமும் எங்கு கொண்டு விடும் என்பதைப் புரிந்து கொண்ட
குறும்புக்கார மாணவனும் நல்லவனாக பண்புள்ளவனாக மாறி, குரு சொல்லிக் கொடுத்தவற்றை கவனத்துடன் கற்க ஆரம்பித்தான்.
Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *