மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்

This entry is part 8 of 24 in the series 8 செப்டம்பர் 2013

chelian

 

செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். அது பற்றி எழுத வேண்டும். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச் சுவை உணர்வை இழக்காதவர்.

இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் பட ஒளிப்பதிவாளர். சும்மா படமெடுப்பவர் இல்லை. தன் தொழிலைக் கலையாக உணர்பவர். அத்தகைய பதிவுகள் இவர் பொறுப்பேற்ற படங்களில் நமக்குக் காணக்கிடைக்கும். ஆனாலும், இவர் எப்படி தமிழ்த் திரைப்படத்துக்குள் நுழைந்தார்? நுழைந்து எப்படி காலம் தள்ளுகிறார்? என்ற எண்ணம் என்னில் முழுமையாக முதலிலும், “எப்படியும் எங்காவது தொடங்கத் தானே வேண்டும்?” என்ற சமாதானத்தோடு இப்போதும் உணர்ந்து வருகிறேன்.

சென்னைக்கு நான் குடி வந்த முதல் வருடத்திலேயே (கி.பி. 2000) செழியன் எனக்கு அறிமுகமானார். யாரோ என்னவோ என்று தான் நான் நினைத்தேன். கணையாழியில் இருந்த கவிஞரும் என்னை ஆத்மார்த்தமாக நேசித்த நண்பருமான  யுகபாரதி என்னை செழியனிடம் அழைத்துச் சென்றார். அந்த முதல் சந்திப்பில் செழியனை மிகவும் கஷ்டப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். ஸ்டுடியோக்குள் என்னை என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை என்று நினைக்கிறேன். பின்னர் அவர் ஸ்டுடியோவின் மாடி வெராண்டாவின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, என்னிடம் pose வேண்டாமல், அவர் பாட்டில் குனிந்தும் சாய்ந்தும் தூர நின்றும், கிட்டத்தில் மண்டியிட்டும் என்னென்னவோ வெல்லாம் கரணங்கள் செய்து படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். என்னை முதன் முதலாக இன்னொருவர் முகம் சுளிக்காது பார்க்கக் கூடும் படங்களை எடுத்தவர் செழியன் தான். மற்றதெல்லாம் ஒருமாதிரி தான். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்[பது போலவும், எதையோ உற்றுக் கவனிப்பது போலவும், “பரவாயில்லையே நான் கூட இப்படி பார்க்கும் படியான தோற்றத்தில் உள்ள கணங்களை, அவை மறையும் முன் பிடித்து உறைய வைத்துவிட்டாரே. என்று மகிழ்ந்தேன். ஒரு மோசமான subject- ஐ வைத்துக்கொண்டு கூட பரவாயில்லை என்று சொல்லத் தக்க படைப்பைத் தந்துவிடுவது பெரிய விஷயம் தான்.. அப்போ, தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக சேரத் தக்க நிபுணத்துவம் உள்ளவர் தானே, சந்தேகமில்லை. தமிழ் சினிமாவில் கிடைப்பதை வைத்துத் தானே ஒப்பேத்தவேண்டும்?

இது நான் சென்னை வந்த புதிதில் நடந்த சங்கதி.  இடையில் அவர் தமிழ்த் திரைப்பட ஒளிப் பதிவாளராக ஆகியிருந்தார் என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு நிகழ்ந்த முதல் புத்தகக் கண்காட்சியில் எதிர்ப்பட்டு, சத்யஜித் ரேயின் பாதேர் பஞ்சலி திரைப்படக்கதையின் தன் தமிழ் மொழிபெயர்ப்புப் புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். செழியன் உலவும் உலகம் வேறு, தான் சம்பந்தப்படும் எதையும்  அதன் தரம் உயர்த்தும் காரியமாக்குகிறார், அதில் தன் ஆளுமையையும் முடிந்த வரை பதிவு செய்கிறார் என்று உணர்ந்து கொள்ள முடிந்தது..

இப்போது என் முன் இருப்பது அவர் அவ்வப்போது எழுதிய தன் சினிமா அனுபவங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு  “பேசும் படம்” இத் தொகுப்பில் உள்ள  15 கட்டுரைகளில் ஒன்று தன்னை மிகவும் நெகிழ்த்திய இரானியன் படம் Children of Heaven பற்றிய அவரது ரசனை. தமிழ்த் திரைப்பட இசையில் தன்னை ஒரு கலைஞனாக எல்லா தளங்களிலும் ஸ்தாபித்துக்கொண்ட இளைய ராஜா பற்றியது இன்னொன்று. முழுக்க முழுக்க தன் திறமையினாலேதான் இவர் தன்னை தமிழ்த் திரை உலகில் ஸ்தாபித்துக் கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எப்படி தமிழ்த் திரை உலகின் எல்லாரையும் திருப்திப் படுத்துகிறார்?. அதேசமயம் செழியனிடமும் இவர் ஒரு உலகத் தரத்த இசை வல்லுனர் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்? என்பது ஒரு அதிசய நிகழ்வு. அது பற்றி ஒரு நீண்ட கட்டுரை இதில் உள்ளது. அதனுள்ளே நான் போக முடியாது. செழியனுக்குள்ள இடத்தைக் கொடுத்து நான் ஒதுங்க வேண்டும். இளைய ராஜா ஒரு மேதை, சங்கீதம் நன்கு அறிந்தவர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அவரது திரைப்படப் பாடல்கள் அனேகம், திருவாசக இசைப்  பதிவுகள் என்னைக் கவரவில்லை. இந்த கருத்து என்னைப் பற்றிச் சொல்லும். இளைய ராஜாவைப் பற்றி அல்ல.

ஒரு இடத்தில் இளைய ராஜா தரமற்ற படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். என்று சொல்ல வந்தவர், மூன்றாம் தர சினிமாவின் முதல் தரமான கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றும் இவர் உலகத்தின் தலை சிறந்த நடிகர்களுடன் ஒப்பிடப்பட்டு விமர்சித்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை என்றும் அது போலவே இளைய ராஜாவுக்கும் நேர்ந்துள்ளது என்று சொல்லும் போது இரானியன் படங்களை ரசிக்கும் செழியனா சிவாஜி கணேசனை ரசிக்கும் செழியனும் என்று திகைப்புக்குள்ளாகிப் போகிறேன். யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே,  எம் எஸ்ஸுக்கு ஜலதோஷம் வராதா என்ன? செழியனுக்கு ஜலதோஷம் விட்ட பிறகு எழுதுகிறார் பின் வரும் ஒரு மந்திர வாக்கியத்தை, “

தமிழில் தான் புதுமை இயக்குனர்களும், இயக்குனர் இமயங்களும், சிகரங்களும், புரட்சி  நடிகர்களும், கலைஞர்களும் இருக்கிறார்கள். பட்டங்கள் இல்லாது எந்தக் கலைஞனையும் நாம் தனியே விடுவதில்லை. என்று சொல்லி இது போன்ற பட்டங்கள் மலையாளத்தில், வங்கத்தில், மகாராஷ்டிராவில், இந்தியாவில் எங்கேயும் இல்லை என்று சொல்லி முடிக்கிறார்.

மணி ரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் பற்றிய செழியனின் பார்வை ஒரு முழுக் கட்டுரையில் வந்துள்ளது. இதில் படத்தின் கதை, காட்சிப் படுத்தல், படமெடுத்த பாணி பற்றி யெல்லாம் அவற்றின் அபத்தங்களையெல்லாம் எந்த தயக்கமுமில்லாது அடுக்கிச் செல்கிறார். எந்தத் தமிழ்ப் படம் பற்றியும், அதிலும் மணிரத்தினத்தின் படம் பற்றி அதன் அபத்தங்களை தமிழ் சினிமா உலகில் வாழும் ஒருவர் சொல்லக் கேட்பது எனக்கு இது தான் முதல் தடவை. இதற்கு முன் ரொம்ப வருஷங்களுக்கு முன் சொல்ல ஆரம்பித்தவர் ஒரு புகழ் பெற்ற நடிகர். பாதியில் நிறுத்தி ஓட வேண்டி வந்தது அவருக்கு. தமிழ் சினிமா உலகில் எவரும் எந்த அபத்தத்தையும் அபத்தமாக உணர மாட்டார் மாறாக எதோ எப்படியோ புகழாரங்களைச் சூட்டி தானும் பக்தர் கூட்டத்தில் ஐக்கியமாகி விடுவார். ஒற்றுமையும் கூட்டுறவும் இங்கு மிக அதிகம். காலை வாருதல், முதுகில் குத்துதல் எல்லாம் திரை மறைவில் தான். எழுத்தில், பேச்சில் புகழாரங்கள் தான் வரும்.

இரண்டு ஆசிரியர்கள் ஒரு நதிக்கரை என்ற கட்டுரையில் செழியன் மணிரத்தினத்தின் ஒரு படத்தில் பி.சி ஸ்ரீராமின் உதவியாளராக ராஜஸ்தானத்தில் பாடல்கள் சில படப்பிடிப்புக்குச் சென்ற அனுபவத்தை எழுதுகிறார். முதல் தடவையாக, நீண்ட கால காத்திருப்புக்குப் பின், ஸ்ரீராம் தன்னை உதவியாளனாக படப்பிடிப்புக்கு அழைத்தது, ஒரு கலைஞனிடம் கற்றுக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பு,  படப்பிடிப்புக் கால அனுபவம் பற்றி எல்லாம்  மிகுந்த பரவசத்தோடு எழுதுகிறார். எல்லாம் எத்தனை filters, film speed, key lights, 24mm lens, accents, strong beats என்று எல்லாம் தொழில் நுட்பம் சார்ந்த விஷ்யங்கள் நிறைந்து வழிகின்றன கட்டுரையில்.  எனக்குப் புரிவது பி.சி. ஸ்ரீராம் தனக்குக் கிடைத்த இடத்தில் தன் தொழில் நுணுக்கத் திறன் கொண்டு அதன் சாத்தியங்களை எவ்வளவுக்கு விஸ்தரிக்கமுடியுமோ அதைச் செய்கிறார். அது தொழில் நுட்பத்தின் சாத்திய எல்லைகளைத் தொடுகிறது. விஸ்தரிக்கிறது. அது படம் முழுமையின் ஒரு சிறு பகுதியே. அதில் அவர் இயக்குனரின் தலையீட்டை அனுமதிப்பதில்லை. அது மணி ரத்தினமே யானாலும் சரி. ஆனால், தன் பங்குக்குக் கிடைத்த இடமான பாடல் படப் பிடிப்புக்கும் படத்தின் முழுமைக்கும் ஏதும் அர்த்தம், உறவு உண்டா என்று அவர் பார்ப்பதில்லை. இந்தப் பாடல் படம் சொல்லும் கதைக்கு என்ன பங்களிக்கிறது என்றும் பார்ப்பதில்லை. நான் பார்த்த வரையில் எந்த மணிரத்தினத்தின் படத்துக்கும் அதில் வரும் பாடல்களுக்கும் ஏதும் பொருள் இருப்பதில்லை.  அவற்றை முற்றுமாக நீக்கினாலும் படத்தின் கதை சொல்லல் இழப்பது ஏதும் இல்லை. ஆக ராஜஸ்தானுக்கு சென்னையிலிருந்து லாரிகளில் ஒரு பெரிய ஒளிபபதிவுப் பட்டாளமும், கருவிகளும் வண்டி வண்டியாக எடுத்துச் சென்று ஒரு பாடல் பதிவு செய்ய ஒரு நாளோ இரண்டு நாட்களோ செலவு செய்து அதில் தன் திறமையெல்லாம் காட்டியும், அது வெறும் ஜிகினா வேலையாகத் தான் வெற்று அலங்காரமாகத் தான் ஆகிறதே ஒழிய இவ்வளவு லக்ஷக்கணக்கில், நாட்கணக்கில் ராஜஸ்தான் சென்று செலவு செய்து எடுத்தது அவ்வளவும் ஒரு அபத்த ஒட்டு வேலை, அவ்வளவு தொழில் நுட்பமும் கலைத் திறனும் ஒரு ஜிகினா வேலையாகவே கீழறங்கியுள்ளதை யாரும் கண்டு கொள்ளவில்லை. பி.சி.ஸ்ரீராமும், அவரோடு சென்ற செழியனும் மற்றோரும்.

ஆனால் செழியனுக்கு ஒரு கதை சொல்லலில், ஒரு சூழல் எழுப்பலில், ஒளிப்பதிவின் விசேஷத்வம் தெரியும். சத்யஜித் ரேயின் படத்தில், படத்தின் இயக்கத்திலும் சரி, அவர் ஒளிப்பதிவுக்கு நாடிய நண்பர் சுப்ரதொ மித்ரவும் சரி முன் பின் அனுபவம் சற்றும் இல்லாதவர்கள். ஆயினும் ஒரு கிராமத்தின் குடிசை அறைக்குள் பரவும்  மிதமான, சூரிய ஒளி, நிழல் விழுத்தாத ஒளியை எப்படிக் கொணர்வது என்று யோசிக்கிறார்கள். அதை சாதிக்கவும் செய்கிறார்கள். இது இயற்கையான சூழலைத் தரும். ஆனால் சட்டென பார்வையைத் தாக்குவது, பேசப் படுவது நாடகத் தனமான நேர் எதிரான பிரகாசத்தையும் கரிய நிழலையும் காணவைக்கும்.  அது பளிச்சென பார்வையாளருக்குத் தெரியும். ஆனால் ரேயும் சுப்ரதோவும் சாதித்த பூசி மெழுகியது போன்ற மிதமான ஒளிபரவல் பார்வையாளர் கண்ணுக்கு இதோ பார், நான் இருக்கிறேன் பார்” என்று சொல்லாது. இந்த சாதனை பார்வையாளரை மயக்க உதவாது. ஒரு உதாரணம் வேறு இடத்திலிருந்து சொல்ல வேண்டுமானால், The Last Emperor படத்திற்கு பீகிங்கில் படமெடுக்க சீன அரசு அனுமதிக்கவில்லை. ஆக, அந்த பீகிங் அரண்மனையை வேறு ஒரு இடத்தில் நிர்மாணித்தார்கள். அந்த பிரமமாண்ட செட் தேவை. ஆனால், ரஜனி காந்த் படத்தில் ஒரு பிரம்மாண்ட செட் தோட்டா தரணியே நிர்மாணித்தாலும் அது தேவையற்ற அபத்தம். தோட்டா தரணியை தமிழ் சினிமா எப்படி பயன்படுத்துகிறதோ அப்படித் தான் பி.சி.ஸ்ரீராமை தமிழ் சினிமாவும்  , (மணிரத்தினமும் அதன் ஒரு அங்கம் தான்), பயன்படுத்துகிறது. அது கலை அல்ல. தொழில் நுட்பத்தின் விஸ்தரிப்பு அல்ல. ஜிகினா வேலை. பார்வையாளரை மயக்கி முட்டாளாக்கும் வேலை.

தென்மேற்குப் பருவக்காற்று என்ற படத்திற்கு, செழியன் இதே புத்தகத்தில் வேறு இடத்தில் தமிழ் வாழ்க்கை அனுபவம், தமிழ் மண், என்று வற்புறுத்திப் பேசுகிறாரே, மிகச் சரியாக, அந்த மாதிரியான ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்த போது, படத்தின் முதல் காட்சியே கிராமத்து ஒளியற்ற நள்ளிரவில், ஒரு கும்பல் ஆட்டுக்கிடையை திருடிக்கொண்டு செல்லும் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார். இது நான் தமிழ்ப் படங்களில் அது காறும் காணாத காட்சி. தமிழ்ப் படங்கள் இப்படியும் காட்சிகளைத் தரமுடியும் என்று மற்றவர் களுக்குச் சொல்லும் பாதை விஸ்தரிப்பு இது.

மாற்று ஊடகமும் நட்சத்திரங்களின் அந்திமக் காலமும்” என்ற கட்டுரையில் ஒரு கலை உணர்வுள்ள ஒளிப்பதிவாளர், பார்வையாளர் தான் காணும் ஓரிரண்டு மினுமினுப்புகளையே நக்ஷத்திரங்கள் இரைந்து கிடக்கும் வானமாகப் பார்க்கிறார்.  இன்னமும் இது கமலஹாஸனின் ரஜனிகாந்தின் யுகம் தான். பாடல் படப் பிடிப்புக்கு தென் அமெரிக்க மச்சுப் பிச்சுக்கு ஓடும், மனிதர்களைக் கொண்டது தான். இன்னமும் எந்தப் படத்தைக் காப்பி எடுக்கலாம் என்று அலைபவர்களிடையே தமிழ் வாழ்க்கை பற்றிய நினைப்பு எப்படி எழும்?. ஒரு மதுரைப் பேச்சு கொண்ட படம் வெற்றி அடைந்து விட்டால், எல்லா படங்களிலும் மதுரைக் கொச்சையும் மதுரைத் தெருக்களும் தான் நிறைகின்றன. ஆனால் பாட்டு, கோஷ்டி நடனம், முஷ்டி யுத்தம் நிற்கவில்லை. செயற்கையான பேச்சும் கதையும் திரையை விட்டு அகலவில்லை. சண்டைக்குக் சேவல் வளர்க்கிறவனுக்கு காதல் பண்ண வெள்ளை வெளேரேன்று ஒரு சட்டைக் காரி வேண்டியிருக்கிறது. செழியனின் ஆதங்கம் புரிகிறதென்றாலும், நக்ஷத்திரங்களின் ஆதிக்கம், 3 வருடங்களில்முடிவடைந்துவிடும் என்று ஆசைப் படுவது, தமிழ்த் திரையுலகையோ, தமிழ் சினிமா ரசிகர்கள் வளர்க்கப்பட்டுள்ள குணத்தையோ கணக்கில் கொள்ளாததையே சுட்டும்.

ஆனால் செழியன் “வெற்றிடத்திலிருந்து எழும் குரல் “ என்ற கட்டுரையில் தமிழ்த் திரையுலக யதார்த்தத்தையும் அதன் டாம்பீகத்தையும் வெறுமையையும் மிக  நன்குணர்ந்தவராகவே எழுதியிருக்கிறார்.

அதில் வரும் ஒரு பாராவை நான் முழுக்கவே எடுத்தெழுத வேண்டும்:

“தன் படங்களில் கதாநாயகியை மாற்றுவதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் அனுமதிக்காமலும், தனக்கிருந்த கவர்ச்சி, மற்றும் ரக்ஷக படிமத்தைக்கொண்டும் தனது காலம் முழுக்க கலை முயற்சிகளற்ற பொழுது போக்கு சாதனையை எம். ஜி. ஆரால் நிகழ்த்த முடிந்தது. இன்னொரு முனையில் சிவாஜி கணேசன், மிகை நாடக களத்தினுள் அப்பாவி இளைஞனாக குடும்பப் பொறுப்பை சுமக்கிற தந்தையாக தான் சோகம் கொள்ளாது கண்ணீர் உகுக்கிற அதி உணர்ச்சி கொள்கிற காதலிக்கிற நாயகனாக இறந்த காலத்தின் சரித்திர புருஷர்களை அசலெனச் சித்தரப் படுத்தும் கலைஞனாக மட்டுமே இருக்க முடிந்தது. இந்தியாவில் சிறந்த நடிகர் என்றும் மார்லன் ப்ராண்டோவிற்கு இணையானவர் என்றும் வர்ணிக்கப்பட்ட இவரை பயன்படுத்தி யதார்த்தமான வாழ்வியல் சித்தரிப்பு எதுவும் வெளிவரவில்லை. இவரது நடிப்பைக் குறித்த தெளிவான விமர்சனாங்களோ, மயக்கம் தொனிக்கிற பாராட்டுக்கள் மற்றும் பிரமிப்புகள் இல்லாத மதிப்பீடுகளோ கூடத் தமிழில் இல்லை. தங்கள் காலத்தின் வணிக ரீதியிலான திரைப்படத்தின் பிதாமகன்களாக கருதப்பட்ட இவர்களும் மாற்று ஊடகத்திற்கான பங்களிப்பை தனியே செய்வதற்கான தடையங்கள் இல்லை. படவுலகின் மீது இவர்களிருவருக்கும் உள்ள அதீத மான ஆதிக்கமே இவ்விதமான கலை முயற்சிகள் எழ முடியாமல் போனதற்கான  ஒரு காரணமாகவும் சொல்லலாம்.

இன்னொரு இடத்தில் கமலஹாசனைப் பற்றி சொல்கிறார்:

“ராஜபார்வையின் தோல்வி, சகலகலாவல்லவனின் பெரு வெற்றி, இதை ஒப்பீடாக கொண்டு கமலஹாஸன் தமிழில் கலைப் படங்கள் உயிர்த்தெழுவதற்கான வாய்ப்பு இல்லை. கலைப் படம் என்பதே ஒரு கெட்ட வார்த்தை என்கிற தனது சுய கண்டுபிடிப்பை அறிவித்தார். தனது கலை முயற்சி தோற்றது குறித்த பிலாக்கணம் அவருடைய நேர்காணல்களில் தொடர்ந்தது.

இதையெல்லாம் எப்படி இவர் தமிழ்த் திரையுலகில் இருந்து கொண்டே எழுத முடிகிறது? சிவாஜி கணேசனை உலக தரத்த நடிகர் என்று ஒரு இடத்தில் சொல்பவர்தான் மேற்கண்ட சித்திரத்தையும் தந்துள்ளார். செழியனுக்கு கலை உணர்வு இல்லாமல் போகவில்லை. தமிழ்த் திரையுலகில் இருப்பவரானாலும். அதுவே பெரிய விஷயம். மகத்தான சாதனை என்று சொல்ல வேண்டும். மற்றவர்கள் கொஞ்சம் வெற்றி அடைந்தாலும் என்னென்னமோ ஆகிவிடுகிறார்கள்.

கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஒர் ஆலயம் எல்லாம் வெற்றி தந்ததும், இவையும் சினிமா இல்லை. ஸ்ரீதரும் சினிமாவைத் தெரிந்தவர் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, (சாவித்துவாரத்தின் வழியாகவும் மேஜையின் அடியிலும் காமிராக் காட்சிகள் தந்த வின்செண்ட் என்பவர் அன்று புகழ் பெற்ற காமிராமேன், ஸ்ரீதரின் கண்டுபிடிப்பு) “சத்யஜித் ரே மாதிரி படங்களை உங்களால் எடுக்க முடியுமா? என்று ஒருவர் கேட்க, அதற்கு, மூக்கில் விரலை வைத்துக் காட்சி தரும் தன் புகைப் படத்தின் கீழ் (ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்பதற்கான சாட்சியம் இது) ஸ்ரீதர் பதில் தருகிறார்: “ஏன் முடியாது? ஏன் முடியாது? ஏன் முடியாது?”என்று மூன்று தரம் ஆணித்தரமாக சவால் விட்டிருக்கிறார்.

சரி செழியனுக்குத் திரும்புவோம். செழியன், ஒரு இடத்தில்,

இன்னும் ஏன் ஒரு தமிழ்ப் படம் கூட உலகிற்கு இது தமிழ்ப் படம் என்று சொல்லும் உலகம் மதிக்கும் படம் ஒன்றைக் கூட நாம் அளிக்க முடியவில்லை?

என்று கேட்கிறார். இன்னொரு இடத்தில் சொல்கிறார்:

”தமிழ்த் திரைப் படங்களில் இயக்குனர் மணிரத்தினத்தின் வருகை நகரத்தை ஒரு மோஸ்தராக உருவாக்குகிறது.

பாரதி ராஜாவின் கிராமப் பிரவேசம் பற்றி சொல்கிறார்.

கதை நடக்கும் களம் யதார்த்தமாக இருந்த போதும் உள்ளடக்கத்தில் இருந்த அரிதாரம், இவ்விதமான கிராமத்துப் படங்களை ஒரே தன்மையுடையனவாகக் காட்டின

அனேகமாக புத்தகத்தின் கடைசிக் கட்டுரையின் கடைசி வாக்கியம் இது:

நம் வாழ்வின் பிராந்தியங்களுக்கே உரிய யதார்த்தம் சார்ந்து தொடர்ச்சியாக இயங்கும் போது தமிழ்ப் படங்கள் சர்வதேச தரத்தில் அறியப்படும்.

ஒரு இடத்தில் செழியன் சொல்கிறார். தமிழ்ப்படங்கள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது என்று. படிக்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.. ஒரு அடிப்படையான உண்மை. எங்கு தொழில் நுட்பம் சொல்லப்படும், காட்சியாக்கப் படும் பொருளில் தன்னை மறைத்துக் கொள்ள வில்லையோ அந்த தொழில் நுட்பம் வெறும் ஜிகினா வேலை தான்.

இப்படி ஆங்காங்கே சில வாக்கியங்களில் செழியன் நம்மைத் திகைக்க வைத்தாலும், அதையே வேறோரிடத்தில் மிக விரிவாக மறுத்தும் உள்ளார். சிவாஜி கணேசனைப் பற்றி இரண்டு முரணான கருத்துக்களை நான் காட்டினேன்.

காரணம், செழியன் ஒரு கலைஞன் கலை உணர்வு கொண்டவர்.  அதற்கு இப்புத்தகத்தின் பெரும் பகுதி சாட்சி. அவர் ஒளிப்பதிவு செய்த சில எளிய படங்களில் அவர் பங்களிப்பின் குணம்.


இப்புத்தகம் கலை உணர்வு கொண்ட சினிமா உலக மாணவர்கள் படிக்க வேண்டிய ஒன்று. அதோடு எங்கெல்லாம் செழியன்  எழுதுகிறாரோ, அதைத் தேடிக்கொண்டிருக்கவும் வேண்டும்.


பேசும் படம்: (கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்) செழியன்: கட்டுரைத்தொகுப்பு. காலசு சுவடு பதிப்பகம். பக்கங்கள் – 184. விலை ரூ 135

Series Navigationஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)உரையாடல் அரங்கு – 13
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அன்புள்ள வெ.சா சார்,

    செழியனது வேறொரு முகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    சிவாஜி பற்றி நான் நினைப்பது என்னவென்றால், அவர் உலகத்தரத்துக்கு நடிப்பை வழங்கும் திறமை உள்ளவர்தான். ஆனால் அவரை அதீத – மிகை உணர்சிகளை வெளிப்”படுத்தி” (நாடக மேடையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தது மிக வசதியாய் போனது) நடிக்கும் நடிகராக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது கோடம்பாக்கத்தின் தவறுதான்.

    தேவர் மகன் படத்தில் வழக்கம் போல தனது மிகை உணர்சி நடிப்பை அல்லாது பார்வை மற்றும் லேசான உடல் அசைவுகளிலேயே சிறப்பாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார் என்பது எனது எண்ணம்.

    (அதேபோல முதல் மரியாதை படப்பிடிப்பின்போதுகூட திலகம் அவர்கள் “இமயம்” அவர்களிடம் (:)) எப்படி நடிக்கவேண்டும் என்று கேட்க, இமயம் “நீங்க இப்படி வர்றீங்க, இப்படி நடக்கறீங்க, இப்படி கேமராவை பாக்கறீங்க” என்றெல்லாம் சொல்ல, திலகம் அவர்கள் “வழக்கமா நீ நடிக்கிற மாதிரி இல்லாம நா சொல்ற மாதிரி நடி-ன்னு சொல்ற ?” என்று கேலி செய்தார் என்று படித்த நினைவு)

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    மதிப்பிற்குரிய திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு வணக்கம். ஒளிப்பதிவாளர் திரு செழியனின் கட்டுரைத் தொகுப்புக்கு தங்களின் விமர்சனம் அருமையாக இருந்ததோடு, தமிழ் சினிமா பற்றியும் ஒரு நல்ல விமர்சனத்தையும் படிக்க நேர்ந்தது. அதில் தமிழ் சினிமா ஏன் இன்னும் உலக தரத்துக்கு செல்ல முடியவில்லை என்பதையும் அலசி ஆராய்ந்துள்ளீர்கள். எனது நன்றியும் பாராட்டும் உரியதாகுக.

    தமிழ் சினிமாக்களில் வரும் கதாநாயர்கள் நாம் அன்றாடம் காணும் சக மனிதர்களாக இன்னும் காட்டப் படவில்லை. இவர்கள் அழகானவர்களாகவும், ஆடவும் பாடவும் தெரிந்தவர்களாகவும், எப்போதுமே நல்லவர்களாகவும், நீதிக்கு அடித்து நொறுக்குபவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வாழும் முறையும், ( நடை, உடை , பாவனை ) சாதாரண மனிதர்களைவிட வேறுபட்டே காட்டப்படுகிறது. தமிழ்ச் சினிமா கதாநாயகிகள் பற்றி நாம் கூறத் தேவையில்லை .அழகே உருவான , கவர்ச்சி காட்டி நடனமாடும் கதாநாயகிகளே அதிகம் காண்கிறோம். சென்னை வீதியிலோ கிராமத்திலோ காணும் சாதாரண பெண்களை கதாநாயகிகளாகக் காண முடிவதில்லை. மொத்தத்தில் தமிழ் சினிமா இன்னும் ஒரு மாயை உலகில்தான் ( Fantasy World ) உழன்று கொண்டிருக்கிறது….டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *